Home

Sunday, 4 February 2024

ஒரே ஒரு சிறுகதை

  

புதுக்கோட்டை ஞானாலயா நூலகத்தைப்பற்றி அம்ஷன்குமார் ஓர் ஆவணப்படத்தை எடுத்து முடித்திருப்பதாகவும் அந்தப் படம் புதுக்கோட்டையில் ஒரு திரையரங்கத்தில் வெளியிட இருப்பதாகவும் தினமணி இதழில் ஒரு செய்தியைப் படித்தேன். ‘இந்த வாரம் கலாரசிகன்’ என்னும் பகுதியில் தினமணியின் ஆசிரியரே அக்குறிப்பை எழுதியிருந்தார். ஒருநாள் விட்டல்ராவுடன் உரையாடும்போது அந்தச் செய்தியைப் பகிர்ந்துகொண்டேன். அம்ஷன்குமார் எடுத்திருக்கும் பிற ஆவணப்படங்களைப்பற்றியதாகவும் அந்த உரையாடல் தொடர்ந்தது.

ஆவணப்படச் செய்தியைத் தொடர்ந்து சாகித்திய அகாதெமி 2022இல் வெளியிட்ட ஒரு சிறுகதைத்தொகுதியைப்பற்றியும் அதே பகுதியில் தினமணி ஆசிரியர் குறிப்பிட்டிருந்தார். தமிழ்ப்பண்பாட்டின் அடையாளங்களை முன்வைத்திருக்கும் 34 சிறுகதைகள் அத்தொகுதியில் அடங்கியிருக்கின்றன. புதுமைப்பித்தன் தொடங்கி வண்ணதாசன் வரைக்கும் என பல்வேறு தலைமுறையைச் சேர்ந்த எழுத்தாளர்கள் அப்பட்டியலில் இருந்தார்கள். எழுத்தாளரும் பேராசிரியருமான பாரதிபாலன் அந்தத் தொகுப்பை உருவாக்கியிருந்தார். அதைப்பற்றியும் பேச்சோடு பேச்சாக விட்டல்ராவிடம் தெரிவித்தேன்.

அதைத் தொடர்ந்து தமிழ்ச்சூழலில் வெவ்வேறு காலகட்டத்தில் வெளிவந்த் பல விதமான தொகைநூல்களை முன்வைத்து சிறிது நேரம் பேச்சு வளர்ந்தது. தஞ்சைச் சிறுகதைகள், சென்னைச் சிறுகதைகள், நெல்லைச் சிறுகதைகள் என வட்டாரம் சார்ந்து வெளிவந்த தொகுதிகளைப்பற்றியதாகவும் பேச்சு நீண்டது. அப்போது ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கு முன்பாக தான் தொகுத்த ‘இந்த நூற்றாண்டுச் சிறுகதைகள்’ தொகுதியைப்பற்றி பேசத் தொடங்கினார் விட்டல்ராவ்.

“தொகுப்பு முயற்சியில் ஈடுபடும் ஆர்வம் எப்படிப் பிறந்தது?” என்று நான் கேட்டேன்.

“நானும் கலைஞன் பதிப்பகம் மாசிலாமணியும் பழைய காலத்துச் சிறுகதைகள், புதிய சிறுகதைகள்னு அடிக்கடி பேசிட்டே இருப்போம். அவர் சில கதைகளைப்பத்திச் சொல்வாரு. நான் சில கதைகளைப்பத்திச் சொல்வேன். அந்தக் காலத்துல அது ஒரு பொழுதுபோக்கு” என்றார்.

“ம்”

“ஒருநாள் அதேமாதிரி பேசிட்டிருக்கும்போதே திடீர்னு எழுத்தாளர்களுடைய பேருங்களையெல்லாம் ஒரு தாள்ல ஒரு பட்டியலா எழுதுங்க, அதுக்கப்புறம் அவுங்க எழுதிய மிகச்சிறந்த சிறுகதையைத் தேடி எடுங்க, அப்படி ஒரு நூறு பேருடைய கதைகளைத் திரட்டியெடுக்க முடிஞ்சா இந்த நூற்றாண்டுச் சிறுகதைகள்னு நாமே ஒரு பெரிய தொகுப்பைப் போட்டுடலாம்னு மாசிலாமணி உற்சாகமா சொன்னாரு.”

“நீங்க என்ன சொன்னீங்க?”

“அதைக் கேட்டதும் ஒருபக்கம் உற்சாகமாவும் ஆசையாவும் இருந்தாலும் இன்னொரு பக்கம் தயக்கமா இருந்தது. ஒரு நிமிஷம் யோசிச்சி இந்த வேலையெல்லாம் வேணாம் சார். நான் சொந்தமா எழுதற வேலைக்கு இந்தத் தொகுப்பு வேலை இடைஞ்சலா இருக்கும்னு சொன்னேன். ஆனா அவர் விடவே இல்லை. ஒன்னொன்னுக்கும் நேரம் ஒதுக்கி வேலை செய்யற ஆளு நீங்க. பத்தோடு பதினொன்னா இந்த வேலையும் இருக்கட்டும். தைரியமா ஆரம்பிங்கன்னு சொன்னார். ரெண்டுமூனு தரம் அதையே திருப்பித்திருப்பிச் சொன்னார். தொடர்ந்து மறுக்கறதுக்கு எனக்கு மனசு வரலை. கடைசியில சரின்னு அந்தப் பொறுப்பை எடுத்துகிட்டேன்.” என்றார்.  

