பார்வையாளர்கள் நேரம் தொடங்குகிற நாலரை மணிக்கு வெளியே வருகிற
முத்துசாமி அண்ணனிடமிருந்து பொறுப்பை வாங்கிக்கொள்ள வேண்டும் என்பதுதான் ஏற்பாடு. நான் அதற்கு முன்பாகவே மருத்துவமனைக்குப் போய்விட்டேன். ஷேர் ஆட்டோவைத் தவிர்த்துவிட்டு பஸ்ஸ்டாண்டிலிருந்து ஜி.எச்.வரைக்கும் நடந்தே வந்ததில் பத்து ரூபாய் செலவு மிச்சம். நேற்றும் இப்படித்தான் செய்தேன். ஆனால் ஜி.எச். வந்து சேர சற்றே தாமதமாகிவிட்டது. பஸ் பிடித்த நேரத்தில் ஏதோ தப்பு நடந்துவிட்டது. நான் எவ்வளவோ எடுத்துச் சொன்னபோதும் கூட வாசலில் கோபத்தோடு காத்திருந்த முத்துசாமி அண்ணனுக்கு நம்பிக்கை வரவில்லை. பொறுப்பில்லாமல் தாமதமாக வந்து நிற்பதாகவே குற்றம் சொன்னார்.
“இதுதான் ஆஸ்பத்திருக்கு வர லட்சணமா? முடியலைன்னா முடியலைன்னு வாய தெறந்து சொல்லவேண்டிதுதான? ஒனக்கு குடுக்கற பணத்த இன்னொரு ஆளுக்கு குடுத்து ஏற்பாடு
செய்யமுடியாதுன்னு நெனச்சிட்டியா?”.
அவர் போட்ட சத்தத்தைக் கேட்டு வாசல் பக்கமாக நடந்த கூட்டமே திரும்பிப் பார்த்தபடி கடந்துபோனது.
வார்த்தைகளைக் கொட்டி வம்பு வளர்ப்பதால் ஒரு பயனும் இல்லை என்று நினைத்தபடி எந்தப் பதிலும் பேசாமல் அவர் நீட்டிய அனுமதி அட்டையை வாங்கிக்கொண்டு உள்ளே சென்றுவிட்டேன்.
அவருடைய அப்பாவுக்கு இதயத்தில் பிரச்சினை. அறுவைசிகிச்சை முடிந்து கண்ணாடி அறைக்குள் வைத்திருந்தார்கள். படுக்கைக்கு அருகில் போகமுடியாது. அந்தக் கண்ணாடிக்கூடத்துக்கு
வெளியே சின்னக்கூடத்தில் சுவரோரமாக
ஆறேழு பெஞ்சுகள் எந்தப் பக்கமும் சாய்ந்துவிடாதபடி போடப்பட்டிருந்தன. ஒரு நாற்காலியோ, மின்விசிறியோ எதுவுமே இல்லை. அங்குதான் எப்படியோ உட்கார்ந்தும் நடந்தும் பொழுது போக்கியபடி நோயாளியின் பெயர் அழைக்கப்படுகிறதா என கவனித்தபடி காத்திருக்க வேண்டும். ஒருநாளுக்கு முன்னூறு ரூபாய். அடுத்த நாள் காலை அவரே வந்து வீட்டுக்கு அனுப்பிவைத்துவிடுவார்.
வாசலில் நிற்பதற்குப் பதிலாக எதிரே இருந்த பூங்காவை ஒரு சுற்று சுற்றிவரலாம் என்று கிளம்பினேன். பூங்காவுக்குள் ஏராளமான ஊடுபாதைகள் இருந்தன. ஒரு தூங்குமூஞ்சி மரத்தடியில் வெளியூர்க்காரர்கள் உட்கார்ந்திருந்தார்கள். குட்டையான சுற்றுச்சுவரின் ஓரமாக ஏராளமாக செம்பருத்திகள் பூத்திருந்தன. புல்தரையில் மைனாக்கள் குறுக்கிலும் நெடுக்கிலும் பறந்துகொண்டிருந்தன.
