கருத்துலக சுதந்திரத்தைத்
தேடிச் செல்லும் கலைஞனான ஜே.ஜே.யின் பயணத்தையும் அவன் எதிர்கொள்ளும் மோதல்களையும்
தொகுத்து ஒரு வாழ்க்கைவரலாற்றின் தோற்றத்தோடு முன்வைத்திருக்கும் நாவாலன
"ஜே.ஜே. சில குறிப்புகள்" தமிழில் எழுதப்பட்ட முக்கியப்படைப்புகளில்
ஒன்று. தனிமனிதப் பிரக்ஞைக்கும் சுதந்திரச் சிந்தனைக்கும் உள்ள தொடர்பை அழுத்தமாக
நம்புகிற ஒரு கலைஞனாக ஜே.ஜே.யைச் சித்திரக்கிறார் சுந்தர ராமசாமி. கலைகளும் இலக்கியங்களும்
இத்தகு சுதந்திர சிந்தனைகள்வழியாகவே உருப்பெறுகின்றன. ஏற்கனவே நிறுவனமயமாக்கப்பட்ட
கருத்துகளை மோதி எதிர்கொள்வதைத் தவிர இந்த சுதந்திர சிந்தனைக்கு வேறு வழியில்லை.
தன்னோடு இருப்புக்காகமட்டுமல்ல, தொடர்ந்த நகர்வுக்காகவும்
இந்த மோதலை நிகழ்த்தவேண்டியிருக்கிறது.
அய்யப்பன், அரவிந்தாட்ச
மேனோன், கங்காதரன் என அனைவரோடும் ஜே.ஜே. க்கு நிகழும் மோதலை
அப்படித்தான் நாம் புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் வேறு வகையான கருத்துத்
தரப்புகளாக நிற்கும்போது, தன் தரப்பை நியாயப்படுத்தவேண்டி
ஜே.ஜே. அந்த மோதலை நிகழ்த்தவேண்டியிருக்கிறது. அறிவுப்பாசாங்குகளையும் போலிப்
பார்வைகளையும் சமரச தாராளவாதத்தையும் கடுமையாக எதிர்க்கிறான் ஜே.ஜே. சமரசத்துக்கு
இடமே இல்லாத நெருப்புக்கோளமாக சுடர்விடுகிறான் ஜே.ஜே. அறிவுலகத்தாலும் மற்ற சமூக
அங்கத்தினர்களாலும் அவன் புறக்கணிக்கப்பட்டவனாக வாழ நேர்கிறது. தனிமையின் பாரத்தை
அவன் சுமக்கவேண்டியிருக்கிறது. சுதந்திரத்தைத் தேடி நடந்த அவனுடைய பயணம்
முடிவடைவதற்கு முன்பாக, அவன் தன்னையே அழித்துக்கொள்கிறான்.
