1988ஆம் ஆண்டு பொங்கலையொட்டி சென்னையில் நடைபெற்ற புத்தகக்கண்காட்சிக்குச் சென்றிருந்தேன். எழுத்தாளர் சங்கரநாராயணனோடு இரு நாட்கள் கண்காட்சிக்குள் சுற்றி ஏராளமான புத்தகங்களை வாங்கினேன். அன்னம் பதிப்பகத்தில் அப்போது நவகவிதை வரிசை என்னும் தலைப்பில் வித்தியாசமான வடிவத்தில் புதிய கவிஞர்களின் கவிதைத்தொகுதிகளை வெளியிட்டிருந்தார்கள். நான் எல்லாத் தொகுதிகளையும் எடுத்துக்கொண்டேன். நான் கவிதைத்தொகுதிகளை ஆர்வத்துடன் வாங்குவதைப் பார்த்துவிட்டு கடையில் இருந்தவர் “இந்தத் தொகுதியையும் படிச்சிப் பாருங்க. நல்லா இருக்கும்” என்று ஒரு புத்தகத்தைக் கொடுத்தார்.
அத்தொகுதியின் பெயர் அனல்காற்று. நான் அதை ஏற்கனவே புத்தகத்தாங்கியில் பார்த்திருந்தேன். ஆனால் தெலுங்கு மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட கவிதைகள் என்பதால் எனக்குள் ஒரு தயக்கம் இருந்தது. ஆனால் அந்த நண்பருடைய பரிந்துரையை ஏற்று அத்தொகுதியையும் மறுபேச்சின்றி எடுத்துக்கொண்டேன்.
வீட்டுக்குத் திரும்பிய அடுத்த நாளே
அனல்காற்று தொகுதியைப் படித்துவிட்டேன். சி.நாராயணரெட்டி என்னும் கவிஞரின் கவிதைகள்.
சமூக எழுச்சியை முன்வைக்கும் கவிதைகள். புதுவிதமான சொல்லடுக்கு முறையில் அமைந்திருந்ததால்
அவை எனக்கு மிகவும் பிடித்திருந்தன. நாராயணரெட்டியைப்பற்றி என் தெலுங்கு நண்பர்களிடம்
கேட்டு இன்னும் கூடுதலான விவரங்களைத் தெரிந்துகொண்டேன். அவர் தெலுங்குமொழியின் பெருமைக்குரிய
சிறந்த கவிஞர்களில் ஒருவர் என்றும் ஏராளமான தொகுதிகள் வெளியாகியிருப்பதாகவும் தெரிவித்தார்கள்.
அப்போது திரைப்படங்களுக்கும் அவர் பாடல்களை எழுதிக்கொண்டிருந்தார்.
நல்லதொரு தொகுதியைத் தேர்ந்தெடுத்து
தமிழில் மொழிபெயர்த்த இளம்பாரதியைப் பாராட்டவேண்டும் என்று எனக்குத் தோன்றியது. நான்
உடனே அன்னம் பதிப்பகத்துக்கு இளம்பாரதியின் முகவரியைக் கேட்டு ஒரு கடிதம் எழுதினேன்.
பதிப்பகத்திலிருந்து எனக்கு அடுத்த வாரமே பதில் கிடைத்துவிட்டது. உடனே இளம்பாரதிக்கு
அவருடைய மொழியாக்கத்தைப்பற்றிப் பாராட்டி ஒரு கடிதம் அனுப்பினேன். அவரும் எனக்கு உடனடியாக
பதில் எழுதினார்.
இப்படித்தான் எங்கள் நட்பு தொடங்கியது.
ஏறத்தாழ பதினைந்து ஆண்டு கால கடிதப் பரிமாற்றங்களுக்குப் பிறகு புதுச்சேரியில் குடியேறியிருப்பதாக
ஒரு முறை கடிதம் எழுதியிருந்தார். இனி, புதுச்சேரியிலேயே வசிக்கப் போவதாகவும் அக்கடிதத்தில்
குறிப்பிட்டிருந்தார். அவர் குறிப்பிட்டிருந்த முகவரி எங்கள் வீட்டிலிருந்து நடந்து
செல்லும் தொலைவில் இருந்தது. அடுத்த முறை புதுச்சேரிக்குச் சென்றபோது, நான் அவருடைய
வீட்டுக்குச் சென்று சந்தித்தேன். நீண்ட நேரம் இலக்கியம் தொடர்பாக உரையாடினார்.
