Home

Saturday 10 November 2018

தங்கப்பா: சில பழைய நினைவுகள்


புதுவை தாகூர் கலைக்கல்லூரியில் நான் கணிதப்பிரிவில் படித்துக்கொண்டிருந்தபோது எங்களுக்குத் தமிழாசிரியராக இருந்தவர் தங்கப்பா. அப்போது செய்யுள், உரைநடை, நவீன இலக்கியம், துணைப்பாடம், கட்டுரை என நாலைந்து பிரிவுகளாக வகுக்கப்பட்டு தனித்தனியாகப் பாடங்கள் நடந்தன. தங்கப்பா எங்களுக்குச் செய்யுள் பாடம் நடத்தினார். வகுப்பில் அறிமுகமாகி நன்கு பழகிய பின்னர் தமிழ்த்துறைக்குச் சென்று அடிக்கடி அவரைச் சந்தித்துப் பேசினேன். நான் அவ்வப்போது எழுதும் கவிதைகளை அவரிடம் காட்டுவதை வழக்கமாக்கிக்கொண்டேன். அவர் அவற்றைப்பற்றிக் கருத்துரைக்கவேண்டும் என விரும்பினேன். அவர் தன் எண்ணங்களைச் சொல்வதோடு மட்டுமன்றி, கவிதைகள் மேம்படும் விதத்தில் சில திருத்தங்களையும் சொன்னார். பெரும்பாலும் சந்தநயம் பிசகும் இடங்களுக்குப் பொருத்தமாக ஒரு சொல்லை மாற்றி இன்னொரு சொல்லை அமைத்துக் கொடுத்தார்.  

சொல்லொழுங்கும் ஓசையொழுங்கும் மரபுப்பாடலுக்கு உயிரும் உடலும் போன்றவை. ஒரு பாட்டில் இவையிரண்டும் கச்சிதமாக இருக்கவேண்டும். இரண்டில் எது பிசகினாலும் பாடலின் சுவை குன்றிவிடும்.”
ஒவ்வொரு முறையும் எதுகை மோனையைத் திருத்தும்தோறும் இச்சொற்களை தங்கப்பா தவறாமல் சொல்வார். கேட்டுக்கேட்டு அவை அப்படியே என் மனத்தில் பதிந்துவிட்டன. அவற்றை அடையவேண்டும் என்னும் வேகம் எனக்குள் எழுந்தது. ஓய்வு நேரம் முழுவதையும் அதற்குரிய பயிற்சிகளில் ஈடுபட்டிருந்தேன். இரண்டு மூன்று மாத இடைவெளியிலேயே அவர்  எதிர்பார்த்த தரத்தில் என் பாடல்கள் அமைந்துவிட்டதில் நான் மட்டற்ற மகிழ்ச்சியடைந்தேன்.
பாடல்களில் ஏதேனும் புதுமை செய்து தங்கப்பாவின் பாராட்டுகளைப் பெறவேண்டும் என்னும் விருப்பம் என்னைத் தூண்டிக்கொண்டே இருந்தது. ஒரு கணத்தில் தோன்றிய எழுச்சியின் விளைவாக சின்னஞ்சிறு நிகழ்ச்சியொன்றைப் பாடலாக எழுதினேன். ஒரு கடைத்தெருவின் விரிவான காட்சிப் பின்னணியில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சிதான் அந்தப் பாடலின் மையம். இருநூறு வரிகள் அளவுக்கு அது நீண்டுவிட்டது. ஒரு நாள் முன்னிரவில் அமர்ந்து அப்பாடலை வேறொரு சுவடியில் பிழையின்றி எழுதி வைத்துக்கொண்டேன். அடுத்த நாள் மதியம் உணவு இடைவேளை சமயத்தில் அதைக் கொண்டு சென்று தங்கப்பாவிடம் கொடுத்தேன். பாடலின் நீளத்தைப் பார்த்து அவர்  முதலில் வியப்படைந்தார். பிறகு பாராட்டினார். மறுநாள் வந்து சந்திக்கும்படி சொல்லியனுப்பினார்.
அன்று இரவு முழுதும் எனக்குத் தூக்கம் வரவில்லை. அவர் அப்பாடலைப் படித்துவிட்டுச் சொல்லப்போகும் சொல்லுக்காக மனம் காத்திருந்தது. இடையில் வேறொரு பாட்டுக்கான கருவும் மனதில் ஊஞ்சலாடிக்கொண்டிருந்தது. விடிகிற நேரத்தில்தான் மறுநாள் காலைப் பிரிவிலேயே வைக்கப்போவதாக கணிதப் பேராசிரியர் சொன்ன தேர்வைப்பற்றிய நினைவு வந்தது. தூக்கம் முற்றிலும் கலைந்துபோய்விட்டது. எழுந்து உட்கார்ந்து விளக்கைப் போட்டுவிட்டு கணக்குப்புத்தகத்தை எடுத்து வினாக்களைப் புரட்டிப் பார்த்து பயிற்சி செய்யத் தொடங்கினேன். எப்போது தூங்கினேன் என்றே எனக்குத் தெரியவில்லை. மறுநாள் காலை எங்கள் தாத்தா வந்து எழுப்பியபோதுதான் விழித்தேன். என்னைச் சுற்றியும் நோட்டுகளும் புத்தகங்களுமாக இருந்ததால் ஒன்றும் சொல்லாமல் போய்விட்டார். ஒருபுறம் பாடல், இன்னொருபுறம் கணிதம் என இரண்டும் மனத்தில் உருண்டுகொண்டிருந்தன.
தேர்வில் வினாக்கள் எளிதாகவே இருந்தன. அதனால் முழுமதிப்பெண் பெறும் அளவுக்கு நிறைவாகவே எழுதினேன். ஒவ்வொரு நொடியும் உணவு இடைவேளை எப்போது வரும் என்று காத்திருந்தேன். இடைவேளை விட்டதுமே வேகமாகச் சாப்பிட்டுவிட்டு தமிழ்த்துறைக்குச் சென்றேன். தங்கப்பாவும் எனக்காகக்  காத்திருந்ததுபோலத் தோன்றியது. அவர் மேசைமீது என் நோட்டு இருந்தது. என்னைப் பார்தத்துமேவா வாஎன்று சொல்லிவிட்டு மேசையிலிருந்த நோட்டைப் பிரித்தார். பாடலைப் படித்துவிட்டார் என்பதற்கு அடையாளமாக அவர் பாட்டின் பக்கவாட்டில் எழுதிவைத்திருந்த சிறுசிறு குறிப்புகளைப் பார்த்தேன். “நல்லா இருக்குது, உன் கடைத்தெரு கதைஎன்று புன்னகைத்தார்.