கி.ராஜநாராயணனுடைய
"கோபல்ல கிராமம்", "கோபல்லபுரத்து
மக்கள்" ஆகிய இரண்டு நாவல்களும் அழுத்தமான ஒரு சித்திரத்தை நமக்கு
அளிக்கிறது. சின்னச்சின்ன சமூகக்குழுக்கள் உருவாகிய தொடக்கக்காலத்தில் ஒரே
இடத்தில் வாழ்ந்திருக்க வாய்ப்பில்லை. குறிப்பிட்ட ஒரு காலம்வரை ஓரிடத்தில்
தங்குவதும் பிறகு அந்த இடத்தைவிட்டு வெளியேறி வேறொரு இடத்தைநோக்கி நகர்வதுமாகவே
அக்குழுக்கள் இயங்கியிருக்கவேண்டும். வாய்ப்புகளையும் உணவையும் தேடிக்கொண்டே
இருந்த சமூகம் அது. பயிர்த்தொழில் பழகியபிறகுதான் சமூகக்குழுக்கள் ஓரிடத்தில்
நிலையாகத் தங்கத் தொடங்கின. நிலையான வாழ்க்கை, நிலையான
இருப்பிடம், நிலையான வருமானம் என பல கூறுகள், இக்குழுக்கள் தம்மை ஒரு சிற்றரசாகவோ அல்லது பேரரசாகவோ வளர்த்துக்கொள்ள
தூண்டியிருக்கலாம். செல்வமும் அதிகாரமும் இருக்கும் இடத்தில் போட்டியும்
பொறாமையும் தாக்குதலும் தவிர்க்கப்படமுடியாதவை. ஒரு மனிதனுக்கு எவ்வளவு செல்வம்
இருந்தால் போதும் அல்லது ஒரு மனிதனுக்கு எவ்வளவு அதிகாரம் இருந்தால் போதும் ஆகிய
கேள்விகள் ஒருபோதும் விடையேயறியாமல் இந்த மண்ணில் நிலையாக காலூன்றிவிட்ட
கேள்விகள். நிரந்தரமாக வாழக்கூடிய சூழல் இருந்தாலும் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள
பாதுகாப்பைத் தேடி, குழுக்கள் மீண்டும் இடம்பெயர
வேண்டியிருக்கிறது. குழுக்கள் இணைந்து சமூகம உருவாவதும் சமூகம் உடைந்து குழுக்கள்
சிதறுவதும் மாறிமாறி இந்த மண்ணில் அரங்கேறியபடி இருக்கிறது. இவ்வாறாக, வரலாற்றின் ஒரு காலகட்டத்தில் பாதுகாப்பைத் தேடி, இடம்பெயர்ந்த
ஒரு சிறுகுடி மக்களின் வரலாறாக கி.ராஜநாராயணனுடைய நாவல்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன.
நேர்க்கோட்டின் அமைப்பில் ஆராய்ச்சியாளர்கள் தொகுத்துக்காட்டுகிற வரலாறல்ல இது.
மாறாக, சிறுகுடி மக்களின் நினைவுகள் வழியாகவும்
வரலாற்றுத்துணுக்குகள் வழியாகவும் எழுதிக்காட்டப்பட்ட வரலாறு. பாதுகாப்பைத் தேடி
வந்தது ஒரு வரலாறு. பிறகு சுதந்திரத்தை நாடி எழுச்சியுறுவது இன்னொரு வரலாறு.
பொருளைத் தேடி, வேறொரு தேசத்துக்குச் சென்றவனுடைய வாழ்க்கையையும் உலகப்போரின்
செயல்பாடுகளையும் குறுக்கிழையாகவும் நெடுக்கிழையாகவும் இணைத்து நெய்த படைப்பு
ப.சிங்காரத்தின் "புயலிலே ஒரு தோணி". ஒருபுறம் அதிகாரத்தை
நிலைநிறுத்திக்கொள்ள நாடுகள் மோதிக்கொள்கிற போர். இன்னொருபுறம் உயிரைக்
காப்பாற்றிக்கொள்ள பாண்டியன் மேற்கொள்கிற சாகசம். சில தருணங்களில் மனித வாழ்வே
பொருளற்ற அபத்தமாக மாறிக் காட்சியளிக்கிறது. சில தருணங்களில் வாழ்வு என்பது
மனிதனுக்குக் கிடைத்த அதிஅற்புதமான வாய்ப்பாக மாறிக் காட்சியளிக்கிறது. விழுதென
நம்பிப் பாம்பின் வாலைப் பற்றியபடி மேலே மரத்திலிருக்கும் தேன்கூட்டிலிருந்து
சொட்டும் தேன்துளிகளை நாக்கை நீட்டி உள்வாங்கிச் சுவைப்பதுபோல வாழ்வின் தருணங்கள்
எதிர்கொள்ளப்படுகின்றன. ஆபத்தான தருணத்தில் சுவைக்கப்படுகிற தேனுக்கிருக்கிற சுவை
ஈடுஇணையில்லாத ஒன்று.
