1921 ஆம் ஆண்டில் கதராடைகள் அணிவதையும் இராட்டையில் நூல் நூற்பதையும் வலியுறுத்தும் நோக்கத்துடன் காந்தியடிகள் தமிழகத்துக்கு வந்திருந்தார். அவர் பொதுவாக குஜராத்திய முறையில் எளிய வேட்டியும் மேல்சட்டையும் அணிவதுதான் வழக்கம். மதுரையை நோக்கிப் பயணம் செய்த வழியில் இடுப்பில் ஒரு துண்டை
மட்டுமே கட்டிக்கொண்டும் அல்லது
ஒரு நீண்டதொரு கோவணத்துணியை மட்டும்
அணிந்துகொண்டும் வேலை செய்த ஏழைகளைக் கண்டதும் துயரத்தில் ஆழ்ந்தார். இரவு முழுதும் அதைப்பற்றிய சிந்தனையிலேயே மூழ்கியிருந்தவர் மறுநாள் காலையிலிருந்து மேலாடையைத் துறந்து இடையில் கட்டிய வேட்டியுடன் மட்டும் நடமாடத் தொடங்கினார். இந்நிகழ்ச்சி நடைபெற்ற நாள் 22.09.1921.
அன்று காந்தியடிகள் ஒரு பொதுக்கூட்டத்திலும் உரையாற்றினார். கதராடை அணிவது ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான போராட்டத்தின் வழிமுறையாக எப்படி மாறுகிறது என்பதைப்பற்றியும் தேசத்துக்கு ஆற்றும் தொண்டாக எப்படிக் கருதப்படும் என்பதைப்பற்றியும் விரிவாக
மக்களுக்கு எடுத்துரைத்தார். அன்றைய நிகழ்ச்சியில் காந்தியடிகளின் உரையைக் கேட்டு எழுச்சி கொண்ட நூற்றுக்கணக்கான பார்வையாளர்களில் ஒருவராக பதினாறு வயது நிரம்பிய நா.ம.ரா.சுப்பராமன் (நாட்டாண்மை மல்லி ராயுலு சுப்பராமன்) என்னும் உயர்நிலைப்பள்ளி மாணவரும் இருந்தார். அக்கணமே அவர் மனத்தில் தானும் கதராடை அணிந்து சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபடவேண்டும் என்னும் ஆவல் பிறந்தது.
காந்தியடிகள் நடத்தி வந்த ’யங் இந்தியா’ இதழைத் தொடர்ந்து படித்துவந்த சுப்பராமனின் உள்ளத்தில் சேவையாற்றும் ஆர்வம் இயல்பாகவே ஊறிப் பெருகியது. ஆனாலும், நினைத்ததைச் செயல்படுத்த முடியாத சூழலில் தவித்தார் சுப்பராமன். இரண்டு சகோதரர்களும் ஆறு சகோதரிகளும் அவருக்கு இருந்தார்கள். அவருடைய மூத்த சகோதரரே அனைத்தையும் தீர்மானிக்கும் இடத்தில் இருந்தார். ஒரு தந்தையின் இடத்திலிருந்து அவருக்கும் குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கும் தேவையானதையெல்லாம்
செய்துவந்தார். சகோதரரை மீறி எதுவும் செய்யமுடியாத நிலையில் இருந்தார் சுப்பராமன். அது மட்டுமல்ல, பதினைந்து வயதிலேயே அவருக்குத் திருமணமும் நடந்துவிட்டிருந்தது. 1922 ஆம் ஆண்டில் அவர் பள்ளிப்படிப்பை முடித்ததும்
தொழிற்படிப்புக்காக
அவரை இங்கிலாந்துக்கு அனுப்பிவைக்க மூத்த சகோதரர் முடிவுசெய்திருந்தார். லண்டன் செல்வதற்குத் தேவையான அரசு அனுமதியும் வந்து சேர்ந்துவிட்டது. கப்பலில் செல்ல பயணச்சீட்டுகளுக்கான ஏற்பாடு நடந்துகொண்டிருந்தது. அவரைப் பார்க்கும் ஒவ்வொருவரும் வெளிநாட்டுப் பயணத்தைப்பற்றியே உரையாட முற்பட்டனர். அவையனைத்தையும் எப்படித் தடுப்பது என்று புரியாமல் குழம்பித் தவித்தார் சுப்பராமன்.
உண்மையைச் சொல்வதே சிறந்த வழியென நினைத்த சுப்பராமன் ஒருநாள் தன் சகோதரரிடம் தன் முடிவை நிதானமாக எடுத்துரைத்தார். அதுவரை அண்ணனின் கருத்துக்கு மாறாக எதுவும் பேசாத சுப்பராமன் முதன்முறையாக மாற்றுக்கருத்தொன்றை முன்வைத்ததைக் கண்ட குடும்ப உறுப்பினர்கள் அதிர்ச்சியில் மூழ்கினர். முதலில் திகைத்து நிலைகுலைந்தாலும், பிறகு தன் விருப்பப்படி நடப்பதற்கு தம்பிக்கு அனுமதியை வழங்கினார் மூத்த சகோதரர். அன்றே இங்கிலாந்து பயணத்துக்கான ஏற்பாடுகள் அனைத்தும் கைவிடப்பட்டன.