சில நொடிகளுக்குப் பிறகுபட்டினப்பாலையின் பாதிப்பா இந்தக் கதை?” என்று கேட்டார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. எங்கள் செய்யுள் பகுதியில் பட்டினப்பாலை அப்போது பாடமாக இருந்தது. நான் அவசரமாக தலையை அசைத்தபடிஅப்படியெல்லாம் இல்ல... இது ஒரு கடைத்தெரு......” என்று ஏதோ சொல்ல முயன்று, சொல்லெழாமல் குழப்பத்துடன் அவரையே பார்த்தேன். “இது உங்க கடைத்தெருதான், நீ பார்த்த கடைத்தெருதான், அதில் கொஞ்சம் கூட ஐயமே இல்லை. ஆனால் அது ஏன் இந்தச் சமயத்தில் உனக்கு நினைவுக்கு வரவேண்டும்? யோசித்துப் பார்என்றார். மேலும்கொஞ்சநாள் முன்னால்தான் நீ பட்டினப்பாலை படித்திருக்கிறாய். உனக்கு ஏதோ ஒரு காரணத்துக்காக அந்தப் பாடல் பிடித்திருக்கிறது. அது உன் நெஞ்சைத் தொட்டுவிட்டது.  சரிதானே?” என்று கேட்டார். பிறகு ஒரு மருத்துவரைப்போலஉனக்குத் தெரியாமல் அது இன் ஆழ்மனத்தில் புரண்டுகொண்டே இருக்கிறது. புரண்டுபுரண்டு உன் நெஞ்சில் ஏற்கனவே புதையுண்டிருக்கிற ஒரு கடைத்தெருக் காட்சியைத் தொட்டெழுப்பித் தூண்டிவிட்டது. இதில் பிழையில்லை. இப்படித்தான் பாடல்கள் பிறக்கின்றன. சரியான வழியில்தான் வந்திருக்கிறாய், பதற்றப்படாதேஎன்று சொல்லிவிட்டுப் புன்னகைத்தார். அந்தப் புன்னகையைப் பார்த்த பிறகுதான் என்னால் நிம்மதியாக மூச்சுவிட முடிந்தது.
நன்றாக உள்ளது. உன் மொழியோட்டத்தில் நல்ல முன்னேற்றம் வந்துவிட்டது. ஆயினும் பல தேய்வழக்குச் சொற்கள் உன்னோடு ஒட்டிக்கொண்டே வருகின்றன. அவற்றை நீ உதறவேண்டும். புதிதாகக் கண்டுபிடி.  புதிதாக உருவாக்கு. புதியதை அறிபவனே பாவலன்என்று சொல்லிவிட்டு நோட்டுப்புத்தகத்தை என்னிடம் அளித்தார்.
தங்கப்பாவின் சொற்கள் ஒவ்வொரு கணமும் என்னைத் தூண்டிக்கொண்டே இருந்தன. இரவும் பகலும் பாடல்களைப்பற்றியே கனவுகளைக் கண்டுகொண்டிருந்தேன். காட்சிச்சித்திரங்களின் அமைப்பு எனக்கு நன்றாக வசப்பட்டன. நான் அவற்றை மேலும் வென்றெடுக்க நினைத்தேன். ஓய்வுப்பொழுது முழுதும் படிப்பதிலும் எழுதுவதிலுமே செலவழித்தேன்.
எழுத்து வேலைகளின் காரணமாக வீட்டில் இருப்பவர்களுடன் பேசுவதும் சிரிப்பதும் பழகுவதும் படிப்படியாகக் குறைந்துவிட்டது. அதை என் தாத்தா முதலில் கண்டுபிடித்துவிட்டார். என் அறையில் இருந்த புத்தகங்களையும் பாடல்களை எழுதி வைத்திருந்த கோப்பையும் பார்த்து சற்றே கலவரமுற்றார். “இதெல்லாம் என்ன?” என்று புரியாமல் கேட்டார். நான் மெதுவாக அவரிடம் விளக்கிச் சொன்னேன். அவர் அதைச் சற்றே குழப்பத்துடன் கேட்டுக்கொண்டார். கணிதப்பாடங்களில் ஒரு தேர்விலும் என் மதிப்பெண்கள் எப்போதும் தொண்ணூறுக்குக் குறைந்ததில்லை என்பதால் அவரும் மேற்கொண்டு எதுவும் பேசாமல் போய்விட்டார்.
காட்சிச்சித்திரங்களில் நன்கு பயிற்சி பெற்றதும் என் மனம் அடுத்த வடிவத்தைப்பற்றி யோசித்தது. ஆயிரம் இரண்டாயிரம் வரிகளைக் கொண்ட குறுங்காவியம்தான் உடனடியாக நினைவுக்கு வந்தது. முதல் குறுங்காவியத்தை ஒரு புரட்சிக்காவியமாக எழுதவேண்டும் என்று நினைத்தேன். பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக சிற்றரசர்கள் காலத்தில் நடைபெறுவதுபோல கதைக்காட்சிகளை அமைத்துசங்கே முழங்குஎன்னும் தலைப்பில் ஒரு காவியத்தை வேகமாக எழுதி முடித்தேன். வழக்கம்போல அதைப் புதிதாகப் படியெடுத்து தங்கப்பாவிடம் கொடுத்தேன்.
