Home

Saturday, 19 September 2026

அகப்பயணத்தின் விசித்திரம்

  

மன ஓட்டத்தின் தடத்தில் எந்த முன்முடிவுமின்றி பயணம் செய்து, அது சென்று நிற்கும் புள்ளியை எந்தப் பூச்சுமின்றி முன்வைக்கும் எழுத்தாளர் என மறைந்த மூத்த எழுத்தாளர் சூடாமணியைக் குறிப்பிடலாம். அவருடைய எழுத்துலகத்தைப் பொதுவாக அகப்பயணத்தின் அனுபவக்குறிப்புகள் என அடையாளப்படுத்தமுடியும்.

’சோதனையின் முடிவு’ என்னும் தலைப்பில் அறுபதுகளில் சூடாமணி ஒரு குறுநாவலை எழுதினார். அவர் நினைத்ததைவிட அந்தக் குறுநாவல் 130 பக்க அளவில் நீண்டுவிட்டதால், அதைப் பத்திரிகையில் வெளியிடமுடியாமல் போய்விட்டது. வெளியிடுவதற்காக அக்கதையைச் சுருக்கவும் அவருக்கு மனமில்லை. அதனால் அக்குறுநாவல் நீண்ட காலமாக கையெழுத்துப்பிரதியாகவே அவரிடம் தங்கிவிட்டது. அதையடுத்து அவர் எழுதிய ’அஞ்சன விழிகள்’ என்னும் குறுநாவலை தீபம் இதழ் வெளியிட்டது. பெரிய குறுநாவலையும் சிறிய குறுநாவலையும் இணைத்து ‘சோதனையின் முடிவு’ என்னும் தலைப்பிலேயே 1967இல் தமிழ் எழுத்தாளர் கூட்டுறவுச்சங்கம் நூலாக வெளியிட்டது.

குறுநாவலின் முக்கியமான பாத்திரம் ராமனாதன். கிராமத்தில் தனித்து வசித்துவருகிறார். சிறிது காலமாகவே அவர் முதுகுவலியால் துன்பப்படுகிறார். கிராமத்தில் அதைச் சரிப்படுத்தும் மருத்துவ வசதிகள் இல்லை. சென்னையில் அவருடைய மகன் பசுபதி தன் மனைவியோடும் பிள்ளைகளும் வசித்துவருகிறார். அப்பாவின் நோயைப்பற்றித் தெரிந்துகொண்டதும் அவரை அவன் நகரத்துக்கு அழைத்துவந்து வீட்டில் தங்கவைத்து மருத்துவத்து வழிசெய்க்கிறான். அவரைச் சோதிக்க வரும் மருத்துவர் அவருடைய முதுகுத்தண்டுப் பிரச்சினை ஒருசில மாதங்களில் குணப்படுத்தத்தக்கதே என நம்பிக்கையூட்டுகிறார். ஆனால் நோயாளி எக்காரணத்தை முன்னிட்டும் அசையாமல் புரளாமல் படுத்த படுக்கையாகவே இருக்கவேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறார்.

ராமனாதனுக்கு அந்த நிபந்தனையை ஏற்றுக்கொள்வதில் விருப்பமில்லை. ஆயினும் நோயின் கடுமை அவரை அந்த நிபந்தனையை ஏற்றுக்கொள்ள வைக்கிறது. அவர் மகன் பசுபதி அவருக்கென தனி அறையை ஏற்பாடு செய்கிறான். கட்டிலும் மெத்தையும் தயாராகின்றன. படுத்த நிலையில் அவருக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்ய முத்து என்னும் பணியாளையும் நியமிக்கிறான்.