தாம் மேற்கொள்ளவிருந்த பொதுப்பணிக்குத் தகுதிபெறும் வகையில் ஏதேனும் ஆசிரமத்தில் இணைந்து பயிற்சி பெறும் நோக்கத்துடன் சபர்மதி ஆசிரமம், குஜராத் வித்யாபீடம், காசி இந்துக்கல்லூரி, சாந்தி நிகேதன் என எல்லா இடங்களுக்கும் சென்றார் சுப்பராமன். திருமணமானவர் என்பதாலேயே அவருக்கு எல்லா ஆசிரமங்களும் இடம் தரத் தயங்கின. ஏறத்தாழ ஓராண்டு கழிந்துவிட்ட நிலையில் அவர் நேரிடையாக காங்கிரஸ் அலுவலகத்துக்குச் சென்று உறுப்பினராகப் பதிவுசெய்துவிட்டு, மக்களுக்குத் தம்மாலியன்ற சேவைகளை ஆற்றத் தொடங்கினார். பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு காந்தியடிகளின் கொள்கைகளை விளக்கிப் பேசினார். ஒவ்வொருவரிடமும் கதரணியும்படி கேட்டுக்கொண்டார். அனைவருக்கும்
கதராடைகளைப் பரிந்துரைத்துவிட்டு தான்
மட்டும் கதரணியாமல் இருப்பது அவரைப் பெரிதும் குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கியது.
ஒருநாள் நண்பர்களுடன் சேர்ந்து ராமேஸ்வரம் சென்றபோது, அங்கு கடலில் நீராடி பழைய ஆடைகளைத் துறந்து கதராடைகளை அணிந்துகொண்டார் சுப்பராமன்.
அன்றுமுதல் அதுவே அவருடைய ஆடையாயிற்று. வீட்டுக்குத் திரும்பியதும் அவருடைய அன்னையும் மற்றவர்களும் திகைத்து அவருடைய வழக்கமான உடைகளை அணிந்துகொள்ளும்படி
மன்றாடிக் கேட்டுக்கொண்டனர். ஆனால், எல்லோருடைய வேண்டுகோளையும் சுப்பரமான் பணிவுடன் மறுத்துவிட்டு, கதராடையுடனேயே நடமாடத் தொடங்கினார்.
அதே ஆண்டில் காக்கிநாடாவில் நடைபெற்ற அனைத்திந்திய காங்கிரஸ் மாநாட்டுக்கு மதுரை நகரப் பிரதிநிதியாகச் சென்று கலந்துகொண்டார் சுப்பராமன். அன்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட காந்தியடிகள் அந்த மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை. அரசு அவரைக் கைது செய்து எரவாடா சிறையில் அடைத்திருந்தது. மாநாட்டுக்கு மெளலானா அபுல்கலாம் ஆசாத் தலைமை தாங்க, கஸ்தூர்பா, மோதிலால் நேரு, வல்லபாய் படேல், அன்சாரி, சரோஜினி நாயுடு போன்றோர் கலந்துகொண்டு உரையாற்றினார்கள். மாநாட்டிலிருந்து திரும்பியதும் காந்தியடிகளின் நிர்மாணப்பணிகளில் விசையுடன் செயல்படத் தொடங்கினார் சுப்பராமன்.
ஒருமுறை கோரிப்பாளையம் என்னும் இடத்தில் கள்ளுக்கடை மறியல் நடைபெற்றது. தற்செயலாக கடைக்காரர்களுக்கும் கள்ளருந்த வந்தவர்களுக்குமிடையில் வாக்குவாதம் நிகழ்ந்து, இறுதியில் கைகலப்பாக மாறிவிட்டது. எதிர்பாராத நேரத்தில், கலவரக்காரர்களால் கள்ளுக்கடை தீக்கிரையாக்கப்பட்டது. இதன் விளைவாக காவல்துறை தலையிட்டு துப்பாக்கிச்சூடு நிகழ்த்தியது. துப்பாக்கிக்குண்டுக்கு ஏழு பேர் பலியானார்கள். கலவரக்காரர்களோடு சேர்த்து கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டிருந்த தொண்டர்களையும் காவல்துறை கைது செய்து அழைத்துச் சென்றது. அதற்கு மறுநாளே, முன்னறிவிப்பின்றி நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டையும் தொண்டர்கள் கைது செய்யப்பட்டதையும் கண்டித்து சுப்பராமன் நகராட்சியில் தீர்மானமொன்றை நிறைவேற்றி கண்டனக்குரலுடன் தொண்டர்களைச் சேர்த்துக்கொண்டு மாசிவீதி வழியாக ஊர்வலமாகச் சென்றார். வழியிலேயே ஊர்வலத்தை நிறுத்திய காவல்துறை சுப்பராமனையும் தொண்டர்களையும் கைது செய்து சிறையிலடைத்தனர். இரண்டரை ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் கடலூர் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டார்.
