வெற்றியும் தோல்வியும்
விடுதலைக்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்த நாவலாசிரியரான கா.சி.வேங்கடரமணி மயிலாடுதுறையில் பிறந்தவர். பள்ளிக்கல்வியை மாயவரத்திலும் பட்டப்படிப்பை சென்னையிலும் படித்தார். சட்டத்துறையில் பட்டம் பெற்ற பிறகு புகழ்பெற்ற சி.பி.ராமஸ்வாமி ஐயரின் உதவி வழக்கறிஞராகப் பணியாற்றினார்.
வேங்கடரமணி காந்தியக்கொள்கைகளில் பெரிதும் ஆர்வம் கொண்டிருந்தார்.
கிராம நிர்மாணப்பணிகளில் ஈடுபட்டு எளிய மக்களின் உயர்வுக்காக உழைத்தார். திருக்கடையூரில்
’மார்க்கண்டேய’ என்னும் ஆசிரமத்தைத் தொடங்கி நடத்தினார். அரவிந்தர், அன்னை மீதும் அவருக்கு
அளவற்ற ஆர்வம் இருந்தது. ஆன்மிகப் பணிகளுக்காக
மயிலாடுதுறையில் ’சுவேதாரண்ய ஆசிரமம்’ என்னும் பெயரில் ஒரு ஆசிரமத்தை நிறுவி நடத்திவந்தார்.
அந்த ஆசிரமம் வழியாகவே அவர் ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதிய நூல்கள் வெளிவந்தன.
தொடக்கத்தில் வேங்கடரமணி தம் படைப்புகளை ஆங்கிலத்திலேயே நேரிடையாக
எழுதிவந்தார். மெட்ராஸ் மெயில், தி ஹிந்து, திரிவேணி போன்ற இதழ்களில் கதைகளையும் கட்டுரைகளையும்
எழுதினார். அவை Paper boats (1921) On the sand Dunes (1923), Murugan the tillar
(1928) என நூல்களாகவும் வெளிவந்தன. 1928ஆம் ஆண்டில் ஒருமுறை அவர் தாகூரைச் சந்திப்பதற்காக
சாந்திநிகேதனுக்குச் சென்றிருந்தார். அன்றைய உரையாடலில் தாகூர் அவரிடம் தாய்மொழியில்
எழுதுமாறு கேட்டுக்கொண்டார். அதன் பிறகே அவர் தமிழில் சிறுகதைகளை எழுதத் தொடங்கினார்.
சுதேசமித்திரன் இதழின் வாரப்பதிப்பில் வேங்கடரமணியுடைய கதைகள்
தொடர்ச்சியாக வெளிவந்து வாசகர்களின் கவனத்தைப் பெற்றன. அப்போது அவர் எழுதிய கதைகள்
‘ஜடாதரன் முதலிய கதைகள்’ என்னும் தலைப்பில் ஒரு தொகுதியாக வெளிவந்து பரவலான கவனத்தைப்
பெற்றது. அவருடைய நண்பர்களான பெ.நா.அப்புசாமி, டி.கே.சிதம்பர முதலியார், கல்கி ஆகியோர்
கேட்டுக்கொண்டதற்கிணங்க சுதேசமித்திரன் வாரப்பதிப்பிலேயே ‘தேசபக்தன் கந்தன்’ என்னும்
தலைப்பில் நீண்டதொரு தொடர்கதையை எழுதினார்.
1932இல் சுவேதாரண்ய ஆசிரமத்தின் வெளியீடாக நூலாக அந்த நாவல் வெளிவந்தது. அவருடைய
நாட்டுப்பற்றையும் சுதந்திர வேட்கையையும் வெளிப்படுத்தும் சிறந்த படைப்பாக அந்த நாவல்
விளங்கியது.
சுதந்திரத்தை ஒட்டி இந்தியா இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டதை
வேங்கடரமணியால் ஏற்றுக்கொள்ளவே இயலவில்லை. சுதந்திரம் பெற்ற நாளில் அவர் எழுதிய தினசரிக்குறிப்பேட்டில்
தேன் எடுக்கச் சென்று தேனீ கொட்டிய வலியுடன்
இருப்பதாகக் குறித்துவைத்திருக்கிறார். அதன் பிறகு அரசியலில் இருந்து முற்றிலுமாக ஒதுங்கி
வாழ்ந்தார். ’போகிற போக்கில்’ என்னும் தலைப்பில்
தன் வாழ்க்கை வரலாற்றை பாரதமணி இதழில் ஒரு தொடராக எழுதினார். 1952இல் மறைந்தார்.
*
தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகள் நடத்திய சத்தியாகிரகப் போராட்டத்தில்
ஈடுபட்டவர்களில் ஒருவர் நாகப்பன். அவர் மயிலாடுதுறையைச் சேர்ந்தவர். தென்னாப்பிரிக்காவுக்கு
கூலித்தொழிலாளிகளாக அழைத்துச் செல்லப்பட்டவர். சத்தியாகிரகத்தில் ஈடுபட்டதற்காக அவர்
கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறை அதிகாரிகளால் துன்புறுத்தப்பட்டு
உயிர் துறந்தார். இது வரலாற்றில் நிகழ்ந்த உண்மை.
அந்த உண்மைத்தகவலில் இருந்து வேங்கடரமணி தன் நாவலைத் தொடங்குகிறார்.