ஒரு பெஞ்சில் மடிமீது ஒரு அட்டையை வைத்துக்கொண்டு எதிர்ப்புறத்தில் வேப்பமரத்தை ஒட்டி நின்றிருந்த ஒரு பெண்ணை
ஒருவர் வரைந்துகொண்டிருப்பதை
தற்செயலாகப் பார்த்தேன். நான் பார்த்த கோணத்தில் அவர் முதுகுமட்டுமே தெரிந்தது. முதலில் ஒருகணம் என்ன நடக்கிறதெனப் புரியவில்லை. சற்றே குழப்பமாக இருந்தது.
பிறகு புரிந்துகொண்டேன்.
அவர் உட்கார்ந்திருந்த பெஞ்சுக்கு அருகிலேயே இரு மரங்களிடையே கொடிபோலக் கட்டப்பட்டிருந்த கயிற்றில் சில படங்கள் தொங்கவிடப்பட்டிருந்தன. அவை மெல்ல மெல்ல காற்றில் அசைந்தபடி இருந்தன. நான் அவரை நெருங்க நினைத்த தருணத்தில் அவர் அந்தப் படத்தை வரைந்து முடித்திருந்தார். மடித்த செய்தித்தாளுக்கு இடையில் வைத்து அளிக்கப்பட்ட படத்தை அந்தப் பெண் புன்னகையோடு வாங்கிக்கொண்டு பையிலிருந்து பணத்தை எடுத்துக்கொடுத்தார்.
அந்த மரங்களை நெருங்கி, தொங்கிக்கொண்டிருந்த விதவிதமான வண்ணப்படங்களைப் பார்த்தேன். ஒவ்வொரு படத்திலும் பின்னணியில் வண்ணங்கள் இணைந்து நதியெனப் பொங்கி ஓடிக்கொண்டிருப்பதைப் பார்க்க விசித்திரமாக இருந்தது.
அரையும் குறையுமான சுவர்களோடு கற்குவியலாக நிற்கிறது ஒரு சிதைந்த கோட்டை. அதன் முன்னால் அற்புதமான ஒரு சூரியோதயம். அந்த ஓவியம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நான் அவர் பக்கமாகத் திரும்பி “இது ரொம்ப அருமையா இருக்குது” என்று புன்னகைத்தேன். அவர் தன் பார்வையில் எந்த மாற்றமும் இல்லாமல் “வேணுமா? வாங்கிக்கறிங்களா?” என்று கேட்டார். எனக்கு ஒரு கணம் சங்கடமாக இருந்தது. பதில் சொல்ல குரலே எழவில்லை. ஆயினும் சற்றே தடுமாறியபடி அவரைப் பார்த்துவிட்டு, மீண்டும் படங்களைப் பார்க்கத் தொடங்கினேன்.
சிறிது நேரத்துக்குப் பிறகு அவர் பக்கமாகத் திரும்பி சந்தோஷமான குரலில் “ஒவ்வொரு படமும் தத்ரூபமா
இருக்குது சார். பெரிய ஆர்ட்டிஸ்ட் சார் நீங்க” என்றேன். அவர் முதலில் சில கணங்கள் எதுவும் பேசவில்லை. காதிலேயே
விழாததுபோல இருந்தார். பிறகு மெதுவாக “என்ன சொன்னீங்க?” என்று கேட்டார். முதலில் சொன்னதை நான் மறுபடியும் சொன்னேன்.
”ஆர்ட்டிஸ்ட்?” என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு கசப்பான புன்னகையோடு தோள்களைக் குலுக்கிக்கொண்டார். சில கணங்களுக்குப் பிறகு மெதுவான குரலில் “முன்னாள் ஆர்ட்டிஸ்ட்” என்று எங்கோ பார்த்தபடி பதில் சொன்னார்.
வேறொரு திசையிலிருந்து வந்த கூட்டமொன்று அவருடைய படங்கள் முன்னால் சிலகணங்கள் நின்று வேடிக்கை பார்த்துவிட்டுச் சென்றது. ஒரே ஒரு சிறுமி மட்டும் அந்தப் படங்கள் முன்னாலேயே நின்றுவிட்டாள். அவள் கால்களோடு உரசியபடி ஒரு குட்டி நாய் அவளைச் சுற்றி ஓடிவந்தது. அந்தக் குட்டியைத் தூக்கி நெஞ்சோடு அணைத்தபடி வைத்துக்கொண்டு மறுபடியும் படங்களைப் பார்க்கத் தொடங்கினாள்.
