நிறங்களுக்கும்
மனித குணங்களுக்கும் இருக்கும் உறவை உணர்த்துவதுதான் ஓவியத்தின் பாலபாடம். முகங்களே இன்றி, வண்ணத்தீற்றல்களைமட்டுமே கொண்ட ஓவியங்கள்கூட மறைமுகமாக மனித குணங்களை, மானுட உணர்வுகளை, வாழ்வின் கோலங்களை உணர்த்துபவையாகவே உள்ளன. ஓவியங்களுக்குள் பல்வேறு முகங்கள் புதைந்திருப்பதுபோலவே ஓவியர்களுக்குள்ளும் பல்வேறு முகங்கள் புதைந்திருக்கின்றன. நட்பை விரும்பும் முகம். நட்பை நிராகரிக்கும் முகம். தன்னை முன்னிறுத்தி முன்னேற விழையும் வேட்கைமுகம். தன் முயற்சியின் முழுமைக்காக அல்லும்பகலும் பாடுபடும் முகம். விட்டல்ராவின் காலவெளி நாவல் ஓவியர்கள் தீட்டும் வண்ணமுகங்களையும் ஓவியர்களுக்குள் புதைந்திருக்கும் வண்ணமுகங்களையும் ஒரே நேரத்தில் ஒளியையும் நிழலையும் இணைத்த சித்திரம்போலக் காட்சியளிக்கும் மரத்தடி நிழலென ஓவியமாகத் தீட்டிவைத்திருக்கிறது. 1988 ஆம் ஆண்டில் எழுதி 1990 ஆம் ஆண்டில் முதல்பதிப்பாக வெளிவந்த இந்த நாவல் இப்போது இரண்டாவது பதிப்பாக வெளிவந்திருக்கிறது. ஏறத்தாழ கால்நூற்றாண்டு காலம் கடந்த நிலையிலும் இன்றைய சூழலுக்கும் ஏற்றதாகவே உள்ளது நாவல்.
நான்கு இளம் ஓவியர்கள் ஒன்றிணைந்து ஒரு குழுவை உருவாக்குகிறார்கள். ஓவியனும் எழுத்தாளனுமான ஒரு நண்பனும் மற்றும் சிலரும் அதற்குத் துணையாக இருக்கிறார்கள். தம் ஆளுமையை வெளிப்படுத்தி உலகின் கவனத்தை ஈர்ப்பதோடு கலையுலகில் அழுத்தமான தடம் பதிப்பதுதான் ஒவ்வொருவருக்கும் உள்ள நோக்கமாகும். குழுவில் எல்லோருமே சுதந்திரமானவர்கள். தமக்கு விருப்பமான உள்ளடக்கம் சார்ந்தே ஒவ்வொருவரும் ஓவியம் தீட்டுகிறார்கள். நல்ல எண்ணிக்கையில் ஓவியங்கள் உருவானதும் அரங்குகளில் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்கிறார்கள். ஓவிய ரசிகர்களும் விமர்சகர்களும் கண்காட்சிக்கு வருகிறார்கள். சில ஓவியங்கள் விற்றுப் போகின்றன. ஓவியங்கள் குறித்து விமர்சகர்கள் கட்டுரை எழுதுகிறார்கள். ஆனால் காலம் அவர்களைத் தொடர்ந்து ஒன்றாக இயங்க அனுமதிக்கவில்லை. ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு விதத்தில் தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் வேகமும் வேட்கையும் எழுகிறது. நான்கு கண்காட்சிகள் நடந்துமுடியும்வரை மட்டுமே குழு நிலைத்து இயங்குகிறது. அவர்களுடைய சாதனைப்பயணம் தொடங்குவதற்கு முன்பாகவே குழு இயங்காநிலை உருவாகி, கடைசியில் கலைந்துபோய்விடுகிறது. குழுவின் இயக்கத்துக்காக வாடகைக்கு அமர்த்திக்கொள்ளப்பட்ட அறை காலி செய்யப்படுகிறது. அங்கே நிறைந்திருந்த