சுப்பராமனைத் தொடர்ந்து அவருடைய மனைவி பர்வதவர்த்தினி அம்மையார் பெண் தொண்டர்களைத் திரட்டி கள்ளுக்கடை மறியலில் ஈடுபடத் தொடங்கினார். அவரையும் உடனடியாகக் கைது செய்தது காவல்துறை. பர்வதவர்த்தினி அம்மையாருக்கு ஆறுமாத காலம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
விடுதலை பெற்று ஊருக்குத் திரும்பியதும் கதராடை விற்பனைக்காக பாடுபட்டார் சுப்பராமன். தெருத்தெருவாக கதர்த்துணிகளை எடுத்துச் சென்று விற்று கதர்ப்பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வீடுதோறும் இராட்டையில் நூல்நூற்கும் பழக்கத்தை உருவாக்கினார். மதுரையில் அவரால் கதர்ப்பிரச்சாரம் ஓங்கியது. கதர் விற்பனையில் அனைத்திந்திய அளவில் மதுரைக்கு முதலிடம் கிடைக்க அவரே காரணமாக இருந்தார். அவருடைய பெயரை காந்தியடிகள் கவனித்துக் குறித்துக்கொண்டார். 1934 ஆம் ஆண்டில் காந்தியடிகள் மதுரைக்கு வந்தபோது, சுப்பராமன் வீட்டில் அவர் விரும்பித் தங்கினார். பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பொதுக்கூட்டத்தில் பார்வையாளனாக வெகுதொலைவில் நின்று பார்த்த காந்தியடிகளை தன் வீட்டிலேயே தங்கவைத்து உரையாடக் கிட்டிய வாய்ப்பை அவர் தமக்குக் கிடைத்த பெரும்பேறாகவே நினைத்தார். ஏறத்தாழ இரண்டு மணி நேரத்துக்கும் மேல் சொந்த வாழ்விலும் பொது வாழ்விலும் கடைபிடிக்கவேண்டிய ஒழுக்கங்களைப்பற்றி காந்தியடிகள் வழியாகக் கேட்டறிந்தார் சுப்பராமன். காந்தியடிகளுக்கு திருக்குறள் புத்தகத்தை அன்பளிப்பாகக் கொடுத்து ஆசி பெற்றார்.
பெண்தொண்டர்களைத் திரட்டிக்கொண்டு கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டு சிறைக்குச் சென்ற பர்வதவர்த்தினி அம்மையாரிடமும் நீண்ட நேரம் உரையாடி மகிழ்ந்தார் காந்தியடிகள். இறுதியில் சில நிமிடங்கள் காந்தியடிகளுடன் தனித்து உரையாட அனுமதி கேட்டார் அம்மையார். அவரும் புன்னகையோடு அனுமதி வழங்கினார். காந்தியடிகளிடம் மனம் திறந்து பேசினார் அம்மையார். திருமணமான நாள்முதலாக கடந்த பதினான்கு ஆண்டு காலமாக தன் கணவர் பிரம்மச்சரியம் காத்து வருவதாகவும் அதனால் தாய்மைப்பேற்றை அடையமுடியாமல் அல்லும்பகலும் வருந்துவதாகவும் குடும்பத்தினர் அனைவருமே அதை நினைத்து வருத்தத்தில் ஆழ்ந்திருப்பதாகவும் குலம் வளர தனக்கு ஒரு குழந்தையாவது வேண்டுமென்றும் தன் கணவர் மனம் மாறும்படியான ஆலோசனையை அருள்கூர்ந்து வழங்கவேண்டுமென்றும் காந்தியடிகளிடம் மன்றாடிக் கேட்டுக்கொண்டார். சில கணங்கள் நீண்ட மெளனத்துக்குப் பிறகு காந்தியடிகள் அம்மையாருக்கு ஆசி வழங்கி, “மகளே, கலங்கவேண்டாம். இதைப்பற்றி உன் கணவரிடம் பேசுகிறேன். நல்ல தீர்வே கிடைக்கும். போய்வா” என்று ஆறுதல் சொல்லி அனுப்பிவைத்தார்.
மறுகணமே சுப்பராமனை வரவழைத்து அவருடன் தனிமையில் உரையாடி அம்மையாரின் கோரிக்கையை ஏற்கும்படி செய்தார். “ஆமை தன் உடலை வேண்டும்போது வெளிப்படுத்தவும் வேண்டாதபோது உள்ளிழுத்துக்கொள்ளவும் செய்வதுபோல மனிதன் தன் புலன்களைப் பயன்படுத்தும் கலையே பிரம்மச்சரியம். இல்லறத்தில் உள்ள ஒருவர் குழந்தைப்பேற்றுக்காக உறவு கொள்வதில் பிசகில்லை. வெற்றுப் புலனின்பம் நாடி உறவு கொள்வதை பிரம்மச்சரியம் தடைவிதிக்கிறது” என அவர் எடுத்துரைத்த சொற்கள் சுப்பராமனின் நெஞ்சில் ஆழமாகப் பதிந்தன.
