Home

Sunday, 16 December 2018

பச்சைக்கிளிகள் - சிறுகதை




ஆங்கில வகுப்புக்கு பாடமெடுக்க அன்று வரவேண்டியவர் சுந்தரராஜன் சார். அவர் விடுப்பில் இருந்ததால் மாற்று ஏற்பாடாக ராமசாமி சார் வந்தார். ‘குழலூதுபவனும் எலிகளும்என்றொரு கதையை எங்களுக்கு அவர் சொன்னபோது, அவர் ஏதோ புதுமையாகச் சொல்கிறார் என்றுதான் முதலில் தோன்றியது. குழலோசை கேட்டதும் கூட்டம்கூட்டமாக எலிகள் குழலூதுபவனின் பின்னாலேயே செல்கின்றன. அவற்றை தந்திரமாக ஆற்றுக்குள் இறக்கி இறக்கும்படி செய்து விடுகிறான் குழலூதுபவன். அவன் எதிர்பார்த்த பரிசுத்தொகை மறுக்கப்படுகிறது. மனமுடைந்த பாடகன் மறுநாள் அந்த நகரத்தின் குழந்தைகளையெல்லாம் குழலோசையால் கூட்டம்கூட்டமாக அழைத்துக்கொண்டு செல்கிறான்.   உடனே அரசன் உரிய பரிசுத்தொகையைக் கொடுத்து குழந்தைகளை மீட்டுக்கொள்கிறான். ராமசாமி சாரின் கதைகூறும் திறமையால் எங்கள் கண்முன்னால் அந்தக் காட்சிகள் அப்படியே படம்படமாக விரிந்தன. வகுப்பு முடியப்போகிற சமயத்தில்தான் அந்தக் கதை எங்கள் ஆங்கிலப்புத்தகத்தில் உள்ள ஒரு பாடம் என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

அந்தக் கதையின் பரவசத்தில் என் மனம் மிதந்தபடியே இருந்தது. மற்ற வகுப்புகளில் நடத்தப்பட்ட எந்தப் பாடமும் பதியவே இல்லை. குழலூதுபவனின் சித்திரம் அப்படியே ஆணியடித்தமாதிரி இறங்கிவிட்டது. பள்ளிக்கூடம் விட்டுத் திரும்பும் வழியில் ஒரு பூவசர இலையைக் கிள்ளி, குழல்போல உருட்டி உதடுகளிடையே வைத்து ஓசையை எழுப்பினேன். உடனே என் கூடவே வந்த என் அண்ணன் கைதட்டி சிரித்து கிண்டல் செய்தான். “ஒன் பின்னால ஒரு நாய்கூட வராது, பேசாம வழிய பாத்து நடடாஎன்று சிரித்தான். நான் அவனை முறைத்துப் பார்த்தேன். “அந்த வாத்திக்குத்தான் வேல இல்லைன்னா, ஒனக்குமா வேல இல்ல?” என்று மறுபடியும் கேட்டான் அவன். பதில் சொல்லாமல் அவனையே பார்தேன். ”இப்படி மொறச்சிகினே நின்னா எப்பிடிடா? ஊட்டுக்குப் போயி மாவரைக்கணும்ங்கறது மறந்துடுச்சா?” என்று உடனே சீண்டினான். எனக்கு அவனைப் பார்க்கவே பிடிக்கவில்லை. வீடு, அப்பா, அவர் வைத்திருக்கும் ஓட்டல் எதுவுமே அந்தக் கணத்தில் பிடிக்கவில்லை. பேசாமல் நடந்தேன். அப்பாவுக்கு அவன் செல்லப்பிள்ளை. ஓட்டல் வேலைகளுக்காகவே அவனை அவர் வளர்த்தார். என்னைப் பள்ளிக்கூடம் சேர்க்கிற அன்று அம்மா அவரோடு சண்டை போட்டுவிட்டு அவனை இழுத்துவந்து என்னோடு பள்ளியில் சேர்த்துவிட்டாள்.
குழலூதுபவன் கதை என் மனத்தில் மீண்டும்மீண்டும் ஒலித்தது.  குறைந்தபட்சமாக நாலைந்து  காகங்களையாவது என் அழைப்பை ஏற்றுக்கொள்பவையாக மாற்றவேண்டும் என்கிற ஆசையைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை.  யாரும் பார்க்காத சமயத்தில் வீட்டுத் தோட்டத்தில் நின்று காகங்களை அழைத்தேன். முன்பக்கம் ஓட்டல் கடை, ஒரு தடுப்பை அடுத்து எங்கள் அறைகள், அப்புறம் தோட்டம் என ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டிருந்தது எங்கள் வீடு. என் முயற்சியில் ஒருகணம் என்னையே மறந்திருந்த சமயத்தில் அம்மா என்னைப் பார்த்துவிட்டாள். “காக்காவுக்கு சோறுவைக்கற அன்னிக்குக் கத்துடான்னா ரொம்ப கவுரவம் பார்க்கற ஆளு நீ. இன்னிக்கு என்னடா, தானா கத்தற?” என்று விசாரணையைத் தொடங்கினாள். “அந்த மரத்துல ஒரு காக்கா. அத கூப்ட்டேன்என்று தடுமாறி ஏதோ ஒரு மரத்தைக் காட்டினேன். ”அது சரி, எதுக்குடா கூப்ட்ட?” என்று மறுபடியும் கேட்டாள். “போம்மாஎன்றபடி வீட்டுக்குள் ஓடிவிட்டேன் நான்.
ஒரு விடுமுறை நாளில் நாங்கள் எல்லோரும் கடையில் இருந்தோம். அம்மா அடுப்பங்கரையில் தோசை ஊற்றினாள். சாப்பிட வருகிறவர்களுக்கு இலைபோட்டு தண்ணீர் வைக்கும் வேலையை நான் செய்தேன். அவர்களுக்குத் தேவையானதைக் கேட்டு அண்ணன் சமையலறையிலிருந்து எடுத்துவந்து தந்தான். சாப்பிட வருபவர்கள் விருப்பத்துக்காக ஒரு சின்ன தொலைக்காட்சியை வாங்கி வைத்திருந்தார் அப்பா. பாட்டுகள் மட்டும் ஒளிபரப்பாகும் சேனல்களைமட்டும் அவ்வப்போது மாற்றிக்கொண்டே இருப்பதுதான் அவர் வேலை. பாட்டின் மயக்கத்தில் எழுந்திருக்க மனமில்லாமல் சாப்பிட்ட இலையில் விரலால் கோலம் போட்டுக்கொண்டே இருப்பவர்களிடம்இன்னும் ஒரு தோச சொல்லட்டுமா?” என்று கேட்டு சம்மதம் பெற்றுவிடுவார். அடுத்த கணம்முறுகலா ஒரு தோசேய்என்றபடி அண்ணன் சமையல்கட்டுக்கு ஓடுவான். கல்மீது அம்மா மாவை ஊற்றித் தேய்க்கும் சத்தம் கேட்கும்.
