Home

Sunday, 25 February 2024

கோட்டை - சிறுகதை

 


கோட்டையில் பதவிப் பிரமாணவிழாவாம். தொழிலாளர்களின் கோரிக்கையை மதித்து பகல் பொழுது வேலையை ரத்து செய்திருந்தது கம்பெனி.

மதியச்சாப்பாட்டை வேண்டுமென்றே இரண்டு மைல் தள்ளி இருக்கிற ஓட்டலுக்கு நடந்துபோய் முடித்தேன். உச்சிப்பொழுதில் கூட குளுகுளுவென்று காற்றடிக்கிற நகரம் இது. மனசில் பொங்கும் எரிச்சல் தணியத்தணிய வீசுகிற காற்றை என்ன செய்வது. எரிந்துகொண்டே இருக்கும் நெருப்புக்குப் பக்கத்தில் போய் உட்காரலாமா என்று தோன்றியது

தலைக்குள் ஏகப்பட்ட சிந்தனைகள். பிடுங்கி எறியஎறிய வந்து தைக்கிற அம்புகள்போல யோசனைகளின் தாக்குதல். ஒரே அவஸ்தை. விஷயம் என்னவென்றால் அரசியலின் அசிங்கம் பிடிப்பதில்லை எனக்கு. சின்ன வயசில் டூரிங் டாக்கீஸ்காரனின் ஒட்டுண்ணி அரசியலில் இருந்து நகரத்தில் தோளில் கைபோட்டுப் பேசிக்கொண்டே அடிவயிற்றில் உதைக்கிற ஆள்கள் வரை எத்தனைஎத்தனை ரகங்கள். எல்லோர்க்கும் துணையாய் இருந்து பட்டுப்பட்டு தெரிந்த மனசுதான் இது. எண்ணங்களிடமிருந்தெல்லாம் துண்டித்துக் கொண்டுபோய் எங்கேயாவது விழத்தான் ஆசை. பல வருஷங்கள் நகர்ந்து விட்டன. மாற்றமில்லாமல்தான் இருக்கிறேன்.

எங்கெங்கோ சுற்றியும் நேரம் கழியாமல் அறைக்குத் திரும்பிவிட்டேன். தளர்ந்துபோன உடம்பும் காரணம். அறை நண்பன் இல்லை. மின்விசிறியை ஓடவிட்டுப் படுத்துக்கொண்டேன். முகத்தைக் கோணலான பிம்பமாக்கிக் காட்டும் விசிறி மையக் குமிழியில் மனசைக் குவித்தேன். தாடை ஒட்டி முகம் நீண்டு தெரியும் பிம்பத்தைக் காணச் சிரிப்பாய் இருந்தது. மௌனமாய்ச் சிரித்தேன். சட்டென வேகமாய் சிரிக்கத் தூண்டி நெஞ்சில் ஒரு உந்தல். கட்டுப்படுத்த முடியாமல் புறப்பட்ட சிரிப்பு சுவரில் மோதிச் சிதறியது. அதற்கப்புறம் எப்போது தூங்க ஆரம்பித்தேன் என்று தெரியவில்லை.

தூங்கியதும், தூக்கத்திடையே கனவு கண்டதும் மட்டும் நினைவிருக்கிறது. கனவு கூட முழு ஞாபகத்தில் இல்லை. கொஞ்சம் கொஞ்சமாய்த்தான் பதிந்திருக்கிறது மனசில். அதாவது  ஒரு பெரிய ராஜ்ஜியம். திடுமென ராஜா செத்து விடுகிறார். ராஜாவுக்கு வாரிசு இல்லை. ராஜாவை பிரஜைகளுக்கு நடுவில் இருந்து தேர்ந்தெடுப்பதுதான் சம்பிரதாயம். பட்டத்து யானை சர்வ அலங்காரங்களோடும், தும்பிக்கையில் மாலையோடும் நகர்வலம் வருகிறது. தெருவின் விளிம்புகளில் புசுபுசுவென்று ஜனங்கள். தம் கழுத்தில் மாலை விழாதா என்று கண்களில் ஆவல், வெறி, ஏக்கம், சோர்வு. நடையாய் நடந்து யானை முடிவில் ஒருவன் கழுத்தில் மாலையிடுகிறது. பயங்கரமாய்க் கத்துகிறார்கள் ஜனங்கள். சுற்றிலும் ஒரே ஆனந்தக் கூத்து. மாலையணிந்தவனைத் தோளில் தூக்கி ஊர்வலம் ஓடுகிறார்கள். ராஜா ராஜா என்று ஒரே சந்தோஷக்கூப்பாடுடன் அலைகிறது கும்பல். உட்கார வைத்து மகுடம் சூட்டுகிறார்கள்.