வீட்டில் இருப்பவர்களுக்கு என்னை அறிமுகப்படுத்தும்போது
இளம்பாரதி தெலுங்கு மொழியில் பேசுவதையும் என்னிடம் தமிழில் பேசுவதையும் அப்போதுதான்
கவனித்தேன். நான் அவரை அதிசயமாகப் பார்ப்பதைப் புரிந்துகொண்டதும் தங்கள் தாய்மொழி தெலுங்கு
என்று தெரிவித்தார். புதுச்சேரியில் அப்போது வசித்துவந்த கி.ராஜநாராயணன் தன் இளமைக்காலத்து
நண்பரென்றும் அவர்தான் பணிநிறைவுக்குப் பிறகான வாழ்க்கைக்கு புதுச்சேரி பொருத்தமான
ஊர் என்று ஆலோசனை கொடுத்ததாகவும் சொன்னார். அவருடைய ஒன்றுவிட்ட சகோதரர் அடுத்த தெருவில்
இருந்தார்.
அவரோடு தொடர்ந்து பேசப் பேச, பல புதிய
தகவல்களைத் தெரிந்துகொண்டேன். அவருடைய அப்பா ருத்ரப்பசாமி சுதந்திரப்போராட்டத்தில்
ஈடுபட்டு சிறைக்குச் சென்றவர். காந்தியவழியையே தன் வழியாகக் கொண்டு நடந்தவர். சிறையில்
அவரும் பெ.தூரனும் ஒன்றாகக் கழித்தவர்கள்.
பள்ளிக்கூடத்தில் சேர்க்கும் காலம்
வந்தபோது அவருடைய அப்பா அவரை சமஸ்கிருதத்தையும் ஆங்கிலத்தையும் மொழிப்பாடங்களாக எடுத்துக்கொள்ள
வைத்தார். அவருடைய அப்பா கல்வித்துறை அதிகாரி. அவர் முடிவை யாரும் மாற்றமுடியாது. குடும்பத்தினர்
அவருடைய முடிவுக்குக் கட்டுப்பட்டனர். பள்ளியிறுதி வரைக்கும் சமஸ்கிருதத்தையும் ஆங்கிலத்தையும்
மட்டுமே படித்ததால் அவருக்கு இரு மொழிகளிலும் நல்ல தேர்ச்சி கைவரப் பெற்றது. தாயின்
உதவியோடும் அவர் வயதையொத்த உறவினர்களின் உதவியோடும் தமிழ்மொழியை படிக்கவும் எழுதவும்
கொஞ்சம்கொஞ்சமாகக் கற்றுக்கொண்டார். அந்தக் காலத்தில் கிடைத்த சிறுவர் இதழ்களையெல்லாம்
ஒன்றுவிடாமல் படித்த பழக்கத்தால் தமிழ் மொழியின்
மீதும் கதைகள் மீதும் ஒருவித ஈர்ப்பு பிறந்தது.
இளம்பாரதி பால்யகால அனுபவங்களைச் சொல்லத்
தொடங்கினால், அந்தச் சித்தரிப்பால் அவர் நம்மை அந்தக் காலத்துக்கே அழைத்துச் சென்றுவிடுவார்.
என்னுடைய ஒவ்வொரு சந்திப்பின் போதும் பேச்சின் போக்கை எப்படியாவது அந்தத் திசையில்
செலுத்தி, கதை கேட்கத் தொடங்கிவிடுவேன். ஒவ்வொரு சந்திப்பிலும் கொஞ்சம்கொஞ்சமாக செய்திகளைக்
கேட்டு அவரைப்பற்றிய சித்திரத்தை நானாகவே உருவாக்கிக்கொண்டேன்.
