”காந்தியைப்பற்றி ஒரு விஷயம் கேள்விப்பட்டேன், அது உண்மையா?” என்று கேட்டார் நண்பர். என்ன விஷயம் என்பதுபோல நான் அவரைப் பார்த்தேன்.
“பீகாரில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது, அதைக் கடவுள் கொடுத்த தண்டனை என்று காந்தி சொன்னதாக
சமீபத்தில் ஒரு கவிஞர் அமெரிக்காவில் நிகழ்ந்த நிகழ்ச்சியொன்றில் பேசியதாகப்
படித்தேன். காந்தி அப்படிப் பேசியதுண்டா?” என்று கேட்டார்.
“உண்மைதான். ஆனால் அதை எதற்கு ஏதோ துப்பறிந்து சொல்லப்பட்ட செய்தியைப்போலச்
சொல்கிறீர்கள்? ஓளிவு மறைவு எதுவுமே இல்லாத தலைவர் அவர். அவர் சொன்னவை அனைத்தும்
எழுதப்பட்டிருக்கின்றன. எழுதியவை அனைத்தும் மீண்டும்மீண்டும்
சொல்லப்பட்டிருக்கின்றன. ஆனால் அவருடைய நீண்ட உரையில் முடிவாக ஒரே ஒரு வரியைச்
சொல்வதற்குமுன்னால் குறைந்தபட்சம் பத்துவரிகளாவது அடுக்கிச் சொல்லி, இறுதியாக அந்த
முடிவுவரியைச் சொல்வதுதான் அவர் பழக்கம். தொடக்கத்தில் சொல்லப்படும் பத்து
வரிகளையும் வசதியாக மறந்துவிட்டு, அதன் இறுதிவரியைமட்டும்
முக்கியத்துவப்படுத்துவதில் எந்த நியாயமும் இல்லை....” என்றேன்.
நண்பர் என்னையே பார்த்துக்கொண்டிருந்தார். என் பேச்சை ஏற்றுக்கொள்வதில்
அவருக்கு இன்னும் தயக்கம் இருப்பதுபோலத் தெரிந்தது. ஒரு பெருமூச்சோடு, “என்னதான்
இருந்தாலும் நிலநடுக்கத்தால் தவிக்கிறவர்களிடம் இது கடவுள் கொடுத்த தண்டனை என்று
சொல்வது அழகாகவா இருக்கிறது?” என்று இழுத்தபடி கேட்டார். “அழகுக்காக பேசிய
தலைவர் அல்லர் அவர். உண்மைக்காக பேசிய தலைவர். அவரால் அப்படித்தான் பேசமுடியும்” என்றேன்.
”காந்தியின் தினசரி நடவடிக்கைகளில்
பிரார்த்தனைக்கு முக்கியமான இடமுண்டு. பிரார்த்தனைமூலம் கடவுளுக்கு நன்றி
சொல்வதும் கடவுளின் அருளை வேண்டுவதும் அவருடைய வழிமுறை. இந்தப் பணி இறைவனின்
திருப்பணி. என் வழியாக இறைவன் தன் பணியைச் செய்துமுடிக்கிறார் என்று சொல்வதுதான்
அவர் வழக்கம். சுதந்திரத்துக்குப் பிறகு ஆட்சியில் அமர்ந்த மேற்குவங்க
அமைச்சர்களிடம் இந்தியக் கிராமங்களில் வாழும் ஏழைமக்களுக்காகத்தான் இந்தப்
பதவியில் அமர்ந்துள்ளீர்கள் என்பதை எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். கடவுள்
துணை உங்களுக்கு எப்போதும் இருக்கும் என்பதையே ஆசிகளாகச் சொன்னார் காந்தி. அவருடைய
வைஷ்ணவ ஜன தோ என்று தொடங்குகிற
அவருடைய பிரார்த்தனைப் பாடலுடைய பொருள் அவருடைய உள்ள உணர்வைப் பிரதிபலிக்கும்
தன்மை உடையது. ஏழைகளுக்கு இரங்குபவன் யாரோ, ஏழைகளுக்காக தன் உழைப்பை அளிப்பவன்
யாரோ, எல்லோரையும் சமமாக மதித்து நடப்பவன் யாரோ, எல்லோரையும் அன்பால் அரவணைத்துச்
செல்பவன் யாரோ அவனே வைணவன் என்னும் பொருளை விரிவான அளவில் அந்தப் பிரார்த்தனைப்
பாடல் முன்வைக்கிறது. தன் பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்துகொள்கிறவர்கள்
அனைவரையும் அந்தப் பாடலைப் பாடவைத்தார் காந்தி. அப்படிப் பாடுவதன்மூலம் அந்தக்
கருத்துகளை உணரும்படி செய்தார். மீண்டும்மீண்டும் மனத்தில் பதியவைப்பதன்மூலம்
அவற்றை ஏற்கும்படியும் அவற்றின்மீது நம்பிக்கைகொள்ளும்படியும் செய்தார்.”
நண்பர்
பொறுமையில்லாமல் என்னையே பார்த்தார். “இதற்கும் அதற்கும் என்ன தொடர்பு என்று கேட்க
நினைக்கிறீர்கள் அல்லவா?” என்று கேட்டபோது தலையசைத்தார். ”இருப்பதால்தான்
சொல்கிறேன். என் அந்தராத்மா கட்டளையிட்டுள்ளது, என் அந்தராத்மா அதை ஏற்கவில்லை,
என் அந்தராத்மா அதை நம்புகிறது என்பது போன்ற சொற்களை பல இடங்களில் காந்தி பயன்படுத்துகிறார்.
