Home

Friday 19 January 2018

கதவு திறந்தே இருக்கிறது - வெள்ளியின் மீது படிந்த தூசு


எங்கள் தொடக்கப்பள்ளியில் தமிழாசிரியராக இருந்தவர் கண்ணன். புத்தரின் வாழ்க்கையை ஒரு கதையைப்போல எங்களுக்கு அவரே முதன்முதலாகச் சொல்லிக் கொடுத்தவர். புத்தரை மட்டுமல்ல, ஏசு, காந்தி, வள்ளலார் போன்ற ஆளுமைகளைப்பற்றியெல்லாம் சின்னச்சின்ன கதைகள் வழியாக எங்களுக்கு அவரே அறிமுகப்படுத்தினார். அறியாத வயதில் நாங்கள் கேட்ட பல கேள்விகளுக்கெல்லாம் விரிவான வகையில் ஏராளமான எடுத்துக்காட்டுகளோடு பதிலைச் சொல்லிப் புரிய வைத்தவர். கொஞ்சம் கூட கோபத்தைக் காட்டாத குரல் அவருக்கிருந்தது.

புத்தருடைய போதனைகளின் மையமானஆசையே துன்பத்துக்குக் காரணம்என்னும் கருத்தை எங்கள் நெஞ்சில் பதியும்படி செய்தவர் அவரே. அந்த வகுப்பு முடியும் தருணத்தில் என் நண்பன் முத்துகிருஷ்ணன் எழுந்து ஒரு சந்தேகம் கேட்டான். “ஆசையே படக்கூடாதுன்னு சொன்னா, நமக்கெல்லாம் நல்ல சாப்பாடு, நல்ல துணி மணி எல்லாம் எப்படி கிடைக்கும் சார்?” என்று உண்மையான ஆதங்கத்தோடு கேட்டான். அவன் கேள்வியைக் கேட்டதும் தமிழாசிரியர் அவனை நெருங்கி வந்து அவனை தன் கால்களோடு சேர்த்தணைத்தபடி புன்னகைத்தார். “சுண்டைக்காய்மாதிரி இருந்துட்டு என்ன மாதிரியான கேள்விய கேட்டுட்டான் பாருஎன்று குரல் தழுதழுக்க சில நொடிகள் அவன் தலைமுடியைக் கோதி வருடிவிட்டார். “புத்தர் உன் நெஞ்சில உக்காந்துட்டாருடாஎன்றபடி அவன் கன்னத்தைத் தட்டினார். “இனிமேல நீயே போன்னு சொன்னாலும் அவர் போகமாட்டாருஎன்று மறுபடியும் புன்னகைத்தார். பிறகு வகுப்பில் இருந்த அனைவரையும் பார்த்துஇந்த பதில் முத்துகிருஷ்ணனுக்கு மட்டுமில்ல, உங்க எல்லோருக்குமான பதில்என்று சொன்னபிறகு தொடர்ந்துபுத்தர் ஆசைன்னு குறிப்பிடறது நம் தேவைகளைத் தேடி அடையக்கூடிய விருப்பத்தையோ வேகத்தையோ கிடையாது. அந்த மாதிரி நேர் அர்த்தத்துல நாம் அதைப் புரிஞ்சிக்க கூடாது. நமது விருப்பம் பேராசையா உருமாறி நம்மை ஆட்டிப்படைக்கிற உணர்ச்சியைத்தான் ஆசைங்கற சொல்லால் சொல்றாருஎன்று விளக்கினார். அதைத் தொடர்ந்து முத்துகிருஷ்ணன்அதை எப்படி சார் நாம கட்டுப்படுத்த முடியும்? அதுக்கு வழி இருக்குதா சார்?” என்று கேட்டான். எங்கள் ஆசிரியர் மீண்டும் புன்னகைத்தார். “முடியும் முத்துகிருஷ்ணா, முடியும். புத்தர் அதுக்காக எட்டு வழிகள் உண்டுன்னு சொல்றார். நல்ல எண்ணம், நல்ல நம்பிக்கை, நல்ல வாய்மை, நல்ல முயற்சி, நல்ல செயல், நல்ல வாழ்க்கை, நல்ல நடத்தை, நல்ல தியானம் இதுதான் அந்த எட்டு வழிகள்என்றார்.  அன்று அவர் சொன்ன சொல் இன்றளவும் ஒரு கல்வெட்டு போல என் நெஞ்சில் பதிந்திருக்கிறது.
