சிவராம காரந்த்தின் “சோமனின் உடுக்கை”
முப்பதுகளில் எழுதப்பட்ட ஒரு
நாவல் இன்றளவும் புதுப்புது வாசகர்களை ஈர்த்தபடி நெருக்கமாக இருப்பது மிகப்பெரிய
அதிசயம். தன் உள்ளடக்கத்தாலும் மொழிப் பயன்பாட்டாலும் பல படைப்புகள் காலத்தால்
உதிர்ந்து போய்விடுகின்றன. மிகக் குறைவான படைப்புகள் மட்டுமே காலத்தைத் தாண்டி
நிற்கும் வலிமை உள்ளவையாக உள்ளன. தமிழில் பாரதியார் மற்றும் புதுமைப்பித்தன்
படைப்புகள் அத்தகையவை. மலையாளத்தில் தகழி, பஷீர் படைப்புகளும்
அப்படிப்பட்டவை. கன்னடத்தில் சிவராம காரந்த், குவெம்பு, மாஸ்தி போன்றவர்களின்
படைப்புகளையும் அவ்வரிசையில் வைக்கலாம். சிவராம காரந்த்தின் “பாட்டியின் நினைவுகள்”, “அழிந்த பிறகு” ஆகிய இரண்டு நாவல்கள் மட்டுமே தமிழ் வாசகர்களுக்கு நேற்றுவரை படிக்கக்
கிடைத்தன. மூன்றாவதாக இப்போது “சோமனின் உடுக்கை” வந்திருக்கிறது.
சோமனதுடி என்பது
கன்னடத்தலைப்பு. துடி என்பது உடுக்கை. இறைவனான சிவன் கையில் உடுக்கை உண்டு.
காட்டுவாசிகளின் கடவுளான சிவன் உடுக்கையோடு உலவியிருந்திருக்கக்கூடும். விலங்குத்
தோலை ஆடையாக உடுத்தி, காட்டிலும் மேட்டிலும் அலைந்து, ஓய்வுப்பொழுதை உடுக்கையடித்து
அதன் ஓசையால் வனத்தையே அதிரச்செய்த மூத்தகுடியைச் சேர்ந்தவனாகவே, அக்குடியின் இறைவனும்
இருக்கவேண்டும். சோமனுடைய கைக்கு உடுக்கை கிடைத்தது தற்செயலான விஷயமல்ல. காலம்
காலமாக காட்டிலேயே புழங்கிவந்தவர்கள் தட்டிப் பழகிய ஒரு கருவியே இது. உடுக்கை
வாசித்த சிவனைப் போற்றி வணங்கத்தக்க இறைவனாக ஏற்றுக்கொண்ட மனித குலம், அதே உடுக்கையை வாசிக்கிற சக
மனிதர்களை சாதியின் பெயரால் விலக்கி வைத்துவிட்டது. காட்டுக்குடிகளின் வம்ச
வரலாற்றை ஒரு நீண்ட நூலாக உருவகித்தால் அதன் ஒரு நுனி சிவன். இன்னொரு நுனி எல்லா
உரிமைகளும் மறுக்கப்பட்ட சோமன். எவ்வளவு பெரிய முரண். அதை அடையாளம் காட்டியபடி
விரிகிறது சிவராம காரந்த்தின் நாவல்.
விவசாயக் கூலியான சோமனுடைய மன
உணர்வுகளைப் பிரதிபலிக்கும் இசைக்கருவி உடுக்கை. சோமன் மகிழ்ச்சிக் கூத்தாடும்போது உடுக்கையும்
ஆனந்தத்தில் அதிர்கிறது. சோமன் துயரத்தில் மூழ்கியிருக்கும்போது உடுக்கையும்
துவண்டு ஒலிக்கிறது. மூர்க்கத்தோடும் வெறியோடும் அடங்காத ஆத்திரத்தோடும் சோமன்
சீறும்போது உடுக்கையும் மூர்க்கமுடன் ஓசையெழுப்புகிறது. அதன் ஓசை அடிவானத்துக்கும்
அப்பால் முழங்கியபடி இருக்கிறது. அதற்கு இரவு, பகல் என்கிற வேறுபாடுகள்
ஒருபோதும் இல்லை. அவனுடைய இதயத் துடிப்பைப்போல உடுக்கை ஒலிக்கிறது. அவன் இதயம்
பொங்கிய தருணத்தில் அதுவும் பொங்கி, இதயம் அடங்கிவிடும் தருணத்தில்
துரதிருஷ்டவசமாக அதுவும் அடங்கி உறைந்துவிடுகிறது. ஆழ்ந்த மௌனத்தை எதிரொலிக்கிற
வெட்டவெளி ஒரு வகையில் உடுக்கையோசையின் இருப்பையே உணர்த்தியபடியே உள்ளது.
