Home

Sunday, 13 November 2022

ஒரு நாவல் ஒரு கேள்வி

 

மூத்த தலைமுறையைச் சேர்ந்த கன்னட நாவலாசிரியர்களுள் ஒருவர் கே.வி.ஐயர்.   மல்யுத்தம் பயிற்றுவிக்கும் கலைஞராக  பல ஆண்டுகளாக வாழ்ந்துவந்த நிலையில் தற்செயலாக எழுத்துத்துறையின் பக்கம் தன் கவனத்தைத் திருப்பியவர்.   அவருடைய முக்கியமான நாவல் "சாந்தலை". பதினேழு பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்னர் அந்தநாவலைப் படித்த அனுபவம் இன்னும் பசுமையாக நினைவில் பதிந்துள்ளது.  

சாந்தலை அழகான ஒரு நடனப்பெண். ஆட்டத்தில் தன்னையே மறந்துவிடும் சுபாவம் கொண்டவள். ஆடத் தொடங்கினால் போதும், சின்ன வாய்க்காலைத்தாண்டுவதைப்போல இந்த உலக நினைவையே மிக எளிதாகத் தாண்டி கண்ணுக்குப் புலப்படாத மற்றொரு உலகத்துக்குள் பறந்துபோய்விடுவாள்.   நொடிநேரத்தில்அந்த லயம் அவளுக்குக் கூடிவந்துவிடும்.   தாளத்துக்கும் இசைக்கும் அவள் கால்களும் மனமும் முற்றிலுமாக வசமிழந்து கட்டுப்பட்ட நிலையில்அடங்கிப்போய்விடும்.   உயிர் முழுக்க அந்த உள்ளியக்கத்தில் இணைந்து கிடக்கும்.   சுருதியும் தாளமும் கம்பளம் விரித்த மாதிரியும் அந்தக் கம்பளத்தில் நடந்துஅவள் எங்கோ தாவிச்சென்றுவிட்டதைப்போலவே இருக்கும்.   ஒரே  கணத்தில்  உலகம் முழுக்க நிறைந்திருக்கும் நாதத்துடன் இரண்டறக் கலந்துவிட்டதைஅவள் கண்களில் நிறைந்து வழியும் மோகமயக்கத்தைப் பார்த்தாலேயே புரிந்துவிடும். அந்த அளவுக்கு புறவிவகாரங்கள் அனைத்தையும் துறந்துநடனத்தோடு ஒன்றிவிடுகிற லயம் அவள் மனதிலும் உடலிலும் இயற்கையாகவே குடிகொண்டிருந்தன. அவளுக்கு மட்டுமல்ல, அவளுடைய உயிர்த்தோழிலட்சுமிக்கும்.

ஒருநாள் இறைவனுடைய சந்நிதியில் அவர்கள் இருவரும் அதிகாலையில் நடனமாடிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது தற்செயலாக அங்கேவழிபாட்டுக்காக வந்த அந்த ஊர் அரசனின் தாயார் சுற்றுப்புறம் மறந்து ஒரே   லயிப்புடன் ஆடிக்கொண்டிருக்கும் அவர்களைப் பார்த்து ஆனந்தம்கொள்கிறார்.   சாந்தலையை மருமகளாக்கிக்கொள்ளும் ஆவல் அவள் உள்ளத்தில் எழுகிறது.  மகன் விஷ்ணுவர்த்தனைச் சம்மதிக்க வைக்கிறாள்.ஆனால் தன் தோழியைப் பிரிய மனமில்லாத சாந்தலை அவளையும் அரசன் மணந்துகொள்ளவேண்டும் என புதுமையான விதியை விதிக்கிறாள்.  சாந்தலையின்மீது இருக்கிற ஆசையில் அரசன் குடும்பம் கட்டுப்படுகிறது.   