பிரபஞ்சனுடைய "வானம் வசப்படும்",
"மானுடம் வெல்லும்" இரண்டு நாவல்களுமே வரலாற்றைப்
பின்னணியாகக் கொண்டவை. ஆனந்தரங்கம்பிள்ளையின் வரலாற்றுக் குறிப்புகளை ஆதாரமாகக்
கொண்டிருந்தாலும் பிரபஞ்சன் எழுதிய புதிய வரலாறு, தன்மானத்தையும்
அமைதியையும் தேடும் எளிய மக்களின் கதைகளைத் தொகுத்துச் சொல்கிறது. ஒரு பெரிய
வரலாற்றின் கண்ணாடியை மூடியிருந்த திரையை விலக்கி, இன்னொரு
கண்ணாடியை நமக்குக் காட்டுகின்றன பிரபஞ்சனின்
நாவல்கள். பிரெஞ்சிந்தியப் பகுதியாக புதுச்சேரியில் ஒரு குறிப்பிட்ட
காலகட்டத்தில் சாதாரண மக்களின் வாழ்க்கையனுபவங்கள் மனத்தில் ஆழ்ந்து பதியும்வகையில்
முன்வைக்கப்பட்டுள்ளன. எல்லாக் கட்டங்களிலும் வரலாறு என்பது தொகுப்பாளரின்
கோணத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சம்பவங்களின் தொகுப்புமட்டுமே. கையிலேந்திய நீர்
விரலிடுக்குவழியாக கசிந்துபோவதுபோல, பற்பல சம்பவங்கள்
கணக்கிலெடுத்துக்கொள்ளப் படாமலேயே கசிந்துபோகின்றன.
ஜெயமோகனுடைய
"விஷ்ணுபுரம்" செயல்படும் தளம் முற்றிலும் தமிழ்நாவல் பரப்பில்
புதுமையானது. புராணமும் வரலாறும் முயங்கும் தளம் அது. சிறுகச்சிறுகக்
கட்டியெழுப்பப்படுகிற ஒரு கட்டடத்தைப்போல மனிதர்களின் தீராத கனவுவழியாகவும்
உள்ளார்ந்த சக்தியின்வழியாகவும் கட்டியெழுப்பப்படுகிற விஷ்ணுபுரம் ஒருபுறம்.
சூறாவளியால் சிதைந்துபோகிற காற்றுக்கோபுரம்போல, மனிதர்களின்
சுயநலம்வழியாகவும் சோம்பல்வழியாகவும் இயற்கையான பிரளயத்தாலும் மூழ்கியழிந்துபோகிற
விஷ்ணுபுரம் மறுபுறம். உருவாக்கத்துக்கும் அழிவுக்கும் இடையில் எவ்வளவோ ஆண்டுகள்.
ஆக்கமும் அழிவும் தவிர்க்கப்படமுடியாதவை என்பதை மனிதன் அறியாதவனல்ல. பக்தி ஒரு
சின்ன முகாந்திரம்மட்டுமே. விஷ்ணுபுரத்தை எழுப்புவதற்கான காரணம், அதை எழுப்புவதன்வழியாகவே அவன் தன் இருப்பை நிலைநிறுத்திக்காட்ட முடியும்
என்னபதால்தான். தன் அகம், தன் உழைப்பு தன் உயிர் எல்லாமே
நிரந்தமற்றவை அல்லது குறையுள்ளவை என்பதை மனிதன் நன்றாகவே அறிவான். நிரந்தரமற்ற
ஒன்றை, இந்த மண்ணில் நிரந்தரமாக நிற்கப்போகிற ஒன்றோடு
இணைத்துக்கொள்ளும்போது, அதற்கும் தற்காலிகமாக
நிலைத்துநிற்கிற வாய்ப்பு உருவாகும் என்கிற கனவுதான் மனிதனைச் செயல்படத் தூண்டுகிற
புள்ளி. அந்தக் கனவை நிறைவேற்றிக்கொள்வதற்காகவே அவன் அந்தக் கட்டுமானத்தில்
பங்கெடுத்துக்கொள்கிறான். விஷ்ணுபுரத்தின் அழிவைமட்டும் இறுதியில் நாம்
பார்க்கவில்லை. நீலியைப் பின்தொடர்கிறவர்களையும் பார்க்கிறோம். விஷ்ணுபுரம்
நின்றிருந்த இடத்தில் வேறொரு காலத்தில் நீலிபுரம் எழுப்பப்படலாம். இப்படிச்
சொல்வதற்குக் காரணம் மனிதனிடம் வற்றாமல் பொங்கிக்கொண்டே இருக்கிற உத்வேகமும்
ஒன்றைக் கட்டியெழுப்பும் எழுச்சியும்.
