Home

Sunday, 18 October 2026

பதின்மூன்று புத்தகங்கள்

 

1982ஆம் ஆண்டில் என்னுடைய முதல் சிறுகதை தீபம் இதழில் வெளிவந்தது. நான் அப்போது ஐதராபாத்தில் தொலைபேசித்துறையின் இளநிலைப் பொறியாளர் பணிக்குரிய பயிற்சியில் இருந்தேன். இலக்கியத்தின் மீது கொண்டிருந்த ஆர்வத்தின் காரணமாக எல்லா இலக்கிய இதழ்களுக்கும் சந்தா கட்டி வரவழைத்துப் படித்துவந்தேன்.

 

முதல் சிறுகதையைத் தொடர்ந்து கணையாழி, தாமரை, மன ஓசை போன்ற இதழ்களிலும் எழுதத் தொடங்கினேன்.  அஞ்சலில் வரும் இதழ்களை ஆர்வத்துடன் அன்றன்றே படித்துவிடுவேன். அப்படி ஒரு பழக்கம். பயிற்சிக்காலம் முடிந்தது, கர்நாடகத்தில் பெல்லாரி மாவட்டத்தில் ஹொஸபேட்டெ என்னும் ஊரில் வேலைக்குச் சேர்ந்தேன். அதைத் தொடர்ந்து கொப்பல், கதக், ஹூப்ளி, நெல்லூர், திருப்பதி என பல ஊர்களுக்கு மாறிமாறிச் சென்றுகொண்டே இருந்தேன். இடம் மாறும் ஒவ்வொரு முறையும் எல்லாப் பத்திரிகை அலுவலகங்களுக்கும் என் முகவரி மாற்றத்தைத் தெரிவித்து புதிய முகவரிகளில் பத்திரிகை கிடைக்கும்வண்ணம் பார்த்துக்கொள்வேன். பத்திரிகை படிப்பதில் அப்படி ஓர் ஆர்வம் இருந்தது.

1986ஆம் ஆண்டு என நினைக்கிறேன். ஒருமுறை தீபம் இதழில் ஒரு விளம்பரம் வெளிவந்திருந்தது. வாசகர் வட்டம் வெளியிட்ட புத்தகங்கள் விற்பனைக்கு இருப்பதாகவும் விருப்பமுள்ளவர்கள் நேரில் வந்து வாங்கிச் செல்லலாம் என்ற குறிப்பை அதில் பார்த்தேன். முகவரியும் கொடுக்கப்பட்டிருந்தது.

வாசகர் வட்டம் வெளியிட்ட சாயாவனம், கோபல்லகிராமம் போன்ற புத்தகங்களை நான் நூலகத்தில் ஏற்கனவே எடுத்துப் படித்திருந்தேன். உறுதியான அட்டை. சோவியத் நூல்களில் காணப்படுவதுபோல கெட்டியான தாள். கச்சிதமான கட்டமைப்பு. தெளிவான, உருண்டையான, வரிகளுக்கிடையே போதிய இடைவெளியைக் கொண்ட, கண்பார்வையைச் சோதிக்காத எழுத்து. இருவர் அமர்ந்து படிப்பதுபோன்ற கோட்டோவியத்தைக் கொண்ட அதன் அட்டைப்படத்தை மறக்கவே முடியாது. ஒரே ஒரு கோடு வழியாகவே ஒரு முழு மனிதனின் சாயலோடு காட்சியளித்த அச்சித்திரம் ஒரு பெரிய சாதனை.

வாசகர் வட்ட புத்தகக் கட்டமைப்பினால் ஈர்க்கப்பட்டிருந்த எனக்கு அந்த முகவரிக்குச் சென்று அவர் வைத்திருக்கும் நூல்களில் எனக்குப் பிடித்த புத்தகங்களை வாங்கிவிட வேண்டும் என்று முடிவெடுத்தேன். அன்றிலிருந்தே  நூல்களை வாங்குவதற்குத் தேவையான பணத்தைச் சேர்க்கத் தொடங்கினேன். கொஞ்சம் கொஞ்சமாக இருநூறு ரூபாய் வரைக்கும் சேர்த்துவிட்டேன். அதே தருணத்தில் சொல்லிவைத்ததுபோல சென்னைக்குச் செல்லும் வாய்ப்பும் கூடிவந்தது.

சென்ன அலுவலகத்தில் எனக்கு மூன்றுநாள் வேலை இருந்தது. அதை கூடுதல் நேரம் உட்கார்ந்து இரு நாட்களிலேயே முடித்துவிட்டேன்.  மூன்றாவது நாள் காலையிலேயே புத்தகம் வாங்குவதற்காக ஆர்வத்தோடு புறப்பட்டேன்.  முதலில் தீபம் அலுவலகத்துக்குச் சென்று, அங்கிருந்த நண்பர் திருமலை அவர்களைச் சந்தித்தேன். ஏற்கனவே பலமுறை நான் அவரைச் சந்தித்திருப்பதால் எங்களிடையில் நல்ல பழக்கம் இருந்தது. நான் அவரிடம் புத்தக விற்பனை தொடர்பான விளம்பரத்தை நினைவூட்டி, அந்த இடத்துக்குச் செல்வதற்கான வழியைக் கேட்டேன். உடனே அவர் அந்த இடத்துக்குச் செல்லவேண்டிய பேருந்து எண்ணையும் இறங்கவேண்டிய நிறுத்தத்தின் பெயரையும் வீட்டுக்குச் செல்லவேண்டிய வழியையும் சொன்னார். நான் எல்லாவற்றையும் ஒரு தாளில் குறித்துக்கொண்டேன்.

