சந்தேகம் என்று வந்துவிட்ட பிறகு இன்னொரு விஷயத்தையும் சொல்லிவிடுகிறேன். முழுக்கமுழுக்க அவர் பேசியது மரங்களைப் பற்றித்தான் என்றாலும் நிஜமாகவே அவை மரங்களைத்தான் குறிக்கிறதா அல்லது வேறு ஏதேனும் உள் அர்த்தம் உண்டா என்று தெரியவில்லை. ஒரே ஒரு வார்த்தை நான் அவரிடம் அன்று கேட்டிருந்தால் இந்தப் பிரச்சினையே வந்திருக்காது. ஏனோ அன்றைய தினத்தின் அளவு கடந்த பிரமிப்பு என்னை உறையவைத்து என் நாக்கையும் கட்டிவிட்டது. எல்லாம் முட்டாள்தனம்தான். ஆகவே மரமா அல்லது வேறா என்கிற கேள்விக்கு நீங்களே பதிலை முடிவுசெய்து கொள்ளலாம். ‘‘போடா. நீயும் உன் கதையும்” என்று உதறியும் செல்லலாம். பூரண சுதந்திரம் உண்டு.
ஓடும் ரயிலில் ஜன்னலோர இருக்கை கிடைப்பது போன்ற அதிர்ஷ்டம் வேறெதுவும் இல்லை. நகரும் புகைப் படங்கள் போல் காட்சிகள் மடமடவென்று மாறும் அற்புதத்தைக் காண கோடிக் கண்கள் வேண்டும். அன்றும் அப்படித்தான் வேடிக்கை பார்த்தபடி இருந்தேன். சுற்றிலும் நிறைய மரங்கள். உயர்ந்தவை. தாழ்ந்தவை. உலர்ந்தவை, பட்டுப்போனவை, கிளைகள் முரிந்தவை. வளைந்து சாய்ந்தவை, பச்சையோடும் பச்சையைப் பறிகொடுத்த நிறைய மரங்களைக் காணும்போது என் மனத்தில் உருவான உணர்ச்சிகளைச் சொல்லமுடியாது. அப்போதுதான் அவர் என்னைக் கவனித்திருக்கவேண்டும். என்னைத் தொட்டு ‘‘மரங்களைப் பார்க்கிறீர்களா?’’
என்றார்.
எதிர் இருக்கைக்காரர் அவர். என் பார்வையை அவர் பக்கம் திருப்பினேன். அவர் கண்கள் என்னை ஈர்த்தன. அவர் வார்த்தைகளைக் கேட்கவேண்டும் போல ஒரு உந்துதல். என் செவிகளையும் மனசையும் முழுக்கமுழுக்க அவர் வசம் ஒப்படைத்தேன். அவர் பார்வையிலும் பேச்சிலும் ஏதோ ஒரு மயக்கம் உண்டாக்கும் சக்தி இருந்தது. ஒரு வினாடி பார்வையிலேயே கூட கட்டுப்படவைக்கிற பேராற்றல். மரங்களைப்பற்றி மெல்ல பேச ஆரம்பித்தார்.
மரங்கள்தான் இந்த உலகைச் செழுமையாகவும் பசுமையாகவும் வைத்திருக்கும் சக்தி. மரமே சக்தியின் அடையாளம். தன்னலம் கருதாதவை மரங்கள். அவை கொடுக்கும் நிழல்கள் தாய்மையுள்ளம் கொண்டவை. நிழலின் அடைக்கலத்தில் எத்தனையோ கோடி உயிர்கள் இளைப்பாறுகின்றன. அவை வழங்கும் காய்களும் கனிகளும் பிரதிபலன் எதிர்பார்க்காதவை. காலத்தின் சுழிப்பில் ஒரு கட்டத்தில் இலைகளை இழந்து வெறுமையில் ஆழ்ந்தாலும் தளராமல் நிமிர்ந்து நிற்கும் அவை. காலத்தையே மீண்டும் பசுமையைக் கொண்டுவந்து போர்த்தச் செய்துவிடும் ஆற்றல் கொண்டவை. மரம் ஒரு தெய்வம். மரம் ஒரு ஆலயம்.
இதையெல்லாம் கேட்கக் கேட்க யாருக்குத்தான் ஆச்சரியமாய் இருக்காது. நானோ சொக்கிவிட்டேன். அதுவரையிலும் மரம் என்றால் நிழல்கொடுக்கும் படைப்பு என்பதுதான் என் மனசில் இருந்த பிம்பம். அதை உடனடியாய் விஸ்தரித்துக்கொள்ளவேண்டியிருந்தது. வானிலிருந்து சிறகுகள் அசைய வந்து உட்கார்ந்த தேவதைகள்போல இருந்தன மரங்கள். காற்றின் வேகத்தில் சிலிர்த்தன அவை.
