Home

Wednesday, 3 October 2018

ஒரு துளி நீர் - விட்டல் ராவின் ’நதிமூலம்’



கிட்டா என்கிற கிருஷ்ணராவின் வாழ்க்கை ஒரு முரட்டுநதியைப்போன்றது. சில இடங்களில் அச்சமூட்டும் வேகம். சில இடங்களில் அமைதி தழுவிய ஓட்டம். பள்ளம் கண்ட இடத்தில் பாய்ச்சல். வளைந்து திரும்பும் தருணங்களில் முரட்டுத்தனம். அக்கிரகாரத்தில் கிட்டா ஓர் அதிசயப்பிறவி. நாவலின் தொடக்கத்தில் இடம்பெற்றிருக்கும் ஒரு காட்சி அவருடைய மன அமைப்பைப் புலப்படுத்தும் தன்மையில் உள்ளது. தீண்டாமை உச்சத்தில் இருந்த முப்பதுகளில், குளத்தில் விழுந்துவிட்ட சிங்காரவேலுப்பிள்ளையின் மனைவியைக் காப்பாற்ற ஒருவர்கூட முன்வரவில்லை. குளிக்கவும் தண்ணீர் எடுக்கவும் சென்ற பெண்கள் கரையில் நின்று சத்தம் போடுகிறார்கள். அத்தருணத்தில் தெருவில்  நடமாடிக்கொண்டிருந்த எல்லாச் சாதி ஆண்களும் அக்காட்சியைப் பார்த்து பரிதாபப்படுகிறார்கள்

பிராமண ஆண்கள் அவளைத் தொட்டால் தீட்டாகி சாதிப்பழிக்கு ஆளாக நேரும் என்று, அவளைக் காப்பாற்றாமல் மரம்போல நிற்கிறார்கள். தாழ்ந்த சாதிக்கார ஆண்களும் மேல்சாதிப் பெண்ணைத் தொட்டுவிட்டால் கிட்டக்கூடிய தண்டனைக்கு அஞ்சி ஓரமாக ஒதுங்கி பாறைகள்போல நிற்கிறார்கள். அந்தச் சமயத்தில் எங்கிருந்தோ ஓடிவந்த இளைஞனான கிட்டா, தீட்டு பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் குளத்தில் குதித்து நீந்தி, அவளைப் பிடித்து இழுத்துவந்து கரைசேர்த்துக் காப்பாற்றுகிறான். அக்கிரகாரத்தின் சாதிப் பிடியிலிருந்து தப்பிச் சென்று, ஆங்கிலேயர் படையில் உலகப்போரில் கலந்துகொள்கிறான். சமஸ்கிருதம் படிந்திருந்த அவன் நாவில் உருதுவும் ஆங்கிலமும் இணைந்து படிந்தன. அக்கிரகாரம் கனவில் கூட பார்த்திராத மெசபடோமியாவில் வேலை செய்துவிட்டு ஊர் திரும்புகிறான். போரில் அவன் ஆற்றிய சேவைக்காக சொந்த ஊரில் அவனுக்கு நிலமும் வேலையும் வழங்கிக் கெளரவிக்கிறது ஆங்கில அரசு. அரசாங்க ஊழியன் என்கிற கெளரவத்தாலும் இயல்பான வீரத்தோடும் அவன் அக்கிரகாரத்தில் தலைநிமிர்ந்து நடக்கிறான். அவனை எதிர்க்கமுடியாத அக்கிரகாரம், சில பரிகாரங்களுக்குப் பிறகு, அவனை அரவணைத்துக்கொள்கிறது. ஆனால், அதே அக்கிரகாரம் அவனும் அவன் குடும்பத்தைச் சேர்ந்த சுப்பாராவும் ஹனுமியும் பொங்கல் பண்டிகையை சேரியில் ஹரிஜனங்களோடு கொண்டாடி சமபந்தி போஜனம் உண்டார்கள் என்பதை ஒட்டி, அவர்கள் குடும்பத்தை சாதிவிலக்கம் செய்துவிடுகிறது.  