1. கனவு வழி
இந்த நகரம் என்னைப் பிணைத்த சங்கிலி
என்று தெரியும்
இங்குதான் வாழ்ந்தாக வேண்டும்
என்கிற விதியும் தெரியும்
இருந்தாலும் எனக்கு என் ஊர் தான் முக்கியம்
ஊர் பற்றிய கனவுகள் முக்கியம் –
இந்த இருப்பு
இங்கு கிடைக்கிற சம்பளம்
என் வார்த்தைகள் பெறும் கெளரவம்
எல்லாமே தெரிந்த விஷயங்கள் தாம்
இங்கு அனுபவிக்கும் அந்தஸ்தும் வசதியும்
எங்கும் கிட்டாது என்றும் தெரியும்
அந்த ஊர்கூட கனவில் இருப்பதுபோல
இல்லையென்றும் தெரியும்
அதன் வனப்பும் வசீகரிப்பும்
நாகரிகப் பாம்பின் வாயில் அகப்பட்டு
நலிவதும் தெரியும் –
என்றாலும்
எங்கும் கால்தரிக்க இயலாத என் மனம்
கனவுகளின் வழியில் நடப்பதால் மட்டுமே
உயிர்ப்பை உணர்ந்து சிலிர்க்கிறது
(திணை , ஏப்ரல் - ஜூன், 1994)
2. கயிற்றில் நடக்கும் சிறுமி
அந்தரத்துக் கயிற்றில் நடக்கும் சிறுமியை
அண்ணாந்து பார்க்கிறாள் அந்தச் சிறுமி
அவள் இதயத்துடிப்பு அதிகரிக்கிறது
அடிஅடியாய் நகரும் சிறு பாதங்களில்
பதிந்திருக்கிறது அவள் பார்வை
கையைப்பற்றி இறக்கிவிட வேண்டுமென்று
பரபரக்கின்றன அவள் கைகள்
இவ்வளவு பெருங்கூட்டம் நின்று பார்க்க
தனியே ஏன் அல்லாடுகிறாள் என்று
அந்தச் சிறுமிக்குப் புரியவில்லை
தொடர்ந்து அதிரும் மேளத்தையும்
கூடி நிற்பவர்களின் உற்சாகக் குரல்களையும்
எதுவும் புரியாமல்
மாறிமாறிப் பார்க்கிறாள் அந்தச் சிறுமி
இறங்கிவந்து கும்பிட்டவளின் சிரிப்புக்கு
என்ன பொருள் என்றும் விளங்கவில்லை
கைதட்டும் மக்களின் முன்
தட்டேந்தி நடப்பவளின்
பாதங்களில் மீண்டும் பதிகிறது அவள் பார்வை
அப்போதும் அவள் இதயத்துடிப்பு அதிகரிக்கிறது
(கணையாழி, ஜூலை
1994)