இரண்டுமூன்று நாட்கள் கழித்து அவரைச் சந்திப்பதற்காக தமிழ்த்துறைகுச் சென்றிருந்தேன். அச்சாகி வந்திருந்த ஏதோ அச்சுப்படியில் திருத்தங்களைக் குறித்துக்கொண்டிருந்தார் அவர். என்னைப் பார்த்ததுமே அவர் நான் கொடுத்த காவியத்தைப் படித்துவிட்டதாகவும் விரிவாகப் பேச வேண்டியிருப்பதால் வீட்டுக்கு வரும்படியும் சொன்னார். எனக்கு சற்றே ஏமாற்றமாக இருந்தாலும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் வேறு சில செய்திகளைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்த பிறகு என் வகுப்பறைக்குத் திரும்பிவிட்டேன்.
அந்த வாரத்தின் ஞாயிறு அன்று அவரைச் சந்திக்க வீட்டுக்குச் சென்றிருந்தேன். அறையில் அவர் சாய்வுநாற்காலியில் தனியாகவே அமர்ந்திருந்தார். மேசை மீது காவிய நோட்டு இருந்தது.  அவர் அதை எடுத்து ஒருமுறை புரட்டிவிட்டு என்னிடம் நீட்டினார்.
என்ன ஆயிற்று உனக்கு? நன்றாகத்தானே எழுதிக்கொண்டிருந்தாய்? பாதிப்பு வேண்டாம் என்று சொன்னதும் விட்டுவிட்டதாகத்தானே நான் நினைத்தேன். இப்போது பார்த்தால் மீண்டுமொரு பாதிப்புக் காவியத்தையே ஏன் எழுதியிருக்கிறாய்?” என்று மெதுவாகத் தொடங்கினார். சில கணங்கள் அவர் விழிகள் என்னையே உற்றுப் பார்த்தன. ஒரு பெருமூச்சுடன்  பாரதிதாசனைப்போல எழுத நாம் எதற்கு?  அதைத்தான் ஏற்கனவே அவரே எழுதிவிட்டுப் போய்விட்டாரே? ஒரு புரட்சிக்கவி போதாதா? இன்னொரு புரட்சிக்கவி வேண்டுமா?” என்றார்.
நடக்காத ஒரு புரட்சியை நடந்ததைப்போலச் சித்தரிப்பது எவ்வளவு பெரிய பிழை? உன் திறமையை ஏன் வீணடிக்கிறாய்?” என்று கேட்டார். நான் மெதுவாகஒரு ஆசையில் இப்படி எழுதிப் பார்த்தேன்என்று ஏதோ சொல்ல முனைந்து சொல் வராமல் அப்படியே நின்றுவிட்டேன். பிறகு தங்கப்பாவேஉன்னால் நடப்பியல் காட்சிச்சித்திரங்களை நன்றாக எழுத முடிகிறது. அவற்றை எப்படி நீட்டித்து ஒரு பெருங்கதையை உருவாக்கமுடியும்ன்னு யோசித்துப் பார். அதுதான் பயனுள்ளதாக இருக்கும்என்று சொன்னார். புறப்படும் சமயத்தில் அவர் என்னை நிறுத்திஒரு படைப்பின் பாதிப்பில் இன்னொரு படைப்பை எழுதுவது பிழையல்ல. ஆனால் அப்படி எழுதும்போது அது மாபெரும் உண்மையொன்றை நிலைநிறுத்துவதுபோலவும் சுட்டிக்காட்டுவதுபோலவும் இருக்கவேண்டும். அதை மறக்கக்கூடாதுஎன்று சொன்னார்.
அவர் சொன்ன சொற்கள் அடிமனத்தில் ஒலித்தபடியே இருந்தன. ஆனால் தொடர்ச்சியாக என் கவனத்தை இலக்கியத்தின்பால் மட்டுமே வைத்திருக்க முடியவில்லை. தேர்வுகள் நெருங்கி வந்தன. அதற்கான தயாரிப்புகளில் ஈடுபடவேண்டியிருந்தது. பயிற்சிகள். பயிற்சிகள். ஓயாத பயிற்சிகள். நேரம் போவது தெரியாமல் போய்க்கொண்டே இருந்தது. பழகிய கையையும் மனத்தையும் வெகுகாலம் கட்டிவைத்திருக்க முடியவில்லை. இடையிடையில் அதன் குணத்தைக் காட்டவே செய்தது.  சிலவற்றை மட்டுமே பாடல்களாக்கினேன். மனத்தை முட்டிக்கொண்டு மேலெழும் வேறு சில வரிகளையும் கருக்களையும் தனியே ஒரு நோட்டில் குறித்துவைத்துக்கொண்டேன். பிறகு பயன்படும் என்பதற்காக.
விடுமுறையில் தாழம்பூ என்றொரு குறுங்காவியத்தை எழுதி முடித்தேன். அது காதல் காவியம். எதார்த்த உலகத்தில் நடந்துகொண்டிருக்கும் ஒரு கதை. தங்கப்பாவுக்கு அது மிகவும் பிடித்திருந்தது. தாழம்பூ எழுதிய பிறகே என் குறுங்காவிய முயற்சிகளில் அவருக்கு நம்பிக்கை பிறந்தது.
எதிர்பாராத விதமாக என் தந்தையாரின் உடல்நலம் குன்றியது. அது என்னை மிகவும் பாதித்தது. அவர் ஒருவரே எங்கள் குடும்பத்தில் சம்பாதிக்கும் நபர். அவர் படுக்கையில் விழுந்துவிட்டால் எங்கள் குடும்பமே படுத்துவிடும். என்னால் அந்தத் துயரத்தைத் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. படித்து முடித்து விரைவில் பட்டத்தைப் பெறவேண்டும், பிறகு சரிந்துகொண்டிருக்கும் குடும்பத்தைத் தூக்கி நிறுத்த உடனடியாக ஒரு வேலைக்குச் செல்லவேண்டும் என்பதே என் நோக்கமாக இருந்தது. என் எழுத்து முயற்சிகளை முற்றிலும் நிறுத்திக்கொள்ளும்படி நேர்ந்தது. தங்கப்பாவைச் சந்திக்கும் தருணங்களும் குறைந்தபடி வந்தன. அவரே ஒருமுறைஎன்ன, எதுவுமே எழுதவில்லையா?” என்று கேட்டுத் தூண்டிவிட்டார். நான் நடந்ததையெல்லாம் சொன்னேன். அனைத்தையும் பொறுமையாகக் கேட்ட பிறகுசரி, இந்த உலகத்தில் யாருக்குத்தான் துன்பமில்லை? துன்பத்திலிருந்து விடுபட்ட பிறகுதான் ஒரு வேலையை செய்ய முடியும் என ஒருவர் நினைத்தால் அதைச் செய்வதற்கான காலம் வராமலேயே போய்விடும். பத்தோடு பதினொன்றாக இறங்கிச் செய்யத் தொடங்கினாலொழிய எதையும் சாதிக்கமுடியாதுஎன்று சொன்னார். பிறகு, “எழுத்தை விடாதே, போஎன்று சுருக்கமாக ஒரு வாக்கியத்தைச் சொல்லி அனுப்பினார்.