கிட்டாவின் வாழ்வில் நிகழ்ந்த மிகப்பெரிய சரிவு இது. தேவதாசிப் பெண்ணான தேவசேனாவுடன் கிட்டாவுக்கு ஏற்பட்ட நெருக்கம், அவனைப் பெரிய செலவாளியாக்கிவிடுகிறது. இச்சையின் திசையில் உருவான இந்த உறவு கிட்டாவின் வாழ்வில் ஏற்பட்ட அடுத்தகட்ட சரிவு. செலவைச் சமாளிக்க பத்திரம் எழுதிக் கொடுத்து கடன் வாங்குகிறான் கிட்டா. கடன் எல்லை மீறியபோது, தனக்கு அரசாங்கம் அளித்த நிலத்தை விற்று கடனை அடைக்கும்படி நேர்கிறது. அந்த நிலத்தை அபகரித்துக்கொள்ள தன் சொந்த சகோதரனே திரைமறைவில் நாடகமாடியிருப்பதை அறிந்து அவன் பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளாகிறான். கிட்டாவின் வாழ்வில், இவையனைத்தும் அடுத்தடுத்து நேர்ந்த சரிவுகள். தொடர்ச்சியான சரிவுகளிலிருந்து மீண்டுவரமுடியாதவனாக வீழ்ச்சியடைகிறான் கிட்டா. ஒரு சரிவிலிருந்து இன்னொரு சரிவைநோக்கியதாகவே அவன் வாழ்க்கைநதி ஓடுகிறது. உதவ ஆளின்றி அனாதைபோல இறந்துபோகிற அவன் வாழ்க்கை சரிவுகள்மட்டுமே நிறைந்த துயர வரலாறு. அவன் சரிவுகளையெல்லாம் ஒட்டுமொத்தமாகத் தொகுத்து, அவற்றின் நதிமூலத்தை மதிப்பிட முயற்சி செய்கிறது நாவல். அதன் போக்கில் மானுடவாழ்வில் எஞ்சுவது எது என்கிற கேள்விக்கான தேடலாகவும் மாறுகிறது.
    சுதந்திரப் போராட்டம் உச்சத்தில் இருந்த காலத்தில் நாவல் தொடங்குகிறது. நீல் சிலையுடைப்பு போராட்டத்தில் கிட்டாவின் குடும்பத்தைச் சேர்ந்த ஹனுமந்தராவ் என்கிற ஹனுமி கலந்துகொண்டு சிறைசெல்கிறான்.  அதே அக்கிரகாரத்தைச் சேர்ந்த நாகமணியின் குடும்பத்தைச் சேர்ந்த சுப்பாராவ் காந்தியப்பாதையில் சைமன் கமிஷன் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு சுதந்திரவேட்கையுடன் திகழ்கிறார்.   இருவருமே தம் ஈடுபாடுகளுக்காக சிறைசெல்கிறார்கள். ஹனுமி பெர்ஹாம்பூர் சிறையில் அடைக்கப்படுகிறான். சுப்பாராவ் சேலம் சிறையில் அடைக்கப்படுகிறார். தண்டனைக்காலம் முடிந்து விடுதலையாகி வெளியே வந்ததும் தீவிரவாதப்பாதையிலிருந்த ஹனுமியை காந்தியப்பாதைக்கு மாற்றி அழைத்துவருகிறார் சுப்பாராவ். இயற்கையிலேயே சாகச உணர்வுமிக்க கிட்டாவும் மெல்லமெல்ல அவர்களுடன் இணைந்துகொள்கிறார். அரசாங்க ஊழியன் என்பதால், அதற்கு இடையூறு நேராதவண்ணம் சேவையாற்றுகிறார். ஹனுமிபோலவோ, சுப்பாராவ் போலவோ கிட்டா ஒற்றை இலக்குடன்மட்டும் வாழக்கூடியவராக அவரால் வாழமுடியவில்லை. அவருடைய ஈடுபாடுகள் பலவகைப்பட்டவையாக உள்ளன. கைவிட்டுப் போய்விட்ட வேலையை, சென்னைக்கும் ஓசூருக்கும் அலைந்து அதிகாரிகளை மாறிமாறிப் பார்த்து, அதை மீண்டும் வாங்கவேண்டிய நெருக்கடி அவருக்கிருக்கிறது. தேவசேனாவுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புகள் கிடைக்கும்போது நிராகரிக்கமுடியாத ஈர்ப்பின் விசை அவரை வீழ்த்திவிடுகிறது. ஹனுமியின் வாழ்க்கையும் சுப்பாராவின் வாழ்க்கையும் தெளிந்த நீரோடையாக திகழும்போது, கிட்டாவின் வாழ்க்கை காடு, மலை, பாறைகள், பள்ளம் என மாறிமாறி பாய்ந்தோடும் நதியாகிவிடுகிறது. எந்த இடத்திலும் கட்டுப்பாடு என்பதே இல்லாமல் மனம்போன போக்கில் ஓடுகிறது அந்த நதி.