அதற்குப் பிறகு பள்ளி நூலகம், கல்லூரி நூலகம், கிராம நூலகம் என எல்லா இடங்களிலும் புத்தரைப்பற்றிய புத்தகங்களைத் தேடிப் படிக்கத் தொடங்கினேன். பெரும்பாலானவை அவருடைய வாழ்க்கை வரலாறுகள், தத்துவ விளக்கங்கள், தர்க்கங்களின் அடிப்படையில் நிகழ்த்தப்பட்ட ஆய்வுகளின் தொகுப்புகள். அந்த வரிசையில் புத்தாயிரத்தாண்டு பிறந்த நேரத்தில் பப்ளிகேஷன் டிவிஷன் வழியாக புத்தரின் புனித வாக்கு என்னும் தலைப்பில் வெளிவந்த புத்தகத்தைப் படித்தேன். அதன் மூல ஆசிரியர் பால் காரஸ். தமிழில் மொழிபெயர்த்தவர் மு.கி.சந்தானம். இவர் இந்தியக் களவிளம்பரத் துறையில் மறைந்த எழுத்தாளர் சு.சமுத்திரத்தின் கீழ் பணியாற்றிய அதிகாரி. சமுத்திரம் போலவே இயக்குநர் பதவி வரைக்கும் உயர்ந்து ஓய்வு பெற்றவர்.
பால் காரஸ் தத்துவப் பிரிவில் முக்கியமான ஆய்வாளர். ஜெர்மனியில் பிறந்தாலும் அமெரிக்காவில் குடியேறி தன் ஆய்வுகளை நிகழ்த்தியவர். உலக மதங்களின் தத்துவ ஒப்பீட்டியல் துறையில் இயங்கியவர். கடவுளை நேசிக்கும் நாத்திகவாதி என தன்னை அறிவித்துக்கொண்டவர். ஒருவகையில் மதநல்லிணக்க முயற்சிகளின் முன்னோடி என்றும் அவரைச் சொல்லலாம். கிழக்குலக மதங்களை மேற்குலகத்துக்கு அறிமுகப்படுத்தும் வகையில் அவருடைய ஆய்வுகள் அமைந்திருந்தன. அந்த வகையிலேயே அவர் இடைவிடாமல் புத்த மதத்தை ஆய்வு செய்வதில் மூழ்கியிருந்தார்.
புத்தரின் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாக முதல் நூறு பக்கங்களில் முன்வைத்திருக்கும் காரஸ் அடுத்த இருநூறு பக்கங்களில் புத்தரின் கொள்கைகளைப்பற்றிய விளக்கங்களை விரிவாக அளித்திருக்கிறார். அவற்றை எளிமையாகப் புரிந்துகொள்ளும் வகையில் தெளிவாக மொழிபெயர்த்திருக்கிறார் சந்தானம். புத்தரின் கொள்கைகள் என்னும் பகுதியில் நிறைந்திருக்கும் விளக்கங்கள் இந்த நூலின் மிகமுக்கியமான பகுதியாகும். இவை அனைத்தும் கேள்வி பதில் வடிவில் அமைந்திருப்பதால் ஆர்வத்தோடு படிக்கமுடிகிறது.