கா கா கா என்றொரு பாட்டு தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. “சிதம்பரம் ஜெயராமன்னா சும்மாவா? அந்தக் காலத்துல பெரிய கில்லாடி. வெங்கலத்த சுண்டினாப்புல கொரல்ல என்ன ஒரு சுத்தம் பாரு. இவனப்போல பாட இன்னும் நாலு ஜென்மமானாலும் யாராலயும் முடியாதுஎன்று ஒருவர் ரசனையோடு சொன்னார். ”சரியா சொல்லிட்டிங்க. அவருக்கு  ஈடு எணையா யாரு இருக்கா இப்ப?” என்று உரையாடலைத் தொடங்கிய அப்பா அவருக்குப் பிடித்தவகையில் கூடுதலாக இரண்டு இட்டிலிகள் வைக்க சம்மதம் பெற்றார்.  ஜன்னலோரமாக உட்காரவந்த ஒரு குடும்பத்துக்கு தண்ணீர் வைக்கச் சென்ற நான் தற்செயலாகத்தான் தொலைக்காட்சியின் பக்கம் திரும்பினேன். பாட்டுப் பாடுகிறவரைச் சுற்றி காக்கைகளின் கூட்டம். அவர் கிணற்றையொட்டி நிற்கிறார். பிறகு மதிலோரம் செல்கிறார். எங்குபோனாலும் காக்கைகளும் கூடவே செல்கின்றன. எனக்கு மெய்ச்சிலிர்த்தது. அந்தப் பாட்டின் வரிகளை உடனே மனம் உள்வாங்கத் தொடங்கியது.
அப்போது ஒரு டயர் வண்டி எங்கள் கடையைக் கடந்துபோனது. வண்டிமாடுகளின் கழுத்துமணிச் சத்தம் பாட்டுச் சத்தத்தையும் மீறிக் கேட்டது. வாசலில் போடப்பட்டிருந்த பெஞ்சில் பேப்பர் படித்துக்கொண்டிருந்த செல்வராஜி மாமா, உள்பக்கமாகத் திரும்பி அப்பாவிடம்கவுண்டர் வீட்டு மாடிக்கு புதுசா ஆளு வந்திட்டுதுபோல. வண்டி போவுதுஎன்று தகவலாகச் சொன்னார். “வந்துட்டாங்களா? நேத்து சாயங்காலம் வடை சாப்புட வந்தபோது சொன்னான். ஏதோ முறுக்கு சுட்டு விக்கறவங்களாம்என்றார் அப்பா. ”அந்த நர்சம்மா காலி பண்ணிப் போயி பத்து நாளுகூட இருக்காது, அதுக்குள்ள புது ஆள புடிச்சிட்டான் பாருஎன்றார் மாமா.
கவுண்டர் வீட்டுக்கு முன்னால் வண்டி சென்று நின்றதை கடையிலிருந்தே பார்க்கமுடிந்தது. வண்டியிலிருந்து இரண்டுபேர் வந்து இறங்கினார்கள். அம்மா. மகன். சாமான்களை இறக்காமலேயே வண்டிக்காரனோடு அவர்கள் நேராக ஓட்டலுக்கு வந்தார்கள். முகத்தையும் கையையும் கழுவிவிட்டு அப்பாவின் மேசையில் இருந்த திருநீற்றை எடுத்து நெற்றியில் வைத்துக்கொண்டு மகனுக்கும் பூசிவிட்டார் அந்த அம்மா. இலைபோடுவதற்கு முன்பாகவேஆளுக்கு நாலு இட்லி குடுங்கஎன்றார். அண்ணன் இட்லி எடுத்து வர ஓடினான்.
அந்த மாடிக்கு புதுசா வந்திருக்கோம்ங்க ஐயா. அரிசி முறுக்கு போடறதுதாங்க தொழில். கடைங்களுக்கும் ஊடுங்களுக்கும் குடுத்துதான் யேபாரத்த புடிக்கணும். சாயங்காலமா குடுக்கறேன். சாப்ட்டு பார்த்துட்டு சொல்லுங்கயாரும் கேட்காமலேயே அந்த அம்மா எல்லாவற்றையும் சொன்னார். இதற்கு முன்னால் இருந்த இடம் வில்லியனூர் என்று சொன்னதும் அப்பாவின் முகம் பிரகாசமானது. “ஆத்துல தண்ணி இருக்குதுங்களா? ஐப்பசி மழயில வெள்ளம் வந்ததுன்னு டிவில காட்டனானேஎன்று தானாகவே பேச்சைத் தொடங்கிவிட்டார். அப்புறம் அவரைத் தெரியுமா இவரைப் பார்த்ததுண்டா என்று ஏராளமான கேள்விகள். “எங்க தாத்தா காலத்துல ஆத்தோரமா எங்களுக்கு ரெண்டு காணி நெலம் இருந்திச்சி. உருப்படாத கூட்டம் குடிச்சிகுடிச்சியே எல்லாத்தயும் அழிச்சிடுச்சிங்க. மிச்சம்மீதி இருந்தத எங்க அப்பா வைத்திய செலவுக்கு  நாங்களே வித்துட்டம்என்று பெருமூச்சுவிட்டார். அந்த நேரம் அவர்கள் சாப்பிட்டுமுடித்தார்கள். முறுக்குக்கார அம்மா பையிலிருந்து பணத்தை எடுத்துக் கொடுத்தாள். மகன் கைகழுவிவிட்டு கடைக்கு வெளியே சென்று வேடிக்கை பார்த்தான். கடைக்கு எதிரில் இருந்த கொடுக்காப்புளி மரத்தில்  உட்கார்ந்திருந்த பச்சைக்கிளியின்மீது அவன் பார்வை படிந்திருந்தது. அவன் கீகீ என்று அந்தக் கிளியைப் பார்த்துக் குரல்கொடுத்தான். சட்டென்று அந்தக் கிளி மரத்திலிருந்து திரும்பிப் பார்த்தது. கிளையைவிட்டுப் பறந்தது. வானத்திலேயே நாலைந்து வட்டமடித்துவிட்டு தாழ்வாக இறங்கிவந்து அவன் தோளில் அமர்ந்தது. பிறகு கீகீ என்றது. அவன் தோளிலிருந்து எம்பி தலைமீது  ஒருகணம் உட்கார்ந்துவிட்டு இறங்கியது. கடையிலிருந்து வெளியேறிய அவன் அம்மாவந்ததுமே ஒன் வேலய ஆரம்பிச்சிட்டியா? போடாஎன்று அவனைப் பார்த்து அலுத்துக்கொண்டார். அவன் சிரித்துக்கொண்டே அம்மாவின் பின்னால் நடந்தான். அந்தக் கிளி அவன் பின்னாலேயே பறந்துபோனது. அந்தக் காட்சி ஒரு கனவுபோல இருந்தது. ஆச்சரியத்தோடு அவனைப் பார்த்தேன். நம்பவே முடியவில்லை. நம்பாமலும் இருக்கமுடியவில்லை. என் பின்னால் அப்பா, அண்ணன், வாடிக்கையாளர்கள் எல்லாரும் அந்த அதிசயத்தைப் பார்த்தார்கள். என் கையில் தண்ணீர்க்குவளைமட்டும் இல்லாமலிருந்தால் அந்தக் கிளியைப்போலவே நானும் அவன் பின்னால் போயிருப்பேன்.
