-1-
பத்தொன்பதாம் நூற்றாண்டிலும்
இருபதாம் நூற்றாண்டிலும் எழுதப்பட்ட ருஷ்ய, ஐரோப்பிய
நாவல்களின் வருகைக்குப் பிறகு நாவல் என்னும் இலக்கிய வடிவம் சார்ந்த ஆவல்
உலகத்தில் எல்லா மொழிகளிலும் உருவானதைப்போலவே தமிழ்ப்படைப்பாளிகளிடமும் பிறந்தது.
அத்தருணம் வரையிலும் கவிதைத்துறையின் பாடுபொருளாக இருந்த அம்சங்கள் மெல்லமெல்ல
நாவல்களின் பாடுபொருளாக மாற்றமடையத் தொடங்கியது. வெண்பாக்களிலும் விருத்தங்களிலும்
பாடப்பட்டுவந்த நீதிக்கருத்துகளும் அறநெறிக்கருத்துகளும் உரைநடையின் தளத்துக்கு
உடனடியாக வந்து சேர்ந்தன.
ராஜாராணிக்கதைகளின்மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர்களாக
இருந்தவர்கள் நம் மக்கள். ராமர், கிருஷ்ணர், அரிச்சந்திரன், நளன், தருமன்,
துரியோதனன், துஷ்யந்தன், சகுந்தலை, சீதை என நம் மக்கள் அறிந்த எல்லாப்
பாத்திரங்களும் ராஜாராணி வம்சத்தைச் சேர்ந்தவர்களே. தம் வாழ்வின் ஏதோ ஒரு
கட்டத்தில் எல்லாவற்றையும் இழந்து எளிய மக்களாக துன்பவாழ்வில் உழன்று, பின்பு தம் திறமையால் இழந்துபோன ராஜ்ஜியத்தைக் கைப்பற்றி ஆட்சிபீடத்தில்
ஏறுபவர்களாக இருந்தார்கள். எளியவர்களாகவே பிறந்து எளியவர்களாகவே வளர்ந்து
எளியவர்களாகவே மடிந்துபோகிறவர்கள்மீது மக்கள் கவனம் பதியவில்லை. எளியவர்களாக
இருந்தாலும் அவர்கள் ராஜாராணிகளின் வம்சத்தைச் சேர்ந்த எளியவர்களாக
இருக்கவேண்டும். அரசன்-எளியவன்-அரசன் என்கிற சமன்பாடு ஏதோ ஒரு வகையில் மக்களுடைய
கனவை நிறைவுசெய்வதாக இருந்திருக்கலாம். தம் எளிய வாழ்வு என்றாவது ஒருநாள்
அரசவாழ்வாக உயரக்கூடும் என்னும் கனவு ஒரு விதைபோல எல்லாருடைய நெஞ்சிலும் ஆழ்ந்து
உறங்கிக்கொண்டிருக்கிறது. இதனாலேயே வாய்மொழிக்கதையாக இருந்தாலும் சரி, எழுத்திலக்கியப் படைப்பாக இருந்தாலும் சரி, தொடக்கக்கால
வாசகர்களுக்கு ராஜாராணிக் கதைகளின்மேல் ஆழ்ந்த ஈடுபாடு பிறந்திருக்கலாம்.
ருஷ்யமொழிப்படைப்புகளிலும்
ஐரோப்பிய மொழிப்படைப்புகளிலும் நாவல் களத்தில் நிகழ்ந்தது வேறு. அப்படைப்புகள்
வாழ்வின் முழுமையை முன்வைக்கவேண்டிய கட்டாயத்தில் உருவாகின. நூற்றுக்கணக்கான
தினசரி அனுபவங்களைச் சிறுகச்சிறுகத் தொகுப்பதும், வினை,
எதிர்வினை என எதிரும்புதிருமாக அமையத்தக்க அத்தொகுப்புகளின்
மையங்களை பகுத்துக்கொள்வதும், பகுத்துக்கொண்ட உண்மைகளுக்கும்
உலகஎதார்த்த உண்மைகளுக்கும் உள்ள உறவையும் விலகலையும் வகுத்து, ஒற்றைவரி உண்மையாக வாழ்வின் சாரத்தை உணர்த்துவதும் அவர்கள் வழிமுறையாக
இருந்தன. ஆனால் இதற்கு முற்றிலும் வேறு விதமாக, ஒற்றைவரி
உண்மையாக வாழ்வின் சாரத்தை உரைப்பதே தமிழின் வழிமுறையாக உருவானது. உணர்த்துதற்கும் உரைப்பதற்கும் உள்ள
வேறுபாடுதான் உலக மொழி நாவல்களுக்கும் தமிழின் தொடக்கக்கால நாவல்களுக்கும் உள்ள
வேறுபாடு. தமிழ் நாவல்களிலும் தினசரி அனுபவங்களின் தொகுப்பு கட்டியெழுப்பப்படுகிறது.
