Home

Friday 6 December 2019

வை.மு.கோதைநாயகி அம்மாள் - தேசியமும் சேவையும் - கட்டுரை




கேரளத்தில் வைக்கம் என்னும் நகரில் 1925ஆம் ஆண்டில் தீண்டாமைக்கு எதிராக ஒரு போராட்டம் நடந்துகொண்டிருந்தது. அந்நகரத்தில் இருக்கும் மகாதேவர் ஆலயத்துக்குச் செல்லும் எல்லா வழித்தடங்களிலும் எல்லா வகுப்பினரும் வேறுபாடின்றி நடந்துபோகும் உரிமைக்காக அப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. அதில் கலந்துகொள்வதற்காக திருவனந்தபுரத்தை நோக்கிப் புறப்பட்ட காந்தியடிகளும் கஸ்தூர்பாவும் சென்னையில் மூன்று நாட்கள் தங்கினார்கள். சீனிவாச ஐயங்கார் என்பவருடைய இல்லத்தில் அவர் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நகரத்தின் பல பகுதிகளிலிருந்து கூட்டம்கூட்டமாக மக்கள் அந்த வீட்டுக்கு வந்து காந்தியடிகளைப் பார்த்துவிட்டுச் சென்றார்கள்.  

ஒரு தொண்டர் தம் ஆறுவயது மகளுடன் அண்ணலைப் பார்த்து வணங்கினார். அண்ணலும் அவரை வணங்கி அருகில் அழைத்து உரையாடினார். எங்கே வசிக்கிறீர்கள், என்ன தொழில் செய்கிறீர்கள், இராட்டையில் நூல் நூற்கிறீர்களா, கதர் அணிகிறீர்களா என்பதுபோன்ற எளிய உரையாடல்கள். உரையாடியபடி சிறுமியை அருகில் அழைத்து தன் மடியில் அன்புடன் அமரவைத்துக்கொண்டார் காந்தியடிகள். தொண்டர் சொல்லும் பதில்களைக்  கேட்டபடியே, அச்சிறுமியுடன் கொஞ்சி விளையாடினார். பிறகுஇயக்க நிதிக்கு வழங்குவதற்கு என்ன கொண்டுவந்திருக்கிறீர்கள்?” என்று தொண்டரிடம் புன்னகைத்தவாறே கேட்டார் காந்தியடிகள். தொண்டர் தன் பையிலிருந்த சிறுதொகையை எடுத்து மகிழ்ச்சியுடன் வழங்கினார்.
அதைப் பெற்றுக்கொண்ட காந்தியடிகள் விளையாட்டாக தன் மடியிலிருந்த சிறுமியிடம்இந்தத் தாத்தாவுக்கு நீ என்ன கொடுக்கப்போகிறாய்?” என்று கேட்டார். அந்தச் சிறுமிக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் அருகில் நின்றிருந்த தன் அப்பாவை ஏறிட்டுப் பார்த்தது. “தாத்தாவுக்கு உன் கையிலிருக்கும் வளையல்களைக் கழற்றிக் கொடு அம்மாஎன்று சொன்னார் அவர். அப்பாவின் சொல்லைத் தட்டாத சிறுமி வளையலணிந்த கைகளை காந்தியடிகள் முன்னால் நீட்டி எடுத்துக்கொள்ளும்படி சொன்னது. காந்தியடிகளே சிறுமியின்  வளைகளைக் கழற்றி நிதிக்கணக்கில் சேர்த்துக்கொண்டார். அதைப் பார்த்ததும் காந்தியடிகளைச் சந்திப்பதற்காக நின்றிருந்த பலரும் ஒவ்வொருவராக தாம் அணிந்திருந்த ஆபரணங்களைக் கழற்றி அவரிடம் வழங்கத் தொடங்கிவிட்டனர். நெகிழ்ச்சியின் உச்சத்தில் அன்று தன் கழுத்தணிகளையும் கைவளையல்களையும் தாராளமாக காந்தியடிகளிடம் எடுத்துக் கொடுத்த பல பெண்களில் கோதைநாயகி அம்மாளும் ஒருவர்.
