குழந்தையைப்
பின்தொடரும் காலம்
நிரம்பி வழியும் ஏரியை
ஆனந்தம் பொங்கப் பார்க்கிறான் என் மகன்
அவன் கால்கள் பரபரக்கின்றன
கரையில் நின்று பாதங்களை நனைக்க
ஆவலுடன் என்னையும் அழைக்கிறான்
தழுவி விலகும் சிற்றலைகளை
ஆர்வத்துடன் கவனிக்கின்றன அவன் கண்கள்
உடல் சிலிர்க்கக் கைகுவித்து
நீரை அள்ளி அள்ளி நழுவவிடுகிறான்
இவ்வளவு தண்ணீர் எப்போது நிரம்பியது
என்று கேட்கிறான்
எந்த வழியாக வந்ததென்றும்
வீடுவரை வராதது ஏனென்றும் வினவுகிறான்
நடுவிலிருந்த செடிகளும் புதர்களும்
நாசமாகிவிட்டதா என்று சந்தேகப்படுகிறான்
'எனக்குத் தெரியும் மந்திரத்தால்
தண்ணீரைப் பாயாய்ச் சுருட்டிவிடுவேன்' என்கிறான்
'புத்தம் புதிய ஓர் இடத்திற்கு
என் பின்னால் எல்லாரையும் அழைத்துச் செல்வேன்'
என்கிறான்
(குதிரைவீரன் பயணம், செப்டம்பர் 1994)