ஆனால் வேறுவேறு மையங்களைக் கொண்ட தொகுப்பாக இல்லாமல், இறுதிஉரைக்கு
வலிமைசேர்க்கும்பொருட்டு ஒற்றை மையத்தைச்
சுற்றித் தொகுக்கப்படுகிறது. உலகமுறை ஒரு பூந்தோட்டத்தை உருவாக்குவதாகச் சொல்லலாம்
என்றால் தமிழ்முறை ஒரு பூமாலையைக் கட்டிவைப்பதாகச் சொல்லலாம்.
பிரதாப முதலியார் சரித்திரம்
என்னும் தலைப்பில் 1876 ஆம் ஆண்டில் தமிழின் முதல் நாவலை
எழுதிய வேதநாயகம் பிள்ளை அந்நாவலின் முன்னுரையில் நீதிநூல், பெண்மதிமாலை,
சமரசக் கீர்த்தனம் முதலிய ஏற்கனவே வெளிவந்துள்ள எனது நூல்களில்
குறிப்பிடப்பட்டிருக்கும் அறநெறிக்கொள்கைகளுக்கு உதாரணங்கள் காட்ட இந்த நவீனத்தை
எழுதினேன் என்று சொல்லும் கூற்று கவனிக்கப்படவேண்டிய ஒன்று. நாவலின்
இறுதிப்புள்ளியான அறநெறிக்கொள்கை தொடக்கத்திலேயே வகுக்கப்பட்டுவிடுகிறது. நாவலில்
இடம்பெற்றிருக்கக்கூடிய 46 அத்தியாயங்களும் அதை அழுத்தமாக
நிறுவும்பொருட்டு ஒருமுகப்படுத்தப்பட்ட அனுபவங்கள். இப்படித்தான் நம் முதல்கட்ட
நாவல்களின் பொதுவான கட்டமைப்பு காணப்பட்டது. கல்வி பயின்ற முதல் தலைமுறையினரின்
வாசிப்புப்பசிக்கு உணவிடுவது காலத்தின் தேவை. கல்வியைப் பெறுவோரின் எண்ணிக்கை
விரிவடைந்த காலத்தில் நாவலும் தன் இரண்டாம் கட்டத்தைநோக்கி நகர்ந்தது.
ராஜாராணிகளின் சாயலை முற்றிலும் உதறிய கட்டம் இது. அவர்களுக்கு மாறாக
பண்ணையார்களும் தேவதாசிகளும் இடம்பெற்றார்கள். கல்விப் பெருக்கமும் சமூகச்
சீர்திருத்தமும் மக்களிடையே விழிப்புணர்ச்சியை உருவாக்கியது. சுதந்திர தாகத்தை
ஊட்டியது. வாழ்க்கை என்பது சுகங்களில் திளைத்து மடிவதற்கான இடமல்ல என்னும் உண்மையை
உணர்ந்தது. இலட்சியம் இல்லாத வாழ்க்கை பாய்மரமில்லாத கப்பலைப்போல என்கிற தெளிவை
சமூகம் அவர்களுக்கு உணர்த்தியிருந்தது. நாவல் களத்தில் அறநெறிகள்
நிறுவிக்காட்டப்படுவதற்கு மாறாக, பலவகையான இலட்சியங்கள் நிறுவிக்காட்டப்பட்டன.
சுதந்திரம் ஒரு இலட்சியம். சீர்திருத்தம் ஒரு இலட்சியம், கல்வி,
உயர்வு, மக்கள் தொண்டு, இயக்கப்பணிகள்
என ஏராளமான இலட்சியங்கள். இதைத்தொடர்ந்து, எதார்த்தத்துக்கும்
வாழ்க்கைக்கும் உள்ள முரண்களில் கவனத்தைக் குவிக்கும் வகையில் நாவல் தன் மூன்றாவது கட்டத்தை எட்டியது.