அன்று மாலையில் கஸ்தூர்பா திருவல்லிக்கேணியில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றினார். இராட்டையில் நூல்நூற்பதைப்பற்றியும் அந்நியத்துணிகளை விலக்கி கதராடைகள் அணியவேண்டிய அவசியத்தைப்பற்றியும் சிறிது நேரம் பேசினார். அக்கூட்டத்திலும் கலந்துகொண்டார் கோதைநாயகி அம்மாள். கஸ்தூர்பா அம்மையாரின் எளிய ஆடைகள் அவர் மனத்தைக் கவர்ந்தன. கூட்டத்துக்கு வந்திருந்த எண்ணற்ற பெண்கள் தாம் அணிந்திருந்த மோதிரங்கள், வளையல்கள், தோடுகள் என பல நகைகளைக் கழற்றி நிதிக்காகக் கொடுத்தனர். எவ்விதமான ஆபரணங்களும் இல்லாமல் எளிய கதர்ப்புடவையை மட்டும் அணிந்திருந்த கஸ்தூர்பாவின் தோற்றத்தில் இருந்த வசீகரமும்  மென்மையும் உறுதியும் படிந்த குரலில் பேசிய அவருடைய நாவன்மையும் கோதைநாயகியை மிகவும் கவர்ந்தன. அதுவரை எப்போதாவது ஒருசில முறைகள் மட்டுமே கதர்ப்புடவைகளையும் மற்ற நேரங்களில் பட்டுப்புடவைகளையும் அணிந்து  பழகிய கோதைநாயகி இனி எப்போதும் கதர்ப்புடவைகளை மட்டுமே அணிவதென அக்கணத்தில் உறுதி பூண்டார். அத்துடன் பொதுநன்மைக்காக பொதுமக்களுக்குப் புரியும் வகையில் மேடைகளில் உரையாற்றும் முடிவையும் எடுத்தார்.
கோதைநாயகியின் குடும்பத்தில் தேசபக்தி மிக்க உரையாடல்களுக்கும் சுதந்திரப்போராட்டம் பற்றிய உரையாடல்களுக்கும் தினசரிப் பேச்சுகளில் எப்போதும் இடமுண்டு. அடிக்கடி அவர்கள் வீட்டுக்கு வருகை தரும் அன்னிபெசண்ட் அம்மையாருடன் நிகழ்த்தும் உரையாடல்கள் வழியாக நாட்டு நடப்புகளைப்பற்றியும் அரசியல் போக்குகள்பற்றியும் அனைவரும் தெரிந்துவைத்திருந்தார்கள். கோதைநாயகியின் கணவர் பார்த்தசாரதிக்கு இளமைமுதல் காந்தியடிகள் மீது ஈர்ப்பிருந்தது. 1915 ஆம் ஆண்டில் சென்னைக்கு வந்த காந்தியடிகள் விக்டோரியா ஹால் திறந்தவெளியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நிகழ்த்திய உரையை நேரில் கேட்டவர் அவர். ஆப்பிரிக்காவில் தன்னுடன்  இணைந்து உரிமைகளுக்காகப் போராடி இளம்வயதிலேயே மறைந்துவிட்ட எளிய மனிதர்களைப் புகழ்ந்து பாராட்டிய காந்தியடிகளின் பெருமையை மீண்டும் மீண்டும் தன்னுடன் உரையாடுகிறவர்கள் அனைவரிடமும் பகிர்ந்துகொள்ளும் பழக்கமுள்ளவராக இருந்தார்.
கோதைநாயகியும் இளமைமுதல் தேசபக்தியைப்பற்றிய செய்திகளைக் கேட்டு வளர்ந்தவர். திருவல்லிக்கேணியில் பாரதியார் வசித்துவந்த துளசிங்கப்பெருமாள் கோவில் தெருவில்தான் கோதைநாயகியின் தாய்வீடும் இருந்தது. ஒருநாள் கோதைநாயகி வீட்டில் ஏதோ வேலையைச் செய்துகொண்டே பாரதியாரின் பாடலொன்றை இசையுடன் பாடிக்கொண்டிருந்தார். தற்செயலாக அப்போது தெருவில் சென்றுகொண்டிருந்த பாரதியார் அதைக் கேட்டுவிட்டு ஒருகணம் நின்றுவிட்டார். கோதைநாயகியின் குரல் அவ்வளவு வசீகரமாக இருந்தது. பாடல் முடிந்த பிறகு வீட்டுத் திண்ணையில் இருந்தவரிடம்  வீட்டுக்குள் பாடுவது யார்?” என்று கேட்டார். பாரதியார்என் மகள்தான் பாடுகிறாள். கோதைநாயகி என்று பெயர்என்று சொல்லிவிட்டு மகளை அழைத்து பாரதியாருக்கு அறிமுகப்படுத்தினார். பிறகு மகளிடம்கோதை, ஒரு பாட்டை இப்போது நீ பாடினாயே, அந்தப் பாட்டை எழுதியவர் இவர்தான். பாரதியார்என்று சொன்னார். கோதைநாயகி புன்னகையுடன் பாரதியாரை வணங்கினார். உற்சாகம் கொண்ட பாரதியார்உன் குரல் தெளிவாகவும் வளமாகவும் இருக்கிறது கோதை. தொடர்ந்து பாடிப் பழகுஎன்று ஊக்கப்படுத்தினார். பிறகுஇப்போது நான் ஒரு பாட்டுப் பாடுகிறேன். நீ அதைப்போலவே பாடிக் காட்டவேண்டும்என்று புன்னகைத்தார். பிறகு ஒருகணம் கூட யோசிக்காமல்ஜெயபேரிகை கொட்டடாஎன்னும் பாட்டை உணர்ச்சிமயமான குரலில் பாடினார். பாடலின் வரிகளை அப்படியே உள்வாங்கிக்கொண்டார் கோதைநாயகி. அடுத்தநாள் பாரதியார் அதே நேரத்தில் அந்த வீட்டுக்கு வந்தார். கோதைநாயகி அவர் முன் சென்று அவர் பாடிய அதே உணர்ச்சிவேகத்துடன் ஓங்கிய குரலில் அந்தப் பாட்டைப் பாடிக் காட்டினார். பெருமையோடும் மகிழ்ச்சியோடும் கோதைநாயகியைப் பாராட்டினார் பாரதியார். அன்றுமுதல் பாரதியார் தாம் புதிதாக எழுதும் பாடல்களையெல்லாம் கோதைநாயகியிடம் கொண்டுவந்து தருவதும் கோதை அவற்றை மனப்பாடம் செய்து பாடுவதும் வழக்கமானது. “ஆடுவோமே பள்ளுப் பாடுவோமேபாட்டை கோதைநாயகிக்காகவே எழுதினார் பாரதியார்.
