Home

Monday, 14 October 2019

அவினாசிலிஙம் - இலட்சியப்பாதையை நோக்கி - கட்டுரை



     1934 ஆம் ஆண்டில் காந்தியடிகள் தமிழகத்தில் பயணம் மேற்கொண்டிருந்தபோது, குன்னூரில் சில நாட்கள் தங்கினார். அங்கிருந்து உதகை, கோத்தகிரி போன்ற இடங்களுக்குச் சென்று வந்தார். பல இடங்களில் ஒலிபெருக்கி வசதி இருப்பதில்லை. ஆனால் காந்தியைப் பார்ப்பதற்காகவும் அவருடைய பேச்சைக் கேட்பதற்காகவும் ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டுவிடுவார்கள். அப்போது காந்தியின் உரையை குரல்வலிமை உள்ள யாரேனும் ஒருவர் மொழிபெயர்த்துச் சொல்வார்கள். உதகையில் அவருடைய உரையை மொழிபெயர்த்தவர் ஸ்ரீசுப்ரி என்பவர். காந்தியடிகள் அவரைத் தம்முடைய ஒலிபெருக்கி என்று நகைச்சுவையோடு குறிப்பிட்டார்.

அன்று மதிய உணவு நண்பரொருவர் வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டது. உணவு அருந்தியபின்னர் எச்சில் இலைகளை அகற்றிய வேலைக்காரர் அவற்றை வீட்டுக்கு அருகில் சிதறலாகப் போட்டுவிட்டுப் போய்விட்டார். களைப்பில் யாருமே அதைக் கவனிக்கவில்லை. தற்செயலாக அந்தப் பக்கமாக வந்த காந்தியடிகள் அதைப் பார்த்து மனம் வருந்தினார். சற்றே தொலைவில் தெரிந்த குப்பைக்குழியில் போடுவதற்குப் பதிலாக, தரையில் விசிறியடிக்கப் பட்டிருப்பதை அவரால் எளிதாக எடுத்துக்கொள்ளமுடியவில்லை. அதைச் சுட்டிக்காட்டிப் பேசி அவர் யாரையும் புண்படுத்த விரும்பவில்லை. தாமே குனிந்து அந்த எச்சில் இலைகளை எடுத்துச் சென்று குழிக்குள் போட்டு சுத்தம் செய்தார். அதைப் பார்த்துக்கொண்டிருந்த அனைவரும் ஒடிவந்து அவரிடம் மன்னிக்கும்படி கேட்டுக்கொண்டார்கள். பிறகு அனைவரும் சேர்ந்து சில நிமிடங்களிலேயே அந்த இடத்தைச் சுத்தம் செய்து முடித்தனர்.
     காந்தியடிகள் வேலை செய்யும் முறைக்கு இது ஒரு எடுத்துக்காட்டு. அவரைப் பொறுத்தவரையில் வேலைகளில் சிறியது, பெரியது, உயர்வானது, தாழ்வானது, நாட்டுக்கான வேலை, வீட்டுக்கான வேலை என எந்த வேறுபாடும் இல்லை. எல்லா விதமான வேலைகளிலும் ஒரே விதமான ஈடுபாடும் அக்கறையும் உறுதியும் நேர்மையும் கொண்டவர் காந்தியடிகள்.
இக்குறிப்பை எழுதியவர் காந்தியடிகளோடு பயணம் செய்த தி.சு. அவினாசிலிங்கம். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழகத்தைச் சேர்ந்த காந்தியவாதிகளில் முக்கியமானவர் இவர். இவருடைய முழுப்பெயர் திருப்பூர் சுப்பிரமணிய அவிநாசிலிங்கம் செட்டியார். சென்னை சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்துவிட்டு வழக்கறிஞராகப் பணியாற்றியவர். காந்தியடிகள் தொடங்கிய ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு போன்ற இயக்கங்களில் பங்கெடுத்து சிறைபுகுந்தவர். 1934இல் தமிழகத்துக்கு வந்திருந்த காந்தியிடம் அரிசன நலவாழ்வு நிதிக்காக இரண்டரை லட்சம் ரூபாயை நன்கொடையாகத் திரட்டி அளித்தார். 1946 முதல் 1949 வரை மதராஸ் மாகாணத்தில் கல்வி அமைச்சராகப் பணியாற்றியவர். உயர்நிலைப்பள்ளியில் தமிழ்வழிக்கல்வியை முதன்முதலாக அறிமுகம் செய்தவர்.  கலைக்களஞ்சியத்தை உருவாக்கியவர். சமுதாயச் சீர்திருத்தங்களில் ஆர்வம் கொண்டவர்.