மாணவப்பருவத்தில் மதுரை அமெரிக்கன்
கல்லூரியில் அவர் வேதியியலைத்தான் முக்கியமான பாடமாக எடுத்துப் படித்தார். ஆனால் அவர்
மனம் தமிழில் மூழ்கியிருந்தது. அவர் அறிந்த தெலுங்கு, சமஸ்கிருதம், ஆங்கிலம் அனைத்தையும்
கடந்து தமிழில் கவிதை எழுதும் ஆசை வந்தது. வாசிப்புப்பழக்கத்தால் உருவான வேகம் அவருக்குள்
அந்த விழைவை உருவாக்கிவிட்டது. மனத்தில் உருவான தாளக்கட்டுக்குப் பொருத்தமான சொல்லடுக்குகளை
உருவாக்கி கவிதைகளை எழுதினார். அவற்றைப் படித்த நண்பர்கள் அக்கவிதைகள் யாப்பிலக்கணப்படி
இல்லை என்பதைச் சுட்டிக்காட்டி கற்றுக்கொள்ளும்படி தூண்டினர். அவருடைய தந்தையார் அப்போது
தமிழ்ப்பேராசிரியராக இருந்த அ.கி.பரந்தாமனாரிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தி
யாப்பிலக்கணம் கற்றுக்கொள்ள வைத்தார். மிகக்குறுகிய காலத்திலேயே யாப்பிலக்கணத்திலும்
அவர் தேர்ச்சி பெற்றார். அதுவரை துளசிதாஸாக
இருந்தவர் தமிழ்க்கவிதை மீது கொண்ட ஆவலால் இளம்பாரதியாக உருமாறினார்.
ஒருமுறை மதுரைக்கு வந்த பாரதிதாசன்
அவருடைய கவிதைகளைப் படித்துப் பாராட்டி, அவருடைய கவிதைச்சுவடியிலேயே வாழ்த்துச்சொற்களை
எழுதி கையெழுத்திட்டுக் கொடுத்துவிட்டுச் சென்றார். அவருடைய கவிதைகள் பிரசண்ட விகடன், சிவாஜி, அமுதசுரபி
என பல இதழ்களில் வெளிவந்து பாராட்டுதல்களைப் பெற்றுத்தந்தன.
இளநிலை பட்டப்படிப்பை மதுரையிலும் முதுநிலை
பட்டப்படிப்பை சிதம்பரம் அண்ணாமலைப்பல்கலைக்கழகத்திலும் படித்துமுடித்த பிறகு சமூகக்
கல்விஅமைப்பாளர் பணிக்காக ஐதராபாத்தில் உள்ள தேசியப்பயிற்சி நிலையத்தில் பயிற்சிக்காகச்
சென்றார். அந்தச் சமயத்தில் தெலுங்கு மொழி அரிச்சுவடியை முறையாகக் கற்றுத் தேர்ந்து
படிக்கவும் எழுதவும் கற்றுக்கொண்டார். அவர் படித்த சந்தமாமா, யுவ போன்ற பத்திரிகைகள்
அவரை தெலுங்கு இலக்கியப் பத்திரிகைகளைத் தேடி வாசிக்கும் ஆர்வத்தை விதைத்தது.
ஊருக்குத் திரும்பிய பிறகு தான் படித்த
யுவ பத்திரிகையில் வெளியான ஒரு கதையைத் தேர்ந்தெடுத்து தமிழில் முதன்முறையாக மொழிபெயர்த்துப்
பார்த்தார். முதல் முயற்சியே வெற்றிகரமாக நிறைவேறியது. அந்தச் சிறுகதையை பகீரதனுடைய
ஆசிரியப்பொறுப்பில் வெளியான கங்கை என்னும் இதழுக்கு அனுப்பி வைத்தார். அடுத்த இதழிலேயே
அச்சிறுகதை பிரசுரமானது. சில வாரங்கள் இடைவெளியில் மஞ்சரி இதழுக்கு அனுப்பிய தெலுங்குச்
சிறுகதையும் பிரசுரமானது. தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும் சொந்த முயற்சியால்
தமிழ்மொழியையும் தெலுங்குமொழியையும் கற்று, தெலுங்குக் கதைகளைத் தமிழில் மொழிபெயர்த்து
அறிமுகப்படுத்தும் அளவுக்கு அவருடைய இலக்கிய ஆர்வம் அடிப்படைவிசையாக இருந்தது.
சிவகங்கை கல்லூரியில் வேதியியல் ஆசிரியராக
அவர் வேலையில் இணைந்தபோது அக்கல்லூரியின் தமிழ்த்துறையில் மீராவும் நா.தர்மராஜனும்
பணியாற்றி வந்தனர். மீராவுக்கும் இளம்பாரதிக்கும் இடையில் நல்லதொரு நட்பு நிலவியது.
இருவருடைய குடும்பத்தினரும் அடுத்தடுத்த வீடுகளில் வசித்துவந்தனர். இலக்கியக்கதைகளைப்
பரிமாறிக்கொள்ள அந்த நட்பு பெருமளவில் உதவியது.
எழுபதுகளின் தொடக்கத்தி்ல் இளம்பாரதி
மிகவும் தற்செயலாக சி.நாராயண ரெட்டியின் கவிதைத்தொகுயைப்
படித்தார். அக்கவிதைகளின் புதிய வடிவமைப்பும் சொல்லமைப்பும் அவரைப் பெரிதும் கவர்ந்தன.