ஜெயமோகனுடைய இன்னொரு படைப்பான
"ஏழாம் உலகம்" நாவலில் இடம்பெறும் போத்திவேலுப் பண்டாரத்தின் தேடல்
பணத்தைத் தவிர வேறொன்றுமில்லை. மூன்று
பெண்பிள்ளைகளை வளர்fத்து ஆளாக்கவேண்டும். அவர்கள் கேட்டதை
மனம்கோணாமல் வாங்கித் தரவேண்டும். படிக்கவைத்து பெரியவர்களாக்கி நல்ல இடத்தில்
திருமணம் செய்துதரவேண்டும். மற்றவர்கள்போல எங்காவது குமாஸ்தா வேலை செய்தோ அல்லது
கூலிவேலை செய்தோ தன்னால் அந்த அளவுக்குப் பணத்தைச் சம்பாதிக்கமுடியாது என அவரே
எண்ணுகிறார். பணத்தேவைக்காக குறுக்குவழியில் இறங்கவேண்டியிருக்கிறது. அதனால்
பணத்துக்காக மற்றவர் யாருமே செய்யாத செயலைச் செய்கிறார் அவர். உடற்குறையுள்ளவர்களை
வாங்கி கோயில் படிக்கட்டுகளில் உட்காரவைத்து பிச்சையெடுக்கவைத்து வருமானம்
பார்க்கிற தொழில். அவர்களை உருப்படிகள் என்று அழைக்கிறார் பண்டாரம். அடிக்கடி
உருப்படிகளை விற்கவும் வாங்கவும் செய்கிறார். உருப்படிகளை இலவசவமாக அடைகிற ஆவலில்
தன்னிடம் உள்ளவளையே கருவுறச் செய்து பிரசவம் பார்த்து சேர்த்துக்கொள்கிறார்.
யாரையுமே பொருட்டாக மதிக்காத அவருடைய அகங்காரம் அவருடைய ஆசை மகள் திருமணத்துக்கு
முன்னால் வீட்டைவிட்டு ஒரு ரவுடியோடு ஓடிப்போகும்போது சரிந்துவிழுந்துவிடுகிறது.
எல்லாரையும் உருப்படியாக நடத்துகிற அவரை, அவருடைய மகளே ஒரு
உருப்படிபோல நடத்திவிடுகிறாள். தங்குமிடத்தைக் கண்டுபிடித்துப் பார்க்கச் சென்ற
இடத்தில், துடைப்பத்தோடு அவர் முன்னால் எதிர்ப்பட்டு
"பட்டி வீடு கேறியில்லா வருது, ஓடு நாயே ஓடிப்போ"
என்று சாடையாகப் பேசிவிட்டுச் செல்கிறாள். சம்பந்திக்கார அம்மாள் வசைமழை
பொழிகிறாள். உருப்படியை விற்றுப் பணமாக்குகிறமாதிரி, பெற்ற
பெண்ணையே உருப்படியாக்கி விற்றுவிட்டான் என்று சுற்றியிருப்பவர்கள் கிண்டல்
செய்கிறார்கள். எல்லாக் கோணங்களிலிருந்தும் பண்டாரம் அவமானத்துக்கும்
பழிச்சொல்லுக்கும் ஆளாகிறான். அவன் பாடுபட்டுத் தேடிவைத்த பணம் அவனைக் காப்பாற்றவே
இல்லை. அவனைச் சுற்றியுள்ள உலகத்தில் அன்போ ஆதரவோ நம்பிக்கையோ துளியும் இல்லை.
