Home

Sunday, 28 January 2024

பாதுகாப்பு - சிறுகதை

 

“வணக்கம் மிஸ்டர் ரங்கராஜ். தீபிகா அனிமல்ஸ் கேர் அசோரியேன்ஸிலிருந்து பேசுகிறேன். என் பெயர் சதாசிவராவ். நீங்கள்  ராவ் என்றே அழைக்கலாம். இரண்டு நிமிடங்களுக்கு முன்னால் நீங்கள் அனுப்பிய மின் அஞ்சலை இப்போது தான் படித்தேன். உங்களைப்போன்ற பெரிய மனிதர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்வதில் எங்கள் அசோசியேஷன்ஸ் மிகவும் கொள்கிறது”.

“இவ்வளவு சீக்கிரம் நீங்கள் தொடர்பு கொள்வீர்கள் என்று எதிர்பார்க்கவே இல்லை மிஸ்டர் ராவ். தொடர்புத் தளத்திலேயே இருந்தீர்களா?”

“ஆமாம் மிஸ்டர் ரங்கராஜ். இருபத்திநாலு மணிநேரமும் தொடர்புத் தளத்திலேயே இருப்போம். வாடிக்கையாளர்களின் தேவையை அறிந்து சேவை செய்வதில் தீபிகா அசோசியேஷன்ஸ் எப்போதுமே முன்னணியில் இருக்கும்“

“கேட்கவே நிறைவாக இருக்கிறது. உங்கள்மீது உடனடியாக நம்பிக்கை பிறக்கும்வண்ணம் நேர்த்தியாகப் பேசுகிறீர்கள். பலர் மின் அஞ்சல் முகவரி என்று ஒன்றைக் கொடுப்பார்கள். ஆனால் எத்தனை மடல்கள் அனுப்பினாலும் ஒருவரி பதில் இருக்காது. அழைப்பும் வராது. என் அனுபவத்தில் கசப்புகளே அதிகம். நீங்கள் வித்தியாசமானவராக இருக்கிறீர்கள்”.

“உங்கள் பாராட்டுக்கு மிகவும் நன்றி மிஸ்டர் ரங்கராஜ். வாடிக்கையாளர்கள் மனநிறைவில்தான் எங்கள் மகிழ்ச்சியே அடங்கியிருக்கிறது. செய்யும் சேவைக்கு நீங்கள் கட்டணம் செலுத்திவிடுவீர்கள் என்பது முக்கியமல்ல. இந்தச் சேவை மூலம் உங்களுக்கும் எங்களுக்குமான தொடர்பு நிரந்தரமான ஒன்றாக மாறவேண்டும். அதுதான் முக்கியம்.”

“உங்கள் வேகமும்  ஆர்வமும் துடிப்பான பேச்சும் எப்படிப்பட்டவர்களையும் உங்களுடைய வாடிக்கைக்காரர்களாக மாற்றிவிடும்  என்று நினைக்கிறேன். உங்கள் பேச்சு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.”

“மிகவும் நன்றி மிஸ்டர் ரங்கராஜ். மிகவும் நன்றி. இப்போது சொல்லுங்கள். எங்களிடமிருந்து எந்தவிதமான சேவையை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?”

“எங்கள் குடும்பத்தில் நானும் என் மனைவியும் மகளும் மட்டும்தான். சின்னக்குடும்பம். ஆனால் இருண்டு நாய்கள் குழந்தைகளைப்போல எங்களிடம் செல்லமாக வளர்கின்றன.”

“நாய்கள் எப்போதுமே அப்படித்தான் மிஸ்டர் ரங்கராஜ், அன்புக்கும் கொஞ்சுதலுக்கும் கட்டுபட்டட விலங்கு. இறைவனுடைய விலங்குப் படைப்புகளில்  முதல் மதிப்பெண்ணை  நான் நாய்களுக்கே வழங்குவேன்.”

