Home

Monday 14 October 2019

வேதரத்தினம் பிள்ளை - தொண்டும் தியாகமும் - கட்டுரை



12.03.1930 அன்று காந்தியடிகள் உப்புசத்தியாக்கிரகத்தைத் தொடங்கினார். சபர்மதி ஆசிரமத்திலிருந்து 79 தொண்டர்களுடன் புறப்பட்டு 240 மைல் தொலைவிலிருந்த தண்டி கடற்கரைக்குச் சென்று உப்பெடுக்கும் நோக்கத்துடன் அந்தப் பயணம் திட்டமிடப்பட்டது. இருபத்திநான்கு நாட்கள் நீண்ட அந்தப் பயணத்தில் தங்குமிடங்களைத் தீர்மானித்து உரிய ஏற்பாடுகளைச் செய்தவர் வல்லபாய் பட்டேல்.  தேசம் முழுதும் இந்தப் போராட்டம் பரவவேண்டும் என நினைத்த ராஜாஜி தமிழ்நிலத்தில் ஒரு சத்தியாகிரகத்தைத் திட்டமிட்டார். பல்வேறு நகரங்களிலிருந்து நூறு தொண்டர்கள் திரண்டு 13.04.1930 அன்று திருச்சியில் டாக்டர் தி.சே.செள. ராஜன் வீட்டிலிருந்து வேதாரண்யத்தை நோக்கிக் கிளம்பினார்கள்.
அவர்கள் வழிநெடுக சுகாதாரப்பணிகளை மேற்கொண்டபடியும் மதுவின் கொடுமைகளை விளக்கும் கூட்டங்களை நடத்தியபடியும் தாழ்த்தப்பட்டோர் குடியிருப்புகளில் சமபந்திபோஜனம் செய்துகொண்டும் பிரார்த்தனைக்கூட்டங்கள் நடத்தியபடியும் தக்களியில் நூல்நூற்றபடியும் சென்றார்கள். இந்த சத்தியாக்கிரகப்படைக்காகவே நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளைகத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுதுஎன ஒரு பாடலை எழுதிக் கொடுத்திருந்தார். அவர்களுக்கு தங்குமிடம் உட்பட எல்லா ஏற்பாடுகளையும் கருத்துடன் கவனித்துக்கொண்டவர் காந்தியரான வேதரத்தினம் பிள்ளை. அவருடைய நிர்வாகத்திறனை மெச்சி காந்திய நண்பர்கள் அவருக்கு அன்புடன் சர்தார் என்னும் பட்டத்தை அளித்தனர். அனைவராலும் அவர் சர்தார் வேதரத்தினம் பிள்ளை என்றே அழைக்கப்பட்டார்.
சத்தியாகிரகிகளின் ஊர்வலத்தைக் குலைக்கவேண்டும் என்கிற நோக்கத்துடன் தஞ்சாவூர் மாவட்டத்துக்கு மாஜிஸ்ட்ரேட்டாகப் பணிபுரிந்த ஜே..தார்ன் என்னும் ஆங்கிலேய அதிகாரி பொதுமக்களுக்கு சொல்லொணா இடையூறுகளை அளித்தார். அவர்களுக்கு உணவு கொடுப்போருக்கும் தங்க வைப்போருக்கும் தண்டனை என அறிவிக்கப்பட்டது. தடையை மீறி உணவளித்ததற்காக திருத்துறைப்பூண்டி நகருக்கருகில் இருந்த தென்பாதி நாயுடு சத்திரத்தின் தர்மகர்த்தா கைது செய்யப்பட்டார். வேதரத்தினம் பிள்ளை ஊர்மக்களின் உதவியை நாடினார். தண்டனைக்கு அஞ்சினாலும் சத்தியாகிரகத் தொண்டர்கள் மீது பொதுமக்கள் பரிவு கொண்டிருந்தனர். வழியில் மரக்கிளைகளில் யாருமறியாதபடி சாப்பாட்டுப்பைகளைத் தொங்கவைத்து, தொண்டர்களே எடுத்து உண்ணும்படி செய்யத் தொடங்கினர்.
வேதரத்தினத்தின் மீது மிகுந்த மதிப்பு கொண்டவர் வைரப்பன் என்னும் நாவிதர். தேசபக்தியின் காரணமாகவும் சத்தியாகிரகிகளுக்கு காவலர்கள் இழைக்கும் கொடுமைகளைக் நேருறக் கண்டதாலும் காவல்துறையினருக்கு இனி முடி திருத்துதலோ முகம் மழித்தலோ செய்வதில்லை என முடிவெடுத்தார். ஒருநாள் அவரை ஏமாற்றும் விதமாக ஒரு காவலர் சாதாரண உடையில் வந்து முகம் மழித்துக்கொள்வதற்காக உட்கார்ந்துவிட்டார். விவரமறியாத வைரப்பனும் தன் வேலையைத் தொடங்கினார். பாதி வேலையை முடித்த தருணத்தில் அப்பக்கமாக தற்செயலாக வந்த வேறொரு காவலர் அவரைக் கண்டு நலம் விசாரிக்க நின்ற தருணத்தில் உண்மை வெளிப்பட்டுவிட்டது. நிறுத்திய வேலையைத் தொடர மறுத்தார் வைரப்பன். அரசு ஊழியரை அவமானப்படுத்திய குற்றத்துக்காக அவருக்கு ஆறுமாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இன்முகத்தோடு அதை ஏற்று சிறைசென்றார் வைரப்பன்.