நாவலின் முடிவிலும் ஒரு போராட்டம் இடம்பெறுகிறது. அறுபதுகளில் தமிழகத்தில் இந்தித்திணிப்பை எதிர்த்து நிகழ்ந்த பெரும்போராட்டம் காட்சிப்படுத்தப்படுகிறது. கிட்டாவின் வாழ்க்கை முடிந்து, கிட்டாவின் மகன் ரகு வேலைக்குச் செல்லும் காலகட்டம் அது. அவன் அந்தப் போராட்டத்திலேயே இல்லை. அடையாள அட்டையை காவலர்களிடம் காட்டிவிட்டு, அலுவலகத்துக்குள் சென்று வேலையில் ஈடுபடுகிறவனாக இருக்கிறான் ரகு. அலுவலகக் கண்ணாடி ஜன்னல்களுக்கு அப்பால் தெரியும் போராட்ட ஊர்வலத்தை வேடிக்கை பார்க்கிறான். கிட்டாவைப்போல அவன் மனத்தில் எவ்விதமான சஞ்சலங்களும் இல்லை. முரட்டுநதியிலிருந்து கிளைவிட்டுப் பிரிந்து அமைதியாக ஓடி நிரம்பித் தேங்கிய ஏரியைப்போல இருக்கிறது அவன் வாழ்க்கை. கிட்டாவின் தேடல்களும் திசைகளும் வேறுவிதமானவை. ரகுராவின் தேடல்களும் திசைகளும் வேறுவிதமானவை. ஒருவருடைய தேடல்களும் திசைகளும் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் முக்கியமான சக்திகள். அவையே வாழ்க்கையை அருவியாகவும் நதியாகவும் கடலாகவும் ஏரியாகவும் ஓடையாகவும் மாற்றிவைக்கின்றன.
கிட்டாவின் சரிவுகள் தவிர்க்கமுடியாதவை அல்ல. சற்றே முயற்சி செய்திருந்தால் அவற்றை வென்றிருக்கமுடியும். தலைநிமிர்ந்து நின்றிருக்கவும் முடியும். ஆனால், கிட்டா அந்தத் திசையில் முயற்சி செய்யவே இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஒரு கட்டத்தில்கூட அவர் எதையும் பரிசீலனை செய்யும் முயற்சியில் ஈடுபடவே இல்லை. சுய பரிசீலனையும் சுய விமர்சனமும் அற்ற ஒற்றைப்பரிமாணம் கொண்டதாகவே அவர் தன் வாழ்க்கையை வாழ்கிறார்.
தொடக்கத்தில், தேவசேனாவின் தொடர்பால் சொத்தை இழந்தபோது, தன் சொத்தை தன் சகோதரனே தந்திரமாகப் பறித்துக்கொள்கிறானே என நினைக்கிறாரே தவிர, தேவசேனாவின் தொடர்புதான் தன்னுடைய சொத்தை இழந்ததற்குக் காரணம் என அவருக்குத் தோன்றவே இல்லை. கடன் வாங்கிய தொகைக்கு ஈடாக, வீட்டில் இருக்கும் பித்தளைப் பாத்திரங்களை தோன்றும்போதெல்லாம் எடுத்தெடுத்து விற்றுவிடவே அவர் மனம் முனைகிறது. அக்கிரகாரத்திலிருந்து வெளியேற்றப்பட்டதும், ஏதோ ஒரு தெருவில் எங்கோ ஒரு வாடகைவீட்டில் வாழ்க்கையை நடத்தவேண்டிய நிலைக்கு அவர் குடும்பம் தள்ளப்படுகிறது. அவர் குடும்பம் நடத்தும் கொலுவுக்கு பார்வையாளராக ஒருவரும் வருவதில்லை. மற்றவர்கள் வைக்கும் கொலுவில் அவர்களுக்கு அழைப்பில்லை. பரம்பரையாக வீட்டில் வைத்து வழிபட்ட சாலிகிராமத்தை வழிபடும் ஈடுபாடு, அவரிடம் இயற்கையிலேயே இல்லை. குளத்துக்குள் வீசிவிட்டுச் சென்றுவிடுகிறார். தனக்குக் கீழே வேலை செய்கிறவனிடம் கையெழுத்துப் போட்டு கடன் வாங்குவதில் அவருக்குக் கூச்ச உணர்வே இல்லை. வரவுக்கு மேல் செய்யும் செலவுகளால் கடன்தொகை ஏறிக்கொண்டே போகின்றது. விடுதிகளில் சிற்றுண்டியும் உணவும் உண்ணும் பழக்கத்தால் அவருடைய கடன்தொகை  அதிகரிக்கிறது. பதவி உயர்வும் பதவி இறக்கமும் மாறிமாறி நிகழ்கின்றன. இருபதாண்டு காலத்தில் ஏழெட்டு ஊர்களுக்கு மாற்றப்படுகிறார். கணக்கில்லாத செலவு அவருடைய சரிவுகளுக்குக் காரணமாகிறது. வீட்டுக்குரிய மின்சாரக் கட்டணத்தைக் கட்டாததால் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. படிக்கிற பிள்ளைகள் இருக்கிற வீடு மின்சாரமில்லாமல் இருண்டுகிடப்பதைப்பற்றிய வருத்தமோ கவலையோ அவரிடம் இல்லை.
