ஆண்டன் செகாவ் என்னும் ரஷ்ய எழுத்தாளரின் புகழ்பெற்ற சிறுகதைகளில் ஒன்று ‘பந்தயம்’. மிகவும் சிரமமானது மரண தண்டனையா அல்லது ஆயுள் தண்டனையா என்பதையொட்டி இரு நண்பர்களிடையே மிகவும் சாதாரணமாக தொடங்குகிற உரையாடல் இறுதியில் பந்தயத்தில் முடிகிறது. ஆயுள் தண்டனை அப்படியொன்றும் சிரமமானதல்ல என்று உரைக்கும் நண்பன் தனியறையில் குறிப்பிட்ட ஆண்டு காலம் அடைபட்டிருந்து அதை நிரூபிக்கவேண்டும் என்பதுதான் அந்தப் பந்தயம்.. பந்தயக்காலம் முழுதும் அவன் அவ்விதமாக தனியறையிலேயே கழித்துவிட்டால் மிகப்பெரும் தொகையை அவனுக்குத் தருவதாக பந்தயம் கட்டுகிறான் மற்ற நண்பன்.
அன்று இரவே பந்தயம் தொடங்குகிறது. அவன் கேட்கும் ஒவ்வொரு வசதியும் அந்த அறையிலேயே கிடைக்கும்படி செய்யப்படுகிறது. முதலில் அவன் கேட்பது ரஷ்ய மொழியில் எழுதப்பட்ட புத்தகங்களை. மிகவும் பொறுமையாகவும் ஆழமாகவும் எல்லாப் புத்தகங்களையும் அவன் படித்து முடிக்கிறான். தேவையான போது குறிப்புகளை எடுத்துக்கொள்கிறான். எழுதப்பட்ட எல்லாப் புத்தகங்களின் சாரமான மையத்தையும் தன் சொற்களில் சுருக்கமாக முன்வைக்கிற அளவுக்கு அவன் தேர்ச்சி பெறுகிறான். அதில் சில ஆண்டுகள் கழிகின்றன.
அடுத்து பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலி என அயல்மொழிகளை ஒவ்வொன்றாகக் கற்கத் தொடங்குகிறான். ஒவ்வொரு மொழியிலும் எழுதப்பட்ட முக்கியமான புத்தகங்களை இடைவிடாமல் படித்து முடிக்கிறான். பயிற்சியின்
காரணமாக, ஒவ்வொரு மொழியிலும் எழுதப்பட்ட புத்தகங்களின் சாரமான பகுதியைச் சுருக்கித் தொகுத்துக்கொள்கிறான். அனைத்தையும் தொகுத்தும் பகுத்தும் பார்க்கிற அவன் மாபெரும் ஓர் உண்மையை அறிகிறான். அதாவது, மொழி வேறுபாடுகளைக் கடந்து உலகெங்கும் எல்லாப் புத்தகங்களும் ஒரே வழியையே சுட்டிக் காட்டுகிறது. அந்த மகத்தான உண்மையை உணர்ந்த கணத்தில் அவன் அகம் சுடர்விடுகிறது. மனம் எடையற்ற பறவையிறகாக மாறிவிடுகிறது. அந்த உண்மையை அசைபோட்டபடியும் இசையில் மூழ்கியபடியும் எஞ்சிய சில ஆண்டுகளையும் அவன் கடந்துவிடுகிறான்.
பந்தயப் பணத்துக்காகத்தான் அவன் அந்தச் சிறையனுபவத்தை விரும்பி ஏற்றுக்கொண்டான் என்ற போதும் புத்தகங்கள் வழியாக அவன் ஈட்டிய ஞானம் அவன் கண்களைத் திறந்துவிடுகின்றது. அந்த ஞானம் என்ன உணர்த்தியிருக்கும்? இந்த வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழவேண்டும் என்று உணர்த்தியிருக்கலாம். அன்பிலும் கனிவிலும் இரக்கத்திலும் தியாகத்திலும் கிடைக்கும் மகிழ்ச்சியை அடையாளப்படுத்தியிருக்கலாம். ஒரு வாசகனாக அதை நாம் எப்படி வரையறுத்துச் சொன்னாலும் மற்றொருவனுக்கு அது தகவலாக மட்டுமே அமையும். புத்தகத்தை தனது கையால் புரட்டிப் படிக்கும்போது மட்டுமே நல்ல அனுபவமாக அமையும்.
புத்தகம் நமது குரு. புத்தகம் நமது தாய். புத்தகம் நமது தோழன். புத்தகத்தைப்போல உற்ற துணை எதுவுமில்லை. கடந்த நூற்றாண்டில் பிரிட்டிஷ் அரசால் தூக்கிலிடப்பட்ட சுதந்திரப்போராட்டத் தியாகியான பகத்சிங், தூக்கிலிடப்படுவதற்கு ஒருமணி நேரம் முன்புவரைக்கும் புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்தார் என்கிற தகவலை நாம் அனைவரும் அறிவோம். மரணத்தையே புறந்தள்ளும் அளவுக்கு மன உறுதியை ஒரு புத்தகத்தால் வழங்கிவிட முடியும் என்பதற்கு பகத்சிங் வாழ்க்கையே ஓர் எடுத்துக்காட்டு.
