Home

Sunday, 16 December 2018

கதவு திறந்தே இருக்கிறது – பொல்லாச் சூழ்ச்சியின் புற்றுகள்



சங்கப்பாடல்களை எடுத்துக்காட்டாகச் சொல்லி பேசாதவர்களோ, பெருமைப்படாதவர்களோ தமிழ்ச்சூழலில் இல்லை. அந்த அளவுக்கு அவற்றின் அறிமுகம் வேரூன்றியிருக்கிறது. அவை கருத்தாழம் கொண்டவை. காலத்தால் மிகவும் பழைமை வாய்ந்தவை. அப்பாடல்களில் அமைந்திருக்கும் நயங்களை எளிய வாசிப்புப்பழக்கம் கொண்டவர்களும் புரிந்துகொள்ளும் வகையில் இதுவரை ஏராளமான நூல்கள் எழுதப்பட்டுள்ளன. பல மேடைகளில் அவை மீண்டும் மீண்டும் முழங்கப்பட்டுள்ளன. பல பாடல்களை மனப்பாடமாகச் சொல்கிறவர்களும் இருக்கிறார்கள். சங்ககாலத்தில் தாவரங்கள், சங்ககாலத்தில் விலங்குகள், சங்ககாலத்தில் போர்கள் என ஏராளமான ஆய்வுகள் வெளிவந்துள்ளன. ஆனால் இதுவரை சங்ககாலத்தைப் பின்னணியாகக் கொண்டு தமிழில் யாரும் ஒரு நாவலை எழுத முயற்சி செய்ததில்லை. ஜெயமோகன் எழுதிய கொற்றவை நாவல் சங்ககாலத்துக்கும் முந்தைய பண்பாட்டுக்கூறுகளை பல கோணங்களில் தொகுத்தளிக்கும் முயற்சியை முன்னெடுத்த முக்கியமான படைப்பு. இப்படிப்பட்ட சூழலில் மனோஜ் குரூர் என்னும் மலையாள நாவலாசிரியர் சங்ககாலத்தைக் களமாகக் கொண்டு சில ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு நாவலை எழுதி வெளியிட்டார். அது  கேரளச்சூழலில் உடனடியாக பரவலான கவனத்தைப் பெற்றது. அதைத் தொடர்ந்து அந்த நாவல் மலையாளத்திலிருந்து  தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டது. மொழிபெயர்த்தவர் கே.வி.ஜெயஸ்ரீ. நாவலின் பெயர்நிலம் பூத்து மலர்ந்த நாள்

சங்கப்பாடல்களை மொழிபெயர்ப்பு வழியாகப் படித்தறிந்த மனோஜ் குரூர் அவ்வரிகளிடையில் அங்கங்கே துளிகளாகச் சிதறிக் கிடக்கிற வாழ்வம்சங்களைத் தொகுத்து சங்ககாலச் சமூகத்தைப்பற்றிய ஒரு கோட்டோவியத்தை ஒரு நாவலாகத் தீட்டியுள்ளார். தமிழ்ப்படைப்பாளிகளாக நம்மில் ஒருவர் எழுதியிருக்கவேண்டிய இந்த நாவலை குரூர் எழுதியிருக்கிறார். ஒரு புதுமுயற்சியில் ஈடுபட்டு வெற்றிகொண்ட குரூரும் தக்க தருணத்தில் அந்த முயற்சியை நமக்கு அறிமுகப்படுத்திய கே.வி.ஜெயஸ்ரீயும் தமிழுலகத்தின் பாராட்டுக்குரியவர்கள்.