காந்தி மட்டுமல்ல, காந்தி காலத்துப் பெரியவர்கள் அனைவரும் அப்படிப்
பயன்படுத்தியிருகிறார்கள். ஒரு நல்ல செயல் நடைபெறும்போது அதைக் கடவுளின் கருணை
என்றும் ஒரு மோசமான செயல் நடைபெறும்போது அதைக் கடவுளின் சாபம் அல்லது கோபம்
என்றும் சொல்வது வாய்வழக்கில் எப்போதும் இந்த மண்ணில் உள்ளதுதான். அப்படிப்பட்ட
உணர்வின் அடிப்படையில்தான் ருஷ்ய நாட்டில் நடைபெற்ற புரட்சியைப் பராசக்தியின்
கருணையாலும் கடைக்கண் பார்வையாலும் நிகழ்ந்த்தாகப் பாரதியார் குறிப்பிடுகிறார்.
அழிவை அதே பாரதியார் காளியின் ஊழிக்கூத்து என்று மனம் துடிக்க எழுதுகிறார்.
அப்படிச் சொல்வதும் எழுதுவதும் உலகவழக்குக்கு மாறானதல்ல என்று நாம் உணரவேண்டும்.”
”தீண்டாமையையும்
பெண்கள்மீதான அடக்குமுறையையும் ஒழிக்கமுடியாமல் போனால் மிகவிரைவிலேயே இந்துமதம்
தன் உயிர்ப்பாற்றலை இழந்துவிடும் என்று ஞானதீபம் உரைகளில் மீண்டும்மீண்டும் விவேகானந்தர்
குறிப்பிட்டுச் சொல்வதைப் பார்க்கலாம். அவரையடுத்து இவ்விரண்டு அம்சங்களையும் உரிய
முக்கியத்துவத்தோடு பேசியவர் காந்தி. தீண்டாமை என்பது இந்துமதத்தின் இயல்பான
குணமல்ல என்று திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டே இருந்தார் காந்தி. இதனால்
இந்துமதத்தின் வேரறுக்கவந்த தீய சக்தி
என்று மற்றவர்கள் தன்னைத் தூற்றுவதைக் கொஞ்சம்கூட அவர் பொருட்படுத்தவில்லை. கேரளப்
பயணத்தின்போது நாராயணகுருவைச் சந்தித்த தருணத்தில் தீண்டாமைபற்றி விவாதித்ததாகவும்
நாராயணகுரு தீண்டாமைக்கு சாஸ்திர சம்மதம்
இல்லை என்று திட்டவட்டமாக அவர் அறிவித்ததாகவும் குறிப்புகள் உண்டு. அந்தப் பதிலால்
காந்தி மேலும் ஊக்கம் பெற்றார். 1934 ஆம் ஆண்டில் தீண்டாமை ஒழிப்புப்
பிரச்சாரத்தையே முக்கியமான இலக்காகக் கொண்டு இந்தியா முழுக்க சுற்றுப்பயணத்தை
மேற்கொண்டார் காந்தி. ஏறத்தாழ எட்டு மாத காலம். அவருடைய பயணத்திட்டத்தில் தொடக்கத்திலேயே
இடம்பெற்ற இடம் தமிழ்நாடு. 23.02.1934 முதல் 22.03.1934 வரை தமிழ்நாடு முழுக்க
வலம்வந்தார் அவர். வில்வண்டி, நான்கு சக்கர வாகனம், புகைவண்டி என எல்லா
விதங்களிலும் இடைவிடாமல் பயணம் செய்து 112 ஊர்களில் பொதுமக்களைச் சந்தித்தார்.
ஏறத்தாழ இரண்டுகோடி மக்கள் காந்தியை நேரில் காணவும் அவருடைய உரையைக் கேட்கவும்
அவருடைய பயணத்தின் நோக்கத்தை உணரவும் செய்தார்கள். தீண்டாமை ஒழியப் பாடுபடுமாறு
சென்ற இடங்களிலெல்லாம் மன்றாடிக் கேட்டுக்கொண்டார். ஹரிஜன சேவைக்காகத் தேவைப்படும்
பெரும்தொகையை ஒவ்வொரு கூட்டத்தின்போதும் மக்களிடமிருந்து நேரிடையாக நன்கொடையாகப்
பெற்றுக்கொண்டார். அப்பயணத்தின்போதுதான் அவர் குற்றாலத்துக்கு வந்தார். அங்குள்ள
அருவியில் நீராடிவிட்டுச் செல்லலாம் எனத் தொண்டர்கள் அழைத்தபோது காந்தி அதற்கு
இணங்கவில்லை. “என்றைக்கு என் ஹரிஜன சகோதரர்கள் இந்த அருவியில் மற்றவர்களைப்போல
குளிக்க அனுமதிக்கப்படுகிறார்களோ, அன்றைக்கு நான் குளித்துக்கொள்கிறேன்.