மருத்துவம் தொடங்குகிறது. படுத்த நிலையிலேயே பல் விளக்குவது, சிறுநீர் கழிப்பது, காலைக்கடன்களை முடிப்பது எதுவும் அவருக்குப் பிடிக்கவில்லை. வேட்டியை இடுப்பைச் சுற்றிக் கட்டாமல் உடம்பின் மீது விரித்து அதன் மீது ஒரு போர்வையையும் போர்த்திக்கொள்ள வேண்டியிருக்கிறது.  அதுவும் அவருக்குப் பிடிக்கவில்லை. ஆயினும் வேறு வழியில்லாமல் எல்லாத் துன்பங்களையும் அவர் சகித்துக்கொள்கிறார். மருமகள் வேளாவேளைக்கு உணவு கொடுத்து முகம் கோணாமல் பார்த்துக்கொள்கிறாள். இரண்டு பேரப்பிள்ளைகளும் ஓய்வு நேரத்தில் அறைக்குள் வந்து பேசிவிட்டுச் செல்கின்றனர்.

ஒருசில நாட்கள் கழிந்ததும் அந்தத் துன்பத்தையே நினைத்துக்கொண்டிருப்பதில் பொருள் இல்லை என அவருக்குத் தோன்றுகிறது. அதைக் கடந்து செல்லும் வழியை யோசிக்கிறார். அவருக்குப் படிப்பதில் ஆர்வம் இருக்கிறது. அதனால் மகன் வழியாக புத்தகங்களை வரவழைத்துப் படுத்த வாக்கிலேயே படிக்க முயற்சி செய்கிறார். கழுத்தும் கைகளும் வலிக்கின்றன. பிறகு மார்பின் குறுக்கே ஒரு தலையணையை வைத்து, அதன் மீது புத்தகத்தை வைத்துப் படித்துப் பழகத் தொடங்குகிறார். அவர் மனத்துக்கு அந்த முயற்சி ஆறுதல் அளிக்கிறது. மருத்துவம் சார்ந்த வேதனைகள் முதலில் துன்பமாகத் தோன்றினாலும் படிப்படியாக அனைத்தும் பழகிவிடுகின்றன. கடவுளே கடவுளே, இந்த வேதனையைவிட என் உயிர் போவதே மேலாக இருக்குமே என தொடக்கத்தில் புலம்பியவர் மெல்ல மெல்ல அந்தச் சூழலை ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்குப் பழகிக்கொள்கிறார்.

ஒருநாள் அவருடைய பேரப்பிள்ளைகள் எதிர்வீட்டுக்காரர் அன்பளிப்பாகக் கொடுத்ததாக சில புதிய பொம்மைகளைக் கொண்டுவந்து காட்டுகின்றனர். அதன் வடிவழகு மெச்சத்தக்கதாக இருக்கிறது. அந்த அறையின் ஜன்னல் வழியாக எதிர்வீட்டு ஜன்னல் தெரிகிறது. சக்கர நாற்காலியில் அமர்ந்த நிலையில் ஓர் உருவம் அங்குமிங்கும் நகர்வதும் தெரிகிறது. அவர்தான் அந்தப் பொம்மைகளைச் செய்து கொடுத்தார் என்று பிள்ளைகள் தெரிவிக்கின்றனர்.

பசுபதி வீட்டுக்குத் திரும்பியதும் அவன் வழியாக எதிர்வீட்டுக்காரரைப்பற்றிய தகவல்களைத் தெரிந்துகொள்கிறார் ராமனாதன். அவர் பெயர் சபேசன். பெரிய நிறுவனத்தில் ஏதோ பெரிய பதவியில் இருந்தவர். எதிர்பாராத விபத்தில் அவர் தன் கால்களை இழந்துவிட்டார். எதிர்வீட்டில் வசிக்கும் அவருடைய தம்பி அவருக்கு மருத்துவம் பார்த்து பாதுகாப்பாக தன் வீட்டிலேயே தங்க வைத்துக்கொண்டார். சபேசனுடைய நடமாட்டம் அந்த அறைக்குள் சக்கரநாற்காலியை உருட்டிக்கொண்டு செல்வது என்கிற அளவில் சுருங்கிவிட்டது.

