Home

Saturday, 26 October 2019

குரங்கை விழுங்கிய கோழி - கட்டுரை



எண்பதுகளின் இறுதியில் வேலை நிமித்தமாக நான் அடிக்கடி தாவணகெரெ என்னும் இடத்துக்குச் செல்லவேண்டியிருந்தது. அந்த மாவட்டத்தின் ஆட்சியர் எங்கள் துறைக்கு நுண்ணலை கோபுரமொன்றைக் கட்டுவதற்காக அரசு இடத்தை ஒதுக்கித் தருவதாக வாக்களித்திருந்தார். ஆனால் எழுத்துமூலமாக அதற்குரிய ஆணையை அவர் இன்னும் வழங்காமலிருந்தார். எத்தனை நாட்களானாலும் தங்கியிருந்து வாங்கிவரும்படி எனக்கு நிர்வாகம் கட்டளையிட்டிருந்தது. இரண்டு நாட்கள் அலுவலக வளாகத்திலேயே காத்திருந்தும் அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. பார்வையாளர் வளாகத்தில் அமர்ந்துகொண்டு நான் கையோடு கொண்டுசென்றிருந்த புத்தகங்களையெல்லாம் படித்ததுதான் மிச்சம். 


மூன்றாம் நாளில் அதுவும் இல்லை. பொழுது சாயும்வரை காத்திருந்தேன். அழைப்பு கிடைக்கவே இல்லை. இதனால் ஏமாற்றத்துடன் அறைக்குச் செல்ல மனமின்றி மேற்கு நோக்கி இலக்கில்லாமல் நடக்கத் தொடங்கினேன். முற்றிலுமாக இருட்டும்வரை ஒரே திசையில் நடந்துசெல்வது என்றும் பிறகு திரும்பிவருவது என்றும் மனத்துக்குள் ஒரு திட்டமிருந்தது.

திரும்பிவரும்போது ஒலிபெருக்கியில் யாரோ பாடும் சத்தம் கேட்டது. காற்றின் வேகத்தில் அக்குரல் அழுத்தமாகக் கேட்டது. பேச்சுமொழியில் அமைந்த பாடல் என்பதாலும் வாத்தியங்களின் இசைகோர்வையோடு அக்குரல் ஒலித்ததாலும் என்னால் பாடல் வரிகளைச் சரியாக உள்வாங்கிக்கொள்ள இயலவில்லை. ஆனால் அதன் தாளக்கட்டு வசீகரம் நிரம்பியதாக இருந்தது. பாடல் ஒலியோடு ஓராயிரம் கைகள் ஒன்றாகத் தட்டி ஓசையெழுப்பிப் பின்தொடர்வதைக் கேட்டேன். என் நடையில் வேகத்தைக் கூட்டி, பாட்டு மிதந்துவந்த திசையை நோக்கிச் சென்றேன். இடையில் அதுவரை ஒலித்த பாடல் நின்று, ஆரவாரமான கைத்தட்டல் எழுந்தடங்கிய சிறிது நேரத்தில் இன்னொரு பாடல் தொடங்கியது. பல்லவியின் முதல் வரியை ராகத்தோடு அவர் பாடத்தொடங்கியதுமே மீண்டுமோர் ஆரவார அலை எழுந்தது. என்னால் நம்பவே முடியவில்லை. நான் அதுவரை அப்படி ஒரு பாட்டைக் கேட்டதே இல்லை. கண்டிப்பாக அது திரைப்படப் பாடல் அல்ல என்று என் உள்மனம் உறுதியாகச் சொன்னது. பிரச்சாரப்பாடலும் அல்ல. அந்தச் சாயலே அக்குரலில் இல்லை. கண்டிப்பாக அது நாட்டுப்புறப் பாட்டாகவோ அல்லது அப்பாட்டின் மெட்டில் புனையப்பட்ட பாட்டாகவோ  இருக்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டேன்.

ஒரு பெரிய மைதானம். ஏறத்தாழ  இரண்டாயிரம் பேர் வெறும் தரையில் உட்கார்ந்திருந்தார்கள். அங்கங்கே கம்பங்கள் நடப்பட்டு குழல்விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன. மரத்தடிகளிலும் பாலத்தின்மீதும் பல நூறு பேர்கள் நின்றிருந்தார்கள். பலரும் கம்பளியைப் போர்த்தியிருந்தார்கள். எல்லோருடைய கவனமும் பாடல்களின்மீது குவிந்திருந்தது. நான் ஒரு பாலத்தில் கிடைத்த இடத்தில் உட்கார்ந்துகொண்டேன். மேடையில் மூன்றே மூன்று வாத்தியக்காரர்கள் இருந்தார்கள். தபேலா வாசிப்பவர் தனியாக ஒரு பக்கத்தில் இருந்தார். மிருதங்கம் வாசிப்பவரும் மேளம் வாசிப்பவரும் மற்றொரு பக்கத்தில் காணப்பட்டார்கள். இடைவேட்டியோடு தோளில் துண்டு புரள ஒரு நடுவயதுக்காரர் ஒலிவாங்கியின் முன்னால் அமர்ந்திருந்தார். தலைமுடியும் தாடியும் நரைத்து அடர்ந்திருந்தன. அருகில் இருந்த செம்பைத் தூக்கி அண்ணாந்து ஒரு சில மிடறுகள் பருகினார். உதடுகளைத் துடைத்துக்கொண்டு கோடகன கோளி நுங்கித்தோ…” என்று முதல் வரியிலேயே உச்சத்தைத் தொட்டார். சுற்றியிருந்தவர்களின் வரவேற்பை நம்பவே முடியவில்லை. பலரும் எழுந்து ஆனந்தமாக ஆடத் தொடங்கிவிட்டார்கள். ஆளாளுக்கு மூலைக்குமூலை நின்று அந்த வரியை மந்திரம்போலத் திரும்பத்திரும்பப் பாடினார்கள். அந்தக் குரல் என்னையும் வசீகரித்தது. வெண்கலக்குரல். ஒரு பெரிய மணி. அதன் நாக்கு ஒருபுறம் மோதியதுமே ஓங்கியொலிக்கிறது ஓசை. அது அடங்குவதற்கு முன்னால் மணியின் நாக்கு மறுபுறத்தைத் தொட்டுவிடுகிறது. மீண்டும் ஓசை உச்சத்தை நோக்கிப் பாய்கிறது. ஒரு வெள்ளம்போல. வெள்ளத்தின் அலை பொங்கிவந்து பாய்வதுபோல அக்குரல் பாய்கிறது. தோழமைமிக்க நண்பனின் விரல்போல தோளைத் தட்டுகிறது. சிறுவயதுத் தோழிபோல கைகளைக் கோர்த்துக்கொண்டு தட்டாமாலை சுற்றுகிறது. சுற்றுப்புறத்தில் இருப்பவர்களின் நடவடிக்கைகளைக் கண்டு கிட்டத்தட்ட பித்துற்றவனானேன். 

என் மனம் தெளிவதற்குள் அவர் பல்லவியையும் அனுபல்லவியையும் முடித்துக்கொண்டு சரணத்துக்கு வந்துவிட்டார். முதல் சரணம் முடிந்து மறுபடியும் கோடகன கோளி நுங்கித்தோ…” என்று முதல் வரியை மீண்டும் திரும்பிச் சொல்லி நிறுத்தினார். பரவசத்தில் பார்வையாளர்க்ளும் பாடகரோடு சேர்ந்து பாடினார்கள். அவர் அடுத்த சரணத்துக்குச் செல்வதற்கு முன்னால் ஒரு சின்ன இடைவெளி. வாத்தியங்கள் அந்த இடைவெளியை அழகாக நிரப்பின. அப்போது அந்த வரிக்கு என்ன பொருள் என்று யோசிக்கத் தொடங்கினேன். கோடகன் என்பது குரங்கு. கோளி என்பது கோழி. ஒரு அற்புதச் செய்தியைச் சொல்லும் வேகத்தோடு குரங்கைக் கோழி விழுங்கிவிட்டது என்று அறிவிக்கிறது அக்குரல். குரங்கை எப்படி ஒரு கோழி விழுங்கமுடியும் என்று கேள்வி கேட்ட என் காரண அறிவு முன்னால் வந்து நின்று என்னை யோசிக்கவிடாமல் தடுத்தது. பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்தென்றால், இத்தனை ஆயிரம் பேர் பித்துப் பிடித்தமாதிரி இந்த வரியைக் கேட்டு ஏன் ஆடுகிறார்கள் என்ற கேள்வியெழுந்தது. ஆனாலும் விடை தெரியவில்லை, ஒருவர் விடாமல் எல்லோருடைய முகங்களிலும் உற்சாகத்தையும் பரவசத்தையும் தெளிவாகப் பார்க்க முடிந்தது.

