Home

Monday, 30 December 2019

காகம் - கட்டுரை




கனகனேரியின் கரைகள் உயர்த்தப்பட்ட பிறகு தினசரி நடைப்பயிற்சிக்குப் பொருத்தமான இடமாகிவிட்டது. நான்கு சுற்று நடந்த பிறகு மரத்தடியில் அமர்ந்து வேடிக்கை பார்த்தபடி உட்கார்ந்திருந்தேன்.
வேடிக்கை பார்ப்பது மனத்தை எளிதாக்கும் ஒரு கலை. அசையும் மரக்கிளைகள். அசையாத மணல்மேடுகள். நிறங்களால் ஈர்க்கும் பூக்கள். உதிர்ந்து புரளும் சருகுகள். அஞ்சியஞ்சி காலடி வைத்து இரையைக் கொத்தியெடுக்கும் காகங்கள். புல்தரையில் நடந்து செல்லும் மைனாக்கள்.  விர்ரென்று பறந்து கடந்துபோகும் குருவிகள். ஒன்றைப் பார்க்கும்போது, அதை நானாகவே எண்ணிக்கொள்வது ஒரு கற்பனை விளையாட்டு.  அதைப்போல ஆனந்தத்தாலும் ஆறுதலாலும் மனத்தை நிறைக்கும் கணங்கள் வேறில்லை. இந்த உலகத்தில்தான் எத்தனை வாழ்க்கைகள். எத்தனை அனுபவங்கள்.

வானில் பறக்கின்ற புள்ளெல்லாம் நான், மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்என்று எழுதிய பாரதியாருக்கு இப்படிப்பட்ட காட்சியே அகத்தூண்டுதலாக இருந்திருக்கலாம் என்று அடிக்கடி எண்ணத் தோன்றும்.
சுற்றுலாப் பேருந்திலிருந்து யாருமற்ற வெட்டவெளியைப் பார்த்து உற்சாகமாக கைகளை அசைத்தபடி செல்லும் பள்ளிச்சிறுவர்களைப்போல தெற்குநோக்கிச் சென்றுகொண்டிருந்தது ஒரு பறவைக்கூட்டம். சாம்பல் நிறம். பெயர் தெரியவில்லை. இலங்கையிலிருந்து இமயமலையை நோக்கி பயணம் போகும் பறவைகள் என்று நண்பரொருவர் சொன்னது நினைவுக்கு வந்தது.  நான்கு நாட்களாக இப்படி கூட்டம்கூட்டமாகச் சென்றபடி உள்ளன.
மண்டியாவுக்கு அருகில் கொக்கரபெலெ என்றொரு இடத்துக்கு வலசை வரும் வெளிநாட்டுக்கொக்குகளை நான் ஏற்கனவே பார்த்திருக்கிறேன். ஒவ்வொன்றுக்கும் விதவிதமான அலகுகள். கால்கள். எல்லாமே உருவத்தில் பெரியவை. எழுந்து நின்றால் நமது இடுப்பளவுக்கு உயரமான கொக்குகள் உண்டு. புதர்களின் ஓரமாகவும் தாழ்வான மரக்கிளைகளிலும் நின்று அமைதியாக வெட்டவெளியை நோக்கிப் பார்வையைப் பதித்திருக்கும். அந்தக் காட்சி எங்கிருந்தோ ஓர் ஆணையை எதிர்பார்த்து அவை காத்திருப்பதுபோலத் தோன்றும்.
எப்போதாவது ஒரு கொக்கு வெண்சிறகுகளை அசைத்து விர்ரென காற்றைக் கிழித்தபடி எழுந்து பறந்து வேறொரு மரக்கிளையில் சென்று அமரும். ஓர் இசைத்துணுக்குபோல செவியை அதிரச் செய்த காற்றின் நரம்புகளைக் கண்கள் தேடும்.  சாம்பல்கொக்கு, வெள்ளைக்கொக்கு, மஞ்சள்கொக்கு, குருட்டுக்கொக்கு என ஒவ்வொன்றையும் பெயர் சொல்லி அடையாளப்படுத்தும் அளவுக்கு விவரம் தெரிந்த நண்பரொருவர் சொல்லிக் கேட்ட கதைகள் ஏராளம்.