நான்கு ஆண்டுகளாக தம்பியின் பராமரிப்பில் வாழும் சபேசனுக்கு பொம்மைகள் செய்வதில் ஆர்வம் இருக்கிறது. கூடையில் பொம்மைகள் சுமந்து சென்று விற்பனை செய்பவர் ஒருவர் வழியாக பொம்மை செய்யத் தேவையான மூலப்பொருட்களை வீட்டுக்கு வரவழைக்கிறார்.  அவற்றைக் கொண்டு பலவிதமான பொம்மைகளைச் செய்து அந்த விற்பனையாளரிடமே இலவசமாகக் கொடுக்கிறார். எஞ்சியிருக்கும் சில பொம்மைகளை அக்கம்பக்கத்து வீடுகளில் வசிக்கும் சிறார்களுக்குக் கொடுத்துவிடுகிறார். பொம்மை செய்வதன் வழியாக அறைக்குள் அடைபட்டிருக்கும் தன் மனக்கவலையை மறக்க முயற்சி செய்கிறார் சபேசன். பொம்மைகள் செய்யும் வேலை இல்லாதபோது புத்தகங்கள் படிக்கிறார். எதையோ எழுதுகிறார்.

ஒருநாள் ராமனாதன் சபேசனின் பொம்மைக்கலையைப் பாராட்டி அவருக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்புகிறார். சபேசனும் அவருக்குப் பதில் எழுதி அனுப்புகிறார். ஒருநாள் குறிப்பிட்ட ஒரு சுலோகத்துக்குப் பொருளை எழுதிக் கொடுக்குமாறு சபேசன் அவரிடம் கேட்டுக்கொள்கிறார். ராமனாதனும் உற்சாகமாகப் பதில் எழுதி அனுப்புகிறார். அன்றுமுதல் கடிதப்பரிமாற்றம் தொடர்கிறது. பதில் எழுத எடுத்துக்கொள்ளும் நேரங்களில் அவர் மனம் வலியை மறந்து வேறொரு உலகுக்குச் சென்றுவிடுகிறது. ஒவ்வொரு நாளும் அந்தக் கடிதப் போக்குவரத்து நிகழ்வதால் ராமனாதனின் மனச்சோர்வு போன இடம் தெரியாமல் கரைந்துபோய்விடுகிறது. அவருடைய வேதனை மறைய மறைய, அதுவரை அவர் கொண்டிருந்த தன்னிரக்கமும் தானாக மறையத் தொடங்குகிறது.

சில மாதங்களாக நீடித்திருந்த ராமனாதனுடைய முதுக்குத்தண்டு பிரச்சினை முற்றிலுமாக அகன்றுவிடுகிறது. ஆயினும் எழுந்து நடப்பதற்குத் தடை இருப்பதால், சக்கரநாற்காலியின் உதவியோடு அவருடைய நடமாட்டம் தொடங்குகிறது.

ஒருநாள் சபேசன் தன் சக்கரநாற்காலியை உருட்டிக்கொண்டு  ராமனாதனைச் சந்திக்க வருகிறார். அவருக்குச் சில புதிய பொம்மைகளை அன்பளிப்பாகக் கொடுக்கிறார். படுத்திருந்த நிலையிலும் பொறுமையாக ராமாயணப்பதில்களை எழுதி அனுப்பியதற்காக நன்றி சொல்கிறார் சபேசன். ராமனாதன் தன் நோயினால் தனக்குக் கிடைத்த லாபம் அது என்று மகிழ்ச்சியோடு சொல்கிறார். முதுகு குணமாகிவிட்டாலும் மருத்துவர் தரையில் உட்காரக்கூடாது, படி ஏறவோ, இறங்கவோ கூடாது என்பதுபோல சில கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறார். முதுகுப்பட்டியை நீக்கவே கூடாது என்பதுதான் முக்கிய நிபந்தனை.