உத்தேசமாக இக்காலகட்ட படைப்புகளைப்பற்றிய ஒரு சித்திரத்தைக் கொடுக்கவேண்டுமென்றால்,
முளைக்குச்சியிலிருந்து அவிழ்த்துவிடப்பட்ட கன்றுக்குட்டி நேராக
ஓட்டமாக ஓடி தாய்ப்பசுவின் மடியில் வாய்வைத்து தவிப்பாற்றிக்கொள்வதுபோல என்று
சொல்லலாம். இதைத்தொடர்ந்து ஏராளமான விலகல்களோடும் உள்இணைப்புகளோடும் நாவல்
வடிவமற்ற ஒரு வடிவத்தோடு, அடுத்த கட்டத்தை நோக்கி
வளர்ச்சியடைந்தது. இக்காலகட்டத்தின் சித்திரத்தை பூந்தோட்டத்தில் ஒவ்வொரு பூவாக
மாறிமாறிச் செல்லும் ஒரு தேனீயின் பயணத்துக்கு நிகரானதாகச் சொல்லலாம்.
நாவல்களில் ஏராளமான
மனிதர்களைப்பற்றிப் படிக்கிறோம். ஒரு நாவலில் பத்து பாத்திரங்கள்
இடம்பெற்றிருந்தால் பத்துவிதமான வாழ்க்கையை நாம் அறிந்துகொள்கிறோம். இதுவரை
தமிழில் எழுதப்பட்ட நாவல்களையெல்லாம் தொகுத்துப் பார்த்தால், அவற்றில் ஆயிரக்கணக்கான வாழ்க்கையை நம்மால் அறியமுடியும். நமக்கு
இம்மண்ணில் கிட்டியிருப்பது ஒரே வாழ்க்கை. இந்த ஒரே வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு,
நாவல்கள்வழியாக ஆயிரக்கணக்கான வாழ்க்கையை பார்க்கக்கிடைப்பது
ஒருவகையான பேறு அல்லவா? இந்த நாவல்களில் அடங்காமல் வெளியே
வழிந்து பரந்திருப்பது கோடிக்கணக்கான வாழ்க்கை அல்லவா? இதனால்,
நாம் வாழ்வது ஒரு சின்ன உலகத்தில், ஆனாலும்
ஒரு பேருலகமே நாவல்களில் இயங்கிக்கொண்டிருக்கிறது என்று சொல்லலாம் அல்லவா? அந்தப் பேருலகத்தில் புகுந்து
வெளிவரும்போது ஒவ்வொருவரும் தத்தம் மனம்கொள்ளுமளவு அனுபவங்களை அள்ளிக்கொண்டு
வருகிறார்கள்.
-2-
பிரதாப முதலியார்
சரித்திரத்தில் மகனும் தாயாரும் இடம்பெறுகிற
ஒரு காட்சி உள்ளது. "ஒரு முக்கியமான விஷயத்தைக் குறித்து உன்னிடத்தில்
பேச வந்திருக்கிறேன். அந்த விஷயத்தின் முக்கியத்துவத்தை நீ நன்றாக
உள்வாங்கிக்கொள்ளும்பொருட்டு, உனக்கு ஒரு சிறிய கதையைச்
சொல்கிறேன்" என்று உரைத்துவிட்டு தாயார் ஒரு கதையைச் சொல்வதாக அந்தச் சம்பவம்
விரிவடைகிறது. அந்தக் கதை இதுதான். ஒரு தேசத்தை ஆண்டுவந்த அரசன் எதிர்பாராத விதமாக
திடீரென மரணமடைந்துவிடுகிறான். அதனால் அரசவையில் உள்ள பொறுப்பாளர்கள் சேர்ந்து
அவன் மகனுக்குப் பட்டம் சூட்டுகிறார்கள்.
அவன் பெரிய செலவாளி. அரசாங்கக் காரியங்களில் அவ்வளவாக ஈடுபாடு காட்டாதவன்.
தீய வழிகளில் இறங்கி, செல்வத்தையெல்லாம்
செலவழித்துவிடுகிறான். எல்லாம் இழந்த நிலையில் துக்கத்துடன் ஒருநாள் உறக்கத்தில்
ஆழ்ந்துபோகிறான். உறக்கத்தில் அவனுக்கொரு கனவு வருகிறது. கனவில் ஒருவன் தோன்றி உன்
தகப்பனாருடைய பொக்கிஷசாலைக்குக் கீழே வெட்டிப் பார். உனக்குத் தேவையான செல்வம்
கிடைக்கும் என்று சொல்கிறான். உடனே அவன் விழித்தெழுந்து, பொக்கிஷசாலைக்குக்
கீழேவெட்டத் தொடங்குகிறான். நெடுநேர முயற்சிக்குப் பிறகு பளிங்கினால் கட்டப்பட்ட
இரண்டு நிலவறைகளை அங்கே கண்டடைகிறான். ஒரு அறையில் ஏராளமான தங்க நாணயங்கள்
வைக்கப்பட்டிருக்கின்றன. மற்றொரு அறையில் ஒன்பது பீடங்கள் காணப்படுகின்றன.