     அவினாசிலிங்கம் கோவையில் இராமகிருஷ்ணா வித்யாலயம் என்னும் பள்ளியைத் தொடங்கி நடத்திவந்தார். குருகுலமுறையில் நடைபெற்று வந்த அந்தப் பள்ளியில் சாதிவேறுபாடு பார்ப்பதில்லை. தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒரு சிறுவன்தான்  அந்தப் பள்ளியில் முதலில் சேர்க்கப்பட்டான். அதை உயர்சாதியைச் சேர்ந்தவர்கள் தொடக்கத்தில் எதிர்த்தார்கள். தம் பிள்ளைகளை அப்பள்ளியில் சேர்க்கவும் மறுத்தனர். நாளடைவில் அப்பள்ளி சிறப்பாக இயங்குவதைக் கண்ணாரக் கண்டபிறகு கொஞ்சம்கொஞ்சமாக எல்லாச் சாதியினரும் தம் பிள்ளைகளை அங்கு படிக்க அனுப்பினார்கள். அந்தப் பள்ளிக்கூடம் காந்தியடிகளின் கொள்கைகளைப் பின்பற்றி நடந்துவந்தது.  அங்கு வேலைக்காரர்கள் என யாரும் இல்லை. எல்லா வேலைகளையும் குழந்தைகளே தமக்குள் பிரித்துக்கொண்டு செய்துவந்தனர்.
தமிழ்நாட்டுப் பயணத்தின்போது கோவையில் அந்த வித்தியாலயத்தில்தான் காந்தியடிகள் தங்கியிருந்தார். ஓய்வுநேரத்தில்  வித்யாலத்தைச் சேர்ந்த பிள்ளைகளை அருகில் அழைத்து உரையாடி மகிழ்ந்தார். இரவு கவிந்ததும் கட்டிடத்துக்கு வெளியே வெட்டவெளியில் ஒரு கட்டிலில் படுக்கையை விரித்து, அதில் அமர்ந்துகொண்டார் காந்தியடிகள். அன்று மக்கள் சந்திப்புகளில் திரட்டப்பட்ட தொகை, தங்க நகைகள், வெள்ளிப்பொருட்கள் அனைத்தையும் கணக்குப் பார்த்து முடிப்பதற்குள் நேரம் நள்ளிரவைக் கடந்துவிட்டது. அதற்குப் பிறகுதான் அவர் படுக்கச் சென்றார். எத்தனை மணிக்குப் படுத்தாலும் அதிகாலைப் பிரார்த்தனைக்காக  நான்குமணிக்கு எழுந்துவிடுவது அவர் பழக்கம். .அன்றைய பிரார்த்தனையில் பள்ளிக்குழந்தைகளும் ஊழியர்களும் காந்தியடிகளோடு சேர்ந்துகொண்டார்கள். பிரார்த்தனைக்குப் பிறகு அனைவரையும் தத்தம் வேலைகளைப் பார்க்கச் செல்லுமாறு அனுப்பிவிட்டார்.
கட்டிலுக்கு அருகில் இருந்த வாளியைக் கவிழ்த்து, அதன்மீது விளக்கை வைத்து, அந்த வெளிச்சத்தில் அன்று எழுதப்படவேண்டிய கடிதங்களை அக்கணத்திலேயே எழுதத் தொடங்கினார் காந்தியடிகள். தற்செயலாக அந்தப் பக்கமாக வந்த அவினாசிலிங்கம் மேசை நாற்காலிக்கு ஏற்பாடு செய்யலாமா என்று கேட்டபோதுஇதோ என் தொடையே மேசை. இதற்கு மேல் ஒரு மேசை எதற்கு?” என்று நகைச்சுவை ததும்ப சொல்லிவிட்டு எழுதத் தொடங்கினார். ஏழரை மணிக்குமேல் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள புறப்படும் நேரத்தில் மாணவர்கள் காந்தியடிகளை வணங்கி ஆசி பெற்றார்கள். வித்தியாலயத்தைச் சேர்ந்த ஆசிரியரொருவர்  காந்தியடிகளின் ஓவியத்தை அழகாக வரைந்திருந்தார். அந்தப் படத்துக்குக் கீழே காந்தியடிகள்வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவர்கள் சத்தியத்தின் மீது பிடிப்புள்ளவர்களாகவும் இறைவன் மீது நம்பிக்கை கொண்டவர்களாகவும் இருக்கவேண்டும்என்றொரு வாக்கியத்தை எழுதி அதற்குக் கிழே கையெழுத்திட்டுக் கொடுத்தார்.