கிட்டத்தட்ட இருபது பாடல்களுக்கும் மேல் பாடினார் அவர்.  மிகப்பெரிய கொண்டாட்ட மனநிலையில் மக்கள் அதை ரசித்தார்கள். ஒருபுறம் நம்ப முடியாதபடி ஒரு குழப்பம். இன்னொரு புறம் பொங்கிப் பீறிடும் உத்வேகம். அபப்டியொரு மனநிலையில் நான் இதற்குமுன்னால் இருந்ததில்லை என்பதால் அது ஒரு புதுவிதமான அனுபவமாக இருந்தது. கோடகன கோளி நுங்கித்தோ…” என்னும் ஒரு வரியை மட்டும் தாள வேறுபாடுகளோடு என் மனம் உறுதியாகப் பிடித்துக்கொண்டது.

ஊருக்குத் திரும்பிய பிறகு, என் நண்பரிடம் பார்த்ததையும் கேட்டதையும் சொன்னேன். மூவாயிரம் பேர் கொண்ட கூட்டம் என்பது மிகக்குறைவு என்றும் ஹூப்ளி பக்கம் சென்றால் இந்தப் பாட்டுக்கு பத்தாயிரம் பேர் கூடுவார்கள் என்றும் சொன்னார். ஆச்சரியமாக இருந்தது. அது என்ன நாட்டுப்புறப்பாட்டா?” என்று கேட்டேன். இல்லை, நாட்டுப்புறப் பாட்டின் மெட்டில் கட்டப்பட்ட தத்துவப்பாட்டு. இதை எழுதியவர் சிசுநாள ஷரீஃப்என்றார். நான் அவரை ஏறிட்டுப் பார்த்தேன். ஆமாம். அவருக்குக் கர்நாடகத்தின் கபீர் என்றொரு செல்லப்பெயர் உண்டு. மதங்களைக் கடந்தவர். அருமையான கவிஞர். ஜீவாத்மாவும் பரமாத்மாவும் சேர்ந்து நிகழ்த்தும் ஒருவித நாடகக்காட்சிகளே அவருடைய பாடல்களின் மையம். ஒரு சில பாடல்களில் ஜீவாத்மா பரமாத்மாவை நோக்கி வணக்கத்தோடு அழைக்கும். வேறு சில பாடல்களில் பரமாத்மாவே ஜீவாத்மாவைத் தேடிக்கொண்டு வரும். ஒன்றைப் பார்த்து ஒன்று பேசும் உரையாடல்கள் கன்னட இலக்கிய உலகின் மாபெரும் புதுமை. இதுவே ஷரீஃப் பாடல்களில் அடங்கியிருக்கும் ரகசியம்என்று அமைதியாகச் சொன்னார். என் உதடுகளில் இன்னும்     கோடகன கோளி நுங்கித்தோ…” வரி ஒட்டிக்கொண்டிருந்தது. நான் அதை அவரிடம் சொல்லி இந்தப் பாட்டைக் கேட்டதும் பார்வையாளர்கள் எழுப்பிய கைத்தட்டல்களால் அந்த இடமே அதிர்ந்துபோனதுஎன்றேன். இருக்காதா பின்னே? இது அவருடைய மிகச்சிறந்த பாடல். குவெம்புவின் வளையல்காரன் பாட்டையும் ஷரிஃப்பின் கோடகன பாட்டையும் பாடாமல் எந்த மேடைப் பாட்டுக்கச்சேரியையும் கர்நாடகத்தில் முடிக்கமுடியாது.  ஷரீப் மறைந்து எவ்வளவோ ஆண்டுகள் ஓடிவிட்டன. அந்த வரிகளில் இன்னும் அவருடைய உயிர் ஒட்டிக்கொண்டிருக்கிறதுஎன்றார்.  எனக்கு அந்தப் பாட்டின் முழுவடிவமும் தேவை என்று கேட்டேன். அவர் மறுநாள் சந்திப்பில் அந்தப் பாட்டைக் கொண்டுவந்து கொடுத்தார். அன்று இரவு உட்கார்ந்து அதை வரிவரியாக மொழிபெயர்த்தேன். தமிழில் படிக்கும்போது வியப்பாக இருந்தது. பாட்டுக்குள் ஏராளமான அடுக்குகள். எல்லாமே ஒன்றை ஒன்று விழுங்கும் தகவல்கள். விழுங்கும் செயல்தான் அறிவியலுக்கு அப்பாற்பட்டதாக இருந்த்து.

குரங்கைக் கோழி விழுங்கியதே
பாரம்மா தங்கையே
குரங்கைக் கோழி விழுங்கியதே


ஆடு யானையை விழுங்கியதே
சுவர் சுண்ணாம்பை விழுங்கியதே
ஆட வந்த நாட்டியக்காரியை மத்தளம் விழுங்கியதே

உரல் உலக்கையை விழுங்கியதே
எந்திரம் அச்சை விழுங்கியதே
அரைக்கவந்த கிழவியை அரிசி விழுங்கியதே

கயிறு தறியை விழுங்கியதே
தறியை இழைகள் விழுங்கியதே
தறியில் நீளும் இழைகளை
நூல்கண்டு விழுங்கியதே

எருதை நுகத்தடி விழுங்கியதே
தானியம் தொம்பையை விழுங்கியதே
குன்று குகையை விழுங்கியதே
குகையை எறும்பு விழுங்கியதே
கோவிந்த குருவின் பாதம் என்னையே விழுங்கியதே தங்கையே
குரங்கைக் கோழி விழுங்கியதே

