1915ஆம் ஆண்டில் காந்தியடிகளும் கஸ்தூர்பாவும் சென்னைக்கு வந்து ‘இந்தியன் ரிவ்யு’ இதழில் ஆசிரியரான ஜி.நடேசன் என்பவரின் வீட்டில் தங்கியிருந்தார்கள். ஒருநாள் மாலையில் அவ்விருவரையும் அட்வகேட் ஜெனரலாக இருந்த சீனிவாச ஐயங்கார் விருந்துக்கு அழைத்திருந்தார். லஸ்சர்ச் சாலையில் இருந்த அவருடைய ’அம்ஜத்பாக்’ வீட்டுத் தோட்டத்தில் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குறிப்பிட்ட நேரத்தில் இருவரும் அந்த வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். காந்தியடிகள் ஒரு வெள்ளை வேட்டியும் ஜிப்பாவும் வடநாட்டவருக்குரிய தலைப்பாகையையும் அணிந்திருந்தார். கஸ்தூர்பா எளிமையான தூய வெள்ளைப்புடவையை குஜராத்தி பாணியில் உடுத்தியிருந்தார். எவ்விதமான ஒப்பனையும் ஆபரணமும் இல்லாமல் மிக எளிமையான தோற்றத்துடன் காணப்பட்டார் அவர். கையில் மட்டும் இரும்பினால் செய்யப்பட்ட காப்பு அணிந்திருந்தார். அவர் தோற்றம் ஒரு குஜராத்திக் குடியானவருடைய மனைவியைப்போல இருந்தது.
அவ்விருவரையும் அவ்வீட்டின் பின்கட்டிலிருந்து கதவிடுக்கு வழியாக பதினாறு வயதே ஆன ஒரு பெண் பார்த்துப்பார்த்து வியந்தபடி இருந்தார். விருந்தில் நடப்பதென்ன என்பதை ஆர்வத்துடன் கவனித்து தனக்குப் பின்னால் அமர்ந்திருந்த தன் தாயாருக்கு ஒவ்வொரு கணமும் திரும்பி நேர்முகவர்ணனை அளித்தபடி இருந்தார்.
அவர் சீனிவாச ஐயங்காரின் மகள் அம்புஜம்மாள்.
நீண்ட நேரத்துக்குப் பிறகு சீனிவாச ஐயங்கார் தன் மனைவியையும் மகளையும் அழைத்து காந்தியடிகளிடம் அறிமுகப்படுத்தினார். அந்த விருந்துக்காகவே பலவிதமான நகைகளோடு பட்டுப்புடவையை அணிந்து ஒப்பனை செய்துகொண்டிருந்தார் அம்புஜம்மாள்.
காந்தியடிகள் அவரைப் பார்த்து புன்னகை புரிந்தார். தான் அணிந்திருந்த தங்க, வைர நகைகளையெல்லாம் பார்த்து இரக்கத்துடன் புன்னகைப்பதுபோலத் தோன்றியது அவருக்கு. ஒருகணம் அவற்றையெல்லாம் வீசியெறிந்துவிட வேண்டும் என்ற எண்ணம் பொங்கியெழுந்தது. மறுகணமே அவ்வெண்ணத்தை விலக்கி, இயல்பான நிலைக்குத் திரும்பினார். அவரை அருகில் அழைத்த காந்தியடிகள் ”உன் பெயர் என்ன?” என்று கேட்டார். அதற்கு அவர் “அம்புஜவல்லி” என்று பதில் சொன்னார். அருகில் நின்றிருந்த அவர் தாயார் “அது அவள் பாட்டியின் பெயர். அதையே அவளுக்கும் பெயராகச் சூட்டியிருக்கிறோம்” என்று சொன்னார். அம்புஜவல்லி அம்புஜவல்லி என இரண்டுமூன்று முறை தனக்குள் சொல்லிப் பார்த்துக்கொண்ட காந்தியடிகள் “இவ்வளவு நீண்ட பெயரை என்னால் அழைக்கமுடியாது. நான் அம்புஜம் என்றுதான் அழைக்கப்போகிறேன்” என்று சொன்னார்.
அடுத்தநாள் மாலையில் காந்தியடிகள் மட்டும் அம்ஜத்பாக் வீட்டுக்கு வந்திருந்தார். சீனிவாச ஐயங்காரின் மனைவி அவரை தான் உறுப்பினராக இருக்கும் பெண்கள் மனமகிழ் மன்றத்தில் உரையாற்ற அழைத்துச் சென்றார். முழு ஒப்பனையுடன் அம்புஜம்மாளும் அவர்களோடு சென்றார்.
