Home

Sunday, 25 October 2026

மருத்துவமனை

 

பெங்களூரில் சிவாஜி நகர் பேருந்து நிலையத்துக்கு அருகில் நடந்துசெல்கிற தொலைவில் பெளரிங் அரசு மருத்துவமனை இருக்கிறது. மிகப்பெரிய வளாகம். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் உருவான மருத்துவமனை. இன்றைக்கும் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான ஏழை எளியவர்கள் அங்கு வந்து மருத்துவம் பார்த்துக்கொள்கின்றனர்.  அந்த மருத்துவமனைக்கு எதிர்ப்பக்கத்தில் ஒரு காப்பிக்கடை இருக்கிறது. சிவாஜி நகர் பக்கமாக நான் எப்போது சென்றாலும் அந்தக் கடைக்குச் சென்று ஒரு காப்பி அருந்தாமல் கடந்து செல்வதில்லை. அதன் சுவைக்கு மனிதர்களை ஈர்க்கும் சக்தி இருக்கிறது.

ஒருநாள் சிவாஜி நகரை அடுத்திருந்த பகுதிக்கு ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில்  கலந்துகொள்வதற்காக நானும் நண்பரும் சென்றோம். பேருந்து நிலையத்தில் இறங்கியதுமே எனக்குக் காப்பிக்கடை நினைவு வந்துவிட்டது. நண்பருக்கும் என் காப்பிப்பித்து தெரியுமென்பதால் என் வேண்டுகோளுக்கு மறுப்பு சொல்லாமல் பேருந்து நிலையத்தைவிட்டு என்னோடு நடக்கத் தொடங்கினார்.

மருத்துவமனை சுற்றுச்சுவரை ஒட்டியே நடந்து சென்றோம். சுற்றுச்சுவர் வாசலிலிருந்து மருத்துவமனை வாசல் வரைக்கும் ஏராளமான நோயாளிகள் நிறைந்திருந்தனர். பலர் மரத்தடிகளில் படுத்திருந்தனர். சிலர் சோகமான முகத்துடன் உட்கார்ந்திருந்தனர். சிலர் இருள் படிந்த முகத்துடன் காணப்பட்டனர். அக்காட்சியை எங்களால் எளிதில் கடந்து நடக்கமுடியவில்லை. அனைவருமே அந்த மருத்துவமனையில் மருத்துவம் பார்ப்பதற்காக வந்தவர்கள். தொடர்மருத்துவத்துக்காக அங்கேயே தங்கிவிட்டவர்களும் இருந்தனர்.

“ஐயா, இந்த பசங்க பக்கத்துலயே கொஞ்சம் நிக்கறீங்களாய்யா? பசியில அழுவுதுங்க. ஓட்டமா ஓடிப் போய் இதுங்க சாப்படறதுக்கு ஏதாச்சிம் வாங்கிட்டு வரேன்” என்று ஒரு அம்மா திடீரெனெ எங்களைப் பார்த்துக் கேட்டார். ஒரு கணம் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் தயக்கத்துடன் அவரைப் பார்த்தேன்.

”பயப்படாதீங்க ஐயா. புள்ளைங்களை உட்டுட்டு நான் எங்கயும் ஓடிடமாட்டேன். பசியில துடிக்குதுங்க. அஞ்சே அஞ்சி நிமிஷத்துல ஓடிவந்துர்ரேன்” என்றார் அந்த அம்மா.

நான் அப்போதுதான் அந்த அம்மாவின் மடியில் தலைவைத்துப் படுத்திருந்த சிறுமியின் காலைச் சுற்றி கட்டு போடப்பட்டிருப்பதைப் பார்த்தேன். நான் அதைப் பார்ப்பதைக் கவனித்ததும் “ரோட்டுல நடந்துகிட்டிருந்த புள்ளை மேல யாரோ ஒரு பைத்தியக்காரன் வண்டிய இடிச்சிட்டு போயிட்டான்யா. எலும்பு முரிஞ்சிடுச்சின்னு சொன்னாரு டாக்டரு. எந்ந்த வார்டுலயும் பெட்டு காலியில்லைனு கட்டு போட்டு அனுப்பிவச்சிட்டாரு. அதான் இப்படி ஓரமா வந்து உக்காந்துட்டோம்” என்றார்.