அந்த ஊரில் நடனச்சிற்பங்களின் பலவேறு நிலைகளுடன் அழகான ஓர் ஆலயம் எழுப்பவேண்டுமென்று அரசனிடம் ஆசையோடு கேட்டுக்கொள்கிறாள் சாந்தலை.   நாடெங்கும் உள்ள ஏராளமான சிற்பிகளை இணைத்து  அவள்  விருப்பத்துக்கேற்றபடியே  ஓர்  ஆலயத்தைக் கட்டியெழுப்பத் தேவையானஏற்பாடுகளை மேற்கொள்கிறான் அரசன்.

 கட்டிமுடிக்கப்பட்டதும் அங்கே பிரதிஷ்டை செய்யப்பட்ட இறைவன் முன்னால் ஒருமுறை ஆடிமகிழ்கிறாள் சாந்தலை.   அவள் சொல் ஒவ்வொன்றும் அவனுக்கு வேதவாக்காக இருக்கிறது.   ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் அரசன் சாந்தலையின் வார்த்தைக்குக்கட்டுப்படுவதில்லை.  அவள் தோழி லட்சுமியை அவனால் மனைவியாகவே நினைக்க முடிவதில்லை என்பதுதான் பிரச்சனை.   ஆண்டுக்கணக்காக அவனை இணங்கவைக்க சாந்தலை முயற்சி செய்தபடியிருந்தாலும்  எதுவும் நிறைவேறுவதில்லை. அந்தந்த சந்தர்ப்பங்களுக்கு ஏற்ற விதம்விதமான பொய்களைச்சொல்லித் தப்பிப்பதிலேயே குறியாக இருக்கிறான் அரசன். நாளாக நாளாக குற்ற உணர்வில் நலிகிறாள் சாந்தலை.

ஒருநாள் தன்னால் விழுந்த முடிச்சை தானே அவிழ்க்க முடிவெடுக்கிறாள் சாந்தலை.   அதை நிறைவேற்றிக்கொள்ளும்சந்தர்ப்பத்துக்காக வெகுநாள்கள் காத்திருக்கிறாள். ஒருமுறை தன் நாட்டின்மீது படையெடுத்துவந்த எதிரிப்படையைத் தாக்குவதற்காக தலைநகரைவிட்டுஅரசன் படையுடன் செல்லவேண்டியிருக்கிறது.   அவனை விடைகொடுத்து வழியனுப்பும் சாந்தலை அந்த நேரத்தை தன் முடிவைச் செயற்படுத்தும் நேரமாகப்பயன்படுத்திக்கொள்ள திட்டமிடுகிறாள்.   தலைநகரிலிருந்து கிட்டத்தட்ட நூறுகல் தொலைவில் இருக்கும் சிவகங்கை என்னும் குன்றின்மீது குடியிருக்கும் சிவனைவணங்குவதற்குச் செல்வதைப்போல பயணத்தை ஏற்பாடு செய்துகொள்கிறாள் சாந்தலை.  குதிரைகள் பூட்டிய தேரில் அவள் பயணம் தொடர்கிறது.  செலுத்தப்பட்ட அம்புபோல அவள் மனம் தன் நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ளும் வழியில் தன் திட்டங்களைச் செயல்படுத்துவதில் ஈடுபடுகிறது.

 குன்றின் அடிவாரத்தை அடைந்ததுமே வீரர்களையும் பாதுகாவலர்களையும் அங்கேயே காத்திருக்கும்படி செய்துவிட்டு குன்றின்மீது தன்னந்தனியே பூசைத்தட்டுடன் ஏறுகிறாள். ஏறத்தாழ ஒருமணிநேரம் நடந்து குன்றின் உச்சியை அடைகிறாள்.  ஈசனை மனமுருக வணங்கியபிறகு குன்றின் விளிம்புக்குச் சென்று மறுபுறம்விழுந்து உயிரை மாய்த்துக்கொள்கிறாள்.  தன் மரணத்துக்குப் பிறகாவது தன் கணவன் தன் உயிர்த்தோழியான லட்சுமியுடன் வாழ வேண்டும் என்பதே அவள்விருப்பம். போரின் வெற்றிச்செய்தியும் மனைவியின் மரணச்செய்தியும் ஒரே நேரத்தில் அரசனை அடைகின்றன.