காந்தி சென்ற இடங்களிலெல்லாம் மக்கள் தம் சாதிவேறுபாடுகளை மறந்து ஒரே இடத்தில் ஒன்றாக அமர்ந்து அவருடைய உரையைக் கேட்டதாகப் பெருமிதத்தோடு குறிப்பிடுகிறார் அவினாசிலிங்கம். சரித்திரம் எட்டிப் பார்க்கமுடியாத அந்தக் காலத்திலேயே தொடங்கி தொடர்ந்துவரும் தீண்டாமை என்னும் கொடிய பழக்கத்தைப் போக்க இன்னும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகும் என அனைவரும் சொல்லிக்கொண்டிருந்த சூழலில், அக்கொடிய பழக்கம் காந்தியடிகள் சென்ற இடங்களிலெல்லாம் தவிடுபொடியானதை கண்முன்னால் கண்டதாக அவினாசிலிங்கம் தம்முடையநான் கண்ட மகாத்மாநூலில்  குறிப்பிடுகிறார். காந்தியடிகளுடைய ஒர் உரை, பல நூறு ஆண்டுகள் பல ஆயிரம் பேர்கள் சேர்ந்து செய்யும் பிரச்சாரத்துக்கு நிகரென்றும் குறிப்பிடுகிறார்.
அந்தச் சுற்றுப்பயணத்தில் சொக்காம்பாளையம் என்னும் கிராமத்து அனுபவம் மிகவும் முக்கியமானது. மேட்டுப்பாளையம்அவினாசி சாலைத்தடத்திலிருந்து விலகி இரண்டு மைல் தொலைவில் உள்ளடங்கி உள்ள சிற்றூர் அது. வாகனம் செல்லும் அளவுக்கு சரியான சாலை வசதி கூட அந்த ஊருக்குக் கிடையாது. ஆனால் அந்த ஊரைச் சேர்ந்தவர்கள் காந்தியடிகளைச் சந்தித்துத் தம் ஊருக்கு வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள். தம் பயணத்தின் நோக்கத்தை அவர்களுக்கு எடுத்துரைத்த காந்தியடிகள் அரிசன நலநிதிக்காக அவர்களால் எவ்வளவு தொகையைத் திரட்டித் தரமுடியும் என்று கேட்டார். அவர்கள் கொஞ்சமும் தயங்காமல் ஆயிரத்தொரு ரூபாயைத் திரட்டி அளிக்கமுடியும் என்று உற்சாகத்துடன் சொன்னார்கள். அவ்வூருக்கு அக்காலத்தில் அந்தத் தொகை மிகவும் அதிகம். காந்தியடிகள் மீது கொண்டிருந்த பற்றின் காரணமாகவே அவர்கள் அத்தொகையை அளிக்கமுன்வந்தார்கள். காந்தியடிகள் தம் பிரயாணத்தில் அந்த ஊரையும் இணைத்துக்கொள்ள இசைவளித்தார். ஒரே இரவில் அந்த ஊர்க்காரர்கள் அனைவரும் சேர்ந்து வாகனம் செல்வதற்கேற்றவகையில் பாதையைச் செப்பனிட்டு முடித்தார்கள். கூட்டத்திற்கு பத்தாயிரம் பேருக்கு மேல்  வந்திருந்தார்கள். அனைவரும் கதராடை அணிந்திருந்ததைப் பார்த்து காந்தியடிகள் மகிழ்ச்சியடைந்தார். மற்ற ஊர்களில் காணப்படும் கூச்சலும் குழப்பமும் அங்கு கொஞ்சம்கூட இல்லை. தொடர்ந்த பிரச்சாரத்தின் வழியாக அற்புதமான கட்டுப்பாட்டை  சொக்காம்பாளையத்து மக்கள் உருவாக்கியிருந்தார்கள். ஏறத்தாழ பதினைந்து நிமிடங்கள் அந்த ஊரில் காந்தியடிகள் உரையாற்றினார்.
