Home

Tuesday 24 December 2019

சத்தியத்தின் ஆட்சி - காந்திய ஆளுமைகளின் கதைகள் -முன்னுரை




ஏதோ ஒரு புத்தகத்தைப்பற்றி ஒருநாள் இணையத்தில் தேடிக்கொண்டிருந்தபோது தற்செயலாக இலங்கையைச் சேர்ந்த இராஜகோபால் என்பவர் எழுதிய தன்வரலாற்று நூல் கிடைத்தது. தன்வரலாற்று நூல்களை வாசிப்பதில் எப்போதும் பெருவிருப்பம் கொண்டவன் நான். நாடகம், திரைப்படம், அறிவியல், அரசியல் என எந்தத் துறையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் எழுதிய தன்வரலாற்று நூல்களை ஆர்வமுடன் படித்துவிடுவேன். அவர்கள் வாழ்வில் நடைபெற்ற நிகழ்ச்சிகளையும் அவர்கள் வழியாக மெளனமாகக் கடந்துபோகும் வரலாற்றையும் அறிந்துகொள்வதை, அவர்களுடைய அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவன் என்னும் முறையில் என்னுடைய கடமை என்றே நான் நினைக்கிறேன். நூற்றுக்கும் மேற்பட்ட பக்கங்களை உடைய அந்தப் புத்தகத்தை கணிப்பொறியிலேயே படிக்க நான் விரும்பவில்லை. என்னால் அப்படி படிக்கவும் முடியாது. அதனால் உடனே கடைக்குச் சென்று அந்தப் புத்தகத்தை அச்சுப்படியாக மாற்றி எடுத்துவந்து அன்று இரவே படித்துமுடித்தேன்.




இராஜகோபால் இலங்கையில் பிறந்தவர். காந்தியடிகள் அங்கே ஒரு பொதுநிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் சென்றிருந்தபோது, அவர் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு இந்தியாவுக்கு வந்து தமிழகத்தில் நடைபெற்ற விடுதலைப்போராட்டங்களில் கலந்துகொண்டு சிறையில் துன்பப்பட்டார்விடுதலைக்குப் பிறகு குடும்பத்தினரின் அழைப்பை தட்டமுடியாமல் மீண்டும் இலங்கைக்குச் சென்று காந்திய வழியில் மக்களுக்குச் சேவையாற்றினார். அவர் எழுதிய தன்வரலாற்றைப் படித்த பிறகு, நண்பர்கள் அனைவரோடும் அவரைப்பற்றி ஓயாமல் பேசிக்கொண்டே இருந்தேன். எல்லோருக்குமே அவருடைய பெயர் புதிதாகவே இருந்தது. அப்போதுதான் அவரைப்பற்றி ஒரு கட்டுரை எழுத முடிவெடுத்தேன். அதை எழுதி முடித்த கணத்தில், அவரைப்போலவே காந்தியக்கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு சேவையாற்றிய ஆளுமைகளைப்பற்றி எழுதித் தொகுக்கவேண்டும் என்னும் விருப்பம் பிறந்தது. அதற்குப் பிறகு எனக்குத் தேவையான தகவல்களுக்காக நூலக அடுக்குகளில் தேடினேன். இணையப்பக்கங்களைத் திறந்துவைத்துக்கொண்டு புரட்டிக்கொண்டே இருந்தேன். தெரிந்த நண்பர்களிடம் விசாரித்தேன். நான் அணுகிய ஒவ்வொருவரும் எனக்கு அன்புடன் உதவினார்கள். கே.பி.நாகராஜன், சித்ரா, விஜயன், ஜெயஸ்ரீ, ரஞ்சனி, நரேந்திரகுமார், சுபாஷிணி, நல்லதம்பி, எஸ்.திவாகர், ஜெயந்தி என பல நண்பர்கள் எனக்குத் தேவையான பல புத்தகங்களைத் தேடியெடுத்துக் கொடுத்தார்கள். அவர்கள் அனைவரையும் இக்கணத்தில் நன்றியுடன் நினைத்துக்கொள்கிறேன்.
