1921ஆம் ஆண்டில் காந்தியடிகள் மதுரைக்கு வந்திருந்தார். அப்போது டி.வி.சுந்தரம் ஐயங்காரின் மனைவி இலட்சுமி அம்மையாரின் தலைமையில் இயங்கி வந்த ’இந்து மாதர் சபை’ இராட்டையில் நூல்நூற்கும் பணிகளிலும் கதர் பணிகளிலும் ஈடுபட்டு வந்தது. ஒருநாள் அந்த அமைப்பில் நடைபெற்ற பிரார்த்தனைக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக காந்தியடிகள் வந்திருந்தார். நிகழ்ச்சியின் இறுதியில் இலட்சுமி அம்மையாரின் பணிகளைப் பாராட்டிய காந்தியடிகள் “தேச சேவைக்காக உங்கள் குடும்பத்தின் சார்பில் என்ன செய்யப்போகிறீர்கள்?” என்று கேட்டார்.
மறுகணமே இலட்சுமி அம்மையார் “எனக்கு எட்டுக் குழந்தைகள். அவர்களில் என் மகளை தேசப்பணிக்காக வழங்குகிறேன்” என்று தயக்கமின்றி பதில் சொன்னார். அதைக் கேட்டு புன்னகையுடன் அவருக்கும் அவருடைய மகளுக்கும் ஆசிகளை வழங்கிவிட்டு புறப்பட்டுச் சென்றார் காந்தியடிகள். காந்தியடிகளின் ஆசிகளைப் பெற்ற அந்த இளம்பெண்ணின் பெயர் செளந்திரம். பிற்காலத்தில் அம்மா என அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டவர்.
கொடுத்த வாக்குறுதிக்கிணங்க தன் மகளை சமூகப்பணிகளில் ஈடுபடச்செய்து ஊக்கப்படுத்தினார் இலட்சுமி அம்மையார். கள்ளுக்கடை மறியல், அயல்நாட்டுத் துணிமணிகள் எதிர்ப்பு போன்ற போராட்டங்களில் செளந்திரம் நேரிடையாகவே பங்கெடுத்துக்கொண்டார். செளந்திரம் பல இளம்தொண்டர்களோடு ஊர்வலமாக வீடுவீடாகச் சென்று பலரையும் சந்தித்து அயல்நாட்டுத் துணிகளைப் பெற்றுக்கொண்டு கதராடைகளை வழங்கினார். பிறகு திரட்டிய எல்லா ஆடைகளையும் பொதுமக்களின் பார்வை படும் இடங்களில் குவிக்கப்பட்டு தீயிடப்பட்டது. மேலும் அவர்கள்
முக்கியமான துணிக்கடைகளின் முன்னால் நின்று அயல்நாட்டுத் துணிகளை விற்பனை செய்யவேண்டாமென கடைக்காரர்களிடமும் வாங்கவேண்டாமென வாடிக்கையாளர்களிடமும் சொல்லித் தடுத்தனர். இதனால் பல கடைகள் மூடப்பட்டன.
தினந்தோறும் பெண்கள் இப்படி ஊர்வலமாக வந்துபோவதால் போக்குவரத்துப் பிரச்சினையும் சட்ட ஒழுங்குப் பிரச்சினையும்
ஏற்படுவதாக கடைக்காரர்கள் காவல்துறையில் புகாரளித்தனர். ஒருநாள் காவல்துறையினர் ஊர்வலத்தை நிறுத்தி கலைந்துபோகும்படி ஆணையிட்டனர். அதற்குக் கட்டுப்பட மறுத்து தொடர்ந்து அஞ்சாமல் தேசியப்பாடல்களையும் பாரதியார் பாடல்களையும் பாடிக்கொண்டு ஊர்வலமாகச் சென்றவர்களை காவல்துறையினர் கட்டாயப்படுத்தி நிறுத்தினர்.
முதல் வரிசையில் நின்றிருந்தவர்களை விட்டுவிட்டு ஏராளமான பெண்தொண்டர்களைக் கைது செய்து வாகனங்களில் ஏற்றிச் சென்றார்கள். ஊருக்கு வெளியே வெகுதொலைவில் ஆளரவமற்ற ஒதுக்குப்புறமான இடத்தில் அவர்களின் ஆடைகளைக் களைந்து துரத்தியடித்து கொடுமைப்படுத்தினார்கள். அருகிலிருந்த சிற்றூரைச் சேர்ந்த பெண்கள் ஓடோடி வந்து அவர்களுக்கு உதவிசெய்து காப்பாற்றினார்கள்.