தொடக்க காலத்தில் கோதநாயகி அவ்வப்போது கதர்ப்புடவைகளை அணியத் தொடங்கியதற்குக் காரணமாக இருந்தவர் அவருடைய கணவர் பாரத்தசாரதியே. 1919 ஆம் ஆண்டில் தமிழ்ப்புத்தாண்டு நாளில் எல்லாச் செய்தித்தாட்களிலும் ஜாலியன்வாலாபாக்கில் நடந்த படுகொலைச்சம்பவத்தைப்பற்றிய செய்தி வெளியாகியிருந்தது. அதைக் கண்டு மனவேதனைக்குள்ளான பார்த்தசாரதி தேசிய இயக்கத்தில் ஈடுபட்டுத் தொண்டாற்றவேண்டும் என முடிவெடுத்தார். தன் முடிவை கோதைநாயகியிடமும் தெரிவித்தார். அன்றே தான் அணிந்திருந்த பட்டுச்சரிகை வேட்டியையும் அந்நிய ஆடைகளையும் கொண்டுவந்து தெருவில் குவித்து தீக்கிரையாக்கினார். கோதைநாயகியும் தம்மிடம் இருந்த அந்நிய நாட்டுப் புடவைகளையும் பட்டுப்புடவைகளையும் கொண்டுவந்து நெருப்பிலிட்டுச் சாம்பலாக்கினார். கதர் அணிந்ததோடு மட்டுமன்றி, இருவரும் சேர்ந்து கதர்ப்பிரச்சாரத்திலும் ஈடுபட்டனர்.
அன்றைய நாட்களில் கதர்த்துணி கித்தான்போல மிகவும் முரட்டுத்தன்மையுடன் இருக்கும்.  பதினெட்டு முழமுள்ள புடவைகளைக் கட்டும் பழக்கமுள்ள பெண்கள் கதராடைகளை அணிய மிகவும் சிரமப்படுவார்கள். உடலில் புடவை என்பதே ஒரு பெரிய சுமையாக இருக்கும்.  ஆயினும் தேசபக்தியின் காரணமாக முரட்டுச்சேலையாக இருந்தாலும் கதரையே அணிந்தார் கோதைநாயகி.
கோதைநாயகியும் அவர் கணவர் பார்த்தசாரதியும் ஆளுக்கு ஒரு மூட்டை கதர்த்துணியைச் சுமந்துகொண்டு வீடுதோறும் சென்று கதர் விற்றனர். ஏதோ ஒரு விளம்பரத்துக்காக ஒருநாள் செய்தோம், அது போதுமென்று விட்டுவிடாமல் தொடர்ந்து பல நாட்கள் வெயிலையும் மழையையும் பொருட்படுத்தாமல் அப்பணியை மிகவும் ஈடுபாட்டோடு செய்தார்கள். சில நேரங்களில் திருவல்லிக்கேணி பைகிராப்ட்ஸ் சாலையிலிருந்த கதர்க்கடைக் கிளைக்குச் சென்று கதர் விற்பனைக்கு உதவினார்கள். கோதைநாயகி தெருமுனைகளில் நின்று கதரின் முக்கியத்துவத்தைப்பற்றியும் அவசியத்தைப்பற்றியும் மக்களிடம் எடுத்துரைத்து பிரச்சாரம் செய்தார். மயிலாப்பூர் பெண்கள் சங்கத்தின் சுற்றுப்புற வீதிகளிலும் திருவல்லிக்கேணி பெரிய தெருவிலும் தனிப்பட்டமுறையில் பெண்களைச் சந்தித்து தீவிரமாக கதர்ப்பிரச்சாரம் செய்தார்.
