Home

Wednesday, 13 November 2019

கே.சுவாமிநாதன் - எப்போதும் இருக்கும் பெயர் - கட்டுரை



1915 ஆம் ஆண்டில் காந்தியடிகள் தன் மனைவி கஸ்தூர்பாவுடன் சென்னைக்கு வந்திருந்தார். அப்போது தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வந்த இந்தியர்களின் உரிமைப்போராட்டத்துக்கு ஆதரவு திரட்டுவது அவருடைய நோக்கமாக இருந்தது. அவரை இந்தியன் ரிவ்யுபத்திரிகையின் ஆசிரியரான ஜி..நடேசன் ரயில் நிலையத்துக்கே வந்து வரவேற்று அழைத்துச் சென்று தம் வீட்டிலேயே விருந்தினராகத் தங்கவைத்திருந்தார். ஆர்வத்துடன் அவரைக் காண்பதற்காக ஏராளமான கல்லூரி மாணவர்கள் ரயில்நிலையத்துக்கே வந்திருந்தார்கள்.

அப்போது காந்தியடிகளுக்கு உதவியாக இருக்கும்படி ஓர் இளைஞரைக் கேட்டுக்கொண்டார் நடேசன். சென்னை நகருக்குள் ரானடே கூடம், கோகலே மன்றம், மதராஸ் மகாஜன சபா, சாந்தோமில் இருந்த கத்தோலிக்கப் பாதிரியாரின் வீடு, மைலாப்பூர், ஜார்ஜ், ராயப்பேட்டை என காந்தியடிகள் செல்ல விரும்பிய இடங்களுக்கு நடந்தோ அல்லது டிராமிலோ பாதுகாப்பாக அழைத்துச்சென்று அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்து, திரும்பவும் வீட்டுக்கு அழைத்துவருவது முக்கியமான வேலை. பிறகு வீட்டுக்குள் கடிதம் எழுத  அவர் அமரும்போது, அவர் இறகுப் பேனாவைத் தொட்டு எழுத வசதியாக மைப்புட்டியில் சுதேசி மையை நிரப்பியளிப்பது அடுத்த வேலை. பதினெட்டு வயதே நிரம்பிய அந்த இளைஞர் காந்தியடிகளுக்கு அந்த உதவிகளை மிகவும் அன்புடனும் ஆர்வமுடனும் செய்தார். அவர் பெயர் கே.சுவாமிநாதன்.
ஐந்தாண்டுகள் கழித்து காந்தியடிகள் மீண்டும் சென்னைக்கு வந்திருந்தார். ஆப்பிரிக்கப்பணிகளை முடித்துவிட்டு அவர் இந்தியாவுக்குத் திரும்பியிருந்த நேரம் அது. ஒத்துழையாமை இயக்கத்தையும் தொடங்கியிருந்தார். காந்தியடிகளுக்கு உதவி செய்ய வழக்கம்போல சென்றிருந்தார் சுவாமிநாதன். அவரோடு மேலும் சில இளைஞர்களும் இணைந்து உதவி செய்தனர். அப்போது ஆசிரமத்திலேயே தங்கி காந்தியடிகளுக்குத் துணையாக இருக்கும் வகையில் சில உதவியாளர்கள் தேவைப்பட்டார்கள். அதற்காக தன்னைக் காண வந்திருந்த இளைஞர்களிடம் ஒரு சிறிய நேர்காணலை நிகழ்த்தினார் காந்தியடிகள். ஆசிரமச்சேவையில் ஆர்வமிருக்கிறதா, பெற்றோர்கள் இசைவளிப்பார்களா, சகோதரசகோதரிகள் இருக்கிறார்களா, பெற்றோர்களையோ மற்றவர்களையோ அருகிலிருந்து கவனித்துக்கொள்ளும் பொறுப்பு இருக்கிறதா, வாழ்நாள் முழுவதும் சேவையைத் தொடரமுடியுமா என்பதுபோன்ற சில கேள்விகள் அனைவரிடமும் கேட்கப்பட்டன.  சுவாமிநாதன் அனைத்துக் கேள்விகளுக்கும் ஆர்வமுடன் பதில் சொன்னார். இளைஞர்கள் காட்டிய ஆர்வம், அணுகுமுறை, மதிக்கூர்மை, நுட்பமான கவனிப்பு, குடும்பப்பின்னணி, கடமைகள் என அனைத்து அம்சங்களையும் தொகுத்துப் பரிசீலனை செய்தபிறகு, நேர்காணலின் இறுதியில் சந்தானம், வரதாச்சாரி என இருவரை மட்டும் காந்தியடிகள் தேர்ந்தெடுத்தார். சுவாமிநாதன் தேர்ந்தெடுக்கப்படவில்லை.