இப்படி ஒரு தொகுப்பை உருவாக்கவேண்டும் என்னும் விருப்பத்தோடு அலைந்துகொண்டிருந்த சமயத்தில், ஒருநாள் நண்பர் விட்டல்ராவ் அவர்களைச் சந்திக்கச் சென்றிருந்தேன். அவருடன் உரையாடுவது என்பது பத்து புத்தகங்களைப் படிப்பதற்குச் சமமான அனுபவம். நடமாடும் தகவல் களஞ்சியம் அவர். என்னைப் பார்க்க நேரும் ஒவ்வொரு தருணத்திலும் புன்னகையோடுஎன்ன எழுதறீங்க இப்ப?” என்ற கேள்வியோடுதான் உரையாடலைத் தொடங்குவார். அன்றும் அந்தக் கேள்வியைக் கேட்டார். நான் உடனே என் விருப்பத்தைச் சொல்லிவிட்டு, அதுவரை நான் எழுதிய ஆளுமைகளைப்பற்றியும் சொன்னேன். அவர் அனைத்தையும் அமைதியுடன் கேட்டுக்கொண்டார்.
சில கணங்களுக்குப் பிறகுநீங்க சொல்றத கேக்கறப்போ, ஒரு பழைய சம்பவத்தை உங்ககிட்ட சொல்லணும்ன்னு தோணுதுஎன்றார். நான் உடனேசொல்லுங்க சார்என்றேன்.
பல வருஷங்களுக்கு முன்னால தினமணி கதிருக்கு சாவி ஆசிரியரா இருந்தார். அப்ப அடிக்கடி நான் அவர பார்க்கறதுக்காகப் போவேன். எல்லா பத்திரிகைக்காரங்களும் கல்கத்தா மலர், பம்பாய் மலர்ன்னு பேரு வச்சி புதுசுபுதுசா புத்தகங்கள் தயாரிச்சிட்டிருந்த நேரம் அது. நம்ம பத்திரிகையும் புதுமையா ஒன்னு செய்யணும். ஆனால் மத்தவங்க செய்யறமாதிரி இருக்கக்கூடாது.  உங்களுக்கு ஏதாவது ஐடியா கிடைச்சா சொல்லுங்கன்னு சாவி கேட்டார். நான் உடனே அந்த ஊர் இந்த ஊர்னு எதுக்கு சார் அலையணும்? நம்ம சென்னையை பத்தியே நாம நிறைய எழுதவேண்டியிருக்குது சார். ஆழ்வார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, சிந்தாதிரிப்பேட்டை, சைதாப்பேட்டைன்னு சென்னையிலேயே இருக்கிற பேட்டைகள் பத்தி சிறப்புமலர் போடலாம்னு சொன்னேன்.”
நான் அவர் முகத்தையே பார்த்தபடி இருந்தேன். அவர் தன் பேச்சின் வழியாக அந்தக் காலத்துக்கே சென்றுவிட்டார். அவருக்கு முன்னால் மானசிகமாக சாவி உட்கார்ந்திருப்பதுபோலவே இருந்தது.
அந்தத் திட்டம் அவருக்கு ரொம்ப புடிச்சிட்டுது. உடனே நீங்களே பொறுப்ப எடுத்துக்குங்க. தேவையான தகவல்களை திரட்டி எழுதிக் கொடுங்க. நம்ம அலுவலகத்தில இருக்கிற இதயனையும் துணைக்கு அழைச்சிகிட்டு போங்கன்னு சொல்லிட்டார். அடுத்த நாளே நானும் இதயனும் ஆழ்வார்பேட்டைக்குப் போனோம். முதல்முதலா நாங்க அம்புஜம்மா வீட்டுக்குத்தான் போனோம். காந்தியுடைய சாம்பல் மேல் கட்டப்பட்ட ஒரு சின்ன நினைவிடம் அங்கே இருக்குது. அதையெல்லாம் படம் புடிச்சிகிட்டு அந்த அம்மாவோடு பேசிட்டிருந்தோம். அவுங்க உற்சாகமா சுதந்திரப் போராட்ட காலத்தை பத்தி பேசினாங்க. காந்தி வந்து அவுங்க வீட்டுல தங்கினத பத்தியெல்லாம் சொன்னாங்க. கெளம்பற சமயத்துல இங்க பக்கத்துலதான் பாஷ்யம் ஐயங்கார் வீடு இருக்குது. அவர் இல்ல. தவறிட்டார். ஆனா அவுங்க மனைவி இருக்காங்க. சுதந்திரப்போராட்டத்துல கலந்துகிட்டு ஜெயிலுக்கு போனவர் அவர். ஜெயில்ல சாட்டையடி வாங்கினவர். அவர பத்தியும் எழுதுங்கன்னு சொல்லி அனுப்பினாங்க
விட்டல்ராவ் உரையாடலில் அடுக்கடுக்கான சுவாரசியமான தகவல்கள் வந்துகொண்டே இருப்பதை பலமுறை கேட்ட அனுபவத்தில் நான் குறுக்கே எதுவும் கேட்காமல் அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன்.