தமிழ்க்கவிதையுலகத்துக்கு அது புதுப்பாய்ச்சலை அளிக்கக்கூடும் என்ற எண்ணத்தால், அத்தொகுதியில்
இருந்த எல்லாக் கவிதைகளையும் மொழிபெயர்த்து மீராவிடம் ஒப்படைத்துவிட்டார். கவிதைகளைப்
படித்துப் பார்த்த மீரா, தமிழில் அத்தொகுதிக்கு நல்லதொரு வரவேற்பு உறுதியாகக் கிடைக்குமென
நம்பினார். அன்னம் பதிப்பகம் என்னும் பெயரில் ஒரு புதிய பதிப்பகத்தைத் தொடங்கி அவர்
நடத்திக்கொண்டிருந்த நேரம் அது. அத்தொகுதியை அவரே அனல்காற்று என்னும் தலைப்பில் கொண்டுவந்துவிட்டார். ஏற்கனவே இதழ்களில்
வெளிவந்த சிறுகதைகள், கவிதைகள் வழியாக வாசகர்களுக்கு அறிமுகமான இளம்பாரதிக்கு நூல்வடிவில்
ஓர் அறிமுகத்தை மீரா கொடுத்தார். தமிழுலகம் அறிந்த மொழிபெயர்ப்பாளராக இளம்பாரதி வடிவெடுத்தார்.
அப்போதும் அவர் மனம் உறுதியான முடிவை
எடுக்கவில்லை. தமிழில் சொந்தமாக கவிதை எழுதுவதையும் கதை எழுதுவதையும் அவரால் நிறுத்தமுடியவில்லை.
இருப்பினும் த.நா.குமாரசாமி, நா.பார்த்தசாரதி போன்ற மூத்த படைப்பாளிகள் அவருக்கு அறிவுரை
வழங்கியதன் பேரில் அவர் மொழிபெயர்ப்பையே தன் துறையென வரித்துக்கொண்டார்.
அதற்குப் பிறகு தீபம், அமுதசுரபி, மஞ்சரி
என எல்லா இதழ்களிலும் அவருடைய தெலுங்குச் சிறுகதைகள் பிரசுரமாகத் தொடங்கின. போலோப்ரகட
சத்யநாராயணமூர்த்தி என்னும் தெலுங்கு நாவலாசிரியர் சுதந்திரப்போராட்டப் பின்னணியில்
எழுதிய கெளசல்யா என்னும் நாவலை மொழிபெயர்த்து நேரிடையாகவே மீனாட்சி புத்தகாலயம்
வழியாக வெளியிட்டார். அதைத் தொடர்ந்து தெலுங்கு மொழி சார்ந்த கவிதை, சிறுகதை, நாவல்
மொழிபெயர்ப்புகளின் அடையாளமாகவே இளம்பாரதி மாறிவிட்டார்.
பெரும்பாலான மொழிபெயர்ப்பாளர்கள் எளிதாக
ஒரு விஷயம் செய்வதற்குக் கைவரப் பெற்றதும், அதிலேயே மூழ்கி நிறைவடைவதுண்டு. ஆனால் இளம்பாரதியோ
இன்னும் இன்னும் என புதுமைகளை நாடிச் செல்லும் மனப்போக்கு கொண்டவராக இருந்தார். அதனால்
தன் சொந்த முயற்சியால் மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளையும் கற்றுக்கொண்டார். வழக்கம்போல
ஏராளமான சிறுகதைகளை மொழிபெயர்த்துப் பழகிய பிறகு மலையாளத்தின் மிகச்சிறந்த நாவல்களின்
ஒன்றான மய்யழிக்கரையோரம் நாவலை தமிழில்
மொழிபெயர்த்தார். நேஷனல் புக் டிரஸ்டு அதைப் புத்தகமாக வெளியிட்டது. 1998இல் சிறந்த
மொழிபெயர்ப்பாளருக்கான சாகித்ய அகாதெமி விருது அந்தப் புத்தகத்துக்குக் கிடைத்தது.
கறையான்கள் என்னும் தெலுங்குச் சிறுகதைத்தொகுதிக்கு
2005ஆம் ஆண்டுக்கான நல்லி-திசையெட்டும் விருது கிடைத்தது.