“என் மனத்திலும் அதே எண்ணமுண்டு மிஸ்டர் ராவ். மனிதர்களிடம் நாய்கள் காட்டும் பிரியத்துக்கும் விசுவாசத்துக்கும் ஈடு இணையே இல்லை. பாசமே அற்றவனுக்குக் கூட இவை பாசத்தைக் கற்றுக் கொடுத்துவிடக்கூடும்.”

“மிக அழகாகவும் பொருத்தமாகவும் சொல்கிறீர்கள்  மிஸ்டர் ரங்கராஜ். சரியான சொற்களைக் கச்சிதமாகப் பயன்படுத்துகிறீர்கள். கேட்கக்கேட்கக் கேட்டுக்கொண்டே இருக்கலாம்போல உள்ளது.  இவற்றை எங்கே வாங்கினீர்கள்?”

“ஆறு மாதங்களுக்கு முன்னால் ஆஸ்திரேலியாவுக்கு  எங்கள் நிறுவனத்தின் சார்பாகச் சென்றிருந்தேன். அங்கே எங்கள் நிறுவனக் கிளை மேலாளர் ஒருவர் அன்போடு இந்தக் குடடிகளைப் பரிசாகக் கொடுத்தார். இப்போது இரண்டுமே அழகாக வளர்ந்து நிற்கின்றன.”

“பெயர் சூட்டியிருக்கிறீர்களா?-”

“ஓ.. ஒன்றின் பெயர் மாயா. மற்றொன்றின் பெயர் சாயா.”

“அழகான பெயர்கள் மிஸ்டர் ரங்கராஜ். நாக்குப் பழக்கத்துக்கும வசதியான பெயர்களாக வைத்திருக்கிறீர்கள்.”

“எங்கள் மகளின் பெயரைவிட நாங்கள் இவற்றின் பெயர்களைத்தான்  அதிகமான  முறைகள் கூட்பிட்டிருப்போம். அவை எங்களோடு அந்த அளவுக்கு ஒட்டிக் கொண்டுவிட்டன.”

“அன்பைப் பொழிகிறவர்களிடம் தானேஅன்பை எதிர்ப்பார்ப்பவர்கள் ஒட்டுதலாக இருக்க முடியும்.”

“அந்த ஒட்டுதல்தான் இப்போது எங்களுக்குப் பிரச்சனையாகிவிட்டது.”

“என்ன மாதிரியான பிரச்சனை மிஸ்டர் ரங்கராஜ்? எங்களிடம் சொல்லுங்கள். எங்களால் முடிந்த அளவுக்கு நாங்கள்  தீர்த்துவைக்கிறோம்.”

“நாளைக்கு நாங்கள் குடும்பத்தோடு தில்லிக்குச் செல்ல வேண்டியுள்ளது. ஒரு வாரம் அங்கே தங்கியிருக்கவேண்டி உள்ளது. நாய்களைத் தன்னந்தனியே எந்தப் பாதுகாப்பும் ஆதரவும் இல்லாமல் விட்டுசெல்ல மனம் வரவில்லை.”

“அதற்குத்தான் நாங்கள் இருக்கிறோமே மிஸ்டர் ரங்கராஜ்,, உங்கள் கவலைகளையெல்லாம் சுத்தமாகத் துடைத்தெறிந்து விடுங்கள்,, மாயாவையும் சாயாவையும் பாதுகாப்பது எங்கள் கடமை மிஸ்டர் ரங்கராஜ். ஒரு வாரமல்ல. ஒரு மாதம் வேண்டுமானாலும் உலகம் முழுக்கச் சுற்றிவிட்டு வாருங்கள். இரண்டையும் பாதுகாத்து உங்களிடம் திருப்பியளிக்கும் பொறுப்பை தீபிகா அசோசியேஷன்ஸ் ஏற்றுக்கொள்ளும், சரிதானே?”

“கேட்கும்போதே ஒரு பாரம் மனத்தைவிட்டு இறங்கியதைப்போல உள்ளது மிஸ்டர் ராவ். கடந்த முறை என்ன நடந்தது தெரியுமா? அதைச் சொன்னால்தான் நான் இவற்றைப்பற்றி இந்த அளவு ஏன் பதற்றப்படுகிறேன் என்பது புரியும்.”