இதற்கு நேர்மாறாக, இவனுக்காக பிச்சையெடுத்து
படிக்கட்டுகளிலும் மரத்தடியிலும் ஓரமாக ஒதுங்கிக்கிடக்கிற கூட்டத்திடையே மாசற்ற
அன்பு சுடர்விட்டபடி இருக்கிறது. எந்தப்
பணத்தாலும் விலைகொடுத்து வாங்கமுடியாத அன்பு அது. அதைத் தொட்டுக்கூடப்
பார்க்கமுடியாத தொலைதூரத்துக்குச் சென்றுவிடுகிறார் பண்டாரம்.
அடையாளத்தைத் தேடியலைந்து,
அதை உயர்ந்ததென நிறுவிக்கொள்ளும் ஆவேசத்தில் தமக்குள் மோதிமடிகிற
மக்களின் உள்முரண்களின் சித்திரத்தை முன்வைக்கிறது தோப்பில் முகம்மது
மீரானின் நாவல் "கூனன் தோப்பு".
சாதாரணமாக புறக்கணித்துவிட்டு செல்லக்கூடிய ஒரு சின்னஞ்சிறு சம்பவத்தால் ஒரு
கிராமத்தில் மதக்கலவரமே நிகழ்வதை ரத்தமும் சதையுமாகச் சித்தரிக்கிறார் மீரான்.
கலவரத்துக்குக் காரணமான புல்பாஸ் மதங்களின் கலவையானவன். தாய் ஒரு மதம். தந்தை ஒரு
மதம். அப்படி எந்த அடையாளமும் இல்லாதவனாக இருக்கமுடியாத சூழலில் அவன் தன்
தாய்சார்ந்த மதத்தை தழுவிக்கொள்ள விரும்புகிறான். அதனால் தாய்மதத்துக்காரர்களின்
நம்பிக்கையைப் பெறவேண்டிய நெருக்கடியில் அகப்பட்டுக்கொள்கிறான். அப்போது தற்செயலாக
நடக்கிற கோழிதிருட்டை அவன் தனக்குச் சாதகமாக்கப் பயன்படுத்திக்கொள்கிறான்.
கோழியைத் திருடிய அலியை அடிக்கிறான். அலியின் மதம் வேறு. வைக்கோல்போரில்
நெருப்புப் பற்றிக்கொள்வதுபோல, அந்தச் சண்டை மதக்கலவரமாக
பற்றியெரிந்துவிடுகிறது. ஒருவரையொருவர் அழித்தொழித்து, அந்தச்
சாம்பலில் நின்றபடி, மனிதன் தன் அடையாளத்தை நிறுவிக்கொள்வது
அத்தனை அவசியமா? மனிதனுக்கு மனிதனாக இருப்பது போதவில்லையா?
தமிழ்நாவல்பரப்பில் நிகழ்ந்த
தேடல்களையும் பயணங்களையும் இன்னும் முன்வைத்துக்கொண்டே போகலாம். மோகமுள்ளில்
இடம்பெறும் பாபுவின் தேடல், கரைந்த நிழல்களில் அசோகமித்திரன்
கண்டடைந்து சொல்லும் மனிதர்களின் தேடல்கள், சாயாவனம் நாவலில்
கரும்பாலையைக் கட்டியெழுப்பிவிட்டு பாட்டியின் கேள்விக்குப் பதில்சொல்லமுடியாமல்
தடுமாறுகிறவனின் தேடல், ஜெயகாந்தன் படைத்த கங்காவின் தேடல்,
மிதவை நாவலில் நகர நெரிசலில் முகமற்றவனாக தனக்கொரு பிடிமானத்தைத்
தேடி அலைகிறவனுடைய தேடல், கோவேறு கழுதைகள் நாவலில் இமையம்
சித்தரித்துக்காட்டும் ஆரோக்கியத்தின் தேடல் என சொல்லிக்கொள்வதற்கு ஏராளமாக
உள்ளன.
