Home

Saturday, 10 October 2026

வாழ்க்கைப்புதிர்

 

ஆன்டன் செகாவ் 122 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த ருஷ்ய எழுத்தாளர். மருத்துவராக பணிபுரிந்தபோதும் தம் உடல்நிலையை அவர் சரியாகக் கவனித்துகொள்ளவில்லை. 44 வயதிலேயே இந்த உலகத்தைவிட்டு மறைந்துபோனார். ஆனால் அவர் எழுதிய ஐநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளும் ஒரு நாவலும் ஏழு நாடகங்களும் அவருடைய மேதைமையை உணர்த்தியபடி இன்னும் நம்மிடையில் வாழ்கின்றன.

செகாவின் கதைமாந்தர்கள் அனைவரும் எதார்த்த உலகில் நம் கண் முன்னால் வாழ்கிற எளிய மனிதர்கள். ஆனால் நாம் பார்க்கவே வாய்ப்பில்லாத ஒரு கோணத்தில் செகாவ் அவர்களைப் படம் பிடித்துக் காட்டுகிறார். அந்தத் திறமை, அந்த எளிய மனிதர்களுடைய வாழ்க்கையின் வெவ்வேறு தருணங்களைக் கதைச்சித்திரங்களாகத் தீட்டுவதற்கான வாய்ப்புகளை அவருக்கு அளித்திருக்கின்றன. அவருடைய சில கதைகள் வியப்படைய வைக்கின்றன. சில கதைகள் துயரம்கொள்ள வைக்கின்றன. சில கதைகள் பெருமூச்சுவிட வைக்கின்றன. சில நம் அறியாமையை உணர்த்தித் திகைக்கவைக்கின்றன.

மொழிபெயர்ப்பாளர் அவைநாயகன் இதுவரை தமிழில் மொழிபெயர்க்கப்படாத செகாவின் நெடுங்கதையொன்றைத் தேர்ந்தெடுத்து முதன்முறையாக மொழிபெயர்த்திருக்கிறார்.  அதன் தலைப்பு ’மனைவியை விற்றவன்’. மதிமலர் பதிப்பகம் அதை அழகான முறையில் கையடக்கமான புத்தகமாக வெளியிட்டிருக்கிறது.

இவான் பெத்ரோவிச் என்கிற புக்ரோவ் ஓர் அரசு அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு சாதாரண ஊழியன். அவன் வருமானம் மிகமிகக் குறைவு. அவனுடைய குடும்பத்தேவையை நிறைவுசெய்ய அந்த வருமானம் போதுமானதல்ல. அவன் மனைவி லிசா. வசீகரமான தோற்றம் கொண்ட அழகான பெண். அவர்களுக்கு ஓர் ஆண்குழந்தை இருக்கிறது. அதன் பெயர் மிஷூத்கா.

அந்த ஊரில் குரஹோல்ஸ்கி என்னும் செல்வந்தன் வசிக்கிறான். தற்செயலாக ஒருநாள் லிசாவைப் பார்த்ததும் அவள் அழகில் மயங்கிக் காதல் கொள்கிறான். அவள் திருமணமானவள் என்பதைப்பற்றியெல்லாம் அவன் கவலை கொள்ளவில்லை. உயிருக்குயிராய் அவளை நேசிக்கத் தொடங்குகிறான். அவளுக்கும் அவன் மீது காதல் ஏற்படுகிறது. தான் மணமானவள் என்கிற எண்ணத்தை மறந்து அவளும் அவனை உயிருக்குயிராக நேசிக்கிறாள். காதல் இருவருடைய கண்களையும் மறைத்துவிடுகிறது. இருவரும் அடிக்கடி பல இடங்களில் சந்தித்து காதலை வளர்த்துக்கொள்கிறார்கள். புக்ரோவ் இல்லாத நேரங்களில் அவனுடைய வீட்டுக்கே வந்து லிசாவோடு தங்கிவிட்டுச் செல்லும் அளவுக்கு அவர்கள் காதல் வளர்ந்துவிடுகிறது.

குரஹோல்ஸ்கி லிசாவை மணந்துகொண்டு தனியாக வாழ விரும்புகிறான். தம் காதலைப்பற்றி புக்ரோவிடம் தெரிவித்துவிட்டு அந்த பந்தத்திலிருந்து வெளியேறி வருமாறு அழைக்கிறான். லிசாவால் புக்ரோவோடு தொடங்கிய வாழ்க்கையை மறக்க இயலவில்லை. குரஹோல்ஸ்கியோடு கொண்ட இன்ப வாழ்க்கையையும் உதறமுடியவில்லை. அவள் தன் காதலைப்பற்றி கணவனிடம் பேச அஞ்சுகிறாள். ஆனால் குரஹோல்ஸ்கி  அவசரப்படுத்துகிறான். இப்படியே நீண்ட காலம் தொடரமுடியாது என்றும் தன்னொடு மட்டுமே அவள் வாழவேண்டும் என்றும் வற்புறுத்துகிறான். லிசாவால் சரி என்றும் சொல்லமுடியவில்லை. முடியாது என்றும் சொல்லமுடியவில்லை.