கொலும்பன் ஒரு பாணன். அவனுடைய குடும்பம் தங்கியிருந்த இடத்தில் வறுமை நிலவுகிறது. அவன் பாடல்களைக் கேட்கவும் நடனங்களைப் பார்க்கவும் பரிசளிக்கவும் தகுதியுள்ள தலைவர்கள் இல்லை. மக்களும் இல்லை. இயற்கையும் பொய்த்துவிடுகிறது. வளங்கள் அழிந்துவிடுகின்றன. வாழிடத்தில் வாழமுடியாத நிலை உருவாகிறது. பறவைகள் வலசை செல்வதுபோல அவர்களும் பெரும்பாணர் தலைமையில் தம்மை ஆதரிக்க வல்லோரைத் தேடிச் செல்கிறார்கள்.  பல இரவுகள். பல பகல்கள். வழியில் மலைக்குறவர்களையும் வேடர்களையும் சந்திக்கிறார்கள். ஒவ்வொரு இடத்திலும் சிறிதுகாலம் தங்கியிருந்துவிட்டு தொடர்ந்து காட்டுவழியே நடக்கிறார்கள். பல மலைகளில் ஏறி இறங்குகிறார்கள். விருந்தினர்களாகத் அங்கங்கே தங்கி, அவர்களுடைய விருந்தாடலில் மகிழ்ந்திருந்து தொடர்ந்து நடக்கிறார்கள்.
கொலும்பனுக்கு சித்திரை என்னும் மகளும் எயிலன், உலகன் என இரு மகன்களும் இருக்கிறார்கள். இவர்களில் எயிலனுக்கு பாணர்வாழ்வு மரபின்மீது ஆர்வமில்லை. அதனால் தந்தையின் பிடியிலிருந்து விலகி எங்கோ கண்காணாத இடத்துக்குச் சென்றுவிடுகிறான். மிக இளமையிலேயே காணாமல் போன அவனைக் கண்டடையவே முடியவில்லை. தன் பயணத்தில் எங்காவது ஓரிடத்தில் எப்போதோ காணாமல் போன மகனை ஒருவேளை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கக்கூடும் என்று ஏதோ ஓர் உள்ளுணர்வால் நம்புகிறார் கொலும்பன். அவன் ஏழிமலையின் பக்கம் சென்றிருக்கலாம் என நம்பி, அந்தத் திசையில் பயணத்தை மேற்கொள்கிறான்.
வழியில் தற்செயலாக கவிஞர் பரணரைச் சந்திக்க நேர்கிறது. பாணர்கள் பயணத்தின் நோக்கத்தை அறிந்த அவர் வள்ளல் பாரி வசிக்கும் பறம்புமலைக்குச் செல்லும்படியும் அதனால் அவர்களுடைய வறுமை தீருமென்றும் எடுத்துரைக்கிறார். மீண்டும் பயணம் தொடர்கிறது.
பறம்புமலையில் அவர்கள் கபிலரைத்தான் முதலில் சந்திக்கிறார்கள். பாணர்களின் நோக்கத்தை அறிந்ததும் முதலில் அவர்களை ஒரு விருந்தகத்தில் தங்கவைக்கிறார் அவர். களைப்பு நீங்க உணவுண்டு இளைப்பாற வழிசெய்தளிக்கிறார். புகழ்ந்து பாடுவதற்குரிய பாடல்களை கவிஞரிடமிருந்து பெற்றுக்கொள்கிறார்கள் பாணர்கள்.
