’பொன்செய் உலைக்களம்’ என்பது தங்கப்பாவின் பாடலொன்றில் இடம்பெறக்கூடிய சொல். அவர் உருவாக்கிய மிகச்சிறந்த சொல்லிணைவுகளில் ஒன்று. அவருடைய ஒட்டுமொத்தமான பாடல்களின் உலகத்திலிருந்து இத்தகு நூறு சொல்லிணைவுகளை நம்மால் தொகுத்துக்கொள்ள முடியும். அந்த அளவுக்கு சொற்கள்மீது ஆர்வமும் காதலும் கட்டுப்பாடும் கொண்டவர் தங்கப்பா. செம்புலப்பெயல்நீர், மீனெறி தூண்டில், அணிலாடு முன்றில், குப்பைக்கோழி போன்ற சங்ககாலப் பாடல்களில் இடம்பெற்றிருக்கும் எண்ணற்ற சொல்லிணைவுகளை நினைவூட்டும் வகையில் தங்கப்பா உருவாக்கியிருக்கும் சொல்லிணைவுகள் அமைந்துள்ளன. ஒருவகையில் சங்கப்பாடல்களின் தொடர்ச்சியாக அவர் நம்மிடையே வாழ்ந்தார்.
அவர் என் ஆசிரியர். 1975 முதல் 1978 வரை நான் அவரிடம் பயின்றேன். 1934இல் பிறந்த தங்கப்பா அந்தக் காலகட்டத்திலேயே தன்னுடைய மிகச்சிறந்த பாடல்களை எழுதிவிட்டார். அவர் கவிதை என்னும் சொல்லை விரும்புவதில்லை. பாடல் என்ற சொல்லையே இறுதிவரைக்கும் பயன்படுத்தி வந்தார். அவரை அழைப்பவர்களும் பாவலர் என்றே அழைத்துவந்தார்கள்.
வாழ்க்கையை இரண்டாகப் பகுத்துப் பார்க்கும் பார்வையை தங்கப்பா தன்னுடைய ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார். ஒன்று உரைநடை வாழ்க்கை. இன்னொன்று பாட்டு வாழ்க்கை. உரைநடை வாழ்க்கை சலிப்பு மிகுந்தது. தினசரித் தேவைகளைப்பற்றிய கவலைகளை மனம் முழுக்க நிரப்பிக்கொண்டு ஓடிக்கொண்டே இருப்பது. உலகியல் வெற்றிகளைப்பற்றிய உச்சப்புள்ளிகளை வகுத்துக்கொண்டு, அதை நோக்கி அடி அடியாக ஒவ்வொரு நாளும் முன்னேறிக்கொண்டே இருப்பது. ஒவ்வொரு நாளும் முன்னேற்றம், அதற்கான திட்டம் என கனவுகளால் நிறைத்துக்கொண்டிருப்பது. அதற்கு நேர்மாறாக பாட்டு வாழ்க்கை இயற்கை இன்பத்தை நாடும் வாழ்க்கை. நம்மைச் சுற்றியுள்ள வானையும் மண்ணையும் செடிகொடிமரங்களையும் ஆர்வத்தோடு பார்த்துச் சுவைக்கும் வாழ்க்கை. கனவுகளாலும் கற்பனைகளாலும் நிறைந்த வாழ்க்கை.
பாட்டு என்றதுமே கற்பனை என்னும் சொல் தானாக வந்து விழுவதைக் கவனிக்கவேண்டும். பாட்டை எழுதுகிறவர், அதைப் படிக்கிறவர் இருவருக்குமே கற்பனை ஓர் அடிப்படைத் தேவையாக உள்ளது. பித்தூறிய மனத்தில் ஊற்றெடுக்கின்றன சொற்கள். ஆற்றில் புரண்டோடிவரும் வெள்ளமென பாவலனின் கற்பனை பாய்ந்தோடி வருகிறது. கற்பனையும் சொற்களும் இணைந்து பாடல் உருக்கொள்கின்றது. பாட்டு எப்போதும் ஒரு காட்சியை முன்வைக்கிறது. அதைப் படிக்கும் வாசகன் அந்தக் காட்சியை உள்வாங்கிக்கொள்கிறான். அதைத் தன் கற்பனையால் பெருக்கி விரித்தெடுத்து அதில் மனம் தோய்கிறான். வாசகனின் கற்பனை ஒரு காட்சியை ஓராயிரம் காட்சிகளாக மாற்றிக்கொள்ளும் ஆற்றல் கொண்டது.
ஒரு மிகச்சிறந்த பாடல் என்பது பித்து, கற்பனை, காட்சிகள், சொற்கள் அனைத்தும் உச்சம் பெற்ற படைப்பாக இருக்கும் என்பதை ஓர் எளிய வரையறையாக வகுத்துக்கொள்ளலாம். எடுத்துக்காட்டாக அள்ளூர் நன்முல்லையாரின் குறுந்தொகைப்பாட்டைப் பார்க்கலாம்.
குக்கூ என்றது கோழி: அதனெதிர்
துட்கென்றன்று என் தூஉ நெஞ்சம்
தோள்தோய் காதலர்ப் பிரிக்கும்
வாள்போல் வைகறை வந்தன்றால் எனவே
’வாள்போல் வைகறை’ என்னும் சொல்லாட்சியில் உள்ள கூர்மையைக் கவனிக்கும்போது அதில் அடங்கியிருக்கும் பித்தை உணரலாம். உறையிலிருந்து உருவியெடுக்கப்படும் வாளென பிரகாசம் மிகுந்த ஒரு கோடாக ஒளி பரவி கதிர் எழ இருக்கும் தயார்நிலையை கவிதை காட்சியாக மாற்றுகிறது. ஒரு படையின் புறப்பாடுபோல கதிரவனின் புறப்பாடு குறிப்பாலேயே சொல்லப்படுகிறது. அதைக் காணும் இளம்பெண் பதற்றம் கொள்கிறாள். அவள் காதல் பித்து பலமடங்காகப் பெருகி அவளை அலைக்கழிக்கிறது. கோழியின் கூவலால் முதல் அதிர்ச்சி. வைகறையின் தோற்றத்தால் அடுத்த அதிர்ச்சி. அனைத்தும் அவளை பித்தின் உச்சத்துக்கே கொண்டுசெல்கிறது.