பொருட்கள் அப்புறப்படுத்தப்படுகின்றன. ஓவியங்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன. சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு அக்குழுவை மீண்டும் கட்டியெழுப்பும் முயற்சி உருவாகிறது. ஓவியர்களின் பழைய ஓவியங்களை பல இடங்களிலிருந்து திரட்டி, சில புதிய ஓவியங்களுடன் ஐந்தாவது கண்காட்சி நடைபெறுகிறது. ஒரு
குழுவைக் கட்டி, ஐந்து கண்காட்சிகள் நடைபெறும் கால அளவுதான் நாவல் இயங்கும் காலம். இந்தக் காலத்துக்குள் ஒவ்வொருவரும் இயங்குவதற்கான தனித்தனி வெளிகளை அவர்களே கண்டடைந்துகொள்கிறார்கள். காலத்தைத் துணையாகக் கொண்டு இந்த வெளிகள் உருப்பெறுகின்றனவா அல்லது இவ்வெளிகளை இணைத்துக்கொண்டு காலம் நகர்ந்துபோகிறதா என்பது புரியாத புதிர்.
கலைஞர்கள் தம்மைச் சுற்றி சதாகாலமும் கவனித்துக்கொண்டே இருக்கிறார்கள் என்பதும் ஏதோ ஒரு
கணத்தில் அவர்கள் கவனத்தை ஈர்க்கும் ஓர் அம்சம் கலையை உருவாக்குவதற்கான அகத்தூண்டுதலை அளிக்கிறது என்பதும் பொதுவாக உள்ள நம்பிக்கை. இந்த
உண்மையை நிறுவிக் காட்டுவதுபோல நாவலில் பல இடங்கள் உள்ளன. மிகப்பெரிய அரசமரம். அந்த மரத்தடியில் ஒரு பிள்ளையார் சிலை. இக்காட்சியைக் கண்டு மன எழுச்சி கொள்கிறான் ஓர் ஓவியன். ஒரு வீட்டு மாடியில் பேசிக்கொண்டிருக்கும்போது அறுந்து விழும் காற்றாடியைக் கையால் பற்றியெடுக்கும் இன்னொரு ஓவியன், அக்காட்சியால் உத்வேகம் கொள்கிறான். வங்கக் கடலோரம் வந்த அமெரிக்கக் கப்பற்படையின் மிரட்டல் ஒரு பயனுமில்லாத வெற்றுக் கூச்சலாக பிசிபிசுத்துப் போய்விட்ட அரசியல் செய்தியை ஒரு செய்தியாகப் படிக்கும் மற்றோர்
ஓவியன் அச்செய்தியாலேயே தூண்டப்பட்டு ஓவியத்தைத் தீட்டத் தொடங்கிவிடுகிறான். எல்லாக் காட்சிகளும் நம்பத் தகுந்த விதத்தில் மிகையின்றி அமைந்திருப்பது நாவலின்
சிறப்பாகும்.
கேன்வாசின்மீது
பாலட் கத்தியால் நிறங்களை வைத்து வழித்துவழித்து ஓவியத்தை உருவாக்கும் கலைஞன் சக்கரவர்த்தி. தீவிரமான
நிறங்களையும் மென்மையான நிறங்களையும் இணைத்தும் விலக்கியும் ஓவியத்தை உருவாக்கும் கலைஞன் உன்னிகிருஷ்ணன். இருவருமே
தனித்தன்மை மிக்க ஓவியர்கள். பெரும்பாலும் இயற்கைக்காட்சிகளை வெட்டியும் சிதைத்தும் இணைத்தும் அவற்றின் சாரமாகத் தோன்றும்வண்ணம் ஓவியமாகத் தீட்டுபவன் முருகேசன். தைல ஓவியங்கள், போர்ட்ரெய்ட் ஓவியங்கள், கொலாஜ் ஓவியங்கள் என எல்லாவற்றிலும் திறமைகொண்ட ஓவியன் தர்மன். இவர்களே குழுவாக இயங்கும் ஓவியர்கள். இவர்கள் அனைவரையும் இணைக்கும் சக்தியாக உள்ளவன் ஓவியனும் எழுத்தாளனுமாக உள்ள பிரசன்னன்.