தான் அகப்பட்டுக்கொண்ட சுழலுக்குள் தன்னையறியாமலேயே தன் மூத்தமகளையும் இழுத்துவிடுகிறார் கிட்டா. மீளவே முடியாத பாதாளத்தில் கிட்டாவின் வாழ்க்கை விழுந்துவிட இதுவே காரணமாகிறது. இசை கற்றுக்கொள்ளச் சென்ற இடத்தில் மூத்தமகளுக்குக் கிடைத்த பாராட்டுகள் ஒரு தந்தை என்கிற நிலையில் மகிழ்ச்சிக்குரிய விஷயம் என்பதில் ஐயமே இல்லை. ஆனால், கிட்டா ஒரு படி மேலே சென்று, மூத்தமகளின் திறமையை ஒரு துருப்புச்சீட்டாகப் பயன்படுத்தி திரைப்படங்களில் தோன்றவைத்து, மேலும்மேலும் வாழ்க்கை ஏணியில் அவளை ஏற்றிவிடலாம் என்று கோட்டை கட்டுகிறார். ஏராளமான எண்ணிக்கையில் பாடல்களும் நடனமும் கொண்டதாக தமிழ்ப்படங்கள் உருவாகி வந்ததும், திரைப்படத் தயாரிப்பில் முன்னணியில் இருந்த திரைப்பட நிலையம் சேலம் நகரத்தை மையமாகக் கொண்டிருந்ததும் அந்தக் கனவுக்கு ஒரு காரணம் என்று சொல்லலாம். ஆனால், துரதிருஷ்டவசமாக அந்தக் கணக்கு தப்புக்கணக்காகவே மாறிவிடுகிறது. அவள் பாட்டுக்கும் நடனத்துக்கும் பணம் கிடைக்கிறது. ஆனால், அவள் நடித்த காட்சிகள் வெட்டப்பட்டுவிடுகின்றன. திரும்பத்திரும்ப இது நிகழும்போது, அதை காலம் தனக்கு விடுத்த செய்தியாக நினைத்து, பரிசீலனை செய்து, அந்தத் திசையிலிருந்து அவர் அக்கணத்தில் விலகியிருக்கலாம். ஆனால், எதிலும் தீவிரமாக இறங்கிவிடும் அவர் மன அமைப்பு அதற்கு இடம்கொடுக்கவில்லை. மீண்டும்மீண்டும் அந்தப் பாறையோடு மோதுவதற்கு முனைகிறார். இதற்கிடையில் படச்சுருள்கள் தட்டுப்பாட்டால் படத்தயாரிப்பு நின்றுபோகிறது. படத்தயாரிப்புகள் சென்னையை மையம் கொண்டதாக மாறிவிடுகின்றன. உண்மையிலேயே அவர் மகளின் முன்னேற்றம்மீது ஆர்வம் காட்டிய அவளுடைய இசையாசிரியர் காலமாகிவிடுகிறார். சுயபரிசீலனை செய்துகொள்ள காலம் வழங்கிய கடைசி வாய்ப்பாக அதை நினைத்து, அத்தருணத்திலாவது கிட்டா பின்வாங்கியிருக்கலாம். மாறாக, ஒரு சூதாடியின் மனநிலையில் வேகம் கொண்டவராக மாறுகிறார் அவர். அளவுக்கு மீறி கடன்வாங்கி, மகளை சென்னைக்கு அழைத்துச் சென்று, தேவசேனாவின் ஆதரவில் தங்கவைத்துவிட்டு திரும்புகிறார். எதிர்பார்த்த வாய்ப்புகள் கிட்டாத நிலையில், அவர் மேலும்மேலும் கடன்வாங்கி அவளுக்கு அனுப்பிக்கொண்டே இருக்கிறார். ஒரு கட்டத்தில் அலுத்துப்போய் அவள் நிலையைக் கண்டுவர சென்னை சென்றபோது, அவளை அவரால் பார்க்கமுடியவில்லை. அவளை ஆதரிப்பதாகச் சொன்ன தேவசேனாவையும் பார்க்கமுடியவில்லை. அவர்கள் வசித்த வீட்டில் அவர்களைக் காணவில்லை. அவருடைய வேட்கைக்கு அவர் தன் மகளையே பலிகொடுத்துவிடுகிறார்.