ஒத்துழையாமை இயக்கத்தை காந்தியடிகள் தொடங்கியதும்,
சீனிவாச ஐயங்கார் தன்னுடைய பதவியையும் தனக்கு வழங்கப்பட்ட பட்டத்தையும் துறந்தார். வீட்டுக்கூடத்தில் காந்தியடிகளின் படம் பொருத்தப்பட்டது. பெரும்பாலான ஆபரணங்கள் பெட்டிகளில் புதையுண்டு போயின. காங்கிரஸ் இயக்கத்துடன் அவரும் இணைந்து செயல்படத் தொடங்கினார். 1921 ஆம் ஆண்டில் திருநெல்வேலியில் நடைபெற்ற மாகாண காங்கிரஸ் மாநாட்டுக்குத் தலைமை தாங்கி உரையாற்றும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அதைத்தொடர்ந்து அவருடைய குடும்பமே காந்திய இயக்கத்தில் சேர்ந்து இயங்கத் தொடங்கியது. வீட்டிலிருந்த அந்நியத்துணிகளையெல்லாம் எடுத்துச் சென்று கடற்கரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்களிடையில் குவித்து தீவைத்துக் கொளுத்தப்பட்டது. அந்நிய நாட்டு ஆடைகளுக்கு மாற்றாக வீட்டிலிருந்த ஒவ்வொருவரும் கதர்த்துணிகளை அணியத் தொடங்கினார்கள்.
அத்தருணத்தில் ஏதோ
வேலையாக தென்னாட்டுக்கு வந்திருந்த காந்தியடிகள் சென்னையில் சாந்தோமில் ராம்ஜியின் வீட்டில் தங்கியிருந்தார். அம்புஜம்மாள் தன்னுடைய சில தோழிகளுடன் சென்று காந்திஜியைச் சந்தித்தார். அம்புஜம்மாளின் கணவர் உடல்நிலை குன்றியிருக்கும் செய்தியைக் கேட்டு வருந்தி அவருக்கு ஆறுதல் தரும் வகையில் பேசினார் காந்தியடிகள். பிறகு தேசசேவையில் மும்முரமாக ஈடுபடுவதன் வழியாக சொந்தத் துயரிலிருந்து விரைவில் மீண்டுவிடலாம் என்று எடுத்துரைத்து ஊக்கப்படுத்தினார். தினமும் இராட்டையில் நூல்நூற்கும்படியும் சுயராஜ்ஜிய நிதி திரட்டும்படியும் அனைவரையும் கேட்டுக்கொண்டார்.
1925ஆம் ஆண்டில் காந்தியடிகள் சென்னைக்கு வந்திருந்த சமயத்தில் சீனிவாச ஐயங்காரின் வீட்டிலேயே தங்கினார். ஏராளமான
தொண்டர்களும் பொதுமக்களும் தினமும் அவரை அங்கு வந்து பார்த்து வணங்கிவிட்டுச் சென்றனர். ஒவ்வொரு தொண்டரும் தாமாகவே முன்வந்து தம்மிடமுள்ள தன்னிடமுள்ள பொருட்களை காந்தியடிகளிடம் நன்கொடையாக அளித்தனர். பெண்கள் தாம் அணிந்திருந்த தங்க நகைகளையெல்லாம் கழற்றி அவரிடம் கொடுத்தனர். அவற்றையெல்லாம் அவர் உடனடியாக ஏலம் விட்டு, கிடைக்கும் தொகையை நிதிக்கணக்கில் சேர்த்துக்கொண்டார்.
அன்று மகளிர் மட்டுமே நிறைந்திருந்த ஒரு கூட்டத்தில் காந்தியடிகள் பொதுவாழ்க்கையில் பெண்கள் ஆற்றவேண்டிய பங்களிப்பைப்பற்றி உரையாற்றினார். அவர் பேசி முடித்ததும் ஒரு மூதாட்டி காந்தியடிகளிடம் “பாபுஜி, பெண்கள் மறியலில் ஈடுபட்டு சிறைக்குச் செல்லவேண்டும் என்று சொல்கிறீர்கள். பாவம், பெண்கள் பலவீனமானவர்கள். காவலர்கள் இவர்களிடம் தகாதமுறையில் நடந்துகொண்டால் என்ன செய்வது?” என்று கேட்டார். அதற்குக் காந்தியடிகள் அமைதியான குரலில் “நெருக்கடியான பல தருணங்களில் தம் வீரத்தை வெளிப்படுத்திய பல பெண்கள் வாழ்ந்த நாடு இது. கற்புள்ள பெண்கள் நெருப்புக்குச் சமம்.
எந்தத் தீய சக்தியும் இவர்களுக்குக் கேடு விளைவித்துவிட முடியாது. மானமுள்ள பெண்களுக்கு தன் மானத்தைக் காத்துக்கொள்ளத் தெரியாதா என்ன? இவர்கள் தன் உயிரை விட்டாலும் விடுவார்களே தவிர தன் மானத்தை இழக்கமாட்டார்கள்” என்றார். அவருடைய பதில் அங்கிருந்த பலருடைய மனத்திலும் படிந்திருந்த அச்சத்தைப் போக்கியது. காந்தியடிகளின் பதிலை தன் நெஞ்சில் ஆழமாகப் பதியவைத்துக்கொண்டார் அம்புஜம்மாள்.
