Home

Saturday, 19 September 2026

பாவண்ணன் சிறுகதைகள் - இரண்டாம் தொகுதி - முன்னுரை

 

ஒரு சொல்

 

நான் எழுதத் தொடங்கிய காலத்தில் எண்ணற்ற சிறுபத்திரிகைகள் வெளிவந்தன. எல்லாமே தனிச்சுற்றுக்கான இதழ்கள். எந்த இதழுக்கும் கால வரையறை எதுவும் கிடையாது. இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை என வெளிவருபவையாகவே அவை இருந்தன. தளம், புதிய நம்பிக்கை, அரும்பு, மன ஓசை, புதிய மனிதன், புது எழுத்து, இங்கே இன்று, கதைசொல்லி, ஒரு, சிறுகதைக்களஞ்சியம், கேரளத்தமிழ், அன்னம் விடு தூது என நீண்டு செல்லும் வரிசையில் அமைந்த அந்த இதழ்கள்தாம் நான் என் படைப்புகளுக்குத் தளம் அமைத்துக்கொடுத்தன.


சிறுபத்திரிகைகளில் அன்னம்விடு தூது இதழுக்கு முக்கியமானதொரு இடம் இருந்தது. இதழின் வடிவமைப்பிலும் எழுத்தமைப்பிலும் அன்னம்விடு தூது மிகுந்த கவனம் கொண்டிருந்தது. பல இளைய ஓவியர்களின் பங்களிப்பால் சிறப்பான தோற்றத்தோடு வெளிவந்த அவ்விதழ் பலரையும் கவர்ந்தது.  1983இல் வெளிவரத் தொடங்கிய அவ்விதழுக்கு ஆசிரியராக இருந்தவர் கவிஞர் மீரா. அன்னம் பதிப்பகத்தின் வழியாக தமிழிலக்கியத்துக்கு வளம் சேர்க்கும் எண்ணற்ற நூல்களை வெளியிட்டவர். அதனாலேயே அன்னம் மீரா என அழைக்கப்பட்டவர்.

நான் அவ்விதழில் கவிதைகளையும் சிறுகதைகளையும் எழுதினேன். ஒவ்வொரு இதழும் வெளிவந்ததும் எனக்குப் பிடித்த படைப்புகளைக் குறித்து மீராவுக்குக் கடிதம் எழுதுவேன். சிற்சில சமயங்களில்  தொலைபேசியிலும் பேசுவேன். அப்படித்தான் மீராவுக்கும் எனக்கும் தொடர்பு ஏற்பட்டது. 1985இல் அவ்விதழ் நின்றுவிட்டபோதும் எங்கள் தொடர்பு தொடர்ந்துவந்தது. அவ்வப்போது அன்னம் பதிப்பகம் வழியாக வெளிவரும்  புதிய புத்தகங்களைப் படித்துவிட்டு அவருக்கு எழுதிவந்தேன். அவரும் அவ்வப்போது எனக்குப் பதில் எழுதுவார். ஒருவரையொருவர் பார்க்காமலேயே எங்கள் நட்பு வளர்ந்துவந்தது.

1987இல் என்னுடைய முதல் சிறுகதைத்தொகுதி ‘வேர்கள் தொலைவில் இருக்கின்றன’ வெளிவந்தது. நான் அவருக்கு ஒரு புத்தகத்தை அனுப்பிவைத்தேன். சிறிது காலத்துக்குப் பிறகு அவர் எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அத்தொகுப்பில் தனக்குப் பிடித்த கதைகளைப்பற்றிய தன் எண்ணங்களைத் தெரிவித்துவிட்டு, இறுதியில் தன் வாழ்த்துகளையும் தெரிவித்திருந்தார்.

அக்கடிதத்தில் ’அன்னம் பதிப்பகமும் புதிய எழுத்தாளர்களை ஊக்குவிக்கக் காத்திருக்கிறது’ என அவர் எழுதியிருந்த குறிப்பு எனக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்தது. அந்நேரத்தில் என்னிடம் உடனடியாக ஒரு தொகுதியாக வெளியிடும் அளவுக்கு சிறுகதைகள் சேர்ந்திருக்கவில்லை. ஆனால் ’ஒரு மனிதரும் சில வருஷங்களும்’ என்னும் தலைப்பில் நீண்டதொரு குறுநாவலை எழுதிமுடித்திருந்தேன். ஏறத்தாழ நூறு பக்கங்கள் கொண்ட அக்குறுநாவலை, அதன் நீளம் கருதி எந்தப் பத்திரிகைக்கும் அனுப்பமுடியாமல் என் பெட்டியிலேயே வைத்திருந்தேன். மீரா எழுதியிருந்த குறிப்பின் தூண்டுதலால் அந்தக் குறுநாவலை அவருக்கு உடனடியாக அனுப்பிவைத்தேன்.

ஒருசில வார இடைவெளியிலேயே மீரா எனக்குக் கடிதம் எழுதியிருந்தார். அந்தக் குறுநாவலை வாசித்துவிட்டதாகவும் அன்னம் அந்த நூலை வெளியிடும் என்றும் தெரிவித்திருந்தார். அவர் சொன்னபடி 1989இல் அந்தப் புத்தகம் நல்ல வடிவமைப்போடு வெளிவந்தது. இடைப்பட்ட காலத்தில் ஒரு புதிய தொகுதி வெளியிடும் அளவுக்கு என்னிடம் சிறுகதைகள் சேர்ந்திருந்தன. அவற்றையெல்லாம் ’வாழ்வின் திசைகள்’ என்னும் தலைப்பில் தொகுத்து ஒரு கடிதத்துடன் மீராவுக்கு அனுப்பிவைத்தேன்.