திரும்பிவரும்போது மனசுக்குள் ஒரு வேகம் பொங்கியெழுந்தது என்னமோ உண்மை. ஆனால் அது நீண்ட நேரத்துக்கு நீடிக்கவில்லை. சொற்கள் எதுவும் திரண்டெழவில்லை. மனம் வறண்டுவிட்டதுபோல இருந்தது. பாடப்புத்தகத்தையும், ஓய்விருக்கும்போது நூலகப்புத்தகத்தையும் மாறிமாறிப் படித்துக்கொண்டிருந்தேன்.
பட்டம் பெற்று ஒரு வேலையைத் தேடி அமர்வதற்குள் ஓராண்டுக்கும் மேல் காலம் நகர்ந்துவிட்டது. நீண்ட இடைவெளிக்குப் பிறகே நான் என்னுடைய அடுத்த காவியத்தை எழுதினேன். தொழிற்சங்கத்தில் ஈடுபாடு கொண்ட கணவன் தற்செயலாக ஒரு ரயில் விபத்தில் இறந்துவிடுகிறான். குடும்பச்சுமையைத் தாங்குவதற்காக  அவன் மனைவி வேலைக்குச் செல்கிறாள். பிள்ளைகள் சிரிப்பில் மகிழ்ச்சியைக் கண்டபடி அவள் தன் வாழ்க்கையை அமைத்துக்கொள்கிறாள். புற உலகின் ஏச்சுபேச்சுகளையெல்லாம் கடந்து போர்க்குணத்தோடு எதிர்கொண்டு வெற்றிபெறுகிறாள். அக்கதைச்சித்திரத்தை நான்பெண்மை போராடுகிறதுஎன்னும் பெயரில் குறுங்காவியமாக எழுதினேன். ஏறத்தாழ ஆயிரத்தைந்நூறு வரிகளைக்கொண்ட அக்காவியத்தை மூன்று நாட்கள் இரவும்பகலுமாக உட்கார்ந்து எழுதிமுடித்தேன். நான் எழுத்தாளன்தான்  என்னும் நம்பிக்கையை அக்காவியத்தின் வழியே நான் மீண்டும் அடைந்தேன்.
வழக்கம்போல அதைப் படியெடுத்துச் சென்று தங்கப்பாவிடம் காட்டினேன். ஒரு வார இடைவெளியில் அவர் அதைப் படித்துவிட்டார். பாட்டின் தரம் அவருக்கு நிறைவாகவே இருந்தது. “நல்லது, மீண்டு வந்துவிட்டாய்என்று என்னைப் பார்த்துப் புன்னகைத்தார். தொடர்ந்து நாங்கள் செல்லவேண்டிய ஒரு மிதிவண்டிப்பயணத்தைப்பற்றிப் பேசினோம். புறப்படும் நேரத்தில் அவர் திடீரென நினைவுக்கு வந்தவர்போலபார்த்தாயா, மறந்தே போனேன்என்று சொன்னபடி தன் மேசையின் இழுப்பறைக்குள் இருந்த ஓர் அறிவிப்புத்தாளை எடுத்து என்னிடம் கொடுத்தார். அது ஓர் அரசு அறிவிப்பு. சவரிராயலு நாயக்கரின் நூற்றாண்டு விழாவை ஒட்டி அரசு ஒரு குறுங்காவியப்போட்டியை அறிவித்திருந்தது. “உன் காவியத்தை இந்தப் போட்டிக்கு அனுப்புஎன்றார். “எழுதுவது எனக்குப் பிடித்திருக்கிறது, எழுதுகிறேன். போட்டியெல்லாம் எதற்கு ஐயா?” என்று தயங்கினேன். தங்கப்பாவோஅதனால் என்ன, கிடைத்தால் மகிழ்ச்சி. கிடைக்காவிட்டாலும் இழப்பொன்றும் இல்லையே. அனுப்பிவைஎன்று மீண்டும் சொன்னார். அதை ஏற்றுக்கொண்டு நான் வீட்டுக்குத் திரும்பினேன்.
போட்டிக்கு கையெழுத்துப் படியின் மூன்று பிரதிகளை இணைக்கவேண்டும். நானும் பழனியும் குமரவேலும் ஆளுக்கொரு பிரதியை எழுதி நூல்வடிவில் தைத்து போட்டிக்கு அனுப்பிவைத்தோம்.
கர்நாடகத் தொலைபேசித் துறையில் எனக்கு இளம்பொறியாளர் பணி கிடைத்தது. அதற்கான பயிற்சிக்காக பத்துமாத காலம் நான் ஐதராபாத்தில் தங்கியிருந்தேன். அந்தச் சமயத்தில் போட்டிமுடிவுகள் அறிவிக்கப்பட்டன. ‘பெண்மை போராடுகிறதுகாவியத்துக்கு இரண்டாம் பரிசு கிடைத்திருந்தது. கவிஞர் பட்டாபிராமனுக்கு முதல் பரிசு கிடைத்திருந்தது. தங்கப்பாதான் கடிதம் எழுதித் தெரிவித்திருந்தார். பிறகு அரசு அனுப்பியிருந்த தகவலை வீட்டிலிருந்தும் எழுதியிருந்தார்கள். இரண்டு காவியங்களையும் சேர்த்து அரசே நூலாக வெளியிட்டிருந்தது. விழாவுக்கு என் சார்பில் என் மாமா சென்று விருதைப் பெற்றுக்கொண்டார். காவியத்தை மீண்டுமொருமுறை அச்சில் படித்துவிட்டு தங்கப்பா எனக்கொரு கடிதம் எழுதியிருந்தார். நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
நான் மரபுக்கவிதை பயின்றவன் என்பதற்கு இன்று என் கையிலிருக்கும் ஒரே சாட்சி இந்தப் புத்தகம் மட்டுமே. என் முதல் புத்தகம். அதற்கு முன்பு நான் எழுதி  எழுதிப் பயின்ற மரபுக்கவிதைகளின் பிரதி எதுவுமே என்னிடம் இல்லை. எதையுமே என்னால் பாதுகாக்க முடியாமல் போய்விட்டது.