சமூகத்தொண்டையே உயிர்மூச்சாகக் கொண்டிருந்த செளந்திரத்தின் தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியான தொடக்கத்துடன் அமையவில்லை. இளமைப்பருவத்தில் தொடக்கத்திலேயே அவருக்குத் துயரம் காத்திருந்தது. 1918ஆம் ஆண்டில் 12 வயதிலிருந்த அவருக்கும் ஐயங்காரின்
சகோதரி மகனான பதினைந்து வயது நிரம்பிய செளந்தரராஜனுக்கும் மதுரையில் திருமணம் நடைபெற்றது. இண்டர்மீடியட் படித்துமுடித்துவிட்டு ஆசிரியராகப் பணியாற்றிவந்த மணமகனுக்கு சென்னை மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்தது. புதுமணத் தம்பதிகள் இருவரும் சென்னைக்குச் சென்றார்கள். செளந்தரராஜன் கல்வியில் சிறந்து விளங்கினார்.
1922 ஆம் ஆண்டில் அவர்களுக்கு ஓர் ஆண்குழந்தை பிறந்தது. சிறுவயதிலேயே தாய்மையடைந்ததால் குழந்தைக்கு உடல்வளர்ச்சியில் சில சிக்கல்கள் இருந்தன. எட்டு மாதங்களிலேயே அனைவரையும் துக்கத்தில் ஆழ்த்திவிட்டு அக்குழந்தை இந்த உலகைவிட்டு மறைந்தது.
செளந்திரத்தை மதுரையில் அவருடைய பெற்றோரின் வீட்டிற்கு அழைத்துவந்து விட்டுவிட்டு சென்னைக்குத் திரும்பி படிப்பில் மூழ்கினார் செளந்தரராஜன். 1923 ஆம் ஆண்டில் கல்லூரியிலேயே சிறந்த மாணவராகத் தேர்ச்சி பெற்றார். அதைத் தொடர்ந்து மதுரை அரசு மருத்துவ மனையில் உதவி மருத்துவராக பணியிலமர்ந்தார். அடிப்படையிலேயே சேவை மனப்பான்மை கொண்டிருந்த இளைஞர் தன் அயராக உழைப்பினால் அனைவருடைய நன்மதிப்புக்கும் உரியவராக விளங்கினார். 1925
ஆம் ஆண்டில் நகரெங்கும் பரவிய பிளேக் நோயினால் பாதிப்படைந்தவர்களுக்கு மருத்துவம் செய்து பிழைக்கவைத்தார். ஓர் அறுவைசிகிச்சையின்போது அவர் அணிந்திருந்த கையுறையில் கண்ணுக்குத் தெரியாத சின்னஞ்சிறு பொத்தலின் வழியாக நுழைந்துவிட்ட பிளேக் நோய்க்கிருமி அவரைத் தாக்கியது. நோயாளி பிழைத்துவிட, மருத்துவம் பார்த்த மருத்துவர் இறந்துவிட்டார். தன் உயிர் பிரிவதற்கு முன்பாக மனைவியை அருகில் அழைத்து எதிர்காலத்தில் வீட்டுக்குள் அடைந்துகிடந்து வாழ்க்கையை வீணடித்துவிடக் கூடாதென்றும் தொடர்ந்து படித்து மருத்துவராகி சமூகசேவை செய்ய வேண்டும் என்றும் மறுமணம் செய்துகொள்ளவேண்டுமென்றும் சொல்லிவிட்டு கண்களை மூடினார்.
ஒருமுறை சுதந்திரப் போராட்ட வீர்ரான சுப்பிரமணிய சிவா செளந்திரத்தின் தந்தையைச் சந்திப்பதற்காக வீட்டுக்கு வந்தார். இளம்விதவையாக வீட்டிலேயே அடைபட்டுக் கிடந்த செளந்திரத்தைக் கண்டதும் பள்ளிக்கு அனுப்பி கல்வியைத் தொடரச் செய்யும்படி கேட்டுக்கொண்டார். அது அவருடைய வாழ்க்கையிலேயே பெரிய திருப்புமுனை.
1930 ஆம் ஆண்டில் இண்டர்மீடியட் முடித்து தில்லியில் உள்ள லேடி ஹார்டிஞ்ச் மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் படிக்கத் தொடங்கினார். அப்போது அவருடைய கல்லூரித்தோழியாக விளங்கியவர் சுசிலா நய்யார். கல்லூரி வளாகத்திலும் அவருடைய சேவை தொடர்ந்தது. இருவரும் இணைந்து கல்லூரிகளிலும் விடுதிகளிலும் பணிபுரிந்துவந்த கடைநிலை ஊழியர்களுக்கும் அவர்களுடைய பிள்ளைகளுக்கும் மாலை வகுப்புகள் நடத்தி கல்வியறிவை ஊட்டினர். காந்தியடிகள் தில்லிக்கு வரும்போதெல்லாம் அவரைச் சந்திக்கச் செல்லும் சுசிலா நய்யாருடன் சேர்ந்து செளந்திரமும் சென்று உரையாடி மகிழ்ந்தார். இளமையில் தனக்கு ஆசி வழங்கிய காந்தியடிகளின் வழியில் தன் வாழ்க்கையை அமைத்துக்கொள்வதில் அவர் மிகவும் நாட்டம் கொண்டிருந்தார்.