இல்லாதபோதுதான் அதன் தீவிரம் இன்னும் அழுத்தமாக வெப்படுகிறது. ஒரு கட்டத்தில்
உடுக்கை ஒலி, சோமனுடைய அடையாளத்தையும் மீறி, சோமனைப் போன்ற
ஒடுக்கப்பட்டவர்களின் மனக்குரல் அடையாளமாக மாறிவிடுகிறது. ஏக்கமும் ஏமாற்றமும்
பொருந்திய அக்குரலைக் கானகமெங்கும் எதிரொலிக்க வைக்கிறது சோமனின் உடுக்கை.
காலத்தால் வஞ்சிக்கப்பட்ட ஒரு
மனிதன் சோமன். ஐந்து பிள்ளைகளைப் பெற்றெடுத்த மனைவி வாழ்க்கையின் இடைவழியிலேயே
மரணத்தைத் தழுவிவிடுகிறாள். கடனை அடைக்கச் சென்ற இரண்டு பிள்ளைகளில் ஒருவன், ஓராண்டுக்குப் பிறகு
கிறித்துவப் பெண்ணொருத்தியோடு தனக்கென ஒரு வழியைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு
அங்கிருந்தே பிரிந்து போய்விடுகிறான். இன்னொருவன் மலைக் காய்ச்சலில்
இறந்துபோகிறான். மற்றொரு பிள்ளை குளிக்கச் சென்ற இடத்தில் மாண்டு போகிறான். ஒரே
மகள், வீட்டில் யாருமில்லாத சூழலைப் பயன்படுத்திக்கொண்டு மாற்று மதக்காரனோடு
நெருக்கமாக இருக்கிறாள். விவசாயியாக ஆகும் கனவை மனம் நிறையச் சுமந்துகொண்டு ஒரு
துண்டு நிலத்தைக் குத்தகையாக யாசிக்கும் அவன் கோரிக்கை பண்ணையாரால்
புறக்கணிக்கப்பட்டுவிடுகிறது. குத்தகைக்கு நிலம் கிடைக்கும் என்கிற
நம்பிக்கையையும் மகனைப்போல தானும் ஒரு சுயேச்சையான விவசாயியாக உழைக்கும்
வாய்ப்புக்கான கனவையும் நெஞ்சிலேந்திச் சென்றவன் எல்லைத் தெய்வத்தைத் தாண்டிச்
செல்ல முடியாதவனாக நிலை குலைந்து திரும்ப நேர்கிறது. எல்லாத் தருணங்களிலும் சூழல்
அவனுக்கு எதிராகவே அமைந்துவிட்ட நிலையில், சூழலின் உக்கிரத்தைத்
தாங்கிக்கொள்ள முடியாதவனாக சன்னதம் கொண்டவனைப்போல உடுக்கையை அடிக்கத்
தொடங்குகிறான். வெறியடங்கி அவன் துவண்டுபோகும் தருணத்தில் அவன் உயிர் பிரிந்துவிடுகிறது.
காலத்தால் வஞ்சிக்கப்பட்ட சோமன், இறுதிக் கணத்தில் தெய்வத்தாலும்
வஞ்சிக்கப்பட்டுவிட்டதாகவே நினைக்கத் தோன்றுகிறது.