முடிவில், சுவாமிநாதனை அருகில் அழைத்த காந்தியடிகள் உன்னை  எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ஆனால் உன்னை ஆசிரமத்துக்கு அழைத்துச் செல்வதற்குரிய சரியான நேரம் இன்னும் வரவில்லை. உன்னிடம் ஒப்படைக்க என்னிடம் ஒரு வேலை இருக்கிறது. இன்னும் கொஞ்ச காலம் பொறுத்திரு. தக்க நேரத்தில் உன்னை அழைப்பேன். அப்போது வருவதற்குத் தயாராக இருஎன்று சொல்லித் தட்டிக்கொடுத்தார். சுவாமிநாதனும் புன்னகையுடன் தலையசைத்து அவருக்கு விடையளித்தார். ஆனால் காந்தியடிகள் மறைவுவரை சுவாமிநாதன் எதிர்பார்த்திருந்த அழைப்பு வரவேயில்லை.
30.01.1948 அன்று காந்தியடிகள் துப்பாக்கிக்குண்டுக்கு இரையாகி உயிர்நீத்தார். அவர் மறைந்த பிறகு அவருடைய கட்டுரைகளையும் பேச்சுகளையும் கடிதங்களையும் குறிப்புகளையும் தொகுக்கும் வேலையில் அரசு 1956 ஆம் ஆண்டில் ஈடுபட்டது. முதலில் ஜே.சி.குமரப்பாவின் தம்பியான பரதன் குமரப்பாவிடம் அப்பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. எதிர்பாராதவிதமாக அடுத்த ஆண்டிலேயே அவர் இந்த மண்ணுலகைவிட்டு மறைந்துவிட்டார். அதைத்தொடர்ந்து ஜெய்ராம் தெளலத்ராம் என்பவரிடம் அப்பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. பற்பல காரணங்களால் இரு ஆண்டுகளுக்குப் பிறகு அவரும் அப்பொறுப்பிலிருந்து விலகிக்கொண்டார். அதுவரை தொகுக்கப்பட்ட செய்திகளிலிருந்து மூன்று தொகுதிகள் மட்டுமே வெளிவந்திருந்தன.
இறுதியாக அந்த வாய்ப்பு சுவாமிநாதனைத் தேடி வந்தது.  அக்கணத்தில்இன்னும் கொஞ்ச காலம் பொறுத்திரு. தக்க நேரத்தில் உன்னை அழைப்பேன்என்று தன் இளமைக்காலத்தில் காந்தியடிகள் சொல்லிவிட்டுச் சென்ற சொற்கள் அவர் நெஞ்சில் அலைமோதின. அந்த அழைப்பை காந்தியடிகள் விடுத்த அழைப்பாகவே அவர் எடுத்துக்கொண்டார். உடனே அப்பொறுப்பை ஏற்றுக்கொண்டு அவர் தில்லிக்குச் சென்றார். அப்போது அவருக்கு வயது 63.
அரசியல் செயல்பாடுகளில் ஈடுபடாதவர் என்றபோதும் எளிமை, நேர்மை, அர்ப்பணிப்புணர்வு, சாதிமதங்களின் அடிப்படையில் மனிதர்களிடையில் வேறுபாடு பாராமை, எதிர்ப்பைக் கண்டு அஞ்சாமை என காந்தியடிகள் வலியுறுத்தும் பல குணங்களைக் கொண்டவர் சுவாமிநாதன். இளம்வயதில் பிரசிடென்சி கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த பிறகு இங்கிலாந்துக்குச் சென்று ஆட்சியர் பணிக்குரிய தேர்வை எழுதவேண்டும் என்பதுதான் அவருடைய தொடக்கக்கால எண்ணமாக இருந்தது. ஆனால் அவர் தாயார் அம்முயற்சியைத் தடுத்துவிட்டதால் சட்டப் படிப்பைப் படித்தார். இரண்டாண்டு படிப்புக்குப் பிறகு புகழ்பெற்ற வழக்கறிஞரான சீனிவாச ஐயங்காரிடம் பயிற்சி வழக்கறிஞராகப் பணிபுரிந்தார். அதைத் தொடர்ந்து சொந்த ஊரான புதுக்கோட்டைக்குச் சென்று வழக்கறிஞராக பணியாற்றத் தொடங்கினார். அப்போது தேசபக்தர் சத்தியமூர்த்தியின் தலைமையில் புதுக்கோட்டையில் அரசருக்கு எதிராக வேலைநிறுத்தமும் மறியலும் நடந்தன. அவற்றில் சுவாமிநாதன் கலந்துகொண்டார். மேலும் வழக்கறிஞர் மன்றத்துக்கு மற்றொரு தேசபக்தரான காமராஜரை அழைத்து உரையாற்றவைத்தார். இச்செயல்பாடுகளால் ஆங்கில அரசின் கண்காணிப்பு வளையத்துக்குள் அவர் விழநேர்ந்தது. அரசு அதிகாரிகள் அவரை நேரடியாகவே அழைத்துக் கண்டித்தார்கள். தன் செயலுக்கு மன்னிப்பு தெரிவித்து கடிதம் எழுதியளிக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்தினார்கள். ஒருவேளை அதற்கு மறுத்தால் வழக்கறிஞராகப் பணியாற்றுவதற்காக வழங்கப்பட்ட உரிமையை ரத்து செய்துவிடுவதாகவும் தெரிவித்தார்கள். மன்னிப்புக்கடிதம் அளிக்க மறுத்த சுவாமிநாதன் வழக்கறிஞர் தொழிலையே துறந்தார்.