சிறிது நேரத்தில் ”ராதா ராதா....” என்று அழைத்தபடி ஒரு நடுவயதுப் பெண் அங்கு வந்து நின்றார். ”இன்னுமா வேடிக்கை? நேரமாவுது பாரு. அங்க எல்லோருமே ஒனக்காக காத்திருக்காங்க” என்று அழைத்தார். அவளுடைய கையைப் பற்றி அவசரமாகக் குனியச் செய்து, காதருகில் என்னமோ சொன்னாள் அந்தச் சிறுமி.
“அதுக்கெல்லாம் நேரமில்லை ராதா. சொன்னா கேளு, கெளம்பலாம் வாம்மா” என்று அவசரப்படுத்தினார் அவர். அந்தச் சிறுமி முகத்தை அழுவதுபோல வைத்துக்கொண்டு “ப்ளீஸ், ப்ளீஸ்மா” என்றாள்.
அந்த அம்மாவுக்கு வேறு வழி தெரியவில்லை. “எல்லாத்துக்கும் புடிவாதம் புடிச்சா எப்படிம்மா? சரி, இரு கேக்கறன்” என்று சொன்னவாறே திரும்பி ஓவியர் பக்கமாகத் திரும்பி “சார், ஒரு படம் வரையமுடியுமா, கொழந்த ரொம்ப ஆசைப்படறா” என்று கெஞ்சுவதுபோலக் கேட்டார். ஓவியர் “அதுக்கென்ன மேடம், வரைஞ்சிடலாம்” என்று தாளையும் அட்டையும் சரிசெய்தார். தன்னிச்சையாக, பென்சிலால் தன் மோவாயைத் தட்டியபடி அந்தச் சிறுமியைச் சில கணங்கள் உற்றுப் பார்த்தார்.
அதே நேரத்தில் “ஆடாம அசையாம, ஒரே இடத்துல உக்காரணும் புரியுதா?” என்றபடி நாய்க்குட்டியை தன் அணைப்பிலிருந்து விடுவித்து பெஞ்ச் மீது உட்காரவைத்துவிட்டு விலகிவந்து நின்றாள் சிறுமி. ஒருகணம் எதுவும் புரியாமல் திரும்பிய ஓவியரிடம் அந்த அம்மா “அந்தக் குட்டியை படமா வரைஞ்சி வச்சிக்கணும்ன்னு பாப்பா ரொம்ப ஆசைப்படறா சார். தப்பா நினைச்சிக்காதீங்க. ப்ளீஸ்.......” என்று சொன்னார்.
விரல்களுக்கிடையில் பென்சிலை வைத்து உருட்டியபடி அவர் அமைதியாக அந்தக் குட்டிநாயை சில கணங்கள் பார்த்தார். பிறகு அவர் கவனம் வரைவதில் மட்டுமே இருந்தது. சின்னச்சின்ன புள்ளிகளும் கோடுகளுமாக இணைந்து அந்த ஓவியம் உருவாவதை நான் வெகு அருகில் நின்று பார்க்கப்பார்க்க பரவசமாக இருந்தது. ஓவியத்தைப் பெற்றுக்கொண்டு பணத்தைக் கொடுத்துவிட்டு “தேங்க்ஸ் சார், தேங்க்ஸ் சார்” என்றபடி அவர்கள் சென்றார்கள்.
அவரிடம் எதையாவது பேசவேண்டும் போல இருந்தது. அதற்குள் நாலரை மணி சங்கு ஊதும் சத்தம் கேட்டது. வேறு வழியில்லாமல் அவரிடம் பார்வையிலேயே விடைபெற்றபடி நான் வாசலை நோக்கி வேகமாக நடந்தேன். அண்ணன் வெளிப்படும் நேரத்தில் ஒருகணம் கூட வீணாகாமல் நேருக்கு நேர் சந்தித்து அட்டையைப் பெற்றுக்கொண்டு அனுப்பிவைத்தேன். ஒன்றும் பேசாமல் முறைத்துக்கொண்டே போனார் அவர்.