“சொல்லுங்கள் மிஸ்டர் ரங்கராஜ்”.

“அவசர வேலையாக நாங்கள் அனைவரும் மும்பை செல்ல வேண்டியிருந்தது அப்போது. இரண்டு நாள்கள் பயணம். இரண்டு நாள்களுக்கும் தேவையான உணவுப் பொருள்களையெல்லாம் தயார் செய்து வைத்துவிட்டுத்தான் சென்றிருந்தோம். பசிக்கும் நேரத்தில்  அவையாகவே சாப்பிட்டுவிடும் என்பது எங்கள் நம்பிக்கையாக இருந்தது. ஊரிலிருந்து திரும்பிவந்து பார்த்துது நாங்கள் அதிர்ச்சியில் மூழ்கிவிட்டோம். மாயாவும் சாயாவும் ஒருவாய் கூட உணவை உண்ணாமல் பட்டினியாகவே கிடந்தன. தயாரித்த உணவெல்லாம் அப்படிஅப்படியே இருந்தன. பார்க்கப் பார்க்க எங்கள் நெஞ்சே வெடித்துவிடும்போல ஆயிற்று”.

“சிலவகை நாய்களுக்கு எப்போதும் மனிதத்துணை மிகவும் அவசியம் மிஸ்டர் ரங்கராஜ். மாயாவும் சாயாவும் அப்படிப்பட்டவையாக இருக்கும் என்று தோன்றுகிறது.”

“நாங்களும் அப்படித்தான் நினைத்தோம். அடுத்த முறையும் இதேபோல் வெளியூர் செல்லவேண்டிய அவசியம் நேர்ந்தபோது சொந்த ஊரிலிருந்து தெரிந்த பெரியவர் ஒருவரை வரவழைத்துப் பாதுகாப்புக்கும் வேளாவேளைக்கு உணவு கொடுக்கவும் ஏற்பாடு செய்துவிட்டுச் சென்றோம்.”

“நன்றாகப் பார்த்துக்கொண்டாரா அவர்?”

“அவரால் இவற்றுக்குப் பாதுகாப்பு கிடைத்ததே தவிர இவற்றைக் சாப்பிடவைக்க அவருக்குத் தெரியவில்லை. பக்கத்திலேயே ஆளிருந்தும் மறுபடியும் அவை பசியும் பட்டினியாகவே கிடந்தன.”

“விலங்குகளின் மனநிலையைப் புரிந்துகொள்வது ஒரு கலை மிஸ்டர் ரங்கராஜ். சில சாதாரண மனிதர்களால் அப்படிப் புரிந்துகொள்வது சிரமம். நீங்கள் எந்தக் கவலையும் படாமல் நிம்மதியாகப் போய்வரலாம். எங்கள் நிறுவனத்தில்  அந்தச் சேவையிலேயே பழகிய நிபுணர்கள் இருக்கிறார்கள். ஒருகுறையும் வராமல் நாங்கள் பார்த்துக்கொள்வோம். சரிதானே. இந்த விஷயத்தைப் பொறுத்தமட்டில் நூற்றுக்கு நூறு சதம் நாங்கள் உறுதியளிக்கிறோம்.”

“அதற்காகத்தானே நான் உங்களுக்கு மின் அஞ்சல் அனுப்பினேன். உங்கள் கட்டண நடைமுறைகள் எப்படி என்று சொன்னால் நல்லது”.

“கட்டணம்  கிடக்கட்டும் மிஸ்டர் ரங்கராஜ்.  அனிமல்ஸ் கேர். அதுதான் முக்கியம். நம் உயிருக்கு எந்த அளவு மதிப்பிருக்கிறதோ அதற்கு இணையான மதிப்பை விலங்குகளுக்கும் வழங்கவேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள். அந்தப் பழக்கம் நம் நாட்டில் இன்னும் சரியாக வேரூன்றவில்லை. உங்களைப் போன்ற வாடிக்கையாளர்களைப் பார்த்துப்பார்த்து எதிர்காலத்திலாவது விலங்குகளின் மதிப்பு பெருகும் என்பது என் நம்பிக்கை.”