அவற்றில் எட்டுப் பீடங்கள்மீது எட்டு வைர விக்கிரக்கள் நின்றிருக்கின்றன.
ஒன்பதாவது பீடம் ஒன்றுமில்லாமல் வெறுமையாக இருக்கிறது. ஆச்சரியத்தோடு அந்தப்
பீடத்தின் முன்னால் நின்று யோசித்துக் குழம்பிக்கொண்டிருந்தபோது பீடத்தின்
அடிப்பகுதியில் ஒரு வாசகம் எழுதப்பட்டிருப்பதைப் பார்க்கிறன் மகன். "மகனே,
அந்த எட்டு வைர விக்கிரகங்களையும் மிகவும் சிரமப்பட்டு சம்பாதித்து
உருவாக்கினேன். உலகத்தில் ஒன்பதாவது விக்கிரகம் ஒன்று இருக்கிறது. அது, இந்த எட்டு வைர விக்கிரகங்களைக் காட்டிலும் மிகவும் உயர்வானது. அது உனக்கு
வேண்டுமானால் கேரோ பட்டணத்துக்குச் செல். அங்கே என்னுடைய ஊழியர்கள்
இருக்கிறார்கள். அவர்களைச் சந்தித்துப் பேசு. அந்த ஒன்பதாவது வைர விக்கிரகத்தை
அடைய அவர்கள் உனக்கு உதவுவார்கள்" என்று எழுதப்பட்டிருக்கிறது. அதன்படி,
அந்த இளவரசன் கேரோ பட்டணத்துக்குச் சென்று, அவ்விடத்திலிருந்த
ஊழியர்களைச் சந்தித்து, அவர்கள் மூலமாக ஒரு வேதாளத்தின்
நட்பைப் பெறுகிறான். ஒன்பதாவது வைர விக்கிரகத்தை அடைவதற்குத் தேவையான உதவிகளைச்
செய்யுமாறு அந்த வேதாளத்திடம் கேட்டுக்கொள்கிறான். வேதாளம் அவனுடைய வேண்டுகோளை
ஏற்றுக்கொள்கிறது. ஆனால் தனக்குக் கைம்மாறாக அவன் ஒரு செயலைச் செய்துதர வேண்டும்
என்று நிபந்தனை விதிக்கிறது. பதினைந்து வயதுள்ளவளாகவும் அழகானவளாகவும்
களங்கமற்றவளாகவும் உள்ள ஒரு பருவப்பெண்ணைக் கண்டுபிடித்து தனக்காக
அழைத்துக்கொண்டுவந்து ஒப்படைக்கவேண்டும் என்பதுதான் அந்த நிபந்தனை. இளவரசன் அந்த
நிபந்தனைக்குக் கட்டுப்படுகிறான். பெண்ணின் களங்கமின்மையைக் கண்டறியும் பொருட்டு
ஒரு கண்ணாடியை இளவரசனிடம் அளிக்கிறது வேதாளம். ஒரு பெண்ணைப் பார்த்தவுடனே, அந்தக் கண்ணாடியைப் பார். அவள் களங்கம் உள்ளவளாக இருந்தால் அந்தக்
கண்ணாடியிலும் களங்கம் தோன்றும். அவள் களங்கமற்றவளாக இருந்தால் கண்ணாடியும்
களங்கமற்றுத் தோன்றும் என்று சொல்லி அனுப்புகிறது. ஏராளமான ஊர்களுக்குப்
பயணப்படுகிறான் இளவரசன். வேதாளத்தின் நிபந்தனைக்குட்பட்ட மாதிரி ஒரு பெண் எங்காவது
கிடைப்பாளா என்று தேடித்தேடிக் களைத்துப் போகிறான். கடைசியாக அப்படி ஒரு பெண்ணைப்
பார்க்கிறான். பார்த்ததுமே அவளுடைய அழகில் அவனே மயங்கிப்போகிறான். மறுகணமே தன்
ஆசையை விலக்கி அந்தப் பெண்ணை அழைத்துச் சென்று வேதாளத்தின் முன் நிறுத்துகிறான்.