தொடர்ந்து “அந்த அம்மாகிட்ட பேசும்போது கவனமா சுருக்கமா பேசுங்க. சாதாரணமா நமக்குள்ள பேசிக்கிற மாதிரி படபடன்னு பேசாதீங்க. சத்தியமூர்த்தி தெரியுமில்லையா, ராஜாஜி கூட இருந்தவரு. சுதந்திரப்போராட்டத்துல கலந்துகிட்டதுக்காக ஜெயிலுக்கெல்லாம் போய்வந்தவரு. அவருடைய பொண்ணு அவுங்க. காமராஜருக்கெல்லாம் வேண்டப்பட்டவங்க. ரெண்டுமூனு தரம் எம்.எல்.ஏ.வா கூட இருந்தாங்க. எல்லாத்தயும் மனசுல வச்சிகிட்டு பேசுங்க” என்று ஒரு குறிப்பையும் கொடுத்தார் திருமலை.

அவர் சொன்னதையெல்லாம் மனத்துக்குள் அசைபோட்டபடி  புறப்பட்டேன். இதற்குமுன் வாசகர் வட்ட புத்தகங்களைப் பார்த்திருக்கிறேனே தவிர, அப்புத்தகங்களை வெளியிட்டவரைப்பற்றி தனிப்பட்ட விதத்தில் எனக்கு எதுவுமே தெரியாது. அவர் சத்தியமூர்த்தியின் மகள் என்பதையும் அவருடைய பெயர் லட்சுமி என்பதையும் அவருடைய கணவரின் பெயர் கிருஷ்ணமூர்த்தி என்பதையும் கணவருடைய பெயரையும் இணைத்து அனைவராலும் அவர் லட்சுமி கிருஷ்ணமூர்த்தி என அழைக்கப்படுகிறார் என்பதையும் முதன்முதலாக அப்போதுதான் அறிந்துகொண்டேன்.  அவர் மீது ஒரு மதிப்பும் மரியாதையும் தோன்றின. அவர் வீட்டில் என்னென்ன புத்தகங்கள் இருக்கும், எந்தெந்த புத்தகங்களைத் தேர்ந்தெடுக்கலாம், கையில் இருக்கும் இருநூறு ரூபாய்க்குள் எத்தனை புத்தகங்களை வாங்கமுடியும் என்றெல்லாம் யோசித்தபடி பேருந்து பிடித்து இடத்தை அடைந்தேன்.

தெருவில் சிறிது தொலைவு நடந்து முகவரியைக் கண்டுபிடித்து  வீட்டு வாசலில் இருந்த அழைப்பு மணியை அழுத்தினேன். உள்ளே மணியொலிப்பது கேட்டது. சில நொடிகளில் ஒரு பெரியவர் வந்து கதவைத் திறந்தார். வெள்ளைவெளேரென்ற சட்டை போட்டிருந்தார். ”என்ன?” என்பது போல என்னைப் பார்த்தார். நான் என் பையிலிருந்து தீபம் பத்திரிகையை எடுத்து அவரிடம் நீட்டி “புத்தகம் வாங்கிக்கறதுக்காக வந்திருக்கேன்” என்றேன். அவர் “ஓ” என்றபடி தலையை மேலும் கீழும் அசைத்துக்கொண்டே “ப்ளீஸ் கம் இன்” என்று ஆங்கிலத்தில் சொன்னார். அதே நேரத்தில் உள்ளிருந்து ஒரு பெண்குரல் “யாரு?” என்று அவரிடம் கேட்டது. “நிதானமா வெளிய வா. உன்னைத் தேடித்தான் வந்திருக்காங்க” என்று அவரும் பதில் சொன்னார்.

அதற்குள் நான் வீட்டுக்குள் அடியெடுத்து வைத்தேன். அழகான முன்னறை. அந்தப் பெரியவர் என்னை அங்கிருந்த நாற்காலியில் உட்காரச் சொன்னார். அதே நேரத்தில் உள்ளிருந்து கதவுத்திரையை விலக்கியபடி ஒரு பெண்மணி வந்தார். உயர்ந்த தோற்றம். ஓய்வுபெற்ற பள்ளிக்கூட டீச்சர் போல இருந்தார்.  கண்ணாடி அணிந்திருந்தார். ஒரு கோணத்தில் என் அம்மாவின் முகச்சாயலை அவர் முகத்தில் கண்டு ஆச்சரியத்தில் மூழ்கினேன்.

“வா வா. உன்னைத்தான் தேடி வந்திருக்கார்” என்று சொல்லிவிட்டு அந்தப் பெரியவர் உள்ளே போய்விட்டார். நான் சந்திக்கவேண்டியவர் அந்தப் பெண்மணியைத்தான் என்பதையும் அவர்தான் சத்தியமூர்த்தியின் மகள் லட்சுமி கிருஷ்ணமூர்த்தி என்பதையும் புரிந்துகொண்டேன். நான் பள்ளிக்கூடத்தில் படித்துவந்த காலத்தில் மேடைப்பேச்சுக்கு எடுத்துக்காட்டாக எங்கள் ஆசிரியர்கள் சத்தியமூர்த்தியைச் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். அப்படிப்பட்ட ஒரு சுதந்திரப்போராட்ட வீரரின் மகளின் முன்னிலையில் நின்றிருக்கிறேன் என்கிற எண்ணமே என்னைப் பரவசத்தில் ஆழ்த்தியது. சொல் எழாதவனாக எழுந்து நின்று அவருக்கு வணக்கம் சொன்னேன். “வணக்கம் வணக்கம். உக்காருங்க” என்று கையை உயர்த்தி புன்முறுவலோடு சைகை செய்தபடி எனக்கு எதிரில் இருந்த நாற்காலியில் உட்கார்ந்தார்.