இளம்பாரதிக்கு இப்போது தொண்ணூற்றியொன்று
வயது. தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, சமஸ்கிருதம் என அவருக்கு
ஏழு மொழிகள் தெரியும். ஏழு மொழிகளிலும் அவரால் எழுதவும் படிக்கவும் தெரியும். எல்லா
மொழிகளிலிருந்தும் தமிழுக்கு அவர் மொழிபெயர்த்திருக்கிறார். தெலுங்கிலிருந்து பதினெட்டு
நூல்களும் மலையாளத்திலிருந்து ஒன்பது நூல்களும் இந்தியிலிருந்து நான்கு படைப்புகளும்
ஆங்கிலத்திலிருந்து இரு நூல்களும் இவருடைய மொழிபெயர்ப்புநூல்கள் பட்டியலில் அடங்கும்.
இந்த 2023 ஆண்டு தொடக்கத்தில் இந்தி வழியாக அவர் மொழிபெயர்த்த உருதுக்கதைகள் உருதுக்கதைகள் இருபது என்னும் தலைப்பில் நூலாக
வெளிவந்தது.
பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியில்
பெயர்த்தல் வேண்டும் என்பது பாரதியாரின் வரி. ஒவ்வொரு கலைஞனும் மொழி வழியாக நிகழ்த்தவேண்டிய
முக்கியமான சேவை அது. அவரே வங்காளச்சிறுகதைகளை தமிழில் மொழிபெயர்த்து அத்துறைக்கு ஒரு
தொடக்கத்தை அளித்தார். பிறகு அவர் சொல்லால் வேகம் கொண்ட மொழிபெயர்ப்பாளர்கள் தமிழுக்குக்
கொண்டுவந்த படைப்புகள் எண்ணற்றவை. அவர்களில் பெரும்பாலானோர் தமிழைத் தாய்மொழியாகக்
கொண்டவர்கள். பிற மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டு, சொந்த முயற்சியால் தமிழைக் கற்று
தமிழுக்குச் சேவை செய்தவர்கள் மிகமிகச் சிலரே. நம்மிடையே வாழும் ஆளுமையான இளம்பாரதி
அவர்களில் முக்கியமானவர்.
சில வாரங்களுக்கு முன்பு ஒரு குடும்ப
நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக நான் புதுச்சேரிக்குச் சென்றிருந்தேன். வழக்கம்போல
ஊருக்குச் சென்று சேர்ந்ததற்கு மறுநாள் காலை பத்து மணியளவில் அவரைச் சந்தித்து உரையாடுவதற்காகச்
சென்றேன். கீழ்த்தளத்தில் இருந்த அக்கா “மெத்தையிலதான் இருக்காரு, போங்க” என்று வழிகாட்டினார்.
நான் படியேறி அவருடைய அறைக்குச் சென்றேன். மேசையில் அமர்ந்தபடி அவர் எதையோ எழுதிக்கொண்டிருந்தார். வணக்கம் சொன்னபடி நான் அவருக்கு முன்னால் சென்று
நின்றேன். நிமிர்ந்து பார்த்து புன்னகைத்தபடியே ”வாங்க வாங்க” என்று அழைத்தார் இளம்பாரதி.
தான் அமர்ந்திருந்த சுழல்நாற்காலியைத் திருப்பியபடியே மற்றொரு நாற்காலியில் என்னை அமரும்படி
கேட்டுக்கொண்டார்.
நான் அவருடைய மேசையைப் பார்த்தேன்.
அதிலிருந்த தாளில் இந்தி வாக்கியங்கள் தெரிந்தன. “என்ன சார், தமிழ்லேருந்து இந்திக்கு
கதையை மொழிபெயர்த்துகிட்டிருக்கீங்களா? என்ன கதை?” என்று ஆவலோடு கேட்டேன். அவர் புன்னகையோடு
கைவிரலை அசைத்து அதை மறுத்தார். ”இந்திதான். சும்மா எழுதிப் பார்த்துகிட்டிருக்கேன்”
என்றார். தொடர்ந்து “எந்த மொழியா இருந்தாலும் தெனமும் பேசிப் பார்த்தோ எழுதிப் பார்த்தோ
பழகிட்டே இருக்கணும். செந்தமிழுக்கு மட்டும் நாப்பழக்கமும் கைப்பழக்கமும் இருந்தா போதாது.
எல்லா மொழிக்கும் அதுதான் அடிப்படை” என்றார்.
நான் அப்போதுதான் அவர் மேசைமீது அடுக்கி