வேதாளம் மகிழ்ச்சியோடு அந்தப் பெண்ணை ஏற்றுக்கொள்கிறது. "நீ எனக்குக் கொடுத்த
வாக்குறுதியைக் காப்பாற்றிவிட்டாய். நானும் உனக்குக் கொடுத்த வாக்குறுதியைக்
காப்பாற்றுகிறேன். நீ உன் நாட்டுக்குச் சென்று உன் வீட்டு நிலவறையை மீண்டும்
திறந்துபார். நீ தேடும் ஒன்பதாவது விக்கிரகம் அங்கிருக்கும்" என்று சொல்லி
அனுப்பிவைக்கிறது. பலநாள் பயணம் செய்து இளவரசன் மீண்டும் தன் நாட்டுக்கு
வருகிறான். ஆவலோடு நிலவறையைத் திறந்து பார்க்கிறான். ஒன்பதாவது பீடத்தில்
சுடர்விட்டபடி ஒரு வைர விக்கிரகம் நிற்கிறது. நெருங்கிப் பார்க்கும்போது, விக்கிரகமாகக் காட்சியளித்தது விக்கிரகம் அல்ல, வேதாளத்துக்காக அழைத்துச் சென்ற
பெண் என்பதைக் கண்டறிகிறான். அக்கணத்தில் ஆகாயமார்க்கமாக வரும் வேதாளம்
"அந்தப் பெண்தான் ஒன்பதாவது விக்கிரகம். அவளை நீ திருமணம் செய்துகொள்"
என்று சொல்லி மறைந்துபோகிறது.
வாழ்வுக்குப் பொருத்தமான
மனைவிதான் மானுடன் காலமெல்லாம் தேடிக்கொண்டிருக்கிற ஒன்பதாவது விக்கிரகம் என்பது
வேதநாயகம் பிள்ளையின் எண்ணம். பத்தாவுக்கு ஏற்ற பதிவிரதை உண்டானால் எத்தாலும்
கூடியிருக்கலாம் என்ற ஒளவையாரின் வரிகளை நாம் படித்திருக்கிறோம். பெண் மகாசக்தி.
அவளைக் கண்டுணர்ந்து, அவளை ஏற்று, உறவை
வளர்த்து, அவளுடைய தாய்மையும் பெருங்கருணையும் மிக்க
பார்வையின் கீழே வாழ்ந்து வளர்ந்து, இந்த மண்ணில் ஆழமாக
வேரூன்றிய மரமாக நின்று தழைப்பது என்பது ஒரு வாழ்க்கை முறை. பிரதாபனுக்குக்
கிடைத்த ஞானாம்பிகை சகலசக்திகளும் கொண்ட பெண்ணாகவே காட்சி தருகிறாள்.
ஒன்பதாவது விக்கிரகத்துக்கான
தேடல் என்பதை ஒரு குறியீடாக நிறுத்தி
யோசித்தால் மானுட வாழ்வை இன்னும் விரிவான தளத்தில் ஆய்வுக்குட்படுத்த முடியும்.
மனிதன் இயற்கையின் முன் தன்னை ஒரு பெருமைக்குரிய முகமாக நிலைநிறுத்த எல்லா நிலைகளிலும்
முயற்சி செய்தபடி இருக்கிறான்.
செல்வந்தனாக, கல்விமானாக, இசைக்கலைஞனாக,
ஓவியனாக, பாடகனாக, வெற்றிகரமான
வணிகனாக, விளையாட்டு வீரனாக, அழகனாக,
அதிகாரம் நிறைந்தவனாக, ஆட்சியாளனாக, மனிதக்கூட்டத்தை வழிநடத்திச் செல்பவனாக, வீரம்
மிக்கவனாக, வெற்றியை ஈட்டுகிறவனாக இந்தச் சமூகத்தின்
முன்னால் அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பியபடி இருக்கிறான். மானுடன் அடைய
விரும்புகிற அந்த அடையாளம்தான் அவன் தேடுகிற ஒன்பதாவது விக்கிரகம் என்று
நினைத்துக்கொள்ளலாம் அல்லவா? ஒன்பதாவது விக்கிரகத்தைத் தேடி
அலைகிற வேகத்தையும் உந்துதலையும் நம்மிடம் பொங்கி எழுச்சிகொள்வதையும் நம்மால்
உணரமுடியும் அல்லவா? இந்தத் துடிப்பும் வேகமும் நம்மை
முன்னால் தள்ளியபடியே இருக்கிறது என்பதை
உணராதவர்கள் இருக்கமுடியாது. பல நூற்றாண்டு காலமாக, இந்த
ஒன்பதாவது விக்கிரகத்துக்கான மானுடகுலத்தின் அலைச்சல்களும் வெற்றிதோல்விகளும் வரலாறாக நம் முன் விரிந்திருக்கிறது. இந்த
அலைச்சல்களுக்கும் அனுபவங்களுக்கும் சாரமாக இருப்பது எதுவோ அதுவே இந்த
வரலாற்றுக்கும், வாழ்க்கையை முன்வைத்து எழுதப்படுகிற
இலக்கியங்களுக்கும் சாரமாக உள்ளது.