தீமைக்கு நன்மை செய்தல் என்னும் பேரன்புக் கோட்பாட்டைப் புத்தர் பின்பற்றுகிறார் என்பதையும் மக்களிடையே பரப்புகிறார் என்பதையும்  அறிந்த ஒருவர் ஒருமுறை புத்தரை நெருங்கி அவரைப் பழித்துரைத்தார். அந்தத் தவறுக்கும் இரக்கம் காட்டிய புத்தர் அமைதியாக இருந்தார். பிறகு மெதுவாக அவனிடம்மகனே, ஒருவருக்கு அளிக்கப்பட்ட பரிசினை அவர் வாங்க மறுத்தால் இறுதியில் யாருக்கு அது போய்ச் சேரும்?” என்று கேட்டார். அதற்கு அவர்அவருக்குப் பரிசளித்தவருக்கே அது திரும்பிப் போய்ச் சேரும்என்று பதில் சொன்னார். பிறகு புத்தர் தொடர்ந்துநீ என்னை வெறுத்துத் தூற்றினாய்நான் உனது இழிசொல்லை ஏற்றுக்கொள்ளாமல் அதை நீயே வைத்துக்கொள்ளும்படி வேண்டுகிறேன். எதிரொலியானது எப்படி அதன் ஒலிக்குச் சொந்தமோ, நிழல் எப்படி அதன் பொருளுக்குச் சொந்தமோ , அதேபோல தீமையைச் செய்தவருக்கு இத்துயரம் போய்ச் சேரும்என்றார். மேலும் தொடர்ந்துஒழுக்க சீலரை கொடியவன் ஒருவன் பழிப்பது வானத்தைப் பார்த்து ஒருவன் எச்சிலைத் துப்புவது போன்றதாகும். எச்சில் ஒருபோதும் ஆகாயத்தைக் களங்கப்படுத்துவதில்லை. மாறாக, துப்பியவனையே அது களங்கப்படுத்தும்என்றார்.
ஒரு தருணத்தில் புத்தர் தன் உரையில்மனிதர்கள் தம் செய்கைகளினால் பத்துவிதமான தீமைகளை உருவாக்குகிறார்கள். அவற்றிலிருந்து விடுபட்டு நிற்கும் கணத்தில் அவர்கள் தூய்மையடைவார்கள்என்று சொல்கிறார். உடலால் விளைவிக்கும் தீமைகள் மூன்று. நாவால் விளைவிக்கும் தீமைகள் நான்கு. மனத்தால் நிகழும் தீமைகள் மூன்று. கொலை, திருட்டு, பிறன்மனை கவர்தல் மூன்றும் உடலால் நிகழ்கின்றன. பொய், அவதூறு , பழித்தல், வீண்பேச்சு ஆகியவை நான்கும் நாவால் நிகழ்கின்றன, பொறாமை, வெறுப்பு, தவறு மூன்றும் மனத்தால் நிகழ்கின்றன. இப்படிப் பட்டியலிடும் புத்தர் அவற்றைத் தவிர்க்கும் வழிகளையும் முன்வைக்கிறார். கொலைக்கு மாற்றாகக் கருணையையும் திருட்டுக்குப் பதிலாக உழைப்பையும் பிற்ன்மனை கவர்தலுக்கு மாற்றாக ஒழுக்கத்தையும் கடைபிடிக்குமாறு சொல்கிறார். மேலும் பொய்க்குப் பதிலாக உண்மையையும் அவதூறுக்குப் பதிலாக ஐயம் திரிபற ஆழ்ந்தறிந்து பேசும் பேசும் நாட்டத்தையும் பழிகூறிப் பேசுவதற்கு மாறாக கண்ணியமாகப் பேசுவதையும் வீண்பேச்சுக்குப் பதிலாக மெய்ம்மையை உணர்ந்து பேசுவதையும் பொறாமைக்குப் பதிலாக நட்பையும் வெறுப்புக்குப் பதிலாக அன்பையும் தவறுகளுக்குப் பதிலாக உண்மையை நாடிவரும் நாட்டத்தையும் புத்தர் பரிந்துரைக்கிறார்.