அன்று மாலை காந்தியடிகள் ஒரு புத்தகத்தை அம்புஜம்மாளிடம் கொடுத்து படித்துவிட்டு கருத்து சொல்லும்படி கேட்டுக்கொண்டார். புத்தகத்தின் பெயர் ‘இந்தியத்தாய்’. மேயோ என்னும் அமெரிக்கப்பெண்மணி எழுதிய புத்தகம். அப்புத்தகத்தைப்பற்றி ‘சாக்கடை இன்ஸ்பெக்டரின் குறிப்பேடு’ என காந்தியடிகள் ஏற்கனவே யங் இந்தியா இதழில் ஒரு விமர்சனக்கட்டுரையை எழுதியிருந்தார். அதனால் அன்று இரவே அம்புஜம்மாள் அந்தப் புத்தகத்தைப் படித்துமுடித்தார். மறுநாள் காலையில் பார்த்ததுமே “புத்தகம் எப்படி இருந்தது?” என்று கேட்டார். “முழுக்கமுழ்க்க ஓர் அபத்தக்களஞ்சியம் இந்தப் புத்தகம். அதில் இரண்டாவது கருத்துக்கே இடமில்லை. ஆயினும் இவர் சுட்டிக்காட்டும் சில உண்மைகளைப்பற்றி நாம் யோசிக்கவேண்டியது மிகமிக அவசியம்” என்று சொன்னார் அம்புஜம்மாள். அதைக் கேட்டு காந்தியடிகள் ஒன்றிரண்டு கணங்கள் தலையசைத்துக்கொண்டார். பிறகு “நீ சொல்வது உண்மைதான் அம்புஜம். உன்னைப்போன்ற பெண்கள்தான் இவர் சுட்டிக்காட்டும் குறைகளை நீக்கப் பாடுபடவேண்டும். செய்வீர்களா?” என்று கேட்டார். காந்தியடிகளின் கேள்வி அம்புஜம்மாளின் மனத்தில் ஆழமாகப் பதிந்தது. ஏற்கனவே சமூகசேவையின்பால் சற்றே திரும்பியிருந்த அவர் மனத்துக்கு அக்கணத்தில் தன் வாழ்வின் செல்திசை பற்றிய தெளிவு கிடைத்ததாகவே உணர்ந்தார். ”நிச்சயமாகச் செய்வேன்” என்று அப்போதே காந்தியடிகளுக்கு உறுதியளித்தார் அம்புஜம்மாள்.
அடுத்த நாள் காலை. திங்கட்கிழமை. காந்தியடிகள் மெளனவிரதம் மேற்கொள்ளும் நாள். அவர் தன் அறையைவிட்டு வெளியே வரவில்லை. உள்ளே இருந்தபடி ‘யங் இந்தியா’ இதழுக்குக் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருந்தார். காந்தியடிகளுக்கு வீணையிசை மிகவும் பிடிக்கும் என யாரோ சொன்னது நினைவுக்கு வரவே அம்புஜம்மாள் வீணையை வாசிக்கத் தொடங்கினார். வீணைத்தந்திகளிலிருந்து எழுந்த இனிய இசை அந்த அறையை நிறைத்தது. சிறிது நேரத்தில் காந்தியடிகள் ஒரு காகிதத்தில் எழுதிய
குறிப்பை மகாதேவ தேசாய் கொண்டுவந்து அவரிடம் கொடுத்தார். அம்புஜம்மாள் அதைப் பிரித்துப் படித்தார். “உன் இசையைக் கேட்காமல் நான் வேறு ஏதோ வேலையில் மூழ்கியிருப்பதாக நினைத்துக்கொள்ளாதே. என் எழுத்து வேலையோடு வேலையாக உன் வீணையிசையையும் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறேன்” என்று அக்குறிப்பில் எழுதப்பட்டிருந்தது. மிகச்சிறிய செயலில்கூட காந்தியடிகள் கூட எந்த அளவுக்குக் கண்ணும் கருத்துமாக இருக்கிறார் என நினைத்து வியப்பிலாழ்ந்தார் அம்புஜம்மாள்.
தன் தோழிகளைத் திரட்டி பெண்கள் சுதேசிக் கழகம் என்னும் பெயரில் ஓர் அமைப்பைத் தொடங்கி கதர்ப்பிரச்சாரத்திலும் சுதேசிப்பொருள் விற்பனையிலும் ஈடுபட்டார் அம்புஜம்மாள்.