என் கையில் இருந்த தீபம் இதழை அவர் கவனித்துவிட்டார். உடனே புன்னகையுடன் “விளம்பரத்தைப் பார்த்துட்டு வந்தீங்களா? புத்தகம் வேணுமா?” என்று கேட்டார். அவரை அம்மா என்று அழைப்பதா, வாங்க போங்க என பன்மையில் பேசுவதா என்று இருவித யோசனைகளில் ஈடுபட்டுக் குழம்பி முடிவில் “ஆமாங்க மேடம்” என்று தலையை அசைத்தேன்.

“எழுத்தாளரா நீங்க?” என்று கேட்டார்.

“ஆமாங்க மேடம்”

“எந்தப் பத்திரிகையில எழுதறீங்க?”

“தீபம், கணையாழி, தாமரை, மன ஓசை, சிறுகதைக்களஞ்சியம்….”

“என்ன பேருல எழுதறீங்க?”

“பாவண்ணன்ங்கற பேருல”

“பாவண்ணனா?” என சில கணங்கள் முகவாயைத் தடவியபடி யோசனையில் மூழ்கியிருந்த பிறகு ”ஒன்னு ரெண்டு படிச்சிருக்கேன். கணையாழியில  குறுநாவல் திட்டத்துல உங்க குறுநாவல் வந்திருக்கு, இல்லையா?” என்று கேட்டார்.

அவர் நினைவாற்றல் எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. அவசரமாக “ஆமாங்க மேடம்” என்றேன்.

“நான் படிச்சிருக்கேன். நல்லா ஞாபகம் இருக்குது”

அப்படி ஒரு சொல்லை ஒரு புதியவர் வழியாகக் கேட்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தது.

“நீங்களும் கதை எழுதுவீங்களா மேடம்?” என்று ஏதோ ஆர்வக்கோளாறில் கேட்டேன். அவர் அதைக் கேட்டு புன்னகைத்தார். அழகான புன்னகை. அக்கணத்தில் அவரைப் பார்த்தபோது எம்.எஸ். முகத்தைப் பார்ப்பதுபோலவே இருந்தது. தளர்வாகக் கட்டியிருந்த நரைபடிந்த காதோரக்கூந்தலில் விரல்விட்டு அளைந்தபடி “இப்ப எழுதறதில்லை. அந்தக் காலத்துல எழுதியிருக்கேன்’ என்றேன். அவருடைய பதிலால் தூண்டப்பட்டு “எந்தப் பத்திரிகையில?” என்று இன்னுமொரு கேள்வியைக் கேட்டுவிட்டேன். “அந்தக் காலத்துல கல்கி, சுதேசமித்திரன்ல நிறைய எழுதியிருக்கேன். அதுக்கப்புறம் என்னமோ தெரியலை, தானாவே எழுதறது நின்னுபோச்சி” என்றார்.

“தொகுப்பா வந்திருக்குங்களா மேடம்?”

அவர் உதட்டைப் பிதுக்கியபடி இல்லை என்பதன் அடையாளமாக தலையை அசைத்தார். “என்ன காரணம்னு தெரியலை. தொகுப்பு ஒன்னு கொண்டுவரணும்ங்கற எண்ணமே எனக்கு வரலை. அப்படியே விட்டுட்டேன்” என்றார். பிறகு அவரே பேச்சின் திசையை மாற்றும் வகையில் “என் தொகுப்புதான் வரலையே தவிர அந்தக் காலத்துல எழுதுன புதுமைப்பித்தன், கல்கி, பிச்சமூர்த்தியிலேர்ந்து இந்தக் காலத்துல எழுதற ஜானகிராமன், லா.ச.ரா., கந்தசாமி வரைக்குமான எழுத்தாளர்களுடைய  தொகுப்புகளையெல்லாம் படிச்சிருக்கேன். பல பேரோடு பேசிப் பழகியிருக்கேன்” என்றார். தொடர்ந்து அவரே  ”வாசகர் வட்டம் தெரியுமா?” என்று கேட்டார்.

“வாசகர் வட்டம் போட்ட ரெண்டு புத்தகங்கள் படிச்சிருக்கேன். சாயாவனம், கோபல்லகிராமம். ரெண்டுமே எனக்கு ரொம்ப புடிச்ச நாவல்கள். அதுக்கு மேல எனக்கு எதுவும் தெரியாது மேடம்” என்றேன்.

“மத்ததெல்லாம் பார்த்ததில்லையா?” என்று கேட்டார் அவர்.

“இங்க விழுப்புரம் பாண்டிசேரி பக்கம்தான் எங்க சொந்த ஊரு மேடம். படிச்சி முடிக்கிற வரைக்கும் இங்கயே இருந்தேன். நூலகத்துலதான் வழக்கமா புத்தகம் எடுத்துப் படிப்பேன். அங்கதான் நான் சொன்ன ரெண்டு புத்தகங்களும் கெடைச்சிது. வேலை கிடைச்ச பிறகு நான் கர்நாடகத்துக்கு போயிட்டேன். அங்க தமிழ் புத்தகங்களே கிடைக்காது. அதனால மத்த புத்தகங்களைப் பத்தி எனக்கு அதிகமா தெரியாது.”

“தி.ஜானகிராமன், லா.ச.ரா., நீல.பத்மனாபன், ஆ.மாதவன் பத்தியெல்லாம் தெரியுமா?”