அவர் சொற்கள் என்னைத் திகைப்பில் ஆழ்த்தின. ”வீட்டுக்குப் போகலையா?” என்று மெதுவாகக் கேட்டேன். அவர் உதட்டைப் பிதுக்கினார். “பானசவாடிக்குப் பக்கத்துல இருக்குது எங்க குடிசை. ரெண்டு நாளைக்கு ஒருதரம் வந்து கட்டு மாத்திகினு போவணுமாம். மூனு புள்ளைங்களை வச்சிகினு வந்துவந்து போவற செலவுக்கு நான் எங்க போய் நிக்கறது? அதான் நல்லா போவறவரைக்கும் இப்படியே ஓரமா தங்கிக்கலாம்னு சுவத்தோரமா ஒட்டிகிட்டோம்” என்றார். அவர் கண்கள் கலங்கின.

“இவுங்க அப்பா இல்லையா?” என்று நண்பர் தயக்கத்துடன் கேட்டார்.

“இருக்காருய்யா இருக்காரு. ஆனா எங்க இருக்காருன்னுதான் தெரியாது. எப்ப பாரு ஊரு மேஞ்சிகிட்டே இருப்பாரு. அந்த ஆளு நல்லவனா இருந்தா, நான் ஏன் இந்தப் பொழப்பு பொழைக்கறன்? எல்லாம் என் தலையெழுத்து”

அவர் கதையைக் கேட்கக்கேட்க மனம் துயரத்தில் மூழ்கியது. “தப்பா எடுத்துக்காதிங்க. நீங்க கெளம்பிப் போயிட்டா புள்ளைங்க பயந்தாலும் பயந்துடும். கவலைப்படாதீங்க. நீங்க இங்கயே இருங்க. நாங்க அந்த ஓட்டலுக்குத்தான் போறோம். எல்லாருக்கும் சேர்த்து அங்க என்ன கிடைக்குதோ அதை வாங்கி வரோம்” என்றேன். அந்த அம்மா நம்பிக்கையற்றவரைப்போல எங்களையே பார்த்தார். பிறகு “உங்களுக்கு எதுக்குயா சிரமம்? ஒரு நிமிஷம் நீங்க பார்த்துட்டீங்கன்னா, நான் ஓட்டமா ஓடிப் போய் வந்துருவன்”  என்றார். “ஒரு கஷ்டமும் இல்லை. நீங்க இருங்க. நாங்க ஒரு பத்து நிமிஷத்துல வந்துடறோம்” என்று சொல்லிவிட்டு நாங்கள் காப்பிக்கடையை நோக்கி நடந்தோம்.

காப்பி அருந்தும்போது வழக்கமான உற்சாகத்துடன் எங்களால் காப்பி அருந்தமுடியவில்லை. அந்தப் பிள்ளைகளின் முகங்கள் மீண்டும் மீண்டும் நினைவில் எழுந்தபடி இருந்தன. பத்து இட்லி பார்சல் கட்டி வாங்கிக்கொண்டு சீக்கிரமாகவே திரும்பினோம். வழியில் ஒரு பெட்டிக்கடையில் நின்று ஒரு தண்ணீர் பாட்டிலையும் வாங்கிக்கொண்டார் நண்பர். எல்லாவற்றையும் அந்த அம்மாவிடம் கொடுத்துவிட்டு “பத்தரமா பார்த்துக்குங்கம்மா” என்றோம். அந்த அம்மா கண்கலங்க எங்களைப் பார்த்து கைகுவித்து நன்றி சொன்னார்.

அந்த வளாகத்தில் அந்த அம்மாவைப்போல நூற்றுக்கணக்கானவர்கள் யாரோ ஒரு நோயாளியைச் சுற்றி அமர்ந்திருந்தனர். அந்தக் கூட்டத்தைப் பார்த்ததுமே பெருமூச்சு வந்தது. திரும்பி நடந்தோம்.

சில கணங்களுக்குப் பிறகு “உள்ள பெட் கிடைச்சவங்க எத்தனை பேர் இருப்பாங்களோ, அதே அளவுக்கு பெட் கிடைக்காதவங்களும் இருப்பாங்க போல. அரசாங்கம் இன்னும் ரெண்டு மூனு கட்டடங்களைக் கட்டி ஆஸ்பத்திரியை பெரிசாக்கினா என்ன கெட்டுப் போயிடும்?” என்று கேட்டார் அவர்.

“அரசாங்கம் நெனச்சா எல்லாத்தயும் செய்யலாம். என்ன காரணமோ, அதுக்கு இப்படியெல்லாம் தோணமாட்டுது” என்றேன்.