காந்தியடிகளின் நிர்மாணப்பணிகளால் ஈர்க்கப்பட்ட பல இளைஞர்கள் இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து வந்து சேவாகிராமத்தில் தங்கி காந்தியடிகளிடம் பயிற்சி பெற்றனர். அவர்களில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த இளைஞரான இராமச்சந்திரனும் ஒருவர். சாந்திநிகேதனில் உயர்கல்வி கற்றவர். அப்போது அரிசன சேவா சங்கத்தின் மாநாடு ஒன்று தில்லியில் நடந்தது. அதில் கலந்துகொள்ள காந்தியடிகளும் மற்ற தலைவர்களும் தில்லிக்கு வந்தார்கள். இராமச்சந்திரனும் வந்திருந்தார். வழக்கம்போல காந்தியடிகளைச் சந்திப்பதற்காக சுசிலா நய்யாருடன் செளந்திரமும் வந்தார். சுசிலா நய்யார் தனக்குத் தெரிந்த அனைவரிடமும் செளந்திரத்தை அறிமுகப்படுத்திவைத்தார். அப்போதுதான் இராமச்சந்திரனும் செளந்திரமும் முதன்முறையாக சந்தித்துக்கொண்டார்கள். இருவருடைய எண்ண அலைவரிசையும் ஒன்றுபோலவே இருப்பதை பேசிப்பேசி புரிந்துகொண்டார்கள். அடுத்தடுத்து பல காங்கிரஸ் கூட்டங்களிலும் சொற்பொழிவு மன்றங்களிலும் இருவரும் சந்தித்துக்கொண்டார்கள்.
1936ஆம் ஆண்டில் மருத்துவக்கல்லூரியில் முதல் மாணவியாகத் தேர்ச்சிபெற்றார் செளந்திரம். சென்னையில் தன் சகோதரரின் உதவியோடு ஒரு மருத்துவமனையை நிறுவி பணியாற்றத் தொடங்கினார். இதே தருணத்தில் தமிழ்நாடு அரிசன சேவா சங்கத்தின் செயலாளராக நியமிக்கப்பட்ட இராமச்சந்திரனும் சென்னைக்கு வந்து சேர்ந்தார். இருவரும் சென்னையிலேயே இருந்ததால் அடிக்கடி சந்தித்து உரையாடி மகிழ்ந்தார்கள். இராமச்சந்திரன் ஏராளமான புத்தகங்களை செளந்திரத்துக்காகக் கொண்டுவந்து கொடுத்து படிக்கும்படி செய்தார்.
1938 ஆம் ஆண்டில் மதுரை அரசு மருத்துவமனையில் கெளரவ உதவி மருத்துவராகப் பணியாற்றக் கிட்டிய அழைப்பை ஏற்று செளந்திரம் மதுரைக்குச் சென்றார். மதுரைநகரின் முதல் பெண்மருத்துவராக அவர் அங்கே பணியாற்றினார். இராமச்சந்திரனும் செளந்திரமும் திருமணம் செய்துகொள்ள விரும்பினர். ஆயினும் செளந்திரத்தின் பெற்றோர் மகளுடைய மறுமணத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. அந்தச் செய்தியை அறிந்துகொண்ட இராஜாஜியும் தக்கர்பாபாவும் இருவருக்கும் திருமணத்தை நடத்திவைக்கும்படி கேட்டுக்கொண்டனர். ஆனால் செளந்திரத்தின் பெற்றோர் தம் முடிவில் உறுதியாக இருந்தனர்.
செளந்திரமும் இராமச்சந்திரனும் சேவாகிராமத்துக்குச் சென்று காந்தியடிகளைச் சந்தித்து தம் விருப்பத்தைத் தெரிவித்தார்கள். அவர்களிடம் விரிவாகப் பேசிய காந்தியடிகள் இறுதியில் அவர்களுடைய திருமணத்தை ஆதரித்தார். இராமச்சந்திரனும் செளந்திரமும் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக தன்னிடம் சொன்னதாகவும் இவர்களுடைய திருமணத்தை உடனடியாக நடத்திவைக்க வேண்டுமென்றும் குறிப்பிட்டு சுந்தரம் ஐயங்காருக்கு நீண்டதொரு கடிதம் எழுதினார். ஒருவேளை குறிப்பிட்ட காலத்துக்குள் அவர் அத்திருமணத்தை நடத்திவைக்கவில்லையெனில் தானே முன்னின்று நடத்தப்போவதாகவும் குறிப்பிட்டிருந்தார். அக்கடிதத்தைக்
கண்டபிறகுகூட செளந்திரத்தின் தந்தையார் மனம் மாறவில்லை. தன் முடிவில் பிடிவாதமாகவே இருந்தார்.