பாஷ்யம் ஐயங்கார் மனைவி பல தகவல்கள் சொன்னாங்க. ஐயங்கார் முதுகில இருக்கிற தழும்புக்கோடுகளோடு அந்தக் காலத்துல யாரோ சில போட்டா எடுத்திருக்காங்க. அதயெல்லாம் காட்டினாங்க. நம்ம பத்தியெல்லாம் சொல்றதுக்கு பல பேர் இருக்காங்க. நீங்க முக்கியமா சந்திக்கவேண்டிய ஒருத்தர் இங்க பக்கத்துலயே இருக்காரு. அவர் நாவிதர். இதே தெருவுல கடைசியா கடை வச்சிருக்கார். அவரயும் நீங்க கண்டிப்பா பாக்கணும்னு சொல்லி அனுப்பினாங்க. ஒரே இடத்துல இவ்வளவு விஷயங்களான்னு எங்களுக்கு ஒரே ஆனந்தம். உடனே நாங்க அந்த அம்மா சொன்ன கடைக்குப் போனோம். அப்ப பெரியவர் இல்ல. சின்ன வயசு தம்பி ஒருத்தர்தான் இருந்தார். அப்பா இப்ப வந்துருவாங்க. உக்காருங்கன்னு சொன்னார். உட்கார்ந்துட்டு நிமுந்து பார்த்தா, சுவர் முழுக்க ஏராளமா காந்தி படங்கள். எங்கயோ எடுத்த போட்டாக்களுக்கு கண்ணாடி போட்டு வச்சிருக்காங்க. வழக்கமான படங்கள் தொங்கற கடைமாதிரி இல்லை. உடனே எழுந்து நின்னு நிதானமா ஒவ்வொரு படமா பார்த்தோம். காந்தியோடு இருப்பது எங்க அப்பா சார்னு அந்தத் தம்பிதான் சொன்னாரு. அதோ கதவை ஒருபக்கமா கையால புடிச்சிட்டு காந்தி உள்ள வரமாதிரி இருக்குதே, அது இந்தக் கடைதான் சார்னு சந்தோஷமா சிரிச்சாரு
விட்டல்ராவ் சொல்லச்சொல்ல என்னால் அந்தக் காட்சியை ஒரு சித்திரமாக மனத்துக்குள் எழுப்பிக்கொள்ளமுடிந்தது. அவர் சொற்கள் வழியாக என்னால் மிக எளிதாக அரைநூற்றாண்டைக் கடந்துசெல்ல முடிந்தது.