மீண்டும் அவர் பேச ஆரம்பித்தார்.
மரங்கள் எல்லாமே ஒன்றுதான் & அவற்றின் மையமாகப் பொதிந்திருக்கும் சக்தியைக் கணக்கில் எடுத்துக் கொண்டால். கண்ணுக்குப் புலப்படாத அந்த சக்தியைப்பற்றி யார்
கவலைப்படுகிறார்கள்? கண்ணுக்குத் தெரியும் உருவங்கள்தானே மதிப்பிடப்படுகின்றன. மரங்கள் வித்தியாசப்படுகின்றன. இனரீதியாக வகைப்படுத்தப்படுகின்றன. இலைகளின் வடிவம், பூக்கள், காய்கள், தண்டு அமைப்பு எல்லா உறுப்புகள் ரீதியாகவும் வகைப்படுத்தப் படுகின்றன. வகைப்படுத்தப்பட்ட மரங்களிலும் கூட ஏற்ற இரக்கம். இந்தத் தோப்பு மரங்கள் உயர்வு. இந்தத் தோப்பு மரங்கள் தாழ்வு. அதிலேயே தோப்பில் சேராத சின்னச்சின்ன மரங்கள் தனி மரங்கள். பகுப்புகள். பகுப்புகள். பகுப்புகள். மரங்களின் ஆற்றல் மலினப்படுவதே இந்தப் பகுப்பால்தான். நஷ்டங்களை ஏனோ மரங்கள் உணர்வதில்லை. சுவாசிக்கக் காற்றும், நிற்க மண்ணும் இருக்கிற ஆறுதலில் எந்த நஷ்டமும் பொருட்படுத்தத் தகாததாக ஆகிவிடுகிறது. வாய்த் தகராறுகளையும், அடிதடிகளையும்கூட பொருட்படுத்தாத, நினைக்காத அளவுக்கு அது போய்விடுகிறது.
மரங்களை வளர்ப்பதே பெரிய கலை என்றார் அவர். சில மரங்களை விதையிலிருந்தே வளர்க்கவேண்டும். உதாரணத்திற்கு புளிய மரங்கள். இன்னும் சில மரங்களுக்கோ விதைகள் தேவையில்லை. சின்னக் கிளைகள் போதும். உதாரணத்திற்கு முருங்கை மரம். முதலில் இந்த வித்தியாசத்தை அறியவேண்டும். விதை வைக்கவேண்டிய மரத்தை கிளையிலிருந்தோ, கி¬ளி வைக்கவேண்டிய மரத்தை விதையிலிருந்தோ உருவாக்கிவிட முடியாது என்று திட்டவட்டமாய்ச் சொன்னார். இதுவே மரம் வளர்ப்பில் பாலபாடம் என்றார். இது தெரியாமல் காலத்தை விரயம் செய்தவர்கள் ஏராளம் என்று சரித்திரத்தை உதாரணம் காட்டினார்.
சில விஷயங்களுக்குச் சொந்த புத்தி வேண்டும். சில விஷயங்களுக்குச் சொல் புத்தி வேண்டும். இரண்டும் இல்லாதவர்களால் ஒரு காரியமும் ஒரு போதும் ஆனதில்லை என்றார். விதையோ, கிளையோ நடும் முன்பு முக்கியமாய் கவனிக்கப்பட வேண்டிய விஷயஙகள் வெளிச்சமும் ஈரமும். இரண்டுமற்ற இடத்தில் விதைத்துவிட்டு விளைச்சலை எதிர்பார்ப்பது அடிமுட்டாள்தனம் என்றார். இன்னொரு விஷயம் இடைவெளி. ஒவ்வொரு விதையும் சரியான இடைவெளியில் நடப்பட வேண்டும். வளர்ந்த மரம் தன் முழு ஆகிருதியையும் காட்டிக்கொண்டு எழுந்து நிற்கிற அளவு இடம்வேண்டும். சுதந்திரமாக எங்கும் திரும்பவும் வளையவும் நெளியவும் தக்க இடம் வேண்டும். அப்போதுதான் அதன் பயனை நாமும் முழுசாக
அனுபவிக்க இயலும். அதை நெருக்கடியில் தவிக்கவைத்துவிட்டுப் பலனை எதிர்பார்த்தால் பூச்சியம் தான் கிடைக்கும். இதெல்லாம் மர வளர்ப்பில் அடிப்படையான விஷயங்கள் என்றார். ‘எல்லாம் தெரியும்’ என்று இவ்விஷயத்தில் அசமந்தமாய் இருப்பவர்கள் கண்டிப்பாய் ஏமாந்துபோவார்கள்.