சில வாரங்களுக்குப் பிறகு அவரோடு உரையாடும்போது  கதைகள் தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும் விரைவில் வெளிவரும் என்றும் தெரிவித்தார். ”எல்லாம் சரிதான். ஆனால் தொகுப்புக்குத் தலைப்புதான் எடுப்பா இல்லை. வேற ஒரு தலைப்பு வைக்கலாம்” என்றார். நான் அத்தொகுப்பில் உள்ள கதைகளின் தலைப்புகளையெல்லாம் சொன்னேன். “அதெல்லாம் ஒரு புத்தகத்துக்கான தலைப்புக்குப் பொருத்தமா இல்லை. பேசாம பாவண்ணன் கதைகள்னு  பேர் வச்சிடலாம். அதான் பொருத்தமா இருக்கும்” என்றார்.

எழுத்தாளரின் பெயரோடு கதைத்தொகுதியை வெளியிடும் பழக்கம் அப்போது கிடையாது. “அதெல்லாம் பெரிய பேரு வாங்கின எழுத்தாளர்களுக்குப் பொருத்தமா இருக்கலாம். என்னை மாதிரி வளரும் எழுத்தாளருடைய புத்தகத்துக்கு சரிவராது சார்” என்று நான் கூறினேன். ஆனால் அவர் அதை ஏற்கவில்லை. “இங்க பாருங்க பாவண்ணன். அப்படி பொருந்திப் போகிற உயரத்துக்கு நீங்க வளருவீங்க. எனக்கு அந்த நம்பிக்கை இருக்குது. இந்தக் கதைகள் அதற்குச் சாட்சி. பாவண்ணன் கதைகள்தான் தலைப்பு. நான் முடிவு செஞ்சிட்டேன்” என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டார். அதற்குப் பிறகு மறுத்துப் பேச எனக்கு வழியில்லை. அமைதியாக விட்டுவிட்டேன். அவர் சொன்னமாதிரியே பாவண்ணன் கதைகள் என்னும் பெயரிலேயே அத்தொகுப்பு 1990இல் வெளிவந்து வாசகர்களின் கவனத்தைப் பெற்றது.

அப்புத்தகம் வெளிவந்து இருபத்தாறு ஆண்டுகள் கழிந்துவிட்டன. அந்தப் புத்தகத்தை என் நூலகத்திலிருந்து எடுக்கும் ஒவ்வொரு முறையும் மீராவின் நினைவும்  அவர் சொன்ன சொல்லும் மனத்திலெழும். அவர் விருப்பத்தோடு சூட்டிய அதே தலைப்பில் சமீபத்திய காலம் வரையில் நான் எழுதிய சிறுகதைகள் தொகுக்கப்பட்டு ஒரு பெருந்தொகுதியாக  வெளிவரும் இத்தருணத்தில் அன்னம் மீராவை நினைத்துக்கொள்கிறேன். அவருடைய கனிந்த குரலும் உற்சாகமாக சிரிப்பும் என் காதருகில் ஒலிப்பதுபோல உள்ளன. இச்சிறுகதைத்தொகுதியை அன்னம் மீரா அவர்களுக்குச் சமர்ப்பணம் செய்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

இவ்வகையில் என் சிறுகதைகள் தொகுக்கப்பட்டு நூலாக வெளிவர நான் முயற்சி செய்யவேண்டும் என்று கனவு மின்னும் கண்களுடன் சொல்லிக்கொண்டே இருந்தவர் நண்பர் பாலசுப்பிரமணியம். அவர் ஆந்திர வங்கியில் பணிபுரிந்ததால் நான் அவரை ஆந்திரா பேங்க் பாலு என்று அன்போடு அழைப்பதுண்டு. இன்று அவர் உயிருடன் இல்லை. ஆயினும் அவருடைய கனவு நனவாகியிருக்கும் இத்தருணத்தில் அவரை நினைத்துக்கொள்கிறேன்.  அவருக்கு என் வணக்கம்.

இத்தொகுப்பில் உள்ள சிறுகதைகள் பெருமளவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வெளிவந்த சிறுபத்திரிகைகளில் வெளிவந்தவை. அப்பத்திரிகைகளின்  பட்டியல் மிகவும் நீண்டது. ஒருசில சிறுகதைகள் மட்டும் இந்தியா டுடே போன்ற இதழ்களில் வெளிவந்தவை. எல்லா இதழ்களின் ஆசிரியர்களையும் இத்தருணத்தில் அன்போடும் நன்றியோடும் நினைத்துக்கொள்கிறேன். என் அன்பு மனைவி அமுதாவின் அன்பும் ஊக்கமும் என் படைப்பாக்க முயற்சிகளில் எப்போதும் துணையாக இருப்பவை. அவருக்கு என் அன்பு. இந்தத் தொகுதியின் வடிவமைப்பில் ஆழ்ந்த கவனத்தோடு ஒத்துழைப்பு நல்கிய மேனகாவுக்கு என் நன்றி. இந்தத் தொகைநூலை மிகச்சிறந்த முறையில் வெளியிட்டிருக்கும்  என் நண்பரும் பதிப்பாசிரியருமான சந்தியா நடராஜனுக்கும் என் மனமார்ந்த நன்றி.

 

மிக்க அன்புடன்

பாவண்ணன்