கிட்டாவின் கடைசிக்காலம் மிக மோசமான வகையில் அமைந்துவிடுகிறது. கடன்சுமை, மகளின் மறைவு, உறவினர்களின் பாராமுகம், நட்பற்ற வாழ்க்கை, ஆதரவில்லாத அலுவலகம், குழிதோண்டி தள்ளிவிட காத்திருக்கும் சக ஊழியர்கள், அலுவலகத்தில் நடைபெறும் குற்ற விசாரணை, ஆச்சாரம் இல்லாத குடும்பம் என்கிற பழி எல்லாம் சேர்ந்து அவரை அழுத்தத் தொடங்கிவிடுகின்றன. பணத்தேவை பெருகிவிட்ட தருணத்தில் அவர் பணிஓய்வு பெற்றுவிடுகிறார். ஓய்வுப்பணம் உறுதிசெய்யப்பட்டு, அதற்கான ஆணையைப் பெறுவதற்குள் இரண்டு ஆண்டுகள் ஓடிவிடுகின்றன. வறுமையும் இல்லாமையும் குடும்பத்தைச் சிதைக்கிறது. மனைவி ஒருபக்கமும் மகள் ஒருபக்கமும் வேலைக்குச் சென்று பணமீட்டவேண்டிய  சூழல் உருவாகிறது. பள்ளிக்கூடத்துக்குச் செலுத்தவேண்டிய கட்டணத்தைக் கட்ட முடியாமல், கல்வி தடைபடுகிறது. கதர்த்துணிகள் விற்பனையகம் நடத்தும் ஹனுமி, பிள்ளைகளின் கல்விச் செலவை  ஏற்றுக்கொள்கிறான். தான் பார்க்கநினைத்த ஒளிமயமான எதிர்காலத்தைப் பார்க்காமலேயே கண்களை மூடிவிடுகிறார் கிட்டா.
கிட்டாவின் மரணச்செய்தி கிடைத்தபோதும் ஹனுமி அவரைப் பார்க்கச் செல்லாமல் தவிர்க்கும் இடம் முக்கியமானது. காந்திய வழி வந்த ஒருவருக்கு, ஒதுங்கி நடக்கும் மனநிலை உருவாக என்ன காரணம் இருக்கமுடியும் என்பது யோசனைக்குரிய ஒரு விஷயம். அவர்கள் இருவரும் உறவினர்கள்மட்டுமல்ல. நல்ல நண்பர்கள். ஒரே நோக்கத்துக்காக ஒரு காலத்தில் இணைந்து வேலை செய்தவர்கள். இருவரும் ஒரே அக்கிரகாரத்தில் பிறந்த இருவேறு நதிகள். ஒரு நதி தன் ஓட்டத்தை கடைசிவரைக்கும் தன் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கிறது. இன்னொரு நதி கட்டுப்பாடற்ற வேகத்தில் மனம்போன இடத்தில் மனம்போன போக்கில் ஓடி, இறுதியில் தேங்கி, சாக்கடையாக சிறுத்துவிடுகிறது. அதை நேருக்குநேர் பார்க்க அவர் மனம் கூசி இருக்கலாம். அல்லது நேருக்குநேர் பார்த்தால் தன் மனம் வெடித்துவிடக்கூடும் என்று அஞ்சியிருக்கலாம்.
கிட்டாவின் வாழ்க்கை சரிவைநோக்கிய ஒரு பயணமாக மாறிவிட்ட பிறகுகூட, அவர் தன் இயல்பான மனிதாபிமான குணங்களை எத்தருணத்திலும் இழக்காதவராகவே இருக்கிறார். மானுட வாழ்வில் எஞ்சுவது வெறும் நினைவுகள்மட்டுமே. கிட்டாவைப்பற்றிய நினைவுகளில் எதிர்மறையான நினைவுகளுக்கு இணையானவையாக நேர்மறையான நினைவுகளுக்கும் இடம் இருக்கிறது. அவர் தோற்றுப் போனவர் என்கிற காரணத்துக்காகவே, பலரும் அவருடைய நேர்மறையான பண்புகளை ஒதுக்கிவிட்டுச் செல்ல முயற்சி செய்வார்கள். அது இயற்கை என்றபோதும், ஒருபோதும் நியாயமானதல்ல. சாதிமதம் பாராத அவருடைய பரந்த மனம் முக்கியமான ஒரு பண்பு. தனக்கு நேரும் இழப்புகளைப்பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாமல், தன்னுடைய பண்பிலிருந்து இறுதிவரைக்கும் பின்வாங்காமல் அவர் வாழ்கிறார். ஆரம்பக்கட்டத்தில் சேரிக்குச் சென்று ஹரிஜன சேவா சங்கம் கட்டுவதற்கு முயற்சி செய்து சமபந்தி போஜனத்தில் ஈடுபட்டது முதல், தன் வீட்டு அலுவலகத்தில் தன் ஊழியனாக வேலை செய்கிறவனுக்கும் தன்னுடைய பயண நேரங்களில் குதிரைவண்டி ஓட்டும் ஊழியனுக்கும் சாதிவித்தியாசம் பாராமல் தான் உண்ணும் உணவையே அவனுக்கும் பரிமாறச் சொல்லிச் சாப்பிடவைப்பதுவரை, கிட்டா நல்ல பண்புள்ளவராகவே நடந்துகொள்கிறார்.  