1914 ஆம் ஆண்டில் தூத்துக்குடியில் இயங்கி வந்த இலக்கிய அமைப்பொன்று ஒரு கவிதைப்போட்டியை அறிவித்தது. படிப்பறிவில்லாத பாமரமக்களும் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் தேசபக்தியை ஊட்டக்கூடிய நூறு பாடல்களை கும்மி சந்தத்தில் எழுதி அனுப்பவேண்டும் என்பதுதான் விதி. பரிசுக்குப் பெயர் கோகலே பரிசு. அப்போது இருபத்தியாறு வயது இளைஞரான கவிஞரொருவர் நாட்டுக்கும்மி என்னும் பெயரில் நூறு பாட்டுகளை அப்போட்டிக்காக எழுதி அனுப்பினார். சில நாட்கள் கழித்து போட்டி அமைப்பாளர்களிடமிருந்து கவிஞருக்கு ஒரு கடிதம் வந்தது. போட்டிக்காக அனுப்பப்பட்டிருந்த பாடல்களில் நான்கு பாடல்களை நீக்கிவிட அனுமதி கேட்டு எழுதப்பட்டிருந்தது. ஒருவேளை அனுமதிக்காவிட்டால், போட்டிக்குரிய கவிதைப்பட்டியலிலிருந்து அக்கவிதை நீக்கப்பட்டுவிடும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
அக்கால மரபுப்படி தெய்வவணக்கம் என்னும் தொடக்கப்பகுதியில் கவிஞர் எழுதியிருந்த பாடல்களைத்தான் அந்த அமைப்பு நீக்கவேண்டும் என்று கோரியிருந்தது. பிரமன் துதி, சிவபெருமான் துதி, கிருஷ்ணன் துதி, கந்தன் துதி என தலைப்பிட்டு, சிலேடை பாணியில் அரவிந்தர், திலகர், கோகலே, மகாத்மா காந்தி ஆகியோரை வணங்கிப் போற்றும் விதமான பாடல்களை கவிஞர் எழுதியிருந்தார். அந்தப் பாடல்களில் கோகலே பாடலைத் தவிர ஏனைய மூன்று பாடல்கள் நீக்கப்படவேண்டும் என்பதுதான் போட்டிக்குழுவினரின் கோரிக்கை. ஆனால் அப்பாடல்கள் நீக்கப்படுவதை கவிஞர் விரும்பவில்லை. தன் எண்ணத்தை உடனே அக்குழுவினருக்கு எழுதித் தெரிவித்துவிட்டார். வேறு வழியில்லாமல் போட்டிக்குழுவும் அவருடைய கவிதையை விலக்கிவிட்டது. பரிசு வேறொருவருக்குச் சென்றது.
சில மாதங்களுக்குப் பிறகு சேலத்தில் சந்திக்க நேர்ந்த தேசபக்தரான அனந்தாச்சாரியாருடன் பேச்சோடு பேச்சாக இந்தத் தகவலைப் பகிர்ந்துகொண்டார் கவிஞர். உடனே அவர் சேலத்திலேயே ஓர் இலக்கியக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து அந்தப் பாடல்களை கவிஞரே பாடி அரங்கேற்றுவதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். அன்று அந்தச் சிலேடைக் கும்மிப் பாடல்களை அனைவரும் விரும்பிக் கேட்டனர். தற்செயலாக அக்கூட்டத்துக்கு வந்திருந்த ராஜாஜியும் அப்பாடல்களைக் கேட்டு மகிழ்ந்தார். அக்கவிஞர் நாடறிந்த கவிஞராக மலர்வதற்கு இச்சம்பவம் ஒரு தொடக்கப்புள்ளியாக அமைந்தது.
அக்கவிஞரின் பெயர் வெ.ராமலிங்கம் பிள்ளை. அடுத்து சில ஆண்டுகளில் நிகழ்ந்த வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகத்தை ஒட்டி, வழிநடைப்பாட்டாக அவர் எழுதிய “கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது, சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்” என்னும் பாடல் தமிழ்நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் ஒலித்தது. அந்தப் பாட்டை சுதந்திரச்சங்கு கணேசன் லட்சக்கணக்கில் அச்சிட்டு தமிழ்நாடெங்கும் வழங்கினார்.