விதையையோ, கன்றையோ ஊன்றும் முன்பு செய்ய வேண்டிய முக்கிய விஷயம் பூஜை. கொத்திச் சீராக்கப்பட்ட இடத்தை வணங்கவேண்டும். ‘‘ஆளாகி நின்று எங்களைக் காப்பாற்று’’ என்று தொட்டுக் கும்பிடவேண்டும். அப்புறம்தான் நடவேண்டும். ஒருவர் நட்ட கன்றுகளைக் காப்பாற்றுவது அவர் கடமை. ஒருகாலும் இன்னொருவர் தீண்ட இடம் தரலாகாது. காற்று, மழை, வெள்ளம், ஆடு, மாடு, திருடன் என்று எத்தனை எத்தனை தொந்தரவுகள். எல்லாவற்றிலிருந்தும் கண்ணைப் போல காப்பாற்றி வரவேண்டும். ‘என்னுடையது’ என்று ஒரு அபிமானம் மனசில் விழவேண்டும். நம்மைக் கண்டதும் வளைந்து நெளிந்து அது தலையசைக்கிற அளவுக்கு மரங்களுடன் பரிச்சயத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
முடியும் போதெல்லாம் வளரும் மரங்களுக்கு தண்ணீர் ஊற்றி எரு, உரம் வைக்க வேண்டும். பூச்சிகள் அரிக்க விட்டுவிடக்கூடாது. அதுதான் அக்கறையின் அடையாளம். கவனமுடன் இருக்கவேண்டும் என்றார். இதில் தயக்கம் காட்டவே கூடாது என்று திட்டவட்டமாய்ச் சொன்னார். இந்த வழங்குதல்தான் மரங்களுக்கும் ஒருவருக்கும் நல்ல உறவை ஸ்தாபிக்க வைக்கும் என்றார். ஏதாவது ஒரு காலத்தில் யாருக்கும், உரிமை என்கிற பிரச்சினை வரும்போது இந்த ‘உறவுதான் கைகொடுத்து உதவும்’ என்றார். ஒருமரம் வளர்ப்பவனுக்குப் பல நிலைகளில் தொலைநோக்குப் பார்வை தேவை என்று சொன்னார்.
கனி தரும் மரங்கள் எனில் பூவும், பிஞ்சுமாய்ப் பெருகி நிற்கிற காலத்தில் இருந்தே எச்சரிக்கைகொள்ளவேண்டும். இருபத்து நான்கு மணி நேரமும் அதன் மேலேயே கண் வைத்திருக்க வேண்டும். வேலிகளைப் புதுப்பிக்கவேண்டும். காவலைப் பலப்படுத்தவேண்டும். கனியும் காலத்தில் விழிப்புணர்வு தேவை. அடுத்தவர் உழைப்பைத் தட்டிச் செல்லும் ஆள்கள் நிறைந்த காலமாயிற்றே. எந்த நேரத்தில் எது நடக்கும் என்று சொல்லமுடியாது. ஒவ்வொரு காரியமும் பாடுபட்டவனையே சேரவேண்டும். மரம் வளர்ப்பவனின் இன்னொரு சிக்கல் தினந்தோறும் அதனடியில் குவியும் சருகுகளைப் பெருக்கி வாருவதும் கூடு கட்ட வரும் பறவையினங்களின் கூச்சலை ரசிக்கிறமாதிரி வேஷத்தோடு சகித்துக் கொள்வதும்தான். உள்ளுக்குள் கசப்பு, வெளியே ரசனைத் தோற்றம். இரண்டையும் சாமர்த்தியமாய்ச் செய்ய வல்லவனையே மரங்களின் பலன் சாரும் என்றார். அவனது முழுத்திறமையும் இந்த மாறுவேஷத்தில்தான் வெளிப்படவேண்டும் என்றார்.
பொய்யா, மெய்யோ சத்தியங்களுக்கு அஞ்சக் கூடாது என்பது ‘இன்னொரு விஷயம் என்று குறிப்பிட்டார் அவர். இதோ கனி பழுத்துவிடும் என்று சத்தியம் செய். யார் வந்து கேட்டாலும் இந்தச் சத்தியத்தைத் திரும்பத்திரும்பச் செய்ய வேண்டும். தேவையெனில் வார்த்தைகளை மாற்றிமாற்றி சத்தியம் செய்யவேண்டும். நம்பும்படியாய் சத்தியம் செய்பவனே நல்ல பலனை அடைய முடியும். ‘‘பொய்ச் சத்தியம் தப்பில்லையோ’’ என்று நடுவில் இடைமறித்தேன். லௌகிக நோக்கில் தப்பாக இருக்கலாம். ஆன்மீக ரீதியில் யோசித்தால் இது சரியாகும் என்றார். ‘‘எப்படி?” என்றேன். எதிராளி ஒருவன் தினந்தோறும் ‘‘இது காய்க்காது இது பயனற்றது. இது வீண் என்று முன்னால் நின்று சொல்லிக் கொண்டு இருக்கும் நிலையை எப்படி எதிர்கொள்வது. சுய நம்பிக்கையை விடாமல் இருக்கவும், சுற்றி இருக்கிறவர்களை நம்ப வைக்கவும் அவன் போராட வேண்டி இருக்கிறது. அவனுக்குத் தெரியாதா கனிதர நாளாகும் என்று. ஆனால் ஒரு நம்பிக்கையின் பொருட்டு ஆவேசமான சத்தியம் அவசியமாகிறது என்றார். விவாதிக்கும் அவர் திறமையில் நான் நெகிழ்ந்து உட்கார்ந்திருந்தேன்.