ஆள பாத்தா வெண்டக்காயாட்டம் இருக்கறான். பெரிய மாயமந்திரம்லாம் கத்துவச்சிருப்பான்போல…”
கண்ணமூடி கண்ண தெறக்கறதுக்குள்ள அந்தக் கிளி எறங்கி வந்து அவன் பின்னாலயே போவுது…..”
மயக்கி இழுக்கறதுக்காகவே தாயத்து கீயத்து கட்டியிருப்பான். நம்பமுடியாது…….”
இந்த சின்ன வயசுலயே எவ்வளவு சக்தி பாரு அவனுக்கு
கிளியை புடிக்கறாப்புல நாள பின்ன நம்ம புள்ளைங்களயும் புடிச்சிகினு போனாலும் போயிருவான். நாமதான் ஜாக்கிரதயா இருக்கணும்.”
என் காதுகளில் எதுவுமே விழவில்லை. அவன் பின்னால் கிளி பறந்துபோகும் காட்சியிலேயே மனம் உறைந்துகிடந்தது.
அந்த அம்மா அவனிடம் எதையோ சொல்லி புலம்பிக்கொண்டே நடந்தாள். அவன் எதற்கும் பதில் சொல்லாமல் அந்த வண்டிவரைக்கும் போனான். அந்தக் கிளியும் கூடவே போனது. வண்டிக்குள் ஏதோ ஒரு பாத்திரத்தைத் திறந்து ஒரு கை அள்ளி அந்தக் கிளியின் முன்னால் நீட்டினான். அது அவன் முழங்கைமீது நின்றுகொண்டு அதைக் கொத்தித் தின்றது. எங்கிருந்தோ இன்னொரு கிளி பறந்துவந்து வண்டிச் சக்கரத்தின் மீது அமர்ந்து அவனைப் பார்த்தது. பிறகு நெருங்கிப் பறந்து வந்து அவன் கையில் இருந்ததை கொத்தியெடுத்தது. அவன் வாயைத் திறந்து ஒன்றுமே பேசாமல் அமைதியாக கையைமட்டும் நீட்டியபடி இருந்தான். இரண்டு கிளிகளும் அவன் தலையைச் சுற்றிப் பறந்துபறந்து வந்ததும் அவன்  தோளில் சுதந்திரமாக உட்கார்ந்ததும் அவன் கையிலிருந்ததை கொத்தித் தின்றதும் அற்புதமான காட்சி. அவன் அம்மாவும் வண்டிக்காரனும் சாமன்களை ஒவ்வொன்றாக இறக்கிவைத்தார்கள். வீட்டுக்காரர் வெளியே வந்து  அந்த அம்மாவைப் பார்த்துப் பேசிவிட்டு சாவியைக் கொடுத்தார். அந்த அம்மா அவனைப் பார்த்துகிளிகிட்ட கொஞ்சனதுலாம் போதும். வண்டிக்காருகூட ஒரு கை புடிடா. சாமனுங்கள மேல ஏத்தவேணாமா?” என்று சத்தம் போட்டாள். தலையை ஆட்டிவிட்டு அவன் கையை உதறினான். மறுகணமே கிளிகள் பறந்துபோக, அவன் மூட்டைகளைத் தூக்கினான்.
அன்று மாலையிலேயே அவன் எனக்கு நண்பனாகிவிட்டான். கடைத்தெருவில் காய்கறிகள் வாங்கிக்கொண்டு திரும்பும் வழியில் போலீஸ் ஸ்டேஷனுக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த திரைப்படத்தட்டிகளை வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றிருந்தபோது அவனும் வேடிக்கை பார்க்கவந்தான்.   ரொம்பகாலம் பழகியவனைப்போலஇந்த ஊருல ரெண்டு சினிமா கொட்டாயா?” என்று ஆச்சரியத்தோடு என்னைப் பார்த்துக் கேட்டான். நான் ஆமாம் என்பதுபோல தலையசைத்தேன். பிறகு இரண்டுபேரும் பேசிக்கொண்டே வீட்டுக்குத் திரும்பினோம். எல்லா விவரங்களையும் அப்போது சொன்னான். அவன் பெயர் முத்துசாமி. என் அண்ணனைவிடப் பெரியவன். ”பேர் சொல்லி கூப்புடறதால ஒரு பிரச்சினையும் இல்லை. நீ என்ன முத்துசாமின்னே கூப்பிடுஎன்று சொல்லிவிட்டு தட்டிக்கொடுத்தான். அவன் அம்மாவுக்கு முறுக்கு சுடுவதுதான் வேலை. சின்னச்சின்ன பாக்கெட்டுகளில் அதைப் போட்டு வீடுவீடாகச் சென்று அவன் விற்றுவிட்டு வரவேண்டும். கடைகளுக்கும் கொடுக்கவேண்டும். ஏதாவது விசேஷ நாட்களில் யாருக்காவது மொத்தமாக முறுக்கு சுட்டுக் கொடுத்தால் கொஞ்சம் கூடுதலாக பணம் கிடைக்கும். அப்பா இல்லை. சின்ன வயதிலேயே ஒரு ரயில் விபத்தில் செத்துப்போய்விட்டார். ”கிளி எப்படி உன்கிட்ட வந்திச்சி?” என்று முக்கியமான விஷயத்தைத் தொட்டேன். “எனக்கும் தெரியலையே, அதுவா வந்திச்சிஎன்று அப்பாவியாகச் சிரித்தான் அவன்.
