Home

Thursday, 27 September 2018

பதற்றமும் திகைப்பும் - முறிந்த பாலம்



இரவும் பகலும் எப்படி மாறிமாறி உருவாகின்றன என்பதை நாளைக்கு உங்களுக்குச் செய்முறையின் வழியாக விளக்கப் போகிறேன்என்று ஒருநாள் வகுப்பைமுடிக்கும் முன்பாகச் சொல்லிவிட்டுச் சென்றார் எங்கள் ராமசாமி சார். அப்போதே மின்சாரம் பாய்ந்ததுபோல ஒருவிதமான பரபரப்பு எங்களிடம் தொற்றிவிட்டது. “சார் சார், இன்னைக்கே காட்டுங்க சார்என்று கெஞ்சத் தொடங்கிவிட்டான் எனக்குப் பக்கத்தில் இருந்த கோவிந்தசாமி.  அதுக்கு பொருளெல்லாம் வேணும்டா. எச்.எம்.கிட்ட சொல்லி நாளைக்குத்தான் எடுக்கமுடியும். நாளைக்கி கண்டிப்பா பார்க்கலாம்என்று சிரித்தார் அவர். அவர் சொன்னதையே காதில் வாங்காமல் மாணவர்கள்சார் சார்என்று மறுபடியும் கெஞ்சத் தொடங்கிவிட்டார்கள். “பறக்காதிங்கடா பசங்களா, நாளைக்கு பார்க்கலாம்என்று முடிவாகச் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார் அவர். அன்று இரவு எனக்கு உறக்கமே வரவில்லை. அதே நினைவில் மூழ்கியிருந்தேன். ராமசாமியின் சொற்கள் காதில் ஒலித்தபடியே இருந்தன.

மறுநாள் குறித்த நேரத்துக்கு முன்பாகவே ராமசாமி சார் வந்துவிட்டார். அவருக்குப் பின்னால் ஒரு பெரிய பெட்டியைத் தூக்கிக்கொண்டு உதவியாளர் வந்தார். மேசைக்குப் பக்கத்தில் பெட்டியை வைத்துத் திறந்தார். அதிலிருந்து உலக உருண்டையை எடுத்து மேசைமீது வைத்துவிட்டு துணியால் துடைத்தார். ”என்னடா இது பசங்களா, தெரியுதா?” என்று கேட்டார் சார். எல்லோரும் ஒரே குரலில்உலக உருண்டை சார்என்றோம். சார் சிரித்தபடி கோவிந்தசாமியை அருகில் வருமாறு அழைத்தார். “இதுல இந்தியா எங்க இருக்குது, காட்டுஎன்றார். அவன் அந்த உருண்டையை உருட்டி உருட்டிப் பார்த்தான். அதில் இந்தியாவின் பெயரைக் கண்டதும் அவன் கண்கள் மின்னின. சந்தோஷத்தில் மிதந்தபடி விரலால் தொட்டுக் காட்டினான். அவனை அனுப்பிவிட்டு சார் இன்னொருவனை அழைத்தார். அவனிடம்ஆஸ்திரேலியா எங்க இருக்குது காட்டுஎன்றார். அவனும் கோவிந்தசாமியைப் போலவே உருட்டிப் பார்த்து கண்டுபிடித்துச் சொன்னான். என்னை அழைத்துஆப்பிரிக்கா எங்க இருக்குது கண்டுபிடிஎன்றார். அந்த உருண்டையைத் தொட்டுத் தள்ளத்தள்ள சந்தோஷமாக இருந்தது. நான் எந்த எழுத்தையுமே படிக்காமல் அதை உருட்டித் தள்ளியபடியே இருந்தேன். சார் என்  முதுகில் தட்டிய பிறகுதான் எனக்கு சுய உணர்வு திரும்பியது. மறுகணமே தீவிரமாக விழிகளால் தேடி ஆப்பிரிக்காவைக் கண்டுபிடித்துச் சொன்னேன். இப்படியே ஒவ்வொருவரையும் அழைத்து ஒவ்வொரு இடத்தைக் கண்டுபிடிக்கச் சொன்னார் அவர். பிறகு கதவுகளையும் ஜன்னல்களையும் மூடும்படி சொன்னார். ஒரே கணத்தில் வகுப்பறை இருண்டது. தன் பையிலிருந்து ஒரு மெழுகுவர்த்தியை எடுத்து, அதை உலக உருண்டைக்கு எதிரே ஏற்றி வைத்தார். மெழுகுவர்த்தியின் சுடரால் மேசைமீது வெளிச்சம் பரவியது. உலக உருண்டையின் ஒரு பகுதியில் அந்த வெளிச்சம் பரவி பளபளத்தது. நாங்கள் வாய்பிளந்தபடி அதையே பார்த்துக்கொண்டிருந்தோம். “இந்த மெழுகுவர்த்திதான் சூரியன்னு நெனச்சிக்குங்க. இந்த உலகத்துல வெளிச்சம் படற இடம் பகல். படாத இடம் இரவு, புரியுதா?” என்றார். நாங்கள் அனைவருமே ஒரே குரலில்புரியுது சார்என்றோம். “உலகம் சூரியனை சுத்தச்சுத்த பகலா இருக்கற இடம் நகர்ந்துநகர்ந்து இருள் பக்கமா வந்துடும்.   இருளா இருக்கிற இடம் நகர்ந்துநகர்ந்து பகல் பக்கமா வந்துடும்என்று சொல்லிவிட்டு, மீண்டும் புரியுதாடா?” என்று கேட்டார். நாங்களே அதைக் கண்டுபிடித்துவிட்ட  உற்சாகத்தில்புரியுது சார்என்று கூவினோம்.