“நிச்சயமாக. நீங்கள் இந்நிறுவனத்தை எவ்வளவு காலமாக நடத்துகிறீர்கள்?”

“இரண்டு ஆண்டுகளாக இந்த நகரத்தில் நடத்தி வருகிறோம் மிஸ்டர் ரங்கராஜ். இத்துறையில் எங்களுக்கு நல்ல அனுபவமுண்டு. பெரிய பெரிய அதிகாரிகள் முதல் பல நிறுவனங்களின் மேலாளர்கள் வரை எங்கள் வாடிக்கைக்காரர்களாகத் தொடர்ந்து இருந்து வருகிறார்கள். அவர்களுடைய நம்பிக்கைக்குப் பாத்திரமாகவே இதுவரை நாங்கள் நடந்து வந்திருக்கிறோம்.”

“உங்களைப் பற்றிச் சொன்னதே ரிலையன்ஸ் நிறுவனக் கிளையொன்றில் மேலாளராக இருக்கும் என் நண்பன் ஒருவன்தான்.”

“மிஸ்டர். கிருஷ்ணகுமார்தானே?”

“அவரேதான். எப்படி அவ்வளவு சரியாக உடனடியாகச் சொல்கிறீர்கள்?”

“வாடிக்கையாளர்களைப் பற்றிய விவரங்களும் தேவைகளும் எங்கள் மனத்தில் சதாகாலமும் நிறைந்தே இருக்கின்றன மிஸ்டர் ரங்கராஜ். விலங்குகளைப் பராமரிக்கவென்று நல்ல காற்றோட்டமும் வெளிச்சமும் கொண்ட முப்பத்திரண்டு அறைகள் கொண்ட விடுதி இது. மூன்று ஷிப்டுகளிலும் மாற்றிமாற்றிப் பார்த்துக் கொள்ள பதினேழு பேர்கள் உள்ளார்கள். கால்நடை மருத்துவர் ஒருவர் காலையிலும் மாலையிலும் தினமும் வந்து சோதித்துவிட்டுச் செல்கிறார். விலங்குகளின் விருப்பத்தையும் தேவையையும் அறிந்து வைத்துக்கொண்டு அதற்கேற்ப மூன்று வேளைகளிலும் உணவை வழங்குகிறோம்.”

“நான் பார்த்ததில்லை. அதனால்தான் கேட்டேன். நீங்கள் தவறாக எடுத்துக் கொள்ளக்கூடாது”.

“நிச்சயமாக எடுத்துக்கொள்ள மாட்டேன். எங்கள் நிறுவனத்தைப் பற்றி உங்களுக்கு எடுத்துச் சொல்வது எங்கள் கடமையல்லவா? உங்களிடம் இணையதள நிழற்படக்கருவி இருக்கிறதா மிஸ்டர் ரங்கராஜ்?”

“இருக்கிறது மிஸ்டர் ராவ்”.

“அப்படியென்றால் கணிப்பொறியில் இணையத்துக்கான இணைப்பை ஏற்படுத்திக்கொண்டு நிழற்படக் கருவியின் முன்னால் வருகிறீர்களா?”

“என்ன விஷயம்  மிஸ்டர் ராவ்-?”

“ஒன்றுமில்லை.  எங்கள் நிறுவனம் இயங்கும் முறையைப் பற்றிய சில நிழற்படங்களை உங்களுக்குக் காட்ட விரும்புகிறேன்.”

“இருக்கட்டும், அங்கே நேரில் வரும்போது பார்த்துக் கொள்கிறேனே”

“பரவாயில்லை மிஸ்டர் ரங்கராஜ். அதிக நேரம் ஆகப் போவதில்லை. பத்துப் பதினைந்து படங்கள். அவ்வளவுதான்.”