”ஒரு ஏரியாவுல நாலு அஞ்சி ப்ரைவேட் ஆஸ்பத்திரிங்க இருக்குது. ஆனா பத்து பதினஞ்சி ஏரியாங்களுக்கு ஒரே ஒரு அரசாங்க ஆஸ்பத்திரி மட்டும்தான் இருக்குது. ஒன்னு ரெண்டு கூடுதலா கட்டினா என்ன கொறைஞ்சிடப் போவுது?”

நாங்கள் திருமண மண்டபத்துக்குச் செல்வதுவரை நண்பர் தன் மனக்குறையைக் கொட்டியபடியே வந்தார். அங்கு போய்ச் சேர்ந்ததும் வேறு சில பழைய நண்பர்களைப் பார்த்தோம். அதற்குப் பிறகுதான் எங்கள் உரையாடல் வேறு திசையில் திரும்பியது. சிறிது நேரத்துக்குப் பிறகு எல்லோருக்கும் காப்பியும் பழச்சாறும் கொடுத்தார்கள். நாங்கள் காப்பியை வாங்கி அருந்திவிட்டு வரவேற்புக் கூடத்திற்குச் சென்று அமர்ந்தோம். மணமக்கள் வருவதற்கு இன்னும் நீண்ட நேரம் இருந்தது. எங்கள் உரையாடல் எப்படியோ அந்த மருத்துவமனை விவகாரத்தை ஒட்டியதாக திசை மாறிவிட்டது.

“மக்கள் படற இந்த கஷ்டங்கள் எல்லாம் நம்ம இலக்கியத்துக்குள்ள எப்பவாவது பதிவாகியிருக்குதா?” என்று கேட்டார் நண்பர்.

“இந்த உலகத்துல துன்பத்தைச் சொல்லாத படைப்பாளியே இல்லை. எல்லோரும் ஏதோ ஒரு கதையில, கவிதையில இதைப் பத்திலாம் பதிவு செஞ்சிருப்பாங்க” என்றேன் நான்.

“நான் உலகத்தைப் பத்திப் பேசலை. தமிழ்ல் அப்படிப்பட்ட படைப்புகள் வந்திருக்குதா?”

“தமிழ்லயே நிறைய சிறுகதைகள் வந்திருக்குது”

அவர் ஒரு கணம் அமைதியாகி யோசனையில் மூழ்கினார். “என் ஞாபகத்துக்கு எதுவும் வரலை. ஏதாச்சிம் ஒரு கதையைப்பத்தி நீங்க சொல்லுங்க. தெரிஞ்சிக்கறேன்” என்றார்.

“ஆஸ்பத்திரி சிரமங்கள் பின்னணியில சுஜாதா அற்புதமான ஒரு கதை நகரம்ங்கற தலைப்புல எழுதியிருக்காரு. அது வெளிவந்து ஐம்பது வருஷத்துக்கும் மேல ஆவுது. ஆனா இன்னைக்குப் படிச்சாலும் இப்போதைய நிலைமைக்குப் பொருத்தமான கதையா தோணும்”

“நகரம்னா சொன்னீங்க? மறந்துட்டேனோ என்னமோ, கதையைப் பத்தி விவரமா சொல்றீங்களா?”

“மதுரை ஜி.எச்.ல நடக்குது அந்தக் கதை. வள்ளியம்மான்னு ஒரு கிராமத்துப் பொண்ணு உடம்பு சரியில்லாத மகளை அழைச்சிகிட்டு அந்த ஜி.எச்.க்கு வந்திருக்கா. ரெண்டு நாளா ஜுரம். கிராமத்து ஹெல்த் சென்ட்டர் டாக்டர் பரிசோதனை பண்ணி பார்த்துட்டு உடனடியா ஜி.எச்.க்குப் போய் காட்டுன்னு சொல்லி அனுப்பிவச்சிட்டாரு. அதனால் ஓ.பி. வார்டுக்கு வந்து நின்னுட்டிருக்காங்க அந்த அம்மா. கண்ணு தெறக்கமுடியாம ஸ்ட்ரெச்சர்ல கிடந்த  கொழந்தையை பெரிய டாக்டர் வந்து பார்க்கறாரு. கண்ணைப் பிதுக்கி லைட் அடிச்சி பார்க்கறாரு. அப்புறமா நாக்க சப்பு கொட்டிகிட்டே சுத்தி நின்னுட்டிருந்த ஜூனியர் டாக்டர்ங்ககிட்ட என்னமோ இங்க்லீஷ்ல சொல்லிட்டு, உடனே அட்மிட் பண்ணச் சொல்லுங்கன்னு சொல்றாரு. கூட்டத்துல இருந்த ஒரு டாக்டர் அதோ அங்க உக்காந்திருக்காரே அவருகிட்ட சீட்டு வாங்கிட்டு போய் அட்மிட் பண்ணுங்கம்மான்னு சொல்லிட்டு மத்த நோயாளிங்கள பார்க்கப் போயிடறாரு”