சார் அடுத்த கணமே பாடத்திலிருந்து தாவி, ”இந்த உலகத்தை உருண்டைன்னு சொன்னவனை திருச்சபைக்காரங்க என்ன பாடுபடுத்தனாங்க தெரியுமா?” என்று சொல்லிவிட்டு கலிலியோ வதைபட்ட கதையைச் சொன்னார். பிறகு, உண்மையைச் சொன்னதற்காக சிறைபட்ட மற்ற விஞ்ஞானிகளின் கதைகளைச் சொன்னார். ஒரு புத்தகம் எழுதியதற்காக திருச்சபைக்காரர்களால் கழுவிலேற்றிக் கொல்லப்படும் ஒரு பாதிரியாரின் கதையை விவரிக்கும் ஒரு புத்தகத்தின் கதையையும் சொன்னார். அவர் சொல்வதைக் கேட்கக்கேட்க எங்களை அச்சம் சூழ்ந்தது. “நிஜமாவா சார்? என்று பீதியுடன் கேட்டேன். ”என்னதான் கதைன்னு சொன்னாலும் கொஞ்சமாவது உண்மை இருக்குமில்லையா?” என்று அவர் சொன்னார். “அந்தப் புத்தகத்தின் பேர் என்ன சார்?” என்று கேட்டேன்.  அந்தப் புத்தகத்தின் பெயர் முறிந்த பாலம். அதை எழுதியவர் தோர்ண்டென் ஒயில்டேர்னு ஒரு அமெரிக்க எழுத்தாளர். நம்ம நூலகத்துல அந்தப் புத்தகம் இருக்குது, நீங்க அதை எடுத்துப் படிக்கலாம்என்று சொல்லிவிட்டுச் சென்றார் அவர்.
அந்த வாரக் கடைசியில் வந்த நூலக வகுப்பிலேயே அந்தப் புத்தகத்தைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கோவிந்தசாமி அப்புத்தகத்தை வாய்விட்டுப் படிக்க, நாங்கள் கதை கேட்பதுபோலக் கேட்டோம். சின்னப் புத்தகம்தான். ஆனாலும் மூன்று வாரங்கள் அதை அவன் தொடர்ந்து படித்த பிறகுதான் கதை முடிந்தது.  ஆறாம் வகுப்பில் நிகழ்ந்த இச்சம்பவம் என் மனத்தில் அழுத்தமாகப் பதிந்துவிட்டது. உலக உருண்டையைப் பார்க்க நேர்கிற தருணங்களிலெல்லாம் ராமசாமி சாரையும் அவர் நிகழ்த்திக் காட்டிய சோதனையையும் அதைத் தொடர்ந்து அவர் சொன்ன கதையையும் அவர் படிக்கச் சொன்ன முறிந்த பாலம் கதையையும் அடுத்தடுத்து நினைத்துக்கொள்வேன். மறக்கமுடியாத ஆசிரியர் அவர்.
அந்தக் கதை மிகஎளிமையான ஒன்று. ஆற்றின்மீது கட்டப்பட்ட ஒரு பாலத்தின்மீது ஒரு குதிரைவண்டி செல்கிறது. அதில் ஐந்து பேர் பயணம் செல்கிறார்கள். திடீரென பாலம் உடைய, வண்டி ஆற்றுக்குள் விழுந்து ஐந்து பேரும் மரணமடைகிறார்கள். தற்செயலாக, அக்காட்சியைப் பார்த்துவிட்ட ஒரு பாதிரியார் மரணத்தைநோக்கித் தள்ளிவிட்ட அவர்கள் வாழ்க்கையை ஆராய்ந்து ஒரு புத்தகம் எழுதுகிறார். அதை அறிந்த திருச்சபை, மரணத்துக்கான காரணங்களை ஆராய்ச்சி செய்வது தேவனுக்கு எதிரான செயல் என்று அறிவித்து தீக்குள் தள்ளிக் கொன்றுவிடுகிறது.  கதையின் தலைப்பும் அதன் மையமும் என் நினைவில் அப்படியே தங்கிவிட்டன.  ஒரு சிந்தனையாளனுக்கு இந்தச் சமூகம் அளிக்கும் விருது இதுதானா என்றொரு கேள்வியாக அந்தக் கதை என் மனத்தில் வாழத் தொடங்கிவிட்டது.