தினந்தோறும் பகல் முழுதும் தெருமுனைகளில் நின்று கதரின் முக்கியத்துவத்தைப்பற்றி மக்களுக்கு எடுத்துரைத்தார். பிரார்த்தனைக் கூட்டங்கள், பெண்கள் கூட்டங்கள், ஊர்வலங்கள், திருவிழாக்கள், கண்காட்சிகள் எங்கு நடப்பினும் அவற்றில் சுதேசிக்கழகப் பெண்கள் ஆர்வத்துடன் பங்குகொண்டு பிரச்சாரத்தில் ஈடுபடுவதை ஒரு வழக்கமாகவே மேற்கொண்டனர். கதராடைகளையும் சோப்பு, சீப்பு, கண்ணாடி போன்ற சுதேசிச் சாமான்களையும் ஒரு தள்ளுவண்டியில் வைத்து வீதிவீதியாகச் சென்று விற்பனை செய்தார்கள். மாலை நேரங்களில் கடற்கரையிலும் அந்த விற்பனை நிகழும். அவர்களைப் பார்த்து பலர் அவமதித்துப் பேசினார்கள். சிலர் வசைமழை பொழிந்தார்கள். இன்னும் சிலர் பின்னாலேயே வந்து கேலியும் கிண்டலும் செய்தார்கள். ஆயினும்
அவற்றையெல்லாம்
சிறிதும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். வடநாட்டில் அந்நியத்துணி எதிர்ப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பல பெண்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள் என வெளிவந்த செய்தியைப் படித்த அம்புஜம்மாளுக்கு ஒருவேளை கைது நிகழ்ச்சிகள் சென்னையிலும் நடக்கக்கூடும்
என்று தோன்றியது. ஆயினும் மனம் சோராமல் நாள் தவறாமல் தன் தோழிகளுடன் பிரச்சாரத்துக்குச் செல்வதை அவர் நிறுத்தவே இல்லை.
அந்த ஆண்டு மார்கழி மாதம் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் ஆண்டாள் பாசுரங்களைப் பாடியபடி பக்தர்கள் ஊர்வலமாகச் சென்றார்கள். அதைக் கண்ட அம்புஜம்மாளுக்கு இதேபோல ஒரு பாடல் ஊர்வலத்தைத் தினமும் தாமும் நடத்தவேண்டும் என்று விழைந்தார். மறுநாளே அம்புஜம்மாள் தலைமையில் சுதேசிக்கழகப் பெண்கள் தேச விடுதலை தொடர்பாக பாரதியாரும் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளையும் எழுதிய பாடல்களை ஒரே குரலில் ஓங்கிப் பாடியவண்ணம் ஊர்வலமாகச் சென்று மக்களின் கவனத்தை ஈர்த்தனர். அந்த ஊர்வலத்துக்கு ’பிரபாத் பேரி’ என்றொரு பெயரும் வந்தது. ஒவ்வொரு நாளும் நிகழ்ந்த அந்த ஊர்வலத்தில் கொஞ்சம்கொஞ்சமாக பொதுமக்களும் வந்து பங்கேற்கத் தொடங்கினர். பொதுமக்களிடையில் ஊர்வலத்துக்குக் கிடைத்த உற்சாகத்தால், அதற்கு அடுத்த ஆண்டில் மைலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தைச் சுற்றியும் பிரபாத் பேரி நடைபெற்றது.
அந்நியத்துணி எதிர்ப்புப் பிரச்சாரத்தை நாலைந்து தோழிகளோடு சேர்ந்து தெருவோரத்தில் அங்கங்கே நின்று செய்வதைவிட, அந்நியத் துணிகளை விற்பனை செய்யும் கடைகள் முன்னால் நின்று மறியல் செய்து பிரச்சாரத்தில் ஈடுபடுவது பயனளிக்கும் என நினைத்தார் அம்புஜம்மாள். குறைந்தபட்சம் நூறு தொண்டர்களாவது துணைக்கு இருந்தால்தான் அத்தகைய எதிர்ப்புக்குப் பயனிருக்கும் என்று அவருக்குத் தோன்றியது.
உடனே அதைப்பற்றி காங்கிரஸ் அமைப்புடன் ஒருமுறை அவர் பேசினார்.
உடனே அவர் கோரிக்கையை ஏற்று, காங்கிரஸ் அவர்களுக்காக நூறு பெண்தொண்டர்களைத் திரட்டி அனுப்பிவைத்தது. அவர்கள் அனைவரும் அம்புஜம்மாளுடன் இணைந்துகொண்டனர்.
சைனாபஜார், ராட்டன் பஜார், எஸ்பிளனேட் ஆகிய இடங்களில் அம்புஜம்மாளின் தலைமையில் ஊர்வலம் சென்றது. ஊர்வலத்தை வேடிக்கை பார்த்த பலரும் ஊர்வலத்துடன் இணைந்துகொண்டனர். நேரம் செல்லச்செல்ல ஊர்வலம் பெருகத் தொடங்கியது. மற்றொரு புறத்தில் ஆண்தொண்டர்கள் பெண்களின் பாதுகாப்புக்காக கூடவே நடந்து வந்தனர். ஊர்வலத்தின்
இறுதியில் போலீஸ் காவல்படை குதிரைகளில் அணிவகுத்து வரும். ஒவ்வொரு கடையின் வாசலிலும் முதலாளிகளும் ஊழியர்களும் நின்றுகொண்டு வேடிக்கை பார்ப்பார்கள். ஊர்வலம் முடிந்ததும் இருவர் இருவராகச் சென்று கடைவாயிலில் நின்று மறியல் செய்வார்கள். சிற்சில சமயங்களில் தொடர்ந்து ஊர்வலம் செல்ல இயலாதபடி காவலர்கள் அவர்கள்மீது கண்ணீர்ப்புகையைச் செலுத்தியும் சாயத்தண்ணீரை ஊற்றியும் கலைந்துசெல்லச் செய்ததும் உண்டு.