ஓர் இரவில் பாணர்களின் கூத்துக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. மலைவாழ் மக்கள் அங்கங்கே பாறைகள் மீதும் மரத்தடிகளிலும் திரண்டு உட்கார்ந்திருக்கிறார்கள். வள்ளல் பாரியின் முன்னிலையில் கூத்து நிகழ்கிறது. அங்கங்கே தீப்பந்தங்கள் எரிய பாணர்கள் ஆடல் பாடல்களை நிகழ்த்துகிறார்கள். பாடல் நயத்திலும் ஆடலழகிலும் பாரி மிகவும் மனம் மகிழ்ந்துபோகிறார். பாணர்களை நோக்கி தன் மகிழ்ச்சியைத் தெரியப்படுத்திய பாரி அவர்கள் மனம் மகிழும் வகையில் தக்க பரிசொன்றைக் கொடுக்க நினைத்து, தாங்கள் விரும்பும் பரிசென்ன என பாணர்களைப் பார்த்துக் கேட்கிறார். பாணர்கள் மகிழ்ச்சியில் சொல்லெழாமல் நெகிழ்ந்து நிற்கிற சமயத்தில் யாரோ ஒரு இருளுருவம் தங்கள் நாட்டையே பரிசெனக் கேட்கிறோம் என உரைத்துவிட்டு இருளில் மறைந்துகொள்கிறது. பாணர்களை பகடைக்காய்களென பயன்படுத்திக்கொண்ட வீர்ர்கள் இருளில் பாரியை நெருங்கிக் கொலை செய்துவிடுகிறார்கள். தம் கூட்டத்தினரை பகடைக்காய்களென ஆக்கிவிட்டு ஒரு கொலை திட்டமிடப்பட்டிருப்பதை தாமதமாகவே உணரும் பாணர் கூட்டம் திகைத்து செய்வதறியாமல் அதிர்ச்சியில் உறைந்து நிற்கிறது. பாரியைக் கொன்றுவிட்டு ஓடி வருபவனை இருட்டுக்குள் தடுத்து நிறுத்தும் கொலும்பனும் கொல்லப்படுகிறான். கண நேரத்தில் கொலைக்கூட்டம் அங்கிருந்து தப்பித்துவிட, பாணர்கூட்டம் கொலைப்பழியைச் சுமக்க நேர்கிறது. பொதுமக்கள் அவர்களை அருவருப்போடு பார்க்கிறார்கள். எக்கணமும் தம்மைத் தாக்குபவர்கள் நெருங்கிவரக்கூடும் என்ற அச்சம் அவர்களை அங்கிருந்து உடனடியாக வெளியேறவைக்கிறது. இருட்டிலேயே மூட்டை முடிச்சுகளை எடுத்துக்கொண்டு கண்ணுக்குத் தெரிந்த வழியில் நடக்கிறார்கள். இடையில் தென்பட்ட வீரனொருவன் அவர்களை அந்த மலையின் எல்லை வரைக்கும் வழிநடத்தி வந்து, அங்கிருந்து வெளியேற உதவி செய்கிறான்.  இப்படி கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழும் பாரியின் கொலைச்சம்பவத்தோடு தொடங்குகிறது நாவலின் முதல்பகுதி.
இரண்டாவது பகுதி நாவல் கொலும்பனின் மகள் சித்திரையின் வழியாக தொடர்கிறது. அச்சத்திலும் திகைப்பிலும் மூழ்கி உறைந்த மனநிலையோடு பாணர்கூட்டம் பறம்புமலையிலிருந்து விலகிச் செல்கிறது. தந்தையை இழந்த சித்திரை, இறுதி மூச்சை விடுவதற்கு முன்பு கொலும்பன் ஆற்றாமையோடு தன் தாயிடம் சொன்ன சொல்லை மீண்டும் மீண்டும் அசைபோட்டபடி நடக்கிறாள். பாரி கொலையுண்ட நள்ளிரவில் தொலைவில் ஓடிச் சென்ற இளைஞனின் முக அமைப்பும் வீட்டைவிட்டு வெளியேறிய தன் மகனின் முக அமைப்பும்  ஒன்றுபோல இருந்ததை நினைத்துக் குழம்பிய கொலும்பன் வேதனைப்பட்டு கண்ணீர்விட்ட காட்சியை அவளால் மறக்கமுடியவில்லை. யாருடைய பகடையாக அவன் அந்த இடத்துக்கு வந்தான் என்பது ஒரு பெரிய கேள்விக்குறியாக அவள் நெஞ்சை வாட்டுகிறது.