1935 ஆம் ஆண்டிலிருந்த இந்தியச் சட்டப்பட்டி கவர்னருக்குப் பல அதிகாரங்கள் இருந்தன. முக்கியமாக அமைச்சர்கள் எடுக்கும் முடிவில் தலையிடும் உரிமை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்கள் ஆட்சி நடத்தும்போது, ஒவ்வொரு செயல்பாட்டிலும் கவர்னர் தலையிட்டுக் குழப்பியடித்தால் ஆட்சிநிர்வாகத்தை பொறுப்போடு கவனிக்கமுடியாது என்பது காந்தியடிகளின் எண்ணம். தக்க உரிமைக்கான வழியின்றி காங்கிரஸ்காரர்கள் தேர்தலில் நிற்பதிலும் வெற்றி பெறுவதிலும் பொருளில்லை என அவர் நினைத்தார். ஆனால் 1937 ஆம் ஆண்டில் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் காங்கிரஸ்காரர்கள் பலரும் தேர்தலில்  பங்கெடுத்துக்கொள்ளவேண்டும் என நினைத்தார்கள். காந்தியடிகளின் கருத்தை கணக்கிலெடுத்துக்கொள்ளாமல் காங்கிரஸ் தேர்தலில் நின்று பெரும்பான்மையான மாகாணங்களில் வெற்றியடைந்தது. அப்போதும் காந்தியடிகள் அமைச்சரவை எடுக்கும் முடிவுகளில் கவர்னர் தலையிடக்கூடாது என்னும் உறுதிமொழியை அரசாங்கத்திடமிருந்து பெறவேண்டும் என்று ஆலோசனை கூறினார். தன் நிலைபாட்டில் உறுதியாகவே இருந்தார் அவர்.,
அப்போது மத்திய சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவினாசிலிங்கமும் மாகாண சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட சர்தார் வேதரத்னம் பிள்ளையும் சுப்பராமனும் தில்லிக்குச் சென்றிருந்த சமயத்தில் கிங்க்ஸ்வே  அரிசன ஆசிரமத்தில் தங்கியிருந்த காந்தியடிகளைச் சந்திக்கச் சென்றார்கள். வழக்கமாகவா வா அவினாசிஎன்று புன்னகையோடு வரவேற்கும் காந்தியடிகள் அன்றும் அவர்களை வரவேற்றுப் பேசிக்கொண்டிருந்தார்.
உரையாடலுக்கு நடுவில்உறுதிமொழிகளைக் கேட்டுக்கேட்டுத்தான் பல ஆண்டுகளாக கிடைத்த வாய்ப்புகளையெல்லாம் நழுவவிட்டீர்கள் என்றும் அதிகாரத்தில் அமர்ந்த பிறகு உள்ளிருந்து வாதாடுவதும் எதிர்ப்பதும் காங்கிரஸ் கட்சிக்கு இன்னும் வலிமையைச் சேர்க்கும் என்றும் சிலர் நினைக்கிறார்களே. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்டார் அவினாசிலிங்கம்.
வருத்தம் தோய்ந்த குரலில் காந்தியடிகள்ஒரு செடி இருக்கிறது. பார்ப்பதற்கு அது மலர்ந்து அனைவரையும் வரவேற்பதுபோல இருக்கும். ஆனால் ஏதேனும் ஒரு பூச்சி அதன்மீது அமர்ந்ததும்  தன்னைத்தானே மூடிக்கொண்டு அப்பூச்சியைக் கொன்று உண்டுவிடும். நம் அரசியல் நிலையும் அப்படித்தான் இருக்கிறது. நாம் கேட்ட உறுதிமொழி இல்லாமல் காங்கிரஸ் பதவியேற்றுக்கொண்டால் அந்தப் பூச்சிகளுக்கு ஏற்பட்ட நிலையே ஏற்படும். அந்த உறுதிமொழி கிடைத்தாலொழிய அரசாங்கம் கவர்னருக்குக் கட்டுப்பட்டதாகவே இருக்கும். காங்கிரஸ்காரர்களை அதிகாரம் விழுங்கிவிடும் என்பதில் ஐயமே இல்லைஎன்று சொல்லி அனுப்பிவைத்தார்.
அனைவரும் பிரிட்டிஷ் அரசாங்கம் காந்தியடிகளின் நிபந்தனையை ஏற்றுக்கொள்ளாது என நினைத்திருந்த சூழலில் மூன்றே மாதங்களில் ஏற்றுக்கொண்டு அறிக்கை வெளியிட்டது. ஆழ்ந்த யோசனைக்குப் பிறகு தன்னுடைய கோரிக்கையை முன்வைக்கும் ஒருவன் அதற்காக உண்மையோடும் உறுதியோடும் பாடுபடும்போது வெற்றி  தானாகவே வந்து சேரும். காந்தியடிகளே அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு.