கோதைநாயகியின் தெருப்பிரச்சாரத்தை ஒருமுறை நேரில் பார்த்த சத்தியமூர்த்தி, “இதே பேச்சை நீ மேடையில் நின்று பேசினால் இன்னும் நன்றாக இருக்கும். கதரைப்பற்றி மட்டுமின்றி தேசியச்சிக்கல்கள் பற்றியும் நீ பேசலாம்என்று ஆலோசனை வழங்கினார். காந்தியடிகளின் கொள்கைகளை மக்களிடையே பரப்பி, அவர்கள் முன்னேற்றத்துக்கு வழிவகுக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்த கோதைநாயகி அக்கணமே அந்தத் திட்டத்தை ஏற்றுக்கொண்டார்.
முதல் கூட்டம் திருவல்லிக்கேணி துளசிங்கப்பெருமாள் கோவில் தெருவிலேயே கங்கைகொண்டான் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. பெண்கள் மட்டுமே அக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். பாஷ்யம் அவர்களுடைய துணைவியார் தலைமையுரை ஆற்ற, கோதைநாயகி சிறப்புரை ஆற்றினார். கோதைநாயகியின் பேச்சுக்கு கூட்டத்தில் நல்ல வரவேற்பு இருந்தது. அவர் உரையைக் கேட்ட சத்தியமூர்த்தி மகிழ்ச்சியுடன் பாராட்டினார்.
ஒருமுறை திண்டிவனத்திலிருந்து சில தொண்டர்கள் சென்னையில் சத்தியமூர்த்தியைச் சந்தித்து தம் ஊருக்கு வந்து சுதந்திரப்போராட்டம் பற்றி சொற்பொழிவாற்றும்படிக்  கேட்டுக்கொண்டனர். அவர்கள் குறிப்பிட்ட தேதியில் வேறொரு நிகழ்ச்சியில் சொற்பொழிவாற்ற அவர் ஏற்கனவே ஒப்புதல் அளித்திருந்த காரணத்தால் புதிய கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாத சூழலில் இருந்தார். திண்டிவனத்திலிருந்து வந்தவர்களோ அவரை விடவில்லை. “நீங்கள் வர இயலவில்லையென்றால், உங்களுக்குப் பதிலாக வேறு யாரையாவது அனுப்பிவையுங்கள்என்று கேட்டுக்கொண்டனர். சட்டென அவருக்குக் கோதைநாயகியின் நினைவு வர, உடனே அனைவரோடும் சேர்ந்து சென்று  கோதைநாயகியைச் சந்தித்தார். தனக்குப் பதிலாக திண்டிவனத்துக்குச் சென்று சொற்பொழிவாற்றிவிட்டுத் திரும்பும்படி கேட்டுக்கொண்டார். சத்தியமூர்த்தியின் சொற்களைக் கட்டளையாக ஏற்றுக்கொண்டு சம்மதமளித்தார் கோதைநாயகி. குறிப்பிட்ட நாளில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நேரில் வந்து அழைத்துச் சென்றனர். அதேபோல கூட்டம் முடிந்ததும் அவர்களே பொறுப்போடு அழைத்துவந்து வீட்டில் விட்டுச் சென்றனர். திண்டிவனத்தில் முதன்முதலாக ஒரு பெண்மணி மேடையேறிப் பேசியதைக் கேட்டு அனைவரும் வியப்பிலாழ்ந்தனர்.
மேடைப்பேச்சில் ஆற்றலோடு விளங்கினார் கோதைநாயகி. மிகவும் குறுகிய காலத்திலேயே தமிழகமே பாராட்டும் மிகச்சிறந்த பேச்சாளராக பெயர்பெற்றார். விழுப்புரம், கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், திருவண்ணாமலை, வேலூர், தஞ்சாவூர், திருச்சி, மதுரை என பல வெளியூர்களுக்கும் சென்று பிரச்சாரக்கூட்டங்களில் கலந்துகொண்டார்.  மேடைதோறும் பாரதியாரின் பாடல்களைப் பாடி கேட்பவர்களிடம் எழுச்சியூட்டினார்.
1925ஆம் ஆண்டிலேயே கோதைநாயகிஜெகன்மோகினிஎன்னும் இதழை வாங்கி நடக்கத் தொடங்கினார். இதழின் முகப்பிலேயே  "பயனுள்ள பொழுதுபோக்கு - சமூக சீர்திருத்தம் - மற்றும் மறுமலர்ச்சி" என்னும் வாசகத்தை இடம்பெறச் செய்தார். சிறுகதை, நாடகம், நாவல், கட்டுரை என அவர் எழுதிய ஒவ்வொரு படைப்பிலும் பெண்கள் முன்னேற்றம் சார்ந்த கருத்துகளே தூக்கலாக வெளிப்பட்டன. மது, சூது, விபச்சாரம், குதிரைப் பந்தயம்  போன்ற தீய பழக்கவழக்கங்களால் விளையும் சீர்கேடுகள்,  வேலையில்லாத் திண்டாட்டம், தேர்தல் தில்லு முல்லுகள், திரைப்படங்களின் பாதிப்புகள் என அனைத்துவிதமான சமூகச் சீரழிவுகளையும் தம் நாவல்களில் சாடினார் கோதைநாயகி. கலையம்சத்தைவிட சமூகச் சீர்திருத்தக் கருத்துகளுக்கே அவர் முன்னுரிமையளித்தார். தமிழகத்தில் மட்டுமன்றி கோலாலம்பூர், சிங்கப்பூர், பினாங்கு, இரங்கூன், ஆப்பிரிக்கா, மொரிஷியஸ் தீவு என தமிழர்கள் வசிக்கும் பகுதிகளெங்கும் ஜகன்மோகினி இதழுக்கு வாசகர்கள் பெருகினார்கள். தேசியப்பணிகளுக்கு நடுவில் கிடைத்த நேரத்திலெல்லாம் ஓய்வின்றி எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் கோதைநாயகி.