எதுவுமே பழகிவிட்டால் கஷ்டம் தெரியாது என்று சொல்கிறார் ராமனாதன். ஆனால் சபேசன் அதை உடனடியாக மறுக்கிறார். அதைப் பொருட்படுத்தாமல் ராமனாதன் தன் மனக்கஷ்டத்தையெல்லாம் பொறுத்துக்கொள்ள சபேசனின் நினைவுதான் உதவியாக இருந்தது என்று குறிப்பிட்டு அதற்கு நன்றி கூறுகிறார். ”என்னைவிட அதிகமாகப் பாதிக்கப்பட்ட உங்களைப்போன்ற ஒருவரே துன்பத்தையெல்லாம் பொறுத்துக்கொள்ளும்போது நான் வருந்துவதில் அர்த்தமே இல்லை” என்று சொல்கிறார்.

துயரம் மட்டுமே நிறைந்த தன் வாழ்வை பொம்மைகள் செய்வதன் வழியே கிட்டும் ஆசுவாசத்தை  வெளிப்படையாகவே ஒப்புக்கொள்கிறார் சபேசன். ஆனால் தனக்கு நேர்ந்த துர்ப்பாக்கியத்தை எண்ணி எண்ணி ஒவ்வொரு நிமிடமும் நெஞ்சுக்குள்ளேயே இன்னும் குமுறிக்கொண்டிருப்பதாகக் கூறுகிறார். தன் பயனற்ற கால்களைப் பார்க்கும்போதெல்லாம் ஆத்திரம் பொங்குவதாகக் குறிப்பிடுகிறார். பொம்மை செய்வது, இலக்கியம் படிப்பது எல்லாமே வாழ்வின் சுமையைப் பொறுத்துக்கொண்டிருப்பதற்கான அடையாளமே தவிர அவற்றால் வாழ்க்கை நிறைந்துவிடுவதில்லை என்று தெரிவித்துவிட்டு ஆவேசத்துடன் வெளியேறிவிடுகிறார்.

ராமனாதன், சபேசன் இருவருமே பாதிக்கப்பட்டவர்கள். பராமரிப்புக்காக வேறொருவருடைய வீட்டிற்கு வந்து தங்கியிருப்பவர்கள். சங்கடங்களை நினைத்து ராமனாதன் முதலில் மனம் துவண்டுபோனாலும் பேரப்பிள்ளைகளின் உரையாடல், மருமகளுடைய உபசரிப்பு, மகனின் அன்பு, பொம்மைகளின் அழகு, வாசிப்பு என பல திசைகளில் தன் மனத்தைத் திருப்ப முயற்சி செய்து ஓரளவு வெற்றியும் பெறுகிறார்.

சபேசன் பொம்மை செய்யும் கலையில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் அதை நேரத்தைக் கழிக்கும் செயலாக மட்டுமே பார்க்கிறார். அவர் மனம் தனக்கு நேர்ந்த துயரத்திலேயே சதா காலமும் மூழ்கியிருக்கிறது. அதிலிருந்து விலக மறுக்கிறது. அந்த அழுத்தம் அவரை கொஞ்சம் கொஞ்சமாக மரணத்தை நோக்கித் தள்ளிவிடுகிறது. துயரங்களைக் கடந்து செல்வது தொடர்பான மாறுபட்ட நிலைபாடுகளே இந்தக் குறுநாவலின் களம்.

மன இயக்கம் என்பது எந்த நிலையான சூத்திரத்துக்கும் கட்டுப்பட்டதல்ல. இவ்வுலகில் எத்தனை கோடி மனிதர்கள் இருக்கிறார்களோ, அத்தனை கோடி சூத்திரங்களும் உள்ளன. இதுதான் விசித்திரம். எதிரெதிரே உள்ள இரு வீடுகளில் வசிக்கிற இரு நோயாளிகள் வழியாக அந்த விசித்திர உண்மையை உணர்த்துகிறார் சூடாமணி.

அனைவருக்கும் தெரிந்த ஒரு புராணக்கதையைக் குறிப்பிடத் தோன்றுகிறது. கைலாயத்தில் சிவனும் பார்வதியும் அமர்ந்திருக்கிறார்கள். அவர்களிடம் நாரதர் கொண்டுவந்து கொடுத்த ஒரு பழம் உள்ளது. சிறுவர்களான முருகனும் பிள்ளையாரும் அப்பழத்தைத் தன்னிடம் கொடுக்கும்படி வேண்டுகிறார்கள். உலகத்தை முதலில் சுற்றிவிட்டுத் திரும்பி வருகிறவர் பழத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கிறார் சிவன்.