1930ஆம் ஆண்டில் ஒருநாள் காலை ராட்டன்பஜார் தெருவில் மறியல் செய்வதற்காக அம்புஜத்தம்மாளும் மற்ற பெண்டிரும் சென்றுகொண்டிருந்தார்கள். அப்போது ஒரு காவல்துறை அதிகாரி அனைவரையும் கைது செய்து லாரியில் ஏற்றி கமிஷனர் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று உட்கார வைத்துவிட்டார். பொழுது சாய்ந்த நேரத்தில் அனைவரையும் மீண்டும் லாரியில் ஏற்றி மத்திய சிறைச்சாலையில் அடைத்துவிட்டார். அம்புஜம்மாளை லாரியில் ஏறவிடாமல் தடுத்து “நீங்கள் வீட்டுக்குச் செல்லலாம்” என்று சொல்லி வெளியே அனுப்பமுனைந்தார். ”எல்லாப் பெண்களையும் அழைத்துவந்தது நான். என்னைக் கைதுசெய்வதுதான் முக்கியம்” என்று எவ்வளவோ வாதாடினாலும், அது எதையும் அதிகாரி காதுகொடுத்துக் கேட்கவே தயாராக இல்லை. அம்புஜம்மாளின் தந்தையார் பதவியில் இல்லையென்றாலும் அவருடைய செல்வாக்கு அப்படியே நீடித்திருந்தது என்பதுதான் காரணம். அவர் வீட்டுப் பெண்ணை கைது செய்யக்கூடாது என அதிகாரிகள் நினைத்தார்கள். ஆயினும் அந்தப் பாகுபாடு அவரை குற்ற உணர்வுக்கு ஆளாக்கியது. வீட்டுக்குச் செல்ல மனமின்றி உறவினர் ஒருவரின் வீட்டுக்குச் சென்று தங்கிவிட்டார். மறுநாள் காலையிலேயே புறப்பட்டுச் சென்று தனிமையில் கடைமுன்னால் நின்று மாலைவரைக்கும் மறியல் செய்யத் தொடங்கினார். ஏறத்தாழ பத்து நாட்கள் அந்த மறியல் நீடித்தது. எவ்விதமான
அசம்பாவிதமும்
நிகழாதபடி தொலைவில் நின்று காவலர்கள் கண்காணித்தார்களே தவிர, யாரும் நெருங்கிவந்து அவரைக் கைது செய்ய முன்வரவில்லை. சில நாட்களில் சிறையில் வைக்கப்பட்டிருந்த அனைவரும் விடுதலை செய்யப்பட்டார்கள். அவர்கள் அனைவரையும் நேரில் சந்தித்து வருத்தம் தெரிவித்தார். அதற்குப் பிறகே அவர் தன் வீட்டுக்குத் திரும்பினார்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஒருநாள் கடைமறியலில் ஈடுபட்டிருந்த தருணத்தில் அம்புஜம்மாளையும் அவருக்குத் துணையாக இருந்த ஜானம்மா, கமலா என இருவரையும் காவலர் கைது செய்தனர். விசாரணைக்குப் பிறகு ஆறுமாதம் சிறைத்தண்டனையும் 250 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது..
அபராதத்தைக் கட்டத் தவறினால் மேலும் இரு மாதங்கள் சிறையில் இருக்கவேண்டும் என்று தீர்ப்பளித்தது
நீதிமன்றம். அன்றிரவே காவலர்கள் நீலகிரி எக்ஸ்பிரஸில் அம்புஜம்மாளையும் மற்றவர்களையும் அழைத்துச் சென்று வேலூர் சிறையில் அடைத்தார்கள்.
சிறையில் அடைக்கப்பட்டிருந்த மற்ற பெண்களுடன் அன்போடு பழகி அவர்களை நெருக்கமாக்கிக்கொண்டார் அம்புஜம்மாள். தமக்குத் தெரிந்த தையல்வேலையையும் பின்னல் வேலையையும் அவர்கள் அனைவருக்கும் கற்றுக் கொடுத்தார். இரண்டுமே வருமானத்துக்கு ஒரு சிறந்த வழியென்பதால் எல்லோரும் அதை ஊக்கமுடன் கற்றுக்கொண்டனர். எஞ்சிய நேரத்தில் தினமும் குறிப்பிட்ட வேளையில் அனைவருக்கும் இந்தி மொழியையும் கற்றுக்கொடுத்தார்
அம்புஜம்மாள்.