நான்காண்டுகள் கழித்து 1938 ஆம் ஆண்டில் அவர்களுக்கு ஒரு பெண்குழந்தை பிறந்தது. குடும்பத்தில் இருந்த அனைவரும் மட்டற்ற மகிழ்ச்சியில் திளைத்தனர். சுப்பராமன் தந்தி வழியாக சேவாகிராமத்தில் இருந்த காந்தியடிகளுக்கு இத்தகவலைத் தெரிவித்தார். மேலும் குழந்தைக்குச் சூட்டுவதற்காக அடிகளே ஒரு நல்ல பெயரைத் தெரிவிக்கவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. செய்தியைப் படித்த மகிழ்ச்சியில் குழந்தைக்கும் பெற்றோருக்கும் ஆசி வழங்கி செய்தி அனுப்பிய காந்தியடிகள் குழந்தைக்கு சீதா என்று பெயர் சூட்டும்படி தெரிவித்தார். அது மட்டுமன்றி, குழந்தையை எப்படி பராமரிக்கவேண்டும், எப்படி உணவூட்டவேண்டும் என்ற தகவல்களைக் கொண்ட ஒரு கையேட்டையும் கையெழுத்திட்டு அனுப்பிவைத்திருந்தார்.
இவையெல்லாம் நிகழ்ந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு காந்தி சேவா சங்கத்தின் ஆண்டு நிகழ்ச்சியொன்று கல்கத்தாவில் நடைபெற்றது. அதில் கலந்துகொள்வதற்காக சுப்பராமன்
சென்றிருந்தார். மாநாட்டின் முடிவில்
நிகழ்ச்சிக்கு
வந்திருந்த உறுப்பினர்கள் ஒவ்வொருவரையும் காந்தியடிகளுக்கு அறிமுகம் செய்துவைத்தார்கள். ஒவ்வொருவரும் தம் ஊரையும் பெயரையும் சொல்லி வணங்கி ஆசிபெற்றுச் சென்றனர். தன் முறை வந்தபோது சுப்பராமனும் தன் பெயரையும் ஊரையும் சொல்லி வணங்கியபோது காந்தியடிகள் தலைநிமிர்ந்து அவரை அன்புடன் நோக்கி “சுப்பராமன், எனக்கு உங்களை நன்றாகத் தெரியுமே? எப்படி இருக்கிறீர்கள்? பர்வதவர்த்தினி சுகம்தானா? குழந்தை சீதா எப்படி இருக்கிறாள்?” என்று பாசத்தோடு விசாரித்தார். சில கணங்கள் காந்தியடிகளின் அன்பில் கரைந்து நின்ற சுப்பராமன் ஊருக்குத் திரும்பி தம் குடும்பத்தாருடன் அந்தச் செய்தியைப் பகிர்ந்துகொண்டார்.
1935ஆம் ஆண்டில் மதுரையில் நடைபெற்ற நகராட்சித் தேர்தலில் வெற்றிபெற்று நகராட்சித்தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார் சுப்பராமன். காந்தியடிகளின் ஆலோசனையான
கதராடை அணிதலைத் தீவிரப்படுத்தும் விதமாக நகராட்சி ஊழியர்கள் அனைவரும் கதராடையை அணிந்துவரும் வகையில் விதி வகுக்கப்பட்டது. அனைவருக்கும் கதர் சீருடைகளை அணிக்கும் செலவை நகராட்சியே ஏற்றுக்கொண்டது. நகராட்சியின் செயல்பாடுகளில் தலையிட விதி இடமளிக்காததால் அரசு மெளனமாக பார்த்துக்கொண்டிருந்தது. சுப்பராமன் மேற்கொண்ட அடுத்த சீர்திருத்தம் தெருக்களுக்கு சாதிப்பெயர் சூட்டக்கூடாது என்பதாகும். ஏற்கனவே இருந்த பெயர்களையும் உரிய வகையில் மாற்றினார், எடுத்துக்காட்டாக பள்ளர் தெரு எனப் பெயரிடப்பட்டிருந்த ஒரு தெரு பெருமாள் கோவில் தெரு என்று பெயர் மாற்றப்பட்டது. காந்தியடிகளின் ஆதாரக்கல்வித் திட்டத்திலுள்ள சில முக்கிய அம்சங்களை
