எங்கள் வண்டி வராத சாலையில்
ஏகப்பட்ட வாகனங்கள்
சத்தம் கேட்டுத் திரும்பினேன்
சண்டையைக் கண்டு அதிர்ந்தது மனம்
சற்று முன்பு பார்த்தபோது எதுவுமில்லை
அங்கு பாதசாரிகள் மட்டுமே நடமாடிக் கொண்டிருந்தனர்
முகம் நெஞ்சு வயிறெங்கும்
மாறி மாறிக் குத்துகள் விழுந்தன
ஆடைகள் கிழிந்து கந்தலாயின
பல் உடைந்து ரத்தம் ஒழுகியது
அவர்களின் புகார்கள் காதில் விழவில்லை
அச்சண்டைக்குக் காரணமும் புரியவில்லை
சுற்றி நின்ற ஒரு கும்பல்
சுவாரஸ்யம் ததும்ப பார்த்துக் கொண்டிருந்தனர்
சாலைக்கு இந்தப் பக்கம் நாங்களும் பார்த்துக்
கொண்டிருந்தோம்
அருகிலிருந்த கல்லைப் புரட்டியெடுத்தான்
ஒருவன்
கத்தியை உருவி நீட்டினான் இன்னொருவன்
இருவர் கண்களிலும் கொலைவெறி மின்னல்
பரபரப்பு பெருகிய கணத்தில்
குலுங்கி வந்து சேர்ந்தது எங்கள் வாகனம்
இடிபட்டு மிதிபட்டு
வசைபட்டு பட்டுப்பட்டு
உள் நுழைந்து நின்றபோது
கற்பனைப் பரப்பில் கேள்வியாய் எழுந்தது ,
சண்டைக் காட்சியின் முடிவு
.
(பிரசுரமாகாத்து, 1994)