எல்லாத் தடைகளையும் கடந்து 23.04.1930 அன்று வேதாரண்யத்தை அடைந்தது சத்தியாக்கிரகிகள் குழு. அவர்களுக்கு யாரும் இடமளிக்கக்கூடாது என்கிற தடை இருந்ததால் காலியாகக் கிடந்த ஒரு மனையை வாடகைக்கு எடுத்து அவசரமாக கீற்றுக்கொட்டகை போட்டு தங்குவதற்கான வசதியைச் செய்துகொடுத்தார் வேதரத்தினம். ஒரு வாரகாலம் அங்கேயே தங்கிய தொண்டர்கள் சுதந்திரப்பிரச்சாரத்தில் தொடர்ந்து ஈடுபட்டார்கள். 30.04.1930 அன்று அதிகாலையில் ராஜாஜியும் மூன்று தொண்டர்களும் மட்டும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்று அகஸ்தியம்பள்ளி என்னுமிடத்தில் உப்பெடுத்து கைதானார்கள். இப்படி ஒவ்வொரு நாளும் மூவராகவோ நால்வராகவோ சென்று உப்பெடுத்து  தொடர்ந்து கைதானார்கள். வேதரத்தினத்துக்குச் சொந்தமான உப்பளங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நிகழ்ச்சியின் வழியாக தமிழகமெங்கும் வேதரத்தினத்தின் புகழ் பரவியது. இச்சம்பவத்துக்கு வெகுகாலம் முன்பாக இளம்பருவத்திலிருந்தே வேதரத்தினம் பிள்ளை தேசபக்தி மிக்கவராக இருந்தார். இருபதுகளில் பெல்காம் நகரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டுக்கு காந்தியடிகள் கலந்துகொள்ள இருப்பதை அறிந்த பல இளைஞர்கள் தமிழ்நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றார்கள். அவர்களில் ஒருவர் வேதரத்தினம் பிள்ளை. அங்குதான் அவர் முதன்முதலாக காந்தியடிகளைப் பார்த்தார். அன்றைய கூட்டத்தில் காந்தியடிகள் சமுதாயத்தில் நிலவிவரும் தீண்டாமைக்கொடுமையை அகற்றவேண்டிய தேவையைக் குறித்து உரைநிகழ்த்தினார். பிறகு மாலையில் நடைபெற்ற அனைத்திந்திய மாணவர் மாநாட்டிலும் அதே கருத்தை அவர் வலியுறுத்தினார். மேலும் இராட்டையில் நூல்நூற்பதை ஒவ்வொரு மாணவரும் தம் கடமையாகக் கருதி செயலாற்ற வேண்டுமென்றும் கதராடைகள் அணிந்து முன்னுதாரணமாகத் திகழவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். கதர் என்பது யாரையும் வெறுப்பதன் அடையாளமாக அணியப்படுவதல்ல என்றும் அன்பின் அடையாளமாகவும் சொந்தக் காலில் நிற்கும் சுதந்திரத்தின் அடையாளமாகவும் அணியப்படும் ஆடையென்றும் அவர்களிடம் எடுத்துரைத்தார்.
காந்தியடிகளின் சொற்கள் வேதரத்தினத்தின் நெஞ்சில் ஆழமாகப் பதிந்தன. அன்றுமுதல் காந்தியடிகள் காட்டிய பாதையில் நடக்கும் தொண்டராகவே அவர் மாறிவிட்டார். ஊருக்குத் திரும்பியபோது கதர் வேட்டியும் கதர்ச்சட்டையும் அணிந்த புதிய மனிதராக வந்தார். தன் மனைவிக்கும் கதர்ப்புடவைகள் வாங்கிவந்து அணிந்துகொள்ளும்படி செய்தார். சில நாட்களுக்குப் பிறகு தனியாகப் புறப்பட்டு காந்தியடிகளின் ஆசிரமத்துக்குச் சென்று சில நாட்கள் தங்கி அவரைச் சந்தித்து உரையாடிவிட்டுத் திரும்பினார். காந்தியடிகளின் எளிய வாழ்க்கையும் கனிந்த அன்பும் அவரை மிகவும் கவர்ந்தன. அன்றுமுதல் அவரைப்போல எளிய மக்களுக்காக செயல்படுவதையே தன் வாழ்க்கையின் நோக்கமாக வேதரத்தினம் பிள்ளை அமைத்துக்கொண்டார். இராட்டையில் நூல்நூற்பது அவருடைய தினசரிக்கடமைகளில் ஒன்றானது. தன்னைச் சுற்றியிருப்பவர்களையும் நூல்நூற்கும்படியும் கதராடைகள் அணியும்படியும் செய்தார் வேதரத்தினம். அவர்கள் நூற்கும் நூலைப் பெற்றுக்கொள்ளவும் குறைந்த விலையில் கதராடைகளை விற்பனை செய்யவும் தம் ஊரிலேயே ஒரு கதர் மையம் உருவாகும் வகையில் வழிசெய்தார். தேசபக்தியை வெளிப்படுத்துவதோடு குறைந்தபட்ச வருமானமும் இருந்ததால் கிராமத்தில் வாழ்ந்த பலரும் ஆர்வத்துடன் இராட்டையில் நூல்நூற்கத் தொடங்கினார்கள்.