சமீபத்தில் அறுபதுக்கும் மேற்பட்ட ஆந்திரப் பொறியியல் கல்லூரி மாணவமாணவிகள் வடக்கே சுற்றுலா சென்ற இடத்தில் பியாஸ் நதிக்கரையில் திடுமெனப் புரண்டு வந்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மரணமடைந்த செய்தி எனக்குள் பள்ளியில் படித்த பழைய கதையை நினைவூட்டியது. உடனே அந்தப் புத்தகத்தைத் தேடிப் படிக்கவேண்டும் என்று தோன்றியது. ஆனால், நாற்பத்துநான்கு ஆண்டுகளுக்கு முன்னால் படித்த கதைப்புத்தகத்தை எங்கே போய் தேடுவது என்று புரியாமல் குழப்பமாக இருந்தது. ஒருமுறை ஊருக்குப் போயிருந்தபோது, பள்ளிக்கூடத்துக்கே சென்று தலைமை ஆசிரியரிடம் அறிமுகப்படுத்திக்கொண்டு என் தேவையைத் தெரிவித்தேன்.  அவர் தலை தொங்கஇப்பல்லாம் யாருப்பா புத்தகம் படிக்கறாங்க?” என்றார்.  ஒரு மிகச்சிறிய அறைதான் நூலகத்துக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. குப்பை நெடி அடித்தது. பக்கத்தில் நிற்கவே முடியவில்லை. ஆசையை அடக்கிக்கொண்டு ஏமாற்றத்தோடு திரும்பிவிட்டேன். அவ்வப்போது முறிந்த பாலம் என்கிற தலைப்புமட்டும் நினைவில் வந்துவந்து போக, அதை நான் செல்கிற இடங்களில் இருந்த நூலகங்களிலெல்லாம் தேடியபடியே இருந்தேன்.
என் முயற்சி வீண்போகவில்லை. பெங்களூர் தமிழ்ச்சங்கத்தில் ஒருநாள் அதைக் கண்டுபிடித்துவிட்டேன். ஒரு புத்தகத்தாங்கியில் வாழ்க்கை வரலாறு பிரிவில் ஓரமாக ஒதுங்கிக் கிடந்தது. ஆசையோடு எடுத்து தூசு தட்டிவிட்டு புரட்டினேன். பழுப்பேறிய தாள்களைப் புரட்டவே முடியவில்லை. ஒடிந்து நொறுங்கிவிடும்போல இருந்தது. வீட்டுக்கு எடுத்துச் செல்லமுடியாத நிலையில் இருந்தது. பள்ளிச்சிறுவனாக மாறிவிட்டதுபோல மனம் உணர, நூலகத்திலேயே ஓரமாக உட்கார்ந்து புத்தகத்தைப் படித்தேன். தோர்ண்டன் ஒயில்டெரின் நாவலை தமிழில் மொழிபெயர்த்தவர் பெயர் தெரியவில்லை. அந்தப் பக்கம் கிழிந்திருந்ததால் அறிந்துகொள்ள முடியவில்லை.
நாவலில் ஐந்து பகுதிகள் அடங்கியுள்ளன. முதல் பகுதி ஒரு கதைச்சுருக்கம்போல அமைந்திருக்கிறது. பெரு என்னும் நாட்டில் லிமா என்னும் ஊரிலிருந்து கஸ்கோ என்னும் ஊருக்குச் செல்லும் பெரிய சாலையின் இடைவழியில் ஒரு பாலம் அமைந்திருக்கிறது. இங்கானியர் என்னும் பூர்வீகக்குடிகளால் ஓசர் என்னும் ஒருவகையான கொடிகளைக்கொண்டு ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்கு முன்னால் பின்னப்பட்டது அந்தப் பாலம். அதன்மீது நாள்தோறும் நூற்றுக்கணக்கானவர் நடந்து செல்வது வழக்கம். சன்னமான மரப்பலகைகளைப் படிகளாக அமைத்து கொடிகளைக் கொண்டு பின்னிய கொடியேணி என்றே அதைச் சொல்லவேண்டும். காய்ந்த திராட்சைக்கொடிகளால் அதற்கு கைப்பிடியும் பின்னப்பட்டிருந்தது. அந்தப் பாலத்தின் பெயர் சேன் லூயி ரே. பிரான்ஸ் நாட்டு செயிண்ட் லூயி அப்பாலத்துக்கு தன் பெயரைச் சூட்டி, அதன் மறுகரையில் ஒரு மாதா கோவிலையும் கட்டிவைத்தார். என்றென்றும் நிலைத்துநிற்கக்கூடிய ஒரு பொருளாக நின்றிருந்தது அந்தப் பாலம். ஒருநாள் மதிய நேரத்தில் அந்தப் பாலம் அறுந்து விழுந்தது. அதன்மேல் ஒரு