பரிசுச் சீட்டுகளின் பெயர் சொல்லி
ஆளற்ற வெளியில் விற்கிறான் அக்குருடன்
அவன் குரலில் ஆவல் தொனிக்கிறது
காற்றில் படபடக்கும் தாள்களை
விரல் நுனிகளால் அழுத்தித் தடுக்கிறான்
நீளும் தன் கையைப் பற்றி
ஒன்றோ இரண்டோ வாங்குபவரை எதிர்பார்த்து
அடிமேல் அடி வைக்கிறான்
மெல்ல மிக மெல்ல இறைஞ்சும் அவன் குரல்
யாரோ ஒருவனுக்காகக் காத்திருக்கிறது
தான் ஏமாந்து கொண்டிருப்பது
அக்குருடனுக்குச் சிறிதும் விளங்கவில்லை
சிறிது நேரத்துக்கு முன் பொழிந்த மழையில்
ஆட்கள் கரைந்து போனதை
அவன் உணரவில்லை
நடமாட்டத்தை துல்லியமாய்க் கணிக்கும் அவன்
காதுகளை
வஞ்சித்தது எதுவென்று தெரியவில்லை
யாரும் முன் வராததை உணர்ந்த பின்பும்
அக்குரலில் சலிப்பே படியவில்லை
அவனுக்கு உற்ற துணையாக
அக்குரல் தெம்பூட்டிக் கொண்டிருக்கிறது
அவன் விலகிச் செல்லச் செல்ல
அக்குரலும் அவனோடு செல்கிறது
ஒரே சீராக அழைப்பை முன்வைத்து
(பிரசுரமாகாதது, 1994)