“ஒரே ஒரு நொடி காத்திருங்கள். சரியான நிலையில் நிழற்படக் கருவியைத் திருப்பி வைக்கிறேன். ஆ. இப்போது சரி. உங்களை என்னால் பார்க்க முடிகிறது மிஸ்டர் ராவ். நீங்கள் மிகவும் இளையவராக இருக்கிறீர்கள்”.

“உங்கள் முகமும் தெரிகிறது மிஸ்டர் ரங்கராஜ். மாயாவும் சாயாவும் எங்கே இருக்கிறார்கள்?”

“பார்க்க விரும்புகிறீர்களா?  வெளியேதான் இருக்கின்றன. கூப்பிட்டுக்கொண்டு வரட்டுமா?”

“ஆஸ்திரேலியா வகை என்று நீங்கள் சொன்னதுமே பார்க்க ஆசையாக இருக்கிறது.”

“இதோ பாருங்கள், வந்துவிட்டன. இந்தச் சிவப்புக்காரிதான் மாயா. அந்த வெள்ளைக்காரி சாயா.”

“ரொம்ப அழகாக உள்ளன மிஸ்டர் ரங்கராஜ்.  நீங்கள் உண்மையிலேயே கொடுத்து வைத்தவர்கள். பளபளக்கும் அவற்றின் நிறமும் தொங்கும் அவற்றின் காதுகளும் பார்த்துக் கொண்டே இருக்கவேண்டும்போலத் தோன்ற வைக்கின்றன. நீங்கள் கவலையே படவேண்டாம். நாங்கள் அதிகபட்ச கவனத்தோடு பார்த்துக் கொள்வோம்.”

“அந்த நம்பிக்கை எனக்குள்ளது.”

“இதோ பார்த்தீர்களா, இந்தப் படம்தான் எங்கள் காப்பகம். அறைகளைப் பார்த்தீர்களா, எவ்வளவு  விசாலமாக உள்ளன”.

“ஆமாம். நல்ல வெளிச்சமும் வரும்போல உள்ளது.”

“இதோ,  இன்னொரு படத்தைப் பாருங்கள். பெரிய  புல்வெளி தெரிகிறதா?- இது எங்கள் தீபிகா நிறுவனத்துக்குச் சொந்தமானது. நடைபாதைத் தடங்களில் ஆட்கள் நாய்களை அழைத்துக்கொண்டு நடப்பதைப் பாருங்கள். இவர்கள் அனைவரும் எங்கள் ஊழியர்கள் மிஸ்டர் ரங்கராஜ். காலை, மாலை இருவேளைகளிலும் இவர்கள் இங்கே விலங்குகளோடு ஒருமணி நேரம் நடப்பார்கள்.”

“அழகான புல்வெளியாக இருக்கிறதே மிஸ்டர் ராவ். டென்மார்க்கில் முன்பு நான் பார்த்த ஒரு புல்வெளிதான் உடனடியாக என் நினைவுக்கு வருகிறது.”

“இந்தப் படத்தில் உங்களுக்குத் தெரிவது விலங்குகளின் குளியலறை. ஒவ்வொரு விலங்குகளும் தனிப்பட்ட தொட்டியையே கட்டிவைத்திருக்கிறோம். விரும்பும் நேரம்வரை அவை சுதந்திரமாகக் குளிக்கலாம். அவை சந்தோஷமாக இருக்கும்படி பார்த்துக் கொள்வதில் நாங்கள் நிறைய அக்கறை எடுத்துக் கொள்கிறோம்.”

“உங்கள் கவனமும் அக்கறையும் உங்களுடைய நிறுவனத்தின் மீதான மதிப்பை அதிகரிக்க வைக்கின்றன மிஸ்டர் ராவ். இப்படி ஒரு இடம் நாம் வாழும் காலகட்டத்துக்கு மிகவும் அவசியம் என்பதை உணர்ந்தவர்போல ஒவ்வொன்றையும்  கண்ணும் கருத்துமாகச் செய்திருக்கிறீர்கள். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.”