அம்புஜம்மாள் சிறைக்குச் சென்றதால் அவருடைய தந்தையார் மிகவும் நிலைகுலைந்து போனார். அதனால் தன் மகளைப் பார்ப்பதற்கு, ஒன்றிரண்டு முறைக்கும் மேல் அவர் சிறைக்குச் செல்லவில்லை. அம்புஜம்மாளின் தாயாரும் தம்பியும் மட்டுமே அடிக்கடி சென்று பார்த்துவிட்டுச் சென்றார்கள். விடுதலை பெற்ற சமயத்தில் கூட, அம்புஜம்மாளின் தம்பி மட்டுமே நேரில் சென்று அவரை வீட்டுக்கு அழைத்துவந்தார்.
அம்புஜம்மாளைப்
பார்த்ததுமே அவர் தந்தையார் “சிறைக்குச் சென்றுதான் உன் சேவை மனப்பான்மையை வெளிப்படுத்த வேண்டும் என்பதில் பொருளே கிடையாது. இந்த முட்டாள்தனத்தை இன்னொருமுறை செய்யாதே. காந்திய நிர்மாணத்திட்டப் பணியில் நீ எவ்வளவு வேண்டுமானாலும் ஈடுபடலாம். அதற்கு எந்தத் தடையுமில்லை.
நீ ஏதேனும் சமூகப்பணியில் ஈடுபட்டிருப்பதில் எனக்கும் மகிழ்ச்சியே” என்று சொன்னார்.
அடுத்தடுத்த ஆண்டுகளில் அம்புஜம்மாளின் தோழிகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் பிரிந்து சென்றனர். ஒருவர் படிப்பதற்காக வெளியூருக்குச் சென்றுவிட்டார். இன்னொருவர் திருமணம் செய்துகொண்டு வடக்கே போய்விட்டார். மற்றொருவர் இந்தி ஆசிரியையாக வேலை கிடைத்து ஐதராபாத்துக்குச் சென்றுவிட்டார். இப்படி ஒவ்வொருவரும் பிரிந்துபோனதால் துணையின்றி தவித்தார் அம்புஜம்மாள். பிரச்சாரப்பணிகளுக்கு முன்புபோல உற்சாகமாக யாரும் வருவதில்லை. அப்போது கல்லிடைக்குறிச்சி தொகுதியில் தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ் சார்பாக பிரச்சாரம் செய்வதற்காக சில நாட்கள் அங்கே சென்றிருந்தார். ஆனால் சென்னைக்குத் திரும்பியதுமே மீண்டும் தனிமை சூழ்ந்தது. ஒருநாள் தன் நிலையைத் தெரிவித்து காந்தியடிகளுக்கு நீண்டதொரு கடிதம் எழுதினார். காந்தியடிகள் அப்போது வார்தாவில் இருந்தார். பம்பாயில் நடக்கவிருந்த காங்கிரஸ் மாநாட்டுக்கு தான் வரவிருப்பதாகவும் அங்கு வந்து தன்னைச் சந்திக்கும்படியும் காந்தியடிகள் பதில் எழுதியிருந்தார். உடனே தந்தையாரின் சம்மதத்தோடு பம்பாய்க்குச் சென்று மாநாட்டில் கலந்துகொண்டார் அம்புஜம்மாள். தினந்தோறும் காந்தியடிகளைச் சந்தித்து உரையாடுவதும், அவரோடு மற்ற தலைவர்கள் நிகழ்த்தும் உரையாடல்களைக் கேட்பதும் அவருக்கு மகிழ்ச்சியளித்தது. இறுதிநாளன்று புறப்படும் முன்பாக காந்தியடிகள் சில நாட்கள் கழித்து ஆசிரமத்துக்கு வருமாறு அம்புஜம்மாளிடம் கேட்டுக்கொண்டார்.
ஊருக்குத் திரும்பிய சில நாட்களிலேயே மீண்டுமொரு பயணம் என்பதால் அவர் தந்தையார் சம்மதிக்கவில்லை. உடனே காந்தியடிகள் கையாளும் உண்ணாவிரதக்கொள்கை அம்புஜம்மாளின் நினைவுக்கு வந்துவிட, தன் கோரிக்கையை ஏற்றுக்கொள்கிறவரைக்கும் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக குடும்பத்தினரிடம் அறிவித்தார். உண்ணாவிரதம் என்பது மிகச்சிறந்த வழிமுறை. ஆனால் நம் கருத்தை எவரிடம் முன்வைக்கிறோமோ அவர் நம்மீது அன்புள்ளவராக இருத்தல் வேண்டும். மேலும் நம் கோரிக்கையும் நியாயமானதாகவும் இருக்கவேண்டும். அக்கோரிக்கையில் உண்மையிலேயே நமக்கு ஆர்வம் இருக்கவேண்டும்.
இதன்படி இருந்தால்தான் நாம் உண்ணாவிரதத்தை மேற்கொள்ளலாம் என்பது காந்தியடிகளின் கருத்து.