வேறு வழியின்றி இருவரும் சேவாகிராமத்தை அடைந்தார்கள். குறிப்பிட்ட காலம் கடந்தபிறகு, 02.11.1940 அன்று காந்தியடிகளே தலைமை தாங்கி இருவருக்கும் எளிய முறையில் திருமணத்தை நடத்திவைத்தார். காந்தியடிகள் தான் நூற்ற நூலிலிருந்து நெய்யப்பட்ட வேட்டியை மணமகனுக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார். தான் நூற்ற நூலிலிருந்து நெய்யப்பட்ட புடவையை மணமகளுக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார் கஸ்தூர்பா. அவையே மணமக்களின் முகூர்த்த ஆடைகள். பிறகு காந்தியடிகள் இராட்டையில் தானே நெய்த நூலிலிருந்து தயாரிக்கப்பட்ட மாங்கல்ய நாணில் மஞ்சள் தடவிக் கொடுக்க, அதை வாங்கி மணமகளுக்கு அணிவித்தார் இராமச்சந்திரன். காந்தியடிகள், கஸ்தூர்பா இருவருடைய ஆசிகளோடு திருமணம் இனிதே நடந்துமுடிந்தது. சேவாகிராம ஊழியர்கள் அனைவரையும் அத்தருணத்தை மகிழ்ச்சியோடு கொண்டாடும்படியும் அன்று நண்பகல் உணவோடு அனைவருக்கும் பாயசம் வழங்கப்படும் என்றும் அறிவித்தார் காந்தியடிகள்.
திருமணம் முடிந்ததும் ஓரிரு நாட்களில் இருவரும் சென்னைக்குத் திரும்பினார்கள். சென்னையில் சமூகப்பணியாற்றி வந்த டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியோடு இணைந்து கிராம மருத்துவச் சேவையில் ஈடுபட்டார் செளந்திரம். இராமச்சந்திரன் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கிலத் தினசரியில் ஆசிரியராக வேலையில் இணைந்தார். இருவருடைய இல்வாழ்க்கையும் இனிதே தொடங்கியது. சிறிது காலம் சென்னையில் இருந்துவிட்டு பிறகு திருவனந்தபுரம் சென்றனர். தைக்காடு என்னும் இடத்தில் சாந்தி கிளினிக் என்னும் பெயரில் ஒரு மருத்துவமனையைத் தொடங்கி ஏழை எளியவர்களுக்கு மருத்துவச் சேவை செய்யத் தொடங்கினார்
செளந்திரம். மேலும் அப்பகுதி மக்களுக்கு இராட்டையில் நூல் நூற்கக் கற்றுக்கொடுத்து தேசப்பற்றை ஊட்டினார். 1942 ஆம் ஆண்டில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை காந்தியடிகள் தொடங்கியபோது, திருவனந்தபுரத்தில் இராமச்சந்திரன் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தியதற்காக திருவிதாங்கூர் அரசு அவரைக் கைது
செய்து சிறையிலடைத்தது. கணவர் செய்யப்பட்டதால் போராட்டத்தில் தொய்வு விழுந்துவிடக்கூடாதென நினைத்த செளந்திரம் வீடுவீடாகச் சென்று தொண்டர்களைச் சந்தித்து ஊக்கமளித்து தொடர்ச்சியாக போராட்டங்கள் நிகழும்படி செயலாற்றினார். இதையறிந்த அரசு அவரைக் கைது செய்து இனி சமஸ்தானத்தின் எல்லைக்குள் நுழையக்கூடாதென்ற எச்சரிக்கையோடு எல்லைக்கு மறுபகுதியில் உள்ள செங்கோட்டையில் விடுவித்தது.
சென்னைக்குத் திரும்பிய செளந்திரம் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்து மகப்பேறு மருத்துவத்தில் பட்டயப்படிப்பைப் படித்து முடித்தார். முத்துலட்சுமி ரெட்டியுடன் சேர்ந்து ஒளவை கிராம மருத்துவச் சேவை மையத்தைத் தொடங்கி அக்கம்பக்கத்தில் உள்ள கிராமங்களுக்குச் சென்று சேவை செய்தார். இரவில் அரிக்கேன் விளக்கை ஏந்தியபடி சென்று வைத்தியம் பார்த்துவிட்டுத் திரும்பிவருவார். கிராமத்துப் பெண்களுக்கு இராட்டையை அறிமுகப்படுத்தி நூல்நூற்கக் கற்றுக்கொடுத்து வருமானத்துக்கொரு வழியையும் உருவாக்கிக்கொடுத்தார். சிறியவர்களுக்கும் முதியோர்களுக்கும் கல்வி புகட்டும் வகையில் இரவுப்பள்ளிகளைத் தொடங்கி நடத்தினார்.
