கோவில்பட்டியில் போலீஸ் வேலை பார்த்துக்கொண்டிருந்த ஒருவர் திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாக இறந்துவிடுகிறார். நடுவயதில் இறந்துவிட்ட அவருக்கு மூன்று பெண்குழந்தைகள், ஒரு ஆண்குழந்தை என நான்கு பிள்ளைகள். காந்தியடிகளின் மறைவுதினத்தின் பிறந்ததால், ஏதோ ஒரு விதத்தில் அவரை நினைவூட்டும் வகையில் இருக்கவேண்டும் என நினைத்து பாரததேவி என போலீஸ் அப்பாவால் பெயர்சூட்டப்பட்ட பெண்குழந்தையும் இவர்களில் ஒருவர். பிழைக்க வழியறியாத அக்குழந்தைகளின் தாய் தன் சொந்த ஊரான மீனாட்சிபுரத்துக்கு வந்துவிடுகிறார். அல்லும்பகலும் வயல்காட்டில் வேலை செய்து பிள்ளைகளைக் காப்பாற்றுகிறார். அம்மாவுக்குத் துணையாக பிள்ளைகளும் பள்ளிக்கூடம் போய்விட்டு வந்த நேரம் போக மற்ற நேரங்களில் மாடு மேய்க்கச் செல்கிறார்கள். புல்லறுத்துக்கொண்டு வருகிறார்கள். விறகு சேகரித்து எடுத்துவருகிறார்கள். காட்டுவழி நெடுக நின்றிருக்கும் மரம், செடி, கொடிகளில் பார்க்கும் காய்களையும் பழங்களையும் பறித்துத் தின்கிறார்கள்.
அந்த ஊர் பள்ளிக்கூடத்தில் ஐந்தாம் வகுப்புவரைக்கும் மட்டுமே இருந்ததால் பாரததேவியின் கல்வித்தகுதியும் அந்த அளவோடு நின்றுபோகிறது. தொடர்ந்து படிக்கவேண்டும் என்னும் அச்சிறுமியின் ஆசை அவளுடைய அம்மாவால்
பொருட்படுத்தப்படவே
இல்லை. அவருடைய பிடிவாத்ததின் முன்னால் யாருடைய வார்த்தையும் செல்லுபடியாகாது என்பதால், உற்றார் உறவினர்களாலும் அவரைக் கட்டாயப்படுத்த இயலாமல் போய்விடுகிறது. அதற்குப் பிறகு பாரத தேவிக்கு காடே கதியாகிவிடுகிறது. பதினேழு வயதில் சொந்தபந்தங்களிடையே மாப்பிள்ளையாகத் தேர்ந்தெடுக்க பலர் இருந்தபோதும், உறவுகளைக் கடந்து முற்றிலும் புதிய திசையில் சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்த ராசு என்னும் தொடக்கப்பள்ளி ஆசிரியரோடு திருமணம் செய்துவைக்கிறார் அவர் அம்மா. அந்தத் திருமணம் அவருடைய வாழ்வில் பெரிய திருப்புமுனை.