“ஐயோ, அப்புறம் என்னாச்சி? அட்மிஷன் கிடைச்சிதா, கிடைக்கலையா?”

“அந்தப் பதற்றம்தான் கதையுடைய மையம்”

“அப்படின்னா?”

“ஸ்ட்ரெச்சர்ல கண்ணு தெறக்கமுடியாம கிடக்கிற புள்ளையை அப்படியே உட்டுட்டு போறதுக்கு முடியாம முதல்ல தடுமாறுறாங்க அந்தக் கிராமத்து அம்மா. அப்புறம் ஏதோ ஒரு தைரியத்துல நடந்துபோய் ஒரு தூணுக்குப் பக்கத்துல நாற்காலியில வெள்ளைச்சட்டை போட்டுகிட்டு உக்காந்திருக்கற ஆளுகிட்ட போய் சீட்டு கேக்கறாங்க. அங்க போ இங்க போன்னு ஆளாளுக்கு அலைக்கழிக்கறாங்க. எப்படியோ சீட்டு வாங்கிய பிறகு இன்னொரு ப்ளாக் பக்கமா போய் காட்டுன்னு சொல்றாங்க. இப்படியே ஆளாளுக்கு ஒரு பக்கமா படிக்கத் தெரியாத அந்த அம்மாவை விரட்டறாங்க. எந்தப் பக்கம் பார்த்தாலும் நோயாளிங்க கூட்டமா இருக்குது. எல்லா அறை வாசலும் ஒரே மாதிரியா இருக்குது. பார்க்கப் பார்க்க அந்த அம்மாவுக்கு குழப்பமா இருக்குது.”

“சரியா வழிகாட்ட ஒருத்தருமா இல்லை அந்த ஆஸ்பத்திரியில?”

“இருந்தாங்க. நூத்துல ஒரு ஆளாவது விதிவிலக்கா இருக்கணும் இல்லையா? அப்படி யாரோ ஒருத்தர் வந்து  அந்த அம்மாவுக்குப் புரியறமாதிரி விளக்கமா வழி சொல்லி அனுப்பறாங்க. கடைசியா சரியான இடத்துக்கு வந்து அங்க உக்காந்திருந்தவருகிட்ட கையில இருந்த சீட்டை காட்டறாங்க”

“அவர் என்ன சொல்றாரு?”

“ஒரு பெட் கூட காலியில்லையேம்மா, நான் என்ன செய்யறதுன்னு உதட்டைப் பிதுக்கறாரு அவரு. நாளைக்கு காலையில ஏழரை மணிக்கு வாங்கம்மா, அட்மிஷன் போட்டுடலாம்னு சொல்லி அனுப்பி வச்சிடறாரு”

“ஐயையோ, அப்புறம்?”

“அதுக்குள்ள அந்த அம்மா எதைஎதையோ நினைச்சி குழம்பறாங்க. ஓ.பி.வாசல்ல புள்ளையை தனியா கெடத்திட்டு வந்தமேன்னு ஒரு பயம் வேற. அழுது பொலம்பிகிட்டே புள்ளைகிட்ட போயிடலாம்னு திரும்பி நடக்கறாங்க. ஆனா திரும்பி போவறதுக்கு வழி தெரியாம தடுமாறி எங்க எங்கயோ நடக்கறாங்க. நடந்து நடந்து ஆஸ்பத்திரிக்கு வெளியே போயிடறாங்க. அப்புறம் யார் யாரையோ கேட்டுகிட்டே ஓ.பி.வாசலுக்கு மறுபடியும் வராங்க. மயக்கம் தெளியாம அந்தப் பொண்ணு அப்படியே கெடக்குது. பொண்ணப் பார்த்ததும்தான் அந்த அம்மாவுக்கு மூச்சே வருது”

“த்ச். பாவம்”