அத்தருணத்தில், நல்வாய்ப்பாக வழக்கறிஞராக பணியாற்றிய காலத்தில் வழக்குமன்ற வாடிக்கையாளராக இருந்த அண்ணாமலை செட்டியார் சிதம்பரத்தில் தான் தொடங்கி நடத்திவந்த ஸ்ரீமீனாட்சி கல்லூரியில் சுவாமிநாதனுக்கு ஆங்கில ஆசிரியர் வேலையை அளித்தார். அதுமட்டுமன்றி ஆங்கில இலக்கியத்தில் அவர் மேற்படிப்பைப் படிப்பதற்காக ஆக்ஸ்ஃபோர்டுக்கும் அனுப்பிவைத்தார். அங்கு பட்டம் வாங்கித் திரும்பிவந்து மீண்டும் கல்லூரியிலேயே 1930 வரை பணியைத் தொடர்ந்தார் சுவாமிநாதன். அப்போது அக்கல்லூரியின் முதல்வராக பணியாற்றியவர் வரலாற்றாய்வாளரான கே..நீலகண்ட சாஸ்திரி. அதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள பிரசிடென்சி கல்லூரியில் பேராசிரியராக இணைந்து பதினெட்டு ஆண்டுகள் பணியாற்றினார்.
வெள்ளையனே வெளியேறுஇயக்கம் நாடெங்கும் வேகமாகப் பரவிய நேரத்தில் ஏராளமான கல்லூரி மாணவர்களும் அப்போராட்டத்தில் பங்கெடுத்தனர். ஆங்கிலேய அரசின் நிர்வாகத்தின்கீழ் செயல்பட்டுக்கொண்டிருந்த பிரசிடென்சி கல்லூரியின் மாணவர்களும் மறியலில் ஈடுபட்டனர். அப்போது கல்லூரி முதல்வருக்கு உதவியாக இருந்த சுவாமிநாதன் இரு தரப்பிடமும் உரையாடி எவ்விதமான அசம்பாவிதங்களும் நேராதபடி பார்த்துக்கொண்டார். மாணவர்களின் உணர்ச்சிகளுக்கு மதிப்பளிக்கவேண்டும் என நிர்வாகத்துக்கும்  ஒரே ஒரு விழுக்காடு அளவுகூட வன்முறைக்கு இடமளிக்காமல் அமைதியான முறையில் மட்டுமே எதிர்ப்பை வெளிப்படுத்தவேண்டுமென மாணவர்களுக்கும் எடுத்துரைத்துப் புரியவைத்து இரு தரப்பினரிடையேயும் சமரசம் நிலவுவதற்கு உதவினார். 1948 முதல் 1953 வரை அரசு முகம்மதியக்கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். அதைத் தொடர்ந்து இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில இதழில் துணையாசிரியராக 1953 முதல் 1959 வரை பணியாற்றினார். அப்போது ராஜாஜியின் சக்கரவர்த்தி திருமகள் புத்தகத்தையும் வினோபாவின் கீதைப் பேருரைகள் புத்தகத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
இதற்குப் பிறகே காந்தி நூல்களைத் தொகுக்கும் குழுவின் தலைமைத் தொகுப்பாசிரியராக பணியில் அமர்ந்தார் சுவாமிநாதன். அப்போது தகவல் ஒளிபரப்புத்துறையின் அமைச்சராக இருந்தவர் பி.வி.கெஸ்கர். ஆலோசனைக்குழுவின் தலைமைப்பொறுப்பு மொரார்ஜி தேசாயிடம் இருந்தது. இந்தி மொழியோ குஜராத்தி மொழியோ தெரியாத ஒருவர் இத்தொகுப்பு வேலையை எப்படிச் செய்யமுடியும் என்னும் ஐயத்தை நேரிடையாகவே சுவாமிநாதனிடம் வெளிப்படுத்தினார் தேசாய். வைணவத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்த சுவாமிநாதன் ஆழ்வார்களின் வரிசையைச் சேர்ந்தவராகவே காந்தியடிகளைக் கருதினார். தூய்மையான பக்தியையே தன் வழியாகக் கொண்ட  ஆழ்வார்களைப்போல தூய்மையும் உண்மையும் மிக்க சேவையையே தன் வழியாகக் கொண்டவர் காந்தியடிகள் என்பது அவர் கருத்து. தன்  மனத்தில் தோன்றிய எண்ணத்தையே தேசாயின் கேள்விக்குப் பதிலாகச் சொன்னார் சுவாமிநாதன். ”எனக்கு உங்களைப்பற்றி எதுவும் தெரியாது. ஆனால் நான் நம்பிக்கை வைத்திருக்கும் ஆளுமைகள் உங்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அதனால் நானும் நம்புகிறேன். நீங்கள் உங்கள் பணியைத் தொடங்கலாம்என்று சொல்லி அனுப்பிவைத்தார் தேசாய்.