“தெரியும்ங்க மேடம். நல்லாவே தெரியும். அவுங்களுடைய பல கதைகளை நான் படிச்சிருக்கேன்”

“அவுங்க எழுதிய நாவல்களையெல்லாம் நாங்க போட்டோம். அந்தக் காலத்துல எல்லா எழுத்தாளர்களும் இருபது வாரம், முப்பது வாரம்னு கல்கி, விகடன், கலைமகள் மாதிரியான பத்திரிகையிலயும் நீளநீளமா தொடர்கதை எழுதுவாங்க.   அது முடிஞ்சதுக்கப்புறமா ஒன்னொன்னா புத்தகமா வரும். அப்படித்தான் எல்லாப் புத்தகங்களும் வந்திட்டிருந்தது. வெளிநாட்டுல வரமாதிரி நேரிடையாவே எழுத்தாளர்களுடைய நாவல்கள் வெளிவரணும்ங்கறதுதான் என் எண்ணம். அப்படித்தான் வாசகர் வட்டம் உருவாச்சி. வாசகர் வட்டத்துல வெளியிடறதுக்காக ஒவ்வொரு எழுத்தாளர்கிட்டயும் சொல்லி, எழுதவச்சி, காத்திருந்து வாங்கி புத்தகமா போட்டேன்”

அவர் தன் முயற்சியைப்பற்றி ஏதோ ஆர்வத்தில் விரிவாகச் சொல்லத் தொடங்கினார். அப்போது கதவுத்திரையை விலக்கிக்கொண்டு ஒரு அம்மா ஒரு தட்டில் ஒரு கோப்பையை வைத்து எடுத்துவந்தார். அவர் நுழைந்ததுமே அந்தக் கூடத்தில் காப்பிமணம் கமழ்ந்தது. அந்த அம்மா என்னருகில் வந்து தட்டை நீட்டினார். காப்பியின் மணம் இன்னும் அதிக அளவில் எனக்குள் இறங்கியது. நான் ஒருகணம் செயலற்று லட்சுமி அம்மாவைப் பார்த்தேன். அவர் புன்னகைத்தபடி “உங்களுக்குத்தான். எடுத்துக்குங்க” என்றார். நான் மெளனமாக தலையசைத்தபடி அந்தக் கோப்பையை எடுத்துக்கொண்டேன். அளவான சூட்டில் காப்பியை அருந்துவதில் உள்ள சுகத்தை அன்று உணர்ந்தேன். அதில் லயித்தபடி ஒவ்வொரு மிடறாக அருந்தி முடித்தேன்.

“நீங்க உக்காந்திருக்கீங்களே, அந்த இடத்துலதான் அந்தக் காலத்துல சி.சு.செல்லப்பா, க.நா.சு.லாம் வந்து உக்காருவாங்க” என்று லட்சுமி அம்மா சட்டென பேச்சைத் தொடங்கினார். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. சட்டென துணுக்குற்று எழுந்துவிட்டேன். அதைப் பார்த்து அவர் சிரித்தபடி “என்ன இது? வாத்யாரைப் பார்த்த ஸ்டூடண்ட் மாதிரி எழுந்திட்டீங்க. நான் சொல்றது இருபத்தஞ்சி வருஷத்துக்கு முன்னால நடந்த விஷயம்” என்றார். ஏதோ பதற்றத்தில் எழுந்துவிட்டதை நினைத்து எனக்கும் வெட்கமாக இருந்தது. திரும்பிக் குனிந்து நான் அமர்ந்திருந்த இருக்கையையே ஒரு கணம் பார்த்தேன். ஏதேதோ எண்ணங்கள் எழுந்து மறைந்தன. எல்லாவற்றையும் கட்டுப்படுத்தி அடக்கிக்கொண்டு அவர் சொல்வதைக் கேட்டுக்கொள்ளும் விதமாக மீண்டும் அமர்ந்துகொண்டேன். அந்த இருக்கையின் கெளரவத்தை மனத்தில் பதியவைத்துக்கொண்டேன்.

“அப்ப நம்ம வீட்டுக்கு எல்லா எழுத்தாளர்களும் வருவாங்க. ஜானகிராமன், லா.ச.ரா.லாம் கூட வந்திருக்காங்க. மாசாமாசம் ஒரு ஞாயித்துக்கெழமையில சேர்ந்து பேசுவோம். அதுக்கு முன்னால மணிக்கொடி சீனிவாசன் வீட்டுல அப்படி ஒரு கூட்டம் நடக்கும். நான் கூட அந்தக் கூட்டத்துல கலந்துகிட்டதுண்டு” என்று சொல்லிக்கொண்டே சென்றவர் சட்டென நிறுத்தி “மணிக்கொடி தெரியுமில்லையா?” என்று கேட்டார்.

“தெரியும் மேடம்” என்றபடி நான் வேகமாகத் தலையசைத்தேன். “அதுலதான புதுமைப்பித்தன், மெளனியெல்லாம் எழுதினாங்க” என்றேன்.

நான் சொல்வது சரி என்பதன் அடையாளமாக தலையசைத்தபடி “அதுவும் ஒரு இலக்கியக்கூட்டம் மாதிரிதான் இருக்கும். எல்லாருக்கும் இலக்கியம்தான் பேச்சு. நேரம் போறதே தெரியாம பேசிட்டிருப்பாங்க” என்றார்.