குதிரைவண்டியில் சென்றுகொண்டிருந்த ஐந்து பிரயாணிகளும் கீழே வெகு ஆழத்தில் ஓடிக்கொண்டிருந்த குறுகலான காட்டாற்றில் விழுந்து மரணமடைந்துவிட்டார்கள். ஆற்றங்கரைக்கு அருகில் இருந்த குன்றின் சரிவில் நடந்துகொண்டிருந்த ஜூனிப்பர் என்னும் பாதிரியார் அந்த விபத்தை தற்செயலாகப் பார்க்க நேர்கிறது. வேறு யாராவது அந்தச் சூழலில் நின்றிருந்தால், பத்து நிமிஷம் முன்னால் போயிருந்தால், நானும் அந்தப் பாலத்திலிருந்து கீழே விழுந்து இறந்திருப்பேன், நல்ல வேளை, உயிர் பிழைத்தேன் என நினைத்து, உயிர் பிழைத்ததற்காக தமக்குள் மகிழ்ச்சியடைந்திருக்கக்கூடும். ஆனால் ஜூனிப்பர் மனத்திலோ வேறொரு எண்ணம் உதித்தது. இந்த ஐந்து பேருக்குமட்டும் ஏன் இந்த அவல நிலைமை வரவேண்டும்? இந்த உலகம் ஏதாவது ஒரு திட்டத்தின்படி நடந்து வருமானால், மனித வாழ்க்கையை இயக்குகிற ஒழுங்குமுறை ஏதேனும் இருக்குமானால், திடீரென மாய்ந்த இந்த ஐந்து பேர்களின் வாழ்க்கையிலும் அது மறைந்து நின்று செயல்பட்டிருக்கவேண்டும். ஒன்று நாம் தற்செயலாக வாழ்ந்து தற்செயலாக மடிவதாக இருக்கவேண்டும். அல்லது ஏதோ ஒரு திட்டத்தின்படி மடிவதாக இருக்கவேண்டும். இவ்வாறு நினைத்தவராய், அந்த ஐந்து பேருடைய அந்தரங்க வாழ்க்கைகளை ஆராய்ச்சி செய்து, அவர்கள் கொண்டுபோகப்பட்ட காரணத்தைக் கண்டுபிடித்து விடுவதென்று தீர்மானிக்கிறார்.
இறைவனைப்பற்றிய புத்தகங்கள்கூட அறிவியல் நூல்களைப்போல துல்லியமாக வரையறுத்து எழுதப்படவேண்டும் என்ற எண்ணம் உள்ளவர் பாதிரியார். ஆராய்ச்சிக்காக எடுத்துக்கொள்ளக்கூடிய நிகழ்ச்சிகளுக்கோ குறைவே இல்லை. அவருடைய கண்காணிப்பில் உள்ள மக்களுக்கு எவ்வளவோ இன்னல்கள் நேர்ந்திருக்கின்றன. சிலந்திகள் கொட்டி இறந்தவர்கள் உண்டு. நுரையீரல்கள் பாதிக்கப்பட்டு இறப்பவர்கள் உண்டு. வீடுகள் தீப்பற்றி எரிவதால் மரணங்கள் ஏற்பட்டதுண்டு. ஆனால் அவை அனைத்தும் மனிதர்களுடைய தவறுகளால் ஏற்படுபவை. நிச்சயமாக நிகழக்கூடியவை என்றில்லாதவாறு ஐயப்பாட்டுக்கிடமானவை. ஆனால் சேன் லூயி ரே பாலம் முறிந்து விழுந்த சம்பவமோ, கடவுளின் செயலாகும். அறிவியல்பூர்வமான தன் ஆராய்ச்சிக்கு இதுதான் உகந்த விஷயமென நினைத்தார் பாதிரியார். ஆறு ஆண்டுகள் இடைவிடாது பாடுபட்டு, இறந்துபோன பிரயாணிகளைப்பற்றிய தகவல்களைத் திரட்டித் தொகுத்தார். ஒவ்வொரு சிறுசிறு நிகழ்ச்சிகளையும் சம்பவங்களையும் ஆதாரங்கள்ஐயும் தொகுத்து, கடவுள் தன் மெய்யறிவை வெளிப்படுத்துவதற்கு குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட மனிதரை ஏன் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று மெய்ப்பித்தார். இறந்துபோனவர்களுக்கு ஏதோ நினைவுச்சின்னம் எழுப்புவதற்காகத்தான் பாடுபட்டுக்கொண்டிருக்கிறார் என இதுவரை நினைத்திருந்த பொதுமக்கள் அவருடைய புத்தகம் வெளிவந்ததும் அவர்மீது வெகுண்டெழுந்தனர். ஊர் மைதானத்தில் அவருடைய புத்தகத்தைக் குவித்து நெருப்பிட்டுப் பொசுக்கினார்கள். எப்படியோ இரண்டு பிரதிகள் மட்டும் ஒரு பல்கலைக்கழகத்தின் நூலகத்தில் கிடந்து தப்பித்துவிட்டன.