சம்பளமாக எதையும் பெறாமலேயே தொகுப்பாசிரியராகப் பணியாற்றவேண்டும் என்பதே சுவாமிநாதனின் விருப்பமாக இருந்தது. அதைத் தேசாயிடம் தெரிவிக்கவும் செய்தார். தேசாய் சில கணங்கள் மெளனமாக அவரையே உற்றுப் பார்த்தார். அக்கணமே தொகுப்புவேலையைச் செய்ய சுவாமிநாதனே பொருத்தமானவர் என்பதில் அவருக்கு உறுதி ஏற்பட்டுவிட்டது.  புன்னகையுடன் சுவாமிநாதனைப் பார்த்துஅப்படி ஒருவருடைய உழைப்பை இலவசமாகப் பெற்றுக்கொள்ள விதி இல்லைஎன்று மறுத்தார் தேசாய். மேலும்உங்களுடைய உழைப்புக்கு ஊதியமாக நினைத்துக்கொள்ளவேண்டாம். வீட்டிலிருந்து அலுவலகத்துக்கு வந்துபோகும் செலவுக்குத் தேவையான பணத்தைப் பெற்றுக்கொள்வதாக நினைத்துக்கொள்ளுங்கள்என்றார். மாதச்செலவாக 720 ரூபாய் வழங்கவேண்டும் என முடிவானது. இறுதியில் சுவாமிநாதன் அதை ஏற்றுக்கொண்டார்.
உலக அளவில் அதுவரை கார்ல் மார்க்ஸ், லெனின், மார்டின் லூதர்கிங் போன்ற ஒருசில ஆளுமைகளுடைய ஆக்கங்கள் மட்டுமே தொகைநூல்களாக வெளிவந்திருந்தன. இந்தியாவில் அப்படிப்பட்ட முயற்சி காந்தியடிகளின் தொகைநூல் வரிசையிலிருந்தே தொடங்குகிறது. ஒரு குறிப்பிட்ட ஆண்டில் அவர் எழுதிய கடிதங்கள், கட்டுரைகள், பத்திரிகைக்குறிப்புகள், நிகழ்த்திய உரைகள், நேர்காணல்கள் என  அனைத்தையும் கால்வரிசைப்படுத்துவது என்பது எளிதான வேலையல்ல. காந்தியடிகளுடன் கடிதத்தொடர்பில் இருந்தவர்கள் உலகெங்கும் பலர் வாழ்ந்து வந்தனர். அவர்களைத் தொடர்புகொண்டு அவற்றைப் பெற முயற்சி செய்வது முக்கியமான பணி. காந்தியடிகளிடன் கட்டுரைகள் உலகநாடுகளில் பல இதழ்களில் தொடர்ச்சியாக வெளிவந்தன. அவற்றையும் ஒன்றுவிடாமல் சேகரிக்கவேண்டும். இறுதியாக இந்தியா முழுவதும் சுற்றியலைந்து மக்களிடையே அவர் ஆற்றிய உரைகளையும் பதிவு செய்யவேண்டும். சில உரைகளின் குறிப்புகளை அவரே தயாரித்துவைத்திருப்பார். ஆனால் அவற்றின் விரிவாக்கம் இருக்காது. சில உரைகள் நேரிடையாக நிகழ்த்தப்பட்டிருக்கும். அதற்குக் குறிப்புகளே இருக்காது. அப்படிப்பட்ட தருணங்களில் அப்போது பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகளைத் தேடித் தொகுக்கவேண்டும். சில இதழ்கள் சில செய்திகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்திருக்கும். சில இதழ்கள் மிகச்சுருக்கமான செய்திகளையே வெளியிட்டிருக்கும். சில உரைகளுக்கு ஒலிநாடாப்பதிவுகள் மட்டுமே கிடைக்கும். அனைத்தையும் ஒப்பிட்டுப் பார்த்து ஒருமை சிதையாதபடி அந்த உரையை முழுமையாக எழுதவேண்டும். இறுதியாக அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டும். காந்தியடிகள் ஆங்கிலம், இந்தி, குஜராத்தி என பல மொழிகளில் கடிதங்களை எழுதியவர். அவர் யாருக்கு எழுதுகிறார் என்பதைப்பொறுத்து அதன் மொழியை அவர் தீர்மானித்திருப்பார். அவற்றை காலவரிசைப்படுத்தும்போது, அவையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படவேண்டும். உடனுக்குடன் மொழிபெயர்த்து வழங்க அவரிடம் ஒரு குழுவே வேலை செய்தது. மூலமொழி தெரிந்தவரை அருகில் வைத்துக்கொண்டு, ஒவ்வொரு சொல்லாகப் படித்துப்படித்து ஒரு சிறிய பிழைகூட நேர்ந்துவிடாதபடி சரிபார்க்கவேண்டும். இப்படி கடுமையான உழைப்புக்குப் பிறகே, தொகைநூலின் ஒவ்வொரு பக்கமும் உருவானது.