ஒருவர் தோளை ஒருவர் பற்றி உறங்கும் இடம் மஞ்சத்திலா, தோட்டத்திலா, பூப்பந்தலுக்கு அடியிலா, புல்தரையிலா, வயலோரமா என எந்தக் குறிப்பும் இல்லை. அவனோ அல்லது அவளோ வரச்சொல்லி சந்தித்துக்கொண்ட இடம். அவ்வளவுதான்.
இந்தப் பாட்டை சுதந்திரமான வாசிப்புக்குத் தோதான வகையில் நமது காலத்துத் தமிழில் இப்படி எழுதிப் பார்க்கலாம்.
குக்கூ என்று கோழி கூவியது
அதைக் கேட்டு என் நெஞ்சம் அதிர்ந்தது
வெட்டித் துண்டாக்கும் வாள்நுனிபோல
வைகறைச் சூரியன் வருகிறான்.
ஒரு பாட்டைப் புரிந்துகொள்வதற்கு இப்படி துண்டுதுண்டான வரிகளாக மாற்றி எழுதிப் பார்ப்பது ஒரு முக்கியமான முயற்சி. கவிதை ரசனையில் இது ஒரு இன்றியமையாத பயிற்சி. இந்த வரிகளை மீண்டும் மீண்டும் படிக்கும்போது நம்மையறியாமல் நாம் ஒரு நடுக்கத்தை உணரமுடியும். வெட்டித் துண்டாக்கும் என்ற சொல்லை நம்மால் அவ்வளவு எளிதாகக் கடந்துபோய்விடமுடியாது.
இந்தக் குறுந்தொகைப்பாடல் மருதத்திணையில் இடம்பெற்றிருக்கும் பாடல். வயலும் வயல்சார்ந்த இடமும் கொண்டது மருதநிலம். சமநிலத்தில் விவசாயம் செய்து குடிகள் வாழ்ந்துவரும் இடம். நிலத்தோடு பிணைப்பு கொண்டவர்கள். நிலப்பற்று குடிப்பற்றை மேலும் மேலும் கெட்டிப்படுத்தும் ஆற்றல் மிக்கது. குடிப்பற்று சொந்தக் குடிகளுக்கிடையே நெருக்கத்தையும் மாற்றுக்குடிகளுக்கிடையே நெருங்கிவிடாத பகையுணர்ச்சியையும் ஒரே சமயத்தில் கொண்டிருக்கும். சொல் மட்டுமன்றி வாளும் கட்டுப்பாட்டை மீறிப் பாயும் களம் மருதம். மனிதர்களை வெட்டிக்கொல்வது இயல்பாக உள்ள ஒரு சமூகத்தில்தான் எடுத்த எடுப்பில் அது உவமையாக மாறும் அளவுக்கு மனத்தில் பதியக்கூடிய வாய்ப்புள்ளது. இன்றைய நாகரிக வாழ்க்கையில் நடைபெறும் ஆணவக்கொலையின் ஆதிவடிவமாக ’வெட்டிக்கொல்லும்’ சம்பவம் இருக்கக்கூடும் இரண்டாயிரம் ஆண்டுகள் கழித்து ஒரு பழைய உயிலைக் கண்டெடுத்து வாசிப்பதுபோல இருக்கிறது. ஒரு வாசகனாக இந்த உண்மையைத் தொட்டுணர்ந்ததை நான் மகிழ்ச்சியாகவே உணர்கிறேன். வரிகள் உரைப்பதை அல்லது சுட்டிக்காட்டுவதை மட்டுமன்றி, சொல்லாமல் விட்டதையும் எட்டித் தொடுவது ஒரு வாசிப்புமுறை.
பித்து, கற்பனை, காட்சிகள், சொற்கள் அனைத்தும் சங்கப்பாடல்களில் மிக இயல்பாக அமைந்திருக்கின்றன. நன்முல்லையாரின் பாட்டைப்போல ஒவ்வொரு
பாட்டையும் இப்படிப் பகுத்தும் வகுத்தும் புரிந்துகொள்ள முயற்சி செய்யலாம்.
சங்ககாலத்தைத் தொடர்ந்து நாம் காப்பியங்களின் காலத்தை
வந்தடைகிறோம். உடனடியாக நமது கவனத்துக்கு வருவது சிலப்பதிகாரத்தின் கானல்வரிப்பாடல்.
திங்கள் மாலை
வெண்குடையான்
சென்னி செங்கோல்
அதுவோச்சி
கங்கை தன்னைப்
புணர்ந்தாலும்
புலவாய் வாழி
காவேரி
கங்கை தன்னைப்
புணர்ந்தாலும்
புலவாதொழிதல்
கயற்கண்ணாய்
மங்கை மாதர்
பெருங்கற்பென்று
அறிந்தேன்
வாழி காவேரி
காதல் பித்தேறிய
மாதவியும் கோவலனும் காவிரியின் கரையோரம் அமர்ந்து பேசியிருக்கும் தருணத்தில் அந்த மாலை
நேரத்து மயக்கமூட்டிய எழுச்சியில் பாடத் தொடங்கும் மாதவி பாடுவதுபோல அமைந்துள்ள பாடல்
இது.