மரம் வளர்க்கிறவனுக்குத் தெரிந்திருக்க வேண்டிய இன்னொரு முக்கியக் கலை மரம் வெட்டுதல் என்றார். நான் திகைத்து விட்டேன். அவரோ எந்த உணர்ச்சியையும் பிரதிபலிக்காமல் இருந்தார். ‘‘அழிக்கத் தெரிந்தவனால்தான் வளர்க்கவும் முடியும்” என்று மீண்டும் அடித்துச் சொன்னார். சமயங்களில் ஒரு தோப்பு மரம் தோப்புக்குரியவனின் சகல கட்டுப்பாடுகளையும் மீறி அடுத்த தோப்புகளுக்கு பயன் கொடுத்துவிடும். இப்படி ஒரு கோணல் புத்தி மரத்தை எப்படிச் சகித்துக் கொள்வது? அப்புறம் தோப்புக்கு வெளியே சில ஒற்றை மரங்கள் இருக்கும். அது செய்யும் அட்டகாசங்கள் அளவு கடந்தவை. தன் கிளைகளைத் தோப்புக்குள் நீட்டி மற்ற மரங்களின் வளர்ச்சியைக் கெடுக்கும். இதற்கு எப்படி இடம் கொடுப்பான் ஓர் உரிமையாளன்?
அழிப்பது தவிர வேறு வழியில்லை. அவையோ தந்திரமும் செயல் நுணுக்கமும் வேண்டும் காரியங்கள். மெல்லமெல்ல ஒரு கதையை அவிழ்த்துவிடு. ஏதேனும் ஒரு புரளியினால் முதலில் அந்த பிம்பத்தை உடை. யார் ஆதரவு கொடுக்கிறார்களோ, அவர்கள் கையாலேயே அழியுமாறு தந்திரங்களை உபயோகி. அழியும்போது அழிவுக்காக எல்லோரோடும் சேர்ந்து பொய்க்கண்ணீர் வடித்துக் கதறுவதுதான் தந்திரத்தின் உச்சக்கட்டம் என்றார்.
அடுத்த ஸ்டேஷன் நெருங்கிக்கொண்டிருந்தது. அவர் பெட்டிகளை எடுத்து வெளியே வைத்தர்ர். சாய்மானத்துக்கு உதவியாய் இருந்த தலையணையிலிருந்து காற்றைத் திறந்து வெளியேற்றிவிட்டுக் கச்சிதமாய் மடித்துப் பெட்டிக்குள் அடுக்கினார். அவர் இன்னும் பேசமாட்டாரா என்று நான் வெகுஆவலுடன் அவர் முகத்தையே பார்த்திருந்தேன். ஸ்டேஷன் நெருங்குவதற்குள் மரத்தின் ரகசியங்களையெல்லாம் அவரிடம் இருந்து அறிந்துகொள்ளவேண்டும் என்கிற கட்டுக்கடங்காத ஆவல் என்னை இயக்கியது. வண்டியின் வேகம் நிதானகதியை அடைந்தபோது வெளியே தலைகள் தென்படத் தொடங்கின. புறப்படத் தயாராய் எழுந்து நின்ற அவர் கடைசி முறையாய் என்னைப் பார்த்து ‘‘யார் வேண்டுமானாலும் மரம் வளர்க்கலாம். நீ, நான், இந்த உலகத்தில் பிறந்த எல்லோர்க்கும் மரம் வளர்க்கிற உரிமை இருக்கிறது. ஆனால் எல்லோர் கையிலும் மரம் வளர்ந்துவிடாது தெரியுமா. மரத்துக்கும் ஒருவனிடம் வளர இஷ்டம் வேண்டும். வளர்க்கிறவனும் பிரியப்பட்டு, மரமும் இஷ்டப்பட்டால்தான் வளரும். அதுதான் தோப்பாகும். பலன் கொடுக்கும். மற்றதெல்லாம் சும்மா வீண் வேலை, புரிந்ததா’’ என்றார்.
உறைந்துபோன நிலையில் அவர் போகும் திசையையே பார்த்தபடி இருந்தேன் நான். வண்டி மீண்டும் புறப்பட்டு விட்டது.
(கணையாழி 1992)