கனவின் முதல் கட்டம் இது. அப்புறம் அடுத்த கட்டம். இப்போது பழைய ராஜாமேல் ஜனங்களுக்கு விருப்பமில்லை. மீண்டும் யானை ஊர்வலம். மாலை சூட்டல். கழுத்தில் மாலை விழுந்தவனுக்கு முடிசூட்டுவிழா. பழைய ராஜாவிடம் மகுடம் கேட்கிறார்கள். கொடுக்க மறுக்கிறான் அவன். வாங்கத்துடிக்கிறான் இவன். முதலில் வாய்ப்பேச்சில்தான் ஆரம்பிக்கிறது. வாதம் முற்றமுற்ற கைகலப்பாகி விடுகிறது. திடுமென மகுடம் கீழே உருண்டு விழுகிறது. குனிந்து எடுப்பதற்குள் பந்துபோல் உதைத்து விடுகிறார்கள் யாரோ. உதைபட்டுஉதைபட்டு உருள்கிறது மகுடம். உதைவாங்கிய மகுடம் பறந்து வந்து என் முகத்தில் தாக்கியதும் கலைந்து விட்டது கனவு. திகைத்துப்போய் எழுந்து உட்கார்ந்தேன். முகத்தை வலிக்கச் செய்த கனவை நினைத்ததும் கூச்சமாய் உணர்ந்தேன். எழுந்து முகம் கழுவிக் கொண்டு தேநீர் தயாரித்தேன்.

கோப்பையை நிரப்பிக்கொண்டு கட்டிலுக்கு மீண்டும் வந்தேன். வெளியில் இன்னும் மாலைப்பொழுதின் மிச்சமிருந்தது. மிச்சப்பொழுதின் வதையிலிருந்து எப்படி தப்பிக்க என்றிருந்தது. கோப்பையைப் பிடித்தபடி கைக்கடிகாரத்தைப் பார்த்தேன். ஒரு நிமிடத்துக்கு ஒரு மிடறு குடித்தேன். அடுத்த நிமிடம் அடுத்த மிடறு. அதற்கடுத்த நிமிடம் மூன்றாவது மிடறு. திடுமென மனசில் கம்பெனியின் மீது கோபம் மூண்டது. இவனை யார் விடுப்பு தரச்சொன்னது என்று நினைத்தேன்.

அலைபாய்கிற மனசை உடனே தடுக்கப் பதைபதைத்தேன். எதனுடனாவது ஐக்கியப்படுத்தித் திசைதிருப்பத் துடித்தேன். பார்வையில் பட்டது தடிமனான டெலிபோன் டைரக்டரிதான். எடுத்து கையில் வைத்துப் புரட்டினேன். ஆச்சரியம்தான்.  ஒட்டிக்கொள்ள ஆர்வம் மூண்டுவிட்டது. மனசில்- ஒவ்வொரு பக்கமாகத் தள்ளினேன். மிகச்சிறிய நுண்மையான எழுத்தில் அச்சான அதன் எண்கள் கவர்ச்சியாய் இருந்தன. நகரத்து ஜனங்களெல்லாம் எண்களாக மாறி விட்டது போல பிரமை. பெரியபெரிய உடல்கள். பல வர்ணங்களில் ஆடைகள். முகம் இருக்கிற பகுதியில் மாத்திரம் உருண்டையான பலகைகள். வசீகரமான வர்ணம். அதில் பளிச்சென எழுதப்பட்ட எண்கள். கை குலுக்கல்கள். கட்டித் தழுவல்கள். குதியாட்டம். கூச்சல். எல்லாமே எண்களைக் குறிப்பிட்டுத்தான். நினைத்தமாத்திரத்தில் அந்த மனச் சித்திரம் பிடித்துவிட்டது எனக்கு.