மறுநாளும் பஸ் ஸ்டாண்டிலிருந்து மருத்துவமனைக்கு நடந்துதான் சென்றேன். முதலில் என் கண்கள் பூங்காவுக்குள் வழக்கமான பெஞ்சில் அந்த ஓவியரைத்தான் தேடின. யாரோ ஒரு வெளிநாட்டுத் தம்பதியினரை எதிரில் அமரவைத்து வரைந்துகொண்டிருந்தார் அவர். நான் ஓரமாக நின்று பரவசத்தோடு வேடிக்கை பார்த்தேன்.
பணம் கொடுத்துவிட்டு, ஓவியத்தைப் பெற்றுக்கொண்டு அவர்கள் அங்கிருந்து நகர்ந்த பிறகுதான் அவருடைய பார்வையில் படும் வகையில் நின்று வணக்கம் சொன்னேன்.
“ஓ.. நீங்களா? வாங்க வாங்க, வணக்கம்” என்றார் அவர். அவர் கேட்காமலேயே ”வில்லினூரு பக்கத்துல கோர்க்காடு சார் எங்க ஊரு” என்றேன். அவர் திரும்பி என்னைப் பார்த்து புன்னகைத்தார்.
“ஊட்டோட பொட்டிக்கட ஒன்னு வச்சிருக்கேன். அப்படியே பொழப்பு ஓடுது. ஒரே ஒரு பொண்ணுதான் சார். பொன்னினு பேரு. அழகா இருப்பா. சிரிச்சா கன்னத்துல குழி உழும். சின்ன வயசுல போலியாவுல கால் போயிடுச்சி சார். சரிசெய்ய கையில பணமில்ல. எங்க போனாலும் தூக்கிட்டுதான் போவணும். என் ஊட்டுக்காரிதான் ரொம்ப பாவம். அவளுக்கு என்னாலயும் சொகமில்ல. புள்ளயாலயும் சொகமில்ல. காலம் பூரா கஷ்டம்..”
“இங்க அட்மிட் செஞ்சிருக்கிங்களா?” அவசரமாகக் கேட்டார் அவர். நான் இல்லை என்பதுபோல வேகமாகத் தலையசைத்தேன். “இங்க இருக்கறது வேற ஒருத்தரு. அது ஒரு தனிக்கதை” என்றேன்.
கடற்கரைக்குச் சென்ற கூட்டத்தினருக்கு வாகனங்களை நிறுத்த எங்கும் இடம் கிடைக்காததால் திரும்பிவந்து பூங்காவைச் சுற்றி வரிசைவரிசையாக ஒடித்து நிற்கவைத்துவிட்டுச் சென்றார்கள். வகைதொகை இல்லாமல் புகுந்துபுகுந்து வந்த வாகனங்களின் ஹார்ன் சத்தம் காதை அடைத்தது.
சிறிது நேரம் எதுவுமே பேசமுடியவில்லை. “இன்னைக்கு என்ன அதிசயம், இப்படி கூட்டம் நெரியுது?” என்று முணுமுணுத்த வார்த்தைகள் அவருக்குக் கேட்டுவிட்டது. ”இன்னைக்கு வெள்ளிக்கிழமை இல்லையா? அப்படித்தான் இருக்கும்” என்றார்.
“எங்க பொன்னி படத்த ஒருநாள் நீங்க வரைஞ்சி குடுக்கணும் சார்.
அதுக்கு சட்டம்லாம் போட்டு நடுவீட்டுல மாட்டி வச்சா, ரொம்ப அழகா இருக்கும்” என்று என் ஆசையை தயங்கித்தயங்கிச் சொன்னேன்.