“மார்னிங் ரவுண்ட்ஸ் முடிஞ்சதும் ஒரு கொழந்தைக்கு அட்மிஷன்  போடச் சொன்னனே, அந்தப் பேஷண்ட்ட பார்க்கணும். அந்த நோய் வழியா நீங்க கத்துக்க நிறைய விஷயங்கள் இருக்குது வாங்கன்னு ஜூனியர் டாக்டர்களோடு கெளம்பறாரு. ஆனா அவர் அட்மிஷன் போடச் சொன்ன அந்த வார்டுல அந்தக் கொழந்தையைக் காணோம். இன்சார்ஜ் ஆளுகிட்ட விசாரிக்கறாரு. ஒரு பெட் கூட காலி இல்லை சார், நாளைக்கு காலையில ஏழரை மணிக்கு வான்னு சொல்லி அனுப்பிட்டேன்னு சொல்றாரு. பெரிய டாக்டருக்கு கோபம். இன்னைக்குள்ள வைத்தியம் பார்க்கலைன்னா அந்தக் கொழந்தை செத்துரும்யா, போய் தேடி கூட்டிட்டு வாங்கன்னு மத்தவங்கள பார்த்து சத்தம் போடறாரு.”

“அப்படியாவது அந்த அம்மாவுக்கு அட்மிஷன் கிடைச்சிதா?”

“அதெல்லாம் எதுவும் கிடைக்கலை. அவுங்க தேட ஆரம்பிக்கறதுக்கு முன்னாலயே அந்த அம்மா ஆஸ்பத்திரியை விட்டே வெளியே கெளம்பிப் போயிடறாங்க?”

”ஏன்”

”ஸ்ட்ரெச்சர்ல மயக்கம் தெளியாம கெடக்கற புள்ளைய ரொம்ப நேரமா பார்த்துட்டிருந்த அம்மாவுக்கு மனசு கொழம்புது. அந்த ஆஸ்பத்திரி விஷயம் தன்னால சமாளிக்கமுடியாத ஒரு பெரிய சங்கதின்னு நினைச்சி அவுங்களுக்கு ஒரு அச்சம் வந்துடுது. அதனால கிராமத்துக்குத் திரும்பிப் போய் வெள்ளைக்கட்டி போட்டு விபூதி மந்திரிச்சா எல்லாம் சரியாயிடும்னு மனசுக்குள்ள நெனச்சிகிட்டு புள்ளையை தூக்கிகிட்டு கிராமத்துக்கே கெளம்பிடறாங்க.”

“சுஜாதா நல்லாதான் உறைக்கிற மாதிரி எழுதியிருக்காரு. ஆஸ்பத்திரி நிலைமை இந்த அம்பது வருஷத்துல இன்னும் மாறாம அப்படியேதான் இருக்குது”

“ஒரு நகரத்துல பத்து லட்சம் பேரு வாழற சமயத்துல கட்டன ஒரு ஆஸ்பத்திரியை வச்சியே, அந்த நகரத்துடைய மக்கள் தொகை ஒரு கோடியா மாறினபிறகும் கூட சமாளிக்கணும்னு அரசாங்கம் நெனைச்சா, அது எப்படி சாத்தியமாகும்? யோசிச்சி பாருங்க”

“அது வாஸ்தவம்தான்” என்று நாக்கு சப்புக்கொட்டினார் நண்பர். சில கணங்களுக்குப் பிறகு “ஐம்பது வருஷத்துக்கு முன்னால சுஜாதா எழுதன கதைன்னு சொன்னீங்க? இந்த மாதிரி மூஞ்சியில அறையிறமாதிரி ஒரு கதையை அதுக்கப்புறம் யாரும் எழுதலையா?” என்று கேட்டார்.

“என்ன இப்படி கேட்டுட்டீங்க? இப்பவும் எழுதிட்டேதான் இருக்காங்க.”

“புதுக்கதையா? யார் எழுதியது?”

“மயிலன் ஜி.சின்னப்பன்னு ஒரு எழுத்தாளர் அந்த மாதிரியான ஆஸ்பத்திரி அனுபவங்களை மையமா வச்சி நிறைய கதைகள் எழுதியிருக்காரு. அவரே ஒரு ஜி.எச்.ல டாக்டரா இருக்கறதால அவரால மிகையில்லாம எழுத முடிஞ்சிருக்குது.”

“ஏதாச்சிம் ஒரு முக்கியமான கதையை சொல்லுங்க, கேப்போம்”

ஒரு கணம் யோசித்த பிறகு ‘அன்நோன்னு ஒரு கதை இருக்குது. தமிழ்ல முக்கியமா குறிப்பிடத்தக்க சிறுகதை அது” என்றேன்.