“சில வேலைகள் இப்படித்தான் நமக்கு தற்செயலாக அமையும் சார். ஆனா நீண்ட காலத்துக்கு அது நமக்குப் பெருமை சேர்க்கிற ஒன்னா இருக்கும். இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்னு திருக்குறள்ல சொல்றமாதிரி சில வேலைகளுக்கு சிலர்னு ஊழ் தீர்மானிச்சிருக்குது. அதனாலதான் அந்த வேலை உங்களைத் தேடி வந்திருக்குது”

“என்ன ஊழோ, போங்க. ஏறத்தாழ ஒரு வருஷ காலம் என்னுடைய நேரம் இந்தத் தொகுப்புக்கே செலவாச்சி. எல்லாச் சிறுகதை ஆசிரியர்களுடைய தொகுதிகளும் எங்கிட்ட இல்லை. சில எழுத்தாளர்கள் எழுதுனதுல ஒரு தொகுதி இருக்கும். இன்னொரு தொகுதி இருக்காது.  சில புத்தகங்களை நூலகத்துலேர்ந்து எடுத்தாரவேண்டியிருந்தது. சில சமயங்கள்ல நண்பர்கள்கிட்ட கடனா வாங்கிவர வேண்டியிருந்தது. ஒரு கதையைத் தேர்ந்தெடுக்க நாற்பது ஐம்பது கதைகளைப் படிச்சாகணும். மணியை எடுத்து மாலை கோர்க்கிறமாதிரி ஒவ்வொரு கதையா பார்த்துப் பார்த்து எடுத்து இந்தத் தொகுதியை உருவாக்கினேன். இதெல்லாம் முதல் கட்டத்து சிரமங்கள். ஆனாலும் நம்மால தாங்கிக்கொள்ள முடியற எல்லைக்குள்ள இருப்பவை. ஆனால் அடுத்த கட்டத்து சிரமங்கள்தான் ரொம்ப மன உளைச்சலைக் கொடுத்திடுச்சி”

“அது என்ன ரெண்டாவது கட்டம்?”

“எழுத்தாளர் பட்டியல் தயாரானதும் சம்பந்தப்பட்ட எழுத்தாளர்களுக்கு தகவல் தெரிவிச்சி, தொகுதிக்குள்ள சேர்க்கிறதுக்கான  அனுமதியை வாங்கணும். அதுதான் ரெண்டாவது கட்டம். நான் ஆரம்பத்துல நெனைச்ச அளவுக்கு அது சுலபமா அமையலை”

ஒருகணம் விட்டல்ராவின் பேச்சு நின்றது. ஏதோ ஒரு பழைய நினைவில் சிக்கிக்கொண்டதுபோல இருந்தது. சில நொடிகளுக்குப் பிறகு தானாகவே அவர் த்ச் என்று நாக்கை சப்புக்கொட்டினார். சட்டென உரையாடல் நின்றுவிட்டது.

அவரை மீண்டும் பேசவைக்கும் வகையில் ”ஏதாவது கசப்பான அனுபவமா சார்?” என்று அமைதியாகக் கேட்டேன்.

“கசப்புன்னு சொல்லமாட்டேன். சில சங்கடங்கள். அவ்வளவுதான். வேற ஒன்னுமில்லை”

“என்ன சங்கடம் சார்? யாராவது அனுமதி கொடுக்கமுடியாதுன்னு சொன்னாங்களா?”

“ஒரே ஒருத்தர் அப்படி சொன்னார். மீறி அந்தக் கதையைச் சேர்த்தால் உங்கள் மீது வழக்கு தொடரவேண்டியதா இருக்கும். அதன் பின்விளைவுகளை நீங்க சந்திக்கணும்னு எனக்கு மிரட்டறமாதிரி கடிதம் போட்டிருந்தாரு. அந்தக் கடிதத்தைப் படிச்சபோது சங்கடமா இருந்தது. சரி, அந்தப் படைப்பு அவுங்களுடையது, அப்படிப் பேசறதுக்கு அவுங்களுக்கு ஒரு உரிமை இருக்குதுன்னு நெனச்சி நானும் அதை விட்டுட்டேன். நானும் ஒரு எழுத்தாளர்ங்கற எண்ணமே இல்லாம தூக்கியெறிஞ்ச மாதிரி எழுதியிருந்தாரு. அதைப் படிச்சிட்டு ரொம்ப வருத்தப்பட்டேன். எதுக்குடா இந்த வேலையை இழுத்துப் போட்டுகிட்டோம்னு வெறுத்து போயிடுச்சி. ஒரு எழுத்தாளரை இன்னொரு எழுத்தாளரே மதிக்கலைன்னா, வேற யாரு இந்த உலகத்துல மதிப்பாங்க?”

“யாரோ ஒருத்தர்தானே அப்படிச் சொன்னாரு. மத்தவங்க எல்லாரும் அனுமதி கொடுத்தாங்க, இல்லையா?”

“முக்கால்வாசிப் பேரு கடிதம் கிடைச்ச கையொடு அனுமதி கொடுத்து பதில் எழுதினாங்க. மீதிப் பேருங்க வேறுமாதிரி கடிதம் எழுதி சங்கடப்படுத்திட்டாங்க. அவுங்க அனுமதிக்கடிதங்களை வாங்கறதுக்குள்ள போதும்போதும்னு ஆயிடுச்சி”

‘சங்கடமா? என்ன எழுதியிருந்தாங்க?”