பதினேழு வயதுவரைக்குமான வாழ்க்கையின் கதையை பாரததேவி ’நிலாக்கள் தூரதூரமாக’ என்னும் தலைப்பில் ஒரு புதினமாக எழுதியுள்ளார். அவர் பிறந்த ஆண்டு 1948. அவருடைய பதினேழாவது வயது என்பது ஏறத்தாழ 1965. அவருடைய பால்யகால நினைவுகள் அவரை விளையாட்டுகளில் ஆர்வம் மிக்கவராகவும் காடுகளில் திரிவது, நீர்நிலைகளில் நீந்துவது, ஆடுமாடுகளோடு அலைவது என எதற்கும் தயங்காதவராகவும் காட்டுகின்றன. வயல் தொடர்பான எல்லா வேலைகளையும் அவர் உற்சாகத்தோடு செய்கிறார். அவர் முன்வைத்திருக்கும் நினைவுச்சித்திரங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான அனுபவத்தை வழங்குகிறது. சில நம் நெஞ்சில் ஆழமாகப் பதிந்து இரக்கத்தைத் தூண்டுகின்றன. சில ஆச்சரியம் கொள்ளவைக்கின்றன. சில துயரமளிக்கின்றன. சில மெளனத்தில் ஆழ்த்திவிடுகின்றன. பாரததேவி கடந்துவந்த வாழ்க்கையின் மேடுபள்ளங்களை ஒவ்வொரு சம்பவமும் ஒவ்வொரு கோணத்தில் சுட்டிக் காட்டுகிறது. தன் சொந்த வாழ்க்கைச்சம்பவங்களிடையே அவர் சித்தரிக்கும் பல தகவல்களும் சம்பவங்களும் ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் தமிழ்நாட்டுக்கிராமம் இயங்கியிருக்கும் விதத்தைப் புரிந்துகொள்ள மிகவும் உதவியாக இருக்கின்றன. கிராம மக்களின் நம்பிக்கைகள், உணவுமுறைகள், வழிபாட்டுமுறைகள், போட்டிகள், பொறாமைகள், துரோகங்கள், மோதல்கள் என அனைத்தையும் சின்னச்சின்னக் காட்சிகளாக புதினத்தின் பல்வேறு இடங்களில் இணைத்திருக்கிறார் பாரததேவி. வாசிப்புக்கு எவ்விதமான தடையும் ஏற்படாத வகையில் தன் சொந்த அனுபவங்களையும் கிராமத்து வாழ்வியல் அனுபவங்களையும் மாறிமாறி முன்வைத்து நெய்திருக்கும்
விதம் நாவலின் நம்பகத்தன்மையை அதிகரிக்கவைக்கிறது.
கி.ராஜநாராயணனைத் தொடர்ந்து நாட்டுப்புறக்கதைகளைச் சேகரித்துத் தொகுத்து வழங்கியதில் பாரததேவியின் பங்களிப்பு மகத்தானது. கதைகளைப் பதிவுசெய்யும் பழக்கத்தின் விளைவாக அவருக்கு அருமையானதொரு படைப்புமொழி கைவந்துவிட்டது. கள்ளிக்காட்டு காதல், எங்க ஊரு வாசம் என பல கதைத்தொகுதிகளை அவர் எழுதியுள்ளார். அவருடைய படைப்புகளிலேயே மிகமுக்கியமான படைப்பு தன்வரலாற்று நாவலாக அவர் எழுதியிருக்கும் ‘நிலாக்கள் தூரதூரமாக’ என்னும் படைப்பாகும். இப்புதினத்தில் வெளிப்பட்டிருக்கும் படைப்புமொழி பாரததேவியை முதல்வரிசைப் படைப்பாளிகளுக்கு நடுவில் கொண்டுவந்து நிறுத்தியுள்ளது.
சித்தப்பா பிள்ளைகள். மாமா பிள்ளைகள், அத்தை பிள்ளைகள், பள்ளியில் படித்துப் பழகிய பிள்ளைகள் என ஏராளமான சிறுவர்களையும் சிறுமியர்களையும் பற்றிய நினைவுகளை நாவல் முழுதும் அங்கங்கே குறிப்பிட்டிருக்கிறார் பாரததேவி. நேரம், பொழுது, காலம் வித்தியாசம் தெரியாமல் காடு கரையெங்கும் அலைந்தபடி இருக்கிறார்கள் அவர்கள். ஒருவர் வீட்டுக்குச் சென்று இன்னொருவர் உண்பதற்கோ, உறங்குவதற்கோ எந்தத் தடையுமில்லை. பகலில் கொக்கு பிடிக்கவும் குருவி பிடிக்கவும் உற்சாகமாகக் கதை பேசியபடி செல்வதையும் வயல்வெளிகளில் திருடித் தின்பதற்காக நள்ளிரவில் நிலா