Home

Friday, 20 December 2019

சுவரொட்டிகளின் நகரம் - கவிதை

சுவரொட்டிகளின் நகரம்
..
சுவரொட்டிகளின் பின்னிருக்கிற மன நிலை
எப்பொழுதும் எனக்குப் புரிவதில்லை
வாழ்க அல்லது ஒழிக
சவால் அல்லது அறிவிப்பு
கோரிக்கை அல்லது நன்றி
வரவேற்றல் அல்லது வழியனுப்புதல்
எல்லாவற்றுக்குமே பஞ்சவர்ண சுவரொட்டிகள்
ஏன் ஆனது இப்படி?


சுவர்கள், அவற்றின் நிறங்கள்
எதுவுமே தெரிவதில்லை இப்போது
சுவரொட்டிகளே கண்களில் குத்துகின்றன

அந்தப் பொருளற்ற வார்த்தைகள்
அந்தக் கூச்சந்தரும் குழைவுகள்
அந்தப் பச்சையான முகஸ்துதிகள்
நாக்குத் தொங்க வாலாட்டிக் குழையும்
நாய்போல நிற்கிறது ஒவ்வொரு எழுத்தும்

மெல்ல மெல்ல இந்நகரமே
ஒரு சுவரொட்டி போல மாறிக்கொண்டிருக்கிறது

(கிழக்கு, டிசம்பர் 1994 )