“மிகவும் நன்றி மிஸ்டர் ரங்கராஜ். இதைப் பாருங்கள், இது எங்கள் மருத்துவர் விலங்குகளைச் சோதிக்கும் படம்.”

“இவற்றையெல்லாம் பார்க்கப்பார்க்க உங்கள் நிறுவனத்தின் மீது என் நம்பிக்கை மிகவும் வலுப்படுகிறது மிஸ்டர் ராவ்”.

“நீங்கள் வெளியூரில் இருக்கும்போது சட்டென்று உங்கள் ஆசை விலங்குகளைப் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் எழலாம் இல்லையா?”

“நிச்சயமாக, தினமும் இல்லையென்றாலும், இரண்டு நாள்களுக்கு ஒருமுறை அல்லது மூன்று நாள்களுக்கு ஒருமுறை நிச்சயம் ஏற்படும்.”

“அதற்கும் நாங்கள் வசதி செய்து தருகிறோம். நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதேபோல ஒரு கணிப்பொறியும் இணையதள நிழற்படக்கருவியும் இருக்கிற இடத்திலிருந்து அழைக்கவேண்டும். அவ்வளவுதான். இருபத்திநாலுமணி நேரமும் நாங்கள் தளத்தின் தடத்திலேயே இருப்பதால் உடனடியாக உங்கள் தொடர்பு கிடைத்துவிடும். உங்கள் ஆசை விலங்குகளை இதே நிழற்படக்கருவியின் முன்னால் கொண்டு வந்து நிறுத்திவிடுவோம். நீங்கள் அவற்றைப் பார்க்கலாம். அங்கிருந்தபடியே அவற்றுடன் கொஞ்சலாம். ஓசையெழுப்பிக் கூப்பிடலாம். எல்லா வசதிகளும் இங்கே உள்ளன.”

“கணிப்பொறி எவ்வளவோ விஷயங்களுக்கு வசதிகளைச் செய்து தந்திருக்கிறதல்லவா?”

“அவற்றை நீங்கள் பிரிந்திருக்கிறீர்கள் என்கிற எண்ணமே உங்களுக்கும் வரக்கூடாது. அவற்றுக்கும் வரக்கூடாது.   உங்கள் அருகிலேயே அவை இருக்கின்றன என்கிற எண்ணத்துடனேயே நீங்கள் இருக்கவேண்டும் என்பதே எங்கள் ஆசை மிஸ்டர் ரங்கராஜ்”.

“நீங்கள் எடுத்துக் கொள்கிற அக்கறை ஒவ்வொன்றும் யாரையும் உடனடியாக உங்கள் பக்கம் ஈர்த்துவிடும்.”

“மாயாவும் சாயாவும் சைவ உணவுக்காரர்களா? அசைவ உணவுக்காரர்களா?”

“சைவம் சாப்பிடும். ஆனால் அசைவத்தை விரும்பிச் சாப்பிடும். நம்மோடு வாழ்ந்துவாழ்ந்து அவற்றுக்கும் நம் உணவுப்  பழக்கமே பதிந்துவிட்டது.”

“தப்பில்லை மிஸ்டர் ரங்கராஜ். ஒரு தகவலுக்காகத்தான் நான் கேட்டேன். எங்கள் பாதுகாப்பில் இருக்கும்போது அவை விரும்பிச் சாப்பிடும் உணவைக் கொடுத்து உற்சாகம் குன்றாமல்  வைத்திருக்கவே  கேட்டுத் தெரிந்துகொள்கிறேன். வேறு என்னென்ன கொடுப்பீர்கள்?”

“காலையில் பால். மாலையில் ஆட்டுக்கால் சூப். இவற்றைக் கொடுப்பதில் உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை இருக்குமா?”

“அவற்றுக்கெல்லாம் இங்கே எந்தப் பிரச்சனையும் இருக்காது., அவை எப்படிப் படுத்துறங்கிப் பழகியிருக்கின்றன?”