வற்றாத பித்து. வளமான கற்பனை. செறிவான காட்சி. இனிமையான சொற்கள் என ஒரு பாடலுக்குத்
தேவையான அனைத்தும் கச்சிதமாகப் பொருந்தியிருப்பதை உணரமுடியும். ஒரு சுதந்திர வாசகனாக இளங்கோவடிகள் எழுதியிருக்கும் இவ்வரிகளைத் துணையாகக்
கொண்டு எழுத்தில் இல்லாத இன்னொரு இடத்துக்கு என்னால் சென்று சேரமுடிந்திருக்கிறது. மாதவியும் கோவலனும் காவிரிக்கரையோரம்
உட்கார்ந்திருக்கிறார்கள். மாதவி காவிரியில் கரைபுரண்டோடும் தண்ணீரின் அழகையும் நுரைத்துப்போகும் அலைகளின்
அழகையும் பார்த்து மன எழுச்சியுற்று பாட்டிசைக்கிறாள். அந்தப்
பாட்டைக் கேட்கும் கோவலன் மாதவியின் மனம் திரிந்துவிட்டதாக நினைத்துத் தடுமாற்றம் கொள்கிறான்.
பிறகு குழப்பத்தோடு பிரிந்துசெல்கிறான். இவை அனைத்தும்
பின்னால் நிகழவிருக்கும் காட்சிகள். ஆனால் இளங்கோவடிகள் காவிரிக்கரையிலிருந்து
பாடலைத் தொடங்கும் கணத்திலேயே இவையனைத்தையும் ஒரு வாசகனால் நுட்பமாக உணர்ந்துவிட முடியும்.
கண்முன்னால் ஓடும் ஆற்றின் ஓட்டம் ஒருவகையில் அதைக் காண்கின்ற மானுடனின்
மனவோட்டத்துக்கு நிகரானது. இக்கணம் நாம் பார்க்கும் நீரும் அலையும்
வேறு. கடந்த கணத்தில் பார்த்த நீரும் அலையும் வேறு. நீர் ஒருபோதும் நிலைத்திருப்பதில்லை.
நிலையான எண்ணங்களிலிருந்து
திரிபடைந்து குழம்பிவிட்ட கோவலனையே அந்தக் காவிரியின் சித்தரிப்பு
வழியாக பார்க்கவைத்துவிடுகிறார் இளங்கோவடிகள். சங்கப்பாடலும்
காப்பிய காலத்துப் பாடலும் காலத்தால் வேறுபட்டவையே தவிர கட்டமைப்பிலும் தரத்திலும்
ஒரே விதமாகவே அமைந்துள்ளன.
காப்பிய காலத்தைத் தொடர்ந்து நாம் பக்தியிலக்கியத்தின் காலத்தை வந்தடைகிறோம். திருவாசகமும்
நாலாயிரத்திவ்விய பிரபந்தமும் பாடல் சுரங்கங்களாக நம் முன்னால் அமைந்துள்ளன.
எடுத்துக்காட்டுக்காக தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் ஒரே ஒரு பாடலை மட்டும்
இங்கே குறிப்பிடுகிறேன்.
ஊரிலேன் காணியில்லை
உறவுமற்றொருவர்
இல்லை
பாரில்நின்
பாதமூலம்
பற்றிலேன்
பரமமூர்த்தி
காரொளி வண்ணனே
என்
கண்ணனே கதறுகின்றேன்
ஆருளர் களைகன்
அம்மா
அரங்கமா நகருளானே
மனத்தை உருக்கும்
சொற்கள். நேரடியாகவே ஆதரவற்ற தன் கோலத்தை முன்வைத்து தஞ்சம் தேடும் சொற்கள்.
இந்தப் பாடலிலும் ஒரு நுட்பமான வாசகனின் கண்களுக்குத் தென்படும் அழகான
விவரணையொன்று உள்ளது. ஒருவனுக்கு பிறப்பால் இந்த உலகில் கிடைக்கக்கூடியது
முதல் அடையாளம். வாழும் ஊர் வழங்கக்கூடியது இரண்டாவது அடையாளம்.
குருதிவழியில் பெருகிச் சூழும் உறவுகளின் நெருக்கத்தால் கிடைக்கக்கூடியது
மூன்றாவது அடையாளம். தன் அறிவாலும் ஆற்றலாலும் அவனே இவ்வாழ்வில் தேடியடையும் தகுதியால் கிடைக்கக்கூடியது
நான்காவது அடையாளம். விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்த
நான்கு அடையாளங்களும் ஒருவனைக் கவசங்களாகத் தாங்கி நிற்கின்றன. ஆபத்தான நேரத்தில் ஒருவ்னுக்கு அரணாக வந்து நிற்கவேண்டியது குடும்பத்தின் கடமை.
ஒருவேளை அதற்கு வழியில்லையென்றால் உறவு காக்கவேண்டும். அவர்களாலும் அவன் துறக்கப்பட்டால்
ஊர் காக்கவேண்டும். அனைத்தாலும் துறக்கப்பட்டவனை
அவனுடைய தகுதி காக்கவேண்டும். ஆதரவற்றவன் என்னும் இடத்தில் இந்த
உலகம் ஒருவனைத் தள்ளிவிட்டுப் போகும் அளவுக்கு கருணையற்றதாக இன்னும் மாறவில்லை.
ஆதரவற்றவன் என ஒருவன் தன்னை அறிவித்துக்கொள்ளும் முன்பு இந்த நான்கு
அடையாளங்களையும் அவன் துறக்கவேண்டும். அப்படித் துறந்தவனே துறவி.