 அதிர்ச்சியில் உறைந்துபோகும் அரசன் பித்துப்பிடித்தமாதிரிசிவகங்கை குன்றைநோக்கி குதிரையில் விரைகிறான்.  குன்றின் சரிவெங்கும் ஓடித் தேடி உயிரிழந்த சாந்தலையின் உடலைக் கண்டறிந்து எடுத்துவைத்துக்கொண்டு புலம்புகிறான்.  காலம் மெல்லமெல்ல அவன் காயங்களை ஆற்றுகிறது. பிரிவின்  கடுமையைத்  தாளவியலாத அரசனும் அதே குன்றில் தற்கொலைக்கு முயற்சி செய்கிறான்.  காவலர்கள் விழிப்புடன் இருந்து அரசனைக் காப்பாற்றுகிறார்கள். அரசனாகச் செயல்படவேண்டிய பணிகள் அவனைத்  துக்கத்தில் ஆழ்ந்துகிடக்க அனுமதிப்பதில்லை.  நாட்டின் நலத்துக்காகவும்  வீட்டின்  நலத்துக்காகவும்  அவன் லட்சுமியை மனமார ஏற்றுக்கொள்கிறான். அந்த அரசனின் பெயர் விஷ்ணுவர்த்தன். அந்தத் தலைநகரின் பெயர் ஹளபீடு. சிற்பக்கலைக்குப் பேர்போன இடம் அங்கிருக்கும் கோயில். ஆயிரம்முறைசுற்றிவந்து சுற்றிவந்து பார்த்தாலும் மனம் அடங்காது. எதையோ  பார்க்காமல் விட்டுச்  செல்கிற  இழப்புணர்வே  ஒவ்வொரு  முறையும்  எஞ்சியிருக்கும்.

இந்த நாவலைப் படிப்பதற்கு முன்னர் பலமுறை பார்த்த இடம் என்றாலும் நாவலைப் படித்த பிறகு  மீண்டும் மறுபடியும் பார்க்கவேண்டும்போலத் தோன்றியது.  உடனே வண்டியேறிச் சென்று சாந்தலை ஆடியிருக்க வாய்ப்புள்ள சந்நிதியில் நின்றேன்.

சுற்றிலும் கற்களால் கடைந்த அழகுத் தூண்கள். நடுவில் நடனமிட வாகான இடம். இந்த இடத்தில்தான் சாந்தலை ஒரு பாட்டுப்பாடி ஆடி ஒரு படையல்போல நிகழ்த்தியிருக்கவேண்டும் என்று தோன்றியது.  நிமிர்ந்து பார்த்தேன்.  நான்கு மூலைத்தூண்களின் உச்சியிலும் நடனமங்கை ஒருத்தியின் வெவ்வேறு அசைவுள்ள சிற்பங்கள்.  சாந்தலை இன்னும் அந்த இடத்தில் அரூபமாக நின்று ஆடிக்கொண்டேஇருப்பதைப்போல இருந்தது.  தன் விருப்பத்தை நிறைவேற்றிய இறைவனுக்கு  அவள்  ஆடி  நன்றி தெரிவித்தபடியிருப்பதைப்போல தோன்றியது.  ஆட்டலயமும் சுருதிலயமும் ஒன்றிணைந்து  அவள்  காற்று மயமாகிவிட்டிருந்தாள்.  அங்கே  பரவியிருந்த காற்றில் சாந்தலையின்  மூச்சுக்காற்று  கேட்டது.  சலங்கையின் நாதம் கேட்டது.  மன்றாடும்  பாடல்வரிகள்  மிதப்பதைப்போல இருந்தது. சுற்றியிருக்கும்  ஒவ்வொரு  இடத்திலிருந்தும்  சாந்தலையின்  நடனஒலி எழுந்துவருவதாகத் தோன்றியது.  கண்ணுக்குத்  தெரியாத  ஓர்  ஊற்றிலிருந்து  பெருகிவரும்  வெள்ளம்  காலம்காலமாக எல்லா  இடங்களையும்  நிறைத்து  பொங்கிப்பொங்கி  வழிவதைப்போலஇருந்தது.