அதைக் கேட்டதுமே முருகன் உடனடியாக உலகத்தைச் சுற்றப் புறப்பட்டுவிடுகிறார். உலகம் என்னும் சொல்லுக்கு ஸ்தூலவடிவில் மொழிவழக்கில் உள்ள நேர்ப்பொருளே அவர் மனத்தில் அப்போது நிறைந்திருக்கிறது. பக்கத்தில் நின்றிருந்த பிள்ளையார் சில கணங்கள் அதே சொல்லைப்பற்றி யோசித்துப் பார்க்கிறார். சூட்சுமவடிவில் தாய்தந்தையரையே உலகமாகக் கருதலாம் என்கிற எண்ணம் எழுந்ததும், அந்த இடத்திலேயே பெற்றோரை வலம்வந்து பழத்தைப் பெற்றுக்கொள்கிறார்.

ஒரு சொல்லுக்கான பொருளை ஸ்தூல வடிவில் எடுத்துக்கொள்ளவும் வழியிருக்கிறது, சூட்சும வடிவில் எடுத்துக்கொள்ளவும் வழியிருக்கிறது என்பதுதான் இந்தக் கதையின் சாரம். எப்போது, எந்த வடிவில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது நமக்குத் தெரிந்திருக்கவேண்டும். அதுதான் முக்கியம். அந்த அணுகுமுறை தெரியவில்லை என்றால் வாழ்க்கையை எதிர்கொள்வது சிரமமாகிவிடும்.

சூடாமணியின் குறுநாவலில் ராமனாதன், சபேசன் இருவருமே எதிர்பாராத துயரத்தில் சிக்கி இயங்கமுடியாத நிலையில் இருக்கிறார்கள். இந்தத் துயரம் தனக்கு ஏன் வந்தது என்று இருவருமே நினைத்து நினைத்து தொடக்கத்தில் சங்கடப்படுகிறார்கள். ராமனாதனின் மனம் மெல்ல மெல்ல அத்துயரத்தைக் கடக்கும் வழிகளைக் கண்டடைகிறது. தன் சூழலில் கிடைக்கிற ஒவ்வொன்றின் வழியாகவும் சிறுசிறு மீட்சிகளை அடைகிறார். இறுதியில் அவருக்கு வெற்றியும் கிடைக்கிறது. ஏதோ ஒரு ஈடுபாடு அவரைக் காப்பாற்றிக் கரை சேர்த்துவிடுகிறது.

சபேசனும் திறமை உள்ளவரே. அவருக்குக் கலைச்செயல்களிலும் ஈடுபாடு இருக்கிறது. ஆனால் அவற்றின் வழியாக மலரவேண்டிய உள்ளுணர்வு மலர்வதில்லை. மாறாக, இந்தத் துயரம் தனக்கு மட்டும் ஏன் நேர்ந்தது என்கிற ஒற்றைப்புள்ளியிலேயே குவிந்து தேங்கிவிடுகிறது. மரணம் வரைக்கும் அவரால் அதிலிருந்து மீளவே முடியவில்லை.

இருவரும் அருகருகே இருந்தாலும் இருவருடைய மன இயக்கமும் வேறுவேறாக இருக்கிறது. அந்த விசித்திரத்துக்கு விளக்கமில்லை. அதுவே இருவரின் ஊடே நிகழும் அகப்பயணம் வழியாக சூடாமணி கண்டடைந்த தரிசனம். 

(சோதனையின் முடிவு. குறுநாவல். ஆர்.சூடாமணி, தமிழ் எழுத்தாளர் கூட்டுறவுச்சங்கம், சென்னை)

 

(புக் டே – இணையதளம் – 07.09.2026)