“தமிழ்ல எழுதன சிறுகதைன்னு சொல்றீங்க. இங்க்லீஷ் தலைப்பா?”

“அதுக்கு ஒரு அர்த்தம் இருக்குது. அன்நோன்னு சொன்னா அடையாளமில்லாதவன்னு பொருள். ஆஸ்பத்திரி உலகத்துல அன்நோன்ங்கற வார்த்தை ரொம்ப பிரபலமானது. ஒரு கோட் வேர்ட் மாதிரி. யாரோ ஒரு மனிதாபிமானமுள்ள ஒருத்தர் முன்னபின்ன தெரியாத ஒருத்தரை கொண்டுவந்து ஆஸ்பத்திரில சேர்த்துட்டு போறாருன்னு வைங்க. அவருடைய ஊரும் தெரியாது. பேரும் தெரியாது. ஆனா அன்நோன்ங்கற  பேருல அவருக்கு ட்ரீட்மென்ட் நடக்கும். சில சமயங்கள்ல அவரு செத்துட்டா, அதே அன்நோன்ங்கற பேருல அவர மார்ச்சுவரிக்கு அனுப்பிடுவாங்க. அதனாலதான் அப்படிப்பட்ட தலைப்பு”

“கதையில வர்ற ஆளும் அடையாளமில்லாத ஆளா?”

“ஆமாம். எங்கோ ஒரு முச்சந்தியில ஓரமா ஒரு மரத்தடியில உக்காந்து பிச்சை எடுத்து பொழைச்சிட்டிருக்காரு ஒருத்தர். பிச்சை எடுக்கற இடமும் அதுதான். அவரு படுத்து  எழுந்திருக்கிற இடமும் அதுதான். ஒருநாள் நடுராத்திரி வேளையில அந்தப் பக்கமா நிதானமில்லாம வந்த ஒரு டாட்டா ஏஸ் கார் அவரை இடிச்சி தள்ளிட்டு போயிடுது. ரொம்ப நேரம் கழிச்சி அந்தப் பக்கமா வந்த இன்னொருத்தர் அவரு உயிருக்கு போராடறத பார்த்துட்டு ஆம்புலன்ஸ்க்கு போன் பண்ணி வரவழச்சி ஏத்திட்டு போய் ஆஸ்பத்திரியில சேக்கறாரு. ரெக்கார்ட்ல பதியறதுக்கு அவரு பேரு என்னன்னு கேக்கறாங்க. அடிபட்ட ஆளு மயக்கத்துல கெடக்கறாரு. அவரு பேரத் தெரிஞ்சிக்க வழியில்லை. அதனால் ரெக்கார்ட்ல அன்நோன்னு எழுதிக்கறாரு.”

“சரி”

“ஆனா அவருக்கு அட்மிஷன் போடவோ, ட்ரீட்மென்ட் கொடுக்கவோ அங்க இருக்கற யாருக்கும் மனசில்லை. அன்நோன்தான, இருந்தா என்ன செத்தா என்னன்னுதான் எல்லாரும் நெனைக்கறாங்க. அந்தக் கதை ஆஸ்பத்திரி நிலவரத்தை ஒரு பக்கம் பேசினாலும்  மனிதர்கள் மனசுல மறைஞ்சிருக்கிற ஈரமில்லாத குரூரத்தை இன்னொரு பக்கம் காட்டுதுங்கறதுதான் அதனுடைய சிறப்பம்சம்”

“ஆஸ்பத்திரிக்குள்ள அப்படி என்னதான் நடக்குது?”

“அவருடைய உடம்புல  ரத்தம் உறைஞ்சிருக்குது. மயக்கத்துலயே நிறைய வாந்தி எடுத்திருக்காரு. சட்டையெல்லாம் நனைஞ்சி ஒரே நாத்தம். அவரு கிட்ட வரதுக்கே எல்லாரும் தயங்கறாங்க. அந்த எதிர்ப்பு மனநிலையே அன்னைக்கு ராத்திரி டூட்டியில இருந்த ஜூனியர் டாக்டர்கிட்ட ஒரு வேற விதமான எதிர்ப்பு மனநிலையை உருவாக்குது. மயக்கத்துல கெடக்கற ஆளை எப்படியாவது காப்பாத்தணும்னு நெனைக்கறாரு”