நால்வர் குழுவிடையே ஒருவித சோர்வு கவியத் தொடங்கிய தருணத்தில் சக்கரவர்த்தி கனடா தேசத்துக்குச் சென்றுவிடுகிறான். ஓவியத்தையும் தீட்டிக் கொண்டு, வேலையையும் செய்து சம்பாதிக்கலாம் என ஆசையைத் தூண்டும் அவனுடைய உறவினர் ஒருவருடைய முயற்சியால் அந்தப் பயணம் சாத்தியமாகிறது. மிகச்சிறந்த ஓவியனாக வரவேண்டிய ஒருவனை காலம் எங்கோ ஒதுக்கித் தள்ளிவிடுகிறது. அவனால் மீண்டும் ஓவியத்துக்குள் வரவே முடியவில்லை. ஓவியம் தீட்டும் ஆசையை நண்பனுக்குக் கடிதம் எழுதித் தீர்த்துக்கொள்கிறான். அயல்நாட்டு
வாசத்தால்,
இந்திய ஓவியங்களுக்குள்ள சந்தைமதிப்பை அவன் உணர்ந்துகொள்கிறான். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தியாவுக்குத் திரும்பும் அவன் மற்ற ஓவிய நண்பர்களைச் சந்தித்து, விற்பனைக்காக ஓவியங்களைத் தீட்டு அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறான். முருகேசனும் தர்மனும் விற்பனைக்கு ஏற்றவகையில் ஓவியம் தீட்டுகிறார்கள். உன்னிகிருஷ்ணனிடம் மட்டுமே ஓவியத்துடன் தீவிரமான ஒட்டுதல் வெளிப்படுகிறது. ஆரம்பகட்ட கண்காட்சியொன்றில் உன்னிகிருஷ்ணனின் ஓவியங்களைப் பார்த்த விமர்சகரொருவர் அவனைத் தனிக்கண்காட்சி வைக்கும்படி தூண்டுகிறார். அந்தத் தூண்டுதலை, குழுவிலிருந்து அவனை வெளியேற்றவைக்கும் முயற்சியென்றே மற்றவர்கள் கருதி வருத்தங்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள். ஆனால் காலம் செல்லச்செல்ல அவர்கள் அனைவரும் சாதனைப் பயனத்தில் பின்தங்கிவிட, உன்னிகிருஷ்ணன்மட்டுமே தொடர்ந்து தன் பயணத்தைத் தொடர்கிறவனாக இருக்கிறான். நாளைய கனவு என்பது அவனிடம் மட்டுமே உள்ளது. விமர்சகன் கண்டுசொன்ன சொல் காலத்தைக் கடந்து உண்மையாக நிலைத்துவிடுகிறது.