நான் அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

”என்னமோ தெரியலை, ஒரு கட்டத்துல அந்த சீனிவாசன் வீட்டுல சந்திக்கிற விஷயம் தானாவே நின்னுடுச்சி. அதுக்கப்புறம்தான் நம்ம இடத்துல நாம சேர்ந்து பேசலாம்னு தொடங்கினோம். அப்ப ஒரு எழுத்தாளர் புத்தகம் வெளியிடறதெல்லாம் சாதாரண காரியமில்லை. ரொம்ப கஷ்டம். எழுதிக் கொடுத்துட்டு வருஷக்கணக்குல காத்திருக்க வேண்டியதா இருக்குது. ஒரு கூட்டுறவு அமைப்புல நாமே ஒரு புத்தக வெளியீட்டை ஆரம்பிச்சா எல்லாருக்கும் வசதியா இருக்கும்னு பேச்சோடு பேச்சா பேசிகிட்டோம். அதே சமயத்துல, ஆளாளுக்கு ஒரு பங்கு மாதிரி ஒரு தொகையைப் போட்டு நடத்துறது வேணாம். அது ஒரு வணிகம் மாதிரி ஆயிடும். அதுக்குப் பதிலா எல்லா வாசகர்களையும் இணைக்கிறமாதிரி   ஒரு திட்டம் போடுவோம்னு யோசிச்சோம். யார் எழுதினாலும் கடைசியில வாங்கப் போறது வாசகர்கள்தானே? வாசகர்களுடைய ஆதரவு இருந்தா நாம எதை வேணும்னாலும் சாதிக்கலாம்னு எனக்குத் தோணிச்சி. இத்தனை பெரிய தமிழ்நாட்டுல ஒரு ரெண்டாயிரம் மூவாயிரம் வாசகர்களை நம்மால சுலபமா திரட்டமுடியும்னு நெனச்சேன். ஒரு ஆளுக்கு இருபத்தஞ்சி ரூபா கொடுத்து உறுப்பினரானா போதும், அவுங்களுக்கு மலிவான விலையில வருஷத்துக்கு ஆறு புத்தகம் கிடைக்கிற மாதிரி செய்யலாம்னு சொன்னேன். அந்த எண்ணத்தோடுதான் வாசகர் வட்டம் உருவாச்சி.”

ஒரு பெரிய வரலாற்றை அவர் சாதாரணமான குரலில் ஏதோ ஒரு நாட்டுநடப்புச் செய்தியைப்பற்றிச் சொல்வதுபோல சொல்லிமுடித்து நிறுத்தினார். நான் குறுக்கிட்டுப் பேசி அவர் எண்ண ஓட்டத்தைக் கலைத்துவிடக் கூடாது என்கிற எச்சரிக்கை உணர்வோடு அமைதியாக அவரையே பார்த்தபடி அமர்ந்திருந்தேன்.

ஒருமுறை அவர் தன் தொண்டையைச் செருமிக்கொண்டு  நிதானமான குரலில் ”ரெண்டாயிரம் பேரு சேர்ந்தா ஐம்பதாயிரம் ரூபா முதலீடா கிடைக்கும், அதை வச்சி என்ன வேணும்னாலும் சாதிக்கலாம்னு தப்புக்கணக்கு போட்டுட்டேன்” என்றார்.

”என்னாச்சிங்க மேடம்? என்று அதிர்ச்சியோடு கேட்டேன்.

அவர் உதட்டைப் பிதுக்கினார்

“ரெண்டாயிரம் வாசகர்ங்கறது என் கனவா இருந்தது. குறைந்தபட்சம் ஆயிரம் வாசகராவது கிடைச்சிருந்தா நல்லா இருந்திருக்கும். ஆனா கடைசியா சேர்ந்தது வெறும் ஐந்நூறு பேருதான்”

“ஐநூறுதானா?”

“ஆமாம். அதுல கிடைச்ச பன்னெண்டாயிரத்தைநூறு ரூபாய் முதலீட்டை வச்சி என்ன செய்யமுடியும்? எல்லாருமே வேணாம் இந்த விபரீதம், விட்டுடலாம்னு சொன்னாங்க. ஆனா முன்வச்ச காலை பின்வாங்கக்கூடாதுங்கறதுல நான் உறுதியா இருந்தேன். எங்க வீட்டை அடமானம் வச்சி தேவையான கடனை வாங்கி வேலையைத் தொடங்கிட்டேன்”

ஒருவர் புத்தகம் போடுவதற்காக தனக்குச் சொந்தமான வீட்டை அடகுவைத்து பணம் திரட்டும் செயலை என்னால் கற்பனை செய்தே பார்க்கமுடியவில்லை. திகைப்பில் மூழ்கியபடி அவர் முகத்தையே பார்த்தேன்.

“இருபத்தஞ்சி ரூபா அந்தக் காலத்துல பெரிய பணம்தான். கிட்டத்தட்ட ஒரு கிராம் தங்கத்துடைய விலைன்னு சொல்லலாம். ஆனா, நாம எல்லாரையும் பணம் குடுங்கன்னு கேக்கலையே? இலக்கியத்தைப் படிக்கணும், இலக்கியத்தை வளர்க்கணும், இலக்கியத்தை வாழவைக்கணும்ங்கற எண்ணம் கொண்டவங்களைத்தானே கேட்டோம். தினசரி வாழ்க்கையில அது ஒருவகையில தியாகம்தான். இல்லைன்னு சொல்லலை. ஆனா, தியாகம் இல்லாம உலகத்துல எதையுமே செய்யமுடியாது, இல்லையா?”

அவர் என்னிடம் பேசுகிறாரா, என்னை முன்வைத்து உலகத்திடம் பேசுகிறாரா என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவராக அதைப் பேசவில்லை. இழப்பின் வேதனை அப்படி அவரைப் பேசவைக்கிறது என்பதை மெல்ல மெல்லப் புரிந்துகொண்டேன். அவர் ஏதேதோ பழைய நினைவுகளில் மூழ்கியவராக சில கணங்கள் அமைதியாக இருந்தார். ஒரு பெருமூச்சுடன் சுவரையொட்டி புத்தகங்கள் அடுக்கப்பட்டிருந்த அலமாரியின் பக்கம் பார்வையை ஓட்டினார்.