நகராட்சிப் பள்ளிகளிலும் சுப்பராமன் அறிமுகப்படுத்தினார். கொடியேற்றுதல், சர்வதர்மப் பிரார்த்தனைப்பாடல்களைப் பாடுதல், நாள்தோறும் ஒரு பாடவேளை நூல்நூற்றல், பள்ளியின் சுற்றுப்புறத்தூய்மையை மாணவர்களைக் கொண்டு கண்காணித்தல், வாரந்தோறும் ஒருநாள் கூட்டுப் பிரார்த்தனை
செய்தல் போன்ற அம்சங்களை பள்ளிகளிலும் அறிமுகப்படுத்தினார். பள்ளிகளில் நெசவு, தச்சு, தோட்டவேலை போன்ற தொழிற்பயிற்சிகளை அளிப்பதற்கும் ஊக்கமளித்தார். ஆதாரக்கல்வித் திட்டத்தில்
ஆழ்ந்து பயிற்சி பெறும்வகையில் நகராட்சி ஆசிரியர்கள் சிலரைத் தேர்ந்தெடுத்து திருச்செங்கோடு ஆசிரமத்துக்கு அனுப்பிவைத்தார். முதியோர் கல்வியறிவு பெறும்வண்ணம், அந்தந்த வசிப்பிடங்களுக்குப் பொருத்தமான வகையில் இரவுப்பள்ளிகளையும் மாலைப்பள்ளிகளையும் தொடங்கி நடத்தினார். நகரில் உள்ள படித்த இளைஞர்களையும் மாணவர்களையும் இதில் ஈடுபடுத்தினார். அனைவருக்கும் இந்தி மொழி கற்பிக்கவும் ஏற்பாடு செய்தார். சுப்பராமன் செய்த பணிகளில் மிகமுக்கியமானது, நகராட்சியில் பணிபுரிந்த துப்புரவுத்தொழிலாளர்கள் அனைவருக்கும் நகராட்சியின் செலவில் வீடுகளைக் கட்டிக்கொடுத்தார். இதற்காகவே பல கூட்டுறவுச் சங்கங்களை ஏற்படுத்தினார். மதுரை எல்லைக்குள் மதுக்கடைகள் அனைத்தையும்
மூட வேண்டுமென அவர் விதித்த உத்தரவு நகராட்சியின் வரலாற்றில் மிகமுக்கியமான உத்தரவாகும்.
ஊராட்சி நிர்வாகத்தைப்பற்றிய காந்தியடிகளின் கருத்துகள் மிகவும்
தெளிவானவை. தம் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு மட்டுமல்ல, தம் ஊராட்சியையும் நிர்வாகம் செய்யும் முழுப்பொறுப்பும் மக்களிடமே இருக்கவேண்டும் என்பது அவர் எண்ணம். ஒவ்வொரு ஊரும் தன்மானமும் சுதந்திரமும் கொண்ட உள்ளாட்சி மன்றங்களாக இயங்க அனுமதிப்பதே நல்ல நிர்வாகத்துக்கு அழகு. காந்தியடிகள் இதைப் பரவல்முறை நிர்வாகம் என்று பெயரிட்டு அழைத்தார். இந்த நிர்வாகத்துக்கு இலக்கணமாகத் திகழ்ந்தது சுப்பராமனின் நகராட்சி நிர்வாகம். ஆகவே ஆளுநர் அளித்த நெருக்கடிகள் அனைத்தையும் அஞ்சாது எதிர்த்து நின்றார். நகராட்சி நிர்வாகத்தில் குறை கண்டுபிடித்து அவர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு ஆளுநருக்கு வாய்ப்பில்லை. ஆனால் ஆளுநர் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி நகராட்சி நிர்வாகத்துடன் முழு அளவில் ஒத்துழைப்பை அளிக்க விருப்பமில்லாதவர்களாக
அதிகாரிகளைத் தேர்ந்தெடுத்து மதுரைக்கு ஆணையர்களாக அனுப்பிவைத்தார். சில சமயங்களில் நியாயமாக நகராட்சிக்கு வழங்கவேண்டிய மானியங்களை நிறுத்திவைத்தார். சில சமயங்களில் பல புதிய வரிகளை விதித்தார். இருக்கும் வரிகளின் அளவை உயர்த்தினார். இந்தச் சுமையை ஈடுகட்டும்பொருட்டு, ஏற்கனவே பின்பற்றப்பட்டு வந்த சில வரிகளின் அளவைக் குறைத்தும் சிலவற்றை விலக்கியும் பொதுமக்களுக்கு உதவினார் சுப்பராமன்.