முறிந்த பாலத்திலிருந்து விழுந்து இறந்த நபர்களைப்பற்றிய கதைகளாக மற்ற பகுதிகள் விளங்குகின்றன. ஒவ்வொருவருடைய பின்னணியையும் அழகாக விவரித்து, எத்தகைய சூழல் அவர்களை அக்கணத்தில் பாலத்தைநோக்கிச் செலுத்தியது என்பதையும் விரிவாக முன்வைக்கின்றன. இரண்டாம் பகுதி டோனிமேரியா என்னும் தாயையும் அவள் தத்தெடுத்து வளர்க்கும் பெப்பிடா என்னும் அனாதைச்சிறுமியையும் கிளாரா என்னும் அவளுடைய மகளையும் பற்றியதாகும். டோனாமேரியா அழகற்ற ஒரு பெண். தனிமைவிரும்பி. திருமணமாகி, குழந்தை பிறந்த பிறகும்கூட அவளுடைய அடிப்படைக்குணம் மாறவில்லை. தன் மகள் மீது மிகவும் பிரியமுடன் இருந்தாள் அவள். ஆனால் அவளுடைய அளவற்ற பிரியம் மகளுக்குச் சலிப்பையே தருகிறது. அவளுடைய அன்பின் பிடியிலிருந்து விலகிச் செல்ல தருணம் பார்த்திருந்த அவள், திருமண வயது வந்ததும் ஸ்பெயின் நாட்டுக்காரன் ஒருவனை மணம் புரிந்துகொண்டு நகரைவிட்டு சென்றுவிடுகிறாள். மகளிடம் காட்டமுடியாத அன்பை கடிதங்கள் வழியாகக் காட்ட முடிவெடுத்து, கடிதங்கள் எழுதத் தொடங்குகிறாள் டோனிமேரியா. மேலும், தனக்குத் துணையாக பெப்பிடா என்னும் அனாதைச்சிறுமியை ஓர் இல்லத்திலிருந்து அழைத்து வந்து வளர்க்கிறாள். அம்மாவும் மகளும் ஆண்டுக்கணக்கில் மாறிமாறி கடிதங்கள் எழுதிக்கொள்கிறார்கள். முதுமையடைந்த நிலையில் ஒருநாள் தன் வாழ்க்கையே வீணாகிவிட்டதாக மனம் குமைகிறாள் டோனிமேரியா. புதியதொரு வாழ்க்கையை புதியதொரு இடத்தில் தொடங்கவேண்டும் என முடிவெடுக்கிறாள். இரண்டு நாட்கள் கழித்து அவள் தான் வளர்த்துவரும் அனாதைச்சிறுமியுடன் லிமாவுக்குப் பயணமாகிறார்கள். இடைவழியில் பாலத்தைக் கடக்கும்போதுதான் விபத்து நிகழ்ந்துவிடுகிறது.
மூன்றாவது பகுதி எஸ்தபென் என்பவனைப்பற்றியது. கன்னிமாடத்தில் கண்டெடுக்கப்பட்ட அனாதைக்குழந்தைகளான இரட்டையர்களில் ஒருவன் அவன். இன்னொருவன் பெயர் மான்யுவல். கன்னிமாடத்தில் இருப்பவர்களே அக்குழந்தைகளை வளர்க்கிறார்கள். வாலிபர்களாக வளர்ந்தபிறகு, அவர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டியிருக்கிறது. கிடைத்த வேலைகளைச் செய்துகொண்டு கோவில் வளாகங்களில் உறங்கி பொழுதைக் கழிக்கிறார்கள். துறைமுகத்துக்குச் சென்று கப்பலிலிருந்து சரக்குகளை ஏற்றி இறக்கும் வேலையைச் செய்கிறார்கள். ஒவ்வொரு மாகாணமாக மாடுகளை ஓட்டிச் செல்கிறார்கள். படகோட்டுகிறார்கள். லிமா நகரத்துக்கு வந்து நாடகங்கள் எழுதிச் சம்பாதிக்கிறார்கள். பெரிச்சோல் என்னும் நாடகக்காரிமீது மையல் கொள்கிறான் மான்யுவல். அவளிடமே கடிதம் எழுதும் வேலையில் சேர்ந்துகொள்கிறான். மான்யுவல் எப்போதும் நாடகக்காரியுடன் இருப்பதால் தனிமையில் வாடுகிறான் எஸ்தபென். அவனுடைய துயரத்தைத் தீர்ப்பதற்காக, நாடகக்காரியைவிட்டு விலகி வருகிறான் மான்யுவல். எதிர்பாராத விதமாக அவன் காலில் அடிபட்டுவிடுகிறது. அது காய்ச்சலாக முற்றிவிட, தீராத வேதனையுடன் அவன் மரணமடைந்துவிடுகிறான். உடன்பிறந்தவனைப் பற்றிய நினைவுகளோடு அவன் நகரமெங்கும் மன அமைதியில்லாமல் அலைகிறான். ஏற்கனவே அறிமுகமுள்ள ஒரு மாலுமியைச் சந்தித்து உரையாடுகிறான். அவர் அவனைக் கடற்பயணத்துக்கு அழைத்துச் செல்வதாகச் சொல்கிறார். முதலில் தயக்கமிருந்தாலும் பிறகு அவன் அந்த ஏற்பாட்டுக்கு ஒத்துக்கொள்கிறான். ஒரு நீண்ட பயணம் தனக்கு ஆறுதல் அளிக்கக்கூடும் என்று அவன் நம்புகிறான். கப்பல் ஆற்றிலிருந்து கடலைநோக்கிக் கிளம்புகிறது. சேன் லூயி பாலத்தை அடைந்ததும் மாலுமி கீழே இறங்கி சில சாமான்களை வாங்கிவரச் செல்கிறார். பொழுதுபோக்குக்காக கீழே இறங்கிய எஸ்தபென் பாலத்தின்மீது நடந்தபடி ஆற்றை வேடிக்கை பார்க்கிறான். அப்போதுதான் யாருமே எதிர்பாராத வகையில் விபத்து நிகழ்ந்துவிடுகிறது.