அபூர்வக்கலவையான அந்த வரிகளை நெஞ்சில் அசைபோட்டபடி அன்று முழுக்கத் திரிந்தேன். அவை மேகங்கள்போல என் மனத்தில் மிதந்தபடியே இருந்தன. அதன் பொருள் இதுவாக இருக்குமோ அதுவாக இருக்குமோ என ஏதேதோ யோசனைகள் தோன்றித்தோன்றி மறைந்தபடி இருந்தன. அன்றைய பேருந்துப் பயணத்தில் எவ்விதமான தொடர்பும் இல்லாமல் கம்பரின் பாடலொன்றை நினைத்துக்கொண்டேன். இராமகாதையை எழுதும் முன்னர் தன் முயற்சியைக் குறித்து எழுதும்போது ஆசைபற்றி அறையலுற்றேன்என எடுத்துரைக்கும் பாடல். ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று, ஒரு பூசை முற்றவும் நக்குபு புக்கென  .  பாற்கடலை ஒரு பூனை நக்கிக்குடித்துவிட எண்ணும் ஆசையை கம்பர் உவமையாகக் கையாள்வது பிடித்திருந்தது.  ஒரு பெரிய செயலை ஒரு சின்னஞ்சிறிய உயிர் செய்கிறது. பெரியதற்கு உவமை கடல். சிறியதற்கு உவமை பூனை. பத்தாயிரத்துச் சொச்ச பாடல்களை எழுதிய பூனை பாற்கடலைக் குடித்துவிட்டதாகவே சொல்லலாம் என்று தோன்றியது. வெளிப்படைத்தன்மை மிக்க கடல்-பூனை உவமை கொடுத்த உத்வேகத்தோடு, மறுபடியும் ஷரீஃப்பின்  பாட்டை எடுத்துவைத்துக்கொண்டு ஒவ்வொரு அடுக்கையும் அசைபோட்டேன்.  ஆடு யானையை விழுங்குகிறது. சுவர் சுண்ணாம்பை விழுங்குகிறது. ஆடவந்த நாட்டியக்காரியை மத்தளம் விழுங்குகிறது. , கோழி, ஆடு, சுவர், மத்தளம் என ஒருபக்கம் அடுக்கப்பட்டவை அனைத்தும் மிக எளியவை. குரங்கு, யானை, சுண்ணாம்பு, நாட்டியக்காரி என மற்றொரு பக்கத்தில் அடுக்கப்பட்டவை அனைத்தும் ஆற்றலிலும் ஆகிருதியிலும் மிகப்பெரியவை. ஆகிருதியில் பெரியவற்றை, சின்ன ஆகிருதியுள்ளவை விழுங்குகின்றன என்பதுதான் பாட்டின் சாரமாக இருக்கவேண்டும். இவ்வெளிச்சம் மனத்தில் உருவாகக் காரணமான கம்பனுக்கு உள்ளூர நன்றி சொன்னேன். இரண்டு மூன்று முறை மீண்டும் மீண்டும் படித்தபடியே இருந்தேன். பெரியதை சிறியது விழுங்குகிறது, அது மகிழ்ச்சிக்குரியதாக இருக்கிறது என்பதைத் தெளிவாக உணரமுடிந்தது. இப்போது என்முன் இருந்த ஒரே கேள்வி எது பெரியது, எது சிறியது என்பதுதான். பாட்டில் அதற்கு ஒரு சின்னத் தடயமாவது இருக்கவேண்டுமே என்று மீண்டும் பாடல்வரிகளில் என் கவனத்தைத் திருப்பினேன். அப்போதுதான், பாட்டின் இறுதியில் உள்ள கோவிந்த குருவின் பாதம் என்னை விழுங்கியதே என்ற வரியில் பொதிந்திருந்த தனித்துவம் புரிந்தது. நண்பர் சொன்ன ஜீவாத்மா- பரமாத்மா வாசகம் சட்டென நினைவுக்கு வந்தது. சீடன்தான் ஜீவாத்மா. குரு பரமாத்மாவின் சொரூபம். பாதத்தில் சரணடையும் சீடனை  குரு மனமார ஏற்றுக்கொள்கிறார். அடிபணியும் ஜீவாத்மாவைப் பரமாத்மா கருணையோடு அரவணைத்துக் கொள்கிறது. அந்த அரவணைப்பைத்தான் ஷரீஃப் ஒருவித குறும்போடு முன்வைக்கிறார். உணமையில் அரவணைக்கும் பரமாத்மாவைப் பெரியதாகவும் அரவணைக்கப்படும் ஜீவாத்மாவை சிறியதாகவும் குறிப்பிடுவதுதான் சரியாக இருக்கும். ஷரீஃப் மாற்றிக் குறிப்பிடுவதற்குக் காரணம்  உண்டு. ஜீவாத்மா, இவ்வுலகில் பிறந்து வளரும் போக்கில் தன்னைத்தானே உயர்வாக நினைத்துக்கொண்டு, மமதையாலும் அகங்காரத்தாலும் தன்னைத்தானே ஊதிப் பெருக்கிக்கொண்டு, பெரியதாக நம்பத் தொடங்குகிறது. அந்த நம்பிக்கையைக் கேலி செய்கிற்து ஷரிஃப்பின் குரல். ஜீவாத்மா எப்படி இருந்தாலும், அதைப் பெரிதாகக் கருதுவதில்லை பரமாத்மா. அதன்மீது இருக்கிற பிரியத்தின் காரணமாக, பாதத்தை நெருங்கி வந்ததுமே அரவணைத்து ஏற்றுக்கொள்கிறது. பாட்டை மற்றொருமுறை படித்தபோது பரவசமாக இருந்தது.
இப்படித்தான் ஷரீஃப் பாட்டு எனக்குள் முதன்முதலாகப் பதிந்தது. மேலும்மேலும்  அவருடைய பாடல்களை அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும் அதற்குரிய வாய்ப்பு சரியாகக் கூடிவராமலேயே போய்க்கொண்டிருந்த்து. சில ஆண்டுகளுக்குப் பிறகு, கவிதைகளைப்பற்றி நிகழ்ந்த ஒரு கருத்தரங்குக்குச் சென்றிருந்த தருணத்தில் தற்செயலாக மீண்டும் ஷரீஃப்பைப்பற்றிக் கேட்க நேர்ந்தது. நவீன கன்னடக்கவிதைகளுக்கு ஷரீஃப்பின் பாடல்கள் ஒரு முக்கியமான அடித்தளம் என்றொரு கருத்தாக்கத்தை முன்வைத்துப் பேசினார் பேச்சாளர்.  நவீன கவிதைகளுக்கு உரிய உருவகத்தை ஷரீஃப் எவ்வளவு சிறப்பான வகையில் பயன்படுத்துகிறார் என்பதை அவருடைய பாடல்வரிகளை ஆதாரமாகக் கொண்டு விவரித்தபடியே சென்றார். மிகஎளிய காட்சிகள் வழியாகவும் உரையாடல்கள் வழியாகவும் ஷரீஃப் தமக்குத் தேவையான உருவகங்களைக் கட்டியமைத்துவிடுகிறார்.  நீண்ட உரைக்குப் பிறகு பிறந்த கூரைவீடுஎன்னும் தலைப்பில் உள்ள பாடலைப் பாடிக் காட்டினார். முதல் வரியிலேயே வேறொரு தளத்தை நோக்கிப் படர்ந்த அப்பாட்டை ஒருபோதும் மறக்கமுடியாது.

பிறந்தது கூரைவீடு
வெளியேறினால் வெறும் வீடு
எப்படி இருந்தால் என்ன, இது கண நேர வீடு

வாழ்வதற்கிருக்கும் வீடு
காற்று உலவும் வீடு
கட்டுப்பாட்டோடு காணப்படும் சிவனின் வீடு

கவலையென்னும் மனைவியின் வீடு
சந்தையென்னும் சக்களத்தியின் வீடு
இறுதியை அறிந்தவர்களுக்கோ விளையாடும் வீடு

ஒன்பது வாசல் தாண்டி
மூட்டைமுடிச்சுகளோடு போகும்போது
எச்சரிக்கைமணியொலியைப்போல காற்று வீசும் வீடு

உலகத்திலே
நம் சிசுநாள ஈசனைப்பற்றி
நல்லநல்ல பாடல்களைப் பாடும் வீடு

வாழ்க்கையை ஒரு நாடக மேடையாகச் சொல்லும் வரியைப் படித்திருக்கிறோம். வாழ்க்கையை ஒரு நீர்க்குமிழியாக உருவகிக்கும் வரியையும் படித்திருக்கிறோம். கணநேர வீடு என்னும் சொல்லாக்கத்தில் இருந்த புதுமை என்னை வசீகரித்தது.

இதற்குப் பிறகு என் பணியிடம் திடீரென மாறியது. ஷிமோகா என்னும் நகருக்குச் சென்றேன். அங்கே ஓராண்டுக்காலம் தங்கியிருந்தேன். அந்நகருக்கு அருகில் உள்ள பத்ராவதியில் ஒருநாள் வேலையை முடித்துக்கொண்டு வீட்டுக்குத் திரும்புவதற்காக பேருந்தின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தேன். ஒரு பெரிய அரசமரத்தடிதான் நிறுத்தம். அந்த நிறுத்தத்துக்கு அருகில் ஒரு சின்ன கோவிலும் இருந்தது. நிழலில் கிடந்த ஒரு பாறையின்மீது அமர்ந்திருந்தேன். என்னைப்போலவே பலரும் அமர்ந்திருந்தார்கள். அப்போது அந்த வழியே தம்பூராவை மீட்டியபடியே ஒரு பெரியவர் வந்தார். இனிமையான மாலை நேரத்துக் காற்றுக்கு அந்த மீட்டல் கேட்பதற்கு இனிமையாக இருந்தது. கர்நாடகத்தில் இவர்களை தாசர்கள் என்று அழைப்பார்கள். நல்ல குரல்வளம் இருப்பவர்கள். இசைஞானமும் உண்டு. பாடிக்கொண்டே செல்வார்கள். மக்கள் அன்போடு கொடுப்பதை மனமுவந்து ஏற்றுக்கொள்வார்கள்.
அவர் அந்தக் கோவிலின் முன்னால் நின்று தம்பூராவை மீட்டியபடி பாடத் தொடங்கினார். அவருடைய வசீகரமான குரல் எல்லோரையும் கட்டி இழுத்தது. ஒரு பார்வையாளர் தானாகவே வேகவேகமாகச் சென்று ஒரு தேநீர் வாங்கிவந்து தாசருக்கு வழங்கினார். கோவில் வாசலில் அமர்ந்திருந்த குடியானவர் ஒருவர் தம் அருகில் இருந்த முடிச்சைப் பிரித்து, கை நிறைய சோளத்தை அள்ளி தாசரின் பையில் போட்டார். எனக்கு அக்காட்சி ஆச்சரியமாக இருந்தது. எல்லோருக்கும் பழக்கமுள்ளவர்போல அவர் காணப்பட்டார். புரந்தர தாசரின் பாடல்களையே பெரும்பாலும் பாடினார் அவர். எனக்குரிய பேருந்து வந்து போனதைக்கூடப் பொருட்படுத்தாமல் அவருடைய பாடல்களில் லயித்திருந்தேன் நான். சட்டென ஷரீஃப்பை நினைத்துக்கொண்டேன். ஷரீஃப் பாட்டை அவர் பாடக்கூடும் என்று எண்ணி இறுதிவரை காத்திருந்தேன். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. கூட்டம் மெதுவாகக் கலையத் தொடங்கிய கணத்தில் அவரை நெருங்கினேன். வீட்டுக்கு எடுத்துச் செல்ல வாங்கி பையில் வைத்திருந்த ஒரு சீப்பு வாழைப்பழத்தை அவருடைய பையில் போட்டேன். அவர் என்னைப் பார்த்துப் புன்னகைத்த கணத்தில் அவரோடு  பேச ஆசைகொண்டேன். ரொம்ப நல்லா பாடறிங்கஎன்று பொதுவாகச் சொன்னேன். எல்லாம் அந்த நாராயணஸ்வாமி கருணதான்என்று சிரித்தார். ஏதாவது ஒரு  ஷரீஃப் பாட்டு பாடுவிங்கன்னு எதிர்பார்த்தேன்என்று இழுத்தேன். அவர் கண்களில் ஒரு சுடர் ஒளிர்ந்து அடங்கியது. சாருக்கு ஷரீஃப் பாட்டுன்னா ரொம்ப விருப்பமா?” என்று கேட்டார். நான் மெதுவாகப் புன்னகைத்தபடி தலையசைத்தேன். அவர் விரல்கள் தாமாகவே தம்பூராவை மீட்டின. அந்தத் துண்டு நாதம் மனத்தையே மயக்கியது.  ஷரீஃப் பாடல்கள் அறிமுகமான விதத்திலிருந்து நான் தேடித் தேடிக் கேட்டதுவரை அவரிடம் சொன்னேன். என் ஊர், தொழில் விவரங்களையெல்லாம் கேட்டார். சரி, உக்காந்து கேளுங்கஎன்றபடி ஒருகணம் கண்களை மூடினார். தம்பூராவில் சுருதி கூடியபடி இருந்தது. ஷரீஃபின் பாடலை லயத்தோடு பாடத் தொடங்கினார்.