அக்காலத்தில் மத்திய சட்டசபைக்கூட்டங்கள் ஜனவரி முதல் ஏப்ரல் வரைக்கும் தில்லியிலும் ஆகஸ்டு முதல் செப்டம்பர் வரை சிம்லாவிலும் நடைபெறுவது வழக்கம். ஒருமுறை அவினாசிலிங்கம் ஆகஸ்டு மாத கூட்டத்துக்குச் செல்லும் வழியில் காந்தியடிகளைச் சந்திப்பதற்காக வார்தா நிலையத்தில் இறங்கினார். அப்போது மழைக்காலம். வார்தாவைச் சுற்றி தண்ணீர் தேங்கியிருந்தது. வார்தாவிலிருந்து சேவாக்கிராமம் செல்லும் வழியே தென்படவில்லை. அது கரிசல் நிலமென்பதால், எங்கெங்கும் சேறும் சகதியுமாக இருந்தது. அதில் இறங்கி நடக்கவேண்டுமென்றால் முழங்கால் வரைக்கும் மண்ணுக்குள் புதைந்துவிடும். நல்லவேளையாக அரியநாயகம் என்பவர் ஸ்டேஷனுக்கு வந்து, அவினாசிலிங்கத்தைத் தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிட்டார்.
காந்தியடிகளைச் சந்திக்கமுடியாமல் போய்விடுமோ என நினைத்து வீட்டில் ஜன்னலோரமாக உட்கார்ந்து சேறு நிறைந்த பாதையையே வருத்தத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார் அவினாசிலிங்கம். அப்போது தொலைவில் கொட்டும் மழையில் வயது முதிர்ந்த ஒருவர் மழைக்குக் குடையைப் பிடித்தபடி சேற்றில் மெல்ல மெல்ல நடந்துவருவதைப் பார்த்துப் பரிதாபப்பட்டார். சிறிது தொலைவு நெருங்கிய பிறகு அந்த உருவம் காந்தியடிகளைப்போல இருப்பதாக அவருக்குத் தோன்றியது. உடனடியாக அவர் அரியநாயகத்தை அழைத்து அந்த முதியவரைச் சுட்டிக்காட்டினார். அவரைப் பார்த்ததுமே அரியநாயகம்ஐயமே வேண்டாம். அது காந்தியடிகள்தான்என்று உற்திப்படுத்தினார். மேலும் தொடர்ந்து இங்கு மகன்வாடியில் ஓர் ஊழியர் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாக இருக்கிறார். காந்தியடிகளைப் பார்க்கவேண்டும் என்று தோன்றும் சமயத்தில் அவர் தன் நண்பர்கள் வழியாக ஆசிரமத்துக்குச் செய்தியை அனுப்புவார். உடனே காந்தியடிகள் வந்து அவரைச் சந்தித்து உரையாடிவிட்டுச் செல்வார். இன்றும் அந்த ஊழியரின் செய்தி காந்தியடிகளுக்குக் கிடைத்திருக்கும். அதனால், இந்த மழையைக்கூடப் பொருட்படுத்தாமல் கிளம்பி வந்திருக்கிறார்என்றார்.
காந்தியடிகளுக்கு ஊழியர்கள் மீதிருந்த அன்பை நினைத்து நெகிழ்ந்த அவினாசிலிங்கம், அவரைப்போன்ற முதியவர்களே மழையிலும் சேற்றிலும் ஆறுமைல் தொலைவு நடந்துவந்திருக்கும்போது இளைஞனான தான் கலங்கி நின்றதை நினைத்து நாணமுற்றார். உடனே ஆசிரமத்துக்கு நடந்துசெல்வதென்று முடிவெடுத்தார். குளித்து முடித்து, வழித்துணைக்கு ஒருவரை அழைத்துக்கொண்டு சேவாக்கிராமத்துக்கு நடந்து சென்றார். அதற்குள் வார்தாவிலிருந்து காந்தியடிகளும் திரும்பியிருந்தார். வழக்கம்போல புன்னகைத்தபடிவா வா அவினாசிஎன்று வரவேற்று உரையாடத் தொடங்கினார். மழையிலும் சேற்றிலும் நடந்துவந்த சிரமமனைத்தும் அந்தப் புன்னகையில் கரைந்து காணாமல் போய்விட்டது.
அன்று நிகழ்ந்த உரையாடலில் பேசிய விஷயங்கள் பற்றி எதுவும் நினைவிலில்லை என்று எழுதும் அவினாசிலிங்கம்அவரிடம் பேசும் விஷயங்களைவிட, அவர் நம்மீது காட்டும் அன்பும் அதன் வழியாக நம் மனத்தில் உருவாகும் எழுச்சியும் மிகமிக முக்கியமானவை ஒவ்வொரு முறையும் அவரிடம் சென்று பேசிவிட்டுத் திரும்பும்போது உயர்ந்த இலட்சியங்களைப் பின்பற்றும் மனவலிமை தோன்றுகிறது. உயர்வான செயல்களில் நம்பிக்கை பிறக்கிறது. சோர்வு அகன்றுவிடுகிறது. வெறுப்பு மறைந்துவிடுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக நாமும் உயர்ந்த செயல்களைச் செய்து சாதிக்கமுடியும்  என்கிற எண்ணமும் துணிச்சலும் உருவாகிறது. அதுதான் காந்தியடிகளிடம் இருக்கும் சக்தி. அது நம்மையும் அறியாமல் நம் மனத்தை உயர்த்துகிறதுஎன்று குறிப்பிடுகிறார்.