காந்தியடிகளின் எழுத்துகள் வழியாக அவரை முழுமையாக அறிந்துகொண்டார் சுவாமிநாதன். அவர் மீது கொண்ட மதிப்பு நாளுக்குநாள் பெருகியது. அவருடைய இன்னொரு ஆர்வம் ரமணர். ரமணரும் காந்தியடிகளும் ஒரு பாதையின் இரு புறங்களிலும் நின்று அவரைச் செலுத்திய சக்திகள் என்றே சொல்லவேண்டும். சென்னையில் அவர் வசித்தவரைக்கும் ஒவ்வொரு வாரமும் ஞாயிறுதோறும் நண்பர்களை அழைத்து ரமணரைப்பற்றி உரையாடுவதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார். ரமண பக்தர்கள் சபை என்றே அச்சந்திப்புக்கு பெயர் சூட்டியிருந்தார். காந்தி தொகைநூல்களை உருவாக்கும் முயற்சியில் இறங்கியபிறகும் அப்பழக்கம் அவரைவிட்டு மறையவில்லை. நேதாஜி நகரிலிருந்த தன் அடுக்கக வீட்டுக்கு நண்பர்களை அழைத்து பேசுவது வழக்கமாகிவிட்டது. அந்நண்பர்களில் பெரும்பாலானோர் காந்தி தொகைநூல் வேலையில் அவருக்குத் துணையாகப் பணியாற்றியவர்கள். அதனால் ரமணருடன் காந்தியடிகளும் அந்நிகழ்ச்சியின் ஒரு பேசுபொருளாக மாறினார். பல நண்பர்கள் நன்கொடைகளின் உதவியோடு தில்லியிலேயே ஓர் இடத்தை வாங்கி ரமணர் மையத்தை உருவாக்கினார். ரமணரைப்பற்றி சுவாமிநாதன் எழுதிய நூலை நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்டது.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று முப்பதாண்டுகளுக்கும் மேலாக ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றியவர் சுவாமிநாதன். மனத்தில் நினைப்பதைத் தெளிவாகவும் சரியாகவும் கச்சிதமாகவும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது அவருடைய ஆங்கிலம். ஆறாண்டுகால பத்திரிகைப்பணி ஆங்கிலத்தை மெருகோடும் ஈர்ப்போடும் பயன்படுத்தும் கலையில் அவருக்குத் தேர்ச்சியை அளித்திருந்தது. மேலும் இளமைப்பருவத்திலிருந்தே தனக்குள் உறைந்திருந்த சட்டமொழியறிவு வழியாக எதையும் குழப்பமில்லாத வகையில் நுட்பமாக வெளிப்படுத்தும் சொற்சிக்கனத்தையும் அவர் பெற்றிருந்தார். ஐம்பதாயிரம் பக்க அளவுக்கு நீண்ட தொகைநூல்களை உருவாக்கும் பணிக்குத் தேவையான மொழியாற்றல், நுட்பம், தெளிவு, கச்சிதம், அர்ப்பணிப்புணர்வு என அனைத்தும் தன் வாழ்க்கையனுபவங்கள் வழியாக கைவரப்பெற்றவராக இருந்தார் சுவாமிநாதன். அவர் இப்படி கனிந்து வரும் தருணத்துகாகவேஇன்னும் கொஞ்ச காலம் பொறுத்திரு. தக்க நேரத்தில் உன்னை அழைப்பேன்என்று இளமைக்காலத்தில் காந்தியடிகள் சொன்ன சொல் காத்திருந்ததுபோலும். காந்தியடிகளின் ஆங்கில வாக்கியங்களைப் படித்துப்படித்து சுவாமிநாதனுக்கு அவர் கையாளும் மொழிநடையைப்பற்றிய ஒரு புரிதல் கிடைத்துவிட்டது. அதனால் குஜராத், இந்தி ஆகிய மொழிகளில் எழுதப்பட்ட படைப்புகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு தன் பார்வைக்கு வரும்போது, அவற்றைச் சிறுகச்சிறுக செறிவூட்டி காந்தியடிகள் பயன்படுத்தும் ஆங்கிலநடையிலேயே அமைப்பதில் சுவாமிநாதன் தேர்ந்தவராக இருந்தார்.   சுவாமிநாதனின் இடையறாத உழைப்பில் உருவான முதல்நூலாக காந்தி தொகைநூல் வரிசையில் நான்காவது தொகுதி வெளிவந்தது.  இது 1904 முதல் 1905 வரையிலான கால இடைவெளியில் காந்தியடிகள் எழுதிய மற்றும் பேசிய ஆக்கங்களின் தொகைநூல்.