“இந்தத் தொகுப்பு வேலை செய்யறதுக்கு நீ யார், அதுக்கு உனக்கு என்ன தகுதி இருக்குதுன்னு  கேட்டு ரெண்டுமூனு எழுத்தாளர்கள் கடிதம் போட்டிருந்தாங்க. ஒருசிலர் என்னை ஃபோன்ல அழைச்சி நேரிடையாவே தொகுப்பு வேலை செய்யற அளவுக்கு நீ ஏன்ன பெரிய சாதனையாளனான்னு கேள்விமேல கேள்வியா கேட்டு நோகடிச்சாங்க. நீ ஒரு சாதாரண வணிகப்பத்திரிகை எழுத்தாளன்தான, சீரியஸ் லிட்டரேச்சர் பத்தி உனக்கு என்ன தெரியும்னு கேட்டுட்டு நக்கலா சிரிச்சாரு ஒரு எழுத்தாளர்.  என் ஆர்வத்தைப்பத்தியும் என் திறமையைப்பத்தியும் இவுங்ககிட்ட நான் எப்படி நிரூபிக்கமுடியும், சொல்லுங்க. இந்த மாதிரியான உரையாடல்களும் கடிதங்களும் அந்தக் காலத்துல எனக்கு ரொம்ப மன உளைச்சலா இருந்தது. இந்தத் தொகுப்பு வேலையே வேணாம், விட்டுடலாம்னு பல சமயம் யோசிச்சிருக்கேன்”

ஒருசில கணங்கள் விட்டல்ராவ் மெளனத்தில் ஆழ்ந்தார். எந்தக் குறுக்குக்கேள்வியும் கேட்காமல் அவராகவே மீண்டும் தொடரும் வரைக்கும் அமைதியாக அவருடைய முகத்தையே பார்த்தபடி உட்கார்ந்திருந்தேன்.

“இந்த சங்கடங்களையெல்லாம் தாண்டி வந்து எடுத்த வேலையை முடிக்கறதுக்கு காரணமா இருந்தவங்க ரெண்டு பேரு. ஒருத்தர் கலைஞன் பதிப்பகம் மாசிலாமணி சார். இன்னொருத்தர் என் மனைவி. எடுத்த வேலையை முடிக்கறதுலதான் நம் கவனம் இருக்கணுமே தவிர, இந்த மாதிரி கிண்டல்கள் மீது திரும்பிடக்கூடாதுன்னு ரெண்டு பேருமே அடிக்கடி சொல்லிட்டிருந்தாங்க”

தெரிந்தோ தெரியாமலோ, வலியளித்த பழைய தருணத்தைத் தொட்டு அசைத்துவிட்டோமோ என எனக்குள் வருத்தமெழுந்தது. இறந்த காலம் அவருடைய கண்முன்னால் மீண்டும் நிழலாடிச் செல்வதை என்னால் உணரமுடிந்தது.

ஏதாவது ஒரு புள்ளியில் உரையாடலின் தளத்தை மாற்றிவிட வேண்டும் என்று நினைத்தேன். விட்டல்ராவ் தன் நன்றிக்குரியவர்களாக இருவரைக் குறிப்பிட்ட தருணமே அதற்குப் பொருத்தமான தருணமெனத் தோன்றியது. உடனே ”உங்க வாசிப்பு அனுபவத்துல ஒரு எழுத்தாளருடைய கதைகள்ல ஏதோ ஒரு கதையை நீங்க  தேர்ந்தெடுத்து அனுமதிக்கு எழுதியிருப்பீங்க. அந்தக் கதையையே எல்லாரும் ஏத்துகிட்டாங்களா? இல்லை இல்லை, இந்தக் கதை வேணாம், வேற கதை இருக்கட்டும்னு யாராவது சொன்னாங்களா?” என்று கேட்டு பேச்சின் திசையை மாற்றினேன்.

அக்கேள்வியைக் கேட்டதும் விட்டல்ராவின் முகம் மலர்ந்துவிட்டது. சோர்வூட்டும் மனநிலையிலிருந்து அவர் மீண்டுவிட்டார் என்பதை என்னால் உணரமுடிந்தது. உடனே உற்சாதம் ததும்ப பதில் சொல்லத் தொடங்கினார்.

“நான் குறிப்பிட்ட கதையை வேணாம்னு யாருமே சொல்லலை. உடனே அனுமதிக்கடிதம் எழுதி அனுப்பிட்டாங்க, ஒரே  ஒருத்தர்தான் ஃபோன்ல கூப்பிட்டு, நீங்களா ஏன் கதையைத் தேர்ந்தெடுக்கிறீங்க? நான் சொல்ற கதையை சேர்த்துக்குங்க. கதையைத் தேர்ந்தெடுக்கிற உரிமையை எழுத்தாளன்கிட்ட கொடுங்கய்யான்னு சொன்னாரு”

“யார் சார் அந்த எழுத்தாளர்?”

“வேற யாரு கேப்பாங்க? நம்ம ஜெயகாந்தன்தான். நான் ஒரு கதையை எடுத்து வச்சிருந்தேன். ஒன்னையே ஏன் எல்லாரும் திருப்பித்திருப்பிச் சொல்லணும், அதைவிட சிறப்பான கதைய்யா இதுன்னு அவர் வேற ஒரு கதையுடைய தலைப்பைத் தெரிவிச்சார்”

“அந்தக் கதையைத்தான் தொகுப்புக்குள்ள சேர்த்தீங்களா?”

“அவரே ஆசைப்பட்டு சொல்லும்போது, அதை எப்படி வேணாம்னு சொல்லமுடியும். அதனால முதலில் சேர்த்திருந்த கதையை எடுத்துட்டு அவர் குறிப்பிட்ட கதையையே சேர்த்துவிட்டேன். அதைவிட வேறு ஒரு கோணத்துலயும் எனக்கு அவர் நல்லதொரு ஆலோசனையைக் கொடுத்தாரு”

“தொகுப்பு சார்ந்த ஆலோசனையா அல்லது வேறு ஏதாவதா?”