என் மனம் மெல்ல புதுக்கவிதையின் பக்கமும் உரைநடையின் பக்கமும் திரும்பத் தொடங்கியது. தங்கப்பா அதையொட்டி சற்றே வருத்தமுற்றார். பிறகுசரி, அதுவும் கலையின் ஒரு வடிவம்தானேஎன்று ஏற்றுக்கொண்டார்.

**

தங்கப்பாவிடம் ஒரு சுவாரசியமான உரையாடலை பொதுவாக எதிர்பார்க்க முடியாது. அவருடைய உரையாடல் என்பது பெரும்பாலும் அவர் அளிக்கும் விடைகளாகவும் விளக்கங்களாகவும்  மட்டுமே இருக்கும். எல்லாமே எப்படிப்பட்ட கேள்விகளோடு நாம் அவரை அணுகுகிறோம் என்பதைப் பொருத்ததாகும். அவருடைய பழைய நினைவுகளைத் தூண்டும் வகையில் அமையும் கேள்விகள் தம்மையறியாமல் அவர் மனத்தைத் திறந்துவிடும்.
ஒரு மாணவனுக்குரிய அச்சத்தோடும் இடைவெளியோடும்தான் தொடக்கத்தில் அவரோடு பழகி வந்தேன். ஆனால் தன் அன்பின் வழியாக அவர் அந்த இடைவெளியை கொஞ்சம் கொஞ்சமாக இல்லாமலாக்கி நான் நெருங்கிச் செல்ல இடமளித்தார்.
ஒருமுறை ஏதோ ஒரு பாடலைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது தூக்கணாங்குருவிக் கூட்டைப்பற்றிய குறிப்பு வந்தது. அவர் சட்டென பேச்சின் போக்கை நிறுத்திநீ தூக்கணாங்குருவிக் கூட்டைப் பார்த்திருக்கிறாயா?” என்று கேட்டார். இல்லை என்பதற்கு அடையாளமாக நான் தலையசைத்தேன். “சாதாரண குருவிக்கூட்டுக்கும் தூக்கணாங்குருவிக் கூட்டுக்கும் அமைப்பிலேயே பல வேறுபாடுகள் உண்டு. அதைத் தெரிந்துகொள்வது முக்கியம்என்றார். சொல்லிக்கொண்டே அருகிலிருந்த ஒரு தாளை எடுத்து ஒவ்வொரு கூட்டையும் படமாக வரையத் தொடங்கினார். வேகவேகமாக கோடுகளை மேலும் கீழும் இழுத்து அவர் வரைந்த வேகம் பார்க்க வியப்பளித்தது. ஒருசில நிமிடங்களிலேயே கூடுகள் உருப்பெற்றுவிட்டன. இரண்டுக்கும் இடையிலான வேறுபாடுகளை நான் அப்போதே உணர்ந்துகொண்டேன். அவருக்கு ஓவியமும் வரும் என்னும் உண்மையையும் அன்றுதான் தெரிந்துகொண்டேன்.
தங்கப்பாவுக்கு அப்போதும் நிறைவு ஏற்படவில்லை. அடுத்த வாரம் ஊசுட்டேரி செல்லலாம் என்று திட்டமிட்டுவிட்டார். புதுச்சேரிக்கு வெளியே உள்ள ஊசுட்டேரி ஒரு முக்கியமான ஏரி. ஆண்டுமுழுதும் தண்ணீர் நிறைந்திருக்கும் நீர்நிலை. கரைநெடுக ஏராளமான மரங்கள். மரம் முழுதும் பறவைகள். உள்நாட்டுப் பறவைகளையும் வெளிநாட்டுப்பறவைகளையும் தொடர்ச்சியாக நாம் அங்கே பார்க்க முடியும். அடுத்து வந்த ஞாயிறு அன்று மிதிவண்டியிலேயே புறப்பட்டுவிட்டோம். என்னோடு இன்னும் ஆறேழு மாணவர்களும் வந்திருந்தார்கள். பத்து மணிக்குக் கிளம்பி பதினோரு மணி வாக்கில் அங்கு போய்ச்சேர்ந்தோம். ஒரு மரத்தடியில் அமர்ந்து சிறிது நேரம் இளைப்பாறினோம். தங்கப்பா தன் வீட்டிலிருந்து ஒரு பெரிய பிளாஸ்க்கில் தேநீர் எடுத்து வந்திருந்தார். முறுக்குகள் கொண்ட ஒரு காகிதப்பொட்டலமும் இருந்தது. நாங்கள் ஆளுக்கொரு முறுக்கை எடுத்துச் சாப்பிட்டுவிட்டு தேநீரை அருந்தினோம்.
களைப்பு நீங்கியதும் மீதிவண்டிகளைப் பூட்டி அங்கேயே நிழலோரமாக நிறுத்திவைத்துவிட்டு, கரையோரமாகவே வேடிக்கை பார்த்தபடி நடக்கத் தொடங்கினோம். நாரைகள் போல பெரிய அலகுகொண்ட பறவைகள் தண்ணீருக்கு மேல் வட்டமிட்டபடி இருந்தன. அது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. நீர்க்காகங்களை அங்குதான் முதன்முதலில் பார்த்தேன்.