சுவாமிநாதன் தலைமையிலான தொகுப்புக்குழு ஒரு சுயேச்சையான குழு. சுவாமிநாதன் மீது மொரார்ஜி தேசாய்க்கு முழு அளவில் நம்பிக்கை இருந்தது. ஆயினும் இடையிலிருந்த அதிகாரிகள் ஒவ்வொருவரும் தொகுப்புக்குழுவின் மீது தனக்கும் அதிகாரம் இருப்பதாகக் காட்டிக்கொள்வதற்காகவே அடிக்கடி தொல்லை கொடுத்தனர். திட்டவேலைகள் எப்படி நடக்கிறது என்பதை சுவாமிநாதன் தம் அலுவலகத்துக்கு வந்து அடிக்கடி சொல்லவேண்டும் என அவர்கள் எதிர்பார்த்தார்கள். சந்திக்கவில்லை என்றால் தம் மதிப்பு குறைந்துவிட்டதாக நினைத்து எரிச்சல் அடைந்தார்கள். அவரைப்பற்றி அமைச்சரிடம் புகார் அளித்தார்கள். அமைச்சர் அந்தப் புகாருக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கவில்லை என்பதை உணர்ந்துகொண்ட, ஒரு ஆலோசனைக்கூட்டத்தில் சுவாமிநாதன் குழு மிகவும் நிதானமாக வேலை செய்கிறது என்று குரலெழுப்பினர். அப்போது தொகுப்பு வேலையில் நிதானமாக நடக்கவேண்டிய அவசியத்தை முன்வைத்து அவர் நீண்ட விளக்கமளித்தார்.
தொகுப்பு வேலை என்பது ஒரு எழுத்தாளரிடம் கையெழுத்துப் பிரதியை வாங்கி புத்தகமாக்குவதுபோன்றதல்ல. நாடெங்கிலிருந்தும் சேகரிக்கப்பட்ட தகவல்களை வகைமை சார்ந்து பிரிப்பதும் தொகுப்பதும் கடுமையான உழைப்பைக் கோருபவை. பிழையே இடம்பெறாதபடி ஒவ்வொரு கணமும் கவனமுடன் இருக்கவேண்டும். குஜராத் மொழியிலிருந்தும் இந்தி மொழியிலிருந்தும் கிடைத்தவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும்போதும் அதை பல நிலைகளில் ஒப்பிட்டுச் சரிபார்த்து செம்மைப்படுத்தும்போதும் மிகவும் கவனமுடன் இருக்கவேண்டும். வேகமாகச் செய்யவேண்டும் என்பதற்காக எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்துவிடமுடியாது. எதிர்காலத்தில் ஒரே ஒரு பிழையைக்கூட சுட்டிக்காட்ட இடமளித்துவிடக்கூடாது. வேகத்தைக் காரணம் காட்டி, எதிர்காலத்தில் காந்தியத்தில் ஆய்வு செய்ய முனைகிறவர்களுக்கும் வாசகர்களுக்கும் துல்லியமான தகவல்களை மட்டுமே கொடுக்கவேண்டும் என்பதில் சமரசம் செய்துகொள்ளமுடியாது.”
சுவாமிநாதனின் சொற்கள் அதிகாரிகளின் தலையீட்டை ஓரளவு தடுத்தன என்றே சொல்லவேண்டும். அதற்குப் பிறகு அதிகாரிகள் அவர் வழிக்கு வருவதில்லை. சுவாமிநாதனும் தன் குழுவினருடன் தொகுப்பு வேலையில் தடையின்றி மூழ்கிக் கிடந்தார். ஆண்டுக்கு மூன்று தொகுதிகள் என்கிற கணக்கில் அடுத்தடுத்து தொகைநூல்கள் வெளிவந்தபடியே இருந்தன. ஒவ்வொரு தொகுதியும் அவருடைய உழைப்புக்கும் அர்ப்பணிப்புணர்வுக்கும் சான்றாக விளங்கி அவருக்குப் பெருமை தேடித் தந்தது. 1969 ஆம் ஆண்டில் மொரார்ஜி தேசாய் அமைச்சர் பதவியிலிருந்து வெளியேறினாலும் காந்தி தொகைநூலாக்க ஆலோசனைக்குழுவின் தலைவராக பணியைத் தொடர்ந்தார். அதனால் சுவாமிநாதனுடைய பணியில் எவ்விதமான இடையூறும் ஏற்படவில்லை. அவருடைய தன்னலமற்ற சேவையைப் பாராட்டி 1972 ஆம் ஆண்டில் அரசு பத்மபூஷன் விருதளித்து கெளரவமளித்தது.
