Home

Wednesday 20 November 2019

திரும்பி வராத குருவிகள் - கவிதை



அந்தக் குருவிகள் ஏன் இன்னும் திரும்பவில்லை
என்பதன் காரணம் புரியவில்லை
என்னையும் இந்த அறையையும்
அவை வெறுத்திருக்கக் கூடுமோ தெரியவில்லை
வழக்கமாக அவை வந்து சேரும் நேரம் இது

அவற்றின் கொஞ்சல்
அவற்றின் காதல்
எதுவுமற்ற அறையில் வெறுமை தகிக்கிறது
தனித்த அறையின் மூலையில்
கட்டிலில் சாய்ந்தவாறு
அவற்றை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்
திசைகள் குழம்பி இருக்குமோ,
அல்லது ஒன்று மற்றொன்றைத் தேடிக்கொண்டிருக்குமோ
எல்லாமே புதிராக இருக்கிறது
துக்கத்தாலோ மகிழ்ச்சியாலோ
எங்கேயாவது தங்கியிருக்குதோ தெரியவில்லை
காலையில் அவை பார்த்த பார்வையில்
வழக்கமான நேசம் மட்டுமே இருந்தது
கூட்டிலிருந்து மேசைக்கும்
மேசையிலிருந்து ஜன்னலுக்கும்
ஜன்னலிலிருந்து கட்டிலுக்கும்
தாவித்தாவி அவை பறந்தபோது கூட
என் பார்வையில் எந்த சீற்றமும் இல்லை
அவற்றின் கீச்சுக் குரல் பற்றியும்
அசுத்தத்தைப் பற்றியும்
ஒருநாளும் நான் புகார் செய்ததில்லை
இருள் வரும் நேரம்
இனி வர வாய்ப்பில்லை என்று தோன்றியபோது
என் உடல் பதறுகிறது
இக்கணத்தில் எனது ஒரே ஆறுதல்
குருவிகள் மறந்த கூடு

(கணையாழி, 'செப்டம்பர் 1994)