தங்கப்பா ஒவ்வொரு மரத்தடியிலும் நின்று நின்று கூடுகளுக்காக பார்த்துக்கொண்டே வந்தார். ஒவ்வொரு மரத்திலும் கிளிகளும் மைனாக்களும் கிறீச்சிட்டபடி இருந்தன. ஒரு திருப்பத்தில் ஒரு புங்கமரத்தின் கிளைகளில் அங்கங்கே தொங்கவிடப்பட்ட சின்னச்சின்ன தானிய முடிச்சுகள்போல கூடுகள் தொங்கிக்கொண்டிருந்தன. தங்கப்பா அவற்றைப் பார்த்ததும் மகிழ்ச்சியுற்று எங்களை அருகில் வரும்படி அழைத்து அவற்றைச் சுட்டிக் காட்டினார். “அதுதான் தூக்கணாங்குருவிக் கூடுஎன்று சொல்லிவிட்டுப் புன்னகைத்தார்.
அவரோடு நாங்கள் செல்லாத இடங்கள் குறைவு என்றே சொல்லவேண்டும். கன்னியக்கோவில் அல்லிக்குளம், வில்லியனூர் தாமரைக்குளம், பாரதியார் பாட்டெழுதத் தேர்ந்தெடுத்த குயில்தோப்பு, சுண்ணாம்பாறு கடற்திட்டு, தவளக்குப்பம் கடற்கரை, தேங்காத்திட்டு, சிங்கிரிகோவில் என ஒவ்வொரு வாரமும் ஏதேனும் ஒரு இடத்தை நோக்கி நாங்கள் சென்றுகொண்டே இருந்தோம். எல்லா இடங்களிலும் தங்கப்பாவுக்கு நண்பர்கள் இருந்தார்கள். நாங்கள் சென்று சேர்ந்த்தும் அவர்களும் எங்களோடு சேர்ந்துகொள்வார்கள். பலர் அவரிடம் படித்து முடித்து வேலைக்குப் போய்விட்ட பழைய மாணவர்கள். அவர்கள் தங்கப்பாவிடம் காட்டிய அன்பை எங்களிடமும் காட்டினார்கள்.
பயணம் முடிந்து திரும்பும் மாலை நேரங்களில் சூரியன் மறையும் காட்சியை மட்டும் நாங்கள் ஒருபோதும் தவறவிட்டதே இல்லை. இதோ மறையப்போகிறேன் என சொல்லாமல் சொன்னபடி வானம் சிவந்துவர சூரியன் ஒர் பெரிய நூல்கண்டுபோல உருளத் தொடங்கும் வேளையில் தங்கப்பா மிதிவண்டியை எங்கேனும் மரத்தடியில் ஓரமாக நிறுத்திவிட்டு வானத்தை வேடிக்கை பார்க்கத் தொடங்கிவிடுவார். அவரோடு நின்று நாங்களும் அந்த அஸ்தமனக்காட்சியைப் பார்த்து ரசிப்போம்.
கூடி உட்கார்ந்த பிறகு எழுந்திருக்க வெகுநேரம் பிடிக்கும். எப்படியாவது ஒரு புதிய பேச்சு முளைத்துவிடும். தங்கப்பா யாராவது ஒருவரைப் பார்த்து ஏதாவது ஒரு கதையைக் கட்டிச் சொல்லுமாறு கூறுவார். “எந்த அர்த்தமும் இருக்கணும்ன்னு அவசியமில்லை, சும்மா அளந்துவிடுஎன்பார். ஆனால் அது அவ்வளவு எளிதான செயலல்ல. தர்க்கமற்றதாகவே இருந்தாலும் அதைக் கோர்த்துக்கோர்த்துச் சொல்வதற்கு ஒரு திறமை வேண்டும். இரண்டுமூன்று சம்பவங்களுக்கு மேல் கதையை நீட்டமுடியாது. தங்கப்பா அதில் வல்லவர். அவர் சிரிக்காமலேயே சிரிக்கச்சிரிக்க கதையை நீட்டிக்கொண்டே போவார்.

**

தொடக்கக் காலத்தில் சங்கப் பாடல்களின் கட்டமைப்பில் பாடல்கள் இயற்றுவதில் ஆர்வம் கொண்டவராக இருந்தார் தங்கப்பா. வடிவத்தில் அவை பழைய பாடல்களின் சாயலைக் கொண்டிருந்தாலும் நடப்பியல் துயரங்களையும் செய்திகளையுமே அவை கருவாகக் கொண்டிருந்தன. ஒன்றுக்கு மூன்று நான்குமுறை திருப்பித்திருப்பிப் படிக்கும்போது, அப்பாட்டில் படிந்திருந்த அல்லது படிந்திருப்பதுபோலத் தோன்றிய நிழல் தானாக விலகி வெளிச்சம் படரத் தொடங்கிவிடும். பிறகு, அந்தப் பாடலை நம்மால் ஒருபோதும் மறக்கமுடியாது. நம் நெஞ்சோடும் நினைவோடும் ஒட்டிக்கொண்டுவிடும்.
ஒரு பத்துவரிப் பாட்டுக்கு அவர் ஒருமுறைஉலகியல் உளைஎன்று தலைப்பிட்டிருந்தார். அந்தச் சொல்லிணைவு எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளித்தது. மீண்டும் மீண்டும் மனத்துக்குள் சொல்லிக்கொண்டேன். பாடலைப் படிக்கவே தேவையில்லை. அந்தச் சொல் வழியே பாடல் எதைச் சுட்டிக் காட்டப் போகிறது என்பதை மனம் தொட்டுவிட்டது. சேறு என்பதை எங்கள் பக்கத்தில் உளை என்றும் சிலர் சொல்வதுண்டு. ஒரு பிரச்சினையில் சிக்கிக்கொண்டு மீண்டு வரத் தெரியாமல் தவிப்பவர்களைப்பற்றி பேச்சு வரும்போதெல்லாம்போய் உளையில உழுந்தமாதிரி உழுந்துட்டு எழுந்துவரத் தெரியாம தடுமாறுறான்என்று சொல்வதைக் கேட்டிருக்கிறேன். அதனால் தங்கப்பாவின் பாடல் தலைப்பைப் படிக்கும்போதே உற்சாகம் பிறந்துவிட்டது. பத்து வரிகள்தான் இருக்கும். ’எவ்வளவு படித்து என்ன பயன்? எவ்வளவு விஷயங்களைத் தெரிந்துகொண்டு என்ன பயன்? சேற்றில் அகப்பட்டுக்கொண்ட யானைபோல உலகியல் உளையில் சிக்கிக்கொண்ட உள்ளம் மீண்டும் எழுந்து நிற்பது என்பது அரிதினும் அரிதுஎன்று பொருள் கொடுக்கும் வரிகள். இப்போது எனக்கு மற்ற வரிகள் நினைவில் இல்லை. ஆனால்உளைச்சேறு அழுந்திய வேழம்போல உலகியற்கு அழுந்திய உள்ளம்என்னும் வரிமட்டும் அப்படியே நெஞ்சில் அழுத்தமாகப் பதிந்துவிட்டது.