தெய்வத்தின் பாதமே அவனுக்கு அடைக்கலம். தொண்டரடிப்பொடியாழ்வாரின்
குரலில் தொனிக்கும் வேண்டுகோளை இந்தச் சுதந்திரமான எண்ண ஓட்டத்தின் வழியாகப் புரிந்துகொள்ள
முடியும்.
இரண்டாயிரம்
ஆண்டுகளாக தமிழின் பாடல்மரபு இப்படித்தான் இயங்கி வருகிறது. பாரதியார்
ஒரு பாட்டை இப்படித் தொடங்குகிறார்.
தீர்த்தக்
கரையினிலே- தெற்கு மூலையில்
செண்பகத் தோட்டத்திலே
பார்த்திருந்தால்
வருவேன் – வெண்ணிலாவிலே
பாங்கியோடென்று
சொன்னாய்
வார்த்தை தவறிவிட்டாய் – அடி
கண்ணம்மா
மார்பு துடிக்குதடி
பார்த்த இடத்திலெல்லாம் – உன்னைப்போல்
பாவை தெரியுதடீ.
‘கன்றும்
உண்ணாது கலத்தினும் படாது’ என்று பாடிய வெள்ளிவீதியாரின் வரிகளிலும்
‘முட்டுவேன்கொல் மோதுவேன்கொல்’ என்று பாடிய ஒளவையாரின்
வரிகளிலும் தொனித்த அதே ஆற்றாமை. அதே வேதனை. அதே வலி. மார்பு துடிக்குதடி என்னும் சொல் படிப்பவர்களின்
மார்பைத் துடிக்கவைக்கிறது. ஒரு பைத்தியம்போல பார்வை படும் இடங்களிலெல்லாம்
அவளுடைய நிழலுருவத்தைக் கண்டுகண்டு மனம்நொந்து சுருங்கும் சித்திரத்தை நம்மால் பெற்றுக்கொள்ள
முடிகிறது. ‘எங்கு நின்றுகொண்டு இவனை இப்படி அவள் அலைக்கழிக்கிறாள்’
என வாசிப்பவர்கள் அனைவரையும் வேதனைக்கு ஆளாக்கி கண்ணம்மாவைத் தேடுகிறவர்களாக
மாறிவிடுகிறார்கள். பிறகொரு கட்டத்தில் தன் கண்ணம்மாவைத் தொலைத்துவிட்டுத்
தேடுகிறவர்களுக்கும் காத்திருப்பவர்களுக்கும் இந்தப் பாடல் தோன்றாத்துணையாக மாறிவிடுகிறது.
மரபுப்பாடலின்
தேக்கம் கிட்டத்தட்ட பாரதியாரின் காலகட்டத்திலேயே உருவாகிவிட்டது. பாட்டின்
சட்டகத்தில் பொருத்தப்பட்ட சொற்களையெல்லாம் பாடல் என நம்பிய கவிராயர்கள் மரபுப்பாடல்
வடிவத்தை படாதபாடு படுத்திவிட்டார்கள். பாடலுக்கு உயிர் என நம்பிய
பித்து, கற்பனை, காட்சி அனைத்தும் பறந்துபோக,
இலக்கண வடிவத்தில் நிரப்பப்பட்ட சொற்கூட்டத்தைப் பாடலென முன்வைப்பவர்கள்
வந்துவிட்டார்கள். மரபுப்பாடல் மதிப்பிழந்துபோனதற்கு இது முதன்மைக்
காரணம்.
இருபதாம் நூற்றாண்டுக்கு
முன்னால் மரபுப்பாடல்களின் மதிப்பு எப்போதும் தன் உச்சத்தில் மட்டுமே இருந்ததா என்றொரு
கேள்வி எழுந்தால், இருந்திருக்க வாய்ப்பில்லை என்றுதான் விடைசொல்லவேண்டும்.
உலகில் ஒரு பொருளுக்கான மதிப்பு திரண்டுவரும் நேரத்திலேயே அதைப் போலிசெய்து
முன்வைக்கும் முயற்சிகளும் சமூகத்தில் உருவாகவே செய்யும். அவற்றை
முன்வைத்து உயர்ந்தவை எனப் பேசுகிற ஒரு கூட்டம் இருந்திருக்கவே வாய்ப்புண்டு.
உண்மை போலிகளோடு மோதியே தன்னை நிறுவவேண்டிய சூழல் ஒவ்வொரு கட்டத்திலும்
இருந்திருக்க வேண்டும். பாடல் உருவாக்கத்துக்கான மாற்று வழிமுறைகள்
இல்லாத தருணத்தில் இது தவிர்க்கமுடியாத ஒன்று.
ஆங்கிலேயர்
வருகையை ஒட்டி நம் நாட்டில் ஆங்கிலம் வேரூன்றத் தொடங்கியது. நம்
மக்களும் ஆங்கிலம் படிக்கத் தொடங்கினர். வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளவும்
வளம்பெறவும் ஆங்கில அறிவு அவர்களுக்குப் பயனுள்ளதாக இருந்தது. ஆங்கிலம் வழியாக உலகெங்கும் இலக்கியம் இயங்கும் விதங்களைப்பற்றிய அறிவும் தெளிவும்
நம்மை வந்தடைந்தன. ஆங்கிலம் கைப்பழக்கமான சில ஆண்டுகளிலேயே இந்திய
எழுத்தாளர் தாகூருக்கு நோபெல் பரிசுக்குரியவராக தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார்.
உலகக்கவிதைகளில் உருவான வடிவமாற்றம் தமிழ்க்கவிதைகளிலும் நிகழ்ந்தது.
பாரதியார் வாழ்ந்த காலம் ஒரு திருப்புமுனைக்காலம். மரபுப்பாடல்களில் தேர்ச்சிமிக்க பாரதியார் வசனகவிதைகளை எழுதி ஒரு புதுமரபுக்கு
வித்திட்டார். மரபுப்பாடலுக்குக் கவசமாக இருந்த இலக்கண வடிவம்
மெல்ல உதிரத் தொடங்கியது.