இரண்டுமூன்று மாதங்களிலேயே முத்துசாமியின் முறுக்குப் பாக்கெட்டுகளுக்கு  தெருவில் இருந்த எல்லாருமே வாடிக்கைக்காரர்களானார்கள். ஒரு தட்டு நிறைய முறுக்குகள் வாங்கி அப்பாவும் கடைமேசையில் வைத்தார். பொங்கல் சமயமென்பதால் பல பேர் தம் வீட்டுக்கே முத்துசாமியின் அம்மாவை வரவழைத்து முறுக்கு சுட்டு தரச்சொன்னார்கள். முறுக்குகளுக்காக மட்டுமன்றி வேறு இரண்டு காரணங்களுக்காகவும் அவர்களுடைய பெயர் வேகவேகமாக ஊருக்குள் பரவியது. ஒரு ரூபாய்க்கு வாங்கிவரப்படும் ஒரு கிலோ ரேஷன் அரிசிக்கு அவர்கள் பதினைந்து ரூபாய் கொடுத்தார்கள் என்பது ஒரு காரணம். காலை வேளைகளில் அந்த மாடி நூற்றுக்கணக்கான பச்சைக்கிளிகளின் விருந்தினர் மாளிகையாக மாறி காட்சியளிப்பது இரண்டாவது காரணம். 
தினமும் காலையில் அந்தக் காட்சியை வாய்பிளந்தபடி பரவசத்தோடு பார்த்திருப்பேன். கணக்கு டியூஷனை முடித்துக்கொண்டு திரும்பிவரும்போது அந்த அதிசயம் நிகழும். முத்துசாமி மாடியில் நின்றுகொண்டு தொலைவில் தெரியும் தோப்பையே பார்த்துக்கொண்டிருப்பான். சூரிய ஒளியில் அந்தத் தோப்பின் மேற்பரப்பு அலையலையாய் நெளியும் பச்சைத்துணிபோலத் தெரியும். தென்னைமரங்கள் பனியின் சுகத்திலிருந்து மீளாத கனவில் நின்றிருக்கும். வெள்ளைக்கொடிகள் பறப்பதுபோல அங்கங்கே மேகங்கள். பளபளக்கும் வெள்ளித்தட்டுபோல சூரியன் ஒரேகணத்தில் அவற்றைக் கடந்து உருண்டுபோகும். திடீரென ஒரு மேகத்தைக் கிழித்துக்கொண்டு வருவதுபோல ஒரு கிளி வட்டமடித்துப் பறந்தபடி மாடியைநோக்கி வரும். மாடியைத் தொட்டதும் அருகில் இருக்கும் முருங்கைக்கிளையில் உட்கார்ந்து திரும்பித்திரும்பிப் பார்க்கும். மறுகணம் விர்ரென்று பறந்துபோய் முத்துசாமியின் தோளில் அமர்ந்து வாசனை பிடிக்கும். காதுகளையும் தோள்களையும் பறந்து வருடும். கீகீ என்று கத்தும். கண்மூடி கண் திறப்பதற்குள் நூற்றுக்கும் மேற்பட்ட கிளிகள் எல்லாத் திசைகளிலிருந்தும் பறந்துவரும். பச்சைச்சிலைகள் உயிர்பெற்று வந்ததுபோல மாடிச்சுவரைச்சுற்றி அமர்ந்துகொள்ளும். முத்துசாமி அண்ணன் ஒரு பெரிய விரிப்பில் அரிசியைப் பரப்பி வைத்திருப்பார். அவற்றை கிளிகள் கொத்தித் தின்னும்.
பள்ளிக்கூடத்தில் என் வரிசையில் உட்காரக்கூடிய நான்குபேரோடும் அந்த அற்புதத்தைப் பகிர்ந்துகொண்டேன். அதைச் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும்போல இருந்தது. அவ்வளவு பரவசம். அன்று மாலைக்குள் பள்ளிக்கூடம் முழுதும் செய்தி பரவிவிட்டது. பிள்ளைகள் எல்லோரும் கும்பல்கும்பலாக காலைநேரத்தில் வந்து பச்சைக்கிளிகளின் கூட்டத்தை வந்து பார்த்தார்கள். அவர்கள் அனைவரையும் நான்தான் அழைத்துச் சென்று காட்டினேன். எங்கள் ராமசாமி சாருக்கு கண்கள் தளும்பிவிட்டன. “என்னடா சொல்றது? கடவுள் அம்சம்தான் அவன். போஎன்று தொண்டை கரகரக்கச் சொன்னார். எப்படியோ பெண்கள் பள்ளிக்கும்   செய்தி எட்டிவிட்டது. கண்காட்சிக்கு அழைத்துச் செல்வதுபோல வரிசையாக பெண்களை அழைத்துவந்து ஓர் ஆசிரியை காட்டிவிட்டுச் சென்றார். விழுப்புரத்திலிருந்து ஒரு பத்திரிகை நிரூபர் வந்து புகைப்படங்கள் எடுத்தார். எங்கள் ஊரில் லோக்கல் சேனல் நடத்தும் அண்ணன் கேமிராவோடு வந்து கிளிகளின் காட்சியைப் பதிவுசெய்து ஒளிபரப்பினார்.
மாடியின் சுற்றுச்சுவர்முழுக்க கிளிகள் சுதந்திரமாக உட்கார்ந்திருந்தன. ஒன்றையொன்று விரட்டிப் பிடிப்பதுப்போல பறந்துபறந்து கீழே இறங்கின.  எங்கிருந்தோ கிளிகள் கணக்கில்லாமல் வந்துகொண்டே இருந்தன. ஒரு கூட்டம் வந்து இறங்கி விளையாடித் திரிய, இரண்டாவது கூட்டமும் பெரிய எண்ணிக்கையில் வந்ததைப் பார்த்ததும் என் இதயம் என்றுமில்லாதபடி வேகவேகமாகத் துடித்தது. பறப்பதுபோல கையும் காலும் பரபரத்தன. மரத்தின்மீது தாவி, வானத்தைநோக்கித் தாவி, அப்படியே மேகமண்டலத்தின்மீது தாவிப் பறப்பதுபோல உல்லாச நினைவுகள் பொங்கிப்பொங்கி எழுந்தன. எந்த நிமிடத்திலாவது கண்ணுக்குத் தெரியாமல் அவை பறந்துவிடுமோ என்ற பதற்றத்தில் கிளிகள்மீது வைத்த பார்வையை எடுக்க யாருக்கும் மனமே வரவில்லை. முத்துசாமி அண்ணன் அந்தக் கிளிகளைத் தொட்டுத் தூக்கினார். அவற்றின் சிறகுகளை வருடிக்கொடுத்தார். கொஞ்சினார். பறக்கவிட்டுப் பிடித்தார். கன்னத்தோடு ஒட்டவைத்துக்கொண்டு முத்தமிட்டார்.