வேலை கற்றுக்கொள்ள விழையும் ஒருவனுக்கு பக்கத்திலேயே உட்காரவைத்து எல்லா வேலைகளையும் சிரத்தையோடு சொல்லித்தரும் பண்பு அவருக்கு இருக்கிறது. மிகவும் மோசமான முரடன் என பெயர்வாங்கிய அலுவலகத்துக்குள், வேலை கற்றுக்கொள்ளும் ஆர்வத்துடன் வரும் புதியவர்களுக்கு அவரே நல்ல குருவாக இருக்கிறார். ஆசாரம் இல்லாதவன் என ஏற்பட்டுவிட்ட பழியை நினைத்து ஒருகட்டத்திலும் அவர் வருந்தவில்லை. வாழ்க்கையை அதன் போக்கில் எதிர்கொள்ள தயாராகவே இருக்கிறார். தன்னால் வழிபடமுடியாத சாலிகிராமத்தை எந்தக் குற்ற உணர்ச்சியும் இல்லாமல் குளத்தில் வீசிவிட்டுச் செல்கிறார்.  ஐதராபாத்தில் ஒரு சிக்கலான வழக்குச்சூழலில் அகப்பட்டுத் தவித்த மனைவிவழி உறவுக்காரப் பெண்ணுக்கு, விடுப்பெடுத்துக்கொண்டு சென்று கூடவே தங்கியிருந்து வழக்குகளை நடத்திமுடித்து, கைவிட்டுச் செல்லவிருந்த நகைகளும் சொத்துகளும்  திரும்பக்கிடைக்கும் வகையில் பாடுபட்டபிறகு, அவள் கொடுத்த ஒரே ஒரு தொப்பியைமட்டும் எடுத்துக்கொண்டு வருகிறார். சிக்கலான கட்டங்களில் இருப்பவர்களுக்கு உதவுவது தன் கடமை என அவர் நினைக்கிறாரே தவிர, அதன் வழியாக தனக்குக் கிடைக்கும் ஆதாயம் என்ன என ஒரு கட்டத்திலும் அவர் மனம் கணக்குப் பார்க்கவில்லை. 
நீல் சிலையை உடைக்கும் போராட்டம்பற்றிய விரிவான குறிப்புகள் நாவலின் தொடக்கத்தில் உள்ளன. நீல் சிலையை ஏன் உடைக்கவேண்டும்? அவன் முரடன். இரக்கமில்லாதவன். முதல் சுதந்திரப்போரில் ஈடுபட்ட இந்தியர்களை கருணையில்லாமல் கொன்று வீழ்த்திய பிரிட்டிஷ் அதிகாரி.  அதனால் சாமானிய இந்தியர்களின் மனத்தில் அவன்மீது வெறுப்பும் கோபமும் அணையாத நெருப்பாக இருக்கிறது. ஆனால், அவன் இந்தியர்கள்பால் காட்டிய முரட்டுத்தனத்தை முன்னிட்டு, பிரிட்டிஷ் அரசாங்கம் அவனைக் கெளரவிக்கும் விதமாக அவனுடைய சிலையை நிறுவிவைக்கிறது. வரலாற்றுப் பாத்திரமான நீல் ஒருவகையில் முரட்டுத்தனத்தின் அடையாளம். வேறொரு காலகட்டத்தில் வாழ்கிறவனாக இருந்தாலும், கிட்டாவின் வாழ்க்கையும் ஒருவகையில் முரட்டுத்தனத்தின் அடையாளமாகவே இருக்கிறது. முரட்டுத்தனமான நம்பிக்கை. முரட்டுத்தனமான பிடிவாதம். முரட்டுத்தனமான பேச்சு. முரட்டுத்தனமான நடத்தை. நீல் சிலையை உடைத்த பரம்பரையில் மனத்துக்குள் நீலாக வாழ்கிறார்கள் மனிதர்கள். சுயபரிசீலனை இல்லாமல் இருப்பதால் மனிதர்கள் அதை உணர்வதில்லை. சிலையை அல்ல, தம்மைத்தாமே உடைத்துக்கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறார்கள் மனிதர்கள்.