.ஒருமுறை வாணியம்பாடி வட்டாரத்தில் பேரணாம்பட்டு என்னும் ஊரில் சொற்பொழிவாற்றச் சென்றிருந்தார். கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக, கோதைநாயகியைப் பார்ப்பதற்காக ஒரு காவல்துறை அதிகாரி வந்திருந்தார்.  பேரணாம்பட்டு முகமதியர்கள் வாழும் ஊர் என்பதால் காங்கிரஸ் பிரச்சாரத்தால் பிரச்சினை ஏதேனும் எழக்கூடும். நான் சொல்வதை ஒரு முன்னெச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளுங்கள். நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு திரும்பிச் சென்றுவிடுங்கள்என்று ஆலோசனை சொன்னார். கோதைநாயகி அதற்கு உடன்பட மறுத்தார். கோதைநாயகி உறுதியான குரலில்பிரச்சாரத்தில் இந்துக்கள் வாழும் பகுதி, முகமதியர்கள் வாழும் பகுதி எனப் பிரித்து வேறுபாடு பார்ப்பது பிழையான போக்கு. எல்லோரும் இந்நாட்டு மக்கள் என்னும் கண்ணோட்டமே ஒரு தேசியவாதிக்கு இருக்கவேண்டும். காந்தியடிகளிடமிருந்து நாங்கள் அதைத்தான் கற்றுக்கொண்டோம். ஒரு பிரச்சினையும் வராதபடி நான் பார்த்துக்கொள்கிறேன்என்று அதிகாரியிடம் சொன்னார். கோதைநாயகியின் உறுதியைக் கண்டு வேறெதுவும் கூறாமல்சரி, நிகழ்ச்சிக்கு எங்களால் முடிந்த அளவுக்கு பாதுகாப்பு அளிக்கிறோம்என்று மட்டும் தெரிவித்துவிட்டு வெளியேறிவிட்டார் அதிகாரி.
அதிகாரியின் அச்சத்துக்கு மாறாக, அன்று கூட்டம் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இரண்டு மூன்று பாரதியார் பாடல்களை முதலில் பாடிவிட்டு சொற்பொழிவாற்றத் தொடங்கினார் கோதைநாயகி. இந்திய நாட்டின் பெருமைகளைப்பற்றியும் சுதந்திரத்தின் அவசியத்தைப் பற்றியும் சுதேசிப் பொருட்கள் வாங்கவேண்டிய தேவையைப்பற்றியும் அந்நியப்பொருட்களைப் புறக்கணிப்பதைப்பற்றியும் அழுத்தம் திருத்தமாக எடுத்துரைத்தார். காவல்துறை அதிகாரி அஞ்சியதுபோல எதுவும் நிகழவில்லை. மாறாக, முகமதியர்கள் அவருடைய பேச்சை ஆர்வத்துடன் கேட்டனர். விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சுதேசிப் பொருட்களை அனைவரும் விருப்பத்தோடு வாங்கிச் சென்றனர். வீதிதோறும் வண்டிகளில் கதர்த்துணி கொண்டு சென்று விற்பனை செய்யப்பட்டது. எல்லோரும் போட்டி போட்டுக்கொண்டு கதர்த்துணிகளை வாங்கினர்.
எழுத்தாளராகவும் சிறந்து விளங்கிய கோதைநாயகி காந்தியைப்பற்றி எண்ணற்ற கீர்த்தனைகளை இயற்றிவைத்திருந்தார். பாரதியார் பாடல்களோடு சேர்த்து இந்தக் கீர்த்தனைப் பாடல்களையும் பாடுவதை வழக்கமாகக் கொண்டார் அவர். ’வைஷ்ணவ ஜனதோஎன்னும் பாடல் காந்தியடிகளின் பிரார்த்தனைப் பாடல்களில்  மிகமுக்கியமானது. குஜராத்தின் ஆதிகவி என்றும் மக்கள் கவியென்றும் பாராட்டப்படும் நரசிங்க மேத்தா என்பவர் எழுதிய பாடல் இது. சங்கு சுப்பிரமணியம் என்பவர் அப்பாடலைத் தமிழில் அதே மெட்டில் மொழிபெயர்த்து வெளியிட்டார். கேட்கும்போதே மனத்தை உருக்கும் பாடல் அது. அந்தப் பாடலையும் மேடைதோறும் பாடிப் பரவலாக்கினார் கோதநாயகி.