இப்படி எண்ணற்ற சம்பவங்களை நினைவுக்குறிப்புகளாக தன் தன்வரலாற்று நூலில் எழுதியுள்ளார் ராமலிங்கம் பிள்ளை. பாரதியார், வ.உ.சி., திலகர், காந்தி, ராஜாஜி, கிட்டப்பா, டி.எஸ்.எஸ்.ராஜன் என பல வரலாற்று ஆளுமைகளைப்பற்றிய குறிப்புகளால் அவருடைய சுயசரிதை நிறைந்துள்ளது.
பாரதியாரைப்பற்றி ராமலிங்கம் பிள்ளை எழுதியிருக்கும் பகுதி மீண்டும் மீண்டும் படிக்கத் தோன்றும் பகுதியாகும். வாசிப்பின் வழியாக மட்டுமே பாரதியாரைத் தெரிந்துவைத்திருந்த ராமலிங்கம் பிள்ளைக்கு அவரைச் சந்திக்கவேண்டும் என்பது நீண்டநாள் ஆசையாக இருந்தது. அவருடைய நண்பர் நாகராஜ ஐயங்கார் சென்னையில் வழக்கறிஞர் படிப்பு படித்து வந்தார். சென்னையில் அவர் அடிக்கடி “மூர் மார்க்கெட்” சந்திப்புகளில் பாரதியாரைக் கண்டதையும் அவர் பாடல்கள் பாடுவதைக் கேட்டதையும் ஊருக்கு வரும்போதெல்லாம் பிள்ளையோடு பகிர்ந்துகொள்வதுண்டு. இப்படியாக பாரதியாரைச் சந்திக்கும் ஆவல் அவரிடம் பெருகிக்கொண்டே இருந்தது. சில சமயங்களில் பாரதியார் பாடல்களை காதால் கேட்டு மனப்பாடம் செய்துவந்து, ராமலிங்கம் பிள்ளைக்குப் பாடிக் காட்டுகிறார் நாகராஜ ஐயங்கார். உணர்ச்சிமயமான அந்தப் பாடல் வரிகளைக் கேட்டுக்கேட்டு பிள்ளைக்கு பாரதியாரை நேரில் சந்திக்கும் ஆவலும் பெருகியது.
1910 ஆம் ஆண்டில் சென்னையில் ஒரு ஓவியக் கண்காட்சி
நடைபெற்றது. அதையொட்டி அவர்கள் ஒரு ஓவியப்போட்டியை அறிவித்திருந்தார்கள். ராமலிங்கம் பிள்ளை அப்போட்டிக்காக புதியதாக ஓர் ஓவியத்தைத் தீட்டி அனுப்பிவைத்தார். அவருக்கே முதல் பரிசு கிடைத்தது. அதை ஒரு நல்வாய்ப்பாகக் கருதி சென்னைக்குச் சென்று விருதைப் பெற்றுக்கொண்டு, அப்படியே பாரதியாரைப் பார்த்துவிட்டு வரவேண்டும் என்று விரும்பினார் ராமலிங்கம் பிள்ளை. தன்னுடைய நண்பர் சபாபதி பிள்ளை என்பவரோடு அவர் சென்னைக்குச் சென்றார். விழா முடிந்த பிறகு, பாரதியாரைப் பார்க்கும் ஆவலில் அங்கிருந்தே இருவரும் புதுவைக்குச் சென்றார்கள். ஆனால் அவர்கள் சென்ற நேரத்தில் பாரதியார் ஊரில் இல்லை. இரண்டு மூன்று நாட்கள் தங்கியிருந்தும் பயனில்லை. வ.வெ.சு.ஐயரையே மீண்டும் மீண்டும் சந்தித்து உரையாடிவிட்டுத் திரும்பிவிட்டார்கள்.
அப்போது கிட்டாத வாய்ப்பு அவருக்கு மிகவும் தற்செயலாக ஒன்பது ஆண்டுகள் கழித்து கிடைத்தது. காரைக்குடியில் தன் நண்பர் வெங்கட கிருஷ்ணையர் என்பவரோடு தங்கியிருந்த சமயத்தில் கானாடுகாத்தாத்தான் என்னும் ஊருக்கு பாரதியார் வந்திருப்பதாகச் செய்தியைத் தெரிவித்து சந்திப்பதற்காக அழைத்துச் சென்றார். ஊருக்கு வெளியே தன் நண்பரோடு தனிமையில் ஒரு மரத்தடியில் உரையாடிக்கொண்டிருந்த பாரதியாரை இருவரும் சந்தித்தனர். “இவர் ராமலிங்கம் பிள்ளை, நல்ல ஓவியக்கலைஞர். உங்களைப் பார்க்கவேண்டுமென்று…….” என்று நண்பர் சொல்லி முடிக்கும் முன்பேயே “ஓ, ஓவியக்கலைஞரா? வருக கலைஞரே. தமிழ்நாட்டின் அழகே கலையழகுதான்” என்று சொன்னபடி ராமலிங்கம் பிள்ளையைத் தொட்டு இழுத்து பக்கத்தில் அமரவைத்துக்கொண்டார் பாரதியார். அவருக்குப் பின்னால் ஏறத்தாழ பத்துப் பேர்கள் உட்கார்ந்திருந்தார்கள். எல்லோரும் இலக்கியம், கவிதை, கலை, சுதந்திரம் என்பதையொட்டியே பேசிப் பொழுதைக் கழித்துக்கொண்டிருந்தார்கள்.