எங்கு செல்வது என்பதைப்பற்றி ஒரு தெளிவான முடிவை அவர்களால் எடுக்கமுடியவில்லை. ஊருக்கு மீண்டும் செல்வதில் எப்பொருளும் இல்லை என்பதால், அங்கு செல்லக்கூடாது என்பதில் மட்டும் அவர்கள் தெளிவாகவே இருந்தார்கள். வழியில் பொழுது சாயும் வேளையில் கால்நடைகள் மேய்க்கும் கோவலர்களின் இருப்பிடத்தில் தங்குகிறார்கள். மறுநாள் அவர்களுக்காக கோவலர்கள் புதிய குடில்களை உருவாக்கி அளிக்கிறார்கள். அந்தப் பகுதியில் நிகழும் மஞ்சுவிரட்டில் அவர்கள் கூத்து நிகழ்த்தி அவர்களை மகிழ்விக்கிறார்கள். அக்காட்டுப்பகுதிக்குள் யாருமற்ற வேளையில் ஊடுருவி வந்து சுற்றியலைகிற மகிரன் என்னும் படைவீரனுக்கும் அவளுக்கும் இடையில் நெருக்கம் உருவாகிறது. நேரம் பார்த்து அவன் அவளை அங்கிருந்து யாரும் அறியாதபடி குதிரையில் அழைத்துக்கொண்டு சென்றுவிடுகிறான். அவன்மீது கொண்ட காதலால் அவன் செல்லும் திசையில் அவளும் நடக்கிறாள்.
நீண்ட பயணத்துக்குப் பிறகு அவர்கள் தகடூருக்கு வருகிறார்கள். அங்கே அவர்களுடைய இல்லறவாழ்க்கை தொடங்குகிறது. நாட்கள் செல்லச்செல்ல அவள் அவனைப்பற்றி தானாகவே தெரிந்துகொள்கிறாள். தகடூர் மன்னன் அதியமானுடைய படைவீரர்களில் ஒருவன் அவன். படைசூழ்ச்சிகள் வகுப்பவன். தேவைப்படும் நேரங்களில் போரிடுபவன். ஒற்றுவேலை செய்பவன். தந்திரங்கள் மிகுந்தவன். வேறொரு ஊரில் இன்னொரு பெண்ணுடன் அவனுக்கு தொடர்பு இருக்கிறது. அவன் மனத்தை மாற்ற அவள் எடுத்துக்கொள்ளும் முயற்சி தோல்வியிலேயே முடிவடைகிறது. தன்னைத் திருத்த நினைக்கவேண்டாம் என்று எச்சரித்துவிட்டு வெளியேறுகிறான். மனமுடைந்துபோன சித்திரை ஒளவையாரிடம் அடைக்கலமாகிறாள்.
நாவலின் இறுதிப்பகுதி மயிலன் வழியாகத் தொடர்கிறது. வறுமையை அன்றி வேறெதையும் அளிக்காத பாட்டையும் கூத்தையும் வெறுத்து வீட்டைவிட்டு இளமையிலேயே வெளியேறியவன் அவன். எப்பாடு பட்டாவது பொருள் சேர்க்கவேண்டும், செல்வந்தனாக வாழ வேண்டும் என்பதை வாழ்வின் இலட்சியமாகக் கொள்கிறான். சுட்டெரிக்கும் வெயிலில் சுழற்றியடித்த பாலைப்புயலைக் கடந்து செல்லும் தருணத்தில் மறவர்கள் அடைக்கலம் தருகிறார்கள். அவர்கள் வழிப்போக்கர்களிடம் கொள்ளையடித்துப் பிழைப்பவர்கள். அவர்களோடு அவனும் சேர்ந்துகொள்கிறான்.
வழக்கம்போல ஒருநாள் வழியில் தென்பட்ட குதிரைவண்டியை மறித்து கொள்ளையிட முனைந்தபோது வண்டியில் வந்த படைவீரர்களுக்கும் அவனுக்குமிடையே மோதல் ஏற்படுகிறது. தோல்வியுற்ற அவனைத் தம்மோடு கட்டி இழுத்துக்கொண்டு செல்கிறார்கள். அவர்கள் ஏழிலை மன்னனான நன்னனின் படைவீரர்கள். அவர்களுடன் சென்றால் தன் அரண்மனைக்கனவுகளை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்னும் தன்னலக்கணக்கோடு மயிலன் அமைதி காக்கிறான். அரண்மனையில் அவன் பரணரைச் சந்திக்க நேர்கிறது. அவனைப்பற்றி விசாரித்தறியும் பரணர் அவன் தன் திறமையை மேலும் வளர்த்துக்கொள்ளும் வகையில் பெரும்புலவர் ஒருவரின் கண்காணிப்பில் விடுகிறார். அங்கு பயிற்சி பெற்ற பின்னர் ஒருநாள், அவனுடைய கனவு நிறைவேறும் வகையில் அவன் அரண்மனைப்பணியில் அமர்த்தப்படுகிறான். சிறிது காலத்திலேயே படைத்தலைவனின் நம்பிக்கையைப் பெற்றுவிடுகிறான். அரசனோடு இணைந்து பல இடங்களுக்குச் செல்லும் அளவுக்கு அவன் அணுக்கச் சேவகனாக பணிபுரிகிறான்.