“வரைஞ்சிட்டா போச்சி. ஒருநாள் கூட்டிட்டு வாங்க”
நான் வேகமாக அவரைப் பார்த்து தலையசைத்தேன். “அது ரொம்ப கஷ்டம் சார். ஊட்டுல அதும் போட்டா ஒன்னு இருக்குது. அத எடுத்தாந்து குடுத்தா பாத்து போடமாட்டீங்களா?” என்று கேட்டபடி அவர் முகத்தைப் பார்த்தேன். சில நொடிகள் அவர் எதுவும் பேசவில்லை. பிறகு “சரி, எடுத்தாங்க பார்ப்பம்” என்றார். அதைக் கேட்டதும் படமே என் கைக்கு வந்துவிட்டதுபோல உற்சாகமாக இருந்தது. “சார், வெறும் மூஞ்சிய மட்டும் போடாதீங்க சார். நல்லா கைவீசி நடக்கறமாதிரி, இல்ல இல்ல, ஓடறமாதிரி போடணும் சார். அதப் பாத்தா எங்க பொன்னிக்கு சந்தோஷமா இருக்கும். போடமுடியுமா சார்?” என்று ஒரு வேகத்தில் அவரைப் பார்த்து கேட்டுவிட்டாலும் எனக்கே கொஞ்சம் வெட்கமாக இருந்தது. “மொதல்ல படத்த எடுத்தாங்க, பாக்கலாம்” என்று சிரித்துக்கொண்டே பதில் சொன்னார். அவர் என் வார்த்தைகளை தப்பாக எடுத்துக்கொள்ளவில்லை என்பதே எனக்கு ஆறுதலாக இருந்தது.
அந்த எண்ணத்தின் நீட்சியாகவோ என்னமோ அவருக்கு எத்தனை பிள்ளைகள் இருக்கக்கூடும் என்னும் கேள்வி என் நெஞ்சைக் குடைந்தது. மெதுவாக “உங்களுக்கு எத்தன குழந்தைங்க சார்? என்ன பண்றாங்க?” என்று கேட்டேன்.
அவர் அதைக் காதில் வாங்காதவர் போல கையில் இருந்த நோட்டைப் புரட்டியபடி இருந்தார். மீண்டும் எப்படி கேட்பது என்று எனக்குள் தயக்கமாக இருந்தது. அந்த நேரம் பார்த்து டீ கேனை தூக்கிக்கொண்டு வரும் விற்பனையாளன் “டீ டீ, டீ வேணுமா சார்?” என்று கேட்டபடி கடந்துபோனான். அவர் அந்த டீக்காரனை சட்டென நிறுத்தி “ரெண்டு டீ குடுங்க தம்பி” என்று சொன்னார். கோப்பைக்குள் டீயை அவன் நிரப்பும்போதே பணத்தை எடுத்து அவன் பக்கமாக வைத்துவிட்டார்.
டீயை அருந்திமுடிக்கும் வரைக்கும் அவர் எதுவுமே பேசவில்லை. தெருவில் போகிறவருகிற மக்கள் கூட்டத்தையே வேடிக்கை பார்த்தார். வெற்றுக் கோப்பையை பக்கத்திலிருந்த குப்பைத்தொட்டி வரைக்கும் எடுத்துச் சென்று போட்டுவிட்டு திரும்பிவந்து “அதெல்லாம் ஒரு வரியில சொல்ற கதை இல்லை. பெரிய புராணம். யாருக்கும் அத நான் சொல்றதில்ல” என்றபடி உட்கார்ந்தார். நான் மேற்கொண்டு எதுவும் கேட்கத் தோன்றாமல் குழப்பத்தோடு நின்றிருந்தேன். என்னை அந்தச் சங்கடத்திலிருந்து காப்பாற்றுவதுபோல நாலரை சங்கு ஊதியது. மறுகணமே நான் பார்வையிலேயே அவரிடம் விடைபெற்றுக்கொண்டு வாசலை நோக்கிச் சென்றேன்.
அடுத்த நாள் மாலை மருத்துவமனையை அடைந்ததும் நேராக அவர் உட்கார்ந்திருக்கும் மரத்தடிக்கே சென்றுவிட்டேன். என்னைப் பார்த்ததுமே “பொன்னி படம் எடுத்தாந்தீங்களா?” என்று கேட்டார். நான் மெதுவாக “இல்ல சார்” என்று உதட்டைப் பிதுக்கினேன். “ஜாதக நோட்டுலாம் வச்சிருந்த மரப்பொட்டிக்குள்ளதான் அந்த படத்தயும் வச்சிருந்தம். இப்ப தேடனா கெடைக்கமாட்டுது. நல்லா தேடுன்னு ஊட்டுக்காரிகிட்ட சொல்லிட்டு வந்திருக்கேன்” என்றேன்.
”சரி , கெடச்சதும் எடுத்தாங்க” என்றார் அவர்.