ராமலிங்கம் பிள்ளைக்கோ பாரதியார் பாடிக் கேட்கவேண்டுமே என்னும் ஆவல் பொங்கியபடி இருந்தது. அது நடக்காமல் போய்விடுமோ என்று அச்சமாகவும் இருந்தது. எல்லோரும் பேச்சு ஓய்ந்து வீட்டுக்குப் போக எழுந்திருக்கும் வேளையில் மெதுவாக “ஒரு பாட்டு…..” என்று குரலை இழுத்தார். அவர் என்ன மனநிலையில் இருந்தாரோ தெரியவில்லை, “பாட்டு ஆர்டருக்கெல்லாம் வராது, பாடும்போது கேளும்” என்று சொல்லிவிட்டார் பாரதியார். அந்த நேரம் பார்த்து கிருஷ்ணையார் “ராமலிங்கம் பிள்ளை கூட நன்றாக பாடல்கள் எழுதக்கூடியவர்” என்று பாரதியாரிடம் சொல்லிவிட்டார்.
உடனே அவரும் “அப்படியா, ஒரு பாடல் பாடுங்கள், கேட்போம்” என்றார். “தம்மரசை பிறர் ஆள விட்டுவிட்டு தாம்வணங்கி கைகட்டி நின்ற பேரும்” என்னும்
பாடலைப் பாடிக் காட்டினார் ராமலிங்கம் பிள்ளை. பாடி முடித்ததும் பாரதியார் அவரைத் தட்டிக்கொடுத்துப் பாராட்டினார். அந்தப் பாராட்டில் அவர் மகிழ்ந்தாலும் பாரதியார் பாடுவதைக் கேட்கும் வாய்ப்பு தனக்குக் கிடைக்கவில்லையே என வருத்தத்தில் மூழ்கிவிட்டார் பிள்ளை.
அன்று இரவு நண்பர் வீட்டிலேயே தங்கியிருந்துவிட்டு மறுநாள் அதிகாலை கிளம்பி திருமயம் சென்று அங்கிருந்து திருச்சிக்குப் போய் சென்னைக்கு ரயில் பிடிக்கவேண்டும் என்பது பாரதியாரின் திட்டம். பாரதியாரோடு அனைவரும் அங்கேயே சாப்பிட்டுவிட்டு படுத்துக்கொண்டார்கள். விடிவதற்கு இன்னும் வெகுநேரம் இருக்கும் தருணத்திலேயே பிள்ளையைத் தட்டி எழுப்பிய பாரதியார் “பாட்டு கேட்கவேண்டும் என்று ஆசைப்பட்டீர்களே, எழுந்திருங்கள், பாடப் போகிறேன்” என்று சொன்னார். உடனே அந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து எழுந்து உட்கார்ந்தார் பிள்ளை. பாரதியார் மறுகணமே பாடத் தொடங்கிவிட்டார். பாடல் சத்தம் கேட்ட பிறகே மற்றவர்கள் ஒவ்வொருவராக எழுந்து உட்கார்ந்தார்கள். ராக, தாள லயத்தோடு ஏறத்தாழ மூன்று மணி நேரம் மூச்சுவிடாமல் பாடினார் பாரதியார். அவரை திருமயத்துக்கு அழைத்துச் செல்லவேண்டிய வண்டி வெளியே வந்து காத்திருந்தது. ஆயினும் எந்தச் சுயநினைவுமின்றி பாரதியார் பாடிக்கொண்டே இருந்தார். சட்டென பாட்டை முடித்துவிட்டு பிள்ளையைப் பார்த்து “போதுமா பாட்டு?” என்று கேட்டபடி தனக்காகக் காத்திருந்த வண்டியில் ஏறிப் புறப்பட்டுப் போய்விட்டார். தன் நீண்டநாள் ஆசை நிறைவேறிய நிறைவில் திகைத்து நின்றுவிட்டார் பிள்ளை.