ஆகாகான் மாளிகை வளாகத்தில் சிறைவைக்கப்பட்டிருந்த மகாதேவ தேசாயும் கஸ்தூர்பாவும் எதிர்பாராத விதமாக மறைந்துபோனார்கள். அப்போது காந்தியடிகளுக்கு 75 வயது. அதையொட்டி 75 லட்சரூபாயை நிதியாகத் திரட்டி அவரிடம் அளிப்பதென தேசத்தலைவர்கள் முடிவு செய்தனர். ஆனால் இம்முடிவு காந்தியடிகளுக்குத் தெரியாது. கஸ்தூர்பாவின் மறைவையொட்டி முதன்முறையாக காந்தியைச் சந்திப்பதற்காக தலைவர்கள் அனுமதிக்கப்பட்டனர். அத்தருணத்தில்தான் காந்தியடிகளிடம் தேசியநிதி பற்றிய விவரம் தெரிவிக்கப்பட்டது. அதைக் கேட்டதும் காந்தியடிகள் ஓர் ஆலோசனை கூறினார். திரட்டப்படும் தொகையைக் கொண்டு அன்னை கஸ்தூர்பா நினைவாக ஓர் அமைப்பை நிறுவலாம் என்றும் அதன் மூலமாக கிராமப்பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் கல்வி, மருத்துவம், தொழில் போன்ற துறைகளில் சேவை செய்யலாமென்றும் கூறினார். அதை உடனடியாக தலைவர்கள் ஏற்றுக்கொண்டனர். 75 லட்ச ரூபாயை இலக்காகக் கொண்டிருந்தாலும் இறுதியில் 125 லட்ச ரூபாய் திரட்டப்பட்டது.
1944 ஆம்
ஆண்டு காந்தியடிகளின் பிறந்தநாளில் அத்தொகை அவரிடம் அளிக்கப்பட்டது. அன்றே கஸ்தூர்பா காந்தி தேசிய நினைவு நிதி அமைப்பு உருவானது. அமைப்பின் பணிகளையும் விதிகளையும் காந்தியடிகலே வரையறுத்தார்.
பெண்கள் தொடர்பான வேலைகளை பெண்களே செய்யவேண்டும் என்பது காந்தியடிகளின் விருப்பம். அதனால் நிதிநிர்வாகப் பொறுப்பை சமூகசேவையில் நாட்டமுள்ள பெண்களிடமே அளிக்கவேண்டுமென அவர் நினைத்தார். நாடெங்கும் உள்ள இளம் விதவைகளும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களும் முதல்நிலைப்பயனாளிகளாக இருக்கவேண்டுமென அவர் நினைத்தார். அந்த அமைப்பு முதலாவது ஆண்டில் கிராமக்கிளைகளின் முழுச்செலவையும் இரண்டாவது ஆண்டில் முக்கால் பங்கு செலவையும் மூன்றாவது ஆண்டில் பாதிச் செலவையும் நான்காவது ஆண்டில் கால்பங்கு செலவையும் ஏற்றுக்கொள்ளும். இந்த நான்காண்டு இடைவெளியில் எல்லா அமைப்புகளும் தம் காலில் தாமே நிற்கும் அளவுக்கு வலிமைகொண்டதாக ஆகவேண்டும். அதையே வளர்ச்சியின் அளவுகோலாக காந்தியடிகள் கருதினார். இந்தப் பொறுப்பை ஒவ்வொரு மாகாணத்திலும் தகுதிமிக்க ஒருவரிடம் ஒப்படைக்க, நாடெங்கும் உள்ள தலைவர்களிடம் பரிந்துரைகளைக் கேட்டார். சென்னை மாகாணத்தின் பொறுப்பு செளந்திரத்தைத் தேடி வந்தது. மற்ற மாகாணங்களில் சுசேதா கிருப்ளானி, யசோதரம்மா தாசப்பா,, துர்க்காபாய், சுசிலாபாய், அமல் பிரபதாஸ், ரமாதேவி செளத்ரி போன்ற திறமைமிக்க சேவகிகள் நியமிக்கப்பட்டார்கள்.
காந்தியடிகளின் ஆசியுடன் மாகாணப்\ பிரதிநிதியாகப் பொறுப்பேற்றவுடன் செளந்திரம் மாகாணமெங்கும் சுற்றுப்பயணம் செய்து இளம்விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஏழை அரிசனப்பெண்கள், நாட்டு விடுதலைக்காக தியாகம் செய்த தியாகிகளின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள், திக்கற்ற பெண்கள் என முப்பது பேர்களைத் தேர்ந்தெடுத்தார். பயிற்சி நிலையம் செயல்படுவதற்கு வசதியாக உடனடியாக திருவான்மியூரைச் சேர்ந்த ஒரு கிராம முன்சீப் தனது வீட்டையே வழங்கினார். சொந்தக் கட்டடம் உருவாகும் முன்பே பயிற்சி நிலையம் செயல்பட்த் தொடங்கியது.