கோயிலைப் பாருங்கண்ணா- உடலெனும்
கோயிலைப் பாருங்கண்ணா

கோயிலைப் பாருங்க, இந்த
உலகத்துக்கே உரியவன் உள்ளுறைந்து
ஓயா வியப்பில் ஆழ்த்துபவன் உள்ள
கோயிலைப் பாருங்கண்ணா

மூன்று மூலையில் கற்கள் அதில்
ஏற்றிவைத்த பாத்திரம்
உருவத்தோடும் இருப்பவன், உருவமற்றும் இருப்பவன்
காட்சியளிப்பவனாகவும் இருப்பவன், மறைந்திருப்பவனாகவும் இருப்பவன்
தானே வேறொன்றாகவும் இருப்பவன்
கோயிலைப் பாருங்கண்ணா

ஆறையும் மூன்றையும் அடக்கி மேலே
ஏறியவனே பெரியவன்
பேரிகை, கொம்பு, சங்கு முழங்க
ஆனந்தத்தில் பொங்கிப் பாய்கிறவன்
கோயிலைப் பாருங்கண்ணா

ஒவ்வொரு நாளாகக் கழிகிறது
வணங்கி, போளி பாயசம் உண்டு பொழுது போகிறது
யோகராஜா சிசுநாள ஈசன்
பரமாத்மாவாகவும் பிரும்மமாகவும் தானாகவும் உள்ள
கோயிலைப் பாருங்கண்ணா