ஒருநாள் லிசாவின் வீட்டில் இருவரும் ஒன்றாக இருக்கும் தருணத்தில் புக்ரோவ் வந்துவிடுகிறான். ஒருகணம் மூவரும் திகைத்து பேச்சற்றவளாக நிற்கிறார்கள். லிசாவுக்கும் தனக்கும் இடையிலுள்ள காதலை யாரும் சொல்லத் தேவையில்லாமல் அவனாகவே தெரிந்துகொள்வதற்கு அத்தருணம் இயற்கையாகவே ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டதாகக்  கருதுகிறான் குரஹோல்ஸ்கி.

அத்தகைய தருணத்தில் சாதாரணமாக ஒரு கணவனிடம் ஏற்படக்கூடிய கோபமோ ஆவேசமோ எதுவுமே புக்ரோவிடம் ஏற்படவில்லை. அவன் அமைதி ஆபத்தானது என்பதையும் ஏதோ ஒரு உள்நோக்கத்தோடுதான் அவன் அமைதியாக இருக்கிறான் என்பதையும் குரஹோல்ஸ்கி புரிந்துகொள்கிறான். உடனே  புக்ரோவை நெருங்கி தனியே அழைத்துச் செல்கிறான். லிசா மீது தான் கொண்ட காதலைப்பற்றி விரிவாகச் சொல்கிறான். லிசாவைத் தனக்காக விட்டுக்கொடுக்கும்படி கேட்கிறான்.

தொடக்கத்தில் ஒரு மன்றாட்டாகவே அவன் புக்ரோவிடம் தன் விருப்பத்தை முன்வைக்கிறான். புக்ரோவுடைய அமைதியையும் இயலாமையையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள குரஹோல்ஸ்கி திட்டமிடுகிறான். லிசாவை விட்டு முற்றிலுமாக விலகிச் செல்ல ஒரு லட்சம் ரூபிள் தருவதாக வாக்களிக்கிறான். அதைக் கேட்டு புக்ரோவின் கண்களில் படரும் சுடரை அவன் பார்த்துவிடுகிறான். ஒருசில மணி நேரங்களிலேயே தன்னால் அந்தத் தொகையை அவனுக்குக் கொடுத்துவிட முடியும் என்றும் தெரிவிக்கிறான்.

லிசா மீது புக்ரோவுக்கும் அளவற்ற காதல் இருக்கிறது. அதே சமயத்தில் அவளை ஒரு பணயப்பொருளாக்கி அந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளவும் அவன் விரும்புகிறான். செல்வம் ஒரு காந்தமென அவனை இழுக்கிறது. ஒரு லட்சத்துக்குப் பதிலாக ஒன்றரை லட்சம் ரூபிள் வேண்டுமெனச் சொல்கிறான்.

எவ்விதமான மறுப்புமின்றி, புக்ரோவுடைய கோரிக்கையை ஏற்றுக்கொள்கிறான் குரஹோல்ஸ்கி. அந்த பேரம் அவ்வளவு விரைவில் முடிந்ததே என அவன் நிம்மதியடைகிறான்.  இனி லிசா தனக்குரியவள்  என்கிற எண்ணம் அவனை மகிழ்ச்சியின் உச்சத்துக்கே அழைத்துச் செல்கிறது. அக்கணமே வீட்டைவிட்டு வெளியேறி தன் மாளிகைக்குச் சென்று ஒரு பெருந்தொகையை எடுத்துக்கொண்டு வந்து கொடுக்கிறான். எஞ்சிய தொகைக்கு வங்கிக் காசோலைகளைக் கொடுக்கிறான். ஒன்றரை லட்சம் ரூபிளுக்கு மனைவியை விற்றவன் எவ்விதமான குற்ற உணர்வுமின்றி வீட்டைவிட்டு வெளியேறுகிறான். மறுநாள் அதே வீட்டுக்கு வந்து, மனைவியை மட்டுமே விட்டுத்தர முடியும், குழந்தையை விட்டுத்தர முடியாது என்று சொல்லிக்கொண்டே குழந்தையை எடுத்துச் சென்றுவிடுகிறான். 