தொடக்கத்தில்
யாப்புவடிவத்தில் பாடல்களை எழுதிய ந.பிச்சமூர்த்திக்கு இந்தப் புதிய வசனகவிதை வடிவமே
தனக்கு உகந்த வழியெனக் கண்டுணர்ந்து அந்த வடிவத்தில் எழுதத் தொடங்கினார். ‘கிளிக்கூண்டு’, பெட்டிக்கடை நாராயணன் போன்ற அழகான சித்தரிப்புக்கவிதைகள்
வெளிவரத் தொடங்கின. முப்பதுகளிலும் நாற்பதுகளிலும் புதுப்பாடலின்
வடிவம் மெல்ல மெல்ல வரவேற்கப்பட்டு, பல புதிய பாவலர்கள் எழுதத்
தொடங்கினார்கள். எழும் மாற்றத்தினை உள்வாங்கி அறிந்துகொள்ளும்
விழைவில்லாத மரபுப்பாவலர்களின் முயற்சிகள் மதிப்பற்றுச் சரிந்தன.
மரபுப்பாடல்கள்
மீது படிந்து அழுத்திக்கொண்டிருந்த பண்டித்தனத்தை அகற்றி அவை வேர்பிடித்து நின்று இலைவிரித்து, கிளைவிரித்து,
அரும்பி மலர்வதற்குத் தேவையான ஆற்றலை வழங்கியவர் தங்கப்பா.
1934இல் பிறந்த தங்கப்பா தானாகவே ஏற்றுக்கொண்ட பணி இது. ஆங்கிலத்திலும் தமிழிலும் நல்ல தேர்ச்சிமிக்க தங்கப்பா புதிய வடிவத்தை நோக்கிச்
செல்வதே அவருடைய காலகட்டத்துக்கும் அவருக்கு இயற்கையாகவே அமைந்திருந்த தகுதிக்கும்
பொருத்தமான ஒன்றாக இருந்திருக்கும்.
மாறாக, மரபிலக்கிய வழியின் மீது அவர் கொண்டிருந்த
அளவற்ற பற்று அதை மேலும் மேலும் வளர்த்தெடுத்துச் செழுமைப்படுத்தவேண்டும் என்னும் கனவை
அவருக்குள் ஊட்டியது. மரபுப்பாடல்களின் வழி முற்றிலும் அடைபட்டுப்
போகவில்லை என்பதை தம் பாடல்கள் வழியாக இந்த மண்ணுக்கு உணர்த்துவதையே அவர் தம் வாழ்நாள்
பணியாகக் கொண்டார். காலத்துக்கேற்றபடி மரபுப்பாடல்கள் புதுப்பிக்கப்படவேண்டியவையே
அன்றி, ஒருபோதும் வீசியெறியத்தக்கவை அல்ல என்பது அவர் நம்பிக்கையாக
இருந்தது. தங்கப்பாவே தன் ’உயிர்ப்பின்
அதிர்வுகள்’ தொகுதியின் பின்னுரையில் இப்படிக் குறிப்பிட்டிருக்கிறார்.
‘இனிதுமன்
அவர் இருக்கை’ என்னும் தலைப்பில் தங்கப்பா எழுதிய ஒரு பாடலைப்
பார்க்கலாம்.
வெயர்விளை
வெய்தூண் மிசைந்த கேள்வன்
அயர்வறக் கிடந்த
அணிசுமை சேக்கை
மகன்தாய் பொருந்தினள்ஆக, மகன்கண்டு
மூவுருள் மிதிசகடு
ஊர்தல் நீங்கித்
தாவிப் பாய்ந்து
கட்டில் ஏறி
ஈருடல் விலக்கி
நடுவிடைப் புக்குப்
பூங்கை இருவர்
கழுத்தொடும் வளைஇ
மாறிமாறி இருமுகம்
முத்தி
மூரல் இளநகை
பிலிற்றினன் இனிதே
இனிதுமன் அவர்
இருக்கை
துனிகூர் உலகின்
பெறலருங்குரைத்தே
குறுந்தொகையிலோ, ஐங்குறுநூற்றிலோ
இடம்பெறத்தக்க அமைப்பில் இந்தப் பாடல் இருப்பதைக் காணலாம். ஒரு
திணையின் பெயரும் துறையின் பெயரும் இருந்தால் அதைத் தாராளமாக சங்கப்பாடலின் கணக்கில்
சேர்த்துவிடலாம். அந்த
அளவுக்கு கச்சிதமான சொற்கள். மூன்று சக்கரவண்டிக்கு மூவுருள்
மிதிசகடு என்னும் புதிய சொல்லொன்றை போகிறபோக்கில் சொல்லிவிட்டுச் செல்கிறார் தங்கப்பா.
ஓர் எளிய குடும்பக்காட்சியே
இங்கு சித்தரிக்கப்படுகிறது. ஒரு படுக்கை. அதில் கால்நீட்டிப்
படுத்திருக்கிறான் கணவன். ஒரு குழந்தை மூன்றுசக்கரவண்டியில் ஏறி
படுக்கையைச் சுற்றி வலம் வந்து விளையாடுகிறது. அறைக்குள் மனைவி
வருகிறாள். அவளும் களைத்திருக்கிறாள். மெல்ல
படுக்கையை நெருங்கி கணவனுக்கு அருகில் படுக்கிறாள். அதுவரைக்கும்
மூன்றுசக்கரவண்டியை ஓட்டி பொழுதுபோக்கிக்கொண்டிருந்த குழந்தை சட்டென புன்னகையோடு படுக்கையை
நோக்கித் துள்ளி வருகிறது. இருவருக்கும் நடுவில் புகுந்து,
இருவர் கன்னத்திலும் மாறிமாறி முத்தமிட்டு, இருவர் மீதும் கைகால்களைப் போட்டுக்கொள்கிறது. இந்தச்
சித்தரிப்புதான் பாடல். ஒரு புகைப்படம் எடுத்து சட்டமிட்டு பெரிதாக
ஒரு கூடத்தில் பார்வைபடும் இடத்தில் மாட்டிவைக்கத் தக்க காட்சி. வாழ்க்கையின் அபூர்வமானதொரு கணம்.