பயிற்சி நிலையத்தில் இருவகையான பாடத்திட்டங்களை செளந்திரம் வகுத்தார். ஒன்று கிராம சேவிகா பயிற்சி. மற்றொன்று ஆரோக்கிய சேவிகா பயிற்சி. காலைமுதல் மதியம் வரை வகுப்புகள். கிராம முன்னேற்றம், கிராமியக்கல்வி, தொழிற்கல்வி, மருத்துவம், வரலாறு, பொருளாதாரம், பண்பாடு, சுகாதாரம் போன்ற பாடங்கள் நடைபெற்றன. மாலை வேளைகளில் கிராமங்களில் உள்ள தெருக்களைக் கூட்டிச் சுத்தம் செய்வது, கழிவுகளை அப்புறப்படுத்துவது, வீடுவீடாகச் சென்று குழந்தைகளைக் குளிக்கவைப்பது, புண்களுக்கும் காயங்களுக்கும் மருந்து போடுவது போன்ற வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டார்கள். பயிற்சி நிலையத்துக்குச் சொந்தமான இடத்தில் காய்கறித் தோட்டமும் கீரைத் தோட்டமும் பருத்தித்தோட்டமும் ஏற்படுத்தப்பட்டு, அவற்றையும் பெண்களே பராமரித்துவந்தார்கள்.
ஒருபுறம் கிராம சேவைப் பயிற்சியை வழங்கியபடியே செளந்திரம் சென்னையைச் சுற்றியிருந்த பாலவாக்கம், கோவளம், தாம்பரம், ஆலந்தூர், ஆதம்பாக்கம், அரும்பாக்கம் போன்ற கிராமங்களில் மருத்துவச் சேவை மையங்களை ஏற்படுத்தி சேவை செய்துவந்தார். பயிற்சியாளர்களுக்கு செவிலியர் பயிற்சியும் வழங்கப்பட்டது. ஓராண்டுப் பயிற்சியின் முடிவில் காந்தியடிகள் 1946 ஆம் ஆண்டில் இந்தி பிரச்சார சபா பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக சென்னைக்கு வந்திருந்தார். அப்போது செளந்திரம் தம் நிலையத்தில் பயிற்சி பெற்ற எல்லாப் பெண்களையும் காந்தியடிகளுக்கு அறிமுகப்படுத்திவைத்தார். அப்போது பயிற்சி நிறைவுச் சான்றிதழ்களை காந்தியடிகளே கையெழுத்திட்டு வழங்கினார். பயிற்சி நிலையத்தின் செயல்பாடுகளைக் கேட்டறிந்த காந்தியடிகள் மிகவும் மகிழ்ச்சியுற்றார். கஸ்தூர்பா நிதியின் கீழ் முதன்முதலாக பயிற்சியாளர்களைத் தேர்ந்தெடுத்து பயிற்சியையும் வெற்றிகரமாக நிறைவு செய்தவர் என்கிற வகையில் செளந்திரத்தைப் பாராட்டி அன்னை கஸ்தூர்பா காந்தியின் திருவுருவப்படத்தை அன்பளிப்பாக அளித்தார். மேலும் சென்னையைக் கடந்து கிராமப்புறங்களுக்குச் சென்று நிதிப்பணிகளைச் செய்யுமாறு ஆலோசனையும் வழங்கினார்.
காந்தியடிகளின் சொற்களை இறைவனின் ஆணையாக எடுத்துக்கொண்ட செளந்திரம் தமிழகம் முழுதும் அலைந்து அறுபது மையங்களை சேவை உருவாக்கினார். எல்லா இடங்களிலும் கிராம சேவிகா பயிற்சியும் ஆரோக்கிய சேவிகா பயிற்சியும் வழங்கப்பட்டன. பயிற்சி பெற்றவர்கள் மையத்துக்கு அருகிலுள்ள கிராமங்களுக்குச் சென்று மருத்துவம், சுகாதாரம், குழந்தைகள் நலன், கல்வி போன்ற பல்வேறு பணிகளைச் செய்தனர். ஓட்டைக்குடிசைகளில் உயிருக்காகப் போராடிய எத்தனையோ தாய்மார்களையும் குழந்தைகளையும் இவர்கள் காப்பாற்றினார்கள்.
ஒருமுறை மதுரைக்கு அருகிலுள்ள டி.சுப்பலாபுரம் என்னும் கிராமத்தில் சாதிக்கொடுமை கடுமையாக இருந்தது.
விவசாயமே முக்கியத் தொழிலாக இருந்த அந்தக் கிராமத்தில் மேல்சாதிக்காரர்களின் நிலங்களில் தாழ்த்தப்பட்டவர்கள் அனைவரும் கூலி பெற்று வேலை செய்துவந்தனர். கூலிக்கு வேலை செய்கிறவர்கள் என்பதாலேயே அவர்களை அடிமைகளாக நடத்தினர் மேல்சாதிக்காரர்கள்.