சக்கிரவர்த்தியின்
அரசமரத்தடிப் பிள்ளையார் ஓவியத்தை அம்பாபாயின் வீட்டில் பார்க்க பிரசன்னன் செல்லும் காட்சியை முக்கியமான ஒன்றாகக் குறிப்பிடத் தோன்றுகிறது. . உயர்ந்த
மரம், மரத்தைச் சுற்றியிருக்கும் மேடை, அதன்மீது கோணல்மாணலாக நடப்பட்ட கல்நாகர்கள், ஒன்றோடொன்று பின்னிப்பிணைய தயார்நிலையிலிருக்கும் எதிரெதிராய் முகம்பார்த்த ஜோடி நாகங்கள், அவற்றுக்கு நடுநாயகமாக பிள்ளையார் என அவன் பார்வை ஒவ்வொரு புள்ளியாக நகர்கிறது. ஒளிபடும்போதெல்லாம் பிள்ளையாரின்
நுனிசுழன்ற துதிக்கையும் வயிற்றுப்பகுதியும் மின்னிப் பளபளத்து சுடர்விடுவதைப் பார்க்கிறான். தனக்கு நேர் எதிரேயிருக்கும் விளக்கைமட்டும் அணைத்துவிட்டுப் பார்க்கும்போது ஒருவிதமாகவும், விளக்கைப் போட்டல் இன்னொரு உணர்வையும், விளக்கையெல்லாம் அணைத்துவிட்டு ஜன்னல் வெளிச்சத்தில் பார்க்க முற்றிலும் வேறொரு உணர்வையும் வழங்குகிறது அந்த ஓவியம். ஒரே ஓவியம் வெவ்வேறு பின்னணியில் வெவ்வேறு உணர்வுகளை வழங்கும் உண்மை ஒரு தரிசனமாகவே உணர்த்தப்படுகிறது. ஒரு கோணத்தில் நாவலின் தரிசனமாக விட்டல்ராவ் முன்வைக்கும் உண்மையும் இதுவே என எடுத்துக்கொள்ளலாம். சாதனைப்பயணத்தைக் கனவுகண்டு நால்வர் குழுவை கட்டியெழுப்பவும், கனவு கைகூடும் முன்பாகவே குழு சிதறிப் போகவும் அடிப்படையான காரணத்தை புகைமூட்டமாக இந்தத் தரிசனம் முன்வைக்கிறது. காலமும் வெளியும் உணர்த்தும் தரிசனம். மனிதர்களை நெருங்கிப் பார்க்கும்போது ஒருமுகம். விலகிப் பார்க்கும்போது வேறுமுகம். வெளிச்சத்தில் பார்க்கும்போது ஒருமுகம். இருளில் பார்க்கும்போது இன்னொரு முகம். உணர்வுகள், உரையாடல்கள் எல்லாமே இப்படித்தான். நெருங்கியிருக்கும்போது ஒன்று. விலகியிருக்கும்போது மற்றொன்று.
நால்வர் குழுவைச் சுற்றி, விற்பனையாளர்கள், மாடலாக நிற்பவர்கள், ஓவியக்கூடங்களைக்கண்ட நிறுவனங்கள், குடும்பங்கள், குடும்ப உறுப்பினர்கள், நெருக்கமான நண்பர்கள், பத்திரிகையாளர்கள், விமர்சகர்கள் ஆகியோரைக் கொண்டதொரு உலகத்தை நம்பத்தகுந்த அளவில் கட்டியெழுப்பியிருக்கிறார் விட்டல்ராவ். மிகச்சிறிய பாத்திரம்கூட உயிர்ப்பாற்றாலோடு உருவாக்கியுள்ளார். ஓவியம் தீட்ட மாடலாக வந்து நின்று எல்லோருடனும் நட்புடன் பழகும் சிந்தியா என்னும் ஆங்கிலோ இந்திய இளம்பெண்ணின் வழியாக அவளுடைய குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே நாவலுக்குள் நிலைத்துநிற்கிறார்கள். ஓவியத்தைப் போலவே அவர்கள் அனைவருமே தனித்தன்மை மிக்க ஆளுமைகளாக இருக்கிறார்கள்.