அந்த நகரில் தொடர்ந்து வசிக்க விரும்பாத குரஹோல்ஸ்கி  லிசாவை அழைத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறிவிடுகிறான். வெகுதொலைவு பயணம் செய்து ஒரு குளிர்ப்பிரதேசத்தில் வாடகைக்கு ஒரு மாளிகையை ஏற்பாடு செய்து, அங்கேயே தன் இன்ப வாழ்க்கையைத் தொடங்குகிறான். ஒவ்வொரு நாளையும் இனிமை நிறைந்ததாகக் கழிக்கிறான்.   

ஏழாண்டு காலம் அந்த இன்ப வாழ்க்கை அப்படியே நீடிக்கிறது. ஒரு நாள் ஒருவரும் எதிர்பாராத வகையில் அவர்களுடைய மாளிகைக்கு எதிரிலுள்ள மாளிகைக்கு யாரோ ஒரு கனவான் தன் மகனோடு குடிவருகிறான். வாகனங்களில் பொருட்களெல்லாம் வந்து இறங்குகின்றன.

தனிமையில் பொழுதுபோவதற்காக எதிர்வீட்டைக் கவனிக்கத் தொடங்குகிறாள் லிசா. ஒருசில நாட்களிலேயே எதிர்வீட்டுக்கு வந்திருக்கும் கனவான் தன் கணவன் புக்ரோவ் என்பதையும் அவனோடு இருப்பவன் தன் மகன் என்பதையும் லிசா கண்டுபிடித்துவிடுகிறாள். புக்ரோவுக்கும் தன் எதிர்வீட்டில் வசிப்பவள் தன் மனைவி என்பது தெரிந்துவிடுகிறது. புக்ரோவ் அந்த வீட்டுக்கு உரிமையோடு வந்து வெகுநேரம் எதைஎதையோ உரையாடிவிட்டுச் செல்கிறான்.

முதலில் லிசாவின் செயல்களை சாதாரணமாகவே எடுத்துக்கொள்கிறான் குரஹோல்ஸ்கி. ஆனால் நாளுக்கு நாள் அவளுடைய ஆர்வம் பெருகிக்கொண்டே செல்வதைக் கண்டு எரிச்சலடைகிறான். தன்  வெறுப்பை அவனிடம் வெளிப்படையாகவே தெரிவிக்கிறான். அந்த உறவைத் தொடரக்கூடாது என்று லிசாவிடமும் சொல்லி வைக்கிறான். ஆயினும் லிசாவால் புக்ரோவோடும் மகனோடும் பழகுவதை நிறுத்தமுடியவில்லை. அவர்களோடு நடைப்பயிற்சிக்குச் செல்கிறாள். அந்த வீட்டுக்கே சென்று புக்ரோவுடன் நீண்ட நேரம் உரையாடுகிறாள்.

சூழலை ஒரு கட்டுக்குள் கொண்டுவரும் எண்ணத்துடன் குரஹோல்ஸ்கி புக்ரோவிடம் மீண்டும்  ஒரு பேரத்தைத் தொடங்குகிறான். தனக்குச் சொந்தமான எஸ்டேட்டையே அவனுக்கு எழுதிக் கொடுக்கிறான். அதைப் பெற்றுக்கொண்டு அந்த ஊரிலிருந்தே அவன் வெளியேறவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறான். அந்தப் பேரத்துக்காகவே காத்திருந்ததுபோல, குரஹோல்ஸ்கி எழுதிக் கொடுத்த பத்திரத்தை வாங்கிக்கொண்டு புக்ரோவ் வெளியேறிவிடுகிறான்.

எல்லாமே சிறிது காலத்துக்குத்தான். லிசாவால் புக்ரோவையும் மகனையும் விட்டு இருக்கமுடியவில்லை. புக்ரோவால் லிசாவை விட்டு இருக்கமுடியவில்லை. லிசாவை மறப்பது குரஹோல்ஸ்கிக்கும் இயலாத ஒன்றாக இருக்கிறது. காதல் எல்லோருடைய கண்களையும் மறைக்கிறது. ஒரு கட்டத்தில் தன் எல்லாச் செல்வத்தையும் இழந்துவிடுகிறான். அப்போது செல்வந்தனாக வாழும் புக்ரோவுடன் சேர்ந்துகொள்கிறாள் லிசா. அதே வீட்டில் விருந்தினர்களுக்கு வயலின் இசைத்து மகிழ்விக்கும் கேளிக்கைக்காரனாக வாழ்க்கையைத் தொடர்கிறான் குரஹோல்ஸ்கி. எந்த நிலையிலும் லிசாவின் பார்வையில் வாழவேண்டும் என்கிற ஆசை அவனைப் பாடாய்ப்படுத்துகிறது. எல்லா விதமான அவமானங்களையும் ஏளனச்சொற்களையும் அவன் தாங்கிக்கொள்கிறான்.

