Home

Saturday 10 November 2018

ரசனைக்குரிய ரசவாதம்




இங்காதொகுதியின் வழியாக சிறார் பாடல்களின் உலகத்தில் அழுத்தமாகத் தடம் பதித்த செந்தில் பாலாவின் இரண்டாவது தொகுதியாகவவ்வவ்வவந்திருக்கிறது. செந்தில்பாலாவின் மனமும் சொல்லும் சிறுவர்களுக்கு இணையாக இயங்குகின்றன என்பதற்கு இத்தொகுதி ஒரு நிரூபணம். சிறுவர்கள் வாய்ப்பேச்சிலும் விளையாட்டிலும் பயன்படுத்தி மகிழும் பல சொற்களை நல்ல தாளக்கட்டோடு தம் பாடல்களில் பயன்படுத்திக்கொள்கிறார் செந்தில்பாலா.


பறந்து வந்தது காக்காய்
கொத்தித் தின்றது சோக்காய்
கூட்டம் சேர்த்தது பாரு
நானும் போட்டேன் சோறு

என்பது தொகுப்பின் தொடக்கத்தில் இடம்பெற்றிருக்கும் ஒரு பாடல். ஒரு சூழலை ஒட்டி மனத்தில் பொங்கியெழும் சொற்களை தாளத்தோடு இணைத்து பாடலென உருவாக்கும் வகைமையைச் சேர்ந்தது. ஒரு தருணத்தின் மனநிலையை வெளிப்படுத்தும் சொற்கள் இன்னொரு கோணத்தில் அத்தருணத்தை ஒரு கொண்டாட்டம் மிக்கதாகவும் மாற்றிக்கொள்ளும் ரசவாதமும் இப்பாடலில் நிகழ்ந்துள்ளது. மன எழுச்சியுடன் பாடலின் வரிகளைப் பாடப்பாட, மகிழ்ச்சி பெருகுவதையும் உற்சாகம் பொங்குவதையும் உணரலாம். ஒரு நல்ல பாடலை மதிப்பிடுவதற்கு இதை ஒரு அளவுகோலாக எடுத்துக்கொள்ளலாம்.

அம்மா வாங்கி வந்தது
ச்சீ ச்சீ புளிக்குது

அப்பா வாங்கி வந்தது
த்தூ த்தூ கசக்குது

அக்கா வாங்கி வந்தது
காருது

அண்ணன் வாங்கி வந்தது
உவ உவ குமட்டுது

மாமா வாங்கி வந்தது
அத்தனையும் இனிக்குது

இப்பாடலில் அருமையான அடுக்குமுறை நன்றாக அமைந்துள்ளது. கண்முன்னால் ஒரு கதையே திரண்டெழுவதுபோல உள்ளது. நாட்டுப்புறப்பாடலின் சாயலும் தாளமும் மிகவும் இயல்பாகப் பொருந்தி இப்பாடலை மிகச்சிறந்த பாடலாக்கிவிடுகிறது.

கிட்டத்தட்ட இதே பாடலில் சாயலோடு தொகுப்பில் காணப்படும் இன்னொரு பாடல்.

அப்பாவுக்கு முருங்கைக்காய்
அம்மாவுக்கு பரங்கிக்காய்
தாத்தாவுக்கு வெண்டைக்காய்
ஆயாவுக்கு சுண்டைக்காய்
அக்காவுக்கு அவரைக்காய்
உனக்கு மட்டும் பாவற்காய்
வவ்வவ்வ
வவ்வவ்வ

உதட்டைச்சுழித்து கேலி செய்யும் சிறுமியின் குரலுக்குரிய எழுத்து வடிவத்தோடு இந்தப் பாடல் அமைந்திருப்பது சிறப்புக்குரியது.

அண்ணே அண்ணே எங்க போற? ஒரு கதையின் சம்பவம்போல விரிந்துசெல்லும் பாடல் பால்யத்துகே உரிய ஒரு குறும்போடு இறுதியில் முடிவது நன்றாக உள்ளது. செந்தில்பாலா இந்தச் சொற்பயணத்தை மிகவும் திறமையோடு கையாண்டுள்ளார். குழந்தைமையைச் சுமந்தலையும் மனத்துக்கு மட்டுமே இத்தகு பயணமும் சாத்தியம்.

ஆசைப்பட்ட ஜிமிக்கிக்கம்மல் போட்டுக்கிட்டேனே, காத்தடிக்குது காத்தடிக்குது ஓடியாங்க, சின்னச் சின்ன தம்பி,, கிணத்துல தவளை போன்ற பல பாடல்கள் ரசனைக்குரியவை.

குழந்தைகள் நெஞ்சுக்கும் உலகத்துக்கும் மிகவும் நெருக்கமான சொற்களைத் தேர்ந்தெடுக்கும் ஆற்றல் செந்தில்பாலாவுக்கு இயற்கையாகவே கைவந்துள்ளது. அவரே பல இடங்களில் குழந்தையாக மாறிவிடுகிறார் என்று தோன்றுகிறது. அது ஒரு முக்கியமான விஷயம். அது எவ்விதமான புறத்தூண்டுதலும் இல்லாமல் மிக இயல்பாகவே நிகழ்கிறது என்பதற்கு இத்தொகுதியின் பாடல்கள் சான்றாக உள்ளன.

(வவ்வவ்வசிறார் பாடல்கள். செந்தில்பாலா. நறுமுகை பதிப்பகம், 29/35, தேசூர்பாட்டை செஞ்சி -604202
பஞ்சுமிட்டாய் - இணைய இதழுக்காக எழுதிய புத்தக அறிமுகக்கட்டுரை)