நிறங்களுக்கும் மனித குணங்களுக்கும் இருக்கும் உறவை உணர்த்துவதுதான் ஓவியத்தின் பாலபாடம். முகங்களே இன்றி, வண்ணத்தீற்றல்களைமட்டுமே கொண்ட ஓவியங்கள்கூட மறைமுகமாக மனித குணங்களை, மானுட உணர்வுகளை, வாழ்வின் கோலங்களை உணர்த்துபவையாகவே உள்ளன. ஓவியங்களுக்குள் பல்வேறு முகங்கள் புதைந்திருப்பதுபோலவே ஓவியர்களுக்குள்ளும் பல்வேறு முகங்கள் புதைந்திருக்கின்றன. நட்பை விரும்பும் முகம். நட்பை நிராகரிக்கும் முகம். தன்னை முன்னிறுத்தி முன்னேற விழையும் வேட்கைமுகம். தன் முயற்சியின் முழுமைக்காக அல்லும்பகலும் பாடுபடும் முகம். விட்டல்ராவின் காலவெளி நாவல் ஓவியர்கள் தீட்டும் வண்ணமுகங்களையும் ஓவியர்களுக்குள் புதைந்திருக்கும் வண்ணமுகங்களையும் ஒரே நேரத்தில் ஒளியையும் நிழலையும் இணைத்த சித்திரம்போலக் காட்சியளிக்கும் மரத்தடி நிழலென ஓவியமாகத் தீட்டிவைத்திருக்கிறது. 1988 ஆம் ஆண்டில் எழுதி 1990 ஆம் ஆண்டில் முதல்பதிப்பாக வெளிவந்த இந்த நாவல் இப்போது இரண்டாவது பதிப்பாக வெளிவந்திருக்கிறது. ஏறத்தாழ கால்நூற்றாண்டு காலம் கடந்த நிலையிலும் இன்றைய சூழலுக்கும் ஏற்றதாகவே உள்ளது நாவல்.
Saturday, 26 November 2022
Sunday, 18 September 2022
சாயாவனம் - அழிவும் ஆக்கமும்
ஓர் இயந்திரம் மனித வாழ்வுக்குத் துணையானதா அல்லது எதிரானதா என்கிற கேள்விக்கு வரையறுக்கப்பட்ட விடையைக் கூறுவது எளிதல்ல. வெறும் கைகளால் மண்ணைத் தோண்டிக்கொண்டிருந்த ஆதிமனிதன், வலிமையும் கூர்மையும் பொருந்திய கல்லாலும் கட்டையாலும் வேகமாகவும் அதிகமாகவும் மண்ணை அகழ்ந்தெடுக்கமுடியும் என்பதைக் கண்டறிந்த கணத்தில் அவன் நிச்சயமாக ஆனந்தக் கூத்தாடியிருப்பான். முரட்டுத்தனமான அந்த ஆயுதங்களை மெல்ல உருமாற்றிஉருமாற்றி மண்வெட்டியாக வளர்த்தெடுத்தது அவனுடைய மாபெரும் சாதனை. அதன் தொழில்நுட்பம் மென்மேலும் செழுமைப்படுத்தப்பட்டு மின்சாரத்தால் இயக்கப்படும் மண்நீக்கியாக இன்று மாபெரும் உருவத்துடன் வடிவமைக்கப்பட்டதும் மானுடனின் மதிநுட்பமே. தோற்றத்தில் மண்வெட்டி ஒரு சின்ன ஆயுதமாக இருந்தாலும் அது மனிதக்கைகளின் நீட்சியாகவும் விரல்களாகவுமே வேலை செய்கிறது. அக்கணத்தில் அவனுக்கு அது அருந்துணை. நூறு மனிதர்களின் கைவிரல்கள் ஒரே சமயத்தில் இணைந்து வேலை செய்வதுபோன்ற வேகத்தைக்கொண்டது இயந்திர மண்நீக்கி. ஒருவகையில் நூறு மனிதர்களின் உழைப்பை அது தன்னந்தனியாக ஈடு செய்கிறது. தன் உழைப்புக்குப் பதிலியாக வந்து நிற்கிற ஓர் இயந்திர மண்நீக்கியை, உழைப்பையே நம்பியிருப்பவனின் பார்வையில் எதிரியாகக் காட்சியளிப்பது தவிர்க்கமுடியாத ஒன்று.