1921 ஆம் ஆண்டில் காந்தியடிகள் மதுரைக்கு வந்திருந்தார். நகருக்கு வரும் வழியில் அக்கம்பக்கத்தில் இருந்த கிராமங்களில் இடுப்பில் வெறும் துண்டைமட்டும் அணிந்தபடி வேலைசெய்யும் உழவர்களின் துயரங்களைக் கண்டு வேதனையுற்றார். அவர்கள் முன்னிலையில் முழு ஆடை அணிந்த கோலத்தில் நிற்பதையே காந்தியடிகள் குற்றமாகக் கருதினார். அன்றிரவே அவர்  இனிமேல் மிக எளிமையான முறையில் உழவர்களைப்போலவே உடுத்தவேண்டும் என முடிவெடுத்தார். மறுநாள் காலையில் சட்டையையும் தலைப்பாகையையும் களைந்துவிட்டு இடுப்புவேட்டியோடும் மேலே போர்த்திய துண்டோடும் மக்கள் முன்னிலையில் தோன்றி உரையாற்றினார். தன் ஆடைமாற்றத்துக்கான காரணத்தை அவர் அந்த மேடையிலேயே அறிவித்தார். அந்தச் செய்தி பத்திரிகைகளில் மறுநாளே வெளியாகி மக்களிடையே பரவியது. அதை இளைஞரான வேதரத்தினமும் படித்தார். கதரும் எளிமையும் மட்டும் போதாது, கருணையும் மனிதனை உயர்த்துவதாக இருக்கவேண்டும் என்னும் உண்மையை உணர்ந்துகொண்டார். அன்றுமுதல் அவரும் சட்டை அணிவதைத் துறந்து உடலை மறைக்கத் தேவையான ஒரு கதர்த்துண்டையும் வேட்டியையும் மட்டுமே அணியத் தொடங்கினார். காந்தியைப்போலவே வாழ்நாள் முழுதும் அந்தக் கோலத்திலேயே வாழ்ந்தார்.
இளைஞர் வேதரத்தினம் தஞ்சாவூர் மாவட்டம் முழுதும் பயணம் செய்து காந்தியக்கொள்கைகளைப் பரப்புவதில் மும்முரமாக ஈடுபட்டார். பல தலைவர்களை வெளியூர்களிலிருந்து அழைத்துவந்து பேசவைத்தார். அவருடைய முயற்சியால் ஒருமுறை ராஜேந்திர பிரசாத் வந்து தேசப்பற்றை ஊட்டும் வகையில் மக்களிடம் பேசிவிட்டுச் சென்றார். மக்களிடையேயும் இயக்கத்திலும் அவருடைய செல்வாக்கு கொஞ்சம்கொஞ்சமாகப் பெருகியது. அதே நேரத்தில் அவரைப் பிடிக்காதவர்கள் அவர்மீது கொண்டிருந்த பொறாமையும் வளர்ந்தது. எனினும் அதைப்பற்றி சிறிதும் கவலையின்றி தன் கடமையில் ஈடுபட்டிருந்தார் வேதரத்தினம்.
ஒருமுறை தனது சொந்த ஊரான வேதாரண்யத்தில் ஒரு பெரிய மாநாடு நடத்தவேண்டும் என அவர் விரும்பினார். அந்த நிகழ்ச்சிக்கு இடம் கொடுப்பதாக தொடக்கத்தில் வாக்குறுதியளித்தவர் திடுமென மறுத்துவிட்டார். அதனால் தனக்குச் சொந்தமான நிலத்தைச் சரிப்படுத்தி பந்தல் போடவைத்தார் வேதரத்தினம். எப்படியாவது காந்தியடிகளை அக்கூட்டத்துக்கு  அழைத்துக்கொண்டு வரவேண்டுமென விரும்பி, அப்போது கல்கத்தாவில் தங்கியிருந்த காந்தியடிகளைச் சந்திக்கச் சென்றார்.. தன் வேலைச்சுமையைப்பற்றி விரிவாகச் சொல்லி தன் இயலாமையைப் புரிந்துகொள்ளும்படி கேட்டுக்கொண்டார் காந்தியடிகள். சற்றே மனம் சோர்வுற்றாலும் தளர்ந்துவிடாத வேதரத்தினம் அப்போது பர்தோலி போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தியிருந்த வல்லபாய் படேலை அவருக்குப் பதிலாக அனுப்பிவைக்கும்படி கேட்டுக்கொண்டார். அதற்கும் காந்தியடிகள் தயங்கினார். ஆனால் படேல் இல்லாமல் தான் அங்கிருந்து புறப்படமுடியாது என வேதரத்தினம் உறுதியாகத் தெரிவித்தார். “என்னிடமே சத்தியாக்கிரகமா?” என்று புன்னகைத்த காந்தியடிகள் ஒருவழியாக படேலை அனுப்பிவைக்க ஒப்புக்கொண்டார். அவருடன் மகாதேவதேசாயையும் நிகழ்ச்சிக்கு அனுப்பிவைத்தார். நிகழ்ச்சி மிகச்சிறப்பாக நடைபெற்றது.