“தொகுப்பு சார்ந்துதான். சிறுகதைகளின் பட்டியலை நான் ஒருதரம் பார்க்கலாமான்னு ஒருமுறை மாசிலாமணிகிட்ட கேட்டாரு. அவரும் உடனே ஒரு ஆள்கிட்ட கொடுத்து அனுப்பி வச்சிட்டாரு. ரெண்டுநாள் கழிச்சி அவரே டெலிபோன்ல கூப்பிட்டு சிறப்பா இருக்குது மாசிலாமணி, நல்ல பட்டியல்னு பாராட்டி சொன்னாரு. தற்செயலா அவுங்க ரெண்டு பேரும் பேசிட்டிருந்த சமயத்துல நான் மாசிலாமணி அவர்களைச் சந்திக்கப் போயிருந்தேன். இதோ, இதோ தொகுப்பாசிரியரே வந்துட்டாரு, அவுருகிட்டயே நேரிடையா சொல்லுங்கன்னு மாசிலாமணி சார் டெலிபோன என்கிட்ட கொடுத்துட்டாரு. ஜெயகாந்தன் பேசறாரு, பேசுங்க பேசுங்கன்னு சொன்னாரு”

”என்ன சொன்னார் ஜெயகாந்தன்?”

“கதைப்பட்டியல் ரொம்ப நல்லா இருக்குது விட்டல், வாழ்த்துகள்னு சொன்னாரு. எல்லாரையும் தேடித்தேடி சேர்த்திருக்கறத பார்க்கும்போது சந்தோஷமாத்தான் இருக்குது. இன்னும் ரெண்டு எழுத்தாளர்கள் இருக்காங்க. ரொம்ப முக்கியமானவங்க. இந்த உலகம் அறிந்துகொள்ள வேண்டிய எழுத்தாளர்கள். எதுக்கும் ஆசைப்படாத ஞானிகள். தமிழ்நாட்டுல எழுத்தாளர் பட்டியல் போடற எல்லாருமே அவுங்க பேரை விட்டுடறாங்க. அவுங்க கதைகளைச் சேர்த்து நாமதான் அவுங்களை கெளரவப்படுத்தணும்னு சொன்னாரு”

“யாரைப் பத்தி சொன்னாரு?”

“பேரைச் சொல்லுங்க சார், சேத்துக்கறேன்னு நானும் ஜெயகாந்தன்கிட்ட சொன்னேன். ஒரு எழுத்தாளர் பெயர் பி.ச.குப்புசாமி, திருப்பத்தூர்க்காரரு. ஆசிரியரா வேலை செய்பவர், அவர் கங்கவரம்னு ஒரு சிறுகதையை எழுதிருக்காரு. ரொம்ப நல்ல கதை.  அந்தக் கதையைக் கேட்டு வாங்கி சேர்த்துக்குங்க. இன்னொரு எழுத்தாளர் பெயர் திருமணம் பி.ஸ்ரீனிவாசன். திருமணம்ங்கறது ஊரு பேரு கிடையாது. அவரு எழுதுன சிறுகதையுடைய பெயர். ஒரு சிறுகதையுடைய தலைப்பே ஒருவருடைய பெயருக்கு முன்னால பட்டப்பெயரா இடம்பெறணும்ன்னா, அவர் எவ்வளவு நல்ல எழுத்தாளரா இருக்கணும்னு நெனச்சிப் பாருங்க. ஆனா அவரும் தன்னடக்கமான ஆளு. அவரு அடங்கியே இருந்ததால, உலகத்துக்குத் தெரியவேண்டிய அவருடைய பெயரை  இங்க  இருக்கிற எல்லாருமே மறந்துட்டாங்க. அந்தக் காலத்துல கிராம ஊழியன் பத்திரிகையிலயும் மத்த பத்திரிகையிலும் நிறைய கதைகளை அவரு எழுதியிருக்காருன்னு சொன்னார்”

“அதுக்கப்புறம் என்ன செஞ்சீங்க?”

“அவுங்க முகவரிகளைக் கொடுங்க சார், தொடர்புகொண்டு கதைகளை வாங்கிக்கறேன்னு சொன்னேன். உடனே ஜெயகாந்தன் ரெண்டு பேருடைய முகவரிகளையும் கொடுத்தார். கொடுக்கும்போது ஒரு வார்த்தை சொன்னாரு. அதை மறக்கவே முடியாது பாவண்ணன்”

“என்ன சொன்னாரு?”

“நான் ஏதோ என்னுடைய பரிந்துரையால இந்த ரெண்டு பேரையும் மேல கொண்டு வர திட்டமிடறதா நினைச்சிடாதீங்க விட்டல். அடிப்படையிலேயே இவுங்க ரெண்டு பேரும் நல்ல எழுத்தாளர்கள். நல்ல நல்ல கதைகளை எழுதியிருக்காங்க.  ஆனா  ரெண்டு பேருமே ரொம்ப ரொம்ப தன்னடக்கமா இருக்கிற ஆளுங்க. குடத்திலிட்ட விளக்குன்னு சொல்வாங்களே, அந்த மாதிரியான ஆளுங்க. நாமதான் இவுங்க மேல வெளிச்சத்தைப் பாய்ச்சணும்னு சொல்லிட்டே போனாரு. ரெண்டு பேரையும் தொடர்புகொண்டு கதைகளை வாங்கறது என் பொறுப்பு சார்னு நான் ஜெயகாந்தன்கிட்ட சொன்னேன்.  கதை அனுப்புங்கன்னு பொதுவா கேட்டா எனோ தானோன்னு அனுப்பி வச்சிருவாங்க, அந்த ஆளுங்க. குப்புசாமிகிட்ட கங்கவரம் கதையை அனுப்பவும்னு எழுதுங்க. ஜெயகாந்தன் சொன்னார்ன்னே எழுதுங்க. ஸ்ரீனிவாசன் இங்கதான் சென்னையிலயே பெசன்ட் நகர்ல இருக்காரு. நேருலயே பார்த்து பேசி திருமணம்ங்கற கதையைக் கொடுங்கன்னு கேட்டு வாங்குங்க. நான் சொன்னேன்னு சொல்லுங்கன்னு சொன்னாரு”

“அவரு சொன்ன கதைகளையே அவுங்க அனுப்பினாங்களா?”