-3-
ஒரு நாட்டுப்புறக்கதை
நினைவுக்கு வருகிறது. ஒருமுறை செல்வத்துக்கும் அறிவுக்கும் இடையே ஒரு போட்டி
எழுந்தது. இருவரில் யார் பெரியவர் என்கிற போட்டி. இரண்டும் ஒரு நகரத்துக்குச்
சென்றன. அது கள்வர்கள் நிறைந்த நகரம். யாரோ அந்த நகரத்து அரசனின் குதிரையைத்
திருடிச் சென்றுவிட்டார்கள். யாராலும் திருடனைப் பிடிக்கமுடியவில்லை. ஆகவே அரசனே
ஒருநாள் இரவுவேளையில் ஓர் எளிய மனிதனைப்போல மாறுவேடத்தில் குதிரையைத் தேடிக்கொண்டு
போனான். எதிர்பாராத விதமாக மழை பொழிந்தது.
மழைக்காக ஒரு வீட்டுத் திண்ணையில் ஒதுங்கினான் அரசன். குப்பையைக்
கொட்டுவதற்காக வீட்டுக்கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்த அந்த வீட்டுக்காரி,
திண்ணையில் மனித நிழலைப் பார்த்து ஐயோ திருடன் திருடன் என்று
அலறினாள். மக்கள் ஓடிவந்து அவனைப் பிடித்து நையப் புடைத்தனர். அரசன் கால்
உடைந்துபோனது. உடைந்த காலோடு அங்கிருந்து தப்பித்தோடி உயிர்பிழைத்தான். அறிவும்
செல்வமும் அவன் முன்னால் சென்று நின்றன. தம் போட்டியை அவனிடமிருந்து தொடங்க
நினைத்தன. உடைந்த காலைச் சரிசெய்பவனே பெரியவன் என்று அறிவைப் பார்த்துச் சொன்னது
செல்வம். அறிவு சம்மதித்தது. அகலமான ஒரு துணிநிறைய தங்கநாணயங்களையும் வெள்ளி
நாணயங்களையும் பரப்பி அதை கால்மீது வைத்து ஒரு கட்டாகக் கட்டியது. அரசனுடைய
கால்வலி அதிகமானதே தவிர குறையவில்லை. அறிவு ஓடோடிச் சென்று பக்கத்துக் காட்டிலிருந்து
மூலிகைத்தழைகளைப் பறித்துவந்து அரைத்து மருந்தாக்கி, அதைக்
கால்மீது வைத்துக் கட்டியது. சிறிதுநேர ஓய்வுக்குப் பிறகு அரசனுடைய வலி குறைந்து
நடக்கமுடிந்தது. அறிவு நான்தான் பெரியவன் என்று ஒப்புக்கொள்கிறாயா என்று
செல்வத்தைப் பார்த்துக் கேட்டது.
தன் தோல்வியை ஒப்புக்கொள்ள
மறுத்த செல்வம் இன்னொரு வாய்ப்பைக் கேட்டது. நெசவாளிக் குடும்பத்தைச் சேர்ந்த
எலும்பும் தோலுமான ஒரு ஏழை இளைஞனை தம் செல்வத்தால் வசதிக்காரனாக்கி, அரசனின் மகளையே திருமணம் செய்துகொள்ளும்படி செய்தது. பிறகு, "நான்தான் பெரியவன் என்பதை இப்போதாவது ஒப்புக்கொள்கிறாயா?" என்று அறிவைப் பார்த்துச் சிரித்தது.