முக்கியஸ்தர்களின் எண்கள் கண்ணில் விழுந்தன. தலைப்பில் முதலமைச்சர் எண் அப்புறம் அமைச்சர்கள் எண்கள். அதுக்கப்புறம் உறுப்பினர்கள் எண்கள். வரிசைக் கிரமமாய் இருந்த விதத்தைக் கண்டதும் படிக்கட்டுகளுடனான ஒரு அரண்மனையின் அமைப்பு ஞாபகம் வந்து சிரித்துக் கொண்டேன்.

விசித்திரமான ஆசை முளைத்தது. இங்கு உட்கார்ந்தபடியே முதலமைச்சரைத் தேர்ந்தெடுத்தால் எப்படி இருக்குமென நினைத்தேன். ஒரு ஆட்டம் விளையாடிப் பார்க்க முடிவு கட்டினேன். முடிவு செய்த மாத்திரத்தில் உற்சாகம் கரைபுரண்டுவிட்டது. விரைவாய்ச் செயல்பட்ட மனம் திட்டத்தையும் தயார் செய்தது. அமைச்சர்களை எண்ணிப் பார்த்தேன் பத்து நபர்கள். இவர்களுக்குள் ஒரு முதலமைச்சரைத் தேர்ந்தெடுப்பது பெரிய விஷயமில்லை என்று தோன்றியது. எழுந்து வெள்ளைத்தாளைக் கிழித்து பத்து சீட்டுகள் தயார் செய்தேன். 0 முதல் 9 வரை எண்கள் எழுதி உருட்டினேன். சீட்டுகள் தயார். பெரிய பொறுப்பான காரியம் என்தோளில் அமர்ந்து விட்டதுபோல எண்ணிக்கொண்டேன். யாரையும் மனஸ்தாபத்துக்கு உள்ளாக்கிவிடக்கூடாது என்றும் நேர்மையை நூற்றுக்கு நூறு சதவீதம் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் தோன்றியது. நெஞ்சில் சின்ன படபடப்பு, ஆர்வம். மந்திரிகள் எல்லாரும் என் முகத்தையே பார்ப்பதுபோல பிரமை. கடவுளே என்று சொன்னபடி குனிந்து ஒரு சீட்டை எடுத்துப் பிரித்தேன் எண் 6. அந்த எண்ணுக்குரியவரை முதலமைச்சராய் அறிவித்தேன். இரண்டு நிமிஷம் கழிந்திருக்கும். அந்த முதலமைச்சர் சரியில்லை என்பதுபோலப் பட்டது. உடனடியாய் முதலமைச்சரை மாற்ற வேண்டும் என்பது போலத் துடித்தேன். சீட்டுக்கள் தான் தயாராய் இருந்ததே குலுக்கிப்போட்டு கண்ணை மூடிக்கொண்டு ஒரு சீட்டு எடுத்தேன். இப்போது 4. அவரை முதலமைச்சர்  ஸ்தானத்துக்கு ஏற்றிவிட்டு ஆறாவது எண்ணை இறக்கி விட்டேன். அந்த சந்தோஷமும் நிலைக்கவில்லை. மனசின் குறும்புதானோ, தந்திரமும் வக்கிரமும்தானா அந்த நிமிஷமே அவரை இறக்கிப் பார்க்க முனைந்தேன். என் கண்களில் குரூர சந்தோஷம் வந்துவிட்டிருந்தது. ஏதேதோ இளமை ஞாபகங்கள். மீண்டும் சீட்டுக்குலுக்கல். இப்போது 9. மாறி மாறி ஒவ்வொருவராய் முதலமைச்சராக்கி விட்டு அடுத்த நிமிஷமே புறங்கையால் உருட்டி தள்ளினேன்.