உலகியல் வாழ்க்கையில் திளைக்கத் தொடங்கி மீண்டு வரமுடியாமல் தவிக்கும் மனத்தைப்பற்றிய இன்னொரு பாடலும் முக்கியமானது. அதற்கும் அந்தப் பாடலில் கையாளப்பட்ட உவமையே காரணம். ’நெய்ப்பாத்திரத்துக்குள் இறங்கிய எறும்பு அதற்குள்ளேயே விழுந்துவிடுவதுபோல என்பதுதான் அந்த உவமை. அந்த உவமையை அவர் பலமுறை நேர்ப்பேச்சில் பயன்படுத்திப் பேசுவதைக் கேட்டிருக்கிறேன்.
எறும்பு உவமையை அவர் வாயால் சொல்லிக் கேட்ட சம்பவம் நினைவில் இருக்கிறது. ஒருமுறை அவர் வீட்டில் அமர்ந்து அதற்கு முதல்வாரத்தில் போய்விட்டு வந்த பயண அனுபவங்களைப் பேசிக்கொண்டிருந்தோம். அதன் தொடர்ச்சியாக அவர் குறும்பலாப்பேரியில் படிக்கும் காலத்தில் அக்கம்பக்கத்தில் உள்ள சிற்றூர்களுக்கு நடந்தே சென்று சுற்றியலைந்த  பயணங்கள், வேலை கிடைத்து தங்கியிருந்த ஊர்களில் மேற்கொண்ட மிதிவண்டிப்பயணங்கள் என பல பயணங்களைப்பற்றிச் சொன்னார். அப்போது அவரைப் பார்க்கவந்த யாரோ ஒரு நண்பரும் பக்கத்தில் இருந்தார். பேச்சில் இருந்த சுவாரசியத்தின் காரணமாக அவரும் பக்கத்தில் உட்கார்ந்து கேட்டார். ஒரு கட்டத்தில் அவர் முகம் வாட்டமடையத் தொடங்கியது. ”உங்களுக்கு எல்லாமே சாத்தியமாகிறது. ஆசைப்படும் எதையுமே என்னால் செய்யமுடியவில்லைஎன்று சொல்லி வருத்தப்பட்டார். ”குடும்பம் குடும்பம்னு உழைக்கவே பொழுது சரியா இருக்குது. இதைப்பற்றியெல்லாம் யோசிக்கவே நேரமில்லைஎன்று நாக்கு சப்புக்கொட்டினார். ”முதல்ல எல்லாத்தையும் ஒரு நல்ல நிலைமைக்கு கொண்டுவரணும். பிறகு நானும் ஒவ்வொன்னா தொடங்குவேன்என்று தலையசைத்துக்கொண்டே சொன்னார். தங்கப்பா விடையெதுவும் சொல்லாமல் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தார். பக்கத்தில் அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்த எங்களுக்கு அவர் சொல்வது நியாயம்தானே என்று தோன்றியது.
அவர் எழுந்து சென்றபிறகுநெய்ப்பாத்திரத்தில் இறங்கும் எறும்பு என்றைக்காவது மேலேறி வருவதைப் பார்த்திருக்கிறோமா?” என்று சொன்னார். என் தலையில் யாரோ ஓங்கிக் குட்டியதுபோல இருந்தது.  உடனே இவர் சொல்வதும் சரியாகத்தானே இருக்கிறதுஎன்று தோன்றியது. அடுத்து என்ன சொல்லப் போகிறார் என்பதைக் கேட்பதற்காக தங்கப்பாவையே பார்த்திருந்தேன்.
துன்பமும் துயரமும் அவர் வாழ்வில் மட்டுமா இருக்கிறது? அது எல்லோருடைய வாழ்க்கையிலும் இருக்கத்தான் செய்கிறது. குடும்பத்துக்காக, குடும்பத்துக்காக என்று சொல்கிறவர் பயணம் செய்வதுகூட குடும்பத்துக்காக என ஏன் நினைக்க மறுக்கிறாரோ?” என்று சொல்லிவிட்டு நிறுத்திக்கொண்டார்.
சில நொடிகளுக்குப் பிறகு எங்களைப் பார்த்துசில வேலைகளைச் செய்யறதுக்கெல்லாம் ரொம்ப யோசிக்க கூடாது. நினைச்சமா செஞ்சமான்னு சட்டென்று செய்து முடிச்சிடணும். எண்ணித் துணிக கருமம்லாம் பார்க்கக் கூடாது  என்று சொல்லிவிட்டுப் புன்னகைத்தார். ”வள்ளுவர் சொன்ன வாக்கியத்துல ஒரு சின்ன சலுகை எடுத்துக்கலாம்என்று மேலும் சொன்னார். தொடர்ந்துஎடுத்துக்கலைன்னா எறும்புக்கு நேர்ந்த கதைதான்என்றார்.
அன்றுமுதல் எறும்பின் கதையை ஒருநாளும் நான் மறந்ததில்லை. நெய்ப்பாத்திரத்தில், இனிப்புகள் அடைத்துவைக்கப்பட்ட பாத்திரத்தில், ஊறுகாய்ப்பாத்திரத்தில் இறந்துகிடக்கும் எறும்புகளைப் பார்க்க நேரும்போதெல்லாம் தங்கப்பா சொன்ன எறும்பு உவமை நினைவுக்கு வந்துவிடும்.