அவர் ஞாபகமாக என்னிடம் பொன்னியின் படத்தைப் பற்றிக் கேட்டதே மகிழ்ச்சியைக் கொடுத்தது. உண்மையில் காலையில் வீட்டுக்குச் சென்றதுமே முதல் வேலையாக அந்தப் படத்தைத் தேடி எடுத்துவிட்டேன். ஒரு தாளில் வைத்துச் சுற்றி சட்டைப்பை நோட்டுக்கு நடுவில் பத்திரமாக
வைத்துக்கொண்டேன். அவரிடம் அதைக் கொடுத்தால் அரைமணி நேரத்தில் வரைந்துகொடுத்துவிடுவார் என்பதில் எனக்கு நம்பிக்கை இருந்தது. மற்றவர்கள்போல அவருக்கு அதிகமாக கொடுக்க முடியவில்லை என்றாலும் அந்தப் படத்தை வாங்கும்போது, கெளரவமாக ஒரு நூறு ரூபாயாவது கொடுக்கவேண்டும் என்று தோன்றியது. ஏற்கனவே ஷேர் ஆட்டோவைத் தவிர்த்து நடந்து வந்ததில் மிச்சம் பிடித்த பணம் கொஞ்சம் கைவசம் இருந்தது. இன்னும் கொஞ்சம் சேர்த்துவிட்டால் நூறு ரூபாய் திரண்டுவிடும். அந்த நேரத்தில் அப்போதுதான் கண்டுபிடித்து எடுத்துவந்ததுபோல பொன்னியின் படத்தைக் கொடுக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.
”என் ஊட்டுக்காரிகிட்ட உங்களபத்தி சொன்னேன் சார். அதுக்கு நம்பிக்கையே வரமாட்டுது. சும்மா கத உடாத போன்னு சொல்லுது. நீங்க வரஞ்சி குடுக்கற பொன்னி படத்த அதுங்கிட்ட காட்டித்தான் நம்பவைக்கணும் போல”
ஒருகணம் தன் வேலையை நிறுத்திவிட்டு என்னைத் திரும்பிப் பார்த்து புன்னகைத்தார். அதைப் பார்த்த வேகத்தில் “என் ஊட்டுக்காரிக்கு பெரிய மனசு சார். எந்த மாதிரியான கஷ்டமா இருந்தாலும் வெளியிலயே சொல்லாது. அதுவே நெஞ்சுக்குள்ளயே வச்சி அழுத்திக்கும்” என்று சொன்னேன்.
“அப்படி இருந்தா ஆம்பளைங்களுக்கு நல்லதுதான?”
அதைக் கேட்டதும் எனக்கு சுருக்கென்றது. “அது எப்படி சார்? மனசாட்சிக்கு பயந்தவங்களால அப்படி இருக்கமுடியுமா சார்? குடும்பத்துல ஒரு துன்பம்ன்னா, அத ரெண்டு பேருமா சேர்ந்துதான சமாளிக்கணும்?” என்று சொன்னேன்.
தொடர்ந்து “இந்த ஆஸ்பத்திரி வேலயில கெடைக்கற பணத்த வச்சி ஒரு கிரைண்டரு வாங்கறதுக்கு பேசிட்டிருக்கம். அக்கம்பக்கத்துல அரிசிமாவு, கடலமாவுன்னு தெனம் பத்து இருவது பேரு தாராளமா வருவாங்க. செலவுக்கு ஒரு வழி பொறந்தமாதிரி ஆயிடும்” என்றேன்.
அவர் திடீரென இரண்டு கைகளையும் என்னைப் பார்த்து தூக்கினார். “கோவிச்சிக்காதப்பா, நான் சும்மா ஒரு வெளயாட்டுக்குத்தான் சொன்னேன்” என்று புன்னகைத்தார்.
எங்களைக் கடந்துபோன டீக்காரரை அழைத்து இரண்டு பேரும் டீ அருந்தினோம். அன்று நானே பணம் கொடுத்தேன். அவர் ஒன்றும் சொல்லவில்லை.
சங்கு ஊதும் சத்தம் கேட்டது. “சரி, போங்க. நாளைக்காவது படத்த தேடி எடுத்தாங்க” என்றார் அவர். நான் தலையசைத்துக்கொண்டே வாசலை நோக்கி ஓடினேன்.