கொஞ்ச நேரத்துல அவர் அப்பா வந்துட்டாரு. நாங்க அவருக்கு வணக்கம் சொன்னோம். என்ன, ஐயங்கார் வீட்டம்மா அனுப்பினாங்களான்னு சிரிச்சிகிட்டே கேட்டார். நாங்களும் சிரிச்சோம். வந்த விஷயத்தை சொன்னோம். இந்த படங்களயெல்லாம் பார்த்தீங்களா, அதெல்லாமே காந்தி இங்க வந்த சமயத்துல எடுத்ததுன்னு சொல்லிட்டு ஒரு நிமிஷம் மனசுக்குள்ளயே எதையோ அசைபோட்டார். காந்தி வந்து தங்கின இடம் சார் நம்ம ஆழ்வார்பேட்டை. அப்ப இங்க நான் மட்டும்தான் கடை வச்சிருந்தேன். ஒருநாள் அவர் முடிவெட்டிக்கறதுக்காக இங்க வந்தாரு. என்ன பாத்து அவர் சிரிச்ச சிரிப்பை என்னால மறக்கவே முடியாது சார். ஒரு தெய்வீகச் சிரிப்பு சார் அது. என்ன பார்த்து வணக்கம்ன்னு சொன்ன ஒரே மனிதர் இந்த உலகத்துலயே அவர்மட்டும்தான் சார். சிரிச்சிகிட்டே மேசைமேல வச்சிருந்த கத்திரிக்கோல், கட்டிங் மிஷின் எல்லாத்தயும் எடுத்து எடுத்து பாத்தாரு. என்ன பார்த்து எனக்கும் முடிவெட்டத் தெரியும்,  உங்களுக்கு வெட்டி விடட்டுமான்னு கேட்டாரு. எனக்கு உடம்பே சிலிர்த்துப்போச்சி. அன்னைக்கு முழுக்க நான் அவர் கூடவே இருந்தேன் சார். அவருடைய வண்டியிலயும் என்னையும் ஏத்திகிட்டாரு. அவரு சாப்படற இடத்துல என்னயும் பக்கத்துல உக்காரவச்சி சாப்படச் சொன்னாரு. ஊட்டுக்கு வந்ததுமே ஊர்காரங்க எல்லாருமே என்ன பாக்க வந்துட்டாங்க. காந்தி உன்ன தொட்டாரா, காந்தி உன்கிட்ட பேசினாரான்னு ஆயிரம் கேள்வி. அவர் புடிச்ச கையா இதுன்னு என் கையை புடிச்சி தொட்டு கும்புடு போட்டுட்டு போனாங்க. வாழ்க்கையில அதெல்லாம் மறக்கவே முடியாத அனுபவம் சார். அவர சுட்டுட்டாங்கன்னு கேள்விப்பட்டதும் ரெண்டுநாள் சாப்பாடு தூக்கமில்லாம கெடந்தேன் சார்னு நிறுத்தாம பேசிட்டே இருந்தார்
அந்த நாவிதரைப்பற்றிய குறிப்பு எனக்கும் மன எழுச்சி ஊட்டுவதாக இருந்தது. அந்தச் சித்திரத்தை என்னுடைய குறுக்கீட்டால் கலைத்துவிடக் கூடாதென்பதற்காக அமைதியாக அவர் பேசுவதைக் கேட்டபடி உட்கார்ந்திருந்தேன்.
அம்புஜம்மாவைப் பத்தியோ, பாஷ்யம் ஐயங்காரைப் பத்தியோ எழுதறதுக்கு நிறைய பேர் இருப்பாங்க. அவுங்கள்ளாம் வரலாற்றில தெளிவா தெரியக்கூடிய உருவங்கள். ஆனா, இந்த நாவிதர் மாதிரியான மனிதர்களைப் பத்தி நம்மப்போன்ற ஆட்கள் எங்கனா எழுதி வச்சாத்தான் உண்டு பாவண்ணன். நான் அவரைப்பத்தி தனியா ஒரு கட்டுரையையே எழுதி கொடுத்திருந்தேன். கிட்டத்தட்ட பத்து நாள் நானும் இதயனும் அலஞ்சி திரிஞ்சி மணலி ராமகிருஷ்ணன், செளந்திரா கைலாசம்னு பல பேர பாத்து அந்த மலருக்கான விஷயங்கள சேகரிச்சி கொடுத்தோம். ஆனா அந்த மலர் வரவே இல்லை. ஒருநாள் மலர் என்ன சார் ஆச்சின்னு சாவிகிட்ட கேட்டேன். நிர்வாகம் ஒத்துக்கலை, நீங்களும் மத்தவங்களப்போல மைசூர் மலர், உதகை மலர்னு போடுங்கன்னு சொல்லிட்டுதுன்னு உதட்ட பிதுக்கிட்டார்.”
விட்டல்ராவ் வீட்டிலிருந்து வீட்டுக்குத் திரும்பும் வழிமுழுதும் நான் அந்த நாவிதரைப்பற்றியே நினைத்துக்கொண்டிருந்தேன்.  அவினாசி சாலையில் உள்ள சொக்காம்பாளையம் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் காந்தியடிகள் தம் ஊருக்கு வரவேண்டும் என்பதற்காக ஒரே இரவில் சாலைபோட்டு முடித்த செய்தியைப் பற்றிய தகவலும் அக்கணத்தில் நினைவில் மோதியது. எளிமையான மக்களின் மனத்தில் காந்தியடிகளால் இடம்பிடிக்க முடிந்ததே அவருடைய சிறப்பு. காந்தியடிகளைக் கண்டவர்களும் அவரோடு பழகியவர்களும் உடை அணிவதிலாகட்டும், பிறருடன் பழகுவதிலாகட்டும், பொதுவெளியில் நடந்துகொள்ளும் முறையிலாகட்டும், உடைமைகளை உதறுவதிலாகட்டும் ஏதோ ஒரு விதத்தில்  காந்தியடிகளைப் பின்பற்றத் தொடங்கிவிடுகிறார்கள். அவருடைய ஆளுமைக்கு அனைவரையும் இயக்கும் விசை இருந்தது.