பொதுவாழ்க்கையைப்பற்றிய குறிப்புகளுக்கு இணையாக தன் அப்பா, அம்மா, மனைவி ஆகியோரைப்பற்றிய விரிவான குறிப்புகளைத் தன் சுயசரிதையில் பதிவுசெய்திருக்கிறார் ராமலிங்கம் பிள்ளை. அவருடைய அப்பாவின் பெயர் வெங்கடராம பிள்ளை. காவல்துறையில் வேலை செய்து ஓய்வு பெற்றவர். அவர் காவல் துறையில் வேலைக்குச் சேர்ந்த விதம் கிட்டத்தட்ட ஒரு புனைகதையைப்போல உள்ளது. வேலையில்லாத இளைஞராக தன் அக்கா வீட்டில் தங்கியிருக்கிறார் அவர். ஒருநாள் அக்கா அவருக்காக ஒரு வேலை கேட்கும் பொருட்டு அவரை அழைத்துக்கொண்டு சேலத்திலிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரராஜுலு என்பவரைப் பார்க்கச் சென்றிருந்தார். வீடுவரைக்கும் சென்ற பிறகு, அவரை வீட்டுக்கு வெளியேயே காத்திருக்கும்படி செய்துவிட்டு, உள்ளே போய்விட்டார். சுந்தரராஜுலுவுக்கு ஏழெட்டு குழந்தைகள். எல்லோரும் வாசலிலும் தெருவிலும் விளையாடிக்கொண்டிருந்தார்கள். எதிர்பாராமல் ஒரு குழந்தை நடுவீதிக்குச் சென்றுவிட்டது. அதே நேரத்தில் எதிர்ப்புறத்தில் ஒரு குதிரைவண்டி கட்டுப்பாட்டை இழந்து ஓடிவந்தது. குதிரையில் கால்களுக்கிடையில் சிக்கிய குழந்தையை கண்ணிமைக்கும் நேரத்தில் ஓடிச் சென்று காப்பாற்றினார் வெங்கடராம பிள்ளை.
அதற்குள் சுந்தரராஜுலு வெளியே வந்துவிட்டார். குழந்தையைக் காப்பாற்றிய வெங்கடராம பிள்ளையின் துணிச்சலையும் வேகத்தையும் பாராட்டி,
அவையே ஒரு காவலருக்கு இருக்கவேண்டிய முக்கியமான தகுதிகள் என்று சொல்லி, அவர் எதிர்பார்த்து வந்தபடியே காவல்துறையில் கான்ஸ்டபிளாகத் தேர்ந்தெடுக்கப் பரிந்துரை செய்தார். வேலையில் சேர்ந்து நேர்மையாக உழைத்து, படிப்படியாக முன்னேறினார் வெங்கட்ராம பிள்ளை.
அவருக்கு ஆறு பிள்ளைகள். அவர்களில் ஒரு குழந்தை இறந்துவிட, மற்ற பிள்ளைகள் அனைவரும் பெண்பிள்ளைகள். அது அவருக்கு வருத்தத்தைக் கொடுத்தது.. ஒரு ஆண்குழந்தைக்காக ஏங்கினார். ஒருமுறை பரிசில்துறையில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது ஏறத்தாழ 75 வயது மதிக்கத்தக்க பிராமணக்கிழவரும் அவர் துணைவியாரும் பரிசிலில் வந்து இறங்கினார்கள். ஸ்ரீரங்கத்தில் தரிசனம் முடித்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்தார்கள் அவர்கள். பிராமணப் பெரியவர் வெங்கட்ராம பிள்ளையைப் பார்த்து பசியைப் போக்கிக்கொள்ள அந்த ஊரில் அக்கிரகாரத்துக்கு அழைத்துச் செல்லமுடியுமா என்று கேட்டார். பிள்ளை அவர்களை தமக்குத் தெரிந்த நாராயண ஐயரின் வீட்டுக்கு அழைத்துச் சென்று உணவுக்கு வழிவகுத்தார். சாப்பாடு முடிந்ததும் நாமக்கல் செல்ல
வண்டி ஒன்றையும் ஏற்பாடு செய்துகொடுத்தார்.