சொல்லுவம் வைஷ்ணவன் யாரெனக் கேளீர்
சோர்ந்தவர் பீடையை அறிவானே
எல்லோர்தம் துக்கத்தை எரிப்பவனாயினும்
எள்ளளவும் கர்வம் அடையானே

மன்னுயிர் மக்களை வந்தித்து நிற்பான்
மாசுறு நிந்தனை மொழியானே
சொல்மனம் உடலதில் சுத்தம தானவன்
சோதியுற்றான் பெற்ற தாய்மாரே

பாவப் பேராசையற்று பார்வை சமத்துவமுற்று
பரஸ்திரியைத் தாயெனப் பணிவானே
நாவினால் பொய்மொழி நவிலவும் மாட்டான்
நாளும் பிறர்செல்வம் தீண்டானே

மாயையும் மோகமும் மாயும் அவன்பால்
மனத்தில் வைராக்கியம் உறுவானே
ஓயாமல் ராமனை உண்மை நினைந்திட
உண்டு புண்ணியம் உடலதிலே

காமமும் லோபமும் கபடமும் கோபமும்
கனவிலும் இல்லாத கனவானே
பாமரர் பார்த்திட பற்பல தலைமுறை
பாவனம் அடைந்திடச் செய்வானே
கோதைநாயகியின் குரல்வளத்தால் வெகுவிரைவில் இப்பாடல் மக்களின் மனத்தில் இடம்பிடித்துவிட்டது. கிட்டத்தட்ட ஒரு தமிழ்ப்பாடலைப்போலவே அது மக்களிடையே புழங்கத் தொடங்கியது.
அச்சமயத்தில் டெல்லி வைசிராய் கவுன்சிலுக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அத்தேர்தலில் காங்கிரஸ் சார்பாக சத்தியமூர்த்தி நின்றார். அவர் வெற்றிக்காக தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டார் கோதைநாயகி.
மதுப்பழக்கத்திலிருந்து மக்களை மீட்பது காந்தியடிகள் ஒரு கொள்கையாகவே வைத்திருந்தார். காந்தியர்கள் தேசமெங்கும் மதுப்பழக்கத்தின் தீமையை எடுத்துரைத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். 1931 ஆம் ஆண்டில் சென்னையில் அந்தப் பிரச்சாரம் தீவிரமடைந்தது. ஒவ்வொரு கள்ளுக்கடைக்கு முன்னாலும் ஓர் ஆண் தொண்டரும் ஒரு பெண் தொண்டரும் நின்று மறியலில் ஈடுபடவேண்டும் என்பதுதான் திட்டம். கள்ளுக்கடை மறியலென்பது கள்ளருந்த வருகிறவர்களை பணிவுடன் தடுத்து நிறுத்தி, கள்ளினால் வரும் கேடுகளையும் மதுவின் போதையில் மனிதர்கள் மிருகமாக மாறி குடும்பத்தினரை தவிக்கவைப்பதையும் பட்டினி போடுவதையும் நல்ல விதத்தில் எடுத்துரைத்து அவர்களை கள்ளருந்தச் செல்லாமல் தடுப்பதாகும். அதையும் மீறிச் செல்ல முனைபவர்களின் கால்களில் விழுந்தாவது தடுத்தல் அவசியம்.
காங்கிரஸ் தொண்டர் ஒருவரும் கோதைநாயகியும் ஒருநாள் ஒரு கள்ளுக்கடையின் முன்னால் மறியல் செய்யச் சென்றிருந்தனர். அந்தக் கடைக்காரர் ஓர் அடாவடிக்காரர். சண்டைகளுக்கு அஞ்சாதவர். ஏற்கனவே ஒரு குற்றத்துக்காகச் சிறைக்குச் சென்று தூக்குமேடை வரைக்கும் போய் ஏதோ நல்வாய்ப்பால் பிழைத்து வந்தவர். தன் வியாபாரம் பாதிப்பதை அவரால் பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்கமுடியவில்லை. ஆத்திரத்தில் கடைக்குள் சென்று துப்பாக்கியை எடுத்துவந்து காட்டி கொன்றுவிடுவதாக அச்சுறுத்தினார். அருகில் நின்றிருந்த பலரும் அதைப் பார்த்து அஞ்சினர். இனிய மொழியும் பரிவும் கொண்ட கோதநாயகி அப்போதும் அவரைப் பார்த்து கள் விற்பனை செய்யவேண்டாம் என்று மன்றாடிக் கேட்டுக்கொண்டார். நல்ல வேளையாக, அந்த நேரத்தில் காவல்துறையைச் சேர்ந்த ஓர் அதிகாரி வந்து கள்ளுக்கடைக்காரரைத் தடுத்து நிறுத்தி காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றுவிட்டனர். கோதைநாயகியின் மீது நிகழவிருந்த தாக்குதல் சரியான நேரத்தில் தடுக்கப்பட்டது.