எங்கள் தெருவின் பெயரே பச்சைக்கிளித்தெரு என்று மாறிவிட்டது. முத்துசாமி அண்ணனைத் தேடிவரும் கிளிகளைப் பார்க்காதவர்கள் எங்கள் ஊரிலேயே இல்லை. அந்த அளவுக்குப் பிரபலமாகிவிட்டது. அவனிடம் முறுக்கு வாங்கும் வீட்டுக்காரர்கள் அவனை ஒரு பத்து நிமிடங்களாவது நிறுத்தி கிளிகளைப்பற்றி விசாரித்தார்கள். ஒருநாள் எங்கள் கடைக்கு முறுக்கு போடவந்தபோதுஎப்படிடா பழக்கினே?” “கடவுள் ஏதோ ஒரு அதிசய சக்தி உனக்கு குடுத்திருக்கான்” “ஒவ்வொன்னும் ஆண்டாள் தோள்ல இருக்கிற கிளியாட்டம் இருக்குது. குடுத்துவச்ச மகராஜன்டா நீஎன்றெல்லாம் அம்மாவே சொன்னாள்.
ஒருநாள் இரவு சாப்பிட்டு விட்டு, முறம்நிறைய வெங்காயங்களை வைத்துக்கொண்டு உரிப்பதற்காக உட்கார்ந்திருந்தாள் அமமா. நானும் அண்ணனும் கணக்குப் போட்டுக்கொண்டிருந்தோம். அப்பா தொலைக்காட்சியில் மூழ்கியிருந்தார். அப்பாவின் பக்கம் திரும்பிய அம்மா, திடீரெனஇட்லி அரிசி வாங்க இனிமேல கூடுதலா பணம் வேணும்என்று சொன்னாள். ரிமோட்டை அழுத்தியபடியே அம்மாவின் பக்கம் திரும்பிய அப்பாதிடீர்னு என்ன கூடுதல் செலவு? அதே அளவு அரிசிதானே வாங்கறே?” என்று கேட்டார்.
அதே அளவுதான். ஆனா செலவுதான் கூடிப் போச்சி
உடனே அம்மாவை முறைத்துப் பார்த்தார் அப்பா. “என்ன மொறச்சி என்னங்க புண்ணியம்? இதுக்கு முன்னால ரேஷன் அரிசிய வாங்கி நம்மகிட்ட குடுத்திட்டுருந்தவஙகள்ளாரும் ஒவ்வொருத்தவங்களா இப்ப அந்த முறுக்குக்கார அம்மாகிட்ட போயிட்டாங்கஎன்றாள் அம்மா.
நன்றி கெட்ட ஜென்மங்கடி இதுங்க. ஒத்த ரூபா அரிசிக்கு சொளயா பத்து ரூபா குடுத்தவன்டி நான். எவ்ளோ காலம். ஒரே நாள்ல எல்லாத்தயும் மறந்துடிச்சிங்களே?”. உதடுகளைப் பிதுக்கி சப்புக்கொட்டினார் அப்பா.
பத்து காசு ஆதாயாம் கெடைக்கறபக்கம்தான் எல்லாரும் போவாங்க? அவுங்க நெலையில நாம இருந்தா, நாமளும் அப்பிடிதான் செய்வோம்.”
எங்கிட்டயே இலக்கணமா?. வெட்டிருவன் வெட்டி. மனுஷனா பொறந்தவனுக்கு நன்றியுணர்ச்சி இருக்கணும்டி. நன்றியுணர்ச்சி. அது இல்லைன்னா மிருகத்துக்கும் மனுஷனுக்கும் என்னடி வித்தியாசம்? கை ஈரம் காயறதுக்குள்ள எடம் மாறி போறவனுங்களுக்கெல்லாம் அதெல்லாம் எங்க தெரியப் போவுது?” அப்பா வெறுப்போடு பேசினார். தன்னிச்சையாக ரிமோட்டை அழுத்தி சேனல்களை மாற்றியபடியே இருந்தார். ஒரு காட்சியில்கூட அவர் மனம் பதியவில்லை என்பதைப் புரிந்துகொண்டேன்.
அந்தக் கதயையே பேசிகினிருந்தா ஒரு வேலைக்கும் ஆவாதுங்க. ஒன்னு அந்த முறுக்குக்காரம்மா குடுக்கறமாரி நாமளும் பதினஞ்சி குடுக்கணும். இல்லைன்னா விழுப்புரம் போயிதான் ஒடச்சல் அரிசி மூட்ட போட்டுகிட்டு வரணும். அதுக்கு கிலோ இருவத்திரண்டு ருபா அழணும். ரெண்டுல ஒன்னு முடிவ சொல்லுங்க….”
அப்பா சில கணங்கள் அமைதியாக இருந்தார். தொலைக்காட்சித் திரையையே வெறித்துப் பார்த்தார். பிறகு, “எல்லாம் அந்த முறுக்குக்காரி செய்யற வேலை. அவள அடக்கி வச்சா எல்லாம் சரியாய்டும்….”என்று கசப்பும் எரிச்சலுமாகச் சொன்னாள்.
எல்லாம் ஒங்க ஊருகாரங்கதான? போய் நேரா பேசவேண்டிதுதான?” முறத்திலிருந்த வெங்காயத்தை உரித்தபடி ஓரக்கண்ணால் அப்பாவைப் பார்த்துக்கொண்டே அம்மா சொன்னாள்.
பல்ல ஒடைச்சிடுவன் கழுதை. மொதல்ல ஒன் திமுர அடக்கணும்என்று மறுகணமே அப்பா சத்தம் போட்டார். பிறகு, “இரு இரு. அவளுக்கு நானே வேட்டு வைக்கறேன். நான் யாருன்னு அந்த முண்டச்சிக்கு புரியவைக்கறேன்என்று பற்களைக் கடித்தார்.