அங்கே சிரித்து நடமாடுகிற ஒவ்வொரு பெண்ணும் அன்று  என் கண்களுக்கு சாந்தலையாகத் தோன்றினார்கள்.  ஒவ்வொருவரின் கால்களிலும் சலங்கை இனியநாதத்தைப் பொழிவதைப்போல இருந்தது.  ஓங்கி உயர்ந்த நந்தியின்மீது சாய்ந்தபடி படமெடுக்கிற ஆணுக்கு போஸ் கொடுத்தபடி இருந்த பெண்ணும் வழவழவென்றதூணைப் பார்த்ததும் தானாகவே அதை ஒரு கையால் பற்றி தலைப்பின்னல் ஒரு கீற்றைப்போல தொங்கி ஆடிவர வயதை மறந்து உலகை மறந்துவேகவேகமாக சுழன்ற பெண்ணும் பிராகாரமெங்கும் நிறைந்திருக்கும் ஏராளமான சிற்பங்களைப் பார்த்துப் புன்சிரிப்போடு கைகோர்த்து நடந்துசென்ற நாலைந்து  பெண்களையும்  ஏதோ  ஒரு  உத்வேகத்தில்  சட்டென  தோளில் கிடந்த துப்பட்டாவை எடுத்து இடுப்பில்  கட்டிக்கொண்டு  ஒருகணம் நடராஜரைப்போல அசைவுகாட்டிச்  சிரித்துவிட்டுச்  சென்ற  பெண்ணும் சாந்தலையின் வடிவத்திலேயே தெரிந்தார்கள்.  

மறுநாள் சிவகங்கைக்குச் சென்று அந்தக் குன்றில் ஏறினேன். உச்சிவரை சென்று அங்கு நின்றபடி எல்லாத் திசைகளையும் சுற்றிச்சுற்றிப் பார்த்தேன்.  சாந்தலையின்  நினைவுகளே  என்னை  ஆக்கிரமித்துக்கொண்டிருந்தன. திடீரெனஅவள் ஒரு வணங்கத்தக்க தெய்வமாக எனக்குத் தோன்றினாள். அவள் தியாகம் நெகிழச்செய்வதாக இருந்தது. நீண்ட நேரத்துக்குப் பிறகு அவள் வாழ்க்கையை அசைபோட்டபடி  கீழே இறங்கி பேருந்து பிடித்து ஊருக்குத் திரும்பினேன்.

திருமணத்துக்குப் பிறகு ஒருநாள் சாந்தலையின் கதையை என் மனைவி  அமுதாவிடம் சொன்னேன்.  பிறகு ஹளபீடு, சிவங்கை இரண்டு இடங்களுக்கும் சென்று வந்தோம்.  குன்றைவிட்டுஇறங்கி வாசல்கோபுரத்தை அடைந்து பாதையில் இறங்கும்வரை  யாராலும் எதுவும் பேச இயலவில்லை. இருவருடைய நினைவுகளிலும் துயரச்சாயல்படிந்திருப்பதை உணர்ந்தோம்.