இருள் தொடங்கி இருந்தது. மனசின் குதூகலம் புரண்டது. ஆட்டத்தின் போதையில் தள்ளாடினேன். மேலும்மேலும் புதுமைகளைச் சேர்த்துப் பார்க்கத் துடித்தேன். மந்திரிகளாக இருப்பவர்களிடமிருந்தே தேர்ந்தெடுக்கிற முறையை மாற்றி கீழே இருக்கிற இருநூற்று சொச்ச உறுப்பினர்களிடமிருந்து பொறுக்கியெடுக்கத் தீர்மானித்தேன். சந்தோஷம் புரண்டது. மீண்டும் சீட்டுக்குலுக்கல். இப்போது எண்களைக் குறித்துக்கொள்ள ஒரு தாளும் பேனாவும் அவசியமானது. ஒரு தேர்வுக்கு மூன்று முறை குலுக்கி எடுக்க வேண்டியதாயிருந்தது. என் ஞாபகத்தில் எனக்கு நம்பிக்கையில்லை. பலவீனத்தால் தப்பான தீர்ப்பு ஆகிவிடக்கூடாது என்றும், எந்த உறுப்பினர்க்கும் துரோகம் செய்துவிடக்கூடாது என்றும் நினைத்தேன். ஒவ்வொரு முறை குலுக்கியானதும் எண்ணைக் குறித்துக்கொண்டேன். மூன்று எண்கள் பூர்த்தியானதும் தான் தேர்வானவரை அறிவித்தேன். இந்த ஆட்டம் மிகவும் பிடித்துவிட்டது. வாய்ப்பற்றவர்க்கும் கூட ஒரு வாய்ப்பை நீட்டிப்பதில் ஆத்ம திருப்தியிருந்தது. இங்கும் மனசின் விசித்திரம்தான் எமனானது. முழுசாய் யாரையும் ஆள விடவில்லை. இறக்கிப் பார்த்து வேடிக்கை காண ஆசை மூண்டது, உன்மத்தம் பிடித்தவன் போல மீண்டும் மீண்டும் சீட்டுகளைக் குலுக்கி எண்ணைத் தேர்வு செய்து அறிவித்தேன். சிதைத்தேன். சுற்றிலும் சிதைவுகளின் அடையாளம். சிருஷ்டியின் அகங்காரம். அறையில் ஆழ்ந்த அமைதி படர்ந்துவிட்டது.

சன்னலுக்குப் பக்கத்தில் நின்றேன். தெரு இருளில் விளக்குகள் கண்சிமிட்டின. என் உற்சாகத்தை இழந்துவிடக்கூடாது என்று மனசைத் திடமாக்கிக்கொண்டேன். ஒரு பிடிவாதம் இறுக ஆரம்பித்தது. ஆனந்தம், ஆழத்தில் சின்ன அகங்காரம் மனசினடியில் இப்படியா நான் என்று ஆச்சரியம் தட்டியது. கேவலம், வெறி, எதுபற்றியும் அக்கறை கொள்ளும் நிலையிலில்லை. ஆட்டத்தைத் தொடர்ந்து ஆடவேண்டும். அது ஒன்றுதான் என்  குறிக்கோள். லாப நஷ்டங்களில் கவலை இல்லை.

உட்கார்ந்து புத்தகத்தைப் புரட்டினேன். தூய வெள்ளையில் பல பக்கங்கள். அப்புறம் மஞ்சளில் அப்புறம் ஆரஞ்சு வர்ணத்தில் முக்கியத்துவம் கருதிய பிரிவுகள் திகைப்பூட்டியது. சாதிமதத்தின் இன்னொரு அடையாளமோ இது என்று நினைத்துக்கொண்டேன். தூள்தூளாக உடைத்துவிட வேண்டும் என்று நெஞ்சில் ஒரு துடிப்பு. கைகள் முறுக்கேறின. ரத்தம் உஷ்ணமானது பேதாபேதமின்றி சாமானிய எண்களில் இருந்து முதலமைச்சரைத் தேர்ந்தெடுக்க முடிவு செய்தேன். எப்படி எப்படி என்று மூளையைக் கசக்கினேன்.