அடுத்தநாள் காலையிலேயே சமையல்கட்டுப் பக்கமாக சாக்குப்படுதாவை விலக்கிக்கொண்டுசந்திரா, சந்திரா, இருக்கியா?” என்றபடியே ஒரு பெரியம்மா வந்தாள். தோசைக்கல்லை எண்ணெய்த் துடைப்பத்தால் தேய்த்துக்கொண்டிருந்த அம்மாவாக்கா, வாஎன்றபடி வேகமாக சாக்குப்படுதாவின் பக்கம் போனாள். பெரியம்மாவின் கையிலிருந்த பையை வாங்கினாள். ”ஆறு கிலோ இருக்குடி. வேணும்னா அளந்துக்கஎன்றாள் அந்தப் பெரியம்மா. “எல்லாரும் அந்த முறுக்குக்காரிகிட்டதான் போறாளுங்க. எனக்குதான் மனசு கேக்கலை. அதான் ஒன்கிட்டயே வந்தன். பார்த்துக் குடுடிஎன்றாள். அம்மா இடுப்பிலிருந்த சுருக்குப்பையை பிரித்து தொண்ணூறு ரூபாய் எடுத்துக் கொடுத்தாள். “ஒன் மனசு யாருக்குக்கா வரும்?” என்று ஒருகணம் சிரித்தாள். ”பதினஞ்சி ரூபா மேனிக்கே குடுத்திருக்கேன்க்கா. நம்ம மக்ககிட்ட எடுத்துச் சொல்லி வரச் சொல்லுக்கா. எல்லாத்தயும் அவகிட்டயே குடுக்கவேணாம்னு சொல்லிவைக்காஎன்று நல்லவிதமாகச் சொல்லி அனுப்பிவைத்தாள். அந்த அம்மா ஒரே நிமிஷத்தில் விஷயத்தைப் பரப்பிவிடும் என்று நம்பினாள் அம்மா. நாங்கள் பள்ளிக்கூடம் கிளம்பிவிட்டோம். சாயங்காலம் திரும்பிவரும்போது சமையலறையில் நான்கு மூட்டைகள் இருந்தன. பழைய ஆட்கள் எல்லோரும் தேடிவந்து கொடுத்ததாக அம்மா சொன்னாள்.
அடுத்தநாள் காலையில் பச்சைக்கிளிகளை வேடிக்கை பார்த்துவிட்டு திரும்பிய சமயத்தில் கடைமேசையில் எப்போதும் இருக்கும் முறுக்குத்தட்டு இல்லாததைப் பார்த்தேன். அண்ணன் எடுத்துவைக்க மறந்திருப்பானோ என்னமோ என்று தோன்றியது. பின்கட்டுக்குச் சென்று அம்மாவிடம் விஷயத்தைச் சொன்னேன். ”முறுக்கு போடவேணாம்ன்னு அப்பா அவுங்ககிட்ட சொல்லிட்டாருடாஎன்றாள் அம்மா. நான் நகர்ந்துபோகாமல் அங்கேயே இருப்பதைப் பார்த்துவிட்டுஅவரு புத்திதான் ஒனக்கு தெரியுமில்ல, சரியான கொணம் கெட்ட கொரங்கு. ஒரு வாரம் இப்பிடி இருப்பாரு. அப்பறமா அவரா ஒரு காரணத்த கண்டுபிடிச்சி மாத்திக்குவாருஎன்றாள். நாளுக்குநாள் அப்பாவின் நடவடிக்கைகளில் வெறுப்புமட்டுமே வெளிப்பட்டது. ஒரு நாள் அதிகாலையிலேயே டி.வி.எஸ்.வண்டியில் வந்த ஒரு காவலர் முறுக்குக்கார அம்மாவின் வீட்டுக்குச் சென்று ரேஷன் அரிசியை கூடுதல் விலைகொடுத்து வாங்குவது அரசாங்கக்குற்றம் என்று மிரட்டினார். அடுத்தமுறை கண்டுபிடிக்கப்பட்டால் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லவேண்டியிருக்கும் என்றும் சொன்னார்.  அங்கிருந்து நேராக ஓட்டலுக்குள் வந்து, ஓரக்கண்ணாலேயே செய்தியை அப்பாவுக்குத் தெரிவித்தபடி சிற்றுண்டி சாப்பிட்டபிறகு பொட்டலமும் கட்டிக்கொண்டு சென்றார். அன்று மாலை ஒரு ஜீப்பில் புயல்வேகத்தில் நுழைந்து முறுக்குக்கார அம்மா வீட்டுக்குமுன்னால் நின்றது. அதிலிருந்து இறங்கிய மாவட்ட ரேஷன் அதிகாரி, விடுவிடுவென்று மாடிப்பகுதிக்குச் சென்று  மிரட்டுவதையும், ‘இனிமேல வாங்கமாட்டம்யா, இனிமேல வாங்கமாட்டம்யாஎன்று அந்த அம்மா சொல்லி அரற்றுவதையும் பார்த்தேன். அதைப் பார்த்தாலும் பார்த்ததாகவே அம்மாவும் அப்பாவும் காட்டிக்கொள்ளவில்லை.
ஒரு வாரத்துக்குப் பிறகு வேறொரு பிரச்சினை தோன்றியது. வனவிலங்குத் துறையிலிருந்து ஒருவர் டிவிஎஸ் வண்டியில் வந்து இறங்கி முத்துசாமியை அழைத்தார். முறுக்குப் பைகளோடு அப்போதுதான் அவன் தெருவில் இறங்கினான். “அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம் தம்பி. ஐயா கூப்படறாரு. மொதல்ல வாஎன்று வற்புறுத்தினான். மாடியில் இருந்த அம்மாவை அழைத்த முத்துசாமி பைகளை ஒப்படைத்துவிட்டு வண்டியில் சென்றான்.
ஓட்டலுக்குள் எல்லோருடைய கவனமும் அந்த வண்டியின்மீதுதான் இருந்தது. ”என்னடா கதை எங்கயோ போவுது?” என்று கேட்டபடி வண்டியின் திசையில் கையை காட்டினார் ஒருவர். 
தப்பு செஞ்சா கூப்புடற எடத்துக்கு போய்த்தான் ஆவணும்.” வாய்க்கு வந்ததைச் சொன்னார் இன்னொருவர்.
உப்பு தின்னவன் தண்ணி குடிச்சிதான் ஆவணும்.”
கிளின்னா சும்மாவா? எல்லாமே இந்த நாட்டுக்குரிய சொத்து. மனித வம்சம்போல அதும் வம்சமும் வளரணும்ல. அரிசி குடுக்கறேன் பருப்பு குடுக்கறேன்னு எதயாச்சிம் குடுத்து அதுங்க செத்துப்போச்சின்னா, நாளைக்கி அரசாங்கத்துக்கு யார் பதில் சொல்வாங்க?” பட்டும்படாததுமாகச் சொன்னார் அப்பா.   