அத்தளையிலிருந்து
விடுபட, விவசாயத் தொழிலையே கைவிட்டு வேறு தொழிலில் ஈடுபட முடிவெடுத்து, வேலைக்குச் செல்ல மறுத்தனர். இதனால் வெகுண்டெழுந்த மேல்சாதிக்காரர்க்ள், தாழ்த்தப்பட்டவர்களுக்குச் சொந்தமான எட்டு வீடுகளைத் தீக்கிரையாக்கினார்கள். ஏராளமான கால்நடைகள் மாண்டன. அக்குடும்பத்தினர் அனைவரும் செளந்திரத்தைச் சந்தித்து உதவி கோரினர். தமக்கு ஏதேனும் தொழில் கற்றுக்கொடுத்தால், அதன் மூலம் தம் வாழ்க்கையைச் செம்மையாகவும் சுதந்திரமாகவும் நடத்தமுடியுமெனத் தெரியப்படுத்தினர். உடனே அவர்கள் அனைவருக்கும் நேபாளத்தறியில் பயிற்சியளிக்க செளந்திரம் ஏற்பாடு செய்தார். நன்கு பயிற்சி பெற்றபின்னர், அவர்களாகவே தொழிலில் ஈடுபட்டு தம் வருமானத்துக்கான வழியைத் தேடிக்கொண்டனர். அங்கு பயிற்சி பெற்ற முப்பது குடும்பங்களுக்கும் செளந்திரம் வீடுகளைக் கட்டிக்கொடுத்தார். இக்குடியிருப்புகள் இன்றும் செளந்திரம் காலனி என்றே அழைக்கப்பட்டு வருகிறது.
சேவை மையங்களின் எல்லையை அடுத்தடுத்து விரிவுபடுத்திக்கொண்டே இருந்தார் செளந்திரம். மதுராந்தகத்துக்கு அருகில் உள்ள செய்யூரில் தொழுநோய் மருத்துவமனை தொடங்கப்பட்டது. அடுத்து லகுமையா என்பவரின் உதவியுடன் சின்னாளப்பட்டியில் காந்திகிராமம் அமைக்கப்பட்டது. முதலில் சிறிய அளவில் அங்கு வார்தா கல்வித்திட்டத்தின் அடிப்படையில் குழந்தைகளுக்கான ஆதாரப்பள்ளி தொடங்கப்பட்டது. மாணவர்கள் சேர்க்கை சிறுகச்சிறுகப் பெருகியது. ஐந்தாண்டுகளுக்குப் பிறகு உயர் ஆதாரப்பள்ளி நிறுவப்பட்டது. இதைக் கட்டுவதற்காக, செளந்திரத்தின் தந்தையார் சுந்தரம் ஐயங்கார் தன் பேரன் தம்பி என்பவரின் நினைவாக பதினேழு ஏக்கர் பரப்பளவுள்ள தோட்டமொன்றை வாங்கி அன்பளிப்பாக அளித்தார். பிற்காலத்தில் இத்தோட்டம் தம்பித்தோட்டம் என்றே அழைக்கப்பட்டது. இப்பள்ளியில் எட்டாம் வகுப்பைப் படித்து முடித்தவர்கள் உயர்கல்வியைப் படிக்கும் வகையில் 1954 ஆம் ஆண்டில் உயர்தர ஆதாரப்பள்ளி இதே இடத்தில் நிறுவப்பட்டது. அதிலும் விவசாயமும் துணி உற்பத்தியும் முக்கியப்பாடமாக இருந்தது. பிறகு 1956இல் அரசு அனுமதியோடு கிராமியக்கல்லூரியும் இங்கு தொடங்கப்பட்டது. காந்திகிராமக் கிராமியக்கல்லூரியில் வழங்கப்படும் பட்டங்களும் பட்டயங்களும் இந்தியாவில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் அங்கீகரிக்கப்பட்டன. இந்தியாவில் உள்ள பதினான்கு கிராமியக்கல்லூரிகளில் காந்திகிராமக் கல்லூரியே முதல்நிலை வகிக்கிறது. படிப்படியாக இது பல்கலைக்கழகமாகவும் உயர்ந்தது.
காந்திகிராமத்தில் செளந்திரம் கைத்தொழில் கூடமொன்றையும் தொடங்கினார். அங்கு பொம்மை செய்தல், மண்பாண்டங்கள் செய்தல், தச்சுவேலை செய்தல், சலவை சோப், குளியல் சோப் உற்பத்தி செய்தல் என பலவிதமான வேலைகள் கற்றுத் தரப்பட்டன. கதர் தறிகள், அச்சகம், தச்சுப்பட்டறை, எண்ணெய் ஆட்டுதல், இரும்புப்பட்டறை என அனைத்துமே அத்தொழிற்கூடத்தில் அமைந்திருந்தன.