26.06.1975 அன்று இந்திராகாந்தி தலைமையிலான அரசு நாடெங்கும் நெருக்கடி நிலையை அறிவித்தது. எதிர்க்கட்சியைச் சேர்ந்த பல தலைவர்கள் நாடுமுழுதும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள். காந்தியடிகளின் தொகைநூல்கள் அச்சடிக்கப்பட்டு வந்த நவஜீவன் அச்சகத்தில் அரசுக்கு ஏற்பில்லாத ஒரு தனியார் பிரசுரத்தை அச்சடித்துக்கொடுத்த காரணத்துக்காக மூடப்பட்டது. இதனால் தொகைநூல் வேலை முடங்கியது. அப்போது வேறு வழியின்றி, தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் ஆலோசகர் ஒருவரின் துணையோடு இந்திரா காந்தியைச் சந்தித்து முறையிட்டார் சுவாமிநாதன். அதைத் தொடர்ந்து அச்சகம் மீண்டும் திறக்கப்பட்டது.
ஏற்கனவே சுவாமிநாதன் மீது மனவருத்தத்தில் இருந்த அதிகாரிகள், தமக்கு சாதகமாக இருந்த சூழலைப் பயன்படுத்திக்கொண்டு அவர்மீது மீண்டும் புகார் எழுப்பத் தொடங்கினார்கள். மொரார்ஜி தேசாய்க்கும் சுவாமிநாதனுக்கும் இடையிலான தொடர்பு, அவர் கைது செய்யப்பட்ட பிறகும் தொடர்வதாகவும் தொகைநூலாக்கத் தலைவராக இருந்துகொண்டே ஊதியமீட்டும் வகையில் தனியார் பிரசுரத்துக்காக புத்தகம் எழுதிக் கொடுப்பதாகவும் (நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனத்துக்காக சுவாமிநாதன் தனக்கு மிகவும் பிடித்த ரமணரைப்பற்றி ஒரு புத்தகம் எழுதியிருந்தார்) இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழை விட்டு விலகிவந்த பிறகும் அதன் குழுத்தலைவரான ராம்னாத் கோயங்காவுடன் மறைமுகமாக தொடர்பு வைத்திருப்பதாகவும் மேலிடத்துக்கு குறிப்புகளை அனுப்பினார்கள். காந்தியடிகள் தொகைநூலாக்கக்குழுவையே கலைத்துவிடலாம் அல்லது மூப்பின் அடிப்படையில் சுவாமிநாதனை தலைமைப்பொறுப்பிலிருந்து விலக்கிவிடலாம் என ஆலோசனை வழங்கினார்கள். அன்று அமைச்சராக இருந்த வி.சி.சுக்லாவுக்கு இரண்டையும் செய்துவிடலாம் என்ற எண்ணமிருந்தது. அவருடைய வழிகாட்டலின்படி உடனடியாக ஆலோசனைக்குழுவைக் கலைத்துவிடும் அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டது. நல்வாய்ப்பாக, ஏற்கனவே மூடப்பட்டிருந்த நவஜீவன் அச்சகத்தைத் திறப்பதற்காக இந்திராகாந்தியைச் சந்தித்துப் பேசிய சாரதா பிரசாத், இப்போது மீண்டும் இந்திரா காந்தியைச் சந்தித்து உண்மைச்செய்திகளை எடுத்துரைத்தார். அவற்றையெல்லாம் அவர் காதுகொடுத்துக் கேட்டுக்கொண்டாரே தவிர எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ரத்துசெய்ய நினைக்கவில்லை.