அவர் வழியாக தன் வாழ்க்கையின் திசையைத் தீர்மானித்துக்கொண்ட ஆளுமைகள் பலர் இந்தியாவெங்கும் இருந்தனர். அவர்களில் பலர் இப்போது வெறும் பெயர்களாக மட்டுமே நினைவுகூரப் படுகிறார்கள். அவர்களுடைய தியாகத்தை உரமாக தனக்குள் உள்வாங்கிக் கொண்ட மண்ணில் பிறந்த நமக்கு அவர்களுடைய நினைவுகளைப் போற்றவேண்டிய கடமை இருக்கிறது என்பது என் நம்பிக்கை. என்னால் தேடியெடுக்க முடிந்த தகவல்களின் அடிப்படையில் இத்தொகுதியை உருவாக்கியிருக்கிறேன். இப்பட்டியலில் பலர் விடுபட்டுள்ளார்கள் என்பதை அறிவேன். அவர்களைப்பற்றிய தகவல்களைச் சேகரிக்கும் முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறேன். கூடிய விரைவில் மற்றொரு தொகுதியையும் உருவாக்கவேண்டும் என்பது என் விருப்பம்.
இக்கட்டுரைகளை எழுதத் தொடங்கிய நாள்முதலாக காந்தியடிகளை நினைக்காத நாளே இல்லை. என் துணைவியோடும் மகனோடும் உறவினர்களோடும் நண்பர்களோடும் உரையாட நேரும் ஒவ்வொரு தருணத்திலும் ஏதோ ஒரு விதத்தில் காந்தியடிகளைத் தொட்டுப் பேசுவது வழக்கமாகிவிட்டது. அவர் கட்டுரை வரிகளும் கடித வரிகளும் ஒன்றையடுத்து ஒன்றாக நினைவுக்கு வந்தபடியே இருந்தன. என் வாழ்க்கையைத் தகவமைத்துக்கொள்ள பல வகைகளில் காந்தியடிகள் எனக்கு உதவியிருக்கிறார். காலேல்கர் போலவோ, மகாதேவ தேசாய் போலவோ, காந்தியடிகளுக்கு பக்கத்திலேயே இருந்து தொண்டாற்றும் வாய்ப்பு கிடைத்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று நினைக்காத நாளே இல்லை. காந்தியடிகளின் சொற்களை தன் வாழ்நாளுக்குரிய கட்டளையாக எடுத்துக்கொண்டு, உயிர்த்திருந்த காலம் முழுதும் கடமையுணர்ச்சியுடன் தொண்டாற்றிய ஆளுமைகளைப்பற்றிய இக்கட்டுரைத்தொகுதியை காந்தியடிகளுக்கு வணக்கத்துடன் சமர்ப்பணம் செய்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
இத்தொகுதியில் அடங்கியிருக்கும் சில கட்டுரைகள் அம்ருதா, சர்வோதயம் மலர்கிறது, கணையாழி ஆகிய இதழ்களில் வெளிவந்தவை. இவ்விதழ்களின் ஆசிரியர்களுக்கு என் அன்பும் நன்றியும். என் துணைவி அமுதாவின் அரவணைப்பும் ஊக்கமும் என் எல்லா எழுத்து முயற்சிகளிலும் துணையாக விளங்குபவை. அவரையும் இக்கணத்தில் எண்ணிக்கொள்கிறேன். இந்தக் கட்டுரைத்தொகுதியை மிகச்சிறந்த முறையில் வெளியிட்டிருக்கும் என் அன்புக்குரிய நண்பரும் பதிப்பாசிரியருமான சந்தியா நடராஜனுக்கும் என் மனமார்ந்த நன்றி