“அவற்றுக்கு மெத்தென்ற படுக்கையே வேண்டும் மிஸ்டர் ராவ். உங்களிடம் இருக்கிறதல்லவா?”

“ஏராளமாக உள்ளன. வெளியே என்ன சத்தம் மிஸ்டர் ரங்கராஜ்?- மாயாவும் சாயாவும் -குரைக்கின்றனவே”

“ஆமாம். அவைதாம் குரைக்கின்றன. இந்த ஜன்னல் வழியாக ஒன்றும் தெரியவில்லை. ஒரே ஒரு நொடி. இணைப்பைத் துண்டிக்காமல் காத்திருங்கள். வந்துவிடுறேன்.”

“தாராளமாகச் சென்று வாருங்கள். இந்த நிழற்படக் கருவியின் வழியாகத் தெரிகிற முகப்பறைப் பொம்மைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். எவ்வளவு விதவிதமான பொம்மைகளையெல்லாம் வைத்திருக்கிறீர்கள். நாய்ப் பொம்மைகளே  நாற்பது ஐம்பது தேறும்போல உள்ளதே. ஆஹா, ஒவ்வொன்றும்  என்ன அழகு, என்ன அழகு.”

“மன்னித்துக் கொள்ளுங்கள் ராவ். யாரோ பிச்சைக்காரன். மழையில்லை என்று பிழைக்க வழிதேடி ஏதோ ஊரிலிருந்து வந்தானாம். பையில் இருந்த பணத்தைப் பறிகொடுத்து விட்டானாம். மூன்று நாள்களாகச் சாப்பிடவில்லையயாம். ஊருக்குத் திரும்பிப் போகப்  பணமுமில்லையாம். தரித்திரம் பிடித்தவன். எவ்வளவு சொன்னாலும புரிவதுமில்லை. ஒரு ரூபாய் வேண்டும் ஒரு ரூபாய் வேண்டும் என்று இங்கே வந்து நம் உயிரை வாங்குகிறான்.”

எல்லாம் வேஷம் மிஸ்டர் ரங்கராஜ். நம்பவிடாதீர்கள். இப்படித்தான் ஏதாவது கதை சொல்லிக்கொண்டு பகலில் வந்து வீட்டை நோட்டம் பார்த்துவிட்டுப் போவார்கள். பிறகு இரவில் தம் கைவரிசையைக் காட்டுவார்கள். கடந்த மாதம் மட்டும்   ஜெயநகர் பக்கத்தில் நான்கு வீடுகளில் இந்தமாதிரி நடந்துள்ளது. தரித்திர வேஷத்தையெல்லாம் நம்பாதீர்கள். ஐயோ பாவம் என்று நினைத்தால் நம்மை அதோகதிக்கு ஆளாக்கிவிடுவார்கள் இவர்கள்.”

“உண்மைதான் மிஸ்டர் ராவ். அரசாங்கம் இந்த மாதிரியான ஆள்களையெல்லாம் முதலில் பிடித்துத் தண்டிக்கவேண்டும். இவர்களுக்குக் கொடுக்கிற தண்டனை மற்றவர்களுக்குப் பாடமாக அமையவேண்டும்.”

“சரியாகச் சொன்னீர்கள்.”

“மாயாவையும் சாயாவையும் எப்போது அங்கே அழைத்துவரலாம்?”

“அந்தச் சங்கடமே உங்களுக்கு வேண்டாம். நீங்கள் சரியென்று சொன்னால் இன்னும் இரண்டுமணிநேரத்தில் எங்கள் ஊழியர் வாகனத்துடன் உங்கள் வீட்டு வாசலில் நிற்பார் மிஸ்டர் ரங்கராஜ்.”

“ஓ..... அப்படியும் வசதியிருக்கிறதா?”