தம்பூராவின் நாதம் அடங்க அவர் என்னைப் பார்த்து மெதுவாகச் சிரித்தார். புடிச்சிருக்கா?” என்று கேட்டார். ரொம்பரொம்ப பிடிச்சிருக்குதுஎன்று தலையாட்டினேன். இதுல கோயில்னு சொல்றத நிஜமான கோயிலா நாம நெனைக்கக்கூடாது. நம்ம உடம்பைத்தான் கோயில்னு சொல்றாரு ஷரீஃப்என்று அழுத்திச் சொன்னார். புரியுதுங்கய்யா, தமிழ்லயும் உடம்ப கோயிலா நினைக்கும் பழக்கம் இருக்குதுஎன்றேன். அப்படியாஎன்று சிரித்தார் அவர். மூன்று மூலையில் கற்கள், அதில் ஏற்றிவைத்த பாத்திரம்ன்னு சொல்றது எவ்வளவு அழகா இருக்குது பாத்திங்களா? இந்த உடம்பத்தான் அப்படி சொல்றாருஎன்றார். நான் அவரையே பார்த்தேன். சத்வ ரஜ தமோன்னு சொல்லக்கூடிய மூணு குணங்களைத்தான் மூணு கல்லுங்கன்னு சொல்றாரு இந்த உடம்புக்கு ஆதாரமாக அதுங்க இருக்குதுங்கற உண்மையத்தான் சூட்சுமமா சொல்றாரு  என்றார். அவருடைய சொற்கள் எனக்கு அவ்வரிகளைப் புரிந்துகொள்ள அருந்துணையாக இருந்தன. அதேபோல ஆறையும் மூன்றையும் அடக்கி- மேலே ஏறியவனே பெரியவன்னு சொல்றதுல கூட ஒரு உள்ளர்த்தம் இருக்குது. ஆறுங்கறது ஆறு விதமான எண்ணங்கள். காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாத்சரியம்தான் அவை. இந்த ஆறுவிதமான எண்ணங்களையும் மனத்தாலும் சொல்லாலும் உடலாலும் வென்று ஒரு மனிதன் வாழ வேண்டும். அப்படி வாழ்ந்தாதான் நம் உடலுக்குள்ளேயே உள்ள ஈசனை நம்மால் அடையாளம் கண்டுபிடிக்க முடியும்
நான் ஷரீஃப்பைப்பற்றி இன்னும் தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் இருந்தேன். உங்களுக்குத்  தெரிந்ததைச் சொல்ல முடியுமா?” என்று தயக்கத்தோடுதான் கேட்டேன். முடியுமான்னு கேக்கறது என்ன கேள்வி தம்பி? இந்த ஜன்மம் இருக்கறதே உங்களமாதிரி ஆசப்பட்டவங்களுக்கு சொல்றதுக்குத்தானே?”  என்று சொல்லிவிட்டு அப்போதே தொடங்கிவிட்டார்.   அடுத்த அரைமணிநேரம் ஷரீஃப் வாழ்க்கை வரலாற்றை விவரித்தார்.
ஷரீஃப் ஏறத்தாழ நூற்றி எழுபது ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த மகத்தான ஞானி. இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்தவர். தார்வாட் மாவட்டத்தில் உள்ள சிசுவினஹாள என்பதுதான் அவர் பிறந்த கிராமம். அவருடைய அம்மா பெயர் ஹஜீமா. தந்தையார் பெயர் இமாம் சாகிப். இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர் என்றாலும் இமாம் சாகிப் இந்து மத சாஸ்திரங்களிலும் கற்றுத் தேறியிருந்தார். ஷரீஃபுக்கு அவருடைய அப்பாவே முதல் குரு. உருது மொழியோடு கன்னடத்தையும் அவர் கற்பித்தார். இராமாயணத்தையும் மகாபாரதத்தையும் சொல்லித் தந்தார். சரணர்களைப்பற்றியும் அக்காலத்தில் வாழ்ந்த ஞானிகளைப்பற்றியும் தெரிந்ததையெல்லாம் எடுத்துரைத்தார். சிறுவனாக வளர்ந்த பிறகு கோவிந்த ராம பட்டர் என்பவரிடம் கல்விப்பயிற்சிக்காக அனுப்பிவைத்தார். அவர் ஒரு முரட்டு குரு. பிராமணராக இருந்தாலும் பிராமணச்சடங்குகளில் நம்பிக்கை இல்லாதவர். ஆனாலும் ஞானம் மிகுந்தவர். பிராமணக்கூட்டத்தாரால் அவரை ஒதுக்கவும் முடியவில்லை. அருகில் அழைத்து நெருக்கத்தோடு வைத்துக்கொள்ளவும் முடியவில்லை. புகை பிடிப்பவர். மது அருந்துபவர். மது அருந்துபவர்களோடு சேர்ந்துகொண்டு ஊரெல்லாம் திரிபவர் என்றெல்லாம் அவரை எல்லோரும் பழித்தார்கள்.  ஆனாலும் அவர் ஞானத்தின்மீதிருந்த நம்பிக்கையால் இமாம்சாகிப் தன் மகனை அவரிடம் அனுப்பிவைத்தார். பட்டர் தன் மகனைப்போல சிறுவனைப் பார்த்துக்கொண்டார். தன் ஞானத்தையெல்லாம் அவனோடு பகிர்ந்துகொண்டார். குருவும் சீடனும் ஒன்றாகவே எல்லா இடங்களுக்கும் பயணம் செய்தார்கள்.
குருவையும் சீடனையும் தொடர்புபடுத்தி ஏராளமான வாய்மொழிக்கதைகள் உள்ளன. ஒருமுறை பட்டர் தன் சீடர்களை ஒரு சிற்றூரிலிருந்து வேறொரு சிற்றூருக்கு நடைபயணமாகவே அழைத்துச் சென்றார். வழியில் முள்ளடர்ந்த பாதை ஒன்று குறுக்கிட்டது.  காலணிகள் அணிந்திருந்த குரு அந்த முள்பாதையில் ஒரு காலை ஊன்றி கவனமாக அடுத்த பக்கத்துக்குக் கடந்து சென்றார். வெறும் கால்களோடு பின்தொடர்ந்து வந்த சீடர்கள் அதை எப்படிக் கடப்பது என்று புரியாமல் குழம்பித் தவித்து நின்றுவிட்டார்கள். அதைக் கண்ட குரு உடனே தன்னுடைய காலணிகளில் ஒன்றைக் கழற்றி அந்த முள்பாதையின் குறுக்கில் வீசி, அதை மிதித்துக்கொண்டு வரும்படி சீடர்களைக் கேட்டுக்கொண்டார். சீடர்கள் அதிர்ச்சியில் உறைந்துபோனார்கள். குருவின் காலணி கிட்டத்தட்ட குருவுக்கு இணையான உருவகம். அதை மிதிப்பது என்பதை அவர்களால் கற்பனை செய்துகூடப் பார்க்க இயலவில்லை. எல்லாச் சீடர்களும் தயங்கி நின்றார்கள். ஷரீஃப்பின் பக்கம் திரும்பிய குரு நீயாவது வருகிறாயா?” என்று கேட்டார். உடனே சிறிதும் தயக்கம் காட்டாமல் ஷரீஃப் காலணியை மிதித்துக்கொண்டு, முட்பாதையைக் கடந்து சென்றார். பிறகு, ஷரீஃபின் செய்கைக்கும் மற்ற சீடர்கள் செய்கைக்கும் காரணத்தைக் கேட்டார் குரு. ஷரீஃப் அவருக்கு விளக்கமளித்தார். குருவின் காலணிகள் குருவுக்குச் சமம் என்பதில் சந்தேகம் இல்லை. குரு மூலம் என்றால், காலணி உருவகம். மூலத்தை அடைய உருவகத்தை நிராகரிப்பதில் தவறில்லை. மூலத்தை நிராகரித்து, உருவகத்தை வழிபடுவதுதான் மாபெரும் தவறு என்றார். ஷரீஃபின் பார்வை இளம்வயதிலேயே அனைவரையும் கவர்ந்த்து. இப்பார்வை இளம்வயதிலேயே நன்றாக ஊறியிருந்ததால்தான், வளர்ந்தபிறகு, மதங்கள் எனப்படும் புற அடையாளங்களைக் கடந்து, அவை சுட்டும் மூல அறத்தைமட்டுமே பெரிதெனக் கருதும் போக்கு அவரிடம் ஊன்றி வளர்ந்தது.
இன்னொரு கதையும் உண்டு. ஒருமுறை இதுபோலவே சீடர்களுடன் வெளியூருக்கு நடந்து சென்றார் குரு. குருவும் ஷரீஃப்பும் முன்னால் நடக்க மற்றவர்கள் தொடர்ந்து நடந்தார்கள். முன்னால் நடந்த குருவின் பார்வையில் மணலிலொரு தங்கக்காப்பு கிடந்தது தெரிந்தது. தன்னைத் தொடர்ந்துவரும் ஷரீஃப் பார்வையில் அது பட்டுவிடக்கூடாது என்று நினைத்தார் குரு. உடனே, ஷரீஃப்பைப் பார்த்து, வேறொரு திசையில் இருந்த எருக்கஞ்செடியிலிருந்து நாலைந்து எருக்கம் இலைகளைப் பறித்துவரும்படி சொன்னார். ஷரீஃப் அந்தப் பக்கமாகச் சென்றதுமே, குரு அந்தக் காப்பின் மீது காலால் மணலைத் தள்ளி மேடாக்கி மறைத்துவிட்டார். இலைகளைப் பறித்துக்கொண்டு திரும்பிய ஷரீஃப் பார்வையில் அந்த மண்மேடு தென்பட்டது. உடனே, அந்த மண்மேட்டின்மீது குனிந்து வயிற்றை அழுத்தி வாந்தியெடுத்துவைத்தார். பிறகு வாயைத் துடைத்துக்கொண்டே வந்து, இலைகளை குருவிடம் தந்தார். திடீரென ஏன் வாந்தியெடுத்தாய்?” என்று ஷரீஃப்பிடம் கேட்டார் குரு. ஐயா, பொன்னைப் பார்த்து நான் மயங்கிவிடக்கூடாது என்பதற்காக தங்க்க்காப்பின்மீது மணலைத் தள்ளி மறைத்தீர்கள் நீங்கள். உங்கள் கருணையால் எனக்கு எதன்மீதும் ஆசை இல்லை. ஆனால் பின்னால் வரக்கூடிய சீடர்கள் எப்படி இருப்பார்கள் என்று சொல்வதற்கில்லை. அவர்களுக்கு ஒருவேளை இருந்தாலும் இருக்கலாம். திடீரென இந்த இடம் மட்டும் ஏன் மேடாக இருக்கிறது என்று யாராவது ஒருவர் ஆர்வத்தின் காரணமாக அதைச் சீய்த்துப் பார்க்கலாம். எதைப் பார்க்கக்கூடாது என்பதற்காக நீங்கள் மறைத்தீர்களோ, அதை அவர்கள் பார்ப்பது தவிர்க்க இயலாததாகப் போய்விடும். அவர்களுடைய கவனம் அந்தமாதிரி சிதைந்து போய்விடக்கூடாது என்பதால்தான் அக்குவியல்மீது வாந்தி எடுத்துவைத்தேன்என்று விரிவாகப் பதில் சொன்னார் ஷரீஃப். விரும்பித் தின்ற சோறெல்லாம் வெளியே வந்து விழுந்துவிட்ட்தேஎன்று சிரித்தாராம் குரு. அது எப்படி சோறாக முடியும் குருவே, அது உள்ளே இருந்த மோகமாயைகளின் அழுக்கு. உங்கள் கருணையால் அது வெளியே வந்து விழுந்துவிட்டது என்று பதில் சொன்னாராம் ஷரீஃப்.
பிராமணரான குருவும் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவரான சீடரும் இணைந்து ஊரெங்கும் திரிவத்தையும் ஒன்றாகச் சாப்பிடுவத்தையும் ஒன்றாக உறங்குவதையும் பார்த்து கிராமத்தில் உள்ளவர்கள் பழிக்கத் தொடங்கினார்கள். ஒரு ஊரில் அவரை வழிமறித்த பலரும் இது என்ன பட்டரே புதுப்பழக்கம். அந்த இஸ்லாமியப் பையனோடு நீங்கள் இவ்வளவு நெருக்கமாக இருக்கலாமா? அவனோடு நீங்கள் பழக அவன் என்ன பிராமணனா? மேல் கீழ், ஆச்சாரம் தீட்டு எதுவுமே உங்களுக்குக் கிடையாதா? நீங்கள் படிக்கிற சுவடிகளிலே எதுவுமே எழுதியில்லையா?” என்று பழித்துப் பேசினார்கள். பட்டருக்கு இதைக் கேட்டு கோபமோ வருத்தமோ கொள்ளவில்லை. மாறாக சிரித்துவிட்டார். என்னய்யா இவ்வளவு அப்பாவிகளாக இருக்கிறீர்களே, பிறப்பால்மட்டுமே ஒருவன் பிராமணனாகி விடமுடியுமா? இச்சிறுவனைப் பழிக்கிறீர்களே, இவனைவிட பெரிய பிராமணன் இங்கே யார் இருக்கிறார்? நீங்களே சொல்லுங்கள்என்று புன்னகையோடு கேட்டார். அதைத் தொடர்ந்து, “இந்த முப்புரிநூல் இல்லையென்றுதானே இவனை நீங்கள் பிராமணனாக ஏற்றுகொள்ள மறுக்கிறீர்கள். இதோ நானே இவனுக்கு பூணூலை அணிவிக்கிறேன். இன்று முதல் இவன் பிராமணன்என்றபடி ஷரீஃபை அருகில் அழைத்து பூணூலை அணிவித்து ஆரத் தழுவிக்கொண்டார். அவரைப் பழித்தவர்கள் முகம் தொங்கிப் போய்விட்ட்து. ஷரீஃப் குருவின் காலடியில் விழுந்து வணங்கினார். என் குருநாதர் எனக்கு பூணூல் அணிவித்தார்என்று அப்போது அவர் பாடிய பாடல் மிகவும் புகழ்பெற்ற ஒன்று.
இருட்டி வெகுநேரமான பிறகும் கூட எங்கள் உரையாடல் நிற்கவில்லை. ஷரீஃப் பிறப்பால் இஸ்லாமியர். வளர்ந்த விதமோ ஒரு இந்துவாக. அவருடைய சமகாலத்தைச் சேர்ந்த இந்துத் துறவிகள் அனைவரோடும் அவர் அன்பாகப் பழகிவந்தார். அவர்களைவிட மக்களுக்கு ஷரீஃப் நெருக்கமானவராக இருந்தார்கள். அவர் மறைந்த பிறகு, அவரை எப்படி அடக்கம் செய்வது என்பது பெரிய சிக்கலான விஷயமாக மாறியது. எவ்விதமான சடங்குகளிலும் நம்பிக்கை இல்லாதவராக வாழ்ந்த அவருடைய மரணத்தை சடங்குகள் சூழ்ந்துவிடக்கூடாது என்று அவருடனே வாழ்ந்தவர்கள் வலியுறுத்தினார்கள். அதைத் தொடர்ந்து, இஸ்லாமியப் பெரியவர்கள் அவருடைய உடல் முன்னால் குரான் ஓதினார்கள். அவர்கள் ஒதுங்கி நிற்க இந்து மதப் பெரியவர்கள் தமக்குரிய பாடல்களைப் பாடி வணங்கினார்கள்.  இறுதியாக அவருடைய உடல், அவருடைய தாய்தந்தையரின் உடல்களுக்கு அருகிலேயே எவ்விதமான சடங்குகளும் இல்லாமல் அடக்கம் செய்யப்பட்டது.  ஷரீஃப் பற்றி அவர் சொன்ன கதைகள் எல்லாமே கேட்கக்கேட்க ஆச்சரியமளிப்பதாக இருந்தது. முடிவாக, அவருடைய பாடல்கள் ஒலிநாடாவாக கடைகளில் விற்கிறார்கள் என்று சொல்லி பேச்சை முடித்தார் தாசர்.  ஒரு வாரம் தொடர்ந்து பல கடைகளில் கேட்டுக்கேட்டு அலைந்த பிறகு, ஒரு கடையில் எனக்கு அந்த ஒலிநாடா கிடைத்தது. ஒரு பக்கத்துக்கு எட்டுப் பாடல்கள் வீதம் மொத்தத்தில் பதினாறு பாடல்கள் பதிவு செய்யப்படிருந்தன. ஷிமோகாவின் தங்கியிருந்த ஆண்டில் நான் அப்பாடல்களைக் கேட்காத நாளே இல்லை என்றே சொல்லவேண்டும். உற்சாகம் ததும்பும் அக்குரலின் வசிகரத்துக்கு நான் அடிமை என்றே சொல்லவேண்டும்.
பெங்களூருக்கு வந்த பிறகு ஷரீஃப் பாடல்கள் அடங்கிய தொகுப்பொன்றை வாங்கினேன். நேரம் கிடைக்கும்போதெல்லாம் பிடித்தமான பாடல்களை வரிசையாக மொழிபெயர்க்கத் தொடங்கினேன். அவற்றில் குறிப்பிட்ட  சில பாடல்களை மட்டும் இங்கே கொடுத்துள்ளேன்.