அவர்களுக்கில்லாத குளியல் எனக்கும் வேண்டாம்” என்று
திட்டவட்டமாக மறுத்துவிட்டார். குற்றாலத்தைத் தொடர்ந்து திருநெல்வேலிக்கு அருகில் காந்தி
தங்கியிருக்கும் தருணத்தில்தான் பீகாரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அச்செய்தி அவரை
ஆழ்ந்த துக்கத்தில் ஆழ்த்தியது. தேசத்தையே இருட்டில் ஆழ்த்தியிருக்கும்
தீண்டாமையால்தான் உப்பு சத்தியாகிரகத்தை ஒட்டியே கைக்குக் கிடைத்திருக்கவேண்டிய
சுதந்திரம் தள்ளிப்போனது. பார்த்தால் தீட்டு, தொட்டால் தீட்டு, தெய்வத்தின்
முன்னால் நிற்பதுகூட தீட்டு என்று எடுத்ததற்கெல்லாம் தீண்டாமையைக் கடைபிடித்துவந்தவர்களின்
எண்ணங்களை மாற்றும் மாபெரும் செயலை அடிப்படை நோக்கமாகக் கொண்டு நாடு தழுவிய
பிரச்சார இயக்கத்தை அவர் உடனடியாக மேற்கொண்டார். தீண்டமையை இந்த நாட்டைவிட்டு
ஒழிப்பது தம் தலையாய கடமையாக வகுத்துக்கொண்டார் நாட்டில் நிகழக்கூடிய மோசமான
ஒவ்வொரு செயலுக்கும் தீண்டாமைக்கும் ஏதோ ஒருவிதத்தில் தொடர்பு இருப்பதாகவே அவர்
நினைத்தார். ஒரு கிராமத்துப் பெரியவரின் மனநிலையில் இந்தத் தீண்டாமை ஒழிந்தால்தான்
எல்லாப் பேரழிவுகளிலிருந்தும் நமக்கு மீட்சி கிடைக்கும் என்று அவர் நம்பினார். ஹரிஜன
சேவை செய்யாவிடில் உயிருடன் இருக்கமுடியாது என்று உண்ணாவிரதம் பூண்ட
காந்தியடிகளுக்குத் தீண்டாமை ஒழியவேண்டும் என்கிற தியானம் ஒன்றைத் தவிர வேறு
எண்ணமே கிடையாது. திருநெல்வேலியிலிருந்து கிளம்பி ராஜபாளையத்தை நோக்கி அவர் பயணம்
தொடங்கியது. வழியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளிலெல்லாம் தீண்டாமைபற்றியும் பீகார்
நிலநடுக்கம் பற்றியும் மனமுருகப் பேசினார். ஒரு பெரியவருக்கே உரிய தொனியில் ”ஜனகன் அரசாட்சி செய்த தேசம், சீதை பிறந்து வளர்ந்து ராமாயணத்தைப் பாரத
நாட்டுக்கு அளித்த தேசம், பாபு ராஜேந்திர பிரசாத் அவர்கள் புனிதமான தேசபக்தியோடு
தொண்டு செய்கிற தேசம், இப்படிப்பட்ட சிறப்புகளையெல்லாம் கொண்ட தேசத்திலே தீண்டாமை
என்னும் தீய வழக்கத்தை தெய்வத்தின் பெயராலும் சாஸ்திரத்தின் பெயராலும்
கடைபிடித்து, மனிதர்களில் ஒரு பிரிவினரை மிருகங்களைக் காட்டிலும் கேவலமாக நாம்
நடத்திவரும் அநியாயத்துக்காகவே இறைவன் இந்த நில அதிர்ச்சியை அளித்துவிட்டான்.
அந்தத் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் மக்களுக்கு எல்லா விதங்களிலும் உதவியாக
இருக்கவேண்டியது இந்தியர்களாகிய நம் கடமை. ஹரிஜன சேவைக்கான நிதியை அளிப்பதுபோலவே,
இன்றுமுதல் பீகார் நில அதிர்ச்சி நிதிக்கும் தாராளமாக நிதி உதவி வழங்கி
ஆதரிக்கவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
அன்றுமுதல் இரண்டு பிரிவுகளாக நிதிவசூல் செய்யப்பட்டது. இறைவன் நிகழ்த்திய சோதனை
என்று நில அதிர்ச்சியைச் சொன்ன காந்திதான் தாராளமாக நிதி வழங்குங்கள் என்றும்
கேட்டுக்கொண்டார். தன் உருக்கமான உரையால் மக்களின் மனசாட்சியை அசைத்தார். அன்று
ஆட்சியில் இருந்த ஆங்கில அரசோ அல்லது வேறெந்த அமைப்புகளோ பீகாரின் மீட்சிக்கு
உதவவில்லை. காந்தியும் காங்கிரஸ்காரர்களும்தான் துணைநின்றார்கள்.”
என் நீண்ட பேச்சை
மெளனமாகக் கேட்ட நண்பரின் முகத்தில் ஓரளவு தெளிவின் வெளிச்சம் படரத்
தொடங்கியிருந்ததைப் பார்க்கமுடிந்தது. ”ஆனாலும் ஒரு
சின்ன சந்தேகம் இன்னும் இருக்கிறது” என்று மீண்டும்
தொடங்கினார் அவர். “இது நீங்களாவே சொல்லக்கூடிய விஷயமா, இதற்கு ஏதாவது ஆதாரம் இருக்குமா?” என்று இழுத்தார்.