இரவு எட்டுமணிக்குமேல் மேசைகளையெல்லாம் நகர்த்திவைத்துவிட்டு பெருக்கியெடுத்து குப்பையை அள்ளி கொட்டுவதற்காக வெளியே சென்றேன். அப்போது முத்துசாமி திரும்பி வருவதைப் பார்த்தேன். முத்துசாமி முத்துசாமி என்ற என் அழைப்புகள் அவனைத் தொடவே இல்லை. நிமிர்ந்துகூட பார்க்காமலேயே அவன் தன் வீட்டுக்குச் சென்றான். வருத்தத்தோடு திரும்பி வந்து மேசைகளைச் சரிசெய்துவிட்டு, ஓரமாக உட்கார்ந்து மனப்பாடச்செய்யுளைப் படிக்க ஆரம்பித்தேன். ஒவ்வொரு வரியையும் பத்து தரம் பார்த்துப் படித்துவிட்டு, பிறகு கண்களை மூடிக்கொண்டு எல்லா வரிகளையும் தொகுத்துச் சொல்லும் முயற்சியில் இருந்தேன். ஒருமுறை கண்ணைத் திறந்தபோது முறுக்குக்கார அம்மா முத்துசாமியை அழைத்துக்கொண்டு எங்கோ போவதைப் பார்த்துத் திகைத்தேன். ஒரு பெரிய போர்வையை அவன் இறுக்கமாக போர்த்திக்கொண்டிருந்தான். என் இதயம் வேகவேகமாக அடித்துக்கொண்டது. அவர்கள் செல்லும் திசையையே இயலாமையோடு பார்த்துக்கொண்டிருந்தேன். நாலு விளக்குக்கம்பங்கள் கடந்து அவர்கள் முருகையன் டாக்டர் வீட்டுக்குள் படியேறுவது தெரிந்தது. அடுத்த அரைமணிக்குப் பிறகு அவர்கள் திரும்பி வந்தார்கள். மனம் தாங்காமல் ஓடிச் சென்று முறுக்குக்கார அம்மாவிடம்முத்துசாமிக்கு என்னம்மா?” என்றேன். “காய்ச்சல் தம்பி, நெருப்பா சுடுதுஎன்று சொல்லிக்கொண்டு அவசரமாக நடந்தார். “கெட்ட நேரம் வந்தா எல்லாத்தயும் மொத்தமா இழுத்தாந்து போடும்போலஎன்று புலம்பிக்கொண்டே போனார். “ஒரு புழுபூச்சிக்குக்கூட நாம கெட்டது நெனைக்கலை. நமக்குத்தான் எல்லாமே கெட்டதாவே நடக்குது. எந்த ஜென்மத்துல செஞ்ச பாவமோ….”. அதைக் கேட்டு துக்கத்தில் என் தொண்டை அடைத்தது. அவர்கள் தம் வீட்டுக்குள் செல்லும்வரைக்கும் பார்த்துக்கொண்டே இருந்தேன்.
டேய் சின்னவனே, வந்து சாப்புட்டுட்டு போயேன்டாஎன்று அம்மா அழைத்த பிறகுதான் சுயநினைவுக்குத் திரும்பினேன். உடனே கதவைச் சாத்திவிட்டு உள்ளே ஓடினேன். “அம்மா, முத்துசாமிக்கு காய்ச்சல்என்று மெதுவாகச் சொன்னேன். அவள் காதில் அது விழுந்ததாகவே தெரியவில்லை. “போலீஸ்காரங்க அடிப்பாங்களா அம்மா? அடிச்சா ஜொரம் வருமாம்மா?” என்று மீண்டும் கேட்டேன். அம்மா என் பக்கம் திரும்பி முறைத்தாள். “சாப்புடற நேரத்துல தொணதொணன்னு  என்னடா பேச்சு? ஒழுங்கா தட்ட பார்த்து தின்னுஎன்று சிடுசிடுத்தாள். நம்பமுடியாமல் அம்மாவை   ஏறெடுத்துப் பார்த்தேன்.  ஒன்னாட்டம் புள்ளைதான அவன்? அவன் ஏதாச்சிம் கேள்வி கேக்கறானா? நீமட்டும் எதுக்கு நொய்நொய்னு ஆயிரம் கேள்வி கேக்கறே? இன்னொரு தரம் வாயத் தெறந்தன்னா, கரண்டியாலயே மொத்திருவேன்…..” பொரியலை சின்ன தட்டில் வைத்து என் பக்கமாக தள்ளினாள். நான் தடுமாறியபடி சோற்றைப் பிசைந்தேன். என் அண்ணன் ஓரக்கண்ணாலேயே என்னைப் பார்த்து அழகு காட்டினான்.
மறுநாள் காலையில் டியுஷனை முடித்துக்கொண்டு திரும்பும்போது முத்துசாமியின் வீட்டு மாடியைப் பார்த்தேன். பச்சைத்துணியை துண்டுதுண்டாகக் கிழித்து பறக்கவிட்டதுபோல எங்கெங்கும் கிளிகளின் கூட்டம். கீகீ என்ற ஒலி கேட்டது. என் மனம் விம்மியது. மாடிச் சுவரெங்கும் அவை பறந்துபறந்து அமர்ந்தன. அவற்றின் பின்னால் முத்துசாமி நின்றிருந்தான். நேற்று போர்த்தியிருந்த போர்வை இன்னும் அவன் உடலைச் சுற்றியிருந்தது.  காற்றில் குளிர்வீசியது.
அன்று இரவு சாப்பிடும்போது, இனிமேல் முத்துசாமியின் வீட்டுப்பக்கம் போகவோ, முத்துசாமியைப் பார்ப்பதோ கூடாது என்று அம்மா கட்டளையிட்டாள். அதிர்ச்சியில் எனக்கு பேச்சே எழவில்லை. முழு அளவில் அதன் பொருள் புரிந்தபிறகு அவளைப் பார்த்து எதையோ கேட்க  ஆரம்பித்ததுமே, “கேள்விலாம் வேணாம். சொன்னா சொன்னபடி செய். அது போதும்என்று அடக்கிவிட்டாள். நான் அடங்கினாலும் என் கண்களை அடக்கமுடியவில்லை. வெளியே செல்லும்போதெல்லாம் ஓரக்கண்களால் அந்த வீட்டின் பக்கம் பார்வையை வீசுவேன். முக்கியமாக அந்தக் கிளிகள். அதைப் பார்க்காமல் என்னால் இருக்கமுடியவில்லை. பார்த்துப்பார்த்துப் பரவசமடைவதும் பிறகு அந்தப் பரவசத்தை நினைத்துநினைத்து பகல்கனவு காண்பதும் என் மனத்துக்குப் பிடித்திருந்தன. பச்சைச்சிலைகள் உயிர்பெற்றதுபோன்ற கிளிகள். மதில்மீது துள்ளித்துள்ளிச் செல்லும் கிளிகள்.