புத்தர் இந்த மண்ணில் நிறைந்துள்ள அனைத்துத் தரப்பினரோடும் உரையாடிக்கொண்டே இருந்தவர். அரசசபைகள், பிராமணர் சபைகள், குடும்பஸ்தர்களின் சபைகள், துறவிகளின் சபைகள் என எல்லா வகையான சபையினரோடும் அவர் எவ்விதமான மாறுபாடுமின்றி கலந்துரையாடினார். அது எப்படி சாத்தியமாகிறது என ஒரு சீடர் ஒருமுறை அவரிடம் கேள்வி கேட்கிறார். அதற்கு புத்தர் தன் கோட்பாடு கடலைப்போன்றதெனச் சொல்லிவிட்டு, அதற்குரிய விளக்கமும் அளிக்கிறார். “கடலைப்போலவே என் கோட்பாடும் ஆழமானது. எல்லா மாற்றங்களுக்கும் ஊடே தன் தனித்தன்மையைக் காப்பாற்றிக்கொள்ளும் ஆற்றல் நிறைந்தது. எப்படி ஆறுகள் கடலோடு கலந்து தன் பெயரை இழந்து கடலென பெயர் பெறுகிறதோ, அப்படியே அனைத்துச் சாதியினரும் சங்கத்தினருடன் இணைந்த பிறகு சகோதரராகி சாக்கிய முனிவரின் குழந்தைகளென கருதப்படுவார்கள். அனைத்து நீரோடைகளும் மழை நீரும் கடலில்  கலந்தாலும் அக்கடலானது கரையை மீறுவதோ வற்றிவிடுவதோ  கிடையாது. இதுபோல தர்மக்கொள்கையை இலட்சக்கணக்கான மக்கள் பின்பற்றினாலும் அக்கொள்கையானது கூடுவதோ குறைவதோ கிடையாது. கடலுக்கு ஒரே சுவைதான் உண்டு. அது உப்புச்சுவை. அதேபோல என் கோட்பாட்டிலும் ஒரே வாசம்தான் உண்டு. அது இரட்சிப்புமணம்
அழிவு குறித்தும் வெற்றி குறித்தும் புத்தரின் பார்வையை முன்வைப்பதாக ஒரு பகுதி உள்ளது. ஒருமுறை சிம்மர் என்னும் போர்வீரர் புத்தரைச் சந்தித்து, “நான் ஒரு போர்வீரன். அரசரால் நியமிக்கப்பட்ட நான் அவருடைய சட்டத்தை ஏற்று போருக்குச் செல்லவேண்டும். முடிவற்ற அன்பையும் துயருற்றோர் சார்பாகக் கருணையையும் உபதேசிக்கும் நீங்கள் குற்றவாளிகளைத் தண்டிப்பதற்கு அனுமதிப்பீர்களா? நமது வீடு, மக்கள், சொத்துகள் ஆகியவற்றைப் பாதுகாப்பதற்கு போர் செய்வது தவறாகுமா? எனது உடமைகளை வன்முறை மூலம் ஒருவர் எடுத்துக்கொள்வதாக அச்சுறுத்தும்போது அந்தத் தீயவரை எதிர்க்கவேண்டுமா அல்லது அவருக்கு அடிபணிய வேண்டுமா? நேர்மையின் நிமித்தம் மேற்கொள்ளப்படும் போரை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?” என்று கேட்டார்.
அதற்குப் புத்தர்ஒரு மனிதன் தனது சகமனிதனைக் கொல்லும் போர்முறை விரும்பத்தகாத ஒன்று என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் அமைதியைப் பாதுகாக்கும் அனைத்து வழிகளும் தீர்ந்துபோன பின்னர் அறத்தை நிலைநாட்ட போருக்குச் செல்பவரை குற்றமிழைத்தவராகக் கருதமுடியாது. ஒரு போருக்கு யார் அடிப்படைக் காரணமோ அவரே கண்டனத்துக்குரியவர்என்று பதில் சொல்கிறார். அவர் மேலும் தொடர்ந்து தண்டனைக்குரியவர் தண்டிக்கப்படவேண்டும், உதவி செய்யப்பட வேண்டியவர் உதவி செய்யப்படவேண்டும். உயிருள்ள எவருக்கும் தீங்கு இழைக்காமல் அவரிடம் பிரியமும் அன்பும் காட்டவேண்டும். இந்தக் கட்டளைகளில் முரண்பாடு எதுவுமில்லை. எவனொருவன் தண்டனைக்குரியவனோ அவன் நீதிபதியின் வெறுப்பின் மூலம் துன்பமடைவதில்லை. மாறாக, தனது தீச்செயலாலேயே அவன் துன்பத்தை அனுபவிக்கிறான். குற்றவாளி தன் செயலால் தனக்குத்தானே ஏற்படுத்திக்கொண்ட துன்பத்தையே ஒரு நீதிபதி தண்டனையாக அளிக்கிறார்என்று கூடுதலாக விளக்குகிறார்.