நல்ல வேளையாக என்னிடம் உப்பு சத்தியாகிரக போராட்டத்தில் கலந்துகொண்ட
தி.சே.செள.ராஜன் எழுதிய தமிழ்நாட்டில் காந்தி என்னும் புத்தகம் இருந்தது. அதில்
நான் சொன்ன தகவல்களைப் படித்த நினைவும் இருந்தது. அந்தப் புத்தகத்தை என் நூலகத்திலிருந்து
எடுத்து மெதுவாக அவர் முன்னால் வைத்தேன். “தமிழ்நாட்டில் காந்தி சுற்றுப்பிரயாணம்
செய்தபோது, அவரோடு துணையாகவும் பயண ஏற்பாடுகளைக் கவனிப்பவராகவும் இருந்த ராஜன். தன்
பயண அனுபவங்களையெல்லாம் அவர் இப்படி ஒரு புத்தகமாக எழுதியிருக்கிறார். நான் சொல்லும்
குறிப்புகள் எல்லாம் இதில் உள்ளன” என்று சொன்னபடி புத்தகத்திலிருந்து ஒரு பகுதியைத்
தேடி எடுத்துக் காட்டினேன். நண்பர் அதை ஆர்வமுடன் படித்துமுடித்தார். ”இறைவனால் நிகழ்ந்த விளைவு என்று காந்தி சொல்லும்போது, அதில் ஒரு கையறு
நிலையும் ஆற்றாமையும்தான் தொனிக்கிறதே தவிர வேறெந்த தொனியும் தெரியவில்லை.
நாடுமுழுக்க அலைந்து அழுது அல்லற்பட்ட அந்த மக்களுக்காக நிதி திரட்டியது எவ்வளவு
பெரிய விஷயம்” என்று சொல்லி
மலைப்பாகப் பேசத் தொடங்கினார். முடிவாக “ஒரு கவிஞர் இப்படி மாற்றிச் சொல்லலாமா
சார்?” என்று சொல்லிவிட்டு நாக்குச் சப்புக்கொட்டினார். புன்னகையைத் தவிர அவருக்குப்
பதிலாகக் கொடுக்க என்னிடம் எதுவுமில்லை.
பொதுவாக மேலும் சில விஷயங்கள் பேசிவிட்டு அவர் கிளம்பிச் சென்றுவிட்டார். நம்
நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்து அறுபத்தைந்து ஆண்டுகள் பறந்துவிட்டன. நாம்
காந்தியை இழந்தும் கிட்டத்தட்ட அதே அளவு ஆண்டுகள் கழிந்துவிட்டன. காந்தி அளவுக்கு
உயர்வானவரும் நம் நேசத்துக்குரியவருமான ஒரு தலைவர் இன்னும் நம்மிடம் உருவாகிவரவில்லை.
காந்தி உரைத்த அல்லது எழுதிய கருத்துகளின்
உள்ள உண்மையின் வலிமைதான் அல்லது அதைச் சகித்துக்கொள்ள இயலாமைதான் அவரைப்பற்றி
மீண்டும்மீண்டும் ஆதரவாகவோ அல்லது எதிராகவோ பேசவைக்கின்றன. அன்று இரவு உணவுக்குப்
பிறகு ராஜனின் புத்தகத்தை மீண்டும் படிக்கத் தொடங்கினேன். படிக்கப்படிக்க அந்தப்
பயணக்காட்சிகள் என் கண்முன்னால் அசையத் தொடங்கின. 140 பக்கங்கள்மட்டுமே கொண்ட
அந்தப் புத்தகத்தை தமிழில் எழுதப்பட்ட மிகச்சிறந்த புத்தகங்களின் வரிசையில்தான்
வைக்கவேண்டும்.
தீண்டாமைக்கு சாஸ்திரத்தில் ஆதாரம் இல்லை. தீண்டாமை என்னும் தொற்றுநோய்
ஒழியவேண்டும். தீண்டாமை ஒழிந்தால்தான் இந்துமதம் பிழைக்கும், மக்கள் பிழைப்பார்கள்
என்று செல்லும் இடங்களில் எல்லாம் சொல்லிக்கொண்டே இருந்தார் காந்தி. பலர் மனம் அவரைப் பின்பற்றியது. சிலர் மனம்
துடித்தது. பல ஆண்டுகளாகப் பரவி,
வேரூன்றிய கொடிய பழக்கம் வேரோடு ஆட்டம் கொடுத்தது. வேரும் ஒடிந்துவிட்டது. மரம்
சிறுகச்சிறுகச் சாய்ந்துவருகிறது. காந்தியடிகள் தமிழ்நாட்டில் மேற்கொண்ட சுற்றுப்பிரயாணம் சரித்திரத்தில் இடம்பெற்றது.
இதைக் காந்தி சகாப்தம் என்றே சொல்லலாம். பின்வரும் சந்ததியர்களும்
மறக்காமலிருக்கவேண்டி இச்சரித்திரத்தை நூலாக எழுதியிருப்பதாகத் தன் முன்னுரையில்
குறிப்பிடுகிறார் ராஜன்.
திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் தன் சுற்றுப்பிரயாணத்தை முடித்துக்கொண்டு
கன்னியாகுமரி வழியாக தமிழ்நாட்டில் அடியெடுத்துவைத்தார் காந்தி. அதுவரைக்கும்
காந்தியின் பயண ஏற்பாடுகளை இந்திய ஹரிஜன சேவா சங்கத்தலைவரான தக்கர் பாபா
கவனித்துக்கொள்ள, கன்னியாகுமரியில் அவருடன் இணைந்துகொண்டார் ராஜன். ஒவ்வொரு நாளும்
செல்லவேண்டிய ஊர்கள், கலந்துகொள்ளவேண்டிய நிகழ்ச்சிகள், தங்கவேண்டிய இடங்கள்
எல்லாவற்றையும் கச்சிதமாக வடிவமைத்ததில் ராஜனுக்குப் பெரும்பங்குண்டு. அதைத்தவிர
காந்தியின் உரையைத் தமிழில் மொழிபெயர்த்துப் பேசும் பணியையும் அவர்
ஏற்றுக்கொண்டார். நாளொன்றுக்கு சராசரி நூற்றைம்பது மைல்களுக்குக் குறையாமல்
பிரயாணம் செய்துகொண்டு, பத்து மணிநேரத்துக்கும் மேலாக வேலை செய்துகொண்டு , ஓர்
இரவு தங்கிய இடத்தில் மறு இரவு தங்காமல் காற்றைப்போல பறந்துகொண்டிருந்த காந்தியோடு
அப்பயணம் முழுக்க இருபது பேர் இருந்தார்கள். குஜராத்தியர் ஒன்பதுபேர். தமிழர்கள்
ஐந்துபேர். பெண்கள் மூவர். இந்துஸ்தானிகள் இருவர். ஜெர்மானியர் ஒருவர்.
சீனிவாச ஐயங்கார், வைத்தியநாத ஐயர், மாசிலாமணிப்பிள்ளை, வீரபாகுப்பிள்ளை, அவிநாசிலிங்கம் செட்டியார்,
கிருஷ்ணசாமி ஐயங்கார், சாம்பசிவ ஐயர், ராஜாஜி, ஸ்வாமி சகஜானந்தர், கோடம்பாக்கம்
கணேசன் போன்ற முக்கியஸ்தர்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சிகளையெல்லாம் பயண வழிகளில்
இணைத்துக்கொண்ட ராஜன் மிக எளிய காங்கிரஸ் தொண்டர்கள் தாமாகவே மனமுவந்து நிகழ்த்திய
நிகழ்ச்சிகளையும் முக்கியத்துவம் கொடுத்து இணைத்துக்கொண்டதையும் ஊக்கம் குன்றாமல்
காந்தி அந்த இடங்களில் உரையாடியதையும் புத்தகம் முழுக்கப் பார்க்கமுடிகிறது. குற்றாலம், தூத்துக்குடி, ராஜபாளையம்,
விருதுநகர், மதுரை, மானாமதுரை, மேட்டுப்பாளையம், குன்னூர், கோயம்புத்தூர்,
போத்தனூர், திருச்சி, நாமக்கல், சேலம், தஞ்சாவூர், நாகை, சீர்காழி, சிதம்பரம்,
கடலூர், சென்னை என ஏராளமான இடங்கள்வழியாக காந்தியின் பயணம் தொடர்ந்தது. ஒவ்வொரு இடத்திலும் காந்தியின் பயணம் ஒரு
புதுவித அனுபவத்தைப் பெறுவதை சுவாரசியமாகக் குறிப்பிடும் ராஜனின் எழுத்தாளுமை
பாராட்டுக்குரியது.
நாங்குநேரிக்கும் கன்னியாகுமரிக்கும் இடையில் ஏதோ ஒரு குக்கிராமம். வெறும்
பத்து குடிசைகள் மட்டுமே உள்ள பகுதி அது. அந்த ஊரைச் சேர்ந்த தொண்டரின்
வேண்டுகொளுக்கிணங்க காந்தியின் வாகனம் அங்கே நிற்கிறது. எல்லோரும் ஆச்சரியப்படும்
வகையில் ஏறத்தாழ இரண்டாயிரம் பேரை அங்கே திரட்டி நிகழ்ச்சியில்
பங்கெடுக்கவைக்கிறார் அந்தத் தொண்டர். எப்படித் திரட்டினாரோ என்று எல்லோரும்
ஆச்சரியத்தில் மூழ்கிவிடுகிறார்கள். ஹரிஜன சேவா நிதிக்காக தாராளமாகப் பணமுடிப்பு
கொடுக்கிறார் அவர். வாகனம் செல்வதற்கு வசதியில்லாத ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்த வேறொரு
தொண்டர் தம் வசிப்பிடத்துக்கு காந்தி வருகை புரியவேண்டும் என்கிற ஒரே நோக்கத்தில் ஒரே
இரவில் இருநூறு மீட்டர் நீளத்துக்கு புதுமணல் பரப்பி ஒரு சாலையையே நிறுவி காந்தியை
அழைத்துச் செல்கிறார். ”என் இயக்கத்துக்கு ஆயிரக்கணக்கான மனிதர்கள்
அவசியம் இல்லை. லட்சக்கணக்கில் செல்வமும் தேவையில்லை. உண்மையான மனிதன் ஒருவன்
இருந்தால் போதும், அந்த ஒரு மனிதனின் செயல் இந்த உலகத்தையே வென்றுவிடும்” என்று அடிக்கடி
சொல்லக்கூடிய காந்தியின் வார்த்தைகளுக்கு விளக்கமாக அந்தத் தொண்டர்கள்
வாழ்ந்துகாட்டியிருப்பதையே இந்த நிகழ்ச்சிகள் உணர்த்துகின்றன. ஏறத்தாழ
எண்பதாண்டுகள் கழிந்த நிலையில் இந்தத் தொண்டர்களின் தலைமுறையைச் சேர்ந்தவர்கள்
எல்லோரும் இப்போது எப்படி இருப்பார்கள் என்று எண்ணிப் பார்க்கத் தோன்றுகிறது.