பழைய குளங்களை ஆழப்படுத்துதல், சாலைகளைச் சரிசெய்தல், கள்ளுண்ணாமையைப்பற்றியும் சுகாதாரத்தின் அவசியத்தைப்பற்றியும்  எடுத்துரைத்தல், தாழ்த்தப்பட்டோர் மேம்பாடு என எல்லாவிதமான செயல்களிலும் வேதரத்தினம் ஈடுபட்டு உழைத்தார். ஒருமுறை திருத்துறைப்பூண்டியில் வேதரத்தினமே கள்ளுக்கடையின் முன்னால் நின்று ஒருவார காலமாக தொடர்ந்து கள்ளுண்ணவேண்டாம் என மக்களிடம் பிரச்சாரம் செய்துகொண்டிருந்தார். அதைக்கண்டு வெகுண்டெழுந்த கள்ளுக்கடைக்காரர் கள்ளுப்பானையை எடுத்துவந்து யாரும் எதிர்பாராத தருணத்தில் வேதரத்தினத்தின் தலையில் போட்டு உடைத்தார். மேலும் வாய்நிறைய அடக்கிவைத்திருந்த வெற்றிலை பாக்கு எச்சிலை அவர்மீது ஆத்திரத்துடன் உமிழ்ந்தார். அனைத்து அவமரியாதைகளையும் புன்னகையோடு ஏற்றுக்கொண்ட வேதரத்தினம் கள் விற்கவேண்டாம் என மீண்டும் மீண்டும் மன்றாடிக் கேட்டுக்கொண்டார்.
தாழ்த்தப்பட்டோர் மேம்பாட்டுக்காக வேதரத்தினம் நிர்மாண ஊழியர் முகாம்களை ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ஊரில் நடத்திவந்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட ஐம்பது அல்லது நூறு ஊழியர்களோடு காலை நாலரை மணிக்கெல்லாம் புறப்பட்டு சேரிப்பகுதிகளுக்குச் செல்வார். முதலில் அங்கங்கே சிதறிக்கிடக்கும் குப்பைகூளங்களை அகற்றி தொலைவான இடத்துக்குக் கொண்டுசென்று குழிவெட்டிப் போட்டு மூடப்படும். பிறகு சாக்கடைகளைத் திருத்தி வழிந்து பரவாதபடி செய்யப்படும்.அனைவரையும் ஒன்றுகூட்டி தூய்மை பற்றியும் கல்வியின் அவசியம் பற்றியும் விரிவாக எடுத்துரைக்கப்படும். பிறகு அங்கேயே யாரேனும் ஒருவருடைய வீட்டில் சமைக்கச் செய்து அனைவரும் ஒன்றிணைந்து உணவு உண்பார்கள். வேதரத்தினம் தன் தனிப்பட்ட முயற்சியின் விளைவாக திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் ஏராளமான ஊர்களில் நிலாச்சுவான்தார்களிடமிருந்து பல மனைகளையும் நிலங்களையும் பெற்று அவற்றை தாழ்த்தப்பட்டோர்களுக்கு வழங்கினார். ஒருமுறை கடும்புயலில் சிக்கி வேதாரண்யத்துக்கு அருகிலிருந்த வடகட்டளை என்னும் ஊரில் எண்ணற்ற தாழ்த்தப்பட்டோர் வீடுவாசல்களை இழந்து தவித்தார்கள். உடனே வேதரத்தினம் சென்னையில் உள்ள இராமகிருஷ்ண மடத்துடன் தொடர்புகொண்டு அவர்களுடைய உதவியால் இருநூறு வீடுகள் கொண்ட இராமகிருஷ்ணாபுரம் என்னும் குடியிருப்பையே உருவாக்கி அளிக்கும்படி செய்தார்.
வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகத்தில் வேதரத்தினத்துடன் கலந்துகொண்டவர்களில் ஒருவர் தலையூரைச் சேர்ந்த நாராயணசாமி ஐயர். வேதரத்தினத்தைப்போலவே காந்தியடிகள் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர். சுதந்திரப்போராட்டங்களில் ஈடுபட்டு பலமுறை சிறைக்குச் சென்றவர். தாழ்த்தப்பட்டோருக்கான சேவையே தலையான சேவை என்னும் காந்தியடிகளின் சொற்களை ஏற்று தனக்குச் சொந்தமாக இருந்த ஒவ்வொரு நிலத்தையும் விற்று தாழ்த்தப்பட்டோர் மேம்பாட்டுக்காக செலவு செய்தார் அவர். இறுதியில் அவர் குடியிருந்த வீடு ஒன்றுதான் எஞ்சியது. அதையும் விற்று அந்தப் பணத்தையும் தாழ்த்தப்பட்டோர் சேவை நிதிக்கு அளித்தார். பொருளனைத்தையும் இழந்ததால் வயது முதிர்ந்த காலத்தில் கடுமையான வறுமையில் வாடினார். அவருக்கு கமலா, சாரதா என இரு பெண்கள் இருந்தனர். 1945 ஆம் ஆண்டில் ஒருநாள் அவர்களை அழைத்துக்கொண்டு வந்து வேதரத்தினத்தைச் சந்தித்தார். தம் இறுதிக்காலம் நெருங்கிவிட்டதாகவும் தம் இரு மகள்களையும் அவரிடம் ஒப்படைப்பதாகவும் இனி அவரே அவர்களுக்கு தாயும் தந்தையுமாக இருந்து காப்பாற்றவேண்டுமென கேட்டுக்கொண்டார். அக்கணமே அவர்கள் மூவருக்கும் வசிக்க இடமளித்து ஆதரவு நல்கினார் வேதரத்தினம்.