நெசவுத்தொழிலைத் தவிர
வேறெதுவும் தெரியாத இளைஞன் அந்தப்புரத்திலேயே அடைந்துகிடக்கிறான். அதைக் கண்டு
மனம் சோர்வுற்ற இளவரசி, அடுத்தநாள் அரசசபைக்குச் சென்று
விவாதங்களில் பங்கெடுத்துக்கொள்ளவில்லை என்றால் அவனைக் கொன்றுவிடுவதாக
மிரட்டினாள். இளைஞன் கவலையில் நடுங்கினான். அன்றிரவே அவனைச் சந்தித்த அறிவு அவனைப்
புத்திசாலியாக மாற்றியது. மறுநாள் அரசசபை விவாதங்களில் அவன் வெளுத்து வாங்கினான்.
உடனே, அறிவு "நான்தான் பெரியவன் என்று இப்போதாவது நீ
ஒப்புக்கொள்கிறாயா?" என்று செல்வத்தைப் பார்த்துத்
தலையசைத்தது.
தோல்வியுணர்வால் மனம் குமுறிய
செல்வம் ஊருக்குள் ஒருவனைச் சந்தித்து, ஒரு குடம் நிறைய
தங்கநாணயங்களைக் கொடுத்து அரசனைச் சந்தித்து இளைஞனைப்பற்றி புகார்சொல்லும்படி
தூண்டிவிட்டது. அதற்கு உடன்பட்ட அரசன் மருமகனுடைய நெசவுத் திறமையைச் சோதிப்பதற்காக
சிலந்திவலையால் ஓர் ஆடையை நெய்து தரும்படி கட்டளையிட்டான். அறிவு மறுபடியும்
இளைஞனுக்கு உதவி செய்யப்போனது. அதனால் அரசனைச் சந்தித்து ஒரு பானையை நீட்டி,
அதை அரசன் தன் மூச்சுக்காற்றால் நிரப்பி மூடித்தரவேண்டும் என்று
கேட்டுக்கொண்டான்.
மீண்டும் செல்வம் தன்
தந்திரத்தின் வலையை விரித்தது. அரசன் இந்த முறை ஐந்து பவுண்டு கொசு எலும்பு
கொண்டுவரும்படியும் கொண்டுவரத் தவறினால் மரணதண்டனை என்றும் சொன்னான். இக்கட்டான
நிலையில் மீண்டும் அறிவு இளைஞனுக்கு உதவ வந்தது. கொசுவின் எலும்பு தன் பைக்குள்
இருக்கிறதென்றும் அதை நிறுப்பதற்கு ஒரு விசேஷமான தராசு வேண்டும் என்று அரசனிடம்
கேட்டான். தராசின் விட்டமாகக் காற்றும் தட்டுகளாக வெப்பமும் உள்ள தராசு.
இப்படி மாறிமாறி சம்பவங்கள்
நிகழ்ந்தபடி இருந்தன. இடைவிடாமல் அறிவும் செல்வமும் போட்டிபோட்டுக்கொண்டே இருந்த
கதையைப் படித்த கணத்தில் சட்டென்று ஒரு பொறி தட்டியது. எவருடைய நடமாடும் நிழல்கள்
நாம் என்று மௌனி எழுதியதுபோல, நம்மைப் பங்கேற்பளராக்கிவிட்டு,
யார் யாரை வெல்வதற்காக இந்தப் போட்டி நடக்கிறது என்று எண்ணத்
தோன்றுகிறது. இந்தப் போட்டியோ, தேடலோ ஒருபோதும் நிற்பதில்லை.