செம்பருத்திச் செடியிலிருந்து இணையிணையாக இறங்கிவந்து குதித்த  சிட்டுக்குருவிகளைப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது.  மரத்தடி நிழலில் ஓடிப் பிடித்து விளையாடும் சிறுமிகளென உற்சாகத்தோடு குதித்தபடி இருந்தன. ஒரு கணம் கூட ஓரிடத்தில் நிற்கமுடியாத அளவுக்கு உற்சாகம். கீச்சுக்கீச்சென ஓசை.
தூண்டில்காரர்கள் போல வெகுநேரம் கரையையொட்டியே அலைந்துகொண்டிருந்த மைனாக்கூட்டம் குளித்துக் கரையேறும் பெண்களென மெதுவாக கரையேறி மேலே வந்தது. நாலடிக்கு ஒருகணம் நின்று ஏதோ உலக அதிசயத்தைப் பார்ப்பதுபோல நீர்ப்பரப்புக்கு மேலே தகதகவென மின்னும் வானத்தைப் பார்ப்பதும் பிறகு கழுத்தைக் குலுக்கியபடி ஒயிலாக அசைந்தசைந்து நடப்பதுமான அதன் செயல்பாடு வசீகரமாக இருந்தது.  ஒரு மஞ்சள் மலரை ஏந்திச் செல்வதுபோன்ற அதன் அலகுகள் அழகானதொரு ஓவியம்.
புலரும் காலையை வரவேற்பதுபோல பூவரசமரக் கிளையில் அமர்ந்திருந்த ஒற்றைக் குயிலின் பாடல் ஒலித்தது.  அதன் வாழ்க்கையின் ஆனந்தமே, அந்த வரவேற்பிசையை இசைப்பதில்தான் இருக்கிறது என்பதுபோல ஆழ்ந்த லயிப்போடு பாடிக்கொண்டிருந்தது. தன் கனவைக் குழைத்த குரலால் ஒரு மாபெரும் காவியத்தையே அரங்கேற்றிக்கொண்டிருந்தது அக்குயில்.
அவை ஒவ்வொன்றும் நானே என்ற கற்பனை ஒருவகையில் எனக்குள் பித்தூற வைத்தபடி இருந்தது. வானத்தை தன் எளிய இறகுகளால் நீந்திக் கடந்துபோகும் வலசைப்பறவை நான். விட்டு விடுதலையாகி கீச்சுக்கீச்சென கீதமிசைத்தபடி துள்ளித் திரியும் சிட்டுக்குருவியும் நான். இருள் விலகி ஒளிசூடிய மண்ணை தன் எளிய கால்களால் நடந்துநடந்து கடக்க நினைக்கும் மைனாவும் நான். காதலின் மேன்மையை காலமெல்லாம் இசைத்தபடி இருக்கும் குயிலும் நானே.   அந்த உற்சாகத்தில் ஒவ்வொரு நாளும் நான் திளைத்தபடி இருந்தேன்.
இன்று தூங்குமூஞ்சி மரத்தடியில் ஆறேழு காக்கைகள் குதித்துக் குதித்து செடிகளுக்கிடையில் இரை தேடி அலைவதைப் பார்த்தேன். அந்தக் கூட்டத்தில் சேராமல் சற்றே தொலைவில் ஒரு காகம் மட்டும் வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்தது. கூட்டத்தில் சேராத காகம் என்பதாலேயே அதைக் கவனிக்கத் தோன்றியது. கரிய தலையை மட்டும் அவ்வப்போது திருப்பித்திருப்பிப் பார்த்தபடி நின்றிருந்தது.  கூர்மையான அலகுகள்.
நீண்ட நேரத்துக்குப் பிறகு, அது அசையத் தொடங்கியபோதுதான் அது தன் ஒற்றைக்காலால் தாவித்தாவி வருவதைக் கவனித்தேன். மற்றொரு கால் துவண்டு தொங்கியது. அடிபட்ட இடம் வீங்கியிருந்தது. யாரோ அதன் மீது குறி பார்த்து எதையோ வீசி தாக்கியிருக்கிறார்கள். கல், கட்டை அல்லது கூர்மையான  பொருள் என ஏதோ ஒன்றால் விழுந்த வெட்டின் ஆழத்தால் அதன் காலே செயலிழந்துபோயிருந்தது.  இரைக்காக ஏதாவது வீட்டுப் பொருளில் வாய்வைத்திருக்கலாம். அற்பப்பறவைதானே என நினைத்த மானுடன் நிகழ்த்திய விளையாட்டாகவும் இருக்கலாம்.