கிட்டாவைச் சுற்றி ஏராளமான மனிதர்கள் வாழ்கிறார்கள். எல்லோருக்குமே அவரவர்களுக்கே உரிய முகங்களும் உணர்வுகளும் நிறங்களும் உள்ளன. ஒரு இடத்தில்கூட அலுப்பான சித்தரிப்பு என்பதே இல்லை. மீண்டும்மீண்டும் மனிதர்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள். பொருந்தாத திருமணம் என்று தெரிந்தும் வயதான ஒருவருக்கு வாழ்க்கைப்பட்டு ஐதராபாத்துக்குச் செல்கிறாள் ஒருத்தி. நிஜாம் அரசில் முக்கியமான பொறியாளராக பணிபுரிபவர் அவர். ஆனால் அவரை அருகில் நெருங்கவிடாமலேயே வைத்திருப்பதில் அவள் வெற்றியடைகிறாள்.  எதிர்பாராதவகையில் அவர் இறந்துபோனதும், அவருடைய சொத்துகளை அடைய வழக்காடி வெற்றி பெறுகிறாள். வாரிசுதாரர் என்கிற வகையில் அவளுக்கு ஓய்வுப்பணமும் வருகிறது. அவளை ஏமாற்றி இன்னொருவன் மணம்புரிந்துகொள்கிறான். சகோதரி என்றும் பாராமல், அவளுடைய சகோதரனே அவளை வீட்டைவிட்டு வெளியேற்றிவிடுகிறான். கிட்டா பணப்பற்றாக்குறையால் ஒருபக்கம் தவியாய்த் தவித்துக்கொண்டிருக்கையில் பணத்துக்கும் வசதிக்கும் பஞ்சமில்லாதவர்களும் தம் வாழ்க்கையை ஒழுங்காக அமைத்துக்கொள்ளத் தெரியாமல் தவிக்கிறார்கள். வாழ்க்கையை நல்லபடி அமைத்துக்கொள்ள பணம் உதவுகிறது என்பது உண்மைதான். ஆனால் பணத்தைமட்டுமே வைத்துக்கொண்டு வாழ்க்கையை அமைத்துக்கொள்ளமுடியாது என்பது, அதைவிட வலிமையான உண்மை.
தமது தெருவில் வசிக்கும் ஓர் இளம்பெண் திரைப்படங்களில் நடிக்கிறாள் என்பதை அறிந்துகொண்டதும், அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களிடம் உருவாகும் மாற்றங்கள் நுட்பமான முறையில் நாவலின் பிற்பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.  அவளைப் பார்ப்பதற்கும் தீண்டுவதற்கும் அடைவதற்கும் ஆண்கள் எடுக்கும் முயற்சிகள் அவர்களுடைய உண்மை முகத்தைப் புலப்படுத்தும் விதமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. விடுதியில் சிற்றுண்டி வாங்கிக்கொடுத்துவிட்டு, அறியாச்சிறுவனிடம்ஒங்க அக்கா குளிக்கும்போது பார்த்திருக்கியா?” என்று கேட்பதில் தொனிக்கும் வக்கிரம், வீட்டு வாசல்களிலும் தெருக்களிலும் அகால நேரத்தில் கூட சத்தமாக பேசிச் சிரித்துக்கொண்டும் பாடிக்கொண்டும் அலையும் இளம்பட்டாளங்களின் வக்கிரம், ஏற்கனவே இரண்டு திருமணங்கள் செய்துகொண்டவன் மூன்றாவதாக திருமணம் செய்துகொள்வதாகச் சொல்வதில் தொனிக்கும் வக்கிரம் என வக்கிரங்களின் பல நிலைகளை நாவலில் காணமுடிகிறது. இத்தகு வக்கிரப் பேச்சுகளையும் தந்திரப் பேச்சுகளையும் கிட்டாவின் மனைவி அடிக்கடி எதிர்கொள்கிறாள். கிட்டாவின் இளைய மகளும் மகனும் எதிர்கொள்கிறார்கள். தவிக்கிறார்கள். உள்ளூரக் குமுறுகிறார்கள். மனம் சுருங்கிக் கலங்குகிறார்கள். ஆனால், ஒரு கணத்தில்கூட கிட்டாவுக்கு அந்தக் கலக்கம் இல்லை. மக்களின் வக்கிரப் பேச்சுகளை அவர் கொஞ்சம்கூட பொருட்படுத்தவில்லை அல்லது அப்பேச்சுகள் அவருடைய காதுவரைக்கும்  செல்வதில்லை. மகள் காணாமல் போய்விட்டாள் என்பதை அறியும்போதுதான் அவர் முதன்முதலாக குற்ற உணர்ச்சியில் நிலைகுலைந்து கலங்குகிறார்.