ஒருமுறை புன்னாட்டுக்காரரை எதிர்த்துப் போரிடுவதற்குச் சென்ற அரசனோடு அவனும் பயணம் செல்கிறான். புன்னாட்டுக்காரர்கள் உதவி வேண்டி பல திசைகளுக்கும் செய்தி அனுப்ப, நார்முடிச் சேரலின் கூட்டாளிகளில் ஒருவனான ஆய் எயினன் ஆதரவுப்படையோடு களத்துக்கு வருகிறான். மிஞிலியின் படையும் எயினனின் படையும் மோதிக்கொள்கின்றன. போரில் எயினன் கொல்லப்படுகிறான். நன்னன் நாடு திரும்புகிறான்.
தோட்டத்து மாமரத்திலிருந்து ஆற்றில் விழுந்த ஒரு மாம்பழத்தை அதே ஆற்றில் நீந்திக் குளித்துக்கொண்டிருந்த சிறுமியொருத்தி எடுத்துத் தின்றுவிடுகிறாள். அதைக் கொலைக்குற்றமாகக் கருதிய நன்னன் அவளுக்கு மரணதண்டனை வழங்குகிறான். அதனால் மக்களிடையே தீராத அவப்பெயரை அடைகிறான் அவன். அவனைத் தடுக்கவியலாத சூழலில் அந்த நாட்டில் தொடர்ந்து இருக்க விரும்பாத பரணர் அங்கிருந்து வெளியேறிவிடுகிறார். எயினனுக்காக சில ஓலைச்சுவடிகளை மட்டும் விட்டுச் செல்கிறார். அதில் உள்ளதை அவன் கற்றுத் தேர்ச்சிகொள்கிறான்.
நாட்டில் அமைதிநிலை வெகுகாலம் நீடிக்கவில்லை. எயினனின் மரணத்துக்குப் பழிவாங்கும்பொருட்டு சேரமன்னன் பெரும்படையுடன் வந்து தாக்குகிறான். படைத்தலைவன் மிஞிலியால் வெகுநேரம் அவனை எதிர்த்துத் தாக்குப்பிடிக்கமுடியவில்லை. மிஞிலி கொல்லப்படுகிறான். பரணர் இல்லாத வெறுமையை முதன்முதலாக சோர்வோடு உணர்கிறான் நன்னன். அவர் இருந்திருந்தால் அமைதி விரும்பும் தூதராகச் சென்று சேரனோடு உரையாடி அழிவைத் தவிர்த்திருக்கமுடியும் என்றொரு எண்ணம் ஓடுகிறது. வேறு வழியின்றி களத்தில் நேரிடையாகவே இறங்குகிறார். அக்கணமே ஏழிமலையிலிருந்து வெளியேறிவிடுகிறான் எயினன்.
படைவீரர்களால் சூழப்பட்ட ஒரு நாட்டிலிருந்து வெளியேறுவதில் எயினனுக்கு எண்ணற்ற சிரமங்கள் உருவாகின்றன. அனைத்தையும் எதிர்கொண்டு அந்த மலையைக் கடந்துவிடுகிறான். கடலோரப்பகுதிகளில் பரதவர்களோடும் உமணர்களோடும் தங்கி காலத்தைப் போக்குகிறான். போரில் நன்னன் கொல்லப்பட்ட செய்தியை வழிப்போக்கர்கள் வழியே தெரிந்துகொண்டு வருத்தம் கொள்கிறான். ஒரு பாணனைப்போல பறையும் யாழும் சுமந்து பல நாடுகளில் அலைந்து திரிகிறான்.