மறுநாள் என்னைப் பார்த்ததுமே அவர் “என்ன கிடைச்சிட்டுதா?” என்றுதான் முதலில் கேட்டார். ”இல்ல சார்” என்று கூச்சத்தோடு உதட்டைப் பிதுக்கினேன்.
அவர் ஏதோ ஒரு வேலையில் மூழ்கியிருக்க, நான் எதுவும் பேசாமல் வெகுநேரம் அவரையே வேடிக்கை பார்த்தபடி உட்கார்ந்திருந்தேன். அப்போதெல்லாம் மனத்துக்குள் ஏதோ தெம்பு
பிறப்பதுபோல இருந்தது.
ஒரு வாரத்துக்குப் பிறகு நூறு ரூபாய் சேர்ந்துவிட்டது. மீண்டும் மீண்டும் பணத்தை எண்ணிப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. எல்லாமே ஐந்து ரூபாய், பத்து ரூபாய் நோட்டுகள். அவரிடம் கொடுக்கும்போது இப்படி நோட்டுகளாக இருந்தால் பொருத்தமாக இருக்காது என்று தோன்றியது. ஸ்டாண்டில் நின்றிருந்த ஒரு ஆட்டோக்காரரிடம் சில்லறையைக் கொடுத்து நூறு ரூபாய் தாளை வாங்கி வைத்துக்கொண்டேன். அவரிடம் அப்படி கொடுப்பதுதான் கெளரவமாக இருக்கும் என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். ஒருமுறை நோட்டுக்குள் மடித்துவைத்திருந்த பொன்னியின் படத்தையும் எடுத்துப் பார்த்தேன். இன்னும் சிறிது நேரத்தில் துள்ளிச்செல்லும் கன்றுக்குட்டியின் தோற்றத்தில் அவளுடைய ஓவியம் உருவாகப்போகிறது என்று நினைக்க நினைக்க அந்தப் பரவசத்தை என்னால் தாங்கமுடியவில்லை.
பூங்காவை அடைந்ததும் அவர் வழக்கமாக அமர்ந்திருக்கும் பெஞ்சைத்தான் என் கண்கள் தேடின. அங்கிருந்தே அவரை அழைத்தபடி அவரை நோக்கி நடக்கவேண்டும் என நினைத்திருந்தேன். அவர் அங்கு காணவில்லை. ஒருவேளை பெஞ்ச் மாறிப் பார்க்கிறேனோ எனக் குழம்பி அக்கம்பக்கமிருந்த எல்லா பெஞ்சுகளையும் பார்த்தேன். அவரை எங்கும் காணவில்லை.
அவர் வழக்கமாக படங்களை கயிற்றில் கட்டித் தொங்கவிட்டிருக்கும் மரங்களுக்கு அருகில் நின்றேன். ஒருவேளை சீக்கிரம் கிளம்பிவிட்டாரோ அல்லது இடம்மாறி விட்டாரோ என நினைத்தபடி பூங்கா முழுதும் சுற்றிச்சுற்றி அலைந்தேன். அவரை எங்கும் பார்க்கமுடியவில்லை.
அவர் வந்துவிடக்கூடும் என்னும் நம்பிக்கையில் அந்த பெஞ்சிலேயே வெகுநேரம் அமர்ந்திருந்தேன். வாசலில் சங்கு ஊதும் வரைக்கும் அவர் என் பார்வையில் தென்படவே இல்லை. தன்னிச்சையாக என் கை
பையிலிருந்த பொன்னியின் படத்தை எடுத்துப் பிரித்தது. சில கணங்கள் அதையே பார்த்துவிட்டு மூடிவைத்தேன்.
அடுத்தநாள் வந்துவிடக்கூடும் என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்.
அடுத்த நாளும் அவரைக் காணவில்லை என்றபோது
திகைப்பாக இருந்தது. அதைத் தொடர்ந்து நாலைந்து நாட்களில் சிகிச்சை பெற்றுவந்த பெரியவர் ஆரோக்கியம் பெற்று வீட்டுக்குச் சென்றுவிட்டதால் அந்த வேலையே ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. அதற்குப் பிறகு எனக்கும் பூங்காவின் பக்கம் போகவேண்டிய அவசியமே இல்லாமல் போய்விட்டது.
(ஓம் சக்தி - தீபாவளி மலரில் இடம்பெற்ற சிறுகதை)