மறைந்த நாகப்பனுக்குக் குடும்பம் இல்லாதபோதும், அவருக்கு கந்தன் என்றொரு மகன் இருந்ததாக ஒரு கற்பனையோடு நாவல் தொடங்குகிறது. மயிலாடுதுறையில்
வளர்ந்த கந்தன் கல்வியில் நல்ல தேர்ச்சி பெற்றவனாக விளங்குகிறான். உயர்கல்வி கற்று
ஐ.சி.எஸ். படிப்பதற்காக லண்டனுக்குச் செல்கிறான்.
அதே நேரத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ரங்கசாமி என்னும் இளைஞனும்
பம்பாயைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்கிற தமிழ்ப்பெண்ணும் ஐ.சி.எஸ். படிப்பதற்காக அங்கு
வந்து சேர்கிறார்கள். மூவருக்கும் இடையில் நல்ல புரிதல் இருந்ததால் மூவரும் சேர்ந்து
பழகி ஒன்றாகவே படிக்கிறார்கள். ஓய்வு நேரங்களில் இந்தியாவில் நடைபெற்றுவரும் விடுதலைப்போராட்டச்
செய்திகளையும் அரசியல் நடவடிக்கைகளையும் முன்வைத்து உரையாடுகிறார்கள்.
காந்தியடிகளின் வழியில் இந்திய விடுதலைக்காகப் பாடுபடவேண்டும்
என்று மூவருமே விரும்புகின்றனர். கிராமங்களுக்குச் சென்று காந்தியடிகளின் அறிவுரைப்படி
நிர்மாணப்பணிகளில் ஈடுபட்டு மக்கள் சேவை ஆற்றவேண்டும் என்று கந்தன் விரும்புகிறான்.
சுதந்திரத்துக்கான வேட்கையை மக்களிடையில் உருவாக்கி அவர்களை ஒன்றுதிரட்டி சுதந்திரப்போராட்டத்தில்
ஈடுபடுத்தவேண்டும் என்பது ராஜேஸ்வரியின் விருப்பமாக உள்ளது. ஐ.சி.எஸ். தேர்ச்சி பெற்று ஆட்சியராகப் பொறுப்பேற்று,
அந்தப் பதவியின் வழியாகக் கிடைக்கும் அதிகாரங்களைப் பயன்படுத்தி மக்களுக்குச் சேவை செய்யவேண்டும் என்று
ரங்கசாமி விரும்புகிறான்.
அவர்களுடைய படிப்பு முடிவடையும் தருணத்தில் இந்தியாவில் போராட்டம்
உச்சநிலையில் இருக்கிறது. தாய்நாட்டுக்குச் சேவை செய்வதைவிட தேர்வு முக்கியமில்லை என்கிற
எண்ணத்தோடு ராஜேஸ்வரி தேர்வு எழுதாமலேயே லண்டனிலிருந்து பம்பாய்க்குத் திரும்பிவிடுகிறாள்.
தமிழ் மொழியை அறிந்தவள் என்பதால் தமிழ் புழங்கக்கூடிய தஞ்சாவூர் மாவட்டத்தைத் தேர்ந்தெடுத்து
போராட்டப் பணிகளில் ஈடுபடுகிறாள். அதே எண்ணம் கொண்ட கந்தனும் இறுதிக்கட்டத் தேர்வு
எழுதாமலேயே தன் சொந்த ஊரான மயிலாடுதுறைக்குத் திரும்பிவிடுகிறான். மக்களை நேரிடையாகச்
சந்தித்து விடுதலை வேட்கையை விதைக்கும் முயற்சியில் ஈடுபடத் தொடங்குகிறான். ரங்கசாமி
மட்டும் தன் நோக்கத்தில் உறுதியாக நிலைத்து நின்று தேர்வுகளை வெற்றிகரமாக எழுதித் தேர்ச்சி
பெறுகிறான். சென்னையில் துணை ஆட்சியராகப் பொறுப்பேற்றுக்கொள்கிறான்.
*
*
ரயில் போக்குவரத்துக்காக மயிலாடுதுறையையும் தரங்கம்பாடியையும்
இணைக்கும் வகையில் ஆங்கிலேய அரசு இருப்புப்பாதை போடும் பணியைத் தொடங்குகிறது. ஏராளமான
கூலித் தொழிலாளர்கள் அந்தப் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்கள் வேலை நடைபெறும்
இடத்துக்கு அருகிலேயே கூடாரங்களை அமைத்துத் தம் குடும்பத்தோடு வாழ்கிறார்கள்.
மாயவரத்துக்கும் தரங்கம்பாடிக்கும் இடையில் இருக்கும் ஊர் ஆக்கூர்.
அக்கிராமத்தில் முன்னூறு ஏக்கருக்கும் மேல் நிலம் வைத்திருப்பவர் சொக்கலிங்க முதலியார்
என்னும் பண்ணையார். இளைஞர். திருமணமாகாதவர். பதின்மூன்று தலைமுறைகளாக அந்தப் பண்ணையை
அவருடைய மூதாதையர் கட்டி வளர்த்துவந்திருக்கிறார்கள். அந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்
அனைவரும் அந்தப் பண்ணையில் பணி புரிந்துவருகிறார்கள்.