காந்தியடிகளின் நிர்மாணத்திட்டங்களில் ஒன்றான ஆதாரக்கல்வித் திட்டத்தைப் பரவலாக்கும்  முயற்சிகள் தேசமெங்கும் நடைபெற்ற நேரம் அது. அதன் அடிப்படையில் திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தில் ஓர் ஆதாரப்பயிற்சிப்பள்ளி தொடங்கப்பட்டது. பெண்களுக்கான ஆசிரியைப்பயிற்சி அங்கு வழங்கப்பட்டது. கமலாவையும் சாரதாவையும் அப்பள்ளியில் உடனடியாகச் சேர்த்துவிட்டார் வேதரத்தினம். இவர்களோடு இருபத்தியாறு பெண்கள் அப்பள்ளியில் பயிற்சி பெற்றனர். பயிற்சி முடிந்ததும் அவர்கள் அனைவருக்கும் காந்தியடிகளே வந்திருந்து சான்றிதழ் வழங்கி ஆசியளித்தார்.
கமலாவிடமும் சாரதாவிடமும்அடுத்து என்ன செய்ய நினைக்கிறீர்கள்?” என்று கேட்டார் வேதரத்தினம். அவர்கள் சிறிதும் தயங்காமல்நீங்களே ஓர் ஆதாரப்பள்ளியைத் தொடங்குங்கள். நாங்கள் அங்கு பணிபுரிகிறோம்என்று பதில் சொன்னார்கள். அதைக் கேட்டு இருபதாண்டுகளுக்கு முன்பு சேரன்மாதேவி குருகுலத்தைப் பார்வையிட்டபோது அதேபோல ஒரு குருகுலத்தைத் தொடங்கி நடத்தவேண்டும் என எழுந்த விருப்பம் மீண்டும் வேதரத்தினத்தின் நெஞ்சில் துளிர்விட்டது. இதன் விளைவாக இரண்டு ஓலைக்குடில்களுடன் அந்த ஆண்டிலேயே கஸ்தூர்பா ஆதாரப்பள்ளி உருவானது. கமலாவும் சாரதாவும் அங்கு ஆசிரியைகளாக பணிபுரிந்தனர், அக்கம்பக்கத்தில் இருந்த தாழ்த்தப்பட்டோர் குடியிருப்புகளுக்குச் சென்று சிறுவர்சிறுமியரை அழைத்துவந்து பள்ளியில் சேர்த்து படிக்கவைத்தனர்.
குருகுலத்துக்கான செலவு கொஞ்சம்கொஞ்சமாக அதிகரித்தபடியே இருந்தது. தொடக்கத்தில் தன் கையிருப்புத்தொகையையெல்லாம் எடுத்துச் செலவு செய்தார் வேதரத்தினம். தமக்குச் சொந்தமான நிலத்தில் விளையும் நெல்லையும் தானியங்களையும் குருகுலத்துகே அளிக்கத் தொடங்கினார். செலவு மேலும் கூடியபோது நெருங்கிய நண்பர்களிடமிருந்து ஓரளவு நன்கொடையைப் பெற்று சமாளித்தார்.  கஸ்தூர்பா காந்தி நிதி டிரஸ்டின் உதவியை நாடுமாறு நண்பர்கள் வேதரத்தினத்துக்கு ஆலோசனை வழங்கினார்கள். வேறு வழியின்றி கஸ்தூர்பா ஆதாரப்பள்ளிக்கு உதவுமாறு காந்தியடிகளுக்குக் கடிதம் எழுதினார் அவர். “பள்ளிக்கூடம் இயங்கும் வேதாரண்யத்தில் தந்தி அலுவலகம் இருக்கிறது. இரண்டாயிரத்துக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட ஊரில்தான் தந்தி அலுவலகம் அமைக்கப்பட்டிருக்கும். அதன் அடிப்படையில் வேதாரண்யத்தை கிராமமாகக் கருத வழியில்லை. கிராமத்தில் இல்லாத பள்ளிக்கு கஸ்தூர்பா நிதியிலிருந்து பண உதவி அளிக்கமுடியாத நிலையில் இருக்கிறோம்என்று காந்தியடிகளிடமிருந்து பதில் வந்தது. அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிய வேதரத்தினத்துக்கு சுதேசா கிருப்பளானி பள்ளியை வேதாரண்யத்துக்கு வெளியே ஒரு கிராமத்துக்கு மாற்றும்படி ஒரு யோசனையை வழங்கினார்.