இதற்கிடையில் இருபத்தியொரு மாதங்கள் நீண்ட நெருக்கடிநிலை விலக்கிக்கொள்ளப்பட்டு தேர்தல் அறிவிக்கப்பட்டது. தேர்தலில் இந்திராகாந்தி தலைமையிலான காங்கிரஸ் தோல்வியுற்று பதவி விலக, மொரார்ஜி தேசாய் பிரதமராக பதவியேற்றார். ஒளிபரப்புத்துறை அமைச்சராக பதவியேற்ற எல்.கே.அத்வானி பழைய ஆணைகள் அனைத்தையும் ரத்துசெய்து தொகைநூலாக்கக் குழு மீண்டும் தன் பணியைத் தொடர அனுமதித்தார். ஆனால், அதிகாரிகளின் சந்தர்ப்பவாத அரசியல் ஆட்டங்களால் சலிப்படைந்த சுவாமிநாதன் பொறுப்பிலிருந்து விலகிவிட முடிவெடுத்தார். ஒருநாள் மொரார்ஜி தேசாயைச் சந்திக்கக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு அவரிடம் தன் முடிவை எடுத்துரைத்தார். “உங்களிடம் ஒப்படைத்த பொறுப்பை ஏன் தட்டிக்கழிக்க விரும்புகிறீர்கள்? நீங்கள்தான் இதைச் செய்ய பொருத்தமான ஆள் என நான் நினைத்தேனேஎன்று வேகமாகக் கேட்டார் தேசாய். ஏதாவது பொருத்தமான ஒரு பதிலைச் சொல்லவேண்டும் என்பதற்காக சுவாமிநாதன் தன் முதுமையைக் காரணமாகச் சொன்னார். உடனே தேசாய்உங்களைவிட ஒரு வயது பெரியவன் நான். இந்த வயதில் நான் பணியாற்றும்போது நீங்கள் முடியாது என்று சொல்லலாமா?” என்று உரிமையுடன் கேட்டார். வேறு வழியின்றி சுவாமிநாதன் திரும்பிவந்து பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
சுவாமிநாதனின் தலைமையில் தொண்ணூற்றியெட்டாவது தொகைநூல் 1984 ஆம் ஆண்டில் வெளிவந்தது. காந்தியடிகள் சுடப்படுவதற்கு முதல்நாள் வரையில் அவர் எழுதிய, உரையாடிய ஆக்கங்கள் அனைத்தும் முறையாக ஆவணப்படுத்தப்பட்டன. அந்தத் தொகுதியை வெளியிட்ட அன்றைய தலைமையமைச்சர் இந்திராகாந்தி சுவாமிநாதனைப் புகழ்ந்து, அர்ப்பணிப்புணர்வு மிக்க அவர் உழைப்புக்கு தேசத்தின் சார்பாக நன்றி தெரிவிப்பதாக அறிவித்தார். அப்போது தொகைநூல் வேலை முடிந்தாலும் அட்டவணைவேலை மட்டுமே எஞ்சியிருந்தது. இருபத்துநான்கு ஆண்டு கால நீண்ட உழைப்புக்குப் பிறகு 1985ஆம் ஆண்டில் அவர் சென்னைக்குத் திரும்பினார். 1987இல் அவருக்கு காந்தி கிராம பல்கலைக்கழகம் முனைவர் பட்டமளித்து கெளரவித்தது.
சென்னைக்குத் திரும்பினாலும் செம்மைப்படுத்தும் வேலையில் தொகைநூல் குழுவினருக்கு தொடர்ந்து உதவிகள் செய்தபடியே இருந்தார் சுவாமிநாதன். தனக்கு வரும் மெய்ப்புகளை உடனுக்குடன் பார்த்துத் திருத்தி அனுப்ப அவர் தவறியதே இல்லை. தொகைநூல் குழுவுக்கு எழுதிய ஒரு கடிதத்தில் இத்தனை ஆண்டுகள் காந்தியோடு இணைந்திருந்த அனுபவத்துக்காக கடவுளுக்கு நன்றி தெரிவித்தார். அக்கடிதத்தில் காந்தியடிகளை ஹனுமான் என்றும் அவர் காலமெல்லாம் தன் தோள்மீது ஏறி அமர்ந்துகொண்டு ஒவ்வொரு கணமும் தட்டிக்கொடுத்து பணியாற்றும்படி தூண்டிக்கொண்டே இருந்தாரென்றும் வேடிக்கையாகக் குறிப்பிட்டிருந்தார்.
காந்தியின் ஆக்கங்களை நூறு தொகுதிகளாக வகைப்படுத்தித் தொகுத்தவர் சுவாமிநாதன். ஏறத்தாழ 50000 பக்கங்கள். ஆனால் ஒரு தொகுப்பாசிரியராக எந்தத் தொகுதியிலும் அவர் தன் பெயரைக் குறிப்பிட்டதே இல்லை. தன் பெயரை ஒருபோதும் முன்வைத்துக்கொள்ள விரும்பாத தொண்டர் அவர். செயலே முக்கியம், செய்பவனல்ல என்பது அவர் கொள்கை. அவர் மறைவுக்குப் பிறகு வெளிவந்த நூறாவது தொகுதியில் மட்டும் இறுதிப்பகுதியில் தொகுப்புக்குழுவில் பணியாற்றியவர்களின் பட்டியலில் பத்தோடு பதினொன்றாக அவர் பெயர் சேர்க்கப்பட்டிருந்தது. நூறாவது தொகுதி வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட தலைமையமைச்சர் நரசிம்மராவோ, அமைச்சர்களோ, அதிகாரிகளோ யாருமே தம் பேச்சில் சுவாமிநாதனின் பெயரைக் குறிப்பிடவே இல்லை. ஆனால் மக்கள் நெஞ்சில் பதிந்துவிட்ட காந்தியத்தொண்டர்கள் வரிசையில் சுவாமிநாதனின் பெயர் எப்போதும் இருக்கும்.

(அம்ருதாநவம்பர் 2019 இதழில் வெளிவந்த கட்டுரை)