இரவலனாக ஓரிடத்தில் தங்கியிருந்தபோது படைவீரன் மகீரனுக்கும் அவனுக்கும் இடையில் மோதலில் தொடங்கும் உறவு நட்பாக மாறுகிறது. தன்னை சேர அரசனின் ஒற்றன் என அறிவித்துக்கொள்ளும் மகீரன் மன்னன் பாரியைக் காணச் சென்றுகொண்டிருப்பதாகச் சொல்லி, வழித்துணையாக அவனையும் சேர்த்துக்கொள்கிறான். வழிப்பேச்சில் சிற்றரசர்களான பாரியும் அதியமானும் உயிருடன் இருக்கும் வரையில் சேரநாட்டின் எல்லையை விரிவாக்குவது இயலாத செயலென்று குறிப்பிடுகிறான்.
பாரியை நெருங்க கபிலரோடு தொடர்புகொள்வதே எளிதான வழி என்பது மயிலனின் எண்ணம். சாமி என்று தன் பெயரை மாற்றிக்கொண்டு அந்த மலைப்பகுதிக்குள் நுழைகிறான். கபிலரோடு பழகி நட்பைச் சம்பாதிக்கிறான். அவன் மனம் குழம்பித் தவிக்கிறது. பாரி கொலைப்படுவதை அவனால் கற்பனை கூட செய்து பார்க்கமுடியவில்லை. மறைமுகமாகவாவது கபிலருக்கு அந்தத் திட்டத்தைப்பற்றி உணர்த்திவிடவேண்டும் என நினைத்து தனக்குக் கிட்டிய தகவல்களைச் சொல்கிறான். கபிலர் கோபம் கொள்கிறார். ஆனால் அதற்குள் காரியம் கைமீறிச் சென்றுவிடுகிறது. பாரி கொல்லப்படுகிறார்.
பாரியின் முன்னிலையில் கூத்து நிகழ்த்திக்கொண்டிருப்பது தன்னுடைய தந்தையை உள்ளிட்ட தனது ஊரைச் சேர்ந்த பாணர் கூட்டம் என்பதை இறுதிக்கணத்தில் உணரும் மயிலன் செய்வதறியாமல் குழம்புகிறான். பாரியும் தனது தந்தையும் கொல்லப்படுவதைக் கண்டும் தடுக்கவியலாத குற்ற உணர்ச்சியோடு அங்கிருந்து வெளியேறுகிறான்.
பாரியின் கொலைச்சம்பவத்தை வெற்றிகரமாக முடித்த பிறகு பறம்பு மலையில் செய்ததுபோலவே தகடூரிலும் வஞ்சியிலும் செய்துமுடிக்கவேண்டும் எனச் சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறிவிடுகிறான் மகீரன்.  மறவர் கூட்டத்தோடு தொடர்ந்து இருக்கமுடியாத மயிலன் அங்கிருந்து வெளியேறி கடலோரமாக அலைந்து திரிகிறான். ஒருநாள் கபிலரை தற்செயலாகச் சந்தித்தபோது, பாரி கொலைப்படுவதற்கு அவரும் ஒருவகையில் முக்கியக் காரணமென்று குற்றம் சுமத்தியதால் இருவருக்குமிடையில் நீண்ட வாக்குவாதம் நிகழ்கிறது. கபிலர் மனமுடைந்து நாட்டைவிட்டே வெளியேறிவிடுகிறார்.
வழியில் தற்செயலாகச் சந்திக்க நேர்ந்த சந்தன் மயிலனைச் சாடுகிறான். அவனால் தன் பாணர்கூட்டம் சந்திக்க நேர்ந்த இடர்களையும் அவமானங்களையும் எடுத்துரைக்கிறான். மகீரனால் அவன் குடும்பத்துக்கும் சித்திரைக்கும் நேர்ந்த பாதிப்புகளை எடுத்துரைக்கிறான். பெற்ற தந்தையையே இரக்கமின்றிக் கொன்றவன் என்று பழி சுமத்துகிறான். குற்ற உணர்வால் மனம் நொந்துபோன மயிலன் அந்த நாட்டைவிட்டே வெளியேறுகிறான். மிளகுவணிகத்துக்கு வந்த வெளிநாட்டினரோடு சேர்ந்துகொண்டு கப்பல்களில் பயணம் செய்யத் தொடங்கினான்.