வெளிச்சத்தில் அவர்கள் வீட்டைவிட்டு வெளியேறிச் செல்வதையும் பற்றிய சித்தரிப்புகள் மிக அழகாக உள்ளன. நிலா வெளிச்சத்தில் அலைவது பாரததேவிக்கு மிகவும் பிடித்திருக்கிறது. சோளக்கதிர்க்கட்டுகளைச் சுமந்து வரும்போதும் மாம்பழங்களைத் திருடித் தின்ன கூட்டாளிகளோடு நடக்கும்போதும் வெளியூரிலிருந்து திரும்பி நடந்துவரும்போது பாதை மாறி நடக்கும்போதும் நிலா ஒரு வழிகாட்டிபோல வானத்தில் முன்னால் நகர்ந்தபடி அவரை அழைத்துச் செல்கிறது. நிலவின் கதிர் உடலைத் தீண்டும்போதெல்லாம் அவர் உள்ளம் ஓர் அரவணைப்பை உணர்கிறது. அவரைப் பொறுத்தவரையில் நிலா குளிர்ந்த ஒளியை மண்ணில் படரச் செய்யும் கோள் மட்டுமல்ல. தொட்டு ஆறுதல் சொல்லி, மனத்தையும் எண்ணங்களையும் குளிரவைத்து, கனவுகளை வளர்த்து, மகிழ்ச்சியில் திளைக்கவைக்கும் அன்புமிக்க அன்னை, தோழி, சகோதரி. தன் இருப்பின் வழியாக தொலைவிலும் தன் தீண்டலின் வழியாக அருகாமையிலுமாக இருவித இருப்பைக் கொண்ட நிலவினால் விளையும் மயக்கத்தில் வாழ்க்கையை இனிமைமயமாக்கும் ஆற்றல் மறைந்துள்ளது. பாரத தேவி எழுதியிருக்கும் ‘நிலாக்கள் தூரதூரமாக’ தமிழில் எழுதப்பட்ட மிகமுக்கியமான தன்வரலாற்று நூல்.
நாவல் முழுதும் எண்ணற்ற சின்ன வயதுக் குறும்புகள் சித்தரிப்புகளின் காணப்படுகின்றன. வயல்வெளிகளின் வேலியோரங்களில் வெள்ளாமை நேரங்களில் ஊனிவிடப்படுகிற பூசணி , பீர்க்கை, சுரை விதைகள் சில மாதங்களிலேயே வளர்ந்து காய்த்துக் குலுங்கத் தொடங்கிவிடும். காய்கள் பெரிதாகி வளர்ந்த பிறகு வீட்டில் இருக்கும் பெரியவர்கள் அவற்றைப் பிடுங்கிச் சென்று அக்கம்பக்கத்து ஊர்களில் அலைந்து விற்றுக் காசாக்கிக்கொண்டு வரும்படி தம் பிள்ளைகளிடம் சொல்வார்கள்.
தலைச்சுமையோடு
வெளியூர்களுக்கு
நடந்து செல்ல விரும்பாத பிள்ளைகள் பிடுங்கிய காய்களில் பெரும்பகுதியை புதருக்குள்ளும் மரத்தடியிலும் மறைத்துவைத்துவிட்டு ஒரு சிறு பகுதியை மட்டும் வீட்டுக்குக் கொண்டுவந்து கொடுப்பார்கள். அவற்றைப் பார்க்கும் பெற்றோர்களுக்கு கோபம்தான் வரும். ‘அன்று இவ்வளவு பார்த்தேனே, இன்று இவ்வளவு குறைதுவிட்டதே” என்று சங்கடப்படுவார்கள். இதை
விற்றால் என்ன பணம் கிடைத்துவிடப் போகிறது என மனம் சலித்துக்கொள்வார்கள். அந்த அற்பப்பணத்துக்காக கடைகள் வரைக்கும் காய்களைச் சுமந்து செல்ல பிள்ளைகளை அனுப்பவேண்டுமா என்று தமக்குள் ஒன்றிரண்டு முறை யோசிப்பார்கள். பிறகு மனம் மாறி ஒரு பகுதி காய்களை அக்கம்பக்கத்தில் வசிக்கும் உறவுக்காரர்களின் வீடுகளில் கொடுத்து சமையல் செய்து சாப்பிடும்படி சொல்லிவிடுவார்கள். இன்னொரு பகுதி காய்களை தொழுவத்தில் இருக்கும் கால்நடைகள் சாப்பிடுவதற்காக துண்டுதுண்டாக நறுக்கிக் கொடுத்துவிடுவார்கள். நல்ல பிள்ளைகள்போல, பெற்றோர்கள் சொன்னபடி நடந்துகொள்ளும் சிறுவர்கள் மறுநாள் காட்டுப்பக்கமாக மாடுகளை மேய்க்க ஓட்டிச் செல்லும்போது
மறைத்துவைத்திருக்கும்
காய்களையெல்லாம்
எடுத்து, அழகாக நறுக்கி மாடுகளுக்கே தின்னக்கொடுத்துவிட்டு, அவை
தின்னும் அழகை
வேடிக்கை பார்ப்பார்கள்.