சொல்லாகக் காட்சியளிக்கும்
அளவுக்கு இந்தத் தேடல் எளிதல்ல. ஒரு புள்ளியிலிருந்து தொடங்கி இன்னொரு புள்ளியில்
முடிவடைகிற நேர்க்கோட்டுப்பயணமுமல்ல. பாதை தெரியாத இந்தப் பயணம் பல திசைகளுக்கு
இழுத்துச் செல்லக்கூடியது. பற்பல விலகல்களும் இணைப்புகளும் மேடுகளும் பள்ளங்களும்
கொண்ட சிக்கலான தன்மையைக் கொண்டது இப்பாதை. கைகுலுக்கல்களுக்கும் துரோகங்களுக்கும்
சமவாய்ப்புள்ளது இந்தப் பயணம். தாராளமாகப் புன்னகைப்பவர்களைப்போல தாராளமாக
வஞ்சிப்பவர்களும் இருப்பார்கள். கருணை இருக்கிற அதே அளவுக்கு இரக்கமின்மையும்
உண்டு. பதற்றத்தில் துடிக்கவைக்கும் கணங்களுக்கும் ஆனந்தத்தை வழங்குகிற
தருணங்களுக்கும் ஒருபோதும் குறைவே இருப்பதில்லை. சுயநலமும் கனிவும் அகங்காரமும்
பணிவும் கலந்து பொங்கிச் சீறி விழுகிற காட்டருவி அது. இவை அனைத்தையும் கடந்துதான்
மனிதகுலம் தனக்குத் தேவையான ஒன்பதாவது விக்கிரகத்தைத் தேடிக்கொண்டிருக்கிறது.
க.நா.சு.வின்
"பொய்த்தேவு" நாவலை நினைத்துக்கொள்ளலாம். கையில் பணமிருந்தால்
சாத்தனூரையே விலைகொடுத்து வாங்கிவிடமுடியும் என்ற பிள்ளைக்கனவில் பணத்தைத் தேடத்
தொடங்குகிறான் சோமு. ஒரு திருடனாக தன் தந்தை உலவிய அதே சாத்தனூர் கடைத்தெருவில்
ஒரு மாபெரும் வணிகனாக தன்னை நிலைநிறுத்திக்கொள்ள திரண்டெழும் அவன் விழைவு ஆழமான
தளங்களை உடையது. தன் வெற்றியைத் தவிர வேறெந்த சிந்தனையும் இல்லாமல் சலிப்பில்லாத
உழைப்பை மேற்கொண்டபடி பயணத்தைத் தொடர்கிறான். சமூகத்தின் பார்வையில் கண்ணியமான
கனவானாகவும் ஊரே திரண்டுவந்து புதுமனை புகுவிழாவில் கலந்து கொள்ளவைக்கிற கௌரவமான
மனிதனாகவும் உயர்வடைகிற சோமு முதலியாரின் பயணம் சாத்தனூரே காணாத ஒன்று. தன் ஆர்வத்தால் இளமையில் கிடைக்காத கல்வியை
நடுவயதில் அடைகிறார். காமம் அவர் தேடிச் செல்லாமலேயே அவரை வந்தடைகிறது. அப்போதும்
அவர் பயணம் நிற்கவில்லை. தனக்கு ஆசைநாயகியாக வந்தவளின் வலையில் தன் மகன்
விழுந்துகிடக்கும் செய்தி அவரை சற்றே அதிர்ச்சிக்குள்ளாக்கித் தடுமாறவைக்கிறது.
அந்தக் குழப்பத்துக்கும்கூட அவருடைய பயணத்தைத் தடுத்து நிறுத்தும் ஆற்றலில்லை.
தற்செயலான ஒரு பிழையால் சிறைசெல்ல நேர்கிறது. காற்றின் அலைகள் சுமந்துவரும்
மணியோசையால் தன் மனம் நிரம்புவதை உணர்ந்த கணத்தில் தேடிச் சேர்த்த எல்லாச்
செல்வத்தையும் துறந்து துறவியாகி ஊரைவிட்டே வெளியேறிவிடுகிறார். அந்தத்
துறவுப்பயணத்திலும் அவர் எதையும் அடையவில்லை. மரணம் மட்டுமே குறுக்கிட்டு அவருடைய
பயணத்தை நிறுத்துகிறது. மரணப்புள்ளிவரை தேடிச் சென்ற அப்பயணத்தில் அவர் எதிர்பார்த்த
ஒன்பதாவது விக்கிரகத்தைக் கண்டடைந்தாரா என்பது முக்கியமான கேள்வி. ஒன்பதாவது
விக்கிரகம் என உண்மையில் எங்கும் ஒன்றுமில்லை, அதைத் தேடிச்
செல்லும் பயணமே உண்மை என்னும் கருத்தே அவர் வாழ்வின் இறுதியில் எஞ்சி நிற்கிறது.