இரண்டு நாட்கள் கடந்த பின்னும் அவர் தந்தையார் தன் முடிவில் உறுதியாகவே இருந்தார். மூன்றாவது நாள் செய்தியைக் கேள்விப்பட்டு இந்தி பிரச்சார சபையைச் சேர்ந்த ஹரிஹரசர்மா நேரில் வந்து பார்த்துவிட்டுச் சென்றார். அவர் உடனே அத்தகவலை காந்தியடிகளுக்கு தந்தி வழியாக தகவலைத் தெரிவித்துவிட்டார். மறுநாள் காந்தியடிகளிடமிருந்து ஒரு தந்தி அம்புஜம்மாளுக்கு வந்து சேர்ந்தது. அதில் “உன்னுடைய உண்ணாவிரதம் உன் பெற்றோருக்கு மிகவும் மனவருத்தத்தை அளித்திருப்பதாக அறிந்துகொண்டேன். உடனே இதைக் கைவிடவும். உன் விருப்பம் உண்மையானதென்றும் நீ ஆசிரமத்துக்கு வருவதால் உனக்கும் மற்றவர்களுக்கும் நன்மையே விளையுமென்றும் உன் பெற்றோர் உணரும் வகையில் பணிவுடன் விளக்கிச் சொல்லி, அவர்கள் சம்மதம் கிடைத்த பிறகு நீ ஆசிரமத்துக்கு வந்தால் போதும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதைப் படித்த பிறகும்கூட அம்புஜம்மாள் தன் உண்ணாவிரதத்தைக் கைவிட மறுத்துவிட்டார். நான்காம் நாள் காலையில் அவருடைய தந்தையாரே நேரில் வந்து உண்ணாவிரதத்தைக் கைவிடும்படியும் சில நாட்களில் தானே அழைத்துச் சென்று ஆசிரமத்தில் விடுவதாகவும் சொன்னார். அதன் பிறகே அம்புஜம்மாள் தன் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார். கருத்துவேறுபாடு காரணமாக சீனிவாச ஐயங்கார் காங்கிரஸைவிட்டு விலகி சில ஆண்டுகள் கடந்திருந்தன. சில விஷயங்களில் காந்தியின் கருத்துகளை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. அரசியல் செயல்பாடுகளிலிருந்து முற்றிலுமாக அவர் விலகியிருந்தார். ஆயினும் அம்புஜம்மாளுக்காக அவர் ஆசிரமத்துக்கு வந்தார்.
சீனிவாச ஐயங்காரைப் பார்த்து மிகவும் மகிழ்ந்தார் காந்தியடிகள். “அம்புஜம் பற்றி நீங்கள் கவலையற்று இருக்கலாம். இங்கு அம்புஜம் என் மகளைப்போல இருப்பாள்” என்று சொல்லி அவரை அனுப்பிவைத்தார். அதிகாலைப் பிரார்த்தனை, நடைப்பயிற்சி, இராட்டையில் நூல்நூற்றல், எல்லோரும் கூடி உணவுண்ணுதல், ஆசிரம வேலைகளைப் பகிர்ந்து கொள்தல், நோயுற்றவர்களைக் கவனித்தல், கிணற்றடியில் நீர் நிரப்புதல், மாலை நடை என ஆசிரமத்து வேலைகளில் அம்புஜம்மாள் உற்சாகமாக ஈடுபட்டார். காந்தியடிகளுடன் அனைவரும் நிகழ்த்தும் உரையாடல்கள் வழியாக பல அரசியல் விஷயங்களைப் புதிதாகத் தெரிந்துகொண்டார். ஏறத்தாழ இரண்டரை மாத ஆசிரம வாசத்துக்குப் பிறகு ஊருக்குத் திரும்பினார்.
ஊர் திரும்பியதும் இந்திய மாதர் சங்கத்தின் பொறுப்பை ஏற்று
பல பெண்களுக்கு நூல்நூற்கும் பயிற்சியையும் தையல் பயிற்சியையும் அளித்தார். ஓய்வு நேரத்தில் இந்தி மொழியைக் கற்றுக்கொடுத்தார். பிறகு சங்கத்தின் சார்பாக ஒரு கூட்டுறவு விற்பனை நிலையத்தைத் தொடங்கி ஏழைப்பெண்கள் செய்து வரும் பொருட்களை விற்று பணம் சம்பாதிப்பதற்கான ஒரு மையமாக நடத்தினார்.
1941ஆம் ஆண்டில் ஓய்வெடுப்பதற்காக கொடைக்கானலுக்குச் சென்றிருந்த சீனிவாச ஐயங்கார் எதிர்பாராத விதமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு திடீரென இயற்கையெய்தினார். பிறந்ததிலிருந்தே தந்தையின் அருகாமையிலேயே வளர்ந்ததால், அவருடைய மரணத்தை அம்புஜம்மாளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அந்த அதிர்ச்சியிலிருந்து மீள அவருக்கு சிறிது காலம் பிடித்தது. வெகுகாலமாகவே அணியாமல் இரும்புப்பெட்டியில் முடங்கிக்கிடக்கும் தன் வைர நகைகளையும் தங்க நகைகளையும் தேச சேவைக்காக காந்தியடிகளிடம் கொடுத்துவிடவேண்டும் என்பது அவருடைய எண்ணமாக இருந்தது. ஆயினும் தந்தையாரின் அனுமதி இல்லாமல் அவற்றை எடுத்துக் கொடுப்பதற்கு அவருக்கு விருப்பமில்லை. தன் முடிவை ஒருவேளை தன் தந்தையார் ஏற்றுக்கொள்ளாவிட்டால் என்ன செய்வது என்கிற அச்சத்தாலும் தயக்கத்தாலும் அவர் உயிருடன் இருக்கும்வரை அவரிடம் தெரிவிக்காமலேயே காலம் தாழ்த்திவந்தார்.