மழையில் சென்று பார்த்ததுபோல கோடையில் ஒருமுறை சேவாக்கிராமத்துக்குச் சென்று காந்தியடிகளைப் பார்த்த அனுபவத்தையும் எழுதியிருக்கிறார் அவினாசிலிங்கம். ஆசிரமத்தில் மண்ணால் சுவர்களை எழுப்பி நாட்டு ஓடுகளை வேய்ந்து வீடுகள் கட்டப்பட்டிருந்தன. ஒவ்வொன்றும் பதினைந்து, பதினெட்டு சதுரஅடி அளவுகொண்டது. அரியநாயகம், மகாதேவதேசாய் போன்றவர்கள் ஒருபுறம் இருக்க, காந்தியடிகள் இன்னொருபுறம் வசித்துவந்தார். சாணம் மெழுகிய தரையில் வீட்டுமூலையில் காந்தியடிகள் படுத்திருந்தார். அவருக்கு அருகில் மீராபென்னும் இன்னும் ஓரிருவரும் உட்கார்ந்து உதவிகள் செய்தபடி இருந்தார்கள். அவினாசிலிங்கத்தைக் கண்டதும் வழக்கம்போல புன்னகையோடு வரவேற்று தனக்கு அருகில் அமரவைத்தார் காந்தியடிகள். அவர் படுத்திருந்தபோது அவருடைய வயிற்றின் மீதும் தலையின்மீதும் துணிபோட்டு மூடப்பட்டிருந்தது.  ஒருவேளை நோயுற்றிருக்கிறாரோ என்னும் எண்ணத்தில் தயக்கத்துடன் அவையெல்லாம் என்ன என்று விசாரித்தார் அவினாசிலிங்கம்.
வழக்கம்போல காந்தியடிகளின் முகத்தில் ஒரு புன்னகை. “இதுதான் என்னைக் குளிர்விக்கும் இயந்திரம்என்று சிரித்துக்கொண்டே பதில் சொன்னபடி தம் வயிற்றின் மீதிருந்த துணியை எடுத்துக் காட்டினார். உள்ளே களிமண் பற்று போடப்பட்டிருந்தது. தலையிலும் காலின் மீதும் நனைந்த துணியைப் போட்டுக்கொண்டிருந்தார். ஈரம் உலர்ந்துவிடும் போதெல்லாம் அவற்றை மீண்டும் நனைத்துப் போட்டுக்கொண்டிருந்தார். “இவையெல்லாம் என்னைக் குளிர்விக்கும் கருவிகள். இதற்குப் பணச்செலவு எதுவுமே இல்லை. இந்த வெயில் கொடுமையிலும் இவற்றின் மூலம் நம் உடலைக் குளிரவைத்து காப்பாற்றிக்கொள்ள முடியும்என்று  சொல்லி வழக்கம்போலச் சிரித்தார்.
அகிம்சையை தன் வாழ்வின் லட்சியமாகக் கொண்டவர் காந்தியடிகள்.  பலவீனம் கொண்டவனாலும் அச்சம் கொண்டவனாலும் அகிம்சையைப் பின்பற்றமுடியாது என அவர் பலமுறை சொன்னதுண்டு. அச்சம் கொண்டவன் அஞ்சியஞ்சி  கெட்டதை எதிர்க்காமல் கோழையாகவே இருந்துவிடுவான். நிறைந்த சக்தியுடன் இருந்து, அதற்குமேல் பொறுமையுடன் சகித்து, அகிம்சையை மேற்கொள்பவனே உண்மையில் அகிம்சை வழியில் நடப்பவன் என்பது காந்தியடிகளின் எண்ணம். வலிமையுடையவனின் பொறுமையே அகிம்சையாகும். எனவே, முதலில் நம் சக்தியைப் பெருக்கவேண்டும். உயர்ந்த லட்சியங்களைப் பின்பற்றி தன்னம்பிக்கையைப் பெருக்கி, நாட்டில் நம்பிக்கை வைத்து நம் வலிமையை மேம்படுத்திக்கொள்வதே அகிம்சை வாழ்க்கையின் தொடக்கமாகும்.