இதைத் தொடர்ந்து எது வெற்றி என்னும் கேள்விக்கு புத்தர் அளிக்கும் விடை முக்கியமானது. “வெற்றி பெறுபவர்கள் உலகாயுதமான பொருட்களின் நிலையில்லாத தன்மையை நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும். அவர் வென்ற கணத்தில், தன் உள்ளத்தில் உள்ள வெறுப்பை நீக்கிவிட்டு விழுந்து கிடக்கும் எதிரியைக் கைப்பிடித்துத் தூக்கி வருக, நாம் அமைதியாகச் சேர்ந்து சகோதரர்களாக வாழ்வோம் என்று சொன்னால் அவர் பெற்ற வெற்றியானது நிலையற்ற வெற்றியாக இல்லாமல் நிரந்தரமான வெற்றியாக இருக்கும். தன்னை வெற்றி கொள்பவர்களே அனைத்திலும் பெரிய வெற்றியைப் பெற்ற வீரராகக் கருதப்படுவார்என்று உரைக்கிறார் புத்தர்.
புத்தரின் உபதேச வாக்கியங்கள் பல இடங்களில் கவித்துவம் நிரம்பியவையாக உள்ளன. ’ஒரு மனிதன் தீய நினைவுடன் பேசினாலோ செயல்பட்டாலோ வண்டியை இழுத்துச் செல்லும் எருதின் குளம்பைப் பின்தொடரும் சக்கரங்களைப்போல துயரம் பின்தொடரும்’  என்னும் வாக்கியத்தில் உள்ள குளம்பு-சக்கரம் உவமை படித்த கணமே மனத்தில் பதிந்துவிடுகிறது. ’யாரும் தீமையை எளிய விஷயமாக நினைத்துவிடக் கூடாது. அது அவ்வளவு எளிதாக என்னை நெருங்காது என்று யாரும் நினைத்துவிடக்கூடாது. எப்படி தண்ணீரை குடத்தில் ஒவ்வொருசொட்டு நீர் மூலம் நிரப்பமுடியுமோ அதேபோல சிறிது சிறிதாக ஒருவர் உள்ளத்தில் சேர்ப்பதன் மூலம் ஒருவனின் மனம் இறுதியில் தீமையின் இருப்பிடமாக மாறுவதற்கான சாத்தியம் உள்ளதுஎன்பது இன்னொரு வாக்கியம். இந்த வாக்கியத்தைப் படித்த பிறகு சொட்டுச்சொட்டாக ஒழுகும் நீர்த்துளியைப் பார்க்க நேரும் ஒவ்வொரு கணத்திலும் இவ்வாக்கியம் நினைவில் படர்வதைத் தவிர்க்கமுடியாது. ’எப்படி கொல்லன் வெள்ளிமேல் படிந்த தூசை கொஞ்சம்கொஞ்சமாக நீக்குகிறானோ, அதேபோல மாந்தர்கள் தம் மனத்தில் படிந்துவிடும் தான் என்பதன் மாசை  அவ்வப்போது சிறிதுசிறிதாகக் களைந்தவண்ணம் இருக்கவேண்டும்என்னும் வாக்கியத்தில் உள்ள வெள்ளிமேல் படிந்த தூசு என்பது கவிதைகளில் படிக்கக் கிடைக்கும் அழகானதொரு படிமமாகவே  காட்சி தருகிறது.