 அமுதா கண்ணைமூடி ஒரு நிமிஷம் நிற்பதைப்போல இருந்தது. "தற்செயலா புருஷனப் பங்குபோட்டு வாழற பொண்ணுங்க கதையைத்தான் கேட்டிருக்கம். பாமா, ருக்மணின்னு ஒரு கதை. கங்கா, கெளரின்னு ஒரு கதை.எதிர்பாராத விதமா பாஞ்சாலிபோல ஒரே பொண்ணுகூட அஞ்சிபேரு வாழ்ந்த கதையும் நடந்திருக்குது. ஆனா தோழியொருத்தி தன்னோட எப்பவும் இருக்கணுங்கறதுக்காக  மனசார  தன்  புருஷனையே  அவளும் கட்டிக்கணும்னு  சொல்லற  அளவுக்கு  நட்பின்  வேகமா?  கடவுளே, நெனைக்கும் போதே  நெஞ்சு படபடன்னு  அடிச்சிக்குது.  பெரிய  மனசுதான் அவளுக்கு."   

பேச்சு குழறி தடுமாறிக்கொண்டிருந்தது அவளுக்கு.  "செத்தப்பறமா சேந்து வாழ்ந்த  வாழ்க்கைய  அவ  உயிரோட  வாழ்ந்திருக்கும்போதே வாழ்ந்திருக்கலாமேன்னு  அந்த  ராஜாவுக்கு ஏன் தோணலை?" என்று என் பக்கமாகத் திரும்பி  ஒரு கேள்வி கேட்டாள்.

"தோணியிருக்குமோ என்னமோ? "

"அப்படின்னா ஏன் செய்யலை? "

"அதுக்கும் ஏதாவது காரணம் இருக்கும்மா.  தோழியோடயும் இருக்கட்டும்ன்னு விட்டுக்கொடுக்கறது சுலபம்.  அப்படி  இருந்துட்டு  திரும்பி வரதை கண்ணால பாக்கமுடியுமா அமுதா. இது அவளை தொட்ட கைதானே, இது அவளுக்கும் கொடுத்த முத்தம்தானேன்னு ஒரு எண்ணம் அவளுக்கு வராதுன்னு சொல்லமுடியுமா?"

 "வராதுன்ற  முடிவோடதானே அவளே அனுப்பிவைக்கறா."

 "அந்த நிமிஷம் ஏதோ ஒரு வேகம்.  தனக்கு  கெடைச்சதெல்லாம்  தன் தோழிக்கும்  கெடைக்கணும்ங்கற  படபடப்பு.  தன்னுடைய நிர்ப்பந்தம் இல்லாம போயிருந்தா  அக்கடான்னு  எங்கவாவது  அவ  ஆனந்தமா  வாழ்ந்திருப்பாளே, அவளை  நட்பு  பாசம்ங்கற  நெருக்கடியை  கொடுத்து  எதுவும்  கெடைக்காத ஏமாத்தத்துக்கு  ஆளாக்கிட்டமேன்னு ஒரு குற்றஉணர்ச்சின்னு  எல்லாமா  சேந்து  போபோன்னு சொல்லியிருக்கும்.  அதனால  அப்படி  ஒரு  முடிவை அவ எடுத்திருக்கலாம்.  ஆனா  எதிர்காலத்துல  அவ கண்ணுல  ஒரு  ஓரமா வலிவந்து  பாக்கறமாதிரி  ஆயிடுச்சின்னா  என்ன  செய்யமுடியும்னு  அவனும் யோசிச்சிபாத்திருப்பான் இல்லையா?  தற்சமயம் அவளுக்கு திருப்தி கொடுக்கறது முக்கியமா?  காலம்பூரா  வலியில்லாம  அவ  இருக்கணும்னு நெனைக்கறதுமுக்கியமான்னு அவனும் தடுமாறியிருப்பான்னுதான் தோணுது. "

அப்படி நெனைக்கற ஆளு ஆரம்பத்தில சாந்தலை சொல்லும்போதே கல்யாணமே வேணாம்னு சொல்லியிருக்கலாமே."