முதலியாருக்குச் சொந்தமான பண்ணையில் முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட
தென்னை மரங்கள் உள்ளன. சொந்தத் தோப்பிலிருந்தே கள் இறக்கி வியாபாரம் செய்தால் நன்றாகச்
சம்பாதிக்கலாம் என்று மாயவரத்தைச் சேர்ந்தவர்கள் முதலியாருக்கு ஆலோசனை வழங்குகிறார்கள்.
அவரும் ஆக்கூரை மையமாகக் கொண்டு புதியதொரு கள்ளுக்கடையைத் திறக்கிறார்.
சிற்சில நாட்களிலேயே அந்தக் கள்ளுக்கடையைப் பற்றிய செய்தி ஆக்கூரில்
மட்டுமன்றி பிற ஊர்களிலும் பரவி விடுகிறது. அக்கம்பக்கத்துக் கிராமத்தினரும் இருப்புப்பாதைத்
தொழிலாளர்களும் இன்னும் பலரும் அந்தக் கள்ளுக்கடையை நோக்கி இரவும் பகலும் வந்துகொண்டே
இருக்கிறார்கள். கடை தொடங்கிய சில நாட்களிலேயே விற்பனை சூடுபிடித்து லாபம் மழையெனப்
பொழிகிறது.
*
கிராமப்பணிகளுக்காக ஆக்கூரில் தங்கியிருக்கும் கந்தன் கிராமத்தினரையும்
தொழிலாளர்களையும் நேரில் சந்தித்து கள்ளுக்கடைக்குச் செல்லவேண்டாம் என்று மன்றாடிக்
கேட்டுக்கொள்கிறான். அவனுக்கு அது மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. அவனுடைய வேண்டுகோளை
மறுக்கமுடியாத கிராமத்தினர் அவனுக்கு பொய் வாக்குறுதி அளித்து அனுப்பிவைக்கின்றனர்.
அவன் புறப்பட்டுச் சென்றதும் வேறு வழியாக கள்ளுக்கடைக்குச் சென்று வயிறுமுட்டக் குடிக்கிறார்கள்.
சிலர் தம் மனைவிமார்களை அடித்து பணம் பிடுங்கிவந்து குடிக்கிறார்கள். சிலர் தம் வீடுகளிலிருக்கும்
பொருட்களை எடுத்துச் சென்று விற்று அந்தப் பணத்தில் குடித்துவிட்டு சாலை ஓரங்களில்
நிலைமயங்கிக் கிடக்கிறார்கள்.
அவர்களுடைய நடவடிக்கைகளை நேருக்கு நேர் கண்டும் ஒருசிறிதும்
மனம் தளராத கந்தன் மக்களைச் சந்திப்பதையும் வேண்டுகோளை முன்வைப்பதையும் நிறுத்தாமல்
தொடர்ந்து செய்தபடி இருக்கிறான். கடைசியாக, கடையின் முன்னால் நின்று கடைக்குள் செல்லவிருக்கும்
தொழிலாளர்களைக் கையெடுத்துக் கும்பிட்டு குடியை நிறுத்துமாறு மன்றாடிக் கேட்டுக்கொள்கிறான். ஆயினும் அவன் சொற்களைக் கிஞ்சித்தும் பொருட்படுத்தாத
மக்கள் ஏதேதோ வழிகளில் தப்பித்துச் சென்று கள்ளருந்துவதற்குக் கடையில் நுழைந்துவிடுகிறார்கள்.
கந்தனுடைய நடவடிக்கையைத் தொடர்ந்து கவனித்துவரும் சொக்கலிங்க
முதலியார் கந்தனைத் தன் எதிரியாகவே நினைக்கத் தொடங்குகிறார். ஏறத்தாழ இரண்டாண்டு கால
முயற்சிக்குப் பிறகு இருப்புப்பாதை வேலை முடிவுக்கு வர, ஆக்கூர் ரயில்நிலையம் இயங்கத்
தொடங்குகிறது. இருப்புப்பாதை வேலைக்காக வந்திருந்த தொழிலாளர்கள் ஊரைவிட்டு வெளியேறியபோதும்,
கிராமத்தில் குடிப்பவர்களின் எண்ணிக்கை பெருகியிருந்ததால், கள்ளுக்கடை வியாபாரத்துக்கு
ஒரு குறைவும் இல்லை.
விளைச்சல் வழியாகவும் கள்ளுக்கடை வியாபாரம் வழியாகவும் முதலியாருடைய
வருமானம் கணக்கற்றதாக இருந்தாலும் அவருடைய நகர்ப்புற சகவாசத்தின் காரணமாக மற்றொரு பக்கத்தில்
அது வேகவேகமாக செலவாகிவிடுகிறது. நகரத்துக்குச் சென்று ஆட்சியாளர்களோடு நெருக்கமான
முதலாளிகளுடன் விருந்து போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வீண்பெருமைக்காக சம்பாதித்த பணத்தையெல்லாம்
தண்ணீராகச் செலவு செய்கிறார். அதனால் பண்ணையில் எப்போதும் ஒரு பற்றாக்குறை நிலவுகிறது.
அதன் காரணமாக பண்ணையில் வேலை செய்கிறவர்களுக்கு அவரால் ஒழுங்காக கூலி கொடுக்கமுடிவதில்லை.
எப்போதும் ஒரு மாத, இரண்டு மாத கூலி பாக்கி என்கிற நிலைமை என்றும் மாறாத ஒன்றாக நிலைத்துவிடுகிறது.