அந்தக் காலத்தில் கிராமத்தில் பால் டிப்போ இல்லை. கன்றுக்குட்டிகளுக்கு நன்றாக பால் விடுவார்கள். எஞ்சிய பாலை காய்ச்சி உறை ஊற்றி தயிராக்கி விற்றுவிடுவார்கள். அப்படியும் எஞ்சிவிடும் தயிரில் மோர் கடைந்து வெண்ணெய், நெய் என எடுத்து விற்பார்கள். வீட்டிலும் எப்பொது வேண்டுமானாலும் எடுத்துக் குடிக்கும் வகையில் பானை நிறைய மோர் வைத்திருப்பார்கள். சோளச்சோறு, கம்மஞ்சோறுக்கெல்லாம் யாரும் வெஞ்சனம் தேடமாட்டார்கள். மோர் அல்லது பாலை ஊற்றிச் சாப்பிடுவார்கள். வெங்காயம், பச்சைமிளகாய், அச்சுவெல்லம், வாளைக்கருவாடு என வீட்டில் இருப்பதையே வெஞ்சனமாக வைத்துக்கொள்வார்கள்.
முதன்முதலாக ராஜபாளையத்திலிருந்து ஒருவர் பால் வாங்க வந்து பால் என்பது ஒரு விற்பனைப்பண்டம் என்பதை மீனாட்சிபுரத்தில் அறிமுகப்படுத்திவிட்டார். பணத்துக்கு ஆசைப்பட்ட குடும்பத்தினர் கன்றுக்குட்டிக்குக் கூட இல்லாமல் பாலை ஒட்டக் கறந்துகொள்ளும்படி பால்காரனுக்கு அனுமதி கொடுத்துவிடுகிறார்கள். அதனால் அன்றுவரை நன்றாக பால்குடித்து ஊட்டமாக துள்ளி விளையாடிக்கொண்டிருந்த கன்றுகள் எல்லாம் நடக்க சக்தியே இல்லாமல் சோர்ந்து படுத்துவிட்டன. வீட்டிலும் மோர், தயிர் என எதுவுமே இல்லாமல் போய்விட்டது. இதனால் மனம் வாடிய சிறுவர்கள் கூடி ஒரு திட்டம் போடுகிறார்கள். ஊர் உறங்கிய பிறகு ஒவ்வொரு மாட்டுத் தொழுவத்துக்கும் சென்று கன்றுகளை அவிழ்த்துவிட்டு வந்துவிடுகிறார்கள். அவை ஓட்டமாக ஓடி அன்னைப் பசுவிடம் பால் குடிக்கும் வேகத்தைப் பார்த்து ரசிக்கிறார்கள். ஆனால் கொலைப்பட்டினியாகக் கிடந்த சில கன்றுகள் ஒரே நேரத்தில் நிறைய பால் அருந்த முனைந்ததால் மூச்சுத் திணறி இறந்துபோய்விடுகின்றன. கன்றுகளை அவிழ்த்துவிட்ட சிறுவர்கள் நல்லது என நினைத்துச் செய்த செயல் இப்படி முடிந்துவிட்டதே என வருத்தத்தில்
மூழ்கிவிடுகிறார்கள். எதையோ நினைத்துச் செய்த குறும்பின் விளைவாக நேர்ந்த விபரீதங்கள் சிறுவர்களை ஊமைகளாக்கிவிடுகின்றன.