“பத்து பேரு மோசமானவங்களா இருந்தாலும் எங்கயோ ஒன்னுரெண்டு நல்லவங்களும் இருக்காங்க”

“அந்த டாக்டருக்கு வேண்டா வெறுப்பா ஒரு நர்ஸ் உதவி செய்றாங்க. டாக்டர் பொறுமையா அந்த ரத்தத்தையெல்லாம் தொடச்சி எடுக்கறாரு. அவரு மூச்சு விட சிரமப்படறத பார்த்துட்டு செயற்கைச் சுவாசக்குழாய் எடுத்துட்டு வரச் சொல்றாரு டாக்டரு. அந்த நர்ஸ் ஸ்டாக்ல இருக்கறதே நாலஞ்சிதான், இந்த அன்நோனுக்காக ஏன் ஒன்ன வீணாக்கணும்னு தயங்கறாங்க. டாக்டர் சத்தம் போட்டதும் கொண்டுவந்து பொருத்தறாங்க. கொஞ்ச நேரம் எல்லாமே சரியாதான் போவுது. திடீர்னு பல்ஸ் கொறையுது. உடனே சி.ட்டி. ஸ்கேன் எடுக்கறதுக்கு ஏற்பாடு செய்யுங்கன்னு சொல்றாரு டாக்டர். அந்த அசிஸ்டெண்ட் டீன் கையெழுத்து இல்லாம எடுக்கமுடியாதுன்னு திருப்பி அனுச்சிடறாரு. அந்த ஜூனியர் டாக்டருக்கு மனசு கேக்கலை. ரிஸ்க் எடுத்து ஒரு ஆப்பரேஷன் செய்றாரு. வயித்த கிழிச்சி உறைஞ்சிருந்த ரத்தத்ததை எல்லாம் வெளியே எடுத்துட்டு தையல் போடறாரு. சுவாசம் சீரானதும் ஐசியுக்கு அனுப்பறாரு. அதுக்குள்ள விடிஞ்சிடுது. காலையில ஸ்கேன் செய்யணும்னு நோட் எழுதி வச்சிட்டு போயிடறாரு.”

“இப்படியெல்லாமா ஆஸ்பத்திரியில நடக்கும்? ஆச்சரியமா இருக்குது”

“இன்னும் நிறைய விஷயங்கள் எழுதியிருக்காரு மயிலன். அடுத்த நாள் காலையில அந்த ஜூனியர் டாக்டர் அந்த நோயாளியை பார்க்கலாம்னு ஐசியுவுக்கு போனா அவர் அங்க இல்லை. அந்த பெட்ல வேற யாரோ ஒரு பேஷண்ட் படுத்திருக்காரு. உள்ளூர் எம்.எல்.ஏ.வுக்கு வேண்டப்பட்ட ஆளு அவரு. அவருக்கு இடம் கொடுக்கறதுக்காக, பழைய பேஷன்ட்ட  போஸ்ட் ஆப்பரேட்டிவ் வார்டுக்கு மாத்திட்டதா சொல்றாங்க. உடனே டாக்டர் அங்க போய் பார்க்கறாரு. ரெண்டுமூனு நாள் அங்கயே வச்சி ட்ரீட்மெண்ட் கொடுக்கறாரு. அதுக்கப்புறம் அந்தப் பேஷண்ட் கண் முழிச்சி பார்க்கறாரு. அப்பாடி, பொழைக்க வச்சிட்டோம்னு டாக்டருக்கு ரொம்ப சந்தோஷம். உங்க பேரு என்னன்னு  அவருகிட்ட கேக்கறாரு. சம்பந்தாசம்பந்தம் இல்லாம ராஜராஜசோழன்னு சொல்றாரு அவரு. அந்தப் பேரயே மறுபடியும் மறுபடியும் அவரு சொல்லிட்டிருக்காரு.  வேற ஒரு வார்த்தை கூட அவரு வாய்லேர்ந்து வரலை.”

“ஐயோ, பாவம்.”

“தலையில அடிபட்டதுல எங்கயோ ஒரு பிரச்சினை ஏற்பட்டிருக்குதுன்னு டாக்டருக்குப் புரியுது. ஆனா அந்த ஆஸ்பத்திரியில சீனியர் டாக்டர்கள்லேர்ந்து சாதாரண நர்ஸ் வரைக்கும் யாருமே அவருக்கு ஸ்கேன் எடுக்க ஒத்துழைக்கமாட்டறாங்க. அந்த நோயாளியும் சித்த சுவாதீனமில்லாம வார்டுல இருக்கற மத்த நோயாளிகளுக்கு அடிக்கடி தொந்தரவு கொடுக்க ஆரம்பிச்சிடறாரு. கொஞ்சம் கொஞ்சமா அது ரொம்ப அத்து மீறி போயிடுது.”