காந்தியின் பிரயாண சமயத்தில் நவாப் ராஜமாணிக்கம் பிள்ளையின் குழுவைச் சேர்ந்த
நாகை ராஜாராம் பாகவதர் தலைமையில் கோயம்புத்தூரில் ஒரு நாடகம்
நடைபெற்றுக்கொண்டிருந்தது. அவர் தன்னுடைய நாடகத்துக்கு காந்தி வரவேண்டுமென்றும்
அப்படி வருவதாயிருந்தால் அன்றைய தினம் கிடைக்கும் தொகை முழுதும் ஹரிஜன
இயக்கத்துக்கு அளித்துவிடுவதாகவும் சொல்லியனுப்பினார். முதலில் காந்திக்கு அதில்
விருப்பமில்லை. ஆனாலும் பாகவதரின் குணநலன்களைப்பற்றியும் அவர் நடத்தும்
நாடகங்களின் நோக்கத்தைப்பற்றியும் விவரமாக எடுத்துரைத்த பிறகு கோவை வரும்
சமயத்தில் நாடகம் நடைபெறும்போது ஐந்து நிமிட அளவு நேரமொதுக்கி வருவதாக
ஒப்புக்கொண்டார். அத்துடன், அன்றைய நிகழ்ச்சியில் கிடைக்கும் வருமானம் முழுசையும்
ஹரிஜன சேவை நிதிக்காகக் கொடுத்துவிடவேண்டும் என்று நிபந்தனையும் விதித்தார்.
ஒருநாள் வசூல் கிட்டத்தட்ட இரண்டாயிரம் ரூபாய் என்கிற நிலையில் ஆயிரத்தைந்நூறு
ரூபாயை ஹரிஜன சேவை நிதியின் கணக்கில் முன்பணமாகக் கொடுத்துவிடவேண்டும் என்றும்
நிகழ்ச்சியன்று வசூலாகும் தொகையில் பாக்கித் தொகையை பீகார் நலநிதிக்குக்
கொடுத்துவிடவேண்டும் என்றும் சொன்னார். நிபந்தனைகளை ஏற்றுக்கொண்ட பாகவதர் அவ்வாறே
முன்பணம் கொடுத்தார். நந்தனார் சரித்திர
நாடகத்துக்கு காந்தி வருகை தருவார் என்று விளம்பரமும் கொடுக்கப்பட்டது.
குறிப்பிட்ட நாளில் நாடக அரங்கத்துக்கு வந்து சேர்ந்தார் காந்தி. துரதிருஷ்டவசமாக
அன்று எதிர்பார்த்த அளவுக்கு வசூல் ஆகவில்லை என்றாலும் அதைக் காட்டிகொள்ளாமல்
காந்தியை கெளரவமான முறையில் வரவேற்று, நன்கொடை வழங்கி, உபசரித்து ஆசிகளைப்
பெற்றுக்கொண்டார் பாகவதர்.
திருப்பூரில் கதர் வியாபாரிகள் சங்கத்தார் காந்தியைக் கண்டு தம் குறைகளை
முன்வைத்தார்கள். கதர் விற்பனை குறைந்துபோனதைப் பற்றியும் மூலதனம்
முடங்கிப்போனதைப்பற்றியும் சொல்லி வருத்தப்பட்டார்கள். கதரின் திசையைநோக்கி
வழிநடத்திய காந்திக்கு அவர்கள் வாழ்வுக்கு வழிசொல்லும் பொறுப்பும் இருக்கிறது
என்பதுபோல அவர்கள் பேச்சு அமைந்திருந்தது. இதுவரை அகில இந்திய சர்க்கா
சங்கத்தாரிடமிருந்து கிடைத்துவந்த உதவிகள் திடீரென நின்றுவிட்டதால் கதர்
உற்பத்திக்கும் தொழிலுக்கும் பெரிய ஆபத்து ஏற்பட்டுவிட்டது என்று முறையிட்டார்கள். நூல் நூற்பதையும் கதர்
விற்பனையையும் முக்கியப்படுத்திப் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்த காந்தியிடமிருந்து
ஆதரவான முடிவை எதிர்பார்த்து அவர்கள் அப்படிப் பேசினார்கள். அந்த எண்ணத்துக்கு
மாறாக, அவர்களுடைய தோல்விக்கான காரணத்தை அலசி முன்வைக்கும் விதமாகப் பேசத்
தொடங்கிவிட்டார் காந்தி. “இந்தியாவிலேயே முதன்முதலாக கதர் இயக்கத்தில் ஈடுபட்டது
தமிழ்நாடு. அதிலும் திருப்பு தலைமை வகித்து இந்தியாவின் மற்ற பாகங்களுக்கெல்லாம்
கதரை உற்பத்தி செய்து அளிக்கும் இடத்தில் இருந்தது. கதர்க்கு கிராக்கி அதிகமாகவே
பல வியாபாரிகள் சீக்கிரமாகப் பணம் திரட்டிவிடவேண்டும் என்கிற ஆசையில்
தொழில்முறையில் ஒழுங்கீனமாக நடக்கத் தொடங்கினார்கள். இதுவே சரிவுக்குக் காரணம்.