காந்தியடிகள் அளித்த நிர்மாணப்பணிகளில் மிகமுக்கியமானது தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றப்பணி. தாழ்த்தப்பட்டோர் விழிப்புணர்வுள்ளவர்களாக மாறுவதற்கு கல்வியே உறுதுணையாக இருக்கும் என்பது சுப்பராமனின் ஆழ்ந்த நம்பிக்கை. அதனால் அவர்களுடைய குழந்தைகள் படிப்பதற்கு ஒரு பள்ளியை நிறுவவேண்டுமென நினைத்தார் சுப்பராமன். பள்ளி கட்டுவதற்கான இடம் எங்கும் கிடைக்காததால். வைகை ஆற்றின் வடகரையில் கைவிடப்பட்டு கிடந்த மண்டபத்தைச் சீரமைத்து பள்ளியை உருவாக்க முடிவுசெய்தார். சில
நாட்களிலேயே அந்தக் கட்டடம் சீர்செய்யப்பட்டு பள்ளி இயங்கத் தொடங்கியது. பிறகு தாழ்த்தப்பட்டோர் வாழும் பகுதிகளுக்குச் சென்று பிள்ளைகளைப் படிப்பதற்கு பள்ளிக்கு அனுப்பும்படி கேட்டுக்கொண்டார். ஒவ்வொரு நாளும் சென்று ஒருமுறைக்கு பலமுறை பார்த்துப் பேசியபிறகே, ஒருசிலரைமட்டும்
ஏற்றுக்கொள்ளவைக்க
முடிந்தது. அவர்கள் அனுப்பிய குழந்தைகளை ஆற்றில் குளிக்கவைத்து அவர்களுக்குத் தேவையான உடை, புத்தகம், சிலேட் என எல்லாவற்றையும் கொடுத்து மண்டபத்தில் நிறுவப்பட்ட பள்ளியில் கல்வி கற்பிக்கப்பட்டது.
குழந்தைகளுக்கு கல்வி அளிப்பதைப்போல பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வை அளிப்பதற்காக, அவர்களுடைய குடியிருப்புகளிலேயே இரவுப்பள்ளிகள் தொடங்கப்பட்டன. நிர்மாண ஊழியர்கள் சிலரே ஆசிரியர்களாக பொறுப்பேற்று லாந்தர் விளக்கு வெளிச்சத்தில் அவர்களுக்குக் கல்வியறிவை ஊட்டினர். சுற்றுப்புறத் தூய்மையின் அவசியத்தை அவர்கள் தாமாகவே புரிந்துகொள்ளும் வகையில் சுப்பராமன் சில காங்கிரஸ் தொண்டர்களுடன் முதல் ஆளாக இறங்கி அப்பகுதிக்குள் துப்புரவுப்பணியை மேற்கொண்டார்.
நாளடைவில் குடிசைவாழ் மக்களும் தொண்டர்களோடு சேர்ந்து செயற்பட்டனர். படிப்படியாக தம் குடியிருப்பகுதியைத் தூய்மையாக வைத்திருக்கவேண்டும் என்னும் எண்ணம் அவர்கள் நெஞ்சிலேயே ஆழமாக வேரூன்றியது.
பள்ளிக்கு குழந்தைகளின் வருகை அதிகரித்ததால் வேறொரு பள்ளியை கட்டியெழுப்பவேண்டிய தேவை உருவானது. மேலும் உடை, உணவு என செலவுச்சுமையும் கூடுதலானது. அதை ஈடுகட்டும் விதமாக காங்கிரஸ் தொண்டர்களோடு தெருத்தெருவாக நடந்துசென்று மக்களிடம் எடுத்துச் சொல்லி முடிந்த அளவு நன்கொடைகளைத் திரட்டினார். கடைத்தெருப் பகுதிகளில் இருப்பவர்கள் உணவுப்பொருட்களையும் ஆடைகளையும் பள்ளிக்குத் தேவையான சில பொருட்களையும் கொடுத்தார்கள்.
வைகை ஆற்றின் வடகரையை அடுத்துள்ள மதிச்சயம் என்னும் பகுதியில் நகராட்சிக்குச் சொந்தமான நிலமொன்று பள்ளிக்கூடத்துக்கு வழங்கப்பட்டது. தன்னுடைய சேமிப்பிலிருந்து பதினாறாயிரம் ரூபாயை முதலில் வரவு வைத்து நன்கொடை திரட்டும் பணியைத் தொடங்கினார் சுப்பராமன். தொண்டுள்ளம் படைத்த எண்ணற்றோர் அளித்த நன்கொடைகள் வழியாக குறிப்பிட்ட காலத்துக்குள் கட்டடம் கட்டிமுடிக்கப்பட்டது. நூறு மாணவர்கள் தங்கிப் படிக்கும்வகையில் வசதியுள்ளதாக பள்ளிக்கட்டடம் உருவானது. சுப்பராமன் அந்தப் பள்ளிக்கு சேவாலயம் என்று பெயர் சூட்டினார். இதுவே, தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கென தமிழ்நாட்டில் நன்கொடை வாயிலாக முதலில் கட்டியெழுப்பப்பட்ட உண்டுறையும் பள்ளியாகும். இதனைத் தொடர்ந்து மக்கள் ஆதரவால் தல்லாகுளம், கருப்பாயூரணி, கோகிலாபுரம், மேலூர் திண்டுக்கல் என பல இடங்களில் எண்ணற்ற பள்ளிகளும் விடுதிகளும் கட்டப்பட்டன. கொடைக்கானல், தாண்டிக்குடி ஆகிய பகுதிகளில் வாழும் மலைவாழ்மக்களின் குழந்தைகளைத் தேடி அழைத்துவந்து பள்ளியில் சேர்த்து அவர்களும் கல்வி பெறும் வாய்ப்பை உருவாக்கியளித்தார்.