“இப்ப நினைச்சிப் பார்த்தா எனக்கே திகைப்பா இருக்குது. நாமா இதைச் செஞ்சோம்னு தோணுது. பத்து வருஷம் ஒரே முனைப்பா இருந்து தேரை இழுத்துட்டு வரமாதிரி என்னால முடிஞ்சவரைக்கும் இழுத்துவந்து நிறுத்திட்டேன். நாப்பத்தஞ்சி புத்தகம். எனக்குத் தெரியும். இந்த ஒவ்வொரு புத்தகமும் இன்னும் ஒரு அம்பது நூறு வருஷத்துக்குப் பேசப்படக்கூடிய புத்தகம். ஆனா மக்களுக்குத் தெரியலையே? என்ன செய்ய?” என்று சற்றே கசப்பானதொரு புன்னகையோடு சொன்னார்.

சில கணங்கள் தயங்கிய பிறகு “அப்படிச் சொல்லாதீங்க மேடம். இதனுடைய மதிப்பு தெரிஞ்சவங்க கண்டிப்பா தேடி வருவாங்க” என்றேன்.

அதைக் கேட்டதும் ஒருகணம் என்னை ஏறிட்டுப் பார்த்தார். பிறகு  உண்மையாகவே மனம்விட்டு சிரித்தார். சில கணங்களுக்கு அவரால் அச்சிரிப்பை நிறுத்தவே முடியவில்லை. அவருடைய விழியோரங்களில் நீர் திரண்டு முத்தென நின்றது. அவர் தன் சுண்டுவிரலை உயர்த்தி அதைத் தொட்டெடுத்து உதறிவிட்டு மூச்சு வாங்கினார்.

“உலகம் புரியாத சின்னப் புள்ளையா இருக்கீங்களே நீங்க? என்ன வயசு உங்களுக்கு?” என்று திடீரென என்னைப் பற்றிக் கேட்கத் தொடங்கினார்.  நான் என்னைப்பற்றிய விவரங்களைச் சுருக்கமாகத் தெரிவித்தேன்.

”கல்யாணமாயிடுச்சா?”

“ஆயிடுச்சிங்க மேடம்”

“குழந்தைங்க?”

“இன்னும் இல்லைங்க மேடம்”

நான் சொன்ன பதில்களைத் தனக்குத்தானே அசைபோட்டு ரசிப்பதுபோல தலையசைத்தபடி என்னைப் பார்த்தார்.

“தேடி வருவாங்கன்னு சொல்றீங்க. நல்ல நம்பிக்கைதான். ஒரு எழுத்தாளனுக்குத் தேவையான நம்பிக்கை. ஒரு எழுத்தாளன் அப்படித்தான் சொல்வான். ஆசைப்படுவான். கனவு காணுவான். அதுதான் அவன் இயல்பு. ஆனா நீங்க சொல்றமாதிரி ஒருத்தரும் அப்படி வரலை. எத்தனை புத்தகங்கள் மினுமினுப்பு குறையாம அப்படியே கட்டுகட்டா இருக்குது தெரியுமா? அங்க ரேக் பக்கம் பாருங்க. இருபது வருஷத்துக்கு மேல ஆயிடுச்சி. இன்னும் ஒருத்தர் கூட வரலை. பழைய பேப்பர்காரன்கிட்ட தூக்கிக் கொடுக்க எனக்கு மனசில்லை. விருப்பப்பட்டவங்க வந்து வாங்கிட்டுப் போகட்டும்னுதான் பத்திரிகையில போடச் சொன்னேன்”

அவர் சுட்டிக்காட்டிய உண்மையின் பாரம் என் மனத்தை அழுத்தியது. ஒருகணம் அவரை நேருக்கு நேர் பார்க்கமுடியாமல் சுவரோரமாக நின்றிருந்த புத்தகத்தாங்கிகளின் திசையில் பார்த்தேன். பிறகு நின்றுவிட்ட உரையாடலை எப்படித் தொடர்வது என்று புரியாமல் ஒருவித அசட்டுப் புன்னகையுடன் அவருடைய முகத்தைப் பார்த்தேன்.

“பழைய கதையெல்லாம் இப்ப எதுக்கு? விடுங்க. ஏதோ அதைப்பத்திய பேச்சு வந்ததால பழைய விஷயங்களையெல்லாம் சொல்ற மாதிரி ஆயிட்டுது. அதெல்லாம் போகட்டும். நீங்க சொல்லுங்க? உங்களுக்கு என்ன புத்தகம் வேணும்? அதோ அந்த ரேக் முழுக்க வாசகர் வட்ட புத்தகங்கள்தான். உங்களுக்கு எது வேணுமோ எடுத்துக்குங்க” என்றார்.

நான் எழுந்து நின்றேன். என் கண்கள் புத்தகத்தாங்கியின் திசையைப் பார்த்தன. ஆனால் கால்கள் அத்திசையில் நகர மறுத்தன.

“போங்க, போய் எடுத்துக்குங்க. ஏன் தயங்கறீங்க?” என்றார் அவர்.

நான் அவர் முகத்தைப் பார்த்தபடியே அந்தப் புத்தகத்தாங்கிக்கு அருகில் சென்றேன். ஒவ்வொரு அடுக்கிலும் ஒவ்வொரு புத்தகத்தின் பிரதிகள். அம்மா வந்தாள். வேள்வித்தீ. புனலும் மணலும். பள்ளிகொண்டபுரம். நடந்தாய் வாழி காவேரி. இன்னும் இன்னும் நிறைய. திரும்பிய திசையெல்லாம் புத்தகங்களாக இருந்தன. ஒவ்வொரு புத்தகமாகத் தொட்டெடுத்து பிரித்துப் பார்த்தேன். இதுவரை பிரிக்கப்படாத புத்தகத்தின் மணம் எழுவதை உணர்ந்தேன். அதன் வழவழப்பை என் கைவிரல்கள் உணர்ந்தன. ஒவ்வொரு புத்தகத்திலும் அச்சடிக்கப்பட்ட விலைக்குறிப்பை என் கண்கள் கவனித்தன. இப்போது பழைய புத்தகக்கடையில் விற்பவர்கள் கூட அதைவிட கூடுதலான விலையை வைத்து விற்பது உறுதி என்கிற எண்ணம் என் நெஞ்சில் எழுந்தது.