கல்வியைப்பற்றி
எழுதும் திருவள்ளுவர் ‘கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவர்க்கு மாடல்ல மற்றையவை’ என்று சொல்லியிருப்பதைக் கவனித்துப் பார்க்கவேண்டும். கல்வி என்பது மாபெரும் செல்வம் என்பது அவர் பார்வை. கல்வி என்பதை புத்தகக்கல்வி, அனுபவக்கல்வி, தொழிற்கல்வி என்று ஒரு புரிதலுக்காகப் பகுத்துக்கொள்ளலாம். புத்தகக்கல்வி மாபெரும் செல்வம் என்றால், புத்தகம் அல்லவா செல்வம். மனத்தெளிவையும் மன உறுதியையும் வழங்கும் ஆற்றல் நாம் தேர்ந்தெடுத்துப் படிக்கும் புத்தகத்துக்கு இருக்கிறது.
மொழி சிந்தனைக்குரிய கருவி என்றால், சிந்தனையை வெளிப்படுத்துவதற்கான தளமாக புத்தகம் இருக்கிறது. இருபத்தொன்றாம் நூற்றாண்டில் வாசிக்கும் நமக்கு இருபது நூற்றாண்டுகளின் மானுடச்சிந்தனைகளை அறிவதற்கு உற்ற துணையாக இருக்க புத்தகங்களால் மட்டுமே முடியும். நமக்கும் சிந்தனைக்கும் ஒரு பாலமாக புத்தகங்கள் இருக்கின்றன.
புத்தகங்களைப்
படிப்பதற்கு ஒரு வழிமுறை இருக்கிறது. எந்தப் புத்தகத்தையும் ஐயம் திரிபற விரிவாகப் படிக்கவேண்டும். பிறகு, மனசுக்குள் அசைபோட்டு அசைபோட்டு நம் மனத்துக்கு உகந்த வகையில் வரிசைப்படுத்தித் தொகுத்துக்கொள்ளவேண்டும். அந்தத் தொகுப்பை ஒருசில வாக்கியங்களாக மாற்றி நினைவில் இருத்திக்கொள்ளவேண்டும். இதற்கு நீளமான கூந்தலை எழிலுறச் சுருட்டி ஒரு கொண்டை ஊசியால் நிலைநிறுத்திவிடும் திறமை வேண்டும். அந்த ஊசியை எடுக்கும் தருணத்தில் குழல் விரிந்துவிழுவதுபோல, நினைவிலிருக்கும் மைய வாக்கியத்தை மனம் சென்று தொட்டதும் புத்தகம் முழுதும் நினைவில் படமென விரியவேண்டும். கடைபிடிப்பதற்கு இது ஓர் எளிய வழிமுறை.
திருக்குறள் நூலில் உள்ள ஒவ்வொரு குறளும் மனத்தில் நிலைநிறுத்துவதற்காக சுருக்கி எழுதப்பட்ட ஒரு வாக்கியம். அந்த ஆப்த வாக்கியத்தை விரித்தெடுக்க விரித்தெடுக்க, அது நீண்டுகொண்டே போகும். தொட்டனைத்தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்தூறும் அறிவு என்னும் குறளை முன்வைத்து பல மணி நேரம் உரையாடமுடியும். தோண்டத்தோண்ட கேணி ஊறுகிறது, படிக்கப்படிக்க அறிவு ஊறுகிறது என ஒற்றைப்படையாக உவமித்துச் சொல்லப்பட்ட வாக்கியமல்ல அந்தக் குறள். உலகில் நீர் ஊறும் மணற்பரப்பில் தோண்டியதும் ஊற்றெடுக்கும் நீருடன் மணலும் கலந்தே இருக்கிறது. கலங்கிய நீர் தெளியும் மட்டும் காத்திருந்துதான் குடிப்பதற்கான நீரை எடுத்துக்கொள்ள முடியும். ஊற்று என்பது அந்த ஒருகுடம் நீர் மட்டுமல்ல. ஊற்றை அப்படியே விட்டுச் செல்லமுடியாது. சற்றே கவனம் குறைந்தாலும் மணல்சரிந்து ஊற்று மூடிவிடும். ஊற்றைக் காப்பாற்ற மணல்சரிவு நிகழாமல் காப்பாற்ற வேண்டும். இன்னொரு பக்கத்தில் தோண்டுவதையும் தொடரவேண்டும். தெளியும் வரை நீருக்குக் காத்திருக்கவேண்டும். தெளிந்த நீரை குடத்தால் முகர்ந்துகொள்ளவேண்டும். மணல்விலக்கம், தோண்டுதல், தெளியும்வரை காத்திருத்தல், நீரெடுத்தல் என்பது ஓய்வின்றி மீண்டும்மீண்டும் நிகழ்ந்தே ஆக வேண்டிய செயல்கள். புத்தகம்
படித்தல், அதன் மையப்பகுதியை அசைபோடுதல், அது முன்வைக்கும் உண்மையை அதுவரை அறிந்த உண்மைகளைத் துணையாகக் கொண்டு உரசிப் பார்த்தல், உரசிக் கண்டறிந்த பேருண்மையையும் பேரனுபவத்தையும் ஞானமாக உணர்தல் என்பதும் மீண்டும்மீண்டும் நிகழ்ந்தே ஆகவேண்டிய செயல்கள். அதுவே ஞானத்தின் வழி. நம் முன் உள்ள ஒவ்வொரு புத்தகமும் அந்த ஞானவழிக்குத் திசைகாட்டியாக இருக்கிறது.