“அப்புறம் என்னாச்சி? அவரு குணமானாரா இல்லையா?”

“இப்படிப்பட்ட அன்நோன் நோயாளிகளை டீல் பண்றதுக்குன்னு ஜி.எச்.ல காலம் காலமா கடைபிடிக்கக்கூடிய ஒரு நடைமுறை இருக்குது. அந்த நடைமுறைப்படி அந்த நோயாளியுடைய பிரச்சினையை எல்லாரும் சேர்ந்து ஒரு முடிவுக்குக் கொண்டு வந்துடறாங்க”

“அது என்ன நடைமுறை?” நண்பர் ஆச்சரியத்துடன் கேட்டார்.

“ரொம்பவும் பிரச்சினை கொடுக்கற அன்நோன் நோயாளிகளை போஸ்ட் ஆப்பரேட்டிவ் வார்ட்லேர்ந்து முதல்ல ஜெனரல் வார்டுக்கு மாத்துவாங்களாம். ஒரே ஒரு நாள் மட்டும் அங்க வச்சிருக்கற மாதிரி ரெக்கார்ட் க்ரியேட் பண்ணுவாங்களாம். அடுத்தநாள் அதிகாலையில யாருக்கும் தெரியாம ஒரு ஆட்டோவ ஏற்பாடு செஞ்சி, அதுல ஏத்தி ஆஸ்பத்திரியை விட்டு வெளியே அனுப்பிவச்சிடுவாங்களாம். அந்த ஆட்டோக்காரர் எங்கயாவது திக்குதிசை புரியாத குழப்பமான ஒரு ட்ராபிக் ப்ளேஸ்ல எறக்கி விட்டுட்டு வந்துடுவாரு. ரெக்கார்ட்ல பேஷன்ட் அப்ஸ்கான்டாயிட்டாருன்னு ஒரு குறிப்பை எழுதிட்டு கேஸ க்ளோஸ் பண்ணிடுவாங்க. இதுதான் அந்த நடைமுறை.

“எங்கயோ ஒரு தெருவுல மறுபடியும் பிச்சை எடுக்கற மாதிரி துரத்திவிடறதுக்கா அந்த டாக்டரு அவ்ளோ பிரயாசைப்பட்டு அவரை ஆபத்துலேர்ந்து காப்பாத்தணும்?”

“அந்த ஜூனியர் டாக்டரும் அதைத்தான் நெனச்சி பெருமூச்சு விடறாரு. ஆனாலும் அவருடைய கைமீறி நடக்கற விஷயங்களைத் தடுக்கிற சக்தி அவருக்கு இல்லை”

நண்பர் நீண்ட நேரம் எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்தார். “ஜி.எச்.ல ஒரு பக்கம் நல்ல விஷயங்களும் நடக்குது. இன்னொரு பக்கம் இந்த மாதிரி  விஷயங்களும் நடக்குது. அந்த ஜூனியர் டாக்டர் மாதிரி நாமளும் பெருமூச்சு விட்டுட்டு வேடிக்கைதான் பார்க்கமுடியும். வேற என்ன செய்யமுடியும், சொல்லுங்க?” என்றார்.

மண்டப வாசலில் திடீரென வாத்தியங்கள் முழங்கத் தொடங்கின. பட்டாசு வெடிச்சத்தம் கேட்டது. மணப்பெண்ணையும் மணமகனையும் அழைத்துக்கொண்டு வருவது தெரிந்தது.  தோழிகள் புடைசூழ மணமக்கள் மெல்ல மெல்ல நடந்து மேடைக்குச் சென்றனர். ட்ரோன் கேமிராக்கள் சுற்றிச்சுற்றிப் பறந்தன. அடுத்து சில நிமிடங்களில் மணமக்களை வாழ்த்த விரும்புவோர் மேடையை நோக்கிச் செல்லத் தொடங்கினர். எங்கள் உரையாடலை அத்துடன் நிறுத்திவிட்டு நாங்களும் அந்த  வரிசையில் சேர்ந்து நின்றோம்.

(சங்கு – காலாண்டிதழ் – அக்டோபர் 2026)