“வாடிக்கையாளர்களின் மனநிறைவே எங்கள் நோக்கமல்லவா? உங்கள் மின் அஞ்சலிலேயே வீட்டு முகவரியையும் நீங்கள் தந்திருப்பதால் எந்தப் பிரச்சனையும் இல்லை. எங்கள் ஊழியரே தேடிவந்துவிடுவார்.”

“ரொம்ப நன்றி மிஸ்டர் ராவ். இருக்கிற கொஞ்ச நேரத்தில் எப்படி இந்த வேலையைச் செய்து முடிக்கப்போகிறோம் என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன். எனக்கென்று எந்த வேலையையும் மிச்சம் வைக்கவில்லை நீங்கள்.”

“சேவைக்கு அதுதானே பொருள் மிஸ்டர் ரங்கராஜ். எங்கள் ஊழியரிடம் ஒரு விண்ணப்பம் கொடுத்தனுப்புகிறேன். மாயாவையும் சாயாவையும் பற்றிய தகவல்கள்தாம். நீங்கள் சொன்னதை வைத்து  நானே பெரும்பாலும் முழுமை செய்துவிட்டேன். விடுபட்டிருக்கிற ஒன்றிரண்டு இடங்களில் மட்டும் நீங்கள் விவரங்களைத் தரவேண்டும். இறுதியில் ஒரே ஒரு கையெழுத்து மட்டும் போட்டால் போதும்.”

“உங்கள் கட்டணத்தைப் பற்றி நீங்கள் ஒருவார்த்தையும் சொல்லவில்லையே மிஸ்டர் ராவ்”

“உங்களைப்போன்ற உயர்ந்த அந்தஸ்துள்ளவர்களுக்கு அது ஒரு பிரச்சனையே இல்லை மிஸ்டர் ரங்கராஜ். ஒரு நாளைக்கு  ஒரு விலங்குக்கு வெறும் ஐந்நூறு ரூபாய் மட்டுமே நாங்கள் கட்டணமாக வசூலிக்கிறோம்.”

“பரவாயில்லை. தெரிந்துக் கொள்வதற்காகத் தான் கேட்டேன். ஏதேனும் முன்பணம் தரவேண்டுமா-? காசோலையாகத் தரலாமா?”

“கவலைப்படவேண்டாம் மிஸ்டர் ரங்கராஜ். நான் முதலிலேயே சொன்னதைப்போல அனிமல்ஸ் கேர். அதுதான் முக்கியம். உங்கள் உயிருக்குயிரான  விலங்குகளையே எங்கள் பாதுகாப்பில் விட்டுச் செல்கிறீர்கள். இதுவே எவ்வளவு பெரிய முன்பணம் என்று எங்களுக்குத் தெரியாதா?  நிம்மதியாகப் போய்வாருங்கள். உங்கள்  பயணம் மகிழ்ச்சி நிறைந்ததாக அமையட்டும். மொத்தக் கட்டணத்தையும் நீங்கள் திரும்பி வந்தபிறகே கட்டினால் போதும்.”

“மிகவும் நன்றி மிஸ்டர் ராவ்.”

“நீங்கள் ஊரிலிருந்து திரும்பிய பிறகு தொலைபேசியில் அழைத்துத் தகவல் சொன்னாலும் சரி, அல்லது இன்று செய்ததைப் போல மின் அஞ்சல் அனுப்பினாலும் சரி, வாகனத்திலேயே விலங்குகளை அழைத்துவந்து உங்களிடம் ஒப்படைப்பார் எங்கள் ஊழியர்.”

“உங்களை எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை. எப்போதாவது நேரம் கிட்டும்போது உங்கள் நிறுவனத்தைப் பார்க்கவருகிறேன்.”

“அவசியம் வரவேண்டும் மிஸ்டர் ரங்கராஜ். உங்களுடன் தொடர்பு கொண்டதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். மாயாவையும் சாயாவையும் விரைவாகத் தயார்ப்படுத்துங்கள். பிறகு சந்திப்போம். நன்றி.”

“நன்றி மிஸ்டர் ராவ்.”

(வல்லினம், 2004)