பிள்ளைகள் செய்த குறும்புகளிலேயே மிக உச்சமான குறும்பு மீனாட்சிப்பாட்டியிடம் அவர்கள் விளையாடிய நிகழ்ச்சியைத்தான் சொல்லவேண்டும். தொடக்கத்திலிருந்தே பிள்ளைகளுக்கு மீனாட்சிப்பாட்டி என்றாலேயே ஒரு கசப்பு. மீனாட்சிப்பாட்டிக்கும் இந்தப் பிள்ளைகள் வால்முளைக்காத குரங்குகளாக இருக்கிறார்களே என்று ஒரு எரிச்சல். கண்ணில் எதிர்ப்படும் நேரங்களிலெல்லாம் கரித்துக் கொட்டியபடியே இருப்பார். அவர் முன்னால் சிரிக்கக்கூடாது, நடக்கக்கூடாது, ஓடக்கூடாது. பேசக்கூடாது. ஒவ்வொன்றுக்கும் ஒரு வக்கணையான வசனத்தைச் சொல்லி விரட்டுவார். பிள்ளைகளும் சாதாரணமானவர்கள் இல்லை. வேண்டுமென்றே அவருக்கு முன்னால் சென்று வம்பு வாங்குவாகள். “சில்லுக்கருப்பட்டி சிதறிக் கிடக்கு அள்ளிப் போடு மீனாட்சி” என்று அவர் முன்னாலேயே நின்று பாட்டுப் பாடி ஆடுவார்கள். அந்தப் பாட்டி அவர்களை அடிப்பதற்காக எதிரில் கிடக்கும் கட்டையையோ கல்லையோ தூக்கிக்கொண்டு விரட்டுவார்.
ஒருநாள் அவர் இரவு உணவுக்காக களி கிண்டினார். அதை பிள்ளைகளும் மறைந்து நின்று பார்த்தார்கள். பாட்டி களியைக் கிண்டி முடித்ததும் அருகிலிருந்த அம்மியின் மீது அகப்பையால் அள்ளிப் போட்டு உருண்டையாக உருட்டி சற்று தள்ளிப் பின்புறத்தில் இருந்த சட்டிக்குள் போட்டார். அவர் ஒவ்வொன்றாக இப்படி உருட்டி உருட்டிப் போட இருட்டில் மெதுவாக முன்னேறிய பிள்ளைகள் ஒவ்வொன்றாக தூக்கிக்கொண்டு வந்துவிட்டார்கள். மொத்தம் ஐந்து உண்டைகள். ஐந்தாவது உண்டையைமட்டும் அங்கிருந்த ஒரு நாயை அழைத்து அதற்குப் போட்டுவிட்டு போய்விட்டார்கள்.
தெருவிளக்கின் வெளிச்சத்தில் நாய் களி தின்பதைப் பார்த்த யாரோ ஒரு வழிப்போக்கர் பாட்டியிடம் தெரிவிக்க, அந்தப் பாட்டி ஆத்திரம் தாங்காமல் சத்தம் போடத் தொடங்கினார். இரண்டொருவர் அந்த நாயை விரட்டிக்கொண்டு ஓடினார்கள். தெருவில் இருந்தவர்கள் எல்லோரும் சேர்ந்து பாட்டிக்கு ஆறுதல் சொன்னார்கள். மறுநாள் காலை, அந்தப் பிள்ளைகளை அருகில் அழைத்த பாட்டி “களியைத் தின்ன நாயை எப்படியாவது கண்டுபிடிச்சி புடிச்சாங்க. இல்லன்னா அது யார் வீட்டு நாய்னு பார்த்துட்டு வந்து சொல்லுங்க. அத எப்படியாவது கவுத்த கட்டி தூக்கனாத்தான் எனக்கு தூக்கம் வரும்” என்று சொன்னார். ”சரி பாட்டி” என்று அவர் முன்னால் நல்ல பிள்ளை மாதிரி தலையாட்டிவிட்டு வெகுதொலைவு வந்த பிறகு தமக்குள் பாட்டிமாதிரி பேசிச் சிரித்துச்சிரித்து மகிழ்ந்தார்கள்.