வேதாரண்யத்தை அடுத்த மகாராஜபுரம் என்னும் கிராமத்தில் வேதரத்தினத்துக்குச் சொந்தமான ஒரு நிலம் இருந்தது. நிர்மாண ஊழியர்கள் முகாமுக்காக அந்நிலத்தில் போடப்பட்டிருந்த கீற்றுக்கொட்டகைகள்கூட பிரிக்கப்படாமல் அப்படியே இருந்தன. சுதேசா கிருப்பளானியின் யோசனையின்படி ஆதாரப்பள்ளியை அக்குடில்களுக்கு  உடனடியாக மாற்றினார் வேதரத்தினம். ஆதாரப்பள்ளியில் ஆண்குழந்தைகளும் பெண்குழந்தைகளும் சேர்ந்தே படித்துவந்தனர். பள்ளிக்கூடம் இருக்கும் இடத்துக்கே விதிகளைச் சுட்டிக்காட்டிய காந்தியடிகள் நாளைக்குஇது பெண் குழந்தைகள் படிக்கும் பள்ளியல்ல, ஆண்குழந்தைகளும் இருக்கிறார்களேஎன வேறொரு விதியைச் சுட்டிக்காட்டிவிட இடமளித்துவிடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கையோடு செயல்பட்டார் வேதரத்தினம். பெண்குழந்தைகளையும் ஆசிரியைகளையும் மட்டும் புதிய இடத்துக்கு  மாற்றி கஸ்தூர்பா காந்தி கன்யா குருகுலம்என்றும் பழைய பள்ளிக்குதாயுமானவர் வித்யாலயம்என்றும் பெயர் சூட்டினார். நல்ல வேளையாக இந்த மாற்றங்களைச் செய்தபிறகு காந்தியடிகளிடமிருந்து எந்த மறுப்பும் எழவில்லை. குருகுலம் இயங்கத் தேவையான நிதி உதவியும் கிடைத்தது.  தொடக்கப்பள்ளியாக இருந்த குருகுலம் மெல்ல மெல்ல உயர்நிலைப்பள்ளியாக வளர்ச்சியடைந்தது. எல்லோருக்கும் உணவும் உடையும் உறைவிடமும் கொடுத்து ஆதரவோடு அணைத்துக்கொண்டது குருகுலம். புயல்சீற்றத்திலிருந்து பாதுகாக்கும்பொருட்டு ஒவ்வொரு குடிலையும் கட்டடமாக மாற்றினார் வேதரத்தினம்.
கைக்குத்தல் அரிசித் திட்டம் வேதரத்தினத்தின் மனத்தில் உதித்த  ஒரு புதுமையான திட்டம். சத்தான உணவுக்கு வழிவகுப்பதோடு மட்டுமன்றி அந்த ஊரில் உழைக்கும் பெண்களின் நல்வாழ்வுக்கும் அந்தத் திட்டம் உதவியது. தொடக்கத்தில் நாற்பதுகள்வரையில் ரங்கூனிலிருந்து கப்பலில் வந்து இறங்கிய அரிசியே தமிழ்நாட்டுக் கடைகளில் விற்கப்பட்டது. 1941 ஆம் ஆண்டில் அமெரிக்காவுக்குச் சொந்தமான ஹவாய் தீவிலுள்ள பேர்ள் ஹார்பர் என்னும் துறைமுகத்தின்மீது ஜப்பான் குண்டு வீசித் தாக்கியது. அதைத் தொடர்ந்து அமெரிக்காவும் ரஷ்யாவும் இங்கிலாந்தும் ஜப்பான் மீது போர் தொடங்குவதாக அறிவித்தது. பர்மா ஜப்பான் வசமானதால் இந்தியாவுக்கும் பர்மாவுக்கும் இடையிலான கப்பல் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. அதுவரை இறக்குமதி செய்யப்பட்ட அரிசி போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டது. இதனால் எங்கெங்கும் அரிசிப்பஞ்சம் ஏற்பட்டது.  இந்தச் சூழ்நிலையை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட வணிகர்கள் பலமடங்கு விலையை உயர்த்தி தம்மிடம் உள்ள அரிசியை விற்கத் தொடங்கினார்கள். இதைக் கண்டு வருந்திய வேதரத்தினம் தலைஞாயிறு பகுதிக்குச் சென்று வணிகர்களிடமிருந்து நெல்மூட்டைகளை வாங்கி படகு வழியாக வேதாரண்யத்துக்கு கொண்டுவந்து சேர்த்தார். நெல்குத்தும் வேலையில் உழைக்கும் பெண்களை ஈடுபடுத்தி அவர்களுக்கும் வருமானத்துக்கு ஒரு வழியை ஏற்படுத்திக்கொடுத்தார். கைக்குத்தல் அரிசியை ஊர்முழுக்க அடக்கவிலைக்கே விற்றார். தம்மிடம் உள்ள அரிசியை அதிக லாபத்துக்கு விற்க முடியாத கோபத்தில் வேதரத்தினம் மீது வியாபாரிகள் சீற்றமுற்றனர். அரசாங்கத்திடம் புகாரளிக்க முயற்சி செய்தனர்.  உடனே வேதாரண்யம் கைக்குத்தல் அரிசித் தொழிலாளர்கள் சங்கம்என்றொரு அமைப்பை ஏற்படுத்தி, அந்த அமைப்பிடம் கொள்முதல் பொறுப்பையும் விற்பனைப்பொறுப்பையும் ஒப்படைத்தார் வேதரத்தினம்.