சிந்தியாவும் சக்கிரவர்த்தியும் வேறுவேறு விளிம்புகளில் நிற்பவர்கள்போன்ற தோற்றத்தை அளித்தாலும், சாராம்சத்தில் அவர்கள் ஒரே நேர்க்கோட்டில் உள்ள புள்ளிகள் என்றே சொல்லவேண்டும். சிந்தியா எளிய ஆங்கிலோ இந்தியப் பெண். ஓவியங்களுக்கு மாடலாக இருக்க இளைஞர்களுக்கு ஒத்துழைப்பவள். கலை, இசை சார்ந்த ரசனையும் உள்ளவள். எல்லா ஆங்கிலோ இந்தியர்களைப்போலவே ’நேற்று நேற்றோடு. இன்றிருப்பதுதான் முக்கியம். இன்றைப்பறிய கவலையே பிரதானம்’ என நினைப்பவள். அதற்காக வரவேற்பாளர், விற்பனையாளர் என கிடைத்த வேலையைச் செய்யத் தயாராக இருப்பவள். சக்கரவர்த்தியின் ஓவியக்கனவுகளோ எல்லையற்றவை. நாளை வரப்போகும் விடியலுக்காகக் காத்திருப்பவை. அவன் ஆற்றலும் மகத்தானது. தொட்டுவிடும் தூரத்தில் உள்ள சாதனைப்புள்ளியை நோக்கி ஓட விழைபவன். அவன் மனம் நாளையில் பதிந்துள்ளது. ஒவ்வொரு கண்காட்சியின்போதும் ஒரு போட்டிக்குத் தயாராவதுபோல தம் ஓவியங்களைத் தீட்டிமுடிக்க தீவிரமாக உழைப்பவன். அவை விலைபோக வேண்டும் என அவன் நினைப்பதில்லை. கலைக்கண்களுக்கு அவை விருந்தாக நிறைவு செய்யவேண்டும் என நினைப்பவன். சிந்தியா கேட்டாள் என்பதற்காகவே ஷாம்பெயின் ஓவியத்தை அவளுக்கு வழங்குபவன். ஒருநாள் ஓவியம் தீட்டும் உத்வேகம் ஒரு நெருப்பைப்போல சட்டென்று நெஞ்சில் மூண்டெழ, படைக்கும் தவிப்போடு ஓவியம் தீட்ட உட்கார்ந்துவிடுகிறான் சக்கரவர்த்தி. அன்று மாலை சிந்தியாவை திரைப்படத்துக்கு அழைத்துச் செல்வதாகச் சொன்னதும் அவளை திரையரங்குக்கு வரச்சொன்னதும் சுத்தமாக மறந்துபோய்விடுகிறது. ஓவியத்தைத் தீட்டிமுடிக்கும்வரை எந்தச் சிந்தனைக்கும் அவன் மனம் இடம் தரவில்லை. இன்று மிகமுக்கியம் என வாழ்கிற சிந்தியா, திரையரங்க வாசலில் அவனுக்காகக் காத்திருந்து, ஏமாந்து திரும்பிச் செல்கிறாள். அவள் மனத்திலிருந்து அவன் மெல்ல சரிந்துவிடுகிறான். அவன் அறியாமலேயே வேறொரு கடையில் வேலைக்குச் சேர்ந்துகொள்கிறாள். அவன் அறியாமலேயே வேறொரு ஆணுடன் பழக் ஆரம்பிக்கிறாள். அவன் அறியாமலேயே திருமணம் புரிந்துகொண்டு வெளிநாட்டுக்குப் பறந்துபோய் விடுகிறாள். வேலை செய்துகொண்டே ஓவியம் தீட்டலாம் என்கிற கனவை விதைக்கும் உறவினர் ஒருவருடைய வார்த்தைக்குக் கட்டுப்படு சக்கரவர்த்தியும் வெளிநாட்டுக்குச் சென்றுவிடுகிறான். ஆனால், காலம் நகரநகர, அவனால் வேலையைமட்டுமே செய்யமுடிகிறது. ஓவியம் தீட்ட முடியவில்லை. குழுவைப் புதுப்பிக்கவேண்டும் என நண்பர்களைத் தூண்டிக்கொண்டே இருந்தாலும், அவர்களால் ஏற்பாடு செய்யப்படும் ஐந்தாவது கண்காட்சியில் வைக்க, அவனால் ஓர் ஓவியம்கூட தீட்டமுடியவில்லை. அவனுடைய நாளைய கனவு என்பது நுரைபோல கரைந்துபோக, அவனும் இன்றில்மட்டுமே கால் ஊன்றியவனாக இருக்கிறான்.