“வீட்டுக்குத் திரும்பியதுமே திருப்பத்தூர் குப்புசாமிக்கு எழுதினேன். ஒரு வாரத்துக்குள்ள கங்கவரம் கதையை அவரு அனுப்பி வச்சிட்டாரு. நல்ல கதை. ஒரு லீவ் நாள்ல ஸ்ரீனிவாசனுக்கு ஃபோன் பண்ணிட்டு பெசன்ட் நகர்ல அவருடைய வீட்டுக்குப் போய் பார்த்தேன். ஜெயகாந்தன் அனுப்பி வச்சாருன்னு சொன்னேன். அவருக்கு ரொம்ப சந்தோஷம். உக்காரவச்சி ரொம்ப நேரம் பேசிட்டே இருந்தாரு. என்னை விட வயசுல ரொம்ப பெரியவரு. ரொம்ப வருஷமா எழுதிட்டிருந்தவர்னு பேசப்பேச புரிஞ்சிகிட்டேன்.”

“எந்தப் பத்திரிகையில எழுதினாரு? கேள்விப்படாத பேரா இருக்குது”

“அந்தக் காலத்துல திருச்சியிலேர்ந்து கிராம ஊழியன்னு ஒரு பத்திரிகை வந்தது, கேள்விப்பட்டிருக்கீங்களா?. திருலோக சீதாராம்ங்கற கவிஞர்தான் அதுக்கு ஆசிரியரா இருந்தாரு.”

“கேள்விப்பட்டிருக்கேன் சார்”

“இலக்கியப்பத்திரிகைக்கு பொருத்தமே இல்லாம கிராம ஊழியன்னு ஏன் பேர் வச்சாங்கன்னு எல்லாருக்குமே ஆச்சரியமா இருக்கும். அந்தக் காலத்துல திருச்சியில ஜஸ்டிஸ் பார்ட்டிகாரங்க நகரதூதன்னு ஒரு வாரப்பத்திரிகை நடத்தினாங்க. அதுக்கு எதிரா துறையூருல ஒரு காங்கிரஸ்காரரு நடத்திய பத்திரிகைதான் கிராம ஊழியன். சில வருஷங்கள்தான் அவுங்களால நடத்த முடிஞ்சது. அப்புறம் நிறுத்திட்டாங்க. சில வருஷங்கள் கழிச்சி இலக்கிய ஆட்கள் கூடி புதுசா ஒரு பத்திரிகை நடத்த ஆசைப்பட்ட நேரத்துல  அரசாங்கத்துடைய அனுமதி கிடைக்கலை. பத்திரிகைக்கு புது ரெஜிஸ்டரேஷன் இல்லைன்னு அரசாங்கத்துல சொல்லிட்டாங்க. அதனால ஏற்கனவே பதிஞ்சி வச்சிருந்த கிராம ஊழியன் பத்திரிகையை வாங்கி அதே பேருல இலக்கியப்பத்திரிகையை நடத்தினாங்க. திருலோக சீதாராம் சில காலம் நடத்தியிருக்காரு. அதுக்குப் பிறகு வல்லிக்கண்ணன் ஆசிரியரா இருந்து சில காலம் நடத்தியிருக்காரு. அந்த நேரத்துல இந்த ஸ்ரீனிவாசன் அங்க வேலை செஞ்சிருக்காரு. பத்திரிகையிலயும் கதைகள் எழுதியிருக்காரு. பத்திரிகை நின்ன பிறகு தினமணியில வேலை செஞ்சிருக்காரு. நிறைய கதைகள் எழுதியிருக்காரு. ஜெயகாந்தன் குறிப்பிட்ட திருமணம்ங்கற சிறுகதை அவருக்கு நல்ல பேரு வாங்கி கொடுத்திருக்குது. திருமணம் ஸ்ரீனிவாசன்னு பட்டப்பேர் வச்சி கூப்பிடற அளவுக்கு அவருக்கு பேரு வாங்கி கொடுத்திருக்குது. ஜெயகாந்தன் அனுப்பி நான் வந்திருக்கேன்னு சொன்னதும் அவர் ரொம்ப சந்தோஷப்பட்டாரு. நூற்றாண்டுச் சிறுகதைகள்ங்கற தொகுதியில அவருடைய சிறுகதையைச் சேர்க்கப் போறேன்னு சொன்னதும் ரொம்ப சந்தோஷப்பட்டாரு அறைக்குள்ள போயி திருமணம் கதையை தேடி எடுத்தாந்து கொடுத்தாரு”

“ஆகா. தேடிப் போன புதையல் காலடியிலேயே கிடைச்சமாதிரி இருக்குது.”

“சரியா சொல்லிட்டீங்க. அந்தக் கதையை கையில வாங்கற சமயத்துல உண்மையிலேயே ஏதோ ஒரு புதையலையே கையில வாங்கிக்கற மாதிரிதான் இருந்தது.”

“எப்படி இருந்தது அந்தக் கதை?”