போகனஹள்ளி திருவிழா கதையில்
முக்கியப் பங்கு வகிக்கிறது. கதையின் தொடக்கமே அத்திருவிழாவின் சித்திரிப்போடுதான்
தொடங்குகிறது. அந்தச் சமயத்தில்தான் எப்போதோ வாங்கிய கடனையும் வட்டித்தொகையையும்
உழைத்துத் தீர்த்துவிட்டுப் போகும்படி அழைக்கிறான் பெள்த்தங்கடி தேயிலைத் தோட்ட
முதலாளியின் ஆள். அடுத்த திருவிழாவின்போது முதல் பிள்ளை குடும்ப உறவையே
துண்டித்துக்கொண்டு வெளியேறிவிடுகிறான். இரண்டாவது பிள்ளை இறந்து போகிறான்.
மூன்றாவது திருவிழாவின்போது, தகப்பன் பட்ட தோட்டத்துக் கடனை
அடைத்துவிட்டு ஊர் திரும்பியிருக்கிறாள் மகள். அதைத்தொடர்ந்து மூன்றாவது மகன்
தற்செயலாக குளத்தில் மூழ்கி இறந்து போகிறான். இளைய மகனும் மூத்த மகளும் மட்டுமே
உயிருடன் இருக்க, சோமன் மறைந்து போகிறான். திருவிழாவைத் தொடர்ந்து வருகிற மழைக்கு கதையில்
முக்கியப் பங்குண்டு. மழைக்காலம் வந்ததும் ஊரில் விவசாய வேலைகள்
தொடங்கப்படுகின்றன. அதுவரை மனத்துக்குள்ளேயே மூடி வைத்திருக்கிற குத்தகைக்கு ஒரு
துண்டு நிலத்தை யாசித்துப் பெறுகிற கனவு மழைக் காலத்தில்தான் துளிர்விடுகிறது.
காலமெல்லாம் விவசாயக் கூலியாக வேலை செய்கிற பண்ணையாரை அவன் மலைபோல நம்புகிறான்.
பண்ணையாரும் ஒவ்வொரு மழைக் காலத்தின்போதும் பாக்கலாம் பாக்கலாம் என்று
சொல்லிவிட்டு மூன்றாவது மழைக்காலத்தில் வெளிப்படையாகவே தன் இயலாமையையும்
மறுப்பையும் சொல்லிவிடுகிறார். அது அவனை ஆழ்ந்த துயரத்தில் மூழ்க வைக்கிறது.
இந்தத் துயரத்திலிருந்து மீண்டெழும் வேகத்தில்தான் ஒரு கணநேரத்தில் மதமாற்ற முடிவை
எடுத்துவிடுகிறான். தற்செயலாக கண்களில் பட்ட கோயில் காட்சி, அவன் மனத்தை மாற்றி வீட்டுக்கு
அழைத்துவந்து விடுகிறது.
எந்தப் பாத்திரத்தின்மீதும்
மிகையின் சாயல் படிந்துவிடாதபடி கச்சிதமாகப் படைத்திருக்கிறார் சிவராம காரந்த்.