நொண்டி குருடர் என எட்டுப்பேர்கள்

நொண்டி குருடர் என எட்டுப்பேரெனும்
மண்கட்டியை எடுத்து வீசட்டுமா
சூறாவளிக் காற்றில் சிக்காமல்
உலகக்கலப்பையைப் பூட்டட்டுமா

நல்ல ஞானமென்னும் நுகத்தடி மாட்டி
கலப்பையைப் பூட்டட்டுமா
மெய்ஞ்ஞானமென்னும் விதைப்புட்டி எடுத்து
விதைகள் தூவட்டுமா

கருப்பு விதை வெள்ளை விதை
விதைகளை அள்ளளட்டுமா
கமுக்கமான விஷயமான
புதிரை உணரட்டுமா.

சிவப்பு பச்சை  மஞ்சள் என்னும்
நிறத்தை உணரட்டுமா
உத்தமன் சிசுநாள ஈசன்
உன்னைக் காத்திடுவானே

எத்தனை எத்தனை குடங்களம்மா

எத்தனை எத்தனை குடங்களம்மா
ஹுப்ளிவரைக்கும் எவ்வளவு அழகான குடங்களம்மா

அழுக்குப்போக தேய்த்ததுமில்லை
கழுவியதுமில்லை
பளபளவென்று ஒளிர்கின்றன
வெண்கலமோ பித்தளையோ கூட அல்ல
பளபளவென்று ஒளிர்கின்றன

ஆறுபேர் அக்கா தங்கை எடுத்தாண்ட குடம்
மூன்று சுமங்கலிகளும் ஏந்தி ஆடிய குடம்

சிவராத்திரி பண்டிகைக்குச் சென்று
சித்தராமனைத் தரிசனம் கண்டு
பைத்தியக்கார உலகில் வாழ்ந்துமுடித்த குடம்

அக்காதங்கை ஆறுபேரும் ஒன்றாகவே தண்ணீர் எடுக்கச் சென்று
சர்ரென்று சறுக்கிவிழ, தவறிவிழுந்து காணாமல்போன குடம்

சிசுநாள ஈசன் தானே திருத்தி வனைந்த குடம்
அறிவாளிகள் புரிந்துகொண்டு பார்க்கவேண்டிய குடம்

ஒழுகுகிறது வீட்டுக்கூரை

ஒழுகுகிறது வீட்டுக்கூரை
மழைக்காற்று சீறியெழ
ஒழுகுகிறது வீட்டுக்கூரை

ஒழுகுகிறது வீட்டுக்கூரை
சரிப்படுத்திக் கட்ட யாருமில்லை
அடர்ந்த இருளில் இருக்கிறேன் நான்
மேலேறிச் செல்லவும் இயலாத சூழல்

உளுத்துப்போய் உடைந்த உத்திரம்
கட்டுத் தளர்ந்து பிடிப்பற்று விலகி
கந்தல் கீற்று பிய்த்துக்கொண்டு பறக்கிறது
மேலேறிச் செல்லவும் இயலாத சூழல்

புல்முளைத்து ஒட்டடை கவிந்து
மழைத்தாரைக்கோட்டில் எறும்புகள் மொய்த்து
வாசலுடைந்து மழைநீர் பொங்கிப்புக
உள்ளும் புறமும் ஒரே கோலமுற

மனைவியே, சற்றே பொறுமையாய்க் கேள்
ஹுப்பி நட்சத்திரமழை தொடங்கிவிட்டது
சிசுநாளத்தை ஆட்சிசெய்யும் இறைவனே
துணையாகிக் காத்தருள்வான் என்று நம்பினேன்

குருவிகளின் தொல்லை

கருங்குருவிகளின் தொல்லைகள் ஏராளம்
காட்டுக்குள் இருப்பது நானொருவன் மட்டுமே

அந்தப் பக்கத்திலிருந்து மூன்று குருவிகள்
இந்தப் பக்கத்திலிருந்து ஆறு குருவிகள்
சமயம்பார்த்து முற்றுகையிடுகின்றன
விரட்டிவிரட்டிச் சலித்துப் போனேன்

தந்திரக் குருவிகள் தாவி வருகின்றன
செய்வதறியாது மனம் குழம்புகிறது
அந்தக் கூட்ட்த்தில் இருக்கிறது ஒரு மகாதந்திரக்குருவி
கவண்கல் எறிந்தெறிந்து சலித்துப் போனேன்

பயிர்களைத் தின்றுதின்று குறட்டைவிடுகிறது
சிசுநாள ஈசனின் கிழட்டுக்குருவி
குருகோவிந்தனை நெருங்கி
முக்திவேண்டி நச்சரிக்கிறது அக்குருவி

வீணாகவே கழிகிறது வாழ்க்கை

வீணாகவே கழிகிறது வாழ்க்கை- இதன்
நுட்பத்தை அறிந்தவனே யோகி, திறமைசாலி

ஏழு ஜென்மங்களின் வாழ்க்கை
கழிந்துவிட்ட்து இப்படியே
அளவற்ற சுகபோக நாட்டம்
தீராத நோய்க்கும் மரணத்துக்கும் வழிவகுத்துவிட்டது

என்ன வாழ்க்கை வாழ்ந்தாயோ?
பொய்யாக மேலுக்கு மினுக்கித் திரிந்தாயோ?
சீச்சீ பைத்தியமே
அங்கே எமன் கேட்க்க்கூடிய கேள்விக்கு
என்ன பதில் சொல்வதென்று இங்கேயே யோசித்துவைத்துக்கொள்

இனி எதையும் யோசிக்க வேண்டாம் தம்பி
ஓம் நமசிவாய மந்திரத்தின் ஆழத்தை அறி
பாவபுண்ணியங்களின் கர்ம வினைகளை அகற்று
உதிர உதிர எஞ்சி நிற்கும் சிசுநாள நெறி