நான்காவது பகுதி பையோவைப்பற்றியது. ஒரு விலைமகளுக்கு மகனாகப் பிறந்து, பல செய்யக்கூடாத வேலைகளையெல்லாம் செய்து, பல ஊர்களில் நாடோடியாகத் திரிந்து வாழ்க்கையை நடத்துகிறவன். கட்டுப்பாடில்லாத சுதந்திரம், அழகுப்பெண்களின் அருகாமை, நாடகமேடை ஆகிய மூன்று விஷயங்களில் அளவற்ற ஈடுபாட்டுடன் இருக்கிறான். எங்கெங்கோ அலைந்து பெரு நாட்டை வந்தடைந்த சமயத்தில் ஒரு விடுதியில் பாடிப் பிழைக்கிற பன்னிரண்டு வயதே நிரம்பிய ஒரு சிறுமியைப் பார்க்கிறான். பெரிய அனுபவமுள்ள பாடகர்களைப்போல அவளும் பாட முயற்சி செய்வதை அவன் கவனிக்கிறான். அவனுடைய மனத்தில் ஓர் எண்ணம் உதிக்கிறது. உடனே அவளை பணம் கொடுத்து வாங்கிக்கொள்கிறான். இதுவரைக்கும் அவள் உறங்குவதற்கு சரியான ஓர் இடம் கூட இருந்ததில்லை. சாராயக்கிடங்குகளில் முடங்கிக்கிடந்தவளுக்கு  பையோமாமனுடைய வீட்டில் ஒரு கட்டில் கிடைக்கிறது. அவளுக்கு நல்ல உணவு கொடுத்து, உடைகள் கொடுத்து, ஆடல் பாடல்களைச் சொல்லித் தந்து புகழ்பெற்ற பாடகியாகவும் நடிகையாகவும் வளர்த்தெடுக்கிறான். அவன் சொல்லித்தரும் ஒவ்வொன்றையும் அவள் உற்சாகத்துடன் கற்றுக்கொள்கிறாள்.
அவர்கள் இருவரும் நாடுமுழுக்க அலைகிறார்கள். எல்லா விடுதிகளிலும் பாடி பணம் சம்பாதிக்கிறார்கள். பெரு நாட்டின் வைசிராய் தற்செயலாக அவளைச் சந்தித்து, அரண்மனை விருந்துக்கு அழைக்கிறார். பழக்கம் காதலாக மாறிவிட வைசிராய் அவளை மணந்துகொள்கிறார். வைசிராய்மூலம் அவள் மூன்று பிள்ளைகளுக்குத் தாயாகிறாள். வரவர அவளுக்கு நடிப்பில் வெறுப்பு ஏற்படுகிறது. மேலும் பாமர மக்களில் ஒருத்தியாக தன்னை யாரும் கருதாமல் பிரபுவம்சத்தைச் சேர்ந்தவளாக நினைத்துக்கொள்ளவேண்டும் என நினைக்கிறாள். எல்லாவற்றிலிருந்தும் ஒதுங்கி, ஒரு குன்றின்மீது வசதியாக ஒரு மாளிகையைக் கட்டிக்கொண்டு நோயாளி மகனான டான் ஜெய்மியுடன் வசிக்கத் தொடங்குகிறாள். அவள் நாடகமேடையை விட்டு ஒதுங்கி வாழ்வது பையோமாமனுக்குப் பிடிக்கவில்லை. ஒருநாள் அவளைச் சந்திக்க குன்றின்மீதுள்ள மாளிகைக்கு வருகிறான். நடிப்பதற்கு வரும்படி அழைப்பு விடுக்கிறான். ஆனால் அவள் தொடர்ந்து மறுக்கிறாள். திடுமென ஊரில் பரவிய அம்மை நோயால் அவள் பாதிக்கப்படுகிறாள். அவள் முக அழகை இழந்துவிடுகிறாள். மருத்துவச் செலவுக்கு அவள் தன் மாளிகையை விற்கவேண்டி வருகிறது. பொலிவை இழந்த அவள் ஒதுங்கிச் செல்கிறாள். ஆனால் அவளைத் தொடர்ந்து சென்று வலியுறுத்துவதை பையோ விடவில்லை. அவளோ அவனை விரட்டுவதிலேயே குறியாக இருக்கிறாள். கடைசியில் அவன் அவளுடைய மகனை அழைத்துச் செல்ல அனுமதி கேட்கிறான். அவனைக் குணப்படுத்தி நல்லபடி வளர்ப்பதாக வாக்குறுதி அளிக்கிறான். நீண்ட விவாதங்களுக்குப் பிறகு அவள் தன் மகனுடன் அதைப்பற்றிப் பேசுவதாகவும், அவன் அந்த