செளந்திரத்தின் முயற்சியால் உருவான மற்றொரு கல்விக்கூடம் சிவசைலத்தின் ஒளவை ஆசிரமம். இது பெண்களுக்கான ஆசிரியைப்பயிற்சியை வழங்கும் நிலையமாகும். அதைத் தொடர்ந்து வாய்பேச முடியாத, காதுகேளாத பிள்ளைகள் படிப்பதற்கான ஒரு பள்ளியையும் தொடங்கினார்.
காந்தியடிகளின் நிர்மாணத்திட்டத்தில் செயல்படுகிறவர்கள் பொதுவாக அரசியல் களத்தில் இறங்குவதில்லை. செளந்திரம் அம்மையாரும் கிராம முன்னேற்றம், பெண்கள் முன்னேற்றம், கல்வி, தாழ்த்தப்பட்டோர் சேவை, குழந்தைகள் நலம் போன்றவற்றிலேயே மூழ்கியிருந்தார். ஆனால் இவருடைய சேவைகளினால் நேரிடையாகப் பலன்பெற்ற கிராம மக்கள் ஒன்றிணைந்து அவரைச் சந்தித்து வலியுறுத்தியன் விளைவாக 1952 ஆம் ஆண்டில் ஆத்தூர் தொகுதியிலும் 1957 ஆம் ஆண்டில் வேடசந்தூர் தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றிபெற்று சட்டமன்றத்தில் அடியெடுத்துவைத்தார். தொடர்ந்து 1962 ஆம் ஆண்டில் மதுரை தொகுதியின் சார்பாக பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வென்று நேருவின் ஆட்சியில் துணை கல்வியமைச்சராகப் பணிபுரிந்தார்.
”எங்கு சத்தியத்தின் ஆட்சி நிலவுகிறதோ, அங்கே வெற்றி இருக்கும்” என்பது காந்தியடிகளின் சொல். செளந்திரம் போன்ற காந்தியர்கள் தம் ஆழ்மனத்தில் சத்தியம் மீது கொண்டிருந்த பற்று கடலைவிட ஆழமானது. மானுட சேவையைத் தவிர வேறெந்த எண்ணமும் அத்தகையோருக்கு இருந்ததில்லை. சேவை என்னும் எண்ணமே அவர்களைச் செயல்படத் தூண்டும் அடிப்படை விசை. சாதி, மொழி, இனம் ஆகிய வேறுபாடுகளைக் கடந்து அனைவரையும் நேசித்து அரவணைத்துக்கொள்ளும் அன்பும் பண்பும் அவர்களுடைய நெஞ்சில் நிரம்பியிருக்கின்றன. அவர்களுடைய செயல்பாட்டில் இருக்கும் உண்மைத்தன்மையே எதிர்வரும் எல்லாத் தடைகளையும் உடைத்து அப்புறப்படுத்திவிடுகின்றன. ஒருவர் தம் வாழ்நாளில் அறுபது மையங்களை உருவாக்கி செயல்படவைப்பது என்பது எளிய செயலல்ல. அவற்றைச் செய்துமுடித்த சாதனையாளராக நம் முன் விளங்குகிறார் செளந்திரம்.
ஒரு விழாவின்போது ஒரு பெரியவர் மேடைக்கு வந்து செளந்திரம் அம்மையாரின் பணிகளைப் பாராட்டிவிட்டு, அவருக்கு ஒரு சிலை நிறுவ அனுமதி வேண்டுமென்று ஒரு கோரிக்கையை வைத்தார். அதைக் கேட்டு மேடையிலேயே வெகுண்டெழுந்த அம்மையார் அப்படி யாரேனும் சிலை வைத்தால் அந்தச் சிலையின் முன்னால் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்துவிடுவேன் என்று ஆவேசத்துடன் முழங்கினார். எந்த இடத்திலும் தன்னை முன்னிறுத்திக்கொள்ளாமல் தான் ஆற்றவிருக்கும் சேவையை முன்னிலைப்படுத்தித் தொண்டாற்றிய பெருமை செளந்திரம் அம்மையாருக்கு உண்டு. அதனாலேயே பொதுமக்களால் அவர் அன்புடன் அம்மா என அழைக்கப்பட்டார். ’என் வாழ்க்கையே என் செய்தி’ என்னும் காந்தியின் வழியில் தன் வாழ்க்கையையே தன் செய்தியாக எஞ்சும்படி இந்த உலகைவிட்டு மறைந்துபோனார் அவர். அவர் மறைவுக்குப் பிறகே அவரைப்பற்றிய தகவல்களெல்லாம் திரட்டப்பட்டன. அறம் வளர்த்த அம்மா என்னும் தலைப்பில் அவர் வாழ்க்கைவரலாற்றை நூலாக எழுதியவர் இராஜபாளயம் இராஜுக்கள் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றிய பி.எஸ்.சந்திரப்பிரபு.
(செப்டம்பர் 2019 அம்ருதா இதழில் வெளிவந்த கட்டுரை)