தன் அம்மாவுக்கு புத்தகத்தின் மீதும் படிப்பின் மீதும் இருந்த வெறுப்பைப்பற்றி பல இடங்களில் மீண்டும் மீண்டும் குறிப்பிட்டுள்ளார் பாரததேவி. சிறுமியாக அவர் படிப்பதை எங்கேனும் நேருக்கு நேர் பார்த்துவிட்டாலேயே அந்த அம்மாவின் நெஞ்சில் ஒரு வெறி மூண்டெழும், உடனே பாய்ந்து சென்று அந்தத் தாளைப் பிடுங்கி சுக்குநூறாகக் கிழித்து காற்றில் வீசிவிடுவார். அல்லது எங்காவது நெருப்பில் போட்டுச் சாம்பலாக்கிவிடுவார். படிப்பதைக் கண்டதுமே
அவருக்குள் ஒரு வெறுப்புணர்ச்சி நெருப்பென பற்றியெரியத் தொடங்கிவிடும். உடனே அவர் மனம் வெகுவேகமாக இயங்கத் தொடங்கி, சிறுமிக்கென ஒரு வேலையை உருவாக்கி ஏவிவிடுவார். அவருக்கு நேர்மாறான குணம் கொண்டவர் பாரததேவி. எங்கேனும் ஒரு துண்டுத்தாள் கிடைத்தால் கூட, அதன் சுருக்கத்தையெல்லாம் நீவிவிட்டு அலுக்கும் வரைக்கும் திரும்பித்திரும்பிப் படித்து மகிழும் பழக்கம் கொண்டவர்.
ஒருமுறை பட்டணத்தில் இருந்து வந்த சித்தப்பா வைத்திருந்த புத்தகத்தைப் படிப்பதற்காக கடன்பெற்று வீட்டுக்குக் கொண்டுவந்துவிட்டாள் சிறுமி. அம்மாவுக்குத் தெரியாமல் அடுக்குப் பானைக்குள் வைத்துவிட்டு படிப்பதற்கு நேரம் கிடைக்காமல் தவித்துக்கொண்டிருந்தாள். காலையிலும் நேரம் கிடைக்கவில்லை. மாலையிலும் நேரம் கிடைக்கவில்லை. இரவு உணவுக்குப் பிறகு எல்லோரும் உறங்கிய பிறகுதான் படிப்பதற்கு நேரம் கிடைக்கிறது. ஆனால் வீட்டுக்குள் விளக்கேற்ற முடியாத நிலை. வெளியே நடுத்தெருவில் ஏற்றப்பட்டிருக்கும் கல்விளக்கின் வெளிச்சம் வீட்டுச் சுவரைத் தாண்டி ஒரு சின்ன விரிசல் வழியாக கோடுபோல விழும். எல்லோரும் உறங்கிய பிறகு, அந்த வெளிச்சத்தில் புத்தகத்தை விரித்துவைத்துக்கொண்டு படித்துமுடிக்கிறாள். ஆனால் இந்த ரகசியத்திட்டத்தையும் அம்மாவின் கண்கள் எப்படியோ கண்டுபிடித்துவிடுகின்றன. உடனே அவர் புத்தகத்தைப் பிடுங்கி எரிந்துகொண்டிருக்கும் அடுப்பில் வீசி எறிந்துவிடுகிறார். அடுப்பு எரியாவிட்டால் அந்தப் புத்தகத்தை வைத்தே அடுப்பை மூட்டி சாம்பலாக்கிவிடுவார். எதற்கும் கண்கலங்காத சிறுமி புத்தகம் சாம்பலானதை நினைத்து கண் கலங்கியபடி வெளியே ஓடிவிடுகிறாள். அறுபது, எழுபது ஆண்டுகளுக்கு முன்பாக பெண்கல்வி பற்றிய பார்வை ஒரு விவசாயக் குடும்பத்தில் இப்படித்தான் இருந்திருக்கிறது. படிப்பது மட்டுமல்ல, பெண்கள் மேலாடை அணிவதற்குக் கூட அந்தக் காலத்தில்
தடை இருந்திருக்கிறது. படிக்கப் போகிற பெண்கள் ரவிக்கை போடுகிறார்கள் என்பதற்காகவே கல்வியும் வெறுக்கப்பட்டிருக்கிறது. புதினத்தில் இந்த அம்சங்களைக் கொண்ட சில காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன.
சோப்பு அறிமுகமில்லாத அந்தக் காலத்தில் கிராமத்துப் பெண்கள் கரம்பை மண்ணைக் குழைத்து உடல்முழுதும் தேய்த்துக் குளித்ததைப்பற்றிய செய்தியை ஓரிடத்தில் குறிப்பிடுகிறார் பாரததேவி. காட்டுவேலையில் ஈடுபட்டிருக்கும் பல பெண்களுக்கு பொதுவாகக் குளிக்கவே நேரமிருப்பதில்லை.