ஒரு சந்திப்பின்போது காந்தியடிகளிடம்மக்கள் இலட்சியங்களைப் பின்பற்ற நாம் என்ன செய்யவேண்டும்?”  என்றொரு கேள்வியைக் கேட்கிறார் அவினாசிலிங்கம். அதற்குக் காந்தியடிகள் எல்லா இலட்சியங்களையும் பரப்புவதற்கு சங்கங்களை உருவாக்குவதுபோல அகிம்சை என்னும் இலட்சியத்தைப் பரப்புவதற்கு, அதில் ஆர்வமுள்ளவர்களைக் கொண்ட சங்கங்கள் உருவாக்கப்படவேண்டும் என்று விடையளிக்கிறார். அச்சங்கங்களுக்கு சாந்தி சைன்யம் என்று பெயர் சூட்டவிரும்புவதாகவும் சொல்கிறார். அன்பும் சேவையும் பக்தியும் தூய்மையுமே அவர்களின் ஆயுதங்களாக இருக்கவேண்டும். அவர்களுக்குத் தனிப்பட்ட பயிற்சி எதுவும் தேவையில்லை. அவர்கள் ஆற்றும் சேவையே அவர்களுக்கு வேண்டிய பயிற்சியை அளிக்கும். அன்புவழியில் தன்னலமற்ற சேவையில் உறுதியோடு ஈடுபடுவார்களெனில் , அதுவே அவர்களுக்கு வேண்டிய பயிற்சியையும் அறிவையும் கொடுத்து வழிகாட்டியாகவும் விளங்கும் என்று நம்பிக்கையோடு சொல்கிறார் காந்தியடிகள்.
1944 ஆம் ஆண்டில் ஆகாகான் சிறையிலிருந்து காந்தியடிகள் விடுதலை செய்யப்பட்டார். அவரோடு சிறைக்குச் சென்றிருந்த கஸ்தூர்பா அம்மையாரும் மகாதேவ தேசாயும் சிறையிலேயே மரணமடைந்துவிட்டார்கள். விடுதலைக்குப் பிறகு ஏறத்தாழ இரண்டாண்டு காலம் முஸ்லீம் லீக் தலைவர் ஜின்னாவுக்கும் காந்தியடிகளுக்குமிடையில் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நிகழ்ந்தன. ஆனால் ஜின்னாவின் பிடிவாதத்தால் அவையனைத்தும் தோல்வியுற்றன. 1946 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் சிந்து, பஞ்சாப், வங்காளம், வடமேற்கு எல்லைப்புற மாகாணங்களில் முஸ்லீம் லீக் கட்சியும் மற்ற மாகாணங்களில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்று ,மந்திரிசபையை அமைத்தன. தமக்கு தனிநாடு வேண்டும் என்னும் லீகின் குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது. 1946 ஆம் ஆண்டில் ஆகஸ்டு மாதம் 16 ஆம் நாள் அது உச்சநிலையை அடைந்தது. இந்தியா முழுதும் அந்நாளை முஸ்லீம்கள் தம் சுதந்திரநாளாகக் கொண்டாடவேண்டும் என்ற ஜின்னாவின் கோரிக்கைக்கு இணங்க அனைவரும் எழுச்சி கொண்டனர்.
கல்கத்தா நகரில் நடைபெற்ற கொண்டாட்டம் மோசமான நிலையை அடைந்தது. அங்கு முஸ்லீம்களில் சிலர் தமக்கு தனி நாடு கிடைத்துவிட்டதாகவே எண்ணி அக்கம்பக்கத்தில் வாழ்ந்த இந்துக்களின் வீடுகளை எரித்து, அவர்களைக் கொடுமைப்படுத்தத் தொடங்கினர். அப்போது ஆட்சியில் இருந்த லீக் அரசாங்கம் அதைப் பொருட்படுத்தவே இல்லை. சீற்றமுற்ற இந்துக்களும் வன்முறையில் இறங்கினர். நூற்றுக்கணக்கான வீடுகள் தீக்கிரையாகின. ஆயிரக்கணக்கான இந்துக்களும் முஸ்லீம்களும் கொலையுண்டனர். இரு தரப்பினரும் மனிதத்தன்மையை இழந்து ஒருவருக்கொருவர் சகிக்கமுடியாத கொடுமைகளை இழைத்துக்கொண்டனர். நவகாளி என்னும் பகுதி பற்றியெரிந்தது. அதையறிந்து மனம் துடித்த காந்தியடிகள் உடனடியாக முதலில் கல்கத்தா சென்று பாதிக்கப்பட்டவர்களை அமைதிப்படுத்தினார். பிறகு நவகாளிக்குச் சென்றார். அப்பயணம் அவருடைய சேவையுணர்வுக்கும் துணிவுக்கும் அன்புக்கும் அருளுக்கும் சிகரமாக விளங்கியது. அவர் அப்பயணத்தைப் புனித யாத்திரையாகவே நினைத்து வெறும் கால்களோடு நடந்து சென்றார். வழியெங்கும் ஆணிகளையும் கண்ணாடித்துண்டுகளையும் வீசி அவருக்குத் துன்பமளிக்க பலர் முயற்சி செய்தனர். அப்போது அவருக்கு வயது எழுபத்தியாறு. தன் முதுமையைப்பற்றி கொஞ்சமும் பொருட்படுத்தாமல் பல மாதங்கள் அங்கேயே தங்கியிருந்து மக்களிடம் தொடர்ந்து உரையாடி உரையாடி அமைதி திரும்பச் செய்தார்.