ஓவியத்துக்கான
இடத்தை வீட்டில் தேடி கண்டுபிடித்துச் சுட்டிக்காட்டும் சிந்தியாவின்
மனத்தில் ஓவியனுக்கான இடம் இல்லை. அவள் இன்றில் வாழ்பவள் என்பதால் அவளால் அந்த இடத்தை வழங்க முடிவதில்லை. சமையலறையிலிருந்து வரும்
கரிப்புகை படிந்துபடிந்து அவள் மாட்டிவைத்த ஓவியம் நாளடைவில் பொலிவிழந்துபோகிறது. சக்கரவர்த்தியுடன் அவள் கொண்டிருந்த நட்பும் மங்கிப் போய்விடுகிறது. நட்புக்காக வழங்கப்பட்ட ஓவியம், நட்புக்குரிய இருவருமே ஆளுக்கொரு திசையில் விலகிச் சென்றுவிட, பார்க்க ஆளின்றி வீட்டின் இருளில் தொங்கிக்கொண்டிருக்கிறது.
இன்று எதார்த்தத்தில் காலூன்றி நின்றுகொண்டிருக்கிறது. கலையுலகத்துக் கனவுகள் எல்லாமே நாளையை நோக்கி முகம்திருப்பி நின்றிருக்கின்றன. இன்று
முக்கியமா?
நாளை முக்கியமா? இதற்கான விடையை உய்த்துணரவைப்பதுபோல நாவலில் ஒரு காட்சி இடம்பெற்றிருக்கிறது. சக்கரவர்த்தியின் கனவை நிறைவேற்றும் வகையில் நால்வர் குழுவுக்கு மீண்டும் உயிரூட்டி, ஐந்தாவது கண்காட்சியை சாத்தியப்படுத்திய பிறகு அரங்க வளாகத்தில் இருக்கும் ஒரு பெரிய அரசமரத்தடியில் மல்லாந்து படுத்தபடி மரத்தையும் கிளைகளில் துளிர்த்திருக்கும் புத்தம்புதிய தளிர்களையும் பார்க்கத் தொடங்கினான். மரம் முழுக்க தளிர்கள். பெருங்காற்று வந்துவந்து போனபோதெல்லாம் அந்த பிரம்மாண்டமான மரம் தன் ஏராளமான கிளைகளோடு ஆடுவதைப் பார்த்து, இந்த பூமியே ஆகாயத்தில் ஊஞ்சலாடுவதாக நினைத்துக்கொள்கிறான். அரசந்துளிர்களின் சப்தஜாலத்தில் பதிந்திருந்த அவன் கவனம் மெல்லமெல்ல அவற்றின் நிறங்களின்மீது பதியத் தொடங்குகிறது. வெண்முகில் விலகி நீலவானப் பின்னணியில் இந்தத் துளிர்களின் இளம்பச்சை, இளஞ்சிவப்பு சேர்ந்த ஏகநிறத் தோற்றம் அற்புதமான கான்வாஸ் ஓவியமாக விரிகிறது. இடையிடையே சுரீலென சூரிய ஒளி கண்களைத் தாக்க பிரசன்னன் துளிர்களின் மறைவில் கண்களைத் திருப்பித்திருப்பி சூரியக்கதிரினின்று தப்பிக்கிறான். துளிர்களை இன்றாகவும் சூரியக்கதிரை நாளையாகவும் உருவகப்படுத்திப் பார்க்கலாம். இன்றில் காலூன்றியவர்களுக்கு துளிர்களின் மறைவு மட்டுமே போதும். நாளையை நோக்கி நிற்பவர்கள் எந்த மறைவிலும் ஒதுங்காமல் ஒளிச்சுடர்களை நேருக்குநேர் பார்க்கிறார்கள். சக்கரவர்த்திக்கு நாளையைப்பற்றிய கனவு உண்டு. ஆனால் வாழ்க்கை அவனை இன்றில் புதைத்துவிடுகிறது. முருகேசனும் தர்மனும் நாளையை இன்றுபோலவே புனைவாக்கிக்கொள்ளவும் அதில் திளைக்கவும் தெரிந்தவர்களாக இருக்கிறார்கள். கண் கூசுவதைப் பொருட்படுத்தாமல் உன்னிகிருஷ்ணன் நாளையை நோக்கி நிற்கிறான். கண்களுக்கு சற்றே ஓய்வுகொடுத்துவிட்டு, சுடரில் திளைக்கும் ஆர்வத்தோடு சூரியனின் திசையில் முகம் திருப்புகிறான் பிரசன்னன்.