இதற்கிடையில் நாடு முழுக்க பல இடங்களில் சர்க்கா சங்கங்கள் உருவாகி கதர்
உற்பத்தியைத் தொடங்கிவிட்டார்கள். இதனால் திருப்பூர் கதருக்கு வரவேற்பு
குறைந்துபோய்விட்டது. மேலும் திருப்பூர்
கதரில் பலவித ரகங்கள் இல்லை. மற்ற இடங்களில் சந்தைக்குத் தேவைப்படும் விதத்தில்
கதர் உற்பத்தியில் மாற்றம் கொண்டுவந்து வெற்றி பெற்றார்கள். நீங்கள் அப்படி
செய்வதில்லை. அதுவே உங்கள் தோல்விக்குக் காரணம்.
இந்திய சர்க்கா சங்கம் எவ்வளவு காலம் உங்களுக்கு உதவி செய்யமுடியும்? பத்து
ஆண்டுகள் தொடர்ந்து உதவி செய்தபிறகுகூட நீங்கள் உங்கள் தொழிலை லாபகரமாகச் செய்யத்
தெரிந்துகொள்ளவில்லை என்றால் நீங்கள் வியாபாரத்துக்குப் பொருத்தமான்வர்கள் அல்ல
என்றுதான் நான் நினைப்பேன். கால நிலையைக் கவனித்து சமயத்துக்கு ஏற்றமாதிரி
துணிகளைத் தயாரித்து விற்பனை செய்தால் உங்கள் தொழிலுக்கு ஒருபோதும் இடையூறு நேராது” என்று உபதேசம் செய்து அனுப்பிவைத்துவிட்டார்.
பெண்களுகென்று பிரத்யேகமான கூட்டங்களும் இந்தப் பிரயாணத் திட்டத்தில் ஏற்பாடு
செய்யப்பட்டிர்ப்பதைப் பார்க்கமுடிகிறது. ராஜபாளையம், விருதுநகர், மதுரை ஆகிய
இடங்களில் அவை நடந்தன. அக்கூடங்களிலும் ஹரிஜன சேவைக்காகவும் பீகார்
நலநிதிக்காகவும் பணமுடிப்புகள் வழங்கப்பட்டன. பல பெண்கள் தம் ஆபரணங்களைக் கழற்றி
அங்கேயே தம் பங்களிப்பாக வழங்கினார்கள்.
தேவகோட்டையில் தீவிரமாகத் தீண்டாமையைக் கடைபிடிக்கிற நாட்டார் சமூகத்தினரில்
முக்கியமான நூறுபேரைத் தேர்ந்தெடுத்து ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
அக்கூட்டத்தில் கேட்பவர் மனம் நெகிழும்படி
பேசினார் காந்தி. “மலையாள நாட்டில் காணாத தீண்டாமை. தமிழ்நாட்டின் தொடாத தீண்டாமை.
இந்தியா முழுதும் ஆலயம் நுழையமுடியாத தீண்டாமை. நாட்டார் நாடாகிய ராமநாதபுரம்
மாவட்டத்தில் ஆடை அணியாத் தீண்டாமை. அங்கே நாட்டார் என்கிற குடிமக்கள் உயர்ந்த
சாதி. ஹரிஜனங்கள் தாழ்ந்த சாதி. ஆண்மக்கள் இடுப்பில் முழத் துண்டுக்குமேல்
கட்டக்கூடாது. மேலே துணி சட்டை போடக்கூடாது. குடை பிடிக்கக் கூடாது. செருப்பு
அணியக்கூடாது. பெண்மக்கள் மார்பில் துணி போடக்கூடாது. இவையனைத்தும் தீண்டாமைக்கு
அறிகுறிகளாக உள்ளன. இவையெல்லாம் அகல நீங்கள்
பாடுபடவேண்டும்” என ஆன்ம
உணர்ச்சி, ஜீவகாருண்யம், தயை, தர்மநியாயம் அனைத்தையும் ஒருங்கே திரட்டி, சிறு
குழந்தைகளுக்கும் புரியும்வகையில் முக்கால்மணி நேர அளவுக்கும் அதிகமாக ஹரிஜனங்கள்
சார்பாகப் பேசினார். ஆனாலும் இறுதியில் அவர்கள் தம் வழக்கத்தை விடமுடியாது என்று
சொல்லிவிட்டார்கள். இருந்தபோதிலும் தம் கருத்தை வலியுறுத்த காந்தி தயங்கவில்லை.