புத்தகம் முழுக்க ஆறு எண்கள் கொண்ட இலக்கம். ஏறத்தாழ ஒரு லட்சம் இலக்கங்கள். என் தேர்வின் பெருந்தன்மையை மெச்சிக்கொள்ளத் தோன்றியது. வழக்கமான பத்தே சீட்டுகள்தான். ஆனால் எடுக்கவேண்டியது ஆறு முறைகள். தேர்வு சுலபம்தான் தேர்வுக்குரியரைத் தேர்ந்தெடுப்பதில்தான் சவால் இருந்தது. நுணுக்கமான தேடல் முக்கியம். பல நூறு பக்கங்கள். மலைப்பான விஷயம்தான். எனக்கிருக்கிற உற்சாகத்தில் புலிப்பாலைக்கூட கொண்டுவரும் வேகத்தில் இருந்தேன். அச்சிட்ட எண்களுக்குள் அலைந்து என் மரியாதைக்குரிய முதலமைச்சரைக் கண்டுபிடித்துவிட்டதில் கம்பீரமாய் உணர்ந்தேன்.

இப்போதும் அதிருப்திதான். முதலமைச்சர் ஸ்தானத்தில் அந்த எண்ணைச் சகித்துக்கொள்ள இயலவில்லை. ஒரு பெரிய நாற்காலி. ஏறி உட்கார்ந்ததும் முகபாவனைகளில் மாற்றம். திமிர் வழியும் கண்கள். உடனேயே உருட்டிக்கவிழ்க்க துறுதுறுத்தது நெஞ்சு.

சீட்டுகளைக் குலுக்கினேன். ஒவ்வொரு எண்ணையும் குறித்தபிறகு மீண்டும் குலுக்கலைத் தொடர்ந்தேன். மூன்று குலுக்கலாகிவிட்டது. கையில் மூன்று எண்கள். ஒருசேர எண்களைப் பார்த்ததும் ஆச்சரியம். பதற்றம். எனது இலக்கத்தின் ஆரம்ப எண் அது, துடிப்பின் விளிம்புக்கு வந்துவிட்டேன். முகத்தில் ரத்தத்தின் பாய்ச்சல். ஒரே நொடியில் உடம்பு முழுதும் சூடேறியது. மனமெங்கும் ஒரு கிளர்ச்சி. ஆனந்த அதிர்ச்சியில் உறைந்து உட்கார்ந்தேன். அடுத்த மூன்று எண்களும் எனக்குரியதாகவே இருந்து விட்டால் நான்தான் முதலமைச்சர். அந்தக் கனவு எனக்குப் பிரியமாய் இருந்தது. முதலமைச்சர் ஸ்தானத்துக்குரிய அசைவுகள் என் தேகமெங்கும் பரவியதை உணர்ந்தேன். நெஞ்சில் ஒரு நிமிரல். நெற்றியில் வெளிச்சம். கண்களில் ஒரு கனிவு. 

அந்த ஸ்தானத்துக்குத் தயாராய் இருந்தேன். நான்காவது சீட்டு எடுக்க அவசரப்படவில்லை. கனவின் மயக்கத்தில் திளைத்திருக்க நினைத்தேன். மனசின் மூலையில் நாலாவது சீட்டை எடு எடு என்று ஒரு சின்ன கூச்சல். சோம்பலாய் எடுத்துப் பிரித்தேன். கையில் சிறு நடுக்கம். எண்ணைப் பார்த்ததும் மகாதிருப்தி. எனக்குரிய எண்ணே அதுவும். கடவுளே கடவுளே என்று சொல்லிக் கொண்டேன். நெஞ்சில் ஆனந்தம் தளும்பியது. கூடவே அச்சத்தின் கவிதலும். பதற்றம் கூடிவிட்டது இப்போது. தவிப்பின் தணலில் வேர்வை பொங்கியது. எழுந்து குளிர்ச்சியாய் தண்ணீர் குடித்தேன். துண்டால் முகத்தையும், கழுத்தையும் அழுத்தித் துடைத்துக் கொண்டேன். இப்போது ஆட்டத்தில் பின்வாங்க முடியாது. ஆடியே தீர வேண்டும். வெற்றியா தோல்வியா. இரண்டில் ஒன்று பார்த்தே ஆக வேண்டும். ஓய்ந்து கிடப்பதில் அர்த்தம் இல்லை. அடுத்த சீட்டுக் குலுக்கல். ஐந்தாம் எண். பிரித்துப் பார்க்க கை நடுங்கியது. ஆவல்தான் பிரிக்க உந்தியது. என்ன அதிசயம். அதுவும் எனக்குரியது. கடவுளே. வாய்விட்டுக் கத்தினேன். இன்னும் ஒரே ஒரு சீட்டு. என் ஸ்தானத்தில் பெருமையும், சிறுமையும் அந்தப்புள்ளியில்தான். பிரசவ அறையின் வெளியிலிருக்கும் புருஷன்மார்களின் பதற்றம் இருந்தது, எனக்குள். வெளுப்பேறிவிட்டது என் முகம். கண்ணாடியில் சென்று முகத்தைப் பார்த்தேன். எனக்கே என் முகம் பிடிக்கவில்லை. அருவருப்பான சாயல் வந்ததுபோல இருந்தது. ஆட்டத்தைத் தடுக்கமுடியாத கட்டத்துக்கு நகர்ந்து விட்டேன் நான். நெஞ்சில் பயம். வெளிப்பட்ட நடுக்கத்தில் உடம்பு தவித்தது. எடுப்பதா வேண்டாமா. ஒரே குழப்பம். எனக்கு முன்னால் இரண்டே வாய்ப்பு. தேர்வு பெறின் முதலமைச்சர். இல்லாவிட்டால் சாமான்யன். இரண்டாம் நிலையில் நேரும் துக்கத்தைத் தாங்கமுடியாதுபோல இருந்தது! பொறாமையிலேயே செத்துவிடுவேன் என்று பயந்தேன்.