தற்செயலாகக் குடும்ப நலம் பற்றி விசாரித்த பிராமணரிடம் தமக்கு ஆண்குழந்தை இல்லாத குறையைக் கொட்டிவிட்டார் பிள்ளை. மனம் கனிந்த பிராமணர் தன்னிடமிருந்த ராமேஸ்வரம் பிரசாதத்திலிருந்து ஒரு பகுதியை அவரிடம் கொடுத்து ஆசியளித்துவிட்டுச் சென்றார். நிச்சயமாக ஆண்குழந்தை பிறக்குமென்றும் அக்குழந்தைக்கு ராமலிங்கம் என்னும் பெயரைச் சூட்டும்படியும் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டனர். சில மாதங்களிலேயே அம்மணி அம்மாளுக்கு ஆண்குழந்தை பிறந்தது.
அந்தப் பிராமணக் கிழவரின் ஆசிதான் அதற்குக் காரணம் என்பதை உறுதியாக நம்பிய பிள்ளை குழந்தைக்கு ராமலிங்கம் என்று பெயரிட்டார். சுயசரிதை முழுதும் இப்படி ஏராளமான தற்செயல் சம்பவங்கள் நிறைந்துள்ளன.
ராமலிங்கம் பிள்ளையின் சுயசரிதையில் சீதா என்னும் பெண்ணைப்பற்றி இடம்பெற்றிருக்கும் குறிப்பு துயரம் மிகுந்தது. அதைப்
படித்து முடித்ததும் ந.பிச்சமூர்த்தியின் கதையொன்றைப் படித்ததுபோல இருந்தது. வாழ்நாள்முழுக்க எவ்வளவோ புகழை அவருக்குத் தேடிக்கொடுத்த அவருடைய ஓவியத்திறமை அவருக்குள் ஏற்படுத்திய தழும்பின் அடையாளமாக அந்தத் துயரம் அமைந்துவிட்டது. ராமலிங்கமும் வெங்கடவரதனும் ஊரில் நெருங்கிய நண்பர்கள். ஒருவர் வீட்டில் ஒருவர் தாராளமாகப் புகுந்து புழங்கக்கூடிய அளவுக்கு நெருங்கியவர்கள். வெங்கடவரதனுடைய மாமன் மகள் சீதா. கொள்ளேகாலத்திலிருந்து ஊருக்கு வந்து தங்கியிருக்கிறாள். நன்றாக கோலம் போடக்கூடியவள். அவளுக்கு ஓவியம் சொல்லிக்கொடுப்பதற்காக
தன் வீட்டுக்கு அழைத்தான் அவன். அவளுக்கும் அக்கலையில் தேர்ச்சி பெறவேண்டும் என்று ஆசை இருந்தது.
வண்ணம் குழைக்கும் முறைகளையெல்லாம் ராமலிங்கமும் அவளுக்குச் சொல்லிக்கொடுத்தான்.
ஒருநாள் வரதன் வேண்டுகோளுக்கிணங்க ஐந்தாறு தாள்களில் அவளுடைய தோற்றத்தை வரைந்து வண்ணம் தீட்டிக் கொடுத்தான். அவளும் அதைக் கண்டு மகிழ்ந்தாள். வீட்டில் இருந்த அனைவரிடமும் காட்டி மகிழ்ந்தாள். ஒருநாள் வழக்கம்போல வரதன் வீட்டுக்குச் சென்றிருந்தபோது வரதனும் அவன் பெற்றோரும்
காணவில்லை. சீதாவும் அவளுடைய அம்மாவும் மட்டுமே இருந்தார்கள். அவன் வழக்கம்போல ஓவியம் தீட்டி வண்ணத்தால் நிரப்பிக்கொண்டிருந்தான். தற்செயலாக அந்த இடத்துக்கு வந்த சீதாவின் தாயார் அவர்கள் நெருங்கி நின்றிருந்த விதத்தை தவறாகப் புரிந்துகொண்டு அவசரத்தில் நோட்டுகளைத் தூக்கி வெளியே எறிந்துவிட்டு அவனை வீட்டைவிட்டு வெளியே செல்லும்படி சீற்றத்தோடு சொல்லிவிட்டாள். ஊரிலிருந்து திரும்பிய வரதன் நடந்த சம்பவத்தையெல்லாம் கேட்டுத் தெரிந்துகொண்டு வருத்தம் தெரிவித்தான். ஏதோ நாடகத்துக்குச் செல்லும் வழியில் சீதாவும் தன் வருத்தத்தை அவனிடம் தெரிவித்தாள். சீதாவின் அம்மா மிகவும் பிடிவாதமாக கொள்ளேகாலத்தில் உள்ள ஒரு பெரிய பணக்காரனுக்கு அவசரமாக திருமணம் அவளைச் செய்துகொடுத்துவிட்டாள்.
பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு திருச்சி ரயிலடியில் ரயிலுக்காக காத்திருக்கிறார் ராமலிங்கம்.
தத்தித் தத்தி நடந்தபடி காலருகில் வந்துவிட்ட மூன்றுவயதுக் குழந்தையொன்றை எடுத்துச் சென்று அருகிலிருந்த அதன் தாயிடம் கொண்டுபோய் விட்டார். அந்த அம்மாள் மொட்டையடித்து முக்காடிட்டுக்கொண்டிருந்த ஒரு பிராமணக் கைம்பெண். சிறிது நேரம் கழித்து, அந்தப் பெண் அவரருகில் வந்து நின்று
தன்னைத் தெரியவில்லையா என்று கேட்டாள். பிறகு மெதுவாக முக்காட்டை விலக்கி “ராமலிங்க மாமா, என்னைத் தெரியலையா?” என்று வருத்தத்தோடு சிரித்தாள். துயரம் நிறைந்த அச்சிரிப்பில் அவர் சீதாவை அடையாளம் கண்டுகொள்கிறார். இரு ஆண்டுகளுக்கு முன்பாக தன் கணவர் இறந்துவிட்டதாகவும் ராமேஸ்வரம் சென்று திரும்புவதாகவும் சொன்னாள். வெங்கடவரதனும் ஊரில் பிளேகில் இறந்துவிட்டதாகச் சொல்லிவிட்டு அழுதாள். இறுதியில் அவரை கொள்ளேகாலத்துக்கு அழைத்துச் சென்று இரண்டுநாட்கள் விருந்தினனாகத் தங்கவைத்து அனுப்பிவைத்தாள்.
இச்சுயசரிதையில் காந்தி இரு இடங்களில் இடம்பெறுகிறார். அப்போது கரூரில் காங்கிரஸ் பொறுப்பில் ராமலிங்கம் செயல்பட்டுக்கொண்டிருந்தார். திருச்சியிலிருந்து ஈரோடு போகிற வழியில் கரூரில் நடைமேடையின் சுற்றுச்சுவருக்குள்ளேயே மேடை போட்டு காந்தியைப் பேசவைத்தார்கள் அமைப்பாளர்கள். அந்தப் பிரயாணத்தில்தான் மக்களுக்குப் போதிய கதர் கிடைக்கவில்லை என்பதற்காக மகாத்மா தன்னுடைய சட்டை, தலைப்பாகை முதலியவற்றைத் துறந்துவிட்டு, இடுப்புத்துணியோடு மட்டும் இருக்க விரதம் பூண்டார். இரண்டாவது முறையாக கொச்சி, திருவிதாங்கூர் வழியாக இலங்கை செல்வதற்காகத் திட்டமிட்டிருந்தபோது வழியில் கரூரில் அவரைச் சந்தித்து நன்கொடையை நன்கொடையைப் பெற்றுக்கொண்டார்.
1912இல் மாணிக்க நாயக்கரோடு சேர்ந்து மேற்கொண்ட டில்லி பயண அனுபவங்களைப்பற்றிய நினைவலைகள் சுவையானவை. காங்கிரஸ் போராட்டத்தில் கலந்துகொண்டதன் விளைவாக சிறையில் தங்கியிருந்த சமயத்தில் சத்தியமூர்த்தி திருக்குறள் தொடர்பான சில சந்தேகங்களை எழுப்பினார். அது அவரை திருக்குறள் ஆய்வில் ஈடுபடவைத்தது. பரிமேலழகர் உரையில் புரியாத பல பகுதிகளுக்கு புது உரை எழுதி வெளியிடும் அளவுக்கு அது வளர்ந்தது.
ஒருபோதும் நிதானம் குலையாத அமைதி, சகமனிதர்கள்மீது கொண்ட வற்றாத அன்பு, மதிப்பு என ராமலிங்கம் பிள்ளையை அழுத்தமான ஒரு கோட்டுச்சித்திரமாக வரைந்துகொள்ள ‘என் கதை’ சுயசரிதை துணைநிற்கிறது.