தக்களியில் நூல்நூற்க வராமல் பஞ்சு திரிதிரியாக வருவதை நினைத்து வருந்தும் இளம்பெண்ணாக நாவலின் முதல்காட்சியில் இடம்பெற்றிருக்கும் இளம்பெண்ணான நாகமணி, கிட்டாவின் வாழ்க்கைத்துணையாக மாறி அவருடைய வாழ்க்கை திரிந்துவிடாதபடி அருந்துணையாக நிற்கிறாள். கிட்டாவின் வாழ்க்கை பல சரிவுகளை அடைந்தபோதும் நிலைகுலைந்து தடுமாறிவிடாமல் அவளே காப்பாற்றி நிலைநிறுத்துகிறாள். காவியச்சாயலுடைய அவளுடைய பொறுமையும் தியாகமும் மகத்தானவை. மகளை ஆசிரியையாகவும் மகனை அஞ்சல்நிலைய ஊழியனாகவும்  ஆளாக்கி, வேறொரு திசையில் செலுத்தும் விசைகளாக அவை விளங்குகின்றன.
கிட்டா நாவலின் மையப்பாத்திரம் என்றபோதும், கிட்டாவைச் சுற்றிலும் ஏராளமான மனிதர்கள் நடமாடுகிறார்கள். கோட்டை அக்கிரகாரத்தில் தொடங்கும் அவர் வாழ்க்கை, ஆத்தூர், ஓசூர், மேச்சேரி, சேலம், சென்னை, ஐதராபாத் என பல இடங்களிலும் பரவி விரிகிறது. எந்த இடத்திலும் வேரூன்றாத செடியாக மாறிவிடுகிறது அவர் வாழ்க்கை. ராகவேந்திராவ், ருக்குமணி, பையாக்குட்டி, சாரதாம்பாள், வெங்கட்ராவ், பவானிசிங், நாகராஜராவ், குப்ளி, ஹிரணியராவ், சுப்பாராவ், ஜானகிபாய், சிவலால், மாதவராவ், சேது, ராம்கோபால், ஆராத்யா என ஏராளமான மனிதர்களின் ஊடாக இயங்குகிறது கிட்டாவின் வாழ்க்கை. இவர்கள் அனைவரும் ஏதோ ஒரு விதத்தில் தனித்தன்மை மிகுந்தவர்களாக விளங்குகிறார்கள். ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் ஒரு தனித்த நதியாகப் பாய்ந்துசெல்கிறது.
ஒற்றைநதி என எங்குமே இல்லை. அது நம் கண்களுக்குத் தெரியும் ஒரு மாயத்தோற்றம் மட்டுமே. ஒவ்வொன்றும் தன்னைச்சுற்றி சுழித்தோடும் ஆயிரக்கணக்கான நதிகளோடு இணைந்தும் விலகியும் மழைக்கால வெள்ளமென கரைபுரண்டோடியபடியே இருக்கிறது. கிட்டாவின் வாழ்க்கை ஒரு துளி நீர். ஒரு துளி நதி. ஒரு துளி கடல். அவருடைய தேடலும் விருப்பமும் தனிப்பட்டவை என்றாலும், அவர் வாழ்க்கை எல்லா மனிதர்களின் வாழ்க்கைக்கும் இடையில் நிற்கும் ஒன்றாகும். இக்காரணத்தாலேயே, கிட்டாவின் வாழ்க்கையை மதிப்பிடும் செயல் மானுட வாழ்க்கையை மதிப்பிடும் செயலாக மாற்றம் பெறுகிறது. நதி ஓடியோடி கடலுடன் கலந்து, கடலாகவே மாறிவிடுவதுபோல வாழ்க்கை நகர்ந்துநகர்ந்து நினைவுகளாகமட்டுமே எஞ்சி நிற்கின்றன. இனியவையாகவும் கசப்பானவையாகவும் அச்சுவடுகள் நிறைந்திருக்கின்றன. கசப்பு என்பது அந்த நேரத்துச் சுவை மட்டுமே. கசப்பையும் இனிப்பாகக் கருதவைக்கும் பக்குவத்தை காலம் கருணையுடன் வழங்குகிறது. ஓர் ஆவணம்போல, விட்டல்ராவ் எழுதியிருக்கும் இந்த நாவல், அவருடைய எழுத்தாக்கங்களில் ஒரு மகுடம்.


( நதிமூலம். நாவல். விட்டல்ராவ். விஜயா பதிப்பகம், ராஜவீதி, கோயம்புத்தூர். விலை.ரூ.225. )