மதுரையின் நகராட்சித்தலைவராக அவர் பணியாற்றிவந்த காலத்தில்தான் 1939இல் இரண்டாம் உலகப்போர் தொடங்கியது. இங்கிலாந்து அரசு போரில் ஈடுபட்டதோடு மட்டுமன்றி, அப்போரில் இந்தியர்களையும் ஈடுபடுத்தியது. அப்போது சென்னை மாகாணத்தில் கவர்னராக இருந்த ஆர்தர் ஹோப் என்பவர் அரசு ஊழியர்கள் அனைவரும் யுத்தநிதி வசூலிக்கவேண்டும் என்று ஆணையிட்டார். அதுபோல நகராட்சிப்பணியாளர்களும் நிதி வசூலித்து அளிக்கவேண்டும் என கட்டளையிடப்பட்டது. ஆனால் அந்த ஆணைகளை மறுக்கும் விதமாக நகராட்சித் தலவராக இருந்த சுப்பராமன் மதுரை நகராட்சி எலைக்குள் நகராட்சி ஆணையாளரோ, ஊழியர்களோ யாரும் யுத்தநிதி வசூல் செய்யக்கூடாது என்று துணிவுடன் அறிவித்தார். அதே நேரத்தில் ராணுவத்துக்கு ஆள் திரட்டும்பொருட்டு ஒரு கிளையைத் தொடங்க நினைத்த அரசாங்கம் அதற்குத் தேவையான இடத்தை மதுரை நகருக்குள் ஒதுக்கித் தரும்படி நகராட்சித்தலைவரிடம் கேட்டுக்கொண்டது.
அந்தக் கோரிக்கையை துணிச்சலோடு நிராகரித்தார் சுப்பராமன். மேலும் மதுரை எல்லைக்குள் ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் முயற்சிக்கும் தடைவிதித்து, நகராட்சிக்குச் சொந்தமான விடுதிகளில் ராணுவ அதிகாரிகள் வந்து தங்குவதற்கும் தடைவிதித்தார். இதனால் கோபமுற்ற ஆளுநர் மதுரை நகராட்சிக்கு அரசு அளிக்கவேண்டிய மானியங்களை நிறுத்தினார்.
நகராட்சித் தலைவராக பணியாற்றிய காலத்தில்
சுப்பராமனுக்கு
துப்புரவுப்பணியில்
ஈடுபட்டிருக்கும்
தொழிலாளர்களுடன்
நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அதன்மூலம் அவர்கள் வாழும் பரிதாபநிலையை அவர் நேருக்குநேர் பார்த்தறிந்தவராக இருந்தார். தமக்குக் கிடைக்கும் சிறு ஊதியத்தைக்கூட மது அருந்துவதிலும் ஏற்கனவே வாங்கிய கடனுக்கு வட்டி கொடுப்பதிலும் செலவழித்துவிட்டு குடும்பத்தை வறுமையில் வாடவிடுவார்கள் அவர்கள். உணவுத்தேவைக்காக மீண்டும் கடன்வாங்கி, வட்டிக்கு மேல் வட்டி கட்டி ஊதியத்தில் பாதிக்கும் மேல் பறிகொடுத்துவிட்டு நிற்பார்கள். அதை நேரில் பார்த்த அனுபவத்தில் அந்தப் பிரச்சினையைத் தீர்க்க சுப்பராமன் ஒரு ஏற்பாட்டைச் செய்தார். ஊழியர்களுக்குரிய ஊதியத்தை நேரிடையாக பணமாக அளிக்காமல், குடும்பத்தேவைகளான உணவு, உடை போன்றவற்றை வழங்கும் பண்டசாலையை உருவாக்கினார். தரமான பண்டங்கள் அவர்களுடைய குடும்பங்களுக்கு குறைந்த விலையில் கிடைத்தன. இதன்வழியாக மது அருந்துவதும் கடன் வாங்குவதும் பெரிதும் கட்டுப்படுத்தப்பட்டன.
நகராட்சியின் சார்பில் ஒரு லட்சரூபாய் ஒதுக்கப்பட்டு துப்புரவுத் தொழிலாளர்களுக்காக நானூறு வீடுகள் கொண்ட குடியிருப்பு உருவாக்கப்பட்டதையும் நலிந்த பிரிவைச் சேர்ந்த நரிக்குறவர்களுக்காக நூறு வீடுகள் கொண்ட ஒரு குடியிருப்பு உருவாக்கப்பட்டதையும் சுப்பராமன் ஆற்றிய மிகப்பெரிய சேவையென்றே சொல்லவேண்டும். இரவு நேரங்களில் அக்குடியிருப்பில் முதியோர் கல்வி மையங்கள் உருவாகவும் சுப்பராமன் ஏற்பாடு செய்தார். பொதுப்பணிகளில் ஆர்வமுள்ள கல்லூரி மாணவர்களை இச்சேவைக்குப் பயன்படுத்திக்கொண்டார். அவருடைய தொண்டுள்ளத்தையும் எளிமையையும் கண்ட மக்கள் அவரை ‘மதுரை காந்தி’ என்ற பட்டப்பெயர் சூட்டி அழைத்தார்கள்.