“எந்தப் புத்தகத்தை எடுக்கறதுன்னு குழப்பமா? ஏன் தயங்கித்தயங்கி நிக்கறீங்க?”

நான் புத்தகத்தாங்கியை விட்டு மீண்டும் என் இருக்கைக்கே திரும்பினேன். “மேடம். என்கிட்ட இருநூறு ரூபாதான் இருக்குது. இதையே நான் கொஞ்சம்கொஞ்சமா சேர்த்து எடுத்துவந்திருக்கேன். இங்க இருக்கற புத்தகங்களைப் பார்த்தா ஒவ்வொரு புத்தகத்துக்கும் நூறு இருநூறு கொடுக்கலாம் போல இருக்குது. இந்த பணத்தை எடுத்துகிட்டு நீங்களே ஒன்னு ரெண்டு புத்தகத்தை எடுத்துக் கொடுங்க மேடம். எனக்கு அது போதும்” என்றபடி என் பையிலிருந்த இருநூறு ரூபாயை எடுத்து அவருக்கு முன்னால் இருந்த சிறுமேசையில் வைத்தேன்.

அவர் ஒருகணம் என் முகத்தைப் பார்த்தார். “பணம் பெரிசில்லைங்க தம்பி. நீங்க படிக்க நினைக்கிறீங்களே. அது போதும். உங்களுக்கு எந்தப் புத்தகம் வேணுமோ அதை நீங்களே தாராளமா எடுத்துக்கலாம்” என்றார். அவர் அப்படி எனக்கு அளித்த சுதந்திரமே எனக்குத் தயக்கத்தைக் கொடுத்தது. மறுப்பைத் தெரிவிக்கும் விதமாக மெல்ல தலையசைத்தபடி “வேணாம் மேடம். நீங்களே ரெண்டுமூனு எடுத்துக் குடுங்க மேடம். எனக்கு அது போதும்” என்றேன்.

“த்ச்” என்று நாக்கு சப்புக்கொட்டியபடி மிரட்டுவதுபோல என்னை அவர் ஒருகணம் பார்த்தார். “நானே சொல்றபோது உங்களுக்கு என்ன தயக்கம்? போங்க. என்ன வேணும்னு பார்த்து எடுங்க” என்றார்.

எனக்கு வேறு வழி தெரியவில்லை. புத்தகத்தாங்கிகளின் பக்கம் மீண்டும் சென்றேன். கைக்கு எட்டும் தொலைவில் அம்மா வந்தாள், வேள்வித்தீ, புனலும் மணலும், பள்ளிகொண்டபுரம் புத்தகங்கள் இருந்தன. அவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு திரும்பி வந்து அவருக்கு முன்னால் வைத்தேன்.

“போதுமா?” என்று கேட்டார் அவர்.

“போதும் மேடம்”

அவர் புன்னகையுடன் கையை புத்தகத்தாங்கி இருந்த திசையில் நீட்டி “போங்க போங்க. இன்னும் எடுத்துக்குங்க போங்க” என்று சொன்னார். ஒருகணம் எனக்குத் திகைப்பாகவும் இருந்தது. ஆசையாகவும் இருந்தது. அவர் முகத்தையே திரும்பித்திரும்பிப் பார்த்தபடி புத்தகத்தாங்கிகளின் பக்கம் மீண்டும் சென்றேன்.

முதல் தாங்கியைக் கடந்து இரண்டாவது தாங்கியின் முன்னால் நின்று பார்த்தேன். அதிலும் அடுக்கு முழுக்க ஏராளமான புத்தகங்கள் இருந்தன. எதை எடுப்பது என்று குழப்பமாக இருந்தது. எல்லாமே படிக்காத புத்தகங்கள்தான். புரட்டிப்புரட்டிப் பார்த்துவிட்டு அந்தத் தாங்கியிலிருந்து மூன்று புத்தகங்களை மட்டும் எடுத்துக்கொண்டு வந்து ஏற்கனவே மேசையின் மீது வைத்திருந்த புத்தகங்களோடு சேர்த்துவைத்தேன். பிறகு எதுவும் பேசாமல் அவர் முகத்தைப் பார்த்தேன். அவர் கண் பார்வையாலேயே இன்னும் சில புத்தகங்களை எடுத்துக்கொள்ளுமாறு சொல்வதைக் கண்டேன். என் இதயம் அக்கணத்தில் வேகமாக அடிக்கத் தொடங்கியது. நான் மீண்டும் மூன்றாவது தாங்கியின் அருகில் சென்று இன்னும் மூன்று புத்தகங்களை எடுத்துவந்து அவர் முன்னால் வைத்தேன்.

அவர் அப்போதும் என்னைப் பார்த்து அதே மாறாத புன்னகையுடன் “போதுமா?” என்று கேட்டார்.

“போதும் மேடம். பத்து புத்தகம் ஆயிடுச்சி மேடம்”

“சரி, எல்லாத்தயும் எப்படி எடுத்துட்டு போவீங்க?” என்று கேட்டார். புறப்பட்டு வரும் அவசரத்தில் நான் பையையோ, பெட்டியையோ எதையுமே எடுக்காமல் வந்த பிழையை உணர்ந்தேன். உள்ளுக்குள் நாக்கைக் கடித்தபடி “பரவாயில்லை மேடம். கையிலயே எடுத்துகிட்டு போயிடுவேன்” என்றபடி எல்லாப் புத்தகங்களையும் ஒருசேர வைத்து எடுத்தேன்.

“எப்படி போவீங்க?”