அதிகாலையிலேயே
எழுந்து, இரவில் சமைத்து மிச்சம் வைத்த உணவை இன்னொரு பாத்திரத்தில் கொட்டி எடுத்துக்கொண்டு, விதை தூவவோ, நாற்று நடவோ களையெடுக்கவோ வயல்வெளியை நோக்கி நடந்துபோகும் பெண்களுக்கு குளிப்பதைப்பற்றிய யோசனையே வருவதில்லை. ஏதேனும் நல்ல நாட்கள், கெட்ட நாட்கள் வரும்போதுதான் குளியல் அவசியமாகிவிடும். அப்போது அனைவருமே கரம்பை மண்ணைத் தேடுவார்கள். பெரியவர்களுக்காக கரம்பை மண்ணைத் தேடியெடுத்துக் கொடுக்கவேண்டியது சின்னப்பிள்ளைகளின் வேலை.
ஊரைத் தாண்டி வற்றிக் கிடக்கும் கால்வாயைத் தேடி சின்னப் பிள்ளைகள் செல்வார்கள். நீரில்லாத கால்வாய் கருப்படைந்து பாளம்பாளமாக வெடித்துக் கிடக்கும். பலகாரத்தட்டுபோல சின்னத் தகடுகளாக மேல்நோக்கி வளைந்து காணப்படும். அவற்றையெல்லாம் அலுங்காமல் குலுங்காமல் எடுத்து துணியில் வைத்து சின்னமூட்டையாகக் கட்டி எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வருவார்கள். பெரியவர்கள்
அவற்றை வீட்டிலிருக்கும் ஒரு பானைக்குள் பாதுகாப்பாக வைத்து ஆண்டு முழுக்க குளிப்பதற்காக பயன்படுத்திக்கொள்வார்கள்.
கடிகாரம், டார்ச்லைட் போன்ற பொருட்கள் முதன்முதலாகப் பயன்பாட்டுக்கு வந்த சமயத்தில் கிராமத்து மனிதர்கள் அவற்றை எதிர்கொண்ட விதம்பற்றிய பதிவுகள் சுவாரசியமானவை. கிராமத்துப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்ட ஒரு தம்பதியினர் நகரத்தில் வாழச் செல்கிறார்கள். மனைவிக்கு விஞ்ஞானப்பொருட்கள் பற்றி எந்த அறிமுகமும் இல்லை. கணவர் வீட்டில் அலாரம் அடிக்கும் ஒரு கடிகாரம் இருந்தது. அதைப்பற்றி எதுவும் சொல்லாமல் அவர் வேலைக்குச் சென்றுவிட்டார். சிறிது நேரம் கழித்த பிறகுதான் மனைவி அதைக் கவனித்தார். அதற்குள் பறவையின் கால்கள் போல இரு நீண்ட முட்கள் நகர்ந்துகொண்டே இருப்பதைப் பார்த்து அச்சம் கொண்டுவிட்டார். அவரால் அந்த முட்களிலிலிருந்து பார்வையை விலக்கிக்கொள்ளவே முடியவில்லை. அதற்கிடையில் அலாரம் ஒருமுறை அடித்து ஓய்ந்தது.
மனைவியின் அச்சம் மேலும் பெருகிவிட்டது. ஏதோ ஒரு பறவையை தன் கணவன் கொண்டுவந்து அடைத்துவைத்திருப்பதாகப் புரிந்துகொண்டார். அச்சமும் அழுகையுமாக வீட்டுக்கு வெளியே சென்று பக்கத்து வீட்டில் நின்றிருந்த பெண்மணியிடம் விஷயத்தைச் சொல்லி தீர்வு கேட்டார். பதில் சொல்ல விருப்பமில்லாத அந்த அம்மா பட்டும்படாமல் ஒருவேளை பசியாக இருக்கலாம், அரிசி இருந்தால் வையுங்கள் என்று சொல்லி அனுப்பிவிட்டாள். வீட்டுக்குத் திரும்பிய மனைவி, வேகவேகமாக பாத்திரத்திலிருந்த
அரிசியை எடுத்து கடிகாரத்தைச் சுற்றி வைத்துவிட்டு அந்த முட்களிடம் “சத்தம் போடாத, எடுத்துக்கோ” என்று மீண்டும் மீண்டும் சொன்னாள். அவள் சொல்வதைக் கிஞ்சித்தும் காதுகொடுத்துக் கேட்காத மனைவி அக்கடிகாரத்தை வெறுப்போடு பார்த்துவிட்டு அறையைப் பூட்டிக்கொண்டு வெளியே வந்து உட்கார்ந்துவிட்டாள். இப்படி ஒரு வாயில்லாத பிராணியை வாங்கிக்கொண்டு வந்து தன் கணவன் கொடுமைப்படுத்துகிறானே என நினைத்து வருந்தினாள். மாலை அலுவலகத்திலிருந்து திரும்பிய கணவனைக் கண்டதுமே கட்டுப்படுத்த முடியாத கண்ணீரோடு ஓவென்று சொல்லி அழுதாள். அவளை அமைதிப்படுத்திய கணவன் அவளுக்கு அது பறவையல்ல என்றும் கடிகாரம் என்றும் சொல்லிப் புரியவைத்தான்.