மூரல் இளநகை
எவ்வளவு அழகான சொல். குழந்தையின் மூரல் புன்னகையைச் சித்தரிக்கும்
தங்கப்பாவின் பாடல் கணவனின் புன்னகையையும் மனைவியின் புன்னகையையும் சித்தரிக்கவில்லை.
ஆனால் உய்த்துணரவைக்கிறது. அந்த இடத்துக்கு வாசகனைத்
தள்ளிக்கொண்டுபோய்விடுகிறது பாடல் வேகம். மூன்று புன்னகைகள்.
மூன்றும் மூன்று விதம். அதனால்தான் அது
‘இனிதுமன் அவர் இருக்கை’ என்றிருக்கிறதுபோலும்.
‘நோய்
வாழ்க’ என்றொரு பாடல். படுத்த படுக்கையில்
இருக்கும் ஒரு பெண் தன் தேவைகளை நல்லவிதமாகக் கவனித்து, அல்லும்
பகலும் பக்கத்திலேயே இருந்து அக்கறையோடு பார்த்துக்கொள்ளும் கணவனின் அன்பில் மகிழ்ந்து
நெகிழ்ந்துபோகிறாள். அவன் அருகில் இருப்பதே அவளுக்கு அருமருந்தாக
இருக்கிறது. இந்த நோய் இன்னும் ஒருசில நாட்கள் நீடித்தாலென்ன
என்று நினைக்கத் தூண்டுகிறது அவள் நெகிழ்ச்சி. அந்தப் பித்தேறிய
மன எழுச்சியில் தனக்கு வந்த நோய் வாழ்க என்று வாழ்த்துகிறாள்.
’உளிதகர்ந்து
அன்ன நுதல்முகம் தாக்கி
வலிவுற முறுக்கி
யாக்கை வருத்தினும்
விலகல் வாழி
எற்பிணி வெந்நோய் !
உலகுறு பணியின்
ஓய்வில் தொண்டுள்ளத்து
எம்மையும்
பாரார் இயங்கும் எம்கொழுநர்
பாடுறு சேக்கை
என் மென்மருங்கமர்ந்து
பசைவெங்களிம்பு
நுதல்படத் தேய்த்தும்
நோதோள் நீவியும்
நுசுப்பு வேதொற்றியும்
பருகுநீர்
ஊட்டிப் பனியுரை போர்த்துமென்
உடலும் உள்ளமும்
உவப்ப
அளித்துப்
பேணும் அன்பு நீடற்கே’
அந்த நோய்க்கு
அவனே காரணம், அவனுடைய பாராமையால் விளைந்ததாக இருக்கலாம் என்ற கற்பனையோடு அணுகிப்
பார்க்கும்போது தன் நோயை
வாழ்க என்றுரைக்கும் அவளுடைய மன எழுச்சி இன்னும் பொருள் பொதிந்த ஒன்றாக இருப்பதை உணரலாம்.
‘வருகிறேன்
கடலே’ தங்கப்பாவின் முக்கியமான பாடல். கடலருகில்
நிற்கிறான் ஒருவன். கடலை அவன் மனம் பிரதிபலிக்கிறது. அலையோசை அவன் மனஓசையாகிறது. மனம் அந்தக் கடலைப் பிரதிபலிக்கிறது. கொந்தளிக்கும் தோற்றம் அவன் குழப்பத்தின்
படிமமாக மாறிவிடுகிறது. கடலையே தன் பாட்டுக்கு நடுவில் அலைவீசிப் பொங்கும்படி செய்கிறார் தங்கப்பா.
கரையையா மோதுகின்றாய்
கரையுமென்
உளத்தையன்றோ
திரைபடும்
திவலை அல்ல
சிதறுமென்
எண்ணமன்றோ
இரையுமுன்
இரைச்சல் யாவும்
என்மனம் எதிரொலிக்கும்
விரைபவை உட்செல்லுங்கால்
என்னைஉள் இழுக்கின்றாயே
ஒருவர் ஆட்டாது
ஆடும்
ஊஞ்சலே, கடலே,
வாழ்வில்
ஒருவரும் துணையிலேன்
நான்
உணர்வினால்
தனியனானேன்
புரளும்நின்
அலைக்குள் என்னைப்
புதைத்திடத்
துடிக்கின்றேன் காண்
வருகின்றேன்கடலே
நில்நில்
வண்கையால்
வளைத்துக்கொள்வாய்
’ஆட்டாது
ஆடும் ஊஞ்சல்’ எவ்வளவு அழகான சொல். ஊஞ்சல்
தட்டுபோல நம்மைநோக்கி ஒவ்வொரு முறையும் நீண்டுவரும் அலை வந்துகொண்டே இருக்கிறது.
’குழந்தைகள்
ஆட்டம்’ பாடல் ஒரு விருந்துக்காட்சியை முன்வைக்கிறது.