கூலிக்காரர்களின் கோரிக்கை அவருடைய நெஞ்சைத் தொடவில்லை.
*
சென்னையில் துணை ஆட்சியராகப் பணிபுரிந்த ரங்கசாமிக்கு தரங்கம்பாடி
என்னும் நகரத்துக்கு மாற்றலாணை வருகிறது. அதனால் சென்னையை விட்டு நீங்கி தரங்கம்பாடிக்குச்
செல்வதற்காக இரவு ரயிலுக்குப் பயணச்சீட்டு வாங்குகிறான் ரங்கசாமி. தற்செயலாக அடையாறு
பாலத்துக்கு அருகில் ராஜேஸ்வரியை அவன் சந்திக்கிறான். பிரிந்திருந்த காலத்தில் நடைபெற்ற
நிகழ்ச்சிகளையெல்லாம் இருவரும் மனம் விட்டுப் பகிர்ந்துகொள்கிறார்கள்.
தரங்கம்பாடிக்குச் சென்று சுதந்திரம் தொடர்பான விழிப்புணர்வை
ஊட்டுவதற்காக மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்யத் திட்டமிட்டிருக்கிறாள்
அவள். ஏற்கனவே ஒருதலையாக அவள் மீது காதல் கொண்டிருந்த ரங்கசாமி அவள் மீதான விருப்பத்தை
மேன்மேலும் வளர்த்துக்கொள்கிறான். அன்று தன் விருப்பத்தை அவளிடம் வெளிப்படையாகவே தெரிவிக்கிறான்
அவன். ஆயினும் சுதந்திரப்போராட்டத்துக்காக மக்களைத் திரட்டும் பணியைத் தவிர வேறு எவ்விதமான
சிந்தனைக்கும் தன் மனத்தில் இடமில்லை என்பதை அவள் வெளிப்படையாகவே அவனிடம் தெரிவிக்கிறாள்.
தரங்கம்பாடியை மையமாகக் கொண்டு தன் பணிகளைத் தொடங்குவதற்காக
தரங்கம்பாடிக்குச் செல்லவிருப்பதாகவும் சொல்கிறாள் ராஜேஸ்வரி. அந்த ஊருக்குத்தான் தான்
மாற்றப்பட்டிருப்பதாக அவளிடம் தெரிவிக்கும் அவன் ராஜேஸ்வரியையும் தன்னோடு சேர்ந்து
முதல் வகுப்பில் வருமாறு கேட்டுக்கொள்கிறான். அவளோ அவனுடைய வேண்டுகோளை ஏற்பதில்லை.
அவள் தன்னுடைய பயணத்துக்கு மூன்றாம் வகுப்புப் பயணமே உகந்தது என்றும் மக்களோடு மக்களாக
சேர்ந்து செல்லவே தான் விரும்புவதாகவும் தெரிவிக்கிறாள். அவளோடு சேர்ந்து பயணம் செய்யும்
ஆவலால் வேறு வழியில்லாமல் ரங்கசாமியும் மூன்றாம் வகுப்பில் பயணம் செய்ய ஒப்புக்கொள்கிறான்.
ரங்கசாமியின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து கவனித்து வந்த காவல்துறை
அதிகாரிகள் அவனுடைய செயல்பாடுகளை அருகிலிருந்து பார்த்து அவ்வப்போது செய்தி அனுப்புமாறு
ஓர் ஒற்றனையும் அதே ரயிலில் அனுப்பிவைக்கிறார்கள். சென்னையிலிருந்து தரங்கம்பாடியை
நோக்கி ரயில் புறப்படுகிறது. ஒற்றனாக வந்த பொன்னன் அவர்கள் அமர்ந்திருக்கும் மூன்றாம்
வகுப்புப் பெட்டியிலேயே ஒரு கிராமத்தான் போல தரையில் அமர்ந்திருக்கிறான்.
ஆக்கூரில் சொக்கலிங்க முதலியார் பண்ணையில் வேலை செய்யும் ஆட்களுக்கு
வாரக்கணக்கில் கூலி கிடைக்காததால் சாப்பாட்டுக்கு என்ன செய்வது என வழி தெரியாமல் துன்பப்படுகிறார்கள்.
அனைவரும் ஒன்று திரண்டு சொக்கலிங்க முதலியார் வீட்டுக்குச் செல்கிறார்கள். வீட்டில்
முதலியார் இல்லை. அவர் அதிகாலையிலேயே புறப்பட்டு தரங்கம்பாடிக்குச் சென்றுவிட்டிருக்கிறார்.
அவருடைய தாயார் மட்டுமே இருக்கின்றார். அவர் என்னமோ அச்சமயத்தில் தோன்றிய பதிலை அந்தப்
பண்ணையாட்களிடம் சொல்லி அனுப்பிவைக்கிறார். வெறும் கையோடு திருப்பி அனுப்பப்பட்ட அவர்கள்
அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் சோர்ந்து வீட்டுக்குச் செல்லாமல் வயல்காட்டிலேயே
தங்கிவிடுகிறார்கள்.
ஆக்கூர் ரயில்நிலையம் இயங்கத் தொடங்கியதும், முதல் ஸ்டேஷன் மாஸ்டராக
சுந்தரம் என்பவன் நியமிக்கப்படுகிறான். அவன் தன் புது மனைவியோடு அந்த ஊரில் வந்து தங்கியிருக்கிறான்.