புத்தரின் காலத்தில் மிகவும் பொதுப்படையாகப் புரிந்துகொள்ளப்பட்டதான்என்னும்  கருத்தாக்கத்தை புத்தர் நிராகரிக்கிறார். ஆனால் அதே சமயத்தில் மனிதனின் குணாதிசயம், ஆன்மிகக்கூறு ஆளுமையின் முக்கியத்துவம், ஒரே வரியில் இவற்றையெல்லாம் ஒன்றிணைத்து அழைக்கப்படும் ஆத்மா என்னும் கருத்தாக்கம் என எதையும் மறுக்கவில்லை. நினைப்பின் மொத்தக் கூறுகளாலான மனம் மட்டுமே இருக்கிறது என்கிறார். ஆகவே ஆன்மாவையும் மனத்தையும் ஒன்றாகக் கருதுவதால்தான் குழப்பம் ஏற்படுகிறது. ஆன்மா, மனம் அல்லது தான் என்று அறியப்படுகிற அனைத்துமே உலகப்பற்று என்னும் வேரிலிருந்தே கிளம்புகின்றன. வாழ்வின் பொருளே தனதுதான்என்பதில்தான் அடங்கியிருப்பதாக நம்பவைக்கிறது. இந்ததான்என்னும் நினைவை அது வளர்ந்து கனியும் முன்பாகவே முழுதும் துண்டித்துவிட்டால்தான் அங்கு உண்மை புலப்படும் என்றும் அதுவே மெய்ம்மை வசிக்கும்நிர்வாணம்என்றும் புத்தர் குறிப்பிடுகிறார்ஆன்மா என்பதை மறுக்கும் புத்தர், மனிதர்களின் செயல்வினையானகர்மா’  இருப்பதை ஒத்துக்கொள்வதுடன் இந்தக் கர்மாவே ஒருவருடைய மரணத்துக்குப் பிறகும் பின்தொடர்கிறது என்று சொல்கிறார் புத்தர். இவ்வாறு சொல்வதன் மூலம் மரணமிலாப் பெருவாழ்வுக்கான கதவைத் திறந்துவிடுகிறார்
புத்தர் அலைந்து திரிந்தபோது கிட்டிய அனுபவங்கள் சின்னச்சின்ன கதைகளாகத் தொகுக்கப்பட்டன.  இந்த நூலின் இறுதிப்பகுதியில் சில கதைகள் இடம்பெற்றிருக்கின்றன. அவை கதைகள் மட்டுமல்ல, வாழ்வியல் சார்ந்த சில கேள்விகளுக்கான விடைகளாகவும் உள்ளன. எடுத்துக்காட்டாக, யார் தீண்டத்தகாதவர் என்னும் கேள்விக்கு விடையாக ஒரு கதை அமைந்துள்ளது. ஒருமுறை புத்தர் ஜேதவன  விகாரத்தில் உள்ள சிராவஸ்தியில் தங்கியிருக்கிறார். அப்போது பிச்சைப் பாத்திரத்துடன் ஒரு பிராமணக்குருக்கள் வீட்டை நெருங்கிச் செல்கிறார். அங்கே ஒரு வேள்வி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. குருக்கள் அவரைப் பார்த்து நெருங்கி வரவேண்டாம் என்று அவரைத் தடுத்து நிறுத்துகிறார். அவரைத் தீண்டத்தகாதவர் என்று குறிப்பிட்டு வசைபாடுகிறார். புத்தர் அமைதியான குரலில் யார் தீண்டத்தகாதவர் என்பதை அவருக்கு எடுத்துரைக்கிறார். தீண்டாமையை ஒருபோதும் பிறப்பு தீர்மானிப்பதில்லை. ஒருவருடைய செயல்களே தீர்மானிக்கின்றன என்பதே அவர் நிலைபாடு. எவரொருவரிடம் சினமும் வெறுப்பும் இருக்கிறதோ, எவரொருவர் கெட்ட நினைப்புடனும் பாசாங்குத்தன்மையோடும் இருக்கிறாரோ, எவரொருவர் குற்றங்களில் தானாகவே விரும்பி ஈடுபடுகிறாரோ , எவரொருவர் மற்றவர்களை ஏமாற்றுகிறாரோ, எவரொருவரிடம் தீய ஆசைகளும் பொறாமையும் கெட்ட தன்மையும் தவறிழைப்பதற்குக் கூசாமையும் இருக்கிறதோ, அவர்களே தீண்டத்தகாதவர்கள் என்று சொல்கிறார் புத்தர்.