அவர் மிகச் சிறந்த கலைஞர் என்பதற்கு அருடைய பாத்திரச் சித்திரிப்பையே சிறந்த
எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். கதையில் பண்ணையார் இடம்பெற்றிருந்தாலும் அவர்
கோபக்கார சுரண்டல் பண்ணையாராகவும் இல்லை. இரக்க குணமும் வள்ளல் தன்மையும் கொண்டு
அரவணைத்துச் செல்கிற மகானாகவும் இல்லை. சராசரியான மனிதர். தன் தந்தையின் வயதைக்
கொண்ட சோமனை அவர் நடத்தும் விதம் மிகப் பெரிய எடுத்துக்காட்டு. அவனைத் திட்டி வேலை
வாங்கிக்கொள்ளவும் தவறுவதில்லை. அதே கணத்தில் கள்ளுக்குப் பணம் கொடுக்காமலும்
இல்லை. திருவிழா சமயத்தில் அவனுக்கும் பிள்ளைகளுக்கும் அன்பளிப்பாக சில்லறை
கிடைக்கிறது. பசி என்று போகிற சமயத்தில் பற்று வைத்துக்கொண்டு படி நெல்
அளக்கப்படுகிறது. வேலைக்கு வருவதில் தாமதமாகும்போது வீட்டு வாசலிலிருந்தே சத்தம்
போட்டு அழைக்கப்பட்டு வசை பொழிவதும் நடக்கிறது. முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகத்
தன் குடும்ப நிலத்தில் வேலை செய்கிற ஒரு ஏழைக்கு குத்தகைக்கு நிலம் தருவதில்
பண்ணையாருக்கு எவ்விதமான தயக்கமும் இல்லை. அவனும்தான் உழைத்துப் பிழைத்துவிட்டுப்
போகட்டுமே என்பதுதான் அவர் எண்ணமாக இருக்கிறது. ஆனால், அப்படிக் கொடுத்து உலகின்
பார்வையில் முன்னால் தான் ஏன் முன்மாதிரியாக இருக்கவேண்டும் என்று கேட்கிற தாயின்
கேள்விக்கு பண்ணையாரிடம் பதில் இல்லை. தாயின் சொல்லை மீறமுடியாத வருத்தமும்
இயலாமையும் அவரை ஒருவித மன நெருக்கடிக்கு ஆளாக்குகின்றன. முடியாது என்கிற சொல்லை
ஆழ்ந்த கசப்புடன்தான் அவர் உதடுகள் உச்சரிக்கின்றன.
சமூகம் போலியான ஒரு போர்வையைப்
போர்த்திக்கொண்டு நடமாடுவதை சிவராம காரந்த் அழுத்தமான ஒரு காட்சியின் வழியாக
உணர்த்துகிறார். சோமன் சமூகத்தின் சாதி அடுக்குகளில் கடைசி அடுக்கில் இருப்பவன்.
கடைசி அடுக்கில் இருக்கும் ஒருவன் விவசாயத்தொழிலில் கூலியாளாக வேலை செய்பவனாக
இருக்கலாமே தவிர, விவசாயத்தை சுயமான ஒரு தொழிலாகச் செய்யமுடியாது என்பது சமூகத்தின் சட்ட
விதியாக இருக்கிறது. அதே ஊரில் கடைசித் தட்டினரை மதம் மாறவைத்து, அதற்கு விசுவாசமான அன்பளிப்பாக
ஒரு துண்டு நிலத்தையும் குத்தகைக்குக் கொடுக்கிறார் பாதிரியார். மதம்
மாறுகிறவர்களுக்கு அது ஒரு சலுகையாக வழங்கப்படுகிறது. மதம் மாறியவர்கள் இடம் மாறி
எங்கும் செல்வதில்லை. அதே தெருவில், அதே வீட்டில், அதே தரத்தில், அதே சூழலில்தான் அவர்கள்
வாழ்க்கையைத் தொடர்கிறார்கள். ஆனால் சமூகச் சட்டத்தின் விரல்கள் மட்டும்
அவர்கள்மீது படுவதில்லை. சாதி என்னும் போர்வையும் சட்டதிட்டக் கட்டுப்பாடுகள்
என்னும் போர்வையும் விலக்கப்படாமல் அப்படியே கவிந்திருக்கின்றன.
நாவலில் பல காட்சிகள் நெஞ்சைத்
தொடும் வண்ணம் சித்திரிக்கப்பட்டுள்ளன. காட்டுக்குள் அலைந்து திரிகிற சமயத்தில்
பாதை தவறி அலைந்து கொண்டிருந்த கன்றுக் குட்டியைப் பரிவோடு அழைத்துவந்து பசியாற்றி, காப்பாற்றி வளர்க்கிறான் சோமன்.