வசதியான குடும்பத்தைச் சேர்ந்த அவன் மனைவி சரஸ்வதிக்கு அந்தக் கிராமப்புறம் பிடிக்கவே
இல்லை. அந்த நிலையத்தில் கரியன் என்பவன் பாய்ண்ட்ஸ்மேனாக வேலை செய்கிறான்.
ஒருநாள் இரவு நேரத்தில் குடிபோதையில் பாயிண்ட்ஸ்மேன் கரியன்
ஊருக்கு வெளியே இருக்கும் தன் குடிசையை நோக்கிச் செல்கிறான். வீட்டில் தன் மனைவி உணவு
தயாரித்துவைத்திருக்கக்கூடும் என்று நினைத்தபடி அவன் நடந்துபோகிறான். ஆனால் அரிசியோ,
சில்லறையோ எதுவுமில்லாமல் அவன் மனைவியும் பிள்ளைகளும் பசியில் சுருண்டு படுத்திருக்கிறார்கள்.
துவண்டு கிடக்கும் மனைவியிடம் சமைக்காததற்குக் காரணம் கேட்டு சண்டை போடுகிறான். சண்டையில்
அவளுடைய தலையில் அடிபட்டு ரத்தம் பெருகெடுத்தோடுகிறது.
அதே சமயத்தில் தொலைவிலிருந்து ஒரு கூட்ஸ் ரயில் வரும் சத்தம்
கேட்கிறது. அது சிக்னலுக்காக விடுக்கும் அழைப்பு என்பதை அளவற்ற போதையிலும் அவன் மனத்துக்குப்
புரிந்துவிடுகிறது. அடிபட்ட மனைவியை அப்படியே விட்டுவிட்டு ரயில் நிலையத்தை நோக்கி
ஓடுகிறான். அதே நேரத்தில் சென்னையிலிருந்து தரங்கம்பாடியை நோக்கி வந்துகொண்டிருந்த
ரயிலும் கூட்ஸ் ரயிலும் எதிர்பாராத விதத்தில் மோதி விபத்து நேர்கிறது.
*
அப்போது தொலைவில் ஏதோ ஒரு வெளிச்சம் பாய்ந்துவருவதைப் பார்க்கிறான்
ஸ்டேஷன் மாஸ்டர் சுந்தரம். முதலில் எவ்விதமான
அறிவிப்பும் இல்லாமல் அந்தத் தடத்தில் வரும் புதிய ரயில் என்று நினைத்து பதற்றம் கொள்கிறான்.
ஆனால் ரயில் சத்தம் கேட்காததால் அது ரயிலல்ல என சில நொடிகளிலேயே அவன் புரிந்துகொள்கிறான்.
வெளிச்சம் தெரியும் திசையில் நன்றாக உற்றுப் பார்த்து எங்கோ தீ விபத்து நடந்திருப்பதாக
அவன் புரிந்துகொள்கிறான். அதற்கிடையில் ரயில்நிலையத்தை நோக்கி வந்த சிலர் யாரோ குடிவெறியில்
சொக்கலிங்க முதலியாரின் பண்ணையில் வைக்கோல் போருக்குத் தீ வைத்துவிட்டதாகத் தெரிவிக்கின்றனர்.
இருபது வைக்கோல் போரும் இருபதனாயிரம் கலம் நெல்லும் எரிந்து விட்டதாக அவர்கள் சொல்கிறார்கள்.
கூலிக்காரர்கள் அனைவரும் கைக்குக் கிடைத்ததைக் கொள்ளை அடித்துக்கொண்டு ஓடிவிட்டார்கள்
என்றும் அவர்கள் சொல்கிறார்கள்.
அந்தத் தீவிபத்தின் காரணமாக சொக்கலிங்க முதலியார் மனத்தின் ஒரு
நல்ல மாற்றம் ஏற்படுகிறது. பெரிய அளவில் ஏற்பட்ட இழப்பைக் காரணம் காட்டி கூலிக்காரர்கள்
மீது காவல்நிலையத்தில் புகார் செய்யவேண்டும் என பலரும் அவரைத் தூண்டுகிறார்கள். ஆனால்
அதற்கு அவர் உடன்படவில்லை. தன்னுடைய பிழையே எல்லாவற்றுக்கும் மூல காரணம் என்பதை அவர்
புரிந்துகொள்கிறார். உடனடியாக அவர்களுக்குக் கிடைக்கவேண்டியதைக் கொடுத்து அவர்களுடைய
நெஞ்சில் இடம்பிடித்துவிடுகிறார். புகார் என எதுவும் அளிக்கப்படாததால் அந்தப் பண்ணையில்
நடைபெற்ற பெரிய சூறை சாதாரண விபத்தாக நின்றுவிடுகிறது. அதுவரை கந்தனையும் அவனுடைய செயல்களையும்
வெறுத்துவந்த முதலியார் அவனுடைய செயல்களில் இருக்கும் அர்ப்பணிப்புணர்வைப் புரிந்துகொண்டு
பாராட்டுகிறார். அவனோடு உரையாடி, அவனுடன் நல்ல உறவை வளர்த்துக்கொள்கிறார்.
*
தஞ்சை மாவட்டத்துக்குரிய ஆட்சியர் அலுவலகம் வல்லம் என்னும் பகுதியில்
அமைந்திருக்கிறது. துணை ஆட்சியராக மாற்றலாகி வந்திருக்கும் ரங்கசாமி அந்தக் கோட்டையை
ஒட்டிய விடுதியில் தங்கி பணிபுரிந்து வருகிறார்.