முடிவடைந்ததுபோல ஒவ்வொரு கணமும் தோற்றமளித்துவிட்டு, மீண்டும்
மீண்டும் தொடர்ந்தபடி இருக்கிறது. அறிவும் செல்வமும் காலம் போட்டுக்கொள்ளும்
புனைவு தவிர வேறொன்றுமில்லை. காலமே நெஞ்சில் காற்றையும் உயிரில் புதுத்தெம்பையும்
நிரப்புகிறது. காலமே இலக்கை வகுக்கிறது. காலமே அதைநோக்கி ஓடவைக்கிறது. காலமே
களைப்புறவைக்கிறது. இன்னும் ஒரு அடி கூட தன்னால் முடியாது என்று கைவிட்டு நிற்கிற
கணத்தில் தன் விஸ்வரூபத்தை அவனை உணரவைக்கிறது. காலத்தின்முன் மனிதன் எவ்வளவு சிறிய
உயிர். அக்கணத்தில் மனம் உணரும் அமைதியும்
தன்னிறைவும் மாபெரும் அனுபவம் அல்லவா?.
ஒன்பதாவது விக்கிரகத்தைத்
தேடும் மனிதர்களின் நீண்ட பயணங்கள் எங்கிருந்து தொடங்கியதென்றாலும் இப்புள்ளியில்
வந்துதான் நிறைவடைகின்றன. ஆயிரமாயிம் ஆண்டுகளாக நம் மாபெரும் இலக்கியங்கள் இந்தப்
பயணத்துக்கே வழிநடத்திச் சென்றன. அந்த நீண்ட சங்கிலியின் கண்ணிகளாக இன்று நாவல்கள்
உள்ளன. தாயின் கருவறையில் மனித உயிரின் அமைதியான இருப்புதான் எல்லாருக்கும்
தொடக்கப்புள்ளி. கைம்முதலையும் இழந்து வறுமையில் விழுபவனைப்போல, வாழும் வகையில் அந்த அமைதியை சிறிதுசிறிதாக நாம் இழந்துவிடுகிறோம். ஏதோ
ஒன்றை அடைய, இன்னும் அடைய, இன்னும்
அடைய என்று கிளம்பி எல்லாவற்றையும் பறிகொடுத்துவிடுகிறோம். குழம்புகிறோம்.
தத்தளிக்கிறோம். மனம் தௌiவடையும் தருணத்தில்தான் கண்கள்
அமைதி நிரம்பிய வானத்தைக் காண்கின்றன. அந்த வெளியிலிருந்து ஒவ்வொரு வாசகனும் தன்
நெஞ்சில் அமைதியை நிரப்பிக்கொள்கிற கணம் அது.
கணியன் பூங்குன்றனாரின்
புறநானூற்றுக்கவிதையை ஒருகணம் நினைத்துக்கொள்ளலாம். யாதும் ஊரே யாவரும் கேளிர்,
தீதும் நன்றும் பிறர் தர வாரா என்று தொடங்கும் பாடல். அதன் ஒவ்வொரு
வரியும் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படவேண்டிய வரி அல்லவா? "மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனினும்
இலமே" என்னும் வரிக்கு நடுவே எல்லாரையும் வாரி அணைத்துக்கொள்ள கைநீட்டி
அழைக்கிற மகத்தான சக்தியின் வடிவத்தை நம்மால் பார்க்கமுடிகிறதல்லவா?. அன்பு கனிந்த அமைதியின் ஊற்றுக்கண்ணிலிருந்து அல்லவா இக்கருத்து
பிறக்கிறது.
நாவல்
என்னும் பேருலகத்துக்குள் சூறாவளியே வீசுகிறது. கடுமையான மழைபொழிகிறது. வெள்ளம்
கரைபுரண்டோடுகிறது. சில தருணங்களில் வெப்பம் வாட்டியெடுக்கிறது. ஒரு வாய்
தண்ணீருக்குத் தவியாய்த் தவிக்க வைக்கிறது. அனைத்துக்கும் நடுவே, நடுநடுங்கியபடி இந்த அமைதியென்னும் அழியாச்சுடரும் ஒளிர்ந்தபடியே
இருக்கிறது.