ஆனால் இந்த விருந்து பெரியவர்கள் வைக்கும் விருந்தல்ல. குழந்தைகள் தயாரித்து குழந்தைகளே உண்டு மகிழத்தக்க விருந்து. ஒரு பெரியவர் அந்தக் குழந்தைகளின் விளையாட்டைப்
பார்த்து மகிழ்ச்சியடைகிறார். அருகில் சென்று நின்று இன்னும்
நெருக்கமாக வேடிக்கை பார்க்கிறார். அந்தக் குழந்தைகள் அவரை உணவுண்ண
அழைக்கின்றன. மண்ணையும் நீரையும் அவர்கள் உணவாகப் படைக்கிறார்கள்.
அவரும் மகிழ்ச்சியோடு அவற்றை உண்டுவிட்டுத் திரும்புகிறார். கற்பனையான அவ்விருந்து உண்மையான விருந்தைவிட தடபுடலாகவும் சுவையாகவும் மகிழ்ச்சி
நிறைந்ததாகவும் இருக்கிறது. பாடலின் ஒவ்வொரு சொல்லிலும் அந்த மகிழ்ச்சியும் மனநிறைவும் வெளிப்படுகின்றன.
இந்தப் பாடலின்
நீட்சிபோல அமைந்திருப்பது ’நினைவலைகள்’ என்னும் பாடல்.
பெண்ணையாற்றங்கரையில் சோலை வழிகளில் அலைந்து திரிந்து சுதந்திரமாகக்
கழித்த பொழுதுகளையெல்லாம் தொகுத்துப் பார்த்து அசைபோட்டு மீண்டும் மீண்டும் அம்மகிழ்ச்சியைப்
பல மடங்குகளாகப் பெருக்கிக் களிக்கும் ஒருவரை அது நமக்குக் காட்டுகிறது. ’வாழ்வென்னும் பெரும்புதிர்’, ‘வண்டியில் செல்கையில்’
‘இளமை நினைவுகள்’ ‘கார்கால மகிழ்ச்சி’,
‘உலகுக்கு வேண்டுகோள்’
போன்ற பல பாடல்கள் தங்கப்பாவின் மனம் தோய்ந்த காட்சிகளின் பெருந்தொகுப்புகள்.
ஒவ்வொரு பாடலும் ஒரு சிற்பம்.
’இருட்பேய்
அணங்கு’ ஒரு கதையைப்போல சொல்லப்பட்டிருக்கும் பாடல். இரவு புதருக்குள் ஒளிந்திருக்கும் ஓநாயைப்போல மறைந்து காத்திருக்கிறது.
பகல் எப்போது மறையும் என்பதை ஒவ்வொரு கணமாக எதிர்பார்க்கிறது.
மறைந்து திரியும் ஒரு பேயின் நடமாட்டத்தைச் சித்தரிப்பதுபோல இருள் சித்தரிக்கப்பட்டிருக்கும்
ஒவ்வொரு பகுதியும் சுவையானது.
இவையனைத்தும்
காட்சிப்பாடல்களென தங்கப்பா எழுதிவைத்திருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களிலிருந்து
எடுக்கப்பட்ட ஒருசில பாடல்கள். காட்சித்தொகுப்புகளாகவே தனித்துள்ள இயற்கையாற்றுப்படை,
புயற்பாட்டு, ஆந்தைப்பாட்டு ஒவ்வொன்றும் தனித்து
ஆய்வுசெய்யும் வகைமையில் அமைந்தவை. அவற்றிலிருந்தும் எடுத்துக்காட்டுகள்
வேண்டுமெனில் இன்னும் பல பாடல்கள் எடுக்கலாம்.
காட்சிகளாக
அன்றி, அனுபவத்தெறிப்புகளாகவும் சில பாடல்களை தங்கப்பா எழுதியுள்ளார்.
ஏற்கனவே நிறுவப்பட்ட உண்மைகளை ஒரு புதிய சொல்லாட்சி வழியாக மீண்டுமொரு
முறை நிறுவும் பாடல்கள் அவை. நாலைந்து முறை படித்தாலேயே மனத்தில்
பதிந்து ஒளவையார் பாடலைப்போலவோ, குறுந்தொகைப்பாடலைப் போலவோ நெஞ்சில்
எப்போதும் நிலைத்து நின்றுவிடுபவை.
’அறிவிலர்
வாழ்க்கை’ என்பது ஒரு பாடல். கழிவிரக்கத்தோடு
கூடிய குரலில் முன்வைக்கப்படும் பாடல்
‘கமழ்நெய்
உண்ணிய கலன்நுழை எறும்பு
விழுந்தே அதனுள்
வீய்ந்தாங்கு உலகில்
பொருள்தேர்
மாந்தர்அப் பொருட்கே அழுந்தி
முழுது வாழ்நாளும்
முழுகுவர்
அளிதோதானே
அறிவிலர் வாழ்வே.
இதே வருத்தத்தை
இன்னொரு கோணத்தில் சொல்லும் பாடல் ‘உலகியல் உளை’ என்றொரு
பாடல்.
அறநூல் ஆய்ந்து
என்?
அருங்குறள் கற்பின் என்?
முறைதேர் சான்றோர்
மொழிபல கேட்டு என்?
கைப்பொருள்
குவித்தோர் பொய்ப்பது காணின் என்?
மெய்ப்பொருள்
இயற்கை வியன்புலம் தேரின் என்?
பேழ்வாய் உழுவை
புறந்திரி வெற்பின்
ஆழ்கயம் படியும்
ஆவலின் தளிநடந்து
உளைச்சேற்று
அழுந்திய வேழம்போல
உலகியற்கு
அழுந்திய உள்ளம்
விலகியாங்கு
எழுதல் அம்மவோ, அரிதே!
ஒரு பாடலில்
எறும்பென்றும் இன்னொரு பாடலில் யானையென்றும் சொல்லப்படும் உவமைகள் முக்கியமானவை. எளிய
மனிதர்களுக்கு எறும்பு உவமை. படித்த பெரிய மனிதர்களுக்கு யானை
உவமை. எறும்பு உணவைத் தேடிச் சென்று நெய்க்கலத்துக்குள் விழுகிறது.