பொதுவாழ்க்கையிலும் வணிகவாழ்க்கையிலும் அவரை வெறுக்கும் எதிரிகள் கண்மறைவில் வளர்ந்துகொண்டே இருந்தனர். 30.01.1948 அன்று தில்லியில் பிரார்த்தனைக்கூட்டத்துக்குச் செல்லும் வழியில் காந்தியடிகள் சுடப்பட்டு மரணமடைந்தார். பல இடங்களில் வன்முறை வெடித்தது. எங்கெங்கும் மக்கள் ஆத்திரவசப்பட்டு கொதித்துக்கொண்டிருந்தார்கள். இத்தருணத்தைப் பயன்படுத்தி வேதரத்தினத்தைக் கொல்ல திட்டமிட்டனர் அவருடைய எதிரிகள். ஓர் ஆளைப் பிடித்து, அவனுக்கு ஒரு துப்பாக்கியும் பணமும் கொடுத்து, எப்படி எங்கே அந்தக் கொலையை நிகழ்த்துவது என்கிற பயிற்சியையும் அளித்தனர்.
காந்தியடிகள் மறைந்து பத்து நாட்களுக்குப் பிறகு அவருடைய அஸ்தியை நாடெங்கும் கரைத்தார்கள். அன்றைய தினம் வேதாரண்யத்தில் காந்தியடிகளுக்காக ஓர் இரங்கல் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. அக்கூட்டத்தில் வேதரத்தினம் உரையாற்றும்போது அவரைக் கொல்லவேண்டும் என்பது திட்டம். அனைவரும் எதிர்பார்த்தபடி வேதரத்தினம் பேசத் தொடங்கினார். அவருக்கு அருகிலேயே அவரைக் கொல்ல வந்தவரும் அமர்ந்திருந்தார். காந்தியடிகள் சுடப்பட்ட செய்தியை அறிந்ததிலிருந்து துயரே உருவாக நடமாடிக்கொண்டிருந்தார் வேதரத்தினம்.  தன் வாழ்க்கையை தகவமைத்த அந்த மாபெரும் மனிதரின் இழப்பை அவரால் தாங்கிக்கொள்ளவே இயலவில்லை. மேடையில் பேசத் தொடங்கியதும் அவர் விழிகளிலிருந்து கண்ணீர் பெருகி வழிந்தது. கேட்டவர்களையெல்லாம் அந்தப் பேச்சு உருக்கியது. திடலில் கூடியிருந்த அனைவரும் கண்கலங்கினார்கள்.. அவரைக் கொல்லவந்தவனையும் வேதரத்தினத்தின் உரை நெகிழவைத்துவிட்டது. தாம் அவரைக் கொல்ல வந்திருக்கிறோம் என்பதே அவருக்கு மறந்துவிட்டது. புதியதொரு மனிதனாகவே அவர் மாறிவிட்டார். துப்பாக்கியிடம் அவர் கை போகவே இல்லை. இரங்கல் கூட்டம் முடிந்ததும் அவர் தன் வீட்டுக்குச் சென்று வேதரத்தினத்துக்கு நீண்டதொரு கடிதத்தை எழுதினார். அதையே மீண்டும் பிரதியெடுத்து முதலமைச்சராக இருந்த ஓமந்தூர் இராமசாமி ரெட்டியாருக்கு அனுப்பிவைத்தார். அக்கடிதத்தின் இறுதிப்பகுதியில்அவரைக் கொல்ல என்னை அனுப்பியவர்கள் அவரைக் கொல்லவேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருக்கிறார்கள். அவருக்கு தகுந்த பாதுகாப்பளித்து காப்பாற்றவேண்டியது அரசின் கடமைஎன்று கூடுதலாக இரண்டு வரிகளையும் எழுதி அனுப்பிவைத்தார். மறுநாள் காலை வேதரத்தினம் கடிதத்தைப் படித்து விஷயத்தைத் தெரிந்துகொண்டார். ஆனாலும் யாரிடமும் இதைப்பற்றித் தெரிவிக்கவில்லை. ஆனால் தனக்கு வந்த கடிதத்தைப் படித்த முதலமைச்சர் பதற்றத்தோடு உடனடியாக ஒரு மெய்க்காப்பாளரை நியமித்து அவரிடம் அனுப்பிவைத்தார். அவர் வந்து சேர்ந்த பிறகுதான் மற்றவர்களுக்கு விஷயம் புரிந்தது. மெய்க்காவலர் எப்போதும் துணைக்கு வருவதை அவர் விரும்பவில்லையென்றாலும், தன்னோடு இருந்தவர்களின் அன்புக்கட்டளைக்குக் கட்டுப்பட்டு அந்த ஏற்பாட்டுக்கு உடன்பட்டார்.