1932ஆம் ஆண்டில் ஆங்கில அரசு நியமித்த லோதியன் கமிஷன் இந்தியாவுக்கு வந்தது. நாடெங்கும் தொண்டர்கள் ஊர்வலம் சென்று தம் எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். சென்னையில் நிகழ்ந்த ஊர்வலத்தில் கோதைநாயகி கலந்துகொண்டார். சைனா பஜாரில் உள்ள காதி வஸ்திராயலயத்திலிருந்து வந்தே மாதரம் முழக்கத்தோடு ஊர்வலம் புறப்பட்டது. பாரதியார் பாடல்களை உணர்ச்சி பொங்கப் பாடியபடி நடந்து சென்றார் கோதைநாயகி. பாதி வழியில் காவலர்கள் ஊர்வலத்தைத் தடுத்து நிறுத்தி அனைவரையும் கைது செய்தனர். மறுநாளே விசாரணை முடிந்து கோதைநாயகிக்கு ஆறுமாதம் சிறைத்தண்டனையும் ஐந்நூறு ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. கோதைநாயகி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
வேலூர்ச் சிறையிலிருந்த கைதிகள் பலரும் பலவித குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் நிலைகண்டு இரங்கி, அவர்களோடு அன்புடன் பழகி, அவர்களின் வாழ்க்கையைப்பற்றியும் அவர்கள் குற்றம் செய்ததற்கான சூழல்களையும் விரிவாகக் கேட்டறிந்துகொண்டார். அவருக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் சிறையிலேயேசோதனையின் கொடுமைஎன்னும் நாவலை எழுதிமுடித்தார். அதைத் தொடர்ந்துஉத்தமசீலன்என மற்றொரு நாவலையும் எழுதினார். சாதிக்கொடுமையை வெளிப்படுத்தும் விதமாக மகிழ்ச்சி உதயம்என்னும் நாவலை எழுதிமுடித்தார்.
சிறையிலிருந்து விடுதலையானதும் காந்தியக்கொள்கைகளான கதர் வளர்ச்சி, மதுவிலக்கு, தீண்டாமை ஒழிப்பு, சமூக ஒற்றுமை, சுதேசிப் பிரச்சாரம் ஆகியவற்றை முக்கியத்துவப்படுத்தி தியாகக்கொடி, நளினசேகரன் என்னும் நாவல்களை எழுதி வெளியிட்டார். அதைக் கண்டு வெகுண்ட ஆங்கில அரசு கோதைநாயகியை அழைத்து எச்சரிக்கை செய்தது. அந்த நாவல்களை ஏன் தடைசெய்யக்கூடாது என்று அச்சுறுத்தியது. நல்வாய்ப்பாக, அந்த நாவல்களில் ஆங்கில ஆட்சியைப்பற்றிய நிந்தனைகள் எதுவும் காணப்படாமையால்,  எச்சரிக்கையோடு அவரை வீட்டுக்கு அனுப்பிவைத்துவிட்டது.
1934 ஆம் ஆண்டில் திருநெல்வேலி நகராட்சி தேர்தல் நடைபெற்றது. வழக்கம்போல அப்போது காங்கிரஸ் பிரச்சாரத்துக்காகச் சென்றிருந்தார் கோதைநாயகி. காங்கிரஸ் கட்சிக்குப் பெருகும் ஆதரவைக் கண்டு எதிர்க்கட்சியினர் திகைத்து நின்றனர். கோதைநாயகியின் பிரச்சாரத்தைத் தடுக்கும் வகையில் ஒரு சூழ்ச்சியில் இறங்கினர். திருநெல்வேலியில் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் கோதைநாயகியும் திருக்குறுங்குடி என்னும் ஊருக்கு காரில் சென்றுகொண்டிருந்தார்கள். நேரம் இரவு பத்துமணியைக் கடந்துவிட்டது. காட்டுப்பகுதிக்குள் சென்றுகொண்டிருந்த கார் திடீரென நின்றுவிட்டது. “இனி கார் போகாது. கார் பழுதடைந்துவிட்டது  என்று சொல்லிவிட்டு காரை ஓட்டிவந்த காரோட்டி அங்கிருந்து வேகமாக ஓடிச் சென்று இருளில் மறைந்துவிட்டார். என்ன செய்வதெனப் புரியாமல் இருளில் அனைவரும் திகைப்போடும் அச்சத்தோடும் கலங்கி நின்றிருந்தனர். தற்செயலாக அவ்வழியே வந்த ஒரு காரை நிறுத்தி நடந்ததையெல்லாம் சுருக்கமாக எடுத்துரைத்தனர். கார்க்காரர் அவர்களை ஏற்றிச் சென்று திருக்குறுங்குடியில் இறக்கிவிட்டார். அவரும் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு சென்னைக்குத் திரும்பிவிட்டார்.