உலகைப்பற்றி கவலைப் படுகிறேன் என்கிறாய்

உலகைப்பற்றி கவலைப் படுகிறேன் என்கிறாய்-
வேண்டாமென சொல்வது யார், கவலைப்படு

நீ நிற்பது ஒரு நாழிகை நேரச் சந்தைக்குள்ளே
மேலே கூரையைக் கட்டவேண்டும் என்கிறாய்
யானை அம்பாரி ஏறவேண்டும் என்கிறாய்
மண்ணுக்குள் அடங்குவதை சுத்தமாய் மறந்தாய்

வாழ்க்கையை வாழ்வேன் என்று சொல்வாய்
பொருள் சேரச்சேர போதாது என்பாய்
கதவைத் திறந்து இறுதிப் பயணத்துக்கு நடக்கும்போது
எதுவுமே துணைநிற்காத்தால் சும்மா அழுவாய்

அடைக்கலமோ கோவிந்தன் பாதத்தில் உள்ளது
அலைந்தலைந்து தேடினாலும் வேறெங்கே கிடைக்கும்?
சிசுநாள ஈசனின் கருணையில் உள்ளது
அடியார்கள் பாடிடும் பாட்டிலே உள்ளது

விழுந்துவிடப் போகிறாய்

விழுந்துவிடப் போகிறாய் கிழவி
விழுந்துவிடப் போகிறாய்

தினமும் நடப்பவள்தான் நீ
ஆனாலும் எச்சரிக்கையாய் இரு
அறிவில்லாத கிழவியே-
விழுந்துவிடப் போகிறாய்

தற்சமயம் இது ஹுலுகூரு சந்தை
சந்தடிக்கு நடுவே ஏன் நிற்கிறாய்?
தடுமாறிவிழுந்து தவித்தால்
மீண்டும் எப்படி எழுந்து வருவாய்?
அறிவில்லாத கிழவியே-
விழுந்துவிடப் போகிறாய்

கூடைக்குள்ளே மூட்டைமுடிச்சு வைத்து
சுமந்து செல்பவளே எச்சரிக்கை
வழிப்பறிக் கள்வர்கள் வந்து
சுமைகளைப் பறிக்கக்கூடும் எச்சரிக்கை
அறிவில்லாத கிழவியே-
விழுந்துவிடப் போகிறாய்

சிசுநாள ஈசனின் முன்னால்
தயங்கித்தயங்கிச் செல்லவேண்டாம்
ஆரோக்கியமும் சரியில்லை, முதுமை வேறு
கண்ணில்லாத பைத்தியக்காரக்கிழவி
அறிவில்லாத கிழவியே-
விழுந்துவிடப் போகிறாய்

கோழியே, அட கோழியே

கோழியே, அட கோழியே- இப்படி
பாழாக்குவதைப் பார்த்து பொறுக்கவில்லை மனமே

செக்கச் சிவந்த இறகுள்ள கோழி
இறைவனையே பார்த்து எச்சரித்த கோழி
பெருங்கடவுள் பிரம்மனே மெச்சிய கோழி
பித்தேறி ருத்ரனையே கொத்திய கோழி

நல்ல யாகத்துக்கு உதவாத கோழி
எல்லாரும் அறுத்துத் தின்னும் கோழி
கல்லுக்குள் பிறந்து கூவும் கோழி
முல்லாவின் கையால் மரணமுறும் கோழி

குப்பையைக் கிளறி வயிற்றை நிரப்பும் கோழி
நல்ல குஞ்சுகளைப் பொரித்த கோழி
அம்பத்தாறு தேசங்களிலும் பெயர்பெற்ற சிசுநாளத்தில்
உறையும் இறைவனின் மோகக்கோழி

கூகூவென்று கூவுகிறது குருவி

கூகூவென்று கூவுகிறது குருவி- வந்து
விழுந்தது உல்கென்னும் துயரக்கடலில்

உயிரை கூட்டிலே அடைத்து- பொங்கிப்
பாய்கிற ஆற்றிலே மிதக்கவைத்து
மனமென்னும் கூட்டிலே அடைத்து- தன்
உடலென்னும் மரத்திலே பறக்கவைத்து

ஆனந்தத்தில் தான் இருப்பதற்காக-
பரவசத்திலே இறகை அடிப்பதற்காக
ஞான விளக்கொளியில் சுடர்கிறது
சிசுநாள ஈசன் கோவிந்தனின் வரம்



பூணூலை அணிவித்தார்

பூணூலை அணிவித்தார்- சத்குருநாதர்
பூணூலை அணிவித்தார்

அணிவித்தார் பூணூலை,
உலகின் வசைபாரத்தை இறக்கிவைத்தார்
மாபெரும் பிரம்மஞானத்தையே நீ அறிவாயென

சந்தியாவந்தனம் கற்பித்தார்
ஆனந்த பிந்துவை நடுவில் நிறுத்தினார்
ஆன்ம நீரில் மனத்தை அணைத்தார்
மரணத்தைக் கடந்த பெருவாழ்வையளித்தார்

கண்டவர்களோடு சேர்ந்து திரிகிறாய்?
அறநெறி மீறியவர்க்ளோடு ஏன் சேர்கிறாய்?
வெறும்பயல் இவனை வெளியேற்று என்றார்
உண்மையான குரு என்பவர் இவரே, நீங்களல்ல சீச்சீ என்றார்

சிசுநாள இறைவன் தனக்குள் குடியேறும் சூத்திரத்தை
சிரித்துக்கொண்டே தன் உடலிலிருந்து கழற்றி அணிவித்தார்
புதுப்பிறவியை அளித்து மந்திர உபதேசமளித்தார்

சிவலோகத்திலிருந்து ஒரு துறவி வந்தார்

சிவலோகத்திலிருந்து ஒரு துறவி வந்தார்
சிவநாமம் கேட்டு அங்கேயே நின்றார்

உடல்முழுதும் சாம்பல் பூசியிருந்தார்
கழுத்தில் ருத்திராட்சைமாலை சூடியிருந்தார்

ஊருக்கு வெளியே மடமொன்றைக் கட்டினார்
மடத்தின் வாசலில் தானே நின்றார்

பூமியில் புகழ்பெற்ற சிசுநாள ஈசனின்
சீடன் ஷரீஃப்பை அடையாளம் கண்டுகொண்டார்

பார்க்கலாம் வாடி, பாமினி நகரத்தில்

பார்க்கலாம் வாடி, பாமினி நகரத்தில்
அந்த துறவி மகான் வந்திருக்கிறார்
மீனாட்சிஅனுபவ மண்டபத்தில்
தானே கடவுளென அமர்ந்திருக்கிறார்

தெருமுழுக்க வீடுவீடாய்ப் புகுந்து
அழுக்கு கசடுகளையெல்லாம் அகற்றி
பணம்காசுக்கு கை நீட்டாமல்
குன்றின் உச்சியில் ஏறி அமர்ந்திருக்கிறார்


சிசுநாள ஈசனுடைய சேவகன் என்கிறார்
ஈடு இணையில்லாத கோவிந்தன் தானென்றார்
சிறிதும் அச்சமின்றி, நிர்வாணமாய்த் திரிகிறார்
தானே உண்மையானவர் என்றார்

அற்புதமான விளையாட்டுக்குதிரை

அற்புதமான விளையாட்டுக்குதிரையில் ஏறினால் போதும்
சுற்றித் திரியும் பதினோரு உலகம்

பச்சைப் பசேலென்ற புல்வைக்க வேண்டுமோ?
தெளிவான தண்ணீரைப் பருகவைக்கவேண்டுமோ?
புத்துணர்ச்சியூட்ட சாட்டையைச் சொடுக்கவேண்டுமோ?
இறைவன் மெச்சுவதற்காக உடல்தேய்க்கவேண்டுமோ?