“எனக்கு ரொம்ப புடிச்சிருந்தது. நல்ல கதை. ஆறேழு பக்கம்தான் இருக்கும். அதனால அங்கயே உக்காந்து படிச்சிட்டேன். ஊருல ரெண்டு பெரிய தலைக்கட்டுங்க. நிலபுலன் எல்லாம் அவுங்க ரெண்டு பேருகிட்டதான் இருக்குது. ஊருல உழைக்கிற ஆளுங்க எல்லாரும் இந்த ரெண்டு பேருகிட்டதான் வேலை செஞ்சி பிழைக்கிறாங்க. ஏரித்தண்ணிய பாசனத்துக்கு திருப்பி விடற விஷயத்துல ரெண்டு அணிகளுக்கும் நடுவுல சண்டை வருது. அடிச்சிகிறாங்க. கல்யாணம் செஞ்சிக்க இருந்த ஒரு ஜோடி செத்துப் போவுது. அவுங்களுடைய குடும்பத்து ஆளுங்களும் செத்துடறாங்க. கஞ்சி குடிப்பதற்கிலார் அதன் காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார்னு பாரதியார் பாட்டு ஒன்னு இருக்குதே, அதுக்கு சரியான எடுத்துக்காட்டு அந்த ஆளுங்க. பண்ணையாருக்காக சண்டையில எறங்கி தன் கூட்டத்து ஆளுங்கள தானே அடிச்சிச் சாகடிக்கிறாங்க.  ஆனா பெரிய தலைக்கட்டுங்க ரெண்டும் ஓரமா நின்னு எல்லாத்தயும் வேடிக்கை பார்த்து ரசிக்கிறாங்க. மனசைத் தொடற கதை. இவ்வளவு காலம் அவரைப் படிக்கலையேன்னு ரொம்ப வருத்தமா இருந்தது. திருமணம் கதையை நான் தொகுப்புக்கு பயன்படுத்திக்கறேன் சார்னு சொன்னேன். தாராளமா பயன்படுத்திக்குங்கன்னு அனுமதி கொடுத்தார். அதுக்கப்புறம் கொஞ்ச நேரம் பேசிட்டிருந்த பிறகு கெளம்பி வந்துட்டேன்.”

“ஏதோ ஒரு வகையில உங்க தொகுப்பு திருமணம் கதைக்கு ஒரு மறுபிரவேசத்தை கொடுத்திருக்குது”

“உண்மைதான் பாவண்ணன். இன்னைக்கு அவருடைய பேர் சொல்றதுக்கு இந்த ஒரு கதைதான் இருக்குது” என்று துயரம் தோய்ந்த குரலில் பெருமூச்சுடன் சொன்னார் விட்டல்ராவ்.

“ஏன் சார்? என்னாச்சி? ரொம்ப காலமா எழுதி வந்தவர்னு சொன்னீங்களே, அவருடைய தொகுப்புகள் எதுவும் வரலையா?”

“முப்பது முப்பத்தஞ்சி வருஷமா எழுதிவந்த ஆள். ஆனா ஒரு தொகுப்பைக்கூட கொண்டு வரலை. அவர் எந்த முயற்சியும் எடுக்கலையா, அல்லது அப்படி ஒரு வாய்ப்பு அமையவே இல்லையான்னு தெரியலை. அந்தக் காலத்துல ஒரு தொகுப்பை கொண்டு வருவது அவ்வளவு சுலபமான காரியமில்லை. நான் திருமணம் கதையைப் படிச்சி முடிச்சதும் தற்செயலா ஒருநாள் வல்லிக்கண்ணனைப் பார்த்து பேசறதுக்காக போயிருந்தேன். அப்ப அவரும் இந்த ஸ்ரீனிவாசனைப்பத்தி ரொம்ப உயர்வா சொன்னாரு. அவரு சொன்னதுக்கப்புறம்தான் அவருடைய தொகுப்புன்னு சொல்லிக்க ஒரு புத்தகம் கூட வரலைன்னு தெரியும்”

“ரொம்ப துரதிருஷ்டம் சார்”

“என்ன செய்யறது பாவண்ணன். சில பேருடைய வாழ்க்கையில இப்படி சில சமயங்கள்ல அமைஞ்சிடுது.”   

நான் அந்த இரு எழுத்தாளர்களைப்பற்றியும் யோசித்துப் பார்த்தேன். என்னால் பி.ச.குப்புசாமியை தெளிவாக நினைவுகூர முடிந்தது.  அவருடைய கங்கவரம்   என்னும் சிறுகதையை நான் ஏற்கனவே படித்திருக்கிறேன்.  வார்த்தை என்றொரு சிற்றிதழ் வெளிவந்த காலத்தில்  அவர் ‘ஒரு பள்ளியாசிரியரின் நினைவுக்குறிப்புகள்’ என்றொரு தொடரை எழுதியிருந்தார். அது ஒரு முக்கியமான தொடர். அதற்குப் பிறகு ஜெயகாந்தன் மறைந்த பிறகு, அவருடன் பழகிய நினைவுகளை ஒரு தொடராக இந்து தமிழ் நாளிதழில் எழுதிவந்தார். எழுத்தாளர் ஸ்ரீனிவாசன் பற்றி எனக்கு ஒரு தகவலும் தெரியவில்லை. விட்டல்ராவ் வழியாகவே அவரைப்பற்றி முதன்முதலாகத் தெரிந்துகொண்டேன்.

“பி.ச.குப்புசாமியை எனக்குத் தெரியும் சார். ஆனா ஸ்ரீனிவாசனைப்பத்தித்தான் ஒன்னுமே தெரியலை சார். தன்னடக்கம்ங்கற பேருல இன்னும் எத்தனை பேரு இப்படி உலகத்துடைய கண்ணுல படாமலேயே போனாங்களோ, தெரியலை”

“சில பேருடைய சுபாவம் அது பாவண்ணன். ரெண்டு மூனு கதை எழுதிய ஆளுங்க எல்லாம் தன்னைப்பத்தி தானே டமாரம் அடிச்சிக்குவாங்க. ஏராளமா எழுதிய ஆளுங்க என்னமோ எழுதினதோடு தன் கடமை முடிஞ்சிட்டுதுன்னு அமைதியா போயிடுவாங்க. இதெல்லாம் உலகத்துல இருக்கிற விசித்திரங்கள்ல ஒன்னு”

“சரி சார், ஸ்ரீனிவாசனை மறுபடியும் போய் பார்த்தீங்களா?”