அவர் மறைவுக்குப் பிறகு குடும்பப்பொறுப்பு தன் கைக்கு வந்ததால் தன் விருப்பத்தை இப்போதாவது நிறைவேற்றிக்கொள்ளலாம் என நினைத்தார் அம்புஜம்மாள். தன் அம்மாவிடம் தன் விருப்பத்தைத் தெரிவித்து அவர் எண்ணத்தை அறிந்துகொள்ள நினைத்தார். “உன் விருப்பம்போலச் செய் மகளே” என்று அவரும் சொல்லிவிட்டார். உடனே அம்புஜம்மாள் அனைத்து நகைகளையும் எடுத்துக்கொண்டு சேவாகிராமத்துக்குச் சென்று காந்தியடிகளிடம் ஒப்படைத்தார். ”இந்த நகைகளை விற்பதன்மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து உன் பெயராலேயே ஒரு உதவித்தொகை திட்டத்தைத் தொடங்கி மகிளாஸ்ரமத்தில் படிக்கும் ஒரு பெண்ணுக்கு கல்விவாய்ப்பு அமையும்படி செய்கிறேன்” என்று காந்தியடிகள் கூறினார். மேலும் அம்புஜம்மாளிடம் “உன் தந்தையார் மறைந்ததை நினைத்து துயரத்தில் மூழ்கியிருக்காதே. உன் மகன் நலத்தைக் கவனித்துக்கொள். நீ விரும்பும்போதெல்லாம் இங்கு வந்து தாராளமாக சில நாட்கள் தங்கிவிட்டுச் செல்லலாம்” என்று சொன்னார். மேலும் “நீ ஊருக்குத் திரும்பியதும் பெண்களுக்காக ஓர் ஆசிரமத்தை நிறுவி அவர்கள் வாழ்க்கையில் தன் சொந்தக்காலில் நிற்கும்படி கைத்தொழில்களில் திறமை பெறும் வகையில் சேவை செய்” என்று ஆலோசனை வழங்கி ஆசி கூறி அனுப்பிவைத்தார்.
தொடர்ச்சியாக பர்மா அகதிகளுக்கான சேவை, மகளிருக்கான சேவை என காலம் உருண்டோடியபடி இருந்ததில். காந்தியின் ஆணையை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்பட்டது. ஒருவழியாக தன் வீட்டுக்கு அருகிலேயே தனக்குச் சொந்தமாக இருந்த ஒரு துண்டு நிலத்தில் ஒரு கட்டடத்தைக் கட்டி முடித்தார். அதுவரை வாடகையிடத்தில் இயங்கிவந்த மகளிர் ஆசிரமம் அந்தக் கட்டடத்துக்கு மாற்றப்பட்டது.
நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்த நாளில் ஆசிரமம் முழுவீச்சுடன் இயங்கியது. அதில் காந்தியடிகளின் விருப்பப்படி பெண்களுக்கான எல்லாப் பயிற்சிகளும் வழங்கப்பட்டன. பால்பண்ணையும் குடிசைவாழ் குழந்தைகளுக்காக ஆதாரக்கல்வி வகுப்பும் தொடங்கப்பட்டன. அந்தக் கட்டடத்தைக் காண்பதற்குக் காந்தியடிகள் வரக்கூடும் என ஆவலுடன் காத்திருந்தார் அம்புஜம்மாள். எதிர்பாராத விதமாக காந்தியடிகள் சுட்டுக்கொல்லப்பட்ட செய்தியை அறிந்து அதிர்ச்சியில் உறைந்துபோனார். சொந்தத் தந்தையையும் இழந்து ’என் மகளாகப் பார்த்துக்கொள்வேன்’ என்று சொன்ன தந்தையையும் இழந்து மனம் வாடினார். இருவரின் நினைவாக சீனிவாச காந்தி நிலையம் என்றே அந்தக் கட்டடத்துக்குப் பெயரிட்டார். ஒன்றிரண்டு ஆண்டுகளில் அதை மேலும் விரிவுபடுத்தி ஒரு மருத்துவக்கூடம், ஒரு மதிய உணவுக்கூடம், பெண்களுக்கென ஓர் அச்சகம், தையல் வகுப்பும் பாட்டு வகுப்பும் முதியோர் வகுப்பும் நிகழ்த்துவதற்கான தனித்தனி கூடங்கள் அனைத்தும் கொண்டதாக வடிவமைத்தார்.