காகத்தை விரட்டுவதை ஒட்டியும் அடிப்பதை ஒட்டியும் மானுடனுக்கு எவ்விதமான குற்ற உணர்ச்சியுமில்லை. மானுடனைப்போலவே இந்த மண்ணை மிகவும் நெருக்கமாகவும் ஆழமாகவும் உணர்ந்துவைத்திருக்கும் ஒரு முக்கியமான பறவை காகம் மட்டுமே. அவை பறந்து அலைவதற்கென வானம் இருப்பினும் அவை வாழ்வது இந்த மண்ணிலேயே. மண்ணில் முளைத்தெழுந்து நிற்கும் ஒவ்வொரு மரத்தையும் செடியையும் காகம் அறியும். ஒவ்வொரு நீர்நிலையையும் அறியும். ஒன்றிரண்டு மைல் பரப்பே காகத்தின் வாழிட எல்லை என்பதால் பரிபூரணமாக இந்த மண்ணை அறிந்துவைத்திருக்கிறது அது. வீடுகளையும் தோட்டங்களையும் தெரிந்துவைத்திருக்கும் காகங்களுக்கு மனிதர்களின் அடையாளம் மட்டும் தெரியாமல் போய்விடுமா என்ன?
கூட்டமெல்லாம் கலைந்து போய்விட்ட கணத்தில் அதே இடத்தை நோக்கி தனித்து மெதுவாக வந்து நின்றது காகம்.  ஆனால் அதன் பார்வையில் எதுவும் தென்படவில்லை போலும். வெகுநேரம் சுற்றிப் பார்த்துவிட்டு மீண்டும் நாலடி தொலைவுக்கு காலை இழுத்தபடி நடந்து சென்று நின்றது. அங்கும் எதுவும் தென்படவில்லை. நம்பிக்கை குன்றாத காகம் மீண்டும் சில அடிகள் குதித்துச் சென்று தனிமையில் நின்றது. சில கணங்கள் முதலில் தொடங்கிய இடமான மரத்தடியைத் திரும்பிப் பார்த்தது. பிறகு வானத்தைப் பார்த்தது. ஒருசில முறைகள் காகா என சத்தமிட்டு ஓய்ந்தது.
அதன் தனிமையையும் தவிப்பையும் கண்டு நான் பதறி எழுந்துவிட்டேன். அதன் பசிக்கு எதையேனும் அளிக்கவேண்டும் என்று தோன்றியது. ஒருபுறம் அமைதியான தண்ணீர்ப்பரப்பு. இன்னொருபுறம் இன்னும் கதவு திறக்காத வீடுகள். என்ன செய்வதென்றே புரியவில்லை. எங்கேனும் கடைகள் இருக்கலாம் என நினைத்து வெகுதொலைவு ஓடினேன். பிரதான சாலை திருப்பத்தில் ஒரே ஒரு தள்ளுவண்டிக்கடை நின்றிருந்தது. இரண்டு இட்லிகளைப் பொட்டலமாகக் கட்டி வாங்கிக்கொண்டு ஓடி வந்து காகத்தின் முன் பிரித்துவைத்தேன்.
காகம் ஒருமுறை என்னை நிமிர்ந்து பார்த்தது. பிறகு காலை இழுத்து நகர்ந்து இட்லியைக் கொத்தித் துண்டாக்கி வேகமாக விழுங்கியது. அதன் சிறகுகள் ஒருமுறை விரிந்து மடங்கின. உணவை விழுங்கும் காகமென நின்றிருப்பது நானே என ஒருகணம் எழுந்த எண்ணத்தால் என் உடல் சற்றே நடுங்கி ஒடுங்குவதை உணரமுடிந்தது. பதற்றத்துடன் திரும்பி நடந்தேன்.