சீட்டுகளைக் குலுக்கி விசிறினேன். பத்து சுருள்களும் கண்முன்னால் கிடந்தன. ஒரு வெற்றுப் பார்வையை அதன் மேல் செலுத்தினேன். எடுக்க நெருங்கும் தருணம் தொலைபேசியின் அழைப்பு தடுத்தது. கறுப்பு நாய்க் குட்டியாய் உட்கார்ந்திருந்த தொலைபேசிப்பெட்டியை உடைத்து நொறுக்கலாமா என்று ஆத்திரம் மூண்டது. அந்த அழைப்பையும் புறக்கணிக்க முடியவில்லை. சீட்டுத்தேர்வை நிறுத்திவிட்டு தொலைபேசியின் பக்கம் நகர்ந்து ரிசீவரைக் கையில் எடுத்தேன். என் அதிர்ஷ்டத்தை உதைத்துச் சிதைத்த கழுதையின் குளம்பைத் தொட்டது போல  உணர்ந்தேன். மறுமுனையில் கூச்சல். குரல் அடையாளமே அறை நண்பன் என உணர்த்தியது. சங்கடத்துடன் காதில் பொருத்திக் கொண்டுஎஸ்என்றேன்.

சங்கரன்தான... ஏன்டா எவ்ளோ நேரமா கூப்படறன். காதுல விழலியா. அறைல என்னடா செய்ற முண்டம். கம்பெனில தூங்கறதுக்கா லீவ் உட்டாங்க. நீயும் கோட்டைக்குத்தான் வந்திருப்பியோன்னு எவ்ளோத்தரம் தேடனன்னு தெரிமா. தேடித்தேடி கண்ணே பூத்துப் போச்சு. ... இன்னா பிரமாதமான கூட்டம் தெரிமா? நம்ம தலைவர்தா இந்த தரமும் முதலமைச்சர். தலைவர் பேச்ச இன்னாங்கற. சும்மா தேனாறு பாலறுங்கறாங்களே அப்பிடி இருந்திச்சி போயேன். இந்த பேச்சுக்கே இன்னம் நாலு தரம் அவுரு கோட்டைல இருக்கலாம். டேய் என்ன லைன்ல இருக்கறியா இல்லியா... சொல்றது காதுல உழுதா...’

சொல்லு... சொல்லுடா

கோட்டைக்குத்தான் வரல. சாப்பாட்டுக்காச்சும் வந்துரு. நாயரு கடைல வெய்ட் பண்றன். என்ன, சீக்கிரம் வரியா...’

சரி

வைத்துவிட்டு நிமிர்ந்தேன். ரொம்ப களைப்பாக இருந்தது. திரும்ப கட்டிலில் கிடந்த சீட்டுச் சுருள்களைப் பார்த்தேன். ஆறாவது சீட்டை எடுக்கத் தோன்றவில்லை எனக்கு.

(1990)