“போய்ப் பார்த்தேன். ஏன் சார் நீங்க ஒரு தொகுதி கூட கொண்டு வர முயற்சி செய்யலைன்னு கேட்டேன். அவர் ஒரு பதிலும் சொல்லலை. அந்தப் பேச்சு எதுக்கு, விடுங்க. அதெல்லாம் பழைய கதைன்னு சிரிச்சிகிட்டே வேற விஷயத்தைப்பத்தி பேச ஆரம்பிச்சிட்டாரு.”

“இப்படியும் ஒரு எழுத்தாளர் இருக்கமுடியுமான்னு ஆச்சரியமா இருக்குது சார்”

”எனக்கும் அப்படித்தான் இருந்தது. அவருக்காக ஏதாவது செய்யணுமேன்னு எனக்குள்ள ஒரு ஆசை ஓடிட்டே இருந்தது. உங்க கதைகளை சேத்து வச்சிருக்கீங்களா, இல்லை எழுதனதோடு மறந்துட்டீங்களான்னு கேட்டேன். பத்திரமா எடுத்து வச்சிருக்கேன்னு சொல்லிட்டு  அறைக்குள்ள போய் கொஞ்ச நேரம் கழிச்சி ஒரு ஃபைலை கொண்டு வந்து கொடுத்தார். பிரிச்சிப் பார்த்தேன். ஒரு இருபது கதை இருக்கும். ஒவ்வொரு கதையையும் அழகா பின் பண்ணி வச்சிருந்தாரு. இந்த அளவுக்கு அச்சுப்பிரதிகளைப் பாதுகாத்து தயாரா வச்சிருக்கீங்களே, தொகுப்பு போட ஏன் சார் முயற்சி செய்யலைன்னு மறுபடியும் கேட்டேன். அவரு சிரிச்சிகிட்டே உதட்டைப் பிதுக்கினாரு. அந்தக் காலத்துல முயற்சி செஞ்சேன். ஆனா யாரும் போடறதுக்குத் தயாரா இல்லை. ஒரு கட்டத்துக்குப் பிறகு எனக்கும் சலிப்பு வந்திடுச்சி. விட்டுட்டேன்னு சொன்னாரு. அப்படி சொல்லும்போதும் அவரு சிரிச்சிகிட்டேதான் சொன்னாரு. அவரு குரல்ல வருத்தமோ கஷ்டமோ எதுவுமே இல்லை”

“அதிசயமான மனிதர் சார்”

“இந்த ஃபைலை என்கிட்ட கொடுங்க. நான் எடுத்தும் போய் எனக்குத் தெரிஞ்ச பதிப்பாளர்கள்கிட்ட காட்டி ஒரு தொகுப்பா கொண்டு வர முயற்சி செய்யறேன்னு சொன்னேன். தாராளமா எடுத்துட்டு போங்க, உங்களால முடிஞ்சா செய்ங்கன்னு பெரிய மனசோடு உடனே கொடுத்துட்டாரு.”

“தொகுப்பா கொண்டுவர முடிஞ்சதா?”

“சொல்றேன் கேளுங்க. நான் ஏதோ ஒரு நல்ல நோக்கத்துலதான் அந்த வேலையை ஆரம்பிச்சேன். ஆனா என்னுடைய துரதிருஷ்டம். நான் நெனச்ச மாதிரி எதுவும் நடக்கலை” என்று நாக்கு சப்புக்கொட்டினார்.

“ஏன் சார்? என்னாச்சி?” என்று திகைப்புடன் கேட்டேன்.

“முதல்ல கலைஞன் பதிப்பகம் மாசிலாமணி சார்கிட்டயே கேட்டேன். இப்ப வேணாம் விட்டல். ஏகப்பட்ட புத்தகங்கள் பாக்கி இருக்குதுன்னு நேரிடையாவே சொல்லிட்டாரு. அதனால என் நண்பரா இருந்த இன்னொரு பதிப்பாளர்கிட்ட கேட்டேன். கொடுங்க, படிச்சிப் பார்த்துட்டு சொல்றேன்னு சொன்னாரு. ஃபைலை கொண்டு போய் அவருகிட்ட கொடுத்துட்டு வந்தேன்.”

“என்ன சொன்னாரு அவரு?”

‘ரெண்டு வாரம் கழிச்சி அவருக்கு போன் பண்ணி கேட்டேன். இன்னும் படிக்கலைன்னு சொன்னாரு. அதுக்கப்புறம் ரெண்டு வாரம் கழிச்சி மறுபடியும் கேட்டேன். இன்னும் படிக்கலைன்னு அதே பதிலைத்தான் சொன்னாரு. நண்பராக இருந்ததால, திருப்பிக் கொடுத்துடுங்கன்னு கேக்கறதுக்கு எனக்கும் தயக்கமா இருந்தது. சரி, இன்னும் ரெண்டு மூனு வாரம் போவட்டும்னு விட்டுட்டேன்.”

“ஐயையோ, எல்லாப் பக்கங்கள்லயும் துரதிருஷ்டம்தானா?”

“என்னமோ போங்க. அவருடைய துரதிருஷ்டமோ, என்னுடைய துரதிருஷ்டமோ.  எனக்கு எதுவும் சொல்லத் தெரியலை.”