இரண்டுவேளை உணவு தினந்தோறும் நிச்சயம்
தின்றுவிட்டுத் திரிகிறது மேட்டுத்தெருவில்
காதர்லிங்கம் பாடிய பாட்டு
போர்த்திய சாக்குப்பையை உதறிப் பார்த்துக்கொள்

பாண்டவர்கள் அரண்மனையின் லாயத்தில் இருந்தது
லாயத்திலிருந்து முளைக்குச்சியோடு பிடுங்கிக்கொண்டு
போகிற வழியில் சிசுநாளத்துக்கு ஓடோடி வந்து
கோவிந்த குருவின் கட்டுப்பாட்டுக்குள் அடங்கியது

எனக்குள் நான் தெளிந்தேன்

எனக்குள் நான் தெளிந்தேன் எனக்கு
விருப்பமான ஆண்மகனை மண்ந்துகொண்டேன்

கட்டளைப்படியே நடந்த்கொண்டேன் நான்
எல்லாருடைய பழியையும் ஏற்றுக்கொண்டேன்

ஆறு குழந்தைகளை காட்டுக்கு அனுப்பி
மூன்று குழந்தைகளை விட்டுக்கொடுத்தேன்
துணிச்சல்காரன், இவன்மேல் மனம்வைத்தேன் நான்
சாரமில்லாத வாழ்வைப் பொசுக்கிவிட்டேன்

ஒருசொல் சொன்னால் குறைவென்றாய்
இரண்டாகச் சொன்னால் அதிகமென்றாய்
புதிரான சொல் இது உண்மை அப்பா- இது
முற்றிய ஞானிகளுக்குப் புரியும் என்கிறாய்

சிவசிவ என்னும் வழியை வேண்டிக்கொண்டேன் நான்
குருவின் உப்தேசத்தைப் பெற்றுக்கொண்டேன்
உலகிலே தோன்றாவண்ணம் நடந்துகொண்டேன்- குரு
கோவிந்தனின் பாதத்தைப் பற்றிக்கொண்டேன்

அழவேண்டாம் தங்கையே, அழவேண்டாம்

அழவேண்டாம் தங்கையே அழவேண்டாம்- உனக்கு
விடைகொடுத்தனுப்புகிறவர்களுமில்லை, தங்கவைத்துக்கொள்கிறவர்களுமில்லை

முந்தானையில் அரிசிகொட்டி முடிச்சிட்டனரம்மா- மிக
உற்சாகத்தோடு உன்னைத் தள்ளிவிட்டாரம்மா
திருமணத்தின் உல்லாசம் எப்படி இருக்கிறது பாரம்மா
தேடிப் பிடித்து மாயமரத்தில் ஏறம்மா

ஒழுக்கமற்றோர் கூட்டம் துரத்திவந்து
ஐந்து விலைமாதர்கள் சேர்ந்து சிரித்தபடி நின்று
கண்டவர்களின் காலில் விழுந்து கைகூப்பி நின்றார்கள்
கணவன் வீடு உன்னை விடாது தங்கையே

பட்டுச் சரிகையுடன் வண்ணப்புடவையை அணிந்தாய்
எப்படியோ நூல்புடவையையே மறந்துவிட்டாய் பெண்ணே
ம்ங்கல நாயகன் சிசுநாள சிவனின்
முற்றத்தில் உனக்கு இடமில்லாமல் போய்விட்ட்தே பெண்ணே

நாய் வந்ததோ, பின்தொடர்ந்து?

நாய் வந்ததோ, பின்தொடர்ந்து- நாராயணா
நாய் வந்ததோ பின்தொடர்ந்து

நாய் என்றால் நாயில்லை
மானிடப் பிறப்பென்னும் கடைகெட்ட நாய்
ஞானமென்னும் ஆன்ந்தத்தை அறியாமல் தினமும்
நாய்க்குரிய ஆன்ந்தத்தில் மூழ்கியிருக்கும்

வழியறிந்து வரும்போது-
நூற்றுக்கணக்கில் நாய்த்துணைகள் கிடைத்திருக்க
யாருக்குச் சொல்லமுடியும்? யாரும் நம்மவரில்லை

மண்ணுலகில் சிசுநாள ஈசனுக்குக்
கட்டுப்படுவது ரசிகநாய் மட்டுமே.
மாயத்திரையை மெல்ல இழுத்துவிலக்கும்
காய்ச்சிய பாலை வடிகட்டிக் குடிக்கும்

எல்லாரையும் போன்றவனல்லன், என் கணவன்

எல்லாரையும் போன்றவனல்லன், என் கணவன்
வல்லவன், துடுக்கானவன்
எல்லாரையும் போன்றவனல்லன், என் கணவன்

எல்லாரையும் போன்றவனல்ல, கேளடி
பேச்சுக்குப் பேச்சு வசைபாடி நான்
எங்கும் செல்லாதபடிவைத்துவிட்டான்-
காலை முரித்துவிட்டான்
எல்லாரையும் போன்றவனல்லன், என் கணவன்

அம்மாவும்  அப்பாவும் வீட்டில் இருந்தார்கள்
மனமொன்றிய மூவர்கள்
ஆசையோடும் நட்போடும்
பேச்சில் மூழ்கியிருந்தார்கள்
நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து
பருவமடைந்து பெரியவளானேன்
தோழி, கேளடி, என் கணவன்
அன்பைப் பொழிந்து என்னை மயக்கி
காதலோடு என்னைச் சேர்ந்து
முதலிரவன்று இன்பமாகக் கழித்தான்
எல்லாரையும் போன்றவனல்லன், என் கணவன்

அக்கா தங்கையராக இருந்த ஆறு பேரையும்
விலகிப் போகுமாறு செய்தான்
அண்ணன் தம்பிகளாக இருந்த ஐந்து பேரையும்
அகன்று போகுமாறு செய்தான்
உச்சத்தில் தூக்கி நிறுத்தி
தயக்கமெதுவுமின்றி
பத்துத் திசைகளிலும் இறுக்கியணைத்து
தாம்பூலச் சாற்றால் மயக்கவைத்து
அன்புபொங்கப் புன்னகைப்பான் அவன்
அருமையான ரசிகன்
எல்லாரையும் போன்றவனல்லன், என் கணவன்

துடுக்கான சக்களத்தியின் முதுகையுடைத்தான்
வெட்டிப் பேச்சில் ஆழ்ந்த
வழிப்பறித் திருடர்களை விரட்டியடித்தான்
பதினெட்டு பேர்கள்கொண்ட
காமத்தரகர்களின் வழியை அடைத்தான்
உடனிருந்து தொல்லைதரும்
முடவர்கள் குருடர்களான எட்டுப் பேர்களின்
குரல்வளையை அறுத்துக் கொன்றான்
பொருத்தமானவனே எனக்குக் கிடைத்தான்
எல்லாரையும் போன்றவனல்லன், என் கணவன்

அத்தை மாமாவின் வீட்டிலிருந்து அழைத்துவந்தான்
மற்றும் அங்குள்ள
செல்லக் குழந்தைகளின்
அன்புப் பிடியிலிருந்தும் அழைத்துவந்தான்
ரத்தினஜோதியின் ஒளிவட்டத்தில் அமர்த்தினான்
எங்கும் செல்லாமல் மனம் பிறழாமல்
பார்வைவட்டத்துக்குள்ளேயே என்னை வைத்து
எனக்கு முத்துமூக்குத்தியைக் கொடுத்தான்
எப்படிப்பட்டவன் தெரியுமா?
எல்லாரையும் போன்றவனல்லன், என் கணவன்

தோழி கேள்,
கருணைமயமான இப்படிப்பட்ட கணவன்
எனக்கு வாய்த்தது என்றோ செய்த
புண்ணியத்தின் பயனேயாகும்
என் ஆழ்மனத்தில் பதிந்திருப்பவன்
இனியவன் ஸ்ரீகுருநாத கோவிந்தன்
வா தோழி என என் கைப்பற்றி
ஏகாந்த மாளிகைக்குள் அழைத்துச்சென்று
வாழ்வின் இன்னல்களையெல்லாம் அகற்றினான்
கவலைகளையெல்லாம் விலக்கினான்
எல்லாரையும் போன்றவனல்லன், என் கணவன்

ஆலையின் தோற்றம் பாரம்மா

ஆலையின் தோற்றம் பாரம்மா
அடி பெண்ணே, கேளம்மா

உலகத்தையே ஆளும் ஆங்கிலேய ராணி
கருணையோடு மக்களுக்காக
கட்டியெழுப்பிய ஆலையோ, சீனத்து அற்புதமோ

நீர், நெருப்பு, காற்று எல்லாம் சேர்ந்து
ஒன்றாகக் கலந்து
மண்ணிலிருந்து விண்ணைநோக்கி
உயர்ந்தெழுந்து நிற்கிறது புகைப்போக்கிக்கம்பம்
சுற்றியலைகிறது புகையின் பிம்பம்

உட்புறத்தில் வேறொரு வடிவம்
தெரிந்துகொள் அதன் ஆற்றல்
உட்புறத்தில் வேறொரு வடிவம்
ஒன்பது ஆரக்கால்கொண்ட சக்கரம் சுழல்கிறது
இழை நிரப்பியபடி ஊடுருவிப் பாய்கிறது
தறிக்குண்டு மூன்று

இரண்டு சக்கரங்களின்மேல் மூல பிரம்மனின் தோற்றம்
நாடி சுஷும்னத்தைத் தொட்டதும் நூல் உற்பத்தி தொடக்கம்


(திசையெட்டும் 2011 கன்னடச் சிறப்பிதழுக்காக எழுதப்பட்ட கட்டுரை)