உள்நாட்டிலும் வெளிநாட்டிலுமாக அவன் வாழ்க்கை உறவில்லாமல் கழிகிறது. ஒருநாள் கண்ணகி கோவிலுக்கு அருகில் நடந்துகொண்டிருந்த சமயத்தில் தன் உடல்மீது தெய்வம் வரப்பெற்ற ஒரு சாமியாடி அவன் முன்னிலையில் குதித்து அவனை வாளால் வெட்டி வீழ்த்திவிடுகிறது. ஆனால் உயிர் அவனைவிட்டுப் பிரிவதற்கு முன்னால் அங்கே கூத்து நிகழ்த்திய பெரும்பாணர் கூட்டம் அவனைக் காப்பாற்றிவிடுகிறது. அவனுடைய தாயே அவனைக் காப்பாற்றுகிறாள். அவனுடைய தங்கையே அவனுக்குத் தேவையான மருந்தை அரைத்துக் கொடுக்கிறாள். மெல்ல அவன் உடல்நலம் சீரடைகிறது. அவன் தன் கூட்டத்தினரிடம் மன்னிப்பு கேட்கிறான். ஆனாலும் அவனை கைவிட்டு பாணர் கூட்டம் உறைவிடம் தேடி மலைமலையாய்த் தேடி அலைகிறது. சில நாட்களில் முசிறியை வந்தடையும் மயிலன் கடற்கரையோரம் நாடோடியாக அலைகிறான்.
இந்த நாவலின் வழியாக ஒரு வாசகனாக எனக்குள் உருவாக்கும் அதிர்வுகள் மிக ஆழமானவை. சங்ககாலப் பாடல் வரிகளை மட்டுமே துணையாகக் கொண்டு தொல்குடிச் சமூக இயக்கத்தை கற்பனை செய்து பார்க்கமுடிகிறது. மலைதோறும் வாழும் சிறுசிறு குடிகளின் எழுச்சியும் வீழ்ச்சியும் அரசு எப்படி உருவாகியிருக்கக்கூடும் என்கிற கற்பனையை அளிக்கிறது. ஒரு குடியை அழிக்கவும் ஓர் அரசனைக் கொல்லவும் வேறொரு குடிக்கு இருக்கும் ஆர்வத்தையும் வெறியையும் புரிந்துகொள்ள முடிகிறது. நிரந்தர வசிப்பிடம் என எதுவுமற்றவர்கள் பாணர்கள். அவர்கள் மலைகளிடையேயும் காடுகளிடையேயும் நடந்தபடியே இருக்கிறார்கள். மனிதர்களைக் கடந்துகொண்டே இருக்கிறார்கள்.
ஒருவகையில் இந்த நிலத்தை தம் கால்களாலேயே நடந்து கடந்தவர்கள் அவர்கள். பாரியின் கொலை என்பதுதான் நாவலின் மையம். அதன் பின்னணியில் உள்ள சூழ்ச்சிகளின் அடுக்குகளை நாவல் ஒவ்வொன்றாக எடுத்துவைக்கிறது. ஒவ்வொரு காட்சியும் ஒரு புலன்விசாரணைப்பதிவுபோல மிகவும் கச்சிதமாக அமைந்துள்ளது. அரசியல் களத்தில்  மனிதர்களை இயக்கும் விசையாக இயங்கும் பேராசையும் துரோகமும் இன்றுவரை புரியாத புதிர்களாகவே உள்ளன.
நம் சங்கப்பாடல்களை நமக்கு மீள் அறிமுகம் செய்துவைத்திருக்கும் மனோஜ் குரூரும் அவருடைய படைப்பை மிக அழகாக தமிழாக்கம் செய்திருக்கும் கே.வி.ஜெயஸ்ரீயும் நம் நன்றிக்குரியவர்கள்.