காந்தியடிகளால் கலவரப்பகுதிகளில் அமைதி நிலவும்படி செய்யமுடிந்ததே தவிர நாடு இரண்டாகப் பிரிக்கப்படுவதை அவரால் தவிர்க்கமுடியவில்லை. தனக்கு நேர்ந்த தனிப்பட்ட தோல்வியாகவே காந்தியடிகள் அதைக் கருதினார்.
1927 ஆம் ஆண்டில் முதன்முதலாக காந்தியடிகளைச் சந்தித்தார் அவினாசிலிங்கம். 1947 ஆம் ஆண்டில் பாகிஸ்தானுக்குத் தருவதாக ஒப்புக்கொண்ட யுத்த தளவாடங்களை ஒப்படைக்க வலியுறுத்தி உண்ணாவிரதமிருந்த சமயத்தில் அவருடைய இறுதிச்சந்திப்பு நிகழ்ந்தது.  இடைப்பட்ட காலத்தில் எண்ணற்ற சந்திப்புகள். அந்த அனுபவங்களையெல்லாம் அவர்நான் கண்ட மகாத்மாஎன ஒரு நூலாக எழுதினார். பிரார்த்தனைகளிலும் கீதையின் வரிகளிலும் காந்தியடிகளுக்கு இருந்த ஆழமான நம்பிக்கையைப்பற்றி தனியாக ஓர் அத்தியாயமே எழுதியிருக்கிறார். அவருக்கு மிகவும் பிடித்தமானவைஷ்ணவ ஜன் தோபாடலின் தமிழ்மொழிபெயர்ப்பு (சுதந்திரச்சங்கு சுப்பிரமணியன்) அந்த அத்தியாயத்தில் இடம்பெறுகிறது.
சாதாரண மனிதர்களைப்போல நோய்வாய்ப்பட்டு படுக்கையில் கிடந்து சாகும் சாவு எனக்கு நேராது. என் மரணம் தூக்குமேடையில் நிகழும். அல்லது யாரேனும் ஒரு கொலைஞன் கையால் நிகழும்என காந்தியடிகள் அடிக்கடி சொல்லிவந்தார். இறுதியில் அவர் நினைத்தபடியே ஒரு கொலைஞனின் துப்பாக்கிக்குண்டுக்கு இரையாகி மடிந்தார். ஆயுள் முழுதும் ஒரு லட்சியத்துக்காகவே வாழ்ந்து , அந்த இலட்சியத்துக்காகவே உயிர்நீக்கும் பேற்றையும் பெற்றார். உலகில் அபூர்வமாகத் தோன்றும் மகான்களின் வரிசையில் ஒருவராகவே பலரும் அவரைக் காண்கிறார்கள். ஒருநாளும் மங்காத புகழை தியாகம் செறிந்த அவருடைய வாழ்க்கை அவருக்கு அளித்தது.
என் உடல் நிலையற்றது. அழியக்கூடியது. ஆனால் நான் பின்பற்றி வந்த இலட்சியங்கள் நிலையானவை. அழிவற்றவை. அம்மகத்தான இலட்சியங்கள் வழியாக மட்டுமே நான் நிலைத்திருப்பேன். நான் பின்பற்றிய கொள்கைகளைப் பின்பற்றும்போது மட்டுமே ஒருவர் என்னைப் பின்பற்றுகிறார் என்று உறுதியாகச் சொல்லலாம்என்பது காந்தியடிகளின் கூற்று. காந்தியடிகள் வழியாக தனக்குக் கிட்டிய அனுபவங்களைத் தொகுத்து நூலாக்கி முன்வைத்திருக்கும் அவினாசிலிங்கம், அப்புத்தகத்தை வாசிக்கும் ஒவ்வொரு வாசகனையும் அந்த இலட்சியப்பாதையை நோக்கிச் செலுத்துகிறார். அதுவே இப்புத்தகத்தின் மிகப்பெரிய வலிமை.
    
(2019,அக்டோபர் மாத ’சர்வோதயம் மலர்கிறது’ இதழில் வெளிவந்த கட்டுரை)