தரங்கம்பாடிக்கு வந்த குறுகிய நாட்களிலேயே மக்களோடு நெருங்கிப்
பழகி அவர்களுடைய மனத்தில் இடம்பிடித்துவிடுகிறாள் ராஜேஸ்வரி. தீவிபத்துக்குப் பிறகு
ஆக்கூரிலிருந்து தரங்கம்பாடிக்கு வந்து சேர்ந்த கந்தனும் தன் கிராமியச் சேவைகளில் தொடர்ந்து
ஈடுபடுகிறான். ஒருநாள் இருவரும் கோட்டைக்கு வெளியே நீண்டிருக்கும் கடற்கரைப்பகுதியில்
சந்தித்துக்கொள்கிறார்கள். லண்டனில் ஒன்றாகக் கல்வி கற்ற காலத்து நினைவுகளை இருவரும்
மாறிமாறிப் பகிர்ந்துகொள்கிறார்கள். வேலையை முடித்துக்கொண்டு தற்செயலாக அந்தப் பக்கமாக
வந்த ரங்கசாமியும் அவர்களுடைய உரையாடலில் பங்குபெறுகிறான்.
மக்களை ஒன்றாகத் திரட்டுவது தொடர்பாக மூவரும் மாறிமாறி உரையாடி
தத்தம் கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிறார்கள். ஒரு நந்தவனத்தில் எல்லா வகையிலுமான பூக்கள்
இருப்பினும், நாரில்லாமல் மாலையாகத் தொடுக்கமுடியாது என்றும் மக்கள் தமக்குள் ஒற்றுமை இல்லாமல் உதிரிகளாக இருக்கும் வரையில் எந்தச் செயலையும் சாதிக்கமுடியாது
என்றும் பேசிக்கொள்கின்றனர். ஒற்றுமையின் அவசியத்தையும் சுதந்திரத்தின் அவசியத்தையும்
எடுத்துரைக்கும் வகையில் மாபெரும் கூட்டமொன்றுக்கு ஏற்பாடு செய்வதே இன்றைய முக்கியத்
தேவை என அனைவரும் முடிவெடுக்கின்றனர்.
*
தரங்கம்பாடியில் கூட்டம் நடைபெறவிருக்கும் செய்தியை உளவுத்துறையினர்
வழியாக தஞ்சாவூர் ஆட்சியரான லான்ஸ் துரை தெரிந்துகொள்கிறார். விரும்பத்தகாத நிகழ்ச்சிகள்
எதுவும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் அவர் சில தடுப்பு ஏற்பாடுகளைச் செய்கிறார். ஆட்சிப்பணியில்
ஈடுபட்டிருக்கும் ஒருவரே போராட்டக்குழுவினரோடு இணைந்திருக்கும் செய்தியை அறிந்துகொண்ட
அவர் மேலிடத்துக்கு எழுதி அவரை உடனடியாக இடமாற்றம் செய்யும்படி குறிப்பெழுதி அனுப்புகிறார்.
சில நாட்களிலேயே ரங்கசாமிக்கு இடமாற்றம் குறித்த தந்தி வந்து சேர்கிறது.
இடமாற்றம் மட்டுமன்றி பணிமாற்றமாகவும் அந்த ஆணை அமைந்திருக்கிறது.
மதுரையை அடுத்த பழனியில் செட்டில்மெண்ட் ஆபீசராக
வேறொரு துறையில் இணையும்படி அந்தத் தந்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதை
விரும்பாத ரங்கசாமி தன் பதவியையே ராஜினாமா செய்வதாக அக்கணமே தந்தி வழியாக மேலிடத்துக்குச்
செய்தியை அனுப்பிவைக்கிறான். அதற்குப் பிறகு, தன் பழைய நண்பர்களோடு முழுமனத்தோடு கூட்டத்துக்கான
ஏற்பாடு செய்யும் பணிகளில் ஈடுபடத் தொடங்குகிறான். ஆக்கூரிலிருந்து வந்து சேர்ந்த சொக்கலிங்கமும்
அவர்களோடு சேர்ந்துகொள்கிறான்.
*
பொதுக்கூட்டத்துக்கான நாள் நெருங்க நெருங்க தரங்கம்பாடி பதற்றம்
மிகுந்த நகரமாக மாறுகிறது. ஒருபக்கம் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அக்கம்பக்கத்தில்
உள்ள கிராமங்களிலிருந்தும் நகரங்களிலிருந்தும் வந்து சேர்ந்த பொதுமக்கள். இன்னொரு பக்கம்
பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக அரசு சார்பாக வந்து இறங்கியிருக்கும் அதிகாரிகள். உள்ளூர்
காவல்துறையின் செயல்பாடுகள் மீது நம்பிக்கையில்லாத ஆட்சியர் பாதுகாப்புக்காக மலபார்
போலீஸை வரவழைக்கிறார். அவர்கள் மிகப்பெரிய எண்ணிக்கையில் அந்த ஊருக்கு வந்து கடற்கரை
ஓரமாகவே முகாமிட்டிருக்கிறார்கள்.