அடுத்த ஆண்டில் மன்னார்குடிக்கு அருகில் இருக்கும் தெற்கு நாணலூரில் ஒரு கூட்டத்தில் கலந்துகொண்டு உரைநிகழ்த்திவிட்டு இரவில் திரும்பிவரும் வேளையில் ஒரு பெரிய கூட்டம் அவருடைய வாகனத்தை வழிமறித்து நிறுத்தியது. கூட்டம் வாகனத்தின் விளக்கை உடைத்து சுக்குநூறாக்கிவிட எங்கும் இருள் சூழ்ந்தது. மெய்க்காப்பாளர் தன்னிடமிருந்த துப்பாக்கியை எடுத்தபோது வேதரத்தினம் அவரைத் தடுத்து நிறுத்தினார். மறுகணமே கதவைத் திறந்துகொண்டு தலையில் துண்டு போட்டுக்கொண்டு கூட்டத்திடையில் புகுந்து பக்கத்தில் இருந்த காட்டுக்குள் புகுந்துவிட்டார். கலவரத்தின் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த அடுத்த ஊர்மக்கள் வந்து அவரைக் காப்பாற்றினார்கள். அவர் வந்த வாகனம் வாய்க்காலோரம் உருட்டிவிடப்பட்டு சேதப்படுத்தப்பட்டது. அவர் புகார் அளிக்காதபோதும் காவல்துறையினரே முன்வந்து வழக்கு பதிந்து விசாரணை நிகழ்த்தினர். தன்னைக் கொல்லவந்தவர்கள் யாரென தெரிந்தபோதும் வேதரத்தினம் யாரையும் இறுதிவரைக்கும் காட்டிக்கொடுக்க விரும்பவில்லை. இருட்டில் யார் முகமும் சரியாகத் தெரியவில்லை என்று பொதுவாகச் சொல்லி வெளியேறிவிட்டார்.
பொதுவாக கஸ்தூர்பா காந்தி கன்யா குருகுலத்தின் பிரார்த்தனை உரைகள் கேள்விபதில் நிகழ்ச்சிகளாகவே அமையும். பிள்ளைகளிடையே புதிய சிந்தனை தோன்ற இந்த வழிமுறை பெரிதும் உதவும் என அவர் நம்பினார். ஒருமுறை குருகுலத்தின் பிரார்த்தனைகூட்டத்தில் சுதந்திரப்போராட்டத்தைப்பற்றி அவர் உரைநிகழ்த்தினார். அதைத் தொடர்ந்து பிள்ளைகளைப் பார்த்து, “காந்தியடிகளுக்கு முன்னால் தோன்றிய நம் தலைவர்கள் ஏன் அகிம்சையைக் கடைபிடிக்கவில்லை?” என்றொரு கேள்வியைக் கேட்டார். வழக்கமாக மனதில் பட்ட ஏதேனும் ஒரு பதிலைச் சொல்லும் பிள்ளைகள் அன்று பதில்சொல்லத் தடுமாறினார்கள். அதைக் கண்டதும் வேதரத்தினமே கேள்விக்குரிய பதிலையும் சொன்னார்.
அகிம்சையின் வழியில் வெற்றிபெற முடியும் என்பது அவருக்கு முன்னால் வாழ்ந்த தலைவர்களுக்குத் தெரியவில்லை என்பதுதான் காரணம். அவர்களுக்கு அகிம்சையின் வலிமையை எடுத்துரைக்க ஒரு காந்தி அப்போது வாழவில்லை. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் எதிர்க்கவேண்டும் என்கிற ஒரே விஷயம்தான். எதிர்ப்பை வன்முறையின் வழியாகத்தான் காட்டமுடியும் என்பதால் அவர்கள் வன்முறையில் ஈடுபட்டார்கள். மற்றவர்கள் யாருக்கும் தோன்றாத அகிம்சைமுறை காந்தியடிகளுக்கு மட்டுமே தோன்றியது.”
அகிம்சையும் உண்மையும் காந்தியடிகள் தன் ஆயுள் முழுதும் வலியுறுத்திய இரண்டு விஷயங்கள். ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்கமுடியாதபடி அவ்விரண்டும் எப்போதும் இணைந்தே நிற்கின்றன. ஒரே நாணயத்தின் இரு பக்கங்களைப்போல. இன்னொரு கோணத்தில் அகிம்சை என்னும் வழியாகச் சென்று அடையவேண்டிய புள்ளியே உண்மை என்று சொல்லலாம். அகிம்சையைக் கடைபிடிப்பவர்கள் சாதிமத வேறுபாடுகளை எளிதில் கடந்துசெல்லமுடியும் என்பது காந்தியடிகள் அடிக்கடி சொல்லும் கூற்று. அத்தகையோரிடம் காணப்படும் தொண்டுள்ளம் மகத்தான சேவையை ஆற்றும் வலிமை பொருந்தியது. காந்தியடிகளிடம் அத்தகைய தொண்டுள்ளத்தை வேதரத்தினம் கண்டடைந்தார். நாம் அதை வேதரத்தினத்தின் வாழ்க்கையில் காணமுடிகிறது.
(2019, அக்டோபர் மாத அம்ருதா இதழில் வெளிவந்த கட்டுரை)