ஏற்பாட்டுக்கு இசைந்தால், அவன் தங்கியிருக்கும் விடுதிக்கு அவனே வந்து சேர்வான் என்று சொல்லிவிட்டுச் செல்கிறாள். மறுநாள் மதியம் பையோ விடுதியில் இருக்கும்போது அந்தச் சிறுவன் தனியாக அங்கே வந்து சேர்கிறான். அவன் உடைகள் கிழிந்திருக்கின்றன. மாற்று உடைகள் கொண்ட மூட்டையொன்று அவன் கையிலிருக்கிறது. செலவுக்கு அவன் தாய் கொடுத்த ஒரு பொற்காசை அவன் வைத்திருக்கிறான். இரவில் உறக்கம் வராதபோது பார்த்துக்கொள்ள மின்னுகிற கல் ஒன்றும் அவன் கையில் இருக்கிறது. இருவரும் வண்டியில் புறப்படுகிறார்கள். சேன் லூயி ரே பாலத்தை நெருங்கும்போது, பாலத்தைக் கடந்த பிறகு ஓய்வெடுக்கலாம் என்று சிறுவனிடம் சொல்கிறான் பையோ. அதற்கு அவசியமில்லாதபடி இருவரும் முறிந்த பாலத்திலிருந்து விழுந்து இறந்துபோகிறார்கள்.
ஐந்தாம் பகுதி முழுக்கமுழுக்க ஜூனிப்பர் பாதிரியாரின் ஆய்வு முயற்சிகளும் முடிவுகளும் கொண்டதாக உள்ளது. பல ஆண்டுகள் முயன்று அவர் பலரைச் சந்தித்துப் பேசி, பல தகவல்களைத் தேடித் தொகுத்துக்கொள்கிறார். அந்த விபத்தினால் கொடியவர்களை கடவுள் அழித்துவிட்டதாகவும் நல்லவர்களை விரைவாகவே தன்னிடம் அழைத்துக்கொண்டதாகவும் கருதுகிறார். உலகினர்க்கு அறிவு புகட்டுவதற்காகவ்வே கடவுள் பணக்காரர்களுக்கும் கர்வமுள்ளவர்களுக்கும் மனக்குழப்பத்தை அளிக்கிறார் என்றும் நினைக்கிறார். தாழ்மையுடனும் பணிவுடனும் நடந்துகொள்கிறவர்கள் பெரிதும் பாராட்டப்படுவதாகவும் எண்ணுகிறார். எனினும் அவருக்குத் தான் கண்ட காரணங்கள் அவ்வளவாகச் சரியென்று கொள்ளவும் முடியவில்லை. அவர் எழுதிய புத்தகம் நீதிபதிகளின் பார்வைக்கு வருகிறது. அவர்கள் பாதிரியாரை மதவிரோதி என்றும் அவர் எழுதிய புத்தகத்தை மதத்துக்கு எதிரானது என்றும் அறிவிக்கின்றனர். புத்தகங்களை பொது இடத்தில் கொண்டுவந்து குவித்து எரித்துப் பொசுக்கவேண்டும் என்றும் பாதிரியாரைக் கொல்லவேண்டுமென்றும் அறிவிக்கின்றனர். பாதிரியார் யாரையும் எதிர்த்து கலகம் செய்யவில்லை. திருச்சபை விதிக்கும் தண்டனையை ஏற்றுக்கொள்ளவே நினைக்கிறார். கிறித்து மதத்தின் தூய்மையைக் காப்பாற்றுவதற்காக  உயிரைவிடலாம் என நினைக்கிறார். அதே சமயத்தில் அவர் மனத்தின் ஒரு மூலையில் தன் நடவடிக்கைகள் சரியானவையே என்றும் தனக்கு விதிக்கப்பட்டிருக்கும் தண்டனை பிழையானது என்கிற எண்ணமும் எழுந்து பாடாய்ப்படுத்துகிறது. மறுநாள் பொது இடத்தில் கூட்டம் கூடியபோது, தனது நோக்கங்கள் யாவும் மதத்துக்கு  ஆதரவானவையே என யாரேனும் ஒருவராவது சொல்லமாட்டார்களா என பெரிதும் எதிர்பார்த்தபடி, சுற்றியிருந்தவர்களையே  ஏக்கத்துடன் பார்த்தபடி இருக்கிறார். ஒருவர்கூட வாய் திறக்காமல் வேடிக்கை பார்த்தபடி இருக்க, எரியும் தீயில் அவர் தள்ளிவிடப்பட்டுக் கொல்லப்படுகிறார்.