ஏதாவது காட்டு விலங்குகளின் பார்வையில் பட்டு உயிரிழந்து போய்விடக்கூடாதே என்கிற
பதற்றமும் அன்பும்தான் அவனை அக்கன்றுக்குட்டியைக் காப்பாற்றத் தூண்டுகிறது. கால
ஓட்டத்தில் அது திடமான எருதாக வளர்ந்து நிற்பதைப் பார்த்த பிறகுதான் அதை வைத்து
சொந்தமாகவே ஏருழுது பயிரிட்டு அறுவடை செய்யலாமே என்கிற எண்ணமெழுந்து ஒரு துண்டு
நிலத்துக்கு கனவு காணத் தொடங்குகிறான். இது நாவலின் தொடக்கத்திலேயே இடம்பெறுகிற
காட்சி. குளிக்கச் சென்ற சோமனுடைய மகன் கைசோர்ந்து குளத்தில் மூழ்கி
இறந்துவிடுகிறான். நீச்சல் தெரிந்த பலர் கரையிலும் குளத்திலும் இருக்கும்போதே
அம்மரணம் நிகழ்கிறது என்பதுதான் கொடுமை. எல்லாருமே ஏதோ ஒரு நாடகக் காட்சியைப்
பார்ப்பதுபோல அவன் மரணமடைவதைப் பார்த்துக்கொண்டு நிற்கிறார்கள். யாருக்குமே அவனைக்
காப்பாற்றுகிற மனமில்லை. மனமிருக்கிற ஒருவன் மற்றவர்களால் அடக்கப்பட்டுவிடுகிறான்.
கீழ்ச்சாதிக்காரனைத் தொட்டுவிடக்கூடாது என்கிற எச்சரிக்கையுணர்வு அவர்களைத்
தடுத்துவிடுகிறது. ஆதரவில்லாமல் திரிந்த ஒரு கன்றுக் குட்டியின்மீது பரிதாபப்பட்டு
காப்பாற்றி அழைத்துவருகிற மனம் சோமனுக்கு இருக்கிறது. அப்படிப்பட்ட சோமனின் மகனைச்
சாவின் பிடியிலிருந்து காப்பாற்ற யாருமில்லை. காப்பாற்றுகிற சக்தியும் வாய்ப்பும்
இருந்தும்கூட கண்ணெதிரிலேயே ஒரு உயிர் மரணமடைவதைத் தடுக்க எண்ணமின்றிக் கூட்டமாக
நின்று வேடிக்கை பார்க்கிறார்கள் மேல் சாதிக்காரர்கள். ஆற்றாமையைக்
கட்டுப்படுத்திக்கொள்ள இயலாத ஒரு பிராமண இளைஞன் மட்டும் குற்ற உணர்வோடு குளத்தில்
பாய்ந்து உயிரற்ற சடலத்தைத் தரைக்கு இழுத்துவந்து போடுகிறான்.
ஏறத்தாழ எண்பது ஆண்டுகளுக்கு முன்னால்
சிவராம காரந்த் கன்னடத்தில் எழுதிய நாவல் இது. காலம் கடந்து வந்திருந்தபோதிலும்
இன்றைய சமூகத்தின் கரிய நிழல் நாவலில் படிந்திருப்பதை உணர்ந்துகொள்ள முடியும்.
தீர்வில்லாத அக்கேள்விக்குச் சமூக விடுதலை மட்டுமே சரியான தீர்வை வழங்கமுடியும்.
ஒடுக்கப்பட்ட தலித்துகளை முதன்முதலாகப் பிரதானமான கதைப் பாத்திரங்களாகக் கொண்டு
எழுதப்பட்ட படைப்பு என்று இந்த நாவலைச் சொல்லலாம். இதை மிகவும் அக்கறையோடு
மொழிபெயர்த்து தமிழ் வாசகர்களுக்கு வழங்கியிருக்கிற தி.சு. சதாவசிவம் தமிழ்
வாசகர்களின் பாராட்டுதல்களுக்கு உரியவர்.
(சோமனின் உடுக்கை – கன்னட நாவல் – கே.சிவராம காரந்த் – தமிழாக்கம்: தி.சு. சதாசிவம்.
ராஜராஜன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தி.நகர். சென்னை-17. விலை: ரூ. 40)
(சொல்வனம் - ஜூலை 2009 இதழில் வெளிவந்த கட்டுரை)