 "அப்படித்தான் செஞ்சிருக்கணும்.  ஆனா அவளுடைய  அழகு,  நாட்டியம் ரெண்டும் அவனை கட்டிப்போட்டிருக்கணும். பார்த்ததுமே அவதான் தனக்கு மனைவின்னு ஒரு  அழுத்தம், தீர்மானம்  மனசுல  விழுந்திருக்கணும்.  என்ன நிபந்தனையா இருந்தாலும் பேசி திருத்திடலாம்னு நெனச்சிருக்கலாம்."

"அவளை பேசி திருத்திடலாம்னு அவனுக்கு  நெனப்பு.   அவனை பேசி சம்மதிக்க வைக்கலாம்னு  அவளோட நெனப்பு.  கடைசில ரெண்டுமே நடக்கலையே.ஒருத்தவங்க பேசி இன்னொருத்தவங்களை கட்டுப்படுத்தவே முடியாது அமுதா.  பேசப்படற விஷயம்  சார்ந்து  ஒரொருத்தவங்க  மனசுலயும்  சில எண்ணங்கள்  இருக்கும். எது சரி  எது தப்புன்னு  அந்த எண்ணங்களோட  அடிப்படையிலதான்  யோசிக்கறாங்க.  ஒருத்தவங்க மூலமா  கேக்கற ஒரு வார்த்தையை அந்த எண்ணங்கள்தான் முதல்ல பரிசீலிக்குது.   அந்த  பரிசீலனையில சரின்னு முடிவு  வந்தா  எல்லாமே சரி. தப்புன்னு  முடிவு  வந்தா  சொன்னவரு  கடவுளாவே  இருந்தாலும்  ஏத்துக்க முடியாது. விஷ்ணுவர்த்தன் ஏத்துக்கமுடியாம தவிச்சது இதனாலதான். அதுக்குள்ள  சாந்தலை  தன்னாலதானே  இந்தக் கோணல்.   அதை நாமே எடுத்துரலாம்னு  தன்  உயிரை கொடுத்துட்டா."

"நட்பா  வாழ்க்கையாங்கற  இரட்டைப்புள்ளிகள்ல  நட்புதான் முக்கியங்கறது அவளுடைய முடிவு . தன் உயிரையே தி யாகமா  குடுத்து  தன் முடிவை ஸ்தாபிச்சிகிட்டா சாந்தலை.   ஆண்கள்  நட்புக்கும்  ஆண்- பெண் நட்புக்கும் ஏகப்பட்ட கதைங்க இருக்குது.   பெண்கள் நட்புக்கு இப்படி  சாந்தலை  மாதிரி ஒரு சில கதைங்கதான்இருக்குது. "

பேருந்து நிலையத்தை நோக்கி இருவரும் சிறிதுநேரம் பேசாமல் நடந்தோம். வழியில் கூடை நிறைய கனகாம்பரத்தை வைத்துக்கொண்டு வாங்கும்படிகேட்டுக்கொண்டாள் ஒரு பெண்.   நின்று மூன்று முழம் வாங்கி வைத்துக்கொண்டாள் அமுதா.   மெல்லமெல்ல   இருள் எங்கும் கவியத் தொடங்கியது.

 "அது சரி, இன்னும் சாந்தலையை நினைச்சிட்டிருக்கவங்க அவளுடைய நடனத்துக்காக நினைச்சிக்கிறாங்களா அல்லது தியாகத்துக்காக நினைச்சிக்கறாங்களா?"

திடீரென என்னைப் பார்த்துக் கேட்டாள் அமுதா.

"அது எப்படி, ஒன்ன ஒசத்தின்னு நெனச்சி இன்னொன்னை மறக்க முடியுமா? ரெண்டுக்கும் சேத்துத்தான் நெனச்சிக்குவாங்க"

அவள் பார்வை ஒருமுறை குன்றின் உச்சிவரை சென்று மீண்டது.

(விசை – பிப்ரவரி 2005)