கூட்டம் நிகழவிருக்கும் நாளில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர்
தரங்கம்பாடி கோட்டையின் முன்னால் கூடிவிடுகிறார்கள். ஆக்கூர் கிராமத்தினர் அனைவரும்
அங்கு திரண்டு வந்துவிடுகிறார்கள். ஒரு பக்கம் கோட்டை. அடுத்த இரு பக்கங்களிலும் நெருக்கமான
கட்டிடங்களின் வரிசை. கூட்டத்தில் கலந்துகொள்ள பார்வையாளர்கள் வருவதற்கும் வெளியேறுவதற்கும்
ஒரே வழி மட்டுமே இருக்கிறது. நினைத்ததைவிட பார்வையாளர்கள் அதிக எண்ணிக்கையில் சேர்ந்துவிட்டதால்
நெருக்கடி அதிகமாக இருக்கிறது.
கூட்டம் தொடங்கும் நேரத்துக்கு முன்பேயே ஏராளமானவர்கள் அந்த
இடத்துக்கு வந்து சேர்ந்துவிடுகிறார்கள். எந்தப் பக்கம் என்ன நடைபெற்றது என தெரிந்துகொள்ளும்
முன்பேயே கோட்டை மீதிருந்து துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்கிறது. அடுத்தடுத்து
தோட்டாக்கள் கூட்டத்தினர் மீது பாயத் தொடங்குகின்றன. கூட்டத்துக்காக வந்திருந்தவர்கள்
அலறியடித்துக்கொண்டு வெளியேறும் திசையறியாமல் தடுமாறி நாலாபக்கமும் சிதறி ஓடுகிறார்கள்.
துப்பாக்கிக்குண்டுக்கு இரையானவர்கள் ஆங்காங்கே விழுந்து துடிக்கிறார்கள்.
தப்பிப்பதற்கான வழி குறுகலாக இருந்ததால் அனைவரும் வெளியேற கால
தாமதமாகிறது. அதற்கிடையில் ஏராளமானவர்கள் குண்டுக்கு இரையாகிவிடுகின்றனர். கூட்டத்தினரை
ஒழுங்குபடுத்தியபடி உற்சாகமாக அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்த கந்தன் துப்பாக்கிக்குண்டுக்கு
இரையாகி விழுகிறான். உடனிருந்தவர்கள் அவனை அங்கிருந்து வெளியே தூக்கிச் செல்ல முயற்சி
செய்கின்றனர். ஆனால் வெளியேற வழியில்லாமல் அவர்கள் தவிக்கிறார்கள். மரணத்தை நெருங்கிய
கந்தன் தாகமெடுப்பதாகவும் தண்ணீர் வேண்டுமென்றும் கேட்கிறான். அங்கிருந்த நெரிசலிடையே
புகுந்துசென்று தண்ணீர் கொண்டுவந்து கொடுக்க ஒருவரும் இல்லை. சுதந்திரத்துக்கான தாகத்தோடு
வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவன் கடைசிக்கணத்தில் தண்ணீர்த்தாகத்தோடு தன் உயிரை இழக்கிறான்.
*
துப்பாக்கிச்சூடு தொடர்பாக நீதிமன்றத்தில் பெயரளவில் விசாரணை
நடைபெறுகிறது. துப்பாக்கிச்சூட்டை திட்டமிட்டு நடத்தியிருந்தபோதும், பாதுகாப்பு நடவடிக்கைக்காக
சுட்டதாக அரசுத்தரப்பு நீதிமன்றத்தில் அறிக்கையைச் சமர்ப்பிக்கிறது. விசாரணை முடிவில்
ரங்கசாமிக்கும் சொக்கலிங்கத்துக்கும் ஓராண்டு கடுங்காவல் தண்டனையும் ராஜேஸ்வரிக்கும்
ஆறு மாத தண்டனையும் கூட்டத்தைத் திரட்டுவதில் மும்முரமாக ஈடுபட்ட ஆக்கூரைச் சேர்ந்த
எழுபத்திரண்டு பேருக்கு இரண்டு ஆண்டு கால தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கிறார் நீதிபதி.
ஆக்கூர் ஸ்டேஷன் மாஸ்டரான சுந்தரம் போன்ற பலரும் அன்று கூட்டத்தில் பங்கேற்கச் சென்றிருந்தபோதும்
பட்டியலில் இடம்பெறாமல் சாமர்த்தியமாகத் தம்மைப் பாதஐகாத்துக்கொள்கிறார்கள்.
*
சுதந்திரப்போராட்டக் காலத்தில் அன்றைய கிராம வாழ்க்கை எப்படி
அமைந்திருந்தது என்கிற சித்திரத்தை ’தேசபக்தன் கந்தன்’ நாவலில் அழகாகத் தீட்டியிருக்கிறார்
வேங்கடரமணி. ஏறத்தாழ நூறு ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட நாவல் என்றபோதும் ஒவ்வொரு
அத்தியாயத்திலும் காட்சிகளை வேங்கடரமணி அமைத்திருக்கும் விதம் வடிவநேர்த்தியோடு கச்சிதமாகக்
காணப்படுகிறது. சொன்ன செய்திகளைவிட சொல்லாமல் விட்ட செய்திகளே அதிகம் என்பது நாவலின்
சிறப்பம்சங்களில் முக்கியமானது. நாவலாக்கம்
குறித்த தெளிவான ஒரு பார்வை வேங்கடரமணியிடம் அமைந்திருந்ததுதான் அதற்குக் காரணம்.