“கடைசியில என்னதான் நடந்தது? தொகுதி வந்ததா இல்லையா?”

“ஏற்கனவே திட்டமிட்டபடி கலைஞன் பதிப்பகம் நூற்றாண்டின் சிறுகதைகள் தொகுதிகளைக் கொண்டு வந்துட்டாங்க. ஜெயகாந்தன்கிட்ட தொகுதிகளைக் கொண்டு போய் காட்டினேன். அவருக்கு ரொம்ப சந்தோஷம். நல்லா வந்திருக்குது விட்டல்னு மீசையைத் தடவிகிட்டே சிரிச்சாரு. குப்புசாமி கதையும், ஸ்ரீனிவாசன் கதையும் இருக்கறத பார்த்து ரொம்ப சந்தோஷப்பட்டாரு. ஆனா தொகுதியைப் பார்த்து சந்தோஷப்படவேண்டிய ஆள் அப்ப இல்லாம போயிட்டாரு”

“என்ன சார் சொல்றீங்க? யாரு இல்லாம போயிட்டாங்க”

“திருமணம் ஸ்ரீனிவாசன். ஏதோ உடல்நலக் குறைவு. திடீர்னு காலமாயிட்டாரு. தொகுப்புக்குள்ள தன்னுடைய கதை இருக்குதுங்கறத பார்க்காமலே போயிட்டாரு”

“அவருடைய சொந்தக் கதைகளின் தொகுப்பு?”

விட்டல்ராவ் உதட்டைப் பிதுக்கியபடி தலையை அசைத்துவிட்டு ஒருகணம் நாக்கு சப்புக்கொட்டினார். “அதுவும் வரலை பாவண்ணன். என்னால அவருக்குக் கொடுத்த வாக்குறுதியை காப்பாத்த முடியலை. அந்தக் குற்ற உணர்விலிருந்து என்னால மீளவே முடியலை” என்றார்.

“என்னதான் சொன்னாங்க?”

”படிச்சிட்டு கொண்டுவரேன், படிச்சிட்டு கொண்டுவரேன்னு ஒரே பதிலையே ரொம்ப காலமா திருப்பித்திருப்பி சொல்லிட்டே இருந்தாரு அந்த நண்பர். பார்க்கற சமயங்கள்ல எல்லாம் அந்த ஒரே பதிலையே திருப்பித் திருப்பிச் சொன்னாரு. ஆனால் கடைசி வரைக்கும் கொண்டு வரவே இல்லை. எதிர்பாராத  விதமா, அந்த நேரத்துல ஸ்ரீனிவாசன் சாரும் மறைஞ்சிட்டாரு. சரி, வேற எங்கயாவது முயற்சி செஞ்சி பார்க்கலாம்னு நெனச்சிகிட்டு திருப்பிக் கொடுத்துடுங்க சார்னு ஒருநாள் கேட்டேன். அங்க, வச்சிட்டேன், இங்க வச்சிட்டேன், தேடி எடுத்துக் கொடுக்கறேன்னு இன்னும் சில மாதங்கள் இழுத்தடிச்சாரு. பிறகு ஒருநாள்  தொகுப்பு தொலைஞ்சி போயிடுச்சின்னு சொல்லிட்டாரு. எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியலை. ஒரு திகைப்போடு திரும்பி வந்துட்டேன். தீராத ஒரு குற்ற உணர்ச்சிக்கு என்னை ஆளாக்கிட்டார் அந்த நண்பர். ஸ்ரீனிவாசன் சாருக்கு நான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேத்த முடியாம போயிடுச்சி.”

அவர் சொன்ன செய்தியைக் கேட்டு நானும் திகைப்பில் மூழ்கிவிட்டேன். எதிர்பாராத சூழல்களின் நெருக்கடியில் சிக்கி, இப்படி குற்ற உணர்வுக்கு ஆட்பட்டுத் தவித்த தருணங்கள் என் வாழ்விலும் நிகழ்ந்ததுண்டு. அதனால் ஒரு சொல்லும் எழாமல் அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

“ஸ்ரீனிவாசன் ஒரு எழுத்தாளரா வாழ்ந்தார்னு இந்த உலகம் தெரிஞ்சிக்கறதுக்கு இப்ப இருக்கிற ஒரே சாட்சி, நூற்றாண்டின் சிறுகதைகள் தொகுப்புல இருக்கிற ’திருமணம்’ கதை மட்டும்தான். பத்து பன்னெண்டு குழந்தை பிறந்த வீட்டுல, எல்லாக் குழந்தைகளும் செத்து ஒரே ஒரு குழந்தை மட்டும் பிழைச்சி உயிர் வாழறமாதிரி இந்த ஒரே ஒரு கதை மட்டும் நிலைச்சிருக்குது.”

“இந்த தொகுப்பை நெனச்சி பெருமைப்படறதுக்கு பல காரணங்கள் இருக்குது சார். அதுல இதுவும் ஒரு காரணம்.”

எந்தப் பதிலும் சொல்லாமல் விட்டல்ராவ் தனக்குள் ஆழ்ந்தவராக ஒருசில கணங்கள் அமைதியாகவே இருந்தார். பிறகு ஒரு சோகமான புன்னகையுடன் “அதுல எனக்கு எந்தப் பெருமையும் இல்லை. ஜெயகாந்தனுக்குத்தான் அந்தப் பெருமை சேரணும். ஸ்ரீனிவாசனைப் பார்த்து கதையைக் கேட்டு வாங்குன்னு அவரு சொல்லலைன்னா, அந்தக் கதையை நான் சேர்க்கறதுக்கான வாய்ப்பே வந்திருக்காது” என்றார்.

 

(அம்ருதா - ஜனவரி  2024)