டார்ச் லைட் பற்றிய சித்தரிப்புகூட இதுபோலவே விசித்திரமானது. காட்டைநோக்கிச் சென்ற ஒரு பெரியவரிடம் ஊரிலிருந்து வந்திருந்த ஒருவன் தன்னிடமிருந்த டார்ச் லைட்டை எடுத்து எரியவைத்துக்கொடுத்தான். அதிலிருந்து பொங்கிவரும் வெளிச்சத்தைப் பார்த்து அதிசயப்பட்ட பெரியவர் அதைப் பெற்றுக்கொண்டு காட்டுக்குள் போனார். தன்னுடைய இடத்துக்குச் சென்று சேர்ந்ததும் விளக்கை நிறுத்திவிடலாம் என நினைத்து உதடு குவித்து ஊதி ஊதிப் பார்த்தார். அது அணையவில்லை என்பதை உணர்ந்ததும் அவருக்குச் சங்கடமாகப் போய்விட்டது. ஊதி ஊதி அவருக்கு வயிற்றுவலியே வந்துவிட்டது. அப்படியே தூங்கிவிட்டார். மறுநாள் எழுந்து பார்த்தபோது விளக்கு மின்னாற்றல் தீர்ந்துபோனதால் நின்றுபோயிருந்தது. பெரியவர் அது தான் ஊதும்போதெல்லாம் அணையாமல் பிறகு தன் போக்கில் அணைந்து போய்விட்டதை நினைத்து வருத்தம் கொண்டார். ஊருக்குத் திரும்பி வரும் வழியில் டார்ச் லைட் கொடுத்த தம்பியைப் பார்த்து விவரங்களை எடுத்துச் சொன்னார். பிறகு அந்தத் தம்பி ஒவ்வொரு விவரமாக எடுத்துச் சொல்லி அந்த விளக்கு
செயல்படும் விதத்தைப்
புரியவைத்தார்.
இது தன்வரலாற்றுப் புதினம் என்றபோதும் எல்லா இடங்களிலும் தன்னையே முன்வைத்துவிடாமல் பாரத்தேவி தன் கூட்டாளிகளாக வாழ்ந்தவர்களைப்பற்றியும் தன்னைச் சுற்றி வாழ்ந்த
மனிதர்களைப்பற்றியும்
ஊருக்கு வந்துபோன பரதேசிகள், பிச்சைக்காரர்கள், வியாபாரிகள், மனம் பிறழ்ந்தவர்கள், காமத்தால் வாழ்க்கையைத் தொலைத்தவர்கள், இல்லறத்தின் சமநிலையைக் குலைத்தவர்கள் என ஏராளமான மனிதர்களைப்பற்றியும் நாவல் முழுக்க பற்பல சித்திரங்களையும் முன்வைத்திருக்கிறார். இத்தகு குறுஞ்சித்திரங்களின் தொகுப்பின் வழியாக இந்த நாவலுக்குக் கிட்டியிருக்கும் கலைவெற்றி மிகமுக்கியமானது. ஒரு பெண்ணின் வாழ்க்கையை மட்டுமின்றி இந்த மண்ணின் வாழ்க்கையையும் உய்த்துணரும்வகையில் கட்டமைக்கப்பட்டிருக்கும் இந்த நாவல் தமிழ் வாசகர்கள் ஒவ்வொருவரும் தேடிப் படிக்கவேண்டிய முக்கியமானதொரு படைப்பாகும்.