ஒன்றிரண்டு மாதங்களுக்குப் பிறகு சென்னையில் கோதைநாயகியைச் சந்திப்பதற்காக, பாதிவழியில் காரை நிறுத்திவிட்டு ஓடிய காரோட்டி வந்தார். தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு அந்த நள்ளிரவில் தான் செய்த செயலுக்கு தன்னை மன்னிக்கும்படி கேட்டுக்கொண்டார். அன்று எதிர்க்கட்சியினர் வகுத்தளித்த சூழ்ச்சித் திட்டத்துக்கு பல நெருக்கடிகளின் காரணமாக அந்தச் சதித்திட்டத்துக்கு உடன்பட வேண்டியிருந்ததென்று குற்ற உணர்வோடு சொன்னார். ”மலைப்பாதையில் வண்டி செல்லும்போது ஒரு பள்ளத்தை நோக்கி வண்டியைத் திருப்பிவிட்டு நீ மட்டும் வண்டியிலிருந்து குதித்து தப்பிவிடு. அவர்களையும் இழுத்துக்கொண்டுபோய் வண்டி விழுந்து நொறுங்கட்டும்என்று திட்டம் தீட்டிக் கொடுத்ததாகத் தெரிவித்தார். அந்த உதவிக்குப் பணம் கொடுப்பதாக ஆசை காட்டியதாகவும் சொன்னார்.
அன்றைய கூட்டத்தில் உங்கள் பாடலையும் சொற்பொழிவையும் கேட்டேன். அது என் மனத்தை மாற்றிவிட்டது. உங்களைக் கொல்ல எனக்கு மனம் வரவில்லை. உங்களைப் போன்றவர்கள் இந்த நாட்டில் நீடூழி வாழ்ந்து தேசமுன்னேற்றத்துக்குப் பாடுபடவேண்டும் என்று நினைத்தேன். அதனால்தான் வண்டியைப் பள்ளத்தில் விடாமல் ஓரமாக நிறுத்திவிட்டு ஓடிவிட்டேன். ஆனாலும் இருளில் ஒளிந்துநின்று நீங்கள் வழியில் வந்த வாகனத்தில் ஏறிச் செல்வதைப் பார்த்த பிறகுதான் நிம்மதியோடு அங்கிருந்து அகன்றேன்என்று வணங்கிய கைகளோடு சொன்னார். மேலும்நான் அவர்களைச் சந்தித்து நடுவழியில் கார் கெட்டுவிட்டதால் பள்ளத்தில் இறக்கமுடியவில்லை என்று பொய்சொன்னேன். ஆனால் அவர்கள் என் சொற்களை நம்பவில்லை. அந்த ஊரிலேயே இருந்தால் என்னைக் கொன்றுவிடுவார்களோ என்று அச்சமாக இருந்தது. அதனால் ஊரிலிருந்து ஓடிவந்துவிட்டேன். உங்கள் பெயரைச் சொல்லிச்சொல்லி வழிகேட்டுக்கொண்டே இங்கு வந்தேன். நீங்கள்தான் எனக்கு வாழ ஒரு வழியை ஏற்படுத்திக்கொடுக்கவேண்டும்என்று கண்ணீர் விட்டு அழுதார். அவர் சொற்களைக் கேட்டு மனம் இரங்கிய கோதைநாயகி தனக்குத் தெரிந்த இடத்தில் அவருக்கு காரோட்டி வேலையை வாங்கிக்கொடுத்தார்.
30.01.1948 அன்று காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் நினைவாக 02.03.1948 அன்று காந்தியடிகளின் நினைவாகமகாத்மாஜி சேவா சங்கம்என்னும் பெயரில் ஓர் அமைப்பைத் தொடங்கினார் கோதைநாயகி. அதன்மூலம் ஏழை நோயாளிகளுக்குத் தேவையான மருத்துவ உதவிகளைச் செய்தார். எண்ணற்ற ஏழைப் பெண்களின் திருமணத்தை முன்னின்று நடத்தினார். ஏழ்மையில் வாடும் சிறுவர்சிறுமியர்களுக்கு படிக்கத் தேவையான நோட்டு புத்தகங்களை வாங்கிக் கொடுத்து படிக்க உதவினார்.
சுதந்திரமடைந்த பிறகு, கோதைநாயகின் சேவைகளையும் தியாகத்தையும் பாராட்டிக் கெளரவிக்கும் விதமாக, அரசு கோதைநாயகிக்கு பத்து ஏக்கர் நிலத்தை வழங்கியது. ஆனால் அதைத் தனக்கென வைத்துக்கொள்ள விரும்பாத கோதைநாயகி பூமிதான இயக்கப் பிரச்சாரத்துக்காக வினோபா பாவே தமிழகத்துக்கு வந்தபோது  அவரிடம் ஒப்படைத்தார்.

( அம்ருதா- டிசம்பர் 2019 இதழில் வெளிவந்த கட்டுரை)