08.08.1942 அன்று பம்பாயில் நடைபெற்ற அனைத்திந்திய காங்கிரஸ் மாநாட்டில் ‘வெள்ளையனே வெளியேறு’ தீர்மானத்தை நிறைவேற்றி அனைவரும் உரையாற்றினர். அன்றிரவே காந்தியடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் எந்தச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்னும் செய்தி ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. விவரம் தெரியாமல் மக்கள் தவித்தனர். இதைத்தொடர்ந்து நாடெங்கும் பொதுக்கூட்டங்களுக்கும் ஊர்வலங்களுக்கும் அரசு தடைவிதித்தது. அடுத்தநாளே, காங்கிரஸ் தீர்மானத்தை ஆதரித்தும் தலைவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும் மதுரை நகராட்சி தீர்மானங்களை நிறைவேற்றியது. அதுமட்டுமன்றி, பொதுமக்களைத் திரட்டி வைத்தியநாத ஐயர் தலைமையில் மாபெரும் ஊர்வலமொன்றையும் ஏற்பாடு செய்தார் சுப்பராமன். ஊர்வலத்தைத் தடுத்து நிறுத்திய காவல்துறையினர் அமைதியாக இருந்த தொண்டர்கள் மீது தன்னிச்சையாக தடியடி நிகழ்த்தி துப்பாக்கியால் சுட்டனர். அதில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.
காவல்துறையின்
அடக்குமுறையைக்
கண்டித்து ஒரு துண்டுப்பிரசுரத்தை எழுதி அச்சிட்டு மக்களிடையில் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்தார் சுப்பராமன். அதனால் காவல்துறை அவரை உடனடியாகக் கைது செய்து இரண்டாண்டு காலம் தண்டனை விதித்தது. தண்டனைக் காலத்தை வேலூர் சிறையிலும் தஞ்சாவூர் சிறையிலும் கழித்தார் சுப்பராமன்.
1946ஆம் ஆண்டில் மதுரைக்கு வந்திருந்தார் காந்தியடிகள். இதற்கு முன்பு வந்திருந்த சமயங்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த ஒரே காரணத்தால் மீனாட்சியம்மன் கோவிலுக்குச் சென்றதில்லை. ஆனால் 1946இல் நிலைமை மாறியிருந்தது. வைத்தியநாத ஐயர், சுப்பராமன் போன்றோர் முயற்சிகளால் கோவில் நுழைவு சாத்தியமாகியிருந்தது. இருவருடைய
துணையோடும் காந்தியடிகள் கோவிலுக்குச் சென்று திரும்பினார். அதற்கடுத்த ஆண்டில் நம் நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்தது. அதற்கடுத்த ஆண்டிலேயே காந்தியடிகள் கொல்லப்பட்டார்.
1951ஆம் ஆண்டில் பூதான இயக்கத்தைத் தோற்றுவித்த வினோபா அடிகள் தமிழகத்துக்கு வந்திருந்தார். அவ்வியக்கத்துக்கு உறுதுணையாக இருந்த சுப்பராமன் அவனியாபுரம், காளிகாப்பான், விலத்தூர், உச்சபட்டி ஆகிய கிராம்ங்களில் தம் குடும்பத்துக்குச் சொந்தமாக இருந்த அறுபது ஏக்கர் நஞ்சை நிலங்களைத் தானமாக அளித்தார்.
காந்தியடிகளின் நிர்மாணத்திட்டங்களை நிறைவேற்ற தன்னையே அர்ப்பணித்துக்கொண்ட எண்ணற்ற தொண்டர்களில் ஒருவர் சுப்பராமன்.
காந்தியின் தொண்டர்களில் ஒருவர் கூட, அவற்றை வெறும் சேவை என நினைத்து ஈடுபடவில்லை. அவற்றின் வழியாக காந்தியடிகள் உருவாக்க நினைத்த மாற்றம் என்ன என்பதை ஒவ்வொருவரும் அறிந்திருந்தார்கள். நிர்மாணத்திட்டப் பணிகளுக்குப் பின்னால் சாதி, மத, இன பேதற்ற பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுமற்ற உன்னதமானதொரு சமுதாய அமைப்பை உருவாக்கும் கனவை காந்தியடிகளைப்போலவே அவர்களும் கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு சந்திப்பிலும் அவர்களைக் கூர்மைப்படுத்திக்கொண்டே இருந்தார் காந்தியடிகள்.
ஒரு கொள்கைக்காக தன் வாழ்க்கையையே அளிப்பது என்பது எவ்வளவு மகத்தான செயல். மகத்தான ஆளுமைகளை உருவாக்கி நம் முன்னால் உதாரண மனிதர்களாக வாழவைத்ததே காந்தியத்தின் வெற்றி.