”பஸ்லதான் போவணும் மேடம்”

“இவ்வளவயும் கையில எடுத்துகிட்டு பஸ்ல போகமுடியுமா?”

அவருடைய கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. எதுவும் சொல்லாமல் அமைதியாக அவரையே பார்த்தபடி நின்றேன். அவர் கதவுத்திரையின் பக்கம் திரும்பி யாரையோ பெயர் சொல்லி அழைத்தார். அடுத்த கணம், காப்பி கொண்டுவந்த அம்மா வந்து நின்றார். “இந்த புத்தகங்களை எடுத்துட்டு போறமாதிரி ஒரு பை கொண்டுவந்து கொடு” என்று லட்சுமி அம்மா அவரிடம் கூறினார். அவர் வீட்டுக்குள் சென்று ஒருசில கணங்களில் ஒரு துணிப்பையைக் கொண்டுவந்து என்னிடம் கொடுத்தார். நான் மேசை மீதிருந்த புத்தகங்களையெல்லாம் ஒவ்வொன்றாக எடுத்து அந்தப் பைக்குள் அடுக்கிவைத்தேன்.

அப்போது அவரே புத்தகத்தாங்கியின் பக்கத்தில் சென்று இன்னொரு அடுக்கிலிருந்து மூன்று புத்தகங்களை எடுத்துவந்து “இந்தாங்க, இதையும் எடுத்துட்டு போங்க” என்றார். ஒருகணம் தயங்கி, மறுகணமே மகிச்சியோடு ”ரொம்ப நன்றி மேடம்” என்றபடி அவற்றை கைநீட்டிப் பெற்று, அவற்றையும் பைக்குள் வைத்தேன்.

“இந்தப் புத்தகங்களையெல்லாம் எத்தனை மாசத்துல படிச்சி முடிப்பீங்க?” என்று கேட்டார் அவர்.

“ஒரு புத்தகத்துக்கு ஒரு நாள் போதும் மேடம். பதிமூனு புத்தகம். பதிமூனு நாள்ல படிச்சிடுவேன் மேடம்”

“அவ்ளோ வேகமா படிப்பீங்களா? எந்த நேரத்துல படிப்பீங்க?”

“ராத்திரியிலதான் மேடம்”

“அப்ப தூக்கம்?”

“படிக்க ஆரம்பிச்சிட்டா, படிச்சி முடிச்சிட்டுத்தான் தூங்குவேன் மேடம்”

அதைக் கேட்டு அவர் விழிகள் விரிந்தன. “நல்லது. அப்படித்தான் இருக்கணும். ஒரு எழுத்தாளனுக்கு அந்த வேகம் இருந்தாவணும்”

புத்தகப்பையை எடுத்துக்கொண்டு “வரேன் மேடம். ரொம்ப நன்றி” என்று அவருக்கு வணக்கம் சொன்னேன்.

”உங்க பேரு பாவண்ணன்னுதான சொன்னீங்க. ஞாபகம் வச்சிக்குவேன். இனிமேல உங்க கதையைப் படிக்கிற சமயத்துல உங்க முகமும் ஞாபகத்துக்கு வரும்“ என்று புன்னகைத்தார். “சரி. போய் வாங்க. சென்னைக்கு வந்தா நேரம் கிடைக்கிறபோது வீட்டுக்கு வாங்க” என்று விடைகொடுத்தார்.

அவர் எழுந்து நின்ற தோற்றம். நரையோடிய கூந்தல். அமைதி படிந்த கண்கள். எல்லாமே கூடி எனக்கு என் அம்மாவை மறுபடியும் நினைவுபடுத்தியது. அந்த நினைவைச் சுமந்தபடி அந்த வீட்டைவிட்டு வெளியேவந்தேன்.

ஊருக்குத் திரும்பியதும் என் மனைவி என் கையிலிருந்த புத்தகப்பையைப் பார்த்துவிட்டு “என்ன, வீட்டுக்குப் புதுவரவா?” என்று கேட்டு கேலி செய்தார். பிறகு அவரே அவற்றை எடுத்து மேசைமீது அடுக்கிவைத்தார். நான் அந்த அம்மாவைச் சந்தித்த கதையை அவரிடம் சொன்னேன்.

லட்சுமி அம்மாவிடம் சொன்னதுபோல ஒரு நாளைக்கு ஒரு புத்தகம் வீதம் பதின்மூன்று புத்தகங்களையும் பதின்மூன்று நாட்களில் படித்துமுடித்தேன்  தமிழ் நாவல்களின் வெவ்வேறு முகங்களைப் புரிந்துகொள்ள அந்த வாசிப்பு எனக்கு மிகவும் உதவியது.

அதற்குப் பிறகான காலங்களில்தான் நான் சத்தியமூர்த்தியைப் பற்றி விரிவாகப் படித்துத் தெரிந்துகொண்டேன். நேரு தன் மகளுக்கு எழுதிய கடிதங்களைப்போல அவரும் தன் மகளான லட்சுமிக்கு எழுதிய கடிதங்கள் நூலாக வந்திருப்பதை அறிந்து தேடியெடுத்துப் படித்தேன். லட்சுமி அம்மாள் எவ்வளவு பெரிய பேறு பெற்றவர் என்று நினைத்துக்கொண்டேன். ஓர் இலட்சியப்பெண்மணியைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பு தற்செயலாக எனக்குக் கைகூடி வந்ததும் இயற்கை நல்கிய பெரும்பேறு என்ற எண்ணமும் கூடவே எழுந்தது.

 

(சிறுவாணி வாசகர் மையத்தின் வெளியீடாக வந்திருக்கும் ‘லட்சுமி கிருஷ்ணமூர்த்தி படைப்புகள்’ தொகுப்புக்காக எழுதிய கட்டுரை)