புதிய உவமைகளையும் புதிய படிமங்களையும் சொல்ல வேண்டும் என்று எப்போதும் தங்கப்பா வலியுறுத்திக்கொண்டே இருப்பார். மாம்பழம்போல சிவந்த வானம், ரத்தம்போல சிவந்த வானம், சிவப்புப்பட்டுப்புடவை போன்ற வானம் என்றெல்லாம் எழுதப்படும் வரிகளைக் கண்டால் குறும்பாகச் சிரித்துக்கொள்வார். ”சொல்லிச்சொல்லி தேய்ந்த வழக்குச்சொற்களை உதறுவதே ஒரு பாவலனின் முதல் வேலைஎன்பது அவர் எண்ணம். அவர் தனக்குத்தானே கடைப்பிடித்த வரையறையாகவும் அச்சொற்களை வைத்துக்கொண்டார். ஆந்தையைப்பற்றிய சித்திரத்தை முன்வைக்கும்போதுகங்குற்பறவைஎன்றும்காட்டின் தனியரசிஎன இதற்குமுன் எழுதப்படாத ஒரு சொல்லோவியத்தையே தங்கப்பா தீட்டிக் காட்டினார். கடலைப்பற்றி எழுதிய பாடலொன்றில்ஒருவரும் ஆட்டாது ஆடும் ஊஞ்சல்என்று புதிதான ஓர் உவமையை முன்வைத்தார்.
தங்கப்பா தன் மேசையிலும் அக்கம்பக்கத்தில் இருக்கும் தாங்கிகளிலும் ஏராளமான கோப்புகளை அடுக்கிவைத்திருப்பார். ஒவ்வொன்றிலும் எண்ணற்ற பாடல்களின் கையெழுத்துப் பிரதிகள் இருக்கும். அவை எத்தகையவை என்பதைப்பற்றிய சிறிய குறிப்பை எழுதி அந்தக் கோப்பின்மீது ஒட்டியிருப்பார். ஆயினும் ஒரு பாட்டைத் தேடியெடுக்க பல கோப்புகளைத் திறந்து பார்ப்பதை தவிர்க்கமுடிந்ததே இல்லை. ஒருமுறை ஏதோ ஓர் ஆங்கில மொழிபெயர்ப்புப்பாடலைத் தேடிக்கொண்டிருந்தோம். அவர் ஒரு பக்கமாக கோப்புக்குவியலில் தேடிக்கொண்டிருந்தார். நான் வேறொரு பக்கம் புத்தக அடுக்குக்கிடையில் பார்த்துக்கொண்டிருந்தேன். கோப்புகளுக்குள் வைக்கப்பட்டிருந்த தாள்களைப் புரட்டுவதும் நடுவில் கண்ணில் படும் ஏதேனும் ஒரு தாளில் எழுதப்பட்டிருந்த பாடலைப் படிக்கத் தொடங்கி அதிலேயே மூழ்கி லயித்திருப்பதுமாக இருந்தேன்.  பிறகு சட்டென நினைவு வந்தவன்போல அதை மூடிவைத்துவிட்டு தேடத் தொடங்கினேன்.
ஒரு கோப்பில் ஏராளமான பாடல்கள் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொன்றாகப் புரட்டிப் படிக்கத் தொடங்கிவிட்டேன். ஒரு மழைக்காலத்தைப் பற்றிய பாடல் அது. உண்மையில் அது மழையைப்பற்றியது கூட இல்லை. மழைக்காலத்தில் இருள் பிரியாத சமயத்திலேயே வெளியே திரியத் தொடங்கிய ஒரு தும்பியைப்பற்றிய பாடல். அழகான தாளக்கட்டோடு எழுதப்பட்டிருந்தது. கண்முன்னால் ஒரு தும்பி பறப்பதுபோலவே நான் உணர்ந்தேன். ஏறித் தாழ்ந்து ஒரு தும்பி பறப்பதுபோலவே அந்தப் பாட்டில் தாளக்கட்டு அமைந்திருந்தது. தேடலை மறந்து அந்தப் பாட்டில் லயித்துவிட்டேன். என் மனத்துக்குள் ஒரு தும்பி பறக்கத் தொடங்கிவிட்டதை நான் உணர்ந்தேன். ”ஒரு தங்க ஆசாரியின் உலைக்களத்திலிருந்து ஒரு பொட்டுத் தெறித்து சுழன்றதுபோலதும்பி சுழன்றுபோனது என்னும் பொருளில் அந்த வரி அமைந்திருந்தது. மீண்டுமொரு புதிய உவமை.

**

தங்கப்பாவின் பாடல்களில்உன்னை நிரப்பிவைப்பேன்மிகமுக்கியமான பாடல். ஒரு மாபெரும் பாடகனாக இந்தப் புவியின் முன்னால் நின்று மானுடத்தை நோக்கி உரையாடும் குரலை அதில் கேட்கமுடியும். “மண்ணில் கிடக்குமோர் சுள்ளியை நான் ஓர் வானவில் ஆக்கிவைப்பேன்என்று தொடங்கும் அந்தப் பாடல் தன்னால் இயலக்கூடிய செயல்களைப்பற்றிய பட்டியலை முன்வைத்தபடி செல்லும். அதன் இறுதிவரிகள் இன்னும் என் நினைவில் உள்ளன.
மண்ணில் நெளியுமுன் உள்ளம் அளித்திடு
வான்சுடர் ஏற்றிவைப்பேன்- அன்பின்
உண்மை கமழ்தெய்வப் பண்கள் ததும்பிட
உன்னை நிரப்பிவைப்பேன்
ஏதேனும் ஒரு காரணத்தால் ஊக்கம் குன்றியிருக்கும் தருணங்களில் என் குறிப்பேட்டில் எழுதிவைத்திருக்கும் இப்பாடலை மீண்டும் மீண்டும் படித்தபடியே இருப்பேன். ஊதாங்குழல் வழியாகக் குவியும் காற்றின் வேகத்தில் தீப்பற்றிக்கொள்ளும் சுள்ளிகள்போல ஏதோ ஒரு தருணத்தில் என் மனத்திலும் வேகம் பற்றிக்கொள்ளும். அன்றுமுதல் இன்றுவரை என்னை நிரப்பும் விசைமையமாக இருப்பவர் தங்கப்பா. அது எனக்குக் கிட்டிய நற்பேறு.


( ‘சங்கு’ நவம்பர் 2018 இதழுக்காக எழுதிய கட்டுரை )