ஓராண்டுக்குப் பிறகு, இறந்தவர்களின் தொடர்புடையவர்கள் தேவயாலயத்துக்கு வந்து சந்தித்துக்கொள்கிறார்கள். அப்போதைய அவர்களுடைய மனநிலையின் பதிவுடன் அப்பகுதி முடிவடைகிறது. நமது அன்புக்குரியவரை நாம் நினைவுகொள்ளவேண்டும் என்பதுகூட தேவையில்லை. அன்போடு நாம் எண்ணும் எண்ணங்கள் அவ்வன்புக்குரியவரைச் சென்று சேர்கின்றன என்று எண்ணுகிறார் கன்னிமாடத்தின் துறவி. உயிரோடு இருப்பவர்களின் உலகம் ஒருபக்கமாகவும் இறந்தவர்களின் உலகம் இன்னொருபக்கமாகவும் இருக்கின்றன. இரண்டு உலகங்களையும் இணைப்பது அன்புமட்டுமே. வாழ்வில் மிஞ்சுவது அன்புமட்டுமே. வாழ்வின் பொருளே அன்புதான் என்று அவர் நினைத்துக்கொள்கிறார்.
உண்மையைக் கண்டறிய ஆய்வு நிகழ்த்திய மனிதனைவிட, அவனை உயிருடன் கொல்லும் மதம் பெரிதாகக் கருதப்பட்டதைத் தாங்கிக்கொள்ள இயலாத பதற்றம்தான் சிறுவயதில் இக்கதையைப் படித்ததும் பதிந்துவிட்டதற்குக் காரணம். சிந்தனையாளனுக்கும் சமூகத்துக்கும் இடையிலான உறவாக அதை வகுத்துக்கொண்டதால்தான் இன்றளவும் அதை நினைவில் வைத்திருக்கிறேன் எனத் தோன்றுகிறது. இன்று புதிதாகப் படிக்கும்போதும் இக்கதை எனக்குப் பிடித்தமாகவே உள்ளது. காரணம் மட்டுமே வேறு. ஒவ்வொருவருடைய வாழ்விலும் நிறைந்திருக்கிற துயரங்களையும் நேர்மையான முறையிலோ அல்லது நேர்மையற்ற முறையிலோ, அவற்றை எப்படியாவது கடந்துசெல்ல மனிதர்கள் எடுக்கும் முயற்சிகளும் உலகெங்கும் ஒரே விதமாகவே இருப்பதை உணரமுடிகிறது. ஜெயகாந்தன் சிறுகதைகளிலும் குறுநாவல்களிலும் காணக்கூடிய பாத்திரங்களின் சாயல்களை இப்பாத்திரங்கள் பலவற்றில் உள்ளன. வாழ்வின் துயரங்களை வாசிப்பது, ஒருவகையில் கண்ணீரால் நம் நெஞ்சைக் கழுவி நம்மை அழுக்கற்றவர்களாகவும் சுமைகளற்றவர்களாகவும் மாற்றிக்கொள்வதற்காகவே என்று தோன்றுகிறது. முறிந்துபோன கனவுகள், முறிந்துபோன வாழ்வு ஆகியவற்றின் அடையாளமாகவே முறிந்த பாலம் இருக்கிறது. பாலத்துக்கு இந்தப் பக்கம் அவர்கள் நடத்தியது ஒருவிதமான  வாழ்க்கை. பாலத்துக்கு மறுபக்கம் அவர்கள் தேடிச் செல்வது இன்னொரு விதமான வாழ்க்கை. அந்த வாய்ப்பைத் தேடித்தான் அவர்கள் பயணம் செய்கிறார்கள். அந்த இரண்டாவது வாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்கவே இல்லை. ஒருவேளை, இரண்டாவது வாய்ப்புக்கான கனவு என்பது நமக்கு நாமே நடத்திப் பார்த்துக்கொள்ளும் வெறும் நாடகம்தானோ என்கிற எண்ணம் தோன்றும்போது உதிக்கும் அதிர்ச்சிக்கு அளவே இல்லை. இந்தத் திகைப்பு இந்த நாவலை இன்று என் மனத்துக்கு மிகவும் நெருக்கமாக உணரவைக்கிறது.