யானை தொலைவில் தெரியும் குளத்தில் இறங்கி ஆடிக்களிக்கும் ஆசையில் முன்பின்
யோசனையின்றி நடந்து சென்று சேற்றுக்குள் அகப்பட்டுக்கொண்டு தவிக்கிறது. இரண்டுமே அனுபவ உண்மைகள். எனினும் தங்கப்பா தன் அருமையான சொல்லாட்சியால் அவற்றை அழுத்தமாகப் பதியவைக்கிறார்.
’கார்கால
மகிழ்ச்சி’ பாடலில் தும்பிகள் வருகை பற்றிய சித்தரிப்பு இடம்பெறுகிறது.
இருள் விலகாத காலை நேரத்தில்
பார்க்க நேர்ந்த தும்பிகளைப்பற்றியும் அவை உட்கார்ந்து பறந்து சென்ற தருணங்களைப்பற்றியும்
காட்சிகள் மாறும் அதே வேகத்தோடு சொற்களைக் குவித்து பாடலாக மாற்றுகிறார் தங்கப்பா.
அப்போதுதான் அபூர்வமானதொரு உவமை அப்பாடலில் வந்து விழுகிறது.
பொன்செய் உலைக்களத்தில்- ஒரு
பொட்டு தெறித்து
சுழன்றதுபோல
தன் சிறகும்
உடம்பும் –மின்னி
தகதக என்று
பளிச்சிடவே
தும்பி சுழலும்
வேகத்தில் சொற்களும் சுழலும்போது ஒரு வாசகனாக என் மனம் கொள்ளும் பரவசத்துக்கு அளவில்லை. நூறு
சதவீதம் தெளிவாகப் பிடிக்கப்பட்ட ஒரு படத்தைப்போல ஒவ்வொரு முறையும் காட்சிகளை மிகவும்
தெளிவாக தன் பாடல்களின் முன்வைப்பவராக இருக்கிறார் தங்கப்பா. ஒன்றைப் பலவாகப் பார்க்கத் தெரிந்தவனும் சொல்லத் தெரிந்தவனுமே பாவலன்.
அந்த மாயக்கலையிலும் அவர் வல்லவராகவே இருக்கிறார்.
அறுபதுகள்
முதல் எண்பதுகள் வரையில் அவர் உள்ளார்ந்த எழுச்சியுடன் பாடல்களை எழுதிய வேகத்தில் அடுத்துவந்த
ஆண்டுகளில் படைப்பாக்கத்தில் அவர் முயற்சி செய்யவில்லை. கடந்த
நாற்பதாண்டுகளில் அவர் ஆர்வம் படைப்பாக்கத்தைக் கடந்து மொழிபெயர்ப்பு, தமிழ்மொழிக்காக உழைத்தல், தமிழின மேம்பாட்டுக்காக செயல்படுதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு
என விரிந்துசெல்லத் தொடங்கியது.
காலத்துக்கு
ஏற்றபடி புதுப்பிக்கப்பட்டால் மரபுப்பாடல் வடிவத்தில் எதிர்காலத்தில் படைப்பிலக்கியச்சாதனைகளை
நிகழ்த்தமுடியும் என்னும் தங்கப்பாவின் நம்பிக்கையைத் தக்கவைக்கும் விதமாக படைப்புகள்
உருவாகவில்லை. படைப்புமுயற்சிகளை அவரே நிறுத்திவிட்டது தமிழின்
தீயூழ்.
பண்டிதத்தனத்தை
அகற்றி மரபுப்பாடல் வழிக்கான நீரோட்டத்தை தங்கப்பாவே
தொடங்கிவைத்தார். அந்தப் பெருமை அவருக்கு எப்போதும் உண்டு.
ஏறத்தாழ பன்னிரண்டாயிரம் வரிகள் அளவுக்கான பாடல்கள் நூல்வடிவில் இப்போது
தொகுக்கப்பட்டுள்ளன. தொகுக்கப்படாத பாடல்களும் அதே அளவில் இருக்கக்கூடும்.
இரண்டையும் இணைத்துக்கொண்டால் ஏறத்தாழ இருபத்தைந்தாயிரம் வரிகள்.
தமிழிலக்கிய வரலாற்றில் அவர் மிகமுக்கியமான ஒரு சாதனையாளராகவே எப்போதும்
குறிப்பிடப்படுவார்.
’பொன்செய்
உலைக்களம்’ என்னும் படிமத்தை இன்னொருமுறை நினைத்துக்கொள்ளலாம்.
பாடலிலிருந்து இந்தச் சொற்களைமட்டும் தனியாகப் பிரித்தெடுத்து,
ஒரு மந்திரத்தைப்போல மீண்டும் மீண்டும் சொல்லிப் பார்க்கும்போது நம்
மனத்துக்குள் ஒரு காட்சி விரிவதை உணரமுடியும். அந்த உலைக்களத்தை
கிட்டத்தட்ட நம் மனமே வடிவமைத்துவிடுவதை உணரலாம். அது தினம்தினமும்
அழகுமிக்க தங்க ஆபரணங்களை உருவாக்கும் எரியுலை. ஒரு காலத்தில்,
அந்த உலையிலிருந்து எழும் ஆபரணமாக இருக்க தங்கப்பா விரும்பியிருக்கக்கூடும்.
ஆனால் அறுபதாண்டு கால இலக்கிய வாழ்க்கை அவரை உலைக்களமாக சமைத்துவிட்டது.
(உங்கள் நூலகம் - அக்டோபர் 2018 இதழில் பிரசுரமான கட்டுரை)