ஒவ்வொரு கணமும் உயிர்ப்பாற்றலோடு வாழ்வதே வாழ்க்கை. அதைக்கடந்து அதற்கான கணக்கு
வழக்கு என ஒன்றுமே இல்லை. இன்னொரு சாத்தனூர் அருகே இறந்துகிடக்கிற சோமு சாமியாரின்
சித்திரம் ஆழ்ந்த மனஎழுச்சியை வழங்கக்கூடியது. அந்த ஒரு மரணத்தோடு நம் மனம் ஒரே
கணத்தில் வாழ்வில் நேரிடையாகவும் கேள்விஞானத்தின் வழியாகவும் கண்டுணர்ந்த பலநூறு
மரணங்களையும் இணைத்துப் பார்த்துக்கொள்கிறது. இப்போது நம் மனம் எழுப்பிக்கொள்ளும்
கேள்வி ஒன்பதாவது விக்கிரகத்தைத் தேடிச் சென்ற சோமு முதலியாரைப்பற்றியதல்ல,
ஒன்பதாவது விக்கிரகத்தைத் தேடிச்சென்ற இந்த மனிதத்தலைமுறையைப்
பற்றியதாக விரிவடைந்து திகைக்கவைக்கிறது.
"ஒரு புளிய மரத்தின்
கதை" நாவல் எதைத் தேடிய பயணம் என்ற கேள்வியை முன்வைத்து ஆய்வு செய்யும்போது
கிட்டும் விடைகள் விசித்திரனமானவை. யாரோ ஒருவரின் பயணமாக மட்டுமே அந்த நாவல்
இல்லை. பலருடைய பயணங்களின் தொகுப்பாக இருக்கிறது. அதுவும் வெவ்வேறு தலைமுறையினரைச்
சேர்ந்த வெவ்வேறு தரப்பட்ட மனிதர்களின் பயணங்களின் தொகுப்பாக இருக்கிறது. பூரம்
திருநாள் மகாராஜாவின் பயணத்தின் வழியாகத்தான் புளியமரம் முன்னணிக்கு வருகிறது.
எங்கே பார்த்தாலும் புல்லும் பூண்டும் வளர்ந்து, பகலிலேயே
நரி ஊளையிடுகிற, துர்நாற்றம் வீசுகிற புளிக்குளம் அது.
தற்செயலாக அங்கிருந்து வீசிய துர்நாற்றக்காற்று கடல்குளியலுக்காக கன்னியாகுமரிக்கு
கிளம்பிய மகாராஜாவின் மனநிலையைக் குலைத்துவிடுகிறது. குடிமக்களின் வணக்கங்களை
எதிர்கொண்டபடி முன்னேறிக்கொண்டிருந்தவரால் காற்று சுமந்து வந்த அந்தத்
துர்நாற்றத்தைத் தாங்கமுடியாமல் ரதத்தை வேகமாக ஓட்டச் செய்து ஊரைத்
தாண்டிவிடுகிறார். அவருடைய ஆணையால் குளத்தின் தண்ணீர் வாய்க்கால் வழியாக
வெளியேற்றப்பட்டு பலநூறு மக்கள் தொடர்ச்சியாக வேலை செய்து ஒரு குன்றை வெட்டி
மண்ணெடுத்துவந்து குளத்தை மூடுகிறார்கள். குன்று தரையோடு தரையானபோது இருந்த இடம்
தெரியாமல் மறைந்துபோகிறது குளம் . புளிக்குளம் மறைந்து புளியமரம் மட்டுமே
எஞ்சுகிறது. அரசரின் வருகையால்தான் ஊரே நிமிர்ந்தது என்று பெருமைப்பட்டுக்
கொள்கிறார்கள் மக்கள். ஊரின் பெருமையோடு மரத்தின் பெருமையும் சேர்ந்துகொள்கிறது.
புளிய மரத்தின் பயன்கள் அனைத்தையும் ஊர் நுகர்ந்து மகிழ்கிறது. இது ஒரு கட்டம்.