கொடுங்கோலனான அரசனின் மனம் மாறியதைப்பற்றிய ஒரு கதையும் சுவாரசியமானது. மக்களை வதைக்கும் மாபெரும் கொடுங்கோலனாக இருந்தான் ஒரு அரசன். மக்கள் அவனை வெறுத்துவந்தனர். ஆனால் அந்த அரசனுக்கு மட்டும் தான் ஒரு கொடுங்கோலன் என்பது தெரியவில்லை. அதுதான் விசித்திரம். ஒருநாள் தனது நாட்டுக்குள் ததாகதர் வந்திருக்கும் செய்தியைக் கேட்டு அவரைச் சந்திக்கச் செல்கிறான் அவன். ததாகரரைப் பணிந்து தனக்கு நன்மையுண்டாகும்படி உபதேசிக்குமாறு கேட்டுக்கொள்கிறான். அத்தருணத்தை சரியாகப் பயன்படுத்தி அவன் மனத்தைப் பண்படுத்த நினைத்த ததாகதர் அவனுக்கு ஒரு கதையைச் சொல்கிறார்.
ஒருமுறை தேவ உலகத்திலிருந்து இந்திரன் ஒரு வேடனின் உருவத்தில் உலகைக் காண வருகிறான். தன்னுடன் இன்னொரு அரசனை ஒரு நாயின் உருவத்தில் அழைத்து வருகிறான். வேடனும் நாயும் ஒரு கொடுங்கோலன் ஆட்சி செய்யும் நாட்டை அடைந்து அரண்மனைக்குச் செல்கிறார்கள். நாய் எழுப்பிய ஊளைக்கூப்பாட்டில் அந்த அரண்மனையின் அடித்தளமே ஆட்டம் காண்கிறது. அதன் ஊளைக்குக் காரணம் என்ன என அறிந்து வருமாறு ஆளை அனுப்புகிறான் அரசன். நாய்க்குப் பசிக்கிறது என்று சொல்கிறான் வேடன். அரசன் அந்த நாய்க்கு உணவளிக்க ஆணையிடுகிறான். ஒரு தட்டு நிறைய உணவை நிரப்பி அந்த நாய்க்கு வழங்குகிறார்கள். அதை உண்ட பிறகு மீண்டும் குரைக்கிறது நாய். அதன் பசி அடங்கவில்லை. பிறகு அரண்மனையில் சமைக்கப்பட்ட அனைத்து உணவுகளையும் அந்த நாய்க்கு வழங்குகிறார்கள். அப்போதும் அதன் பசி அடங்கவில்லை. மேலும் மேலும் ஊளையிடுகிறது நாய். கொடுங்கோல் மன்னன் கோபத்துடன் இந்த நீச நாய்க்கு எதைப் போட்டால் அதன் பசி தீரும்?” என்று கேட்கிறான். ”எதிரிகளின் சதையைப் போட்டால் மட்டுமே இதன் பசி அடங்கும்என்று சொல்கிறான் வேடன். ”இம்மிருகத்தின் எதிரிகள் யார்?” என்று கேட்கிறான் மன்னன்.  ”அநீதியான முறையில் ஆட்சி செய்து ஏழைகளைக் கொடுமைப்படுத்துபவர்களே இம்மிருகத்தின் எதிரிகள்என்கிறான் வேடன். மேலும் தொடர்ந்துஉனது நாட்டில் பசித்த மக்கள் இருக்கும் வரை இந்த நாய் ஊளையிட்டபடியேதான் இருக்கும்என்கிறான். கதையைக் கேட்டு முகம் வெளுத்துப் போன மன்னன் மனம் மாறுகிறான். ”நீ எப்போதெல்லாம் நாய் குரைப்பதைக் கேட்கிறாயோ அப்போதெல்லாம் இந்த அறிவுரையை நினைவில் கொள்என்று சொல்லிவிட்டுச் செல்கிறான் வேடன்.

புத்தரின் வாழ்க்கையைப்பற்றியும் புத்தமதத்தின் சாரத்தைப்பற்றியும் அறிந்துகொள்ள விழைபவர்களுக்கு பால் காரஸின் அறிமுக நூல் ஓர் அருமையான கையேடு.