நிர்மாணப்பணிகளில் நேரிடையாக ஈடுபட்ட அனுபவம் இருந்தபோதும் வேங்கடரமணி
ஆர்வத்தின் காரணமாக எந்தக் காட்சியையும் மிகைப்படுத்தியோ குறைவாகவோ சித்தரிக்கவே இல்லை.
கள்ளுக்கடை மறியல் காட்சி ஒன்றே அவருடைய எழுத்தாளுமைக்குச் சான்றாக விளங்குகிறது. கிராமத்தினர்
அனைவரும் கந்தனுடைய சொல்லைப் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றனர். ஆனால் அவர் அங்கிருந்து
வேறு இடம் சென்றதும் பழக்கத்தின் காரணமாக குடிக்கச் செல்பவர்களாகவே இருக்கின்றனர்.
தன்னுடைய விருப்பத்தை எந்தப் பாத்திரத்தின் மீதும் வேங்கடரமணி ஏற்றிவைக்கவில்லை.
இறுதிக்காட்சியாக அமைக்கப்பட்டுள்ள தரங்கம்பாடி பொதுக்கூட்ட
நிகழ்ச்சியும் துப்பாக்கிச்சூட்டு நிகழ்ச்சியும் ஜாலியன்வாலாபாக் துப்பாக்கிச்சூட்டை
நினைவுபடுத்தும் வகையில் மிகச்சிறந்த சொற்சித்திரமாகத் தீட்டப்பட்டிருக்கிறது. தமிழ்
நாவலுலகில் இந்த அத்தியாயம் மிகமுக்கியமான ஓர் ஆவணம்.
ஓர் ஆபத்தான சூழலிலிருந்து உடனடியாகத் தப்பித்துச் செல்ல நினைப்பவர்கள்,
பிரச்சினையை எதிர்கொள்ள மனத்தளவில் துணிச்சலோடு நிற்பவர்கள், ஒளிபவர்கள், தம்மை எந்த
இடத்திலும் முன்னிலைப்படுத்திக்கொள்ளாமல் நழுவி வேறிடம் சென்று மறைந்துகொள்பவர்கள்
என மனிதர்கள் பலவகையாக இருக்கிறார்கள். அத்தகையோரைப்பற்றி கூடுதலாகவோ, குறைவாகவோ ஒரு
வரியும் குறிப்பிடாமல் அத்தகு மனிதர்களை அவர்களுக்கே உரிய நிறத்தோடு காட்சிப்படுத்தியிருக்கிறார்
வேங்கடரமணி.
ஒரு பெரிய போராட்டத்தில் ஈடுபட்டு அதற்காக அனைவரையும் ஒன்று
திரட்டியவர்கள் என்கிற வகையில் தண்டனை பெறும் தருணத்தோடு ஒரு நாவல் முடிவடையலாமா என்ற
கேள்வி சிலரிடம் எழக்கூடும். ஒரு தோற்றத்தில் அப்போராட்டத்தில் அரசுத்தரப்பினர் வெற்றி
பெற்றுவிட்டதாகவும் மக்கள் தரப்பினர் தோல்வியுற்றதாகவும் சிலருக்குத் தோன்றக்கூடும்.
ஆனால் அதில் உண்மையில்லை.
அரசுத்தரப்பின் வெற்றி என்பது அதிகாரத்தின் வழியாகப் பெற்ற வெற்றி
மட்டுமே. எளிய மக்கள் அரசு அதுவரை மக்களுக்குக் காட்டிவந்த எளிய முகத்தையே உண்மையான
முகமென நம்பி அவர்களுக்குத் தம் மனத்தில் இடமளிக்கிறார்கள். ஆனால் வெற்றிக்காக தன்
உண்மையான முகத்தை அரசு காட்டும்போது அதன் குரூரத்தை அவர்கள் மீது நம்பிக்கை வைத்திருந்த
எளிய மக்கள் நேருக்குநேர் பார்த்துப் புரிந்துகொள்கிறார்கள். அதுவரை அவர்கள் அரசுமீது
வைத்திருந்த நம்பிக்கை அக்கணமே சிதறிப்போகிறது. அந்த நம்பிக்கைச்சிதறல் அரசுத்தரப்புக்கு
ஏற்படும் மாபெரும் தோல்வி. அடுத்தடுத்த நேரக்கூடிய போராட்டங்களால் அந்த நம்பிக்கை முற்றிலுமாக
உடைந்து சிதறும். அதுவரை மக்கள் சந்திக்கும் தோல்விகள் அனைத்தும் அக்கணத்தில் முதல்வெற்றியாக
மாறுதலடையும்.
சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் என்கிற வகையில் வேங்கடரமணியுடைய எண்ணமும் கருத்தும் வேறானதாக இருக்கலாம். ஆனால் அவர் ஓர் எழுத்தாளராக மட்டுமே இந்த நாவலில் தன்னை முன்வைத்திருக்கிறார். அதன் காரணமாகவே அவருடைய நாவல் அற்புதமான எதார்த்தச்சித்திரத்தை முனைக்கும் படைப்பாக அமைந்திருக்கிறது. . ‘தேசபக்தன் கந்தன்’ அவ்வகையில் ஒரு முக்கியமான முன்னுதாரணப்படைப்பு.
(கிழக்கு
டுடே – இணைய தளம் – 18.07.2026)