அந்த வாரக் கடைசியில் எங்களுக்குத் தேர்வுகள் தொடங்கவிருந்தன.  பள்ளிக்கூடம் விட்டுவந்ததுமுதல் இரவுவரைக்கும் ஓட்டல் வேலையிலேயே பொழுது கழிந்துவிட்டதால் சாப்பாட்டுக்குப் பிறகுதான் நாங்கள் படிக்க உட்கார்ந்தோம். அண்ணன் மனப்பாடமாகச் சொல்லும் பதில்களை நான் கேட்டுத் திருத்தினேன். என் பதில்களை அவன் கேட்டான். அரைமணி நேரத்திலேயேஎனக்கு தல சுத்துதுடா. நீ படிஎன்று பாயில் சுருண்டுவிட்டான் அண்ணன். அம்மாவும் அப்பாவும் ஏதோ கணக்குப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அறிவியல் பாடத்துக்கான ஒரு பதிலை மனப்பாடம் செய்யும் முயற்சியில் இருந்தேன் நான்.
சோர்வு தாங்கமுடியாமல் ஏதோ ஒரு கணத்தில் படுக்கையில் நான் சாய்ந்தேன். திடீரென கிளிகளின் நினைவு வந்து அவற்றைப்பற்றிய கற்பனைகளில் மூழ்கினேன். மென்மையான அதன் உடல். மென்மையான அலகு. மென்மையான இறகுகள். மென்மையான வால். எங்கோ வண்டிமாடுகளின் மணிச்சத்தம் என் கனவைக் கலைத்தது. அந்த வண்டி கனவுக்குள் எங்கோ ஓடியது. திடீரென ஒரு கணத்தில் அந்தச் சத்தம் எங்கள் வீட்டுச் சுவருக்கு அப்பால் தெருவில் கேட்பதுபோல இருந்தது. விழித்து பரபரப்போடு போர்வையை விலக்கியபோது அறை இருளில் மூழ்கியிருந்தது. ஏதோ உருவம் அசைந்தது. அப்பா. ஜன்னல்பக்கம் நின்று சில கணங்கள் பார்த்துவிட்டு  திரும்பி வருவது புகைபோலத் தெரிந்தது. அடங்கிய குரலில் அவர் சொல்வது கேட்டது. “முறுக்குக்காரம்மாதான்டி. ஊடு காலி பண்ணிட்டு போறாங்க போலஎன்றார். ”சனியனுங்க எங்கனா போய் தொலையட்டும். அதுங்களால கிலோவுக்கு அஞ்சி ரூபா நமக்குத்தான் நஷ்டம்என்று முனகிவிட்டு படுத்தார். துக்கத்தில் எனக்கு அழுகை வரும்போல இருந்தது. கடைசியில் எப்படியோ தூக்கத்தில் மூழ்கிவிட்டேன்.
அதிகாலையில்ஏந்துருடா சின்னவனே, டியுஷனுக்கு நேரமாவுது பாருஎன்று அம்மா முதுகில் தட்டியெழுப்பிய பிறகுதான் தூக்கம் கலைந்தது. முகம் கழுவிவிட்டு வந்து துடைக்கும் சமயத்தில் இரவில் மங்கலாகப் பார்த்த சம்பவம் நினைவுக்கு வந்தது. அது உண்மைதானா என்பதை அம்மாவிடம் கேட்கலாம் என நினைத்தபோது, “எதுக்குடா திருதிருனு முழிச்சிகினு உக்காந்திருக்க? கெளம்பிறியா இல்லையா?” என்று அம்மா அதட்டினாள். உடனே எல்லாவற்றையும் மறந்துவிட்டு காலைக்கடன்களை அவசரம்அவசரமாக முடித்துக்கொண்டு பையை எடுத்துக்கொண்டு ஓடினேன். டியுஷனில் மனம் பதியவே இல்லை. கரும்பலகையில் எழுதப்பட்டதைமட்டும் கண்களால் பார்த்து தன்னிச்சையாக நோட்டில் எழுதிக்கொண்டேன். அவ்வளவுதான். டியுஷனை முடித்துக்கொண்டு முத்துசாமியின் வீட்டைநோக்கி வேகவேகமாக குறுக்குவழியில் நடக்கத் தொடங்கினேன். நெருங்கும்போதே அலைமோதும் பச்சைக்கிளிகளின் கூட்டத்தை என் கண்கள் கவனித்துவிட்டன. ஒருகணம் பரவசத்தின் உச்சத்தில் மிதந்தது மனம். இரவில் நடந்ததெல்லாம் ஏதோ கனவு என்று தோன்றிவிட்டது. பாரம் முழுதும் கரைந்துபோனது. கிளிகளின் அழகின் சொக்கி நிற்கும்போதுதான் ஒரு மாற்றத்தைக் கண்டேன். முத்துசாமி இல்லை. உடனே என் மனம் முத்துசாமிக்காக கூவத் தொடங்கியது. அவன் உருவம் எந்தப் பக்கத்திலும் தென்படவில்லை. கீகீ என்று கிளிகள் மட்டுமே சுற்றுச்சுவரைச் சுற்றிச்சுற்றி அலைபாய்ந்தன. அவை முத்துசாமியைத் தேடித் தவிக்கின்றன என்பதைப் புரிந்துகொண்டேன். அவற்றின் குரல் ஆதரவில்லாத குழந்தைகளின் குரல்போல ஒலித்தது. அக்கணமே என் மனம் சுருங்கிவிட்டது. மெல்லமெல்ல கிளியின் குரல் அழுகைக்குரல்போல தோன்றத்தொடங்கியது. திரும்பித்திரும்பி அவற்றைப் பார்த்தபடியே வீட்டுக்குச் சென்றேன். அன்றுமுழுதும் அந்தக் குரல் மீண்டும்மீண்டும் நெஞ்சில் ஒலித்தபடியே இருந்தது. என் நெஞ்சில் பெருகிய வேதனைக்கு அளவே இல்லை. கிளிகளின் அலறலைக் கேட்கும்  அளவுக்கு மன உறுதி இல்லையென்றாலும் அவற்றைப் பார்ப்பதால் ஓரளவுக்காவது நிம்மதி கிடைக்கும் என்று தோன்றியதால் அடுத்த நாள் காலையில் முத்துசாமியின் வீட்டுக்குப் போனேன். ஆகாயத்தில் ஒரு கிளிகூட இல்லை. காற்று அசையும் சத்தம்கூட இல்லாமல் அந்த வீடே மெளனத்தில் உறைந்திருந்தது.  
( 2013 )