அரசர்களின் காலம் மறைந்து, சுதந்திரஇந்தியா மலர்ந்து,
ஊரும் நாடும் மேலும்மேலும் திருத்தம் பெறுகின்றன. வணிகர்கள்
மெல்லமெல்ல சமூகத்தின் முன்தட்டைநோக்கி வருகிறார்கள். வாழ்க்கையின்
உச்சத்தைநோக்கிய பயணம் அது. வணிகர்களுக்குள் லாபத்துக்கான போட்டி அதிகரிக்கிறது.
அதிக லாபமீட்டும் வணிகர்களின்மீது குறைந்த லாபமீட்டும் வணிகர்களுக்கு மனத்தாங்கல்
இருக்கிறது. முன்னால் செல்பவனை இடறவிட்டு தாண்டிச் சென்றுவிடவேண்டும் என்ற வேகம்
அவர்களை மூர்க்கம் கொள்ளவைக்கிறது. லாபத்துக்குச் சாதகமான வாய்ப்புகள் என்னென்ன
என்று நிதானமாகப் பட்டியலிடுகிறார்கள். அந்த வாய்ப்புகளை முடக்குவதன்வழியாக
அவர்களுடைய வணிகத்தை நிலைகுலையச் செய்யத் திட்டமிடுகிறார்கள். தாய்மடியென
படர்ந்திருக்கக்கூடிய புளியமரத்தின் நிழலடி, கடையின்முன்னால்
வாடிக்கையாளர்கள் கூடி நிற்பதற்கும் வியாபாரம் பெருகுவதற்கும் ஒரு முக்கியமான
காரணம் என்பதை அறிந்துகொள்ளும் மாற்றுத்தரப்பு, அந்த
வாய்ப்பை நிரந்தரமாக அழிக்கத் திட்டமிடுகிறது. நகரசபையில் தனக்குச் சாதகமான
தீர்மானங்களை நிறைவேற்றச் செய்து புளியமரம் வீழ்த்தப்படுகிறது. வெற்றிக்கான
போட்டியில் மனிதத் தந்திரத்துக்குப் பலியாகிறது புளியமரம். அதன் பழமை, பெருமை, வலிமை எதுவுமே பொருட்படுத்தப்படாமல்
போகிறது. இது இன்னொரு கட்டம். இரண்டு கட்டங்களையும் இப்போது நாம் இணைத்துப்
பார்க்கலாம். ஒரு கட்டம் அரசர்கள் ஆண்ட முடியாட்சிக்காலம். இன்னொரு கட்டம்
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் ஆண்ட மக்களாட்சிக்காலம்.
துர்நாற்றத்தை தன்னால் தாங்கமுடியாது என்பதால் அதன் ஊற்றுக்கண்ணான குளத்தை
அடைக்கச்செய்யும் மன்னரின் நடவடிக்கையில் தன்னலம் இருந்தாலும், அந்தத் தன்னலத்தில் மக்களின் நன்மைக்குரிய பொதுநலப் பார்வையும் இருக்கிறது.
புளியமரத்தை வெட்டி வீழத்துவதில் தன்னலத்தைத் தவிர வேறெதுவும் தெரியவில்லை. ஒரு
சாதாரண வியாபாரப் போட்டி மனிதனின் பேராசையும் ஆண்டாண்டு காலமாக நிற்கிற மரத்தை
வீழ்த்திவிடுகின்றன. வெற்றியை அடையும் ஆவேசத்தில் மரத்தை வீழ்த்திச் செல்லும்
மனிதர்கள் இருக்கிற இதே மண்ணில்தான், வெற்றியை உதறிவிட்டு மிட்டாய்களோடு மறுபடியும்
குழந்தைகள்முன்னால் சிரித்தமுகத்தோடு வந்து நிற்கிற கடலைத்தாத்தாவும் இருக்கிறார்.
ஒரு காலத்தில் குன்றும் குளமும் மரங்களும் காடும் ஊரும் மக்களுமாக இருந்தது இந்த
உலகம். குன்றை இடித்து குளத்தை மூடியது ஒரு காலம். மரத்தை வீழ்த்தி மனிதர்கள்
வெற்றிக்கான பாதையை வகுத்துக்கொண்டது ஒரு காலம். குன்று, குளம்,
மரம் எல்லாம் போனாலும் வற்றாத அன்பு நிறைந்த தாத்தா அடுத்துவரும் காலத்தை
எதிர்கொள்ளும் சக்தியாக நிற்கிறார். மாற்றம் தவிர்க்கமுடியாத ஒன்று. மாறுதல் ஒன்றே
மாற்றப்படமுடியாத சக்தி என்பது சமூகவிதி. அந்த மாற்றத்தில் எதைக் கொடுத்து எதைப்
பெறுகிறோம் என்பது கவனிக்கப்படவேண்டிய அம்சம்.