சிவகாசியில் கொட்டும் மழையைப் பொருட்படுத்தாமல் நாலாயிரத்துக்கும்
மேற்பட்டவர்கள் பலமணிநேரம் காத்திருந்து காந்தியின் உரையைக் கேட்டார்கள். அந்தக்
கூட்டத்தினரை ஒழுங்குபடுத்தும் முயற்சியில் குமாரசாமி ராஜாவின் கைவிரல் வைரமோதிரம்
தொலைந்துபோய்விடுகிறது. விருதுநகரில் நடைபெற்ற கூட்டத்தில் பத்தாயிரத்துக்கும்
மேற்பட்டவர்கள் கலந்துகொண்டார்கள். மதுரையை அடைந்தபோது நள்ளிரவைக் கடந்துவிடுகிறது
நேரம். வெகுநேரமாகக் காத்திருந்து கலைந்துபோன மக்கள் காந்தி வந்துவிட்டார் என்கிற
செய்தியைக் கேட்டு மீண்டும் திரளாகச் சேர்ந்துவிடுகிறார்கள். தங்கியிருந்த
சுப்பராயன் பங்களாவிலிருந்து வெளிப்பட்டு சிறிதுநேரம் காந்தி பேசியபிறகுதான்
கலைந்து போனார்கள்.
காந்தி கலந்துகொண்ட நிகழ்ச்சிகளில் சில சுவையானவை. தம்மைப் பார்க்கவந்த
தொண்டர்கள் என்பதற்காக, அவர்கள் பிழைசெய்யும்போது காந்தி ஒருபோதும் சலுகை காட்டியதில்லை. ஒவ்வொன்றையும் உடனுக்குடன் சுட்டிக்காட்டி
அவர்களைத் திருத்தும் முனைப்புள்ளவராகவே எல்லாச் சமயங்களிலும் நடந்துகொண்டார்.
தூத்துக்குடிக்கு அருகில் நிகழ்ந்த நிகழ்ச்சியொன்றில் முப்பதாயிரம் பேருக்கும்
மேலாக மக்கள் கலந்துகொண்டார்கள். அந்த நிகழ்ச்சிக்கு பகட்டான முறையில்
விளக்கலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அந்த ஆடம்பரத்தைக் கண்டு அவர் மனவருத்தம்
கொண்டார். ஏழைப் பொதுமக்களிடமிருந்து
வசூல் செய்த தொகையில் இப்படி ஆடம்பரமான முறையில் ஏற்பாடு செய்வது தவறு என்று
சுட்டிக்காட்டினார். அவர்கள் கொடுத்த பணமுடிப்பை ஏற்றுக்கொள்ள மறுத்தார்.
நிகழ்ச்சிக்காகச் செய்யப்பட்ட செலவுக்கான கணக்கைத் தான் உடனே பார்க்கவிரும்புவதாகச்
சொல்லி, அந்தக் கணக்கை வாங்கிப் பார்த்தார். வசூலான தொகை இரண்டாயிரத்தறுநூறு
ரூபாய். நிகழ்ச்சிக்கான செலவு ஐந்நூறு ருபாய். பாக்கி பணமுடிப்பாக வழங்கப்பட
ஒதுக்கப்பட்டிருந்தது. அந்தக் கணக்கு விவரம் அவருக்கு வருத்தத்தையே அளித்தது.
பொதுப்பணம் வசூலிப்பதைப்பற்றியும் சிக்கனமாகச் செலவு செய்வதைப்பற்றியும்
அறிவுரைகளை வழங்கினார். விளக்கலங்காரத்தை அந்த ஊரைச் சேர்ந்த ஒரு மின்சார
ஒப்பந்தக்காரர் இலவசமாகவே செய்து கொடுத்தார் என்று விழாக்குழுவினர் எடுத்துச்
சொன்னபோதும் அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அந்த ஒப்பந்தக்காரரே நேரில் வந்து சொல்லவேண்டியதாயிற்று.
பிறகுதான் அதை அரைமனத்தோடு ஏற்றுக்கொண்டார் காந்தி. பொதுப்பணத்தில் எப்போதும்
இருபதில் ஒரு பங்கைமட்டுமே செலவு
செய்யவேண்டும் என்றும் ஐந்தில் ஒரு பங்கைச் செலவு செய்வதில் நியாயமே இல்லை என்றும்
நேருக்கு நேர் சுட்டிக் காட்டிச் சொன்னார்.
கோடம்பாக்கம் கணேசன் நடத்திவந்த ஹரிஜனத்தொண்டைப் பற்றியும் சகஜானந்தர்
நடத்திவந்த நந்தனார் பள்ளியைப் பற்றியும் அவற்றின்மீது காந்திக்கு உருவான
அபிமானத்தைப்பற்றியும் இந்த நூலில் விரிவான அளவில் ராஜன் பதிவு செய்திருக்கும்
பகுதி மிகவும் முக்கியமானது.
எத்தனை முறை படித்தாலும் அலுப்புத் தட்டாத ஒரு புத்தகம் தமிழ்நாட்டில் காந்தி.
கண்ணால் பார்க்கமுடியாத ஒரு மாபெரும் தலைவர் நாம் வாழும் பகுதிக்கு வந்து
சென்றிருக்கிறார், நம் மூத்த தலைமுறையினரிடம் உரையாடியிருக்கிறார் என்பதை
இப்புத்தகம் வழியாக உறுதிப்படுத்திக்கொள்வது ஒரு விசித்திரமான அனுபவம்.
(கணையாழி - அக்டோபர் 2012 இதழில் வெளிவந்த கட்டுரை )