நாவலில் இடம்பெறும் நிரஞ்சன், அம்பாபாய், சிஸ்டர் பால் என ஒவ்வொரு பாத்திரமும் ஏதோ ஒரு வகையில் ஓவியத்துடன் தொடர்புள்ளவர்களாகவே இருக்கிறார்கள். நிரஞ்சன் பழைய காலத்து நடிகர். குதிரையேற்றம் தெரிந்தவர். அதே சமயத்தில் ஓவியத்தின்மீதும் நீங்காத நாட்டமுள்ளவர். நால்வர் குழு ஓவியர்கள்மீது நட்புணர்வு கொண்டவர். கடைசியாக, சக்கரவர்த்தியின் ஓவியமொன்றை விலைகொடுத்து வாங்கிக்கொண்டு பம்பாய்க்குச் சென்றுவிடுகிறார். ஒவ்வொரு ஓவியக்கண்காட்சிக்கும் தவறாமல் வந்து ஓவியங்களைக் கண்டு களித்து பாராட்டிச் செல்பவர் அம்பாபாய். சக்கரவர்த்தியின் அரசமரத்தடி பிள்ளையார் ஓவியத்தைப் பெற்றுச் சென்று தன் அறையில் வைத்துக்க்கொண்டிருப்பவர். நால்வர் குழுவில் உள்ள நான்கு பேரைவிடவும் மூத்தவன் சிஸ்டர் பால். அவனும் ஓவியக்கல்லூரியில்தான் படித்தவன். கல்லூரி வளாகத்தில் பார்க்கும் பெண்களையெல்லாம் சிஸ்டர் சிஸ்டர் என்று அழைத்துக்கொண்டே இருந்ததால், அவனுடைய பெயர் சிஸ்டர் பால் என்று மாறிவிட்டது. வீட்டை வாடகைக்குக் கொடுத்திருக்கும் நண்பர்கூட ஓவியத்தை ரசிக்கத் தெரிந்தவராக இருக்கிறார். ‘இது எங்க வீட்டுல பழுத்த பழம், சாப்பிட்டுப் பாருங்க’ என்று ருசிப்பதற்காக பப்பாளிப்பழங்களை நறுக்கியெடுந்து வந்து கொடுத்துவிட்டுப் போகும்போது, தற்செயலாக அங்கே தீட்டிவைக்கப்பட்டிருந்த ஊமத்தம்பூ சித்திரத்தைப் பார்த்துப் பாராட்டிவிட்டுச் செல்கிறார். எல்லோரையும் ஈர்க்கும் சக்தியாக இருக்கிறது ஓவியம்.
(காலவெளி. நாவல். விட்டல்ராவ். பாதரசம் வெளியீடு. 2152, முல்லை நகர், ஒன்பதாவது தெரு, அண்ணாநகர் மேற்கு, சென்னை- 40. விலை. 150.)