காதல் அனைவரையும் வெட்கமற்றவர்களாக மாற்றிவிடுகிறது. அதைக் காதல் என்று சொல்லமுடியவில்லை. ஒருவித மோகம் என்றுதான் சொல்லவேண்டும். கட்டற்ற மோகம். வெட்கத்தை மறக்கவைக்கும் மோகம். சுயமரியாதையை இழக்கவைக்கும் மோகம்.

புக்ரோவுக்கு செல்வத்தின் மீது மோகம். குரோஹ்வ்ஸ்கிக்கு லிசா மீது மோகம். இருவருக்கும் இடையில் பணயப்பொருளாக இருப்பவள் லிசா. அவள் குரோஹ்வ்ஸ்கியிடம் இருக்கும்போது புக்ரோவையும் புக்ரோவிடம் இருக்கும்போது குரோஹ்வ்ஸ்கியையும் நினைப்பவளாக இருக்கிறாள். அவள் தீர்மானமான ஒரு முடிவை எடுத்திருக்கலாம். ஆனால் அவள் எடுக்கவில்லை. இருவரையும் இருவேறு முனைகளில் திண்டாடவைத்து, எவ்விதமான குற்ற உணர்வுமின்றி இருவரோடும் இன்பமாக வாழ்கிறாள்.

ஏற்கனவே ஒருவனுக்கு மனைவியாக வாழ்ந்துவரும் லிசா மீது தான் கொண்டிருக்கும் மோகம் பிழையானது என்ற எண்ணமே குரஹோல்ஸ்கிக்கு எழவில்லை. தன் மோகத்தை அவன் இயற்கை என்றே கருதுகிறான். ஏதேனும் ஒரு கட்டத்திலாவது தன் மோகம் அர்த்தமற்றது என உணர்ந்து மனம் மாறியிருந்தால், அவன் தன் சரிவிலிருந்து மீண்டிருக்கமுடியும். மாறாக, அந்த மோகத்துக்கு அவனே ஒரு காரணத்தைக் கற்பித்துக்கொண்டு தன்னைத்தானே அமைதிப்படுத்திக்கொள்கிறான். செல்வந்தரான தன் தந்தையால் தொடர்ந்து அவமதிப்புக்கு ஆளான ஓர் ஏழை குமாஸ்தாவுக்கும் தன் தாய்க்கும் ஏற்பட்ட பிறழ் உறவில் பிறந்ததுதான் தன் செயல்பாடுகளுக்கெல்லாம் மூல காரணம் என்பது அவன் எண்ணமாக இருக்கிறது. மோகம் எல்லோருடைய கண்களையும் ஏதோ ஒரு விதத்தில் மறைத்துவிடுகிறது.

வாழ்க்கையே ஒரு சூதுக்களமாகிவிடுகிறது. வாழ்க்கை என்பது வாழ்க்கையாக இல்லாமல் சூதாட்டமாக மாறிவிடும்போது, ஒருவருடைய மன இயக்கம் இன்னொருவரால் முற்றிலுமாகப் புரிந்துகொள்ள முடியாத புதிராகவே இருக்கும். தான் ஒரு பணயப்பொருளாக மாற்றப்பட்டிருக்கிறோம் என்பது குறித்து எந்த வேதனையும் சங்கடமும் இல்லாதவளாகவே கதை நெடுக வலம்வருகிறாள் லிசா. அவள் இருவரையுமே ஆட்டிப் படைப்பவளாக இருக்கிறாள். அவளுடைய சாதாரணத்தன்மையால் உருவாகும் திகைப்பிலிருந்து ஒரு வாசகனால் அவ்வளவு எளிதாக விடுபடமுடிவதில்லை. வாழ்க்கையில் எங்கோ இப்படியும் ஓர் அத்தியாயம் இருக்கலாம் என நினைத்து ஒருகணம் பெருமூச்சுவிடலாம்.

இந்த நெடுங்கதையில், ஒரு குடும்பத்தை முன்வைத்து செகாவ் சித்தரிக்கும் காட்சிக்கோணம் முற்றிலும் புதுமையான ஒன்று. விடுவிக்க முடியாத ஒரு வாழ்க்கைப்புதிரை நம் கண்முன்னால் கொண்டுவந்து நிறுத்துகிறது.  அதுதான் செகாவின் மேதைமை.

 

 

(மனைவியை விற்றவன். ஆன்டன் செகாவ். தமிழில்: அவைநாயகன், மதிமலர் பதிப்பகம், 32/40 வெங்கடேச நகர், முதல் தெரு, விருகம்பாக்கம். சென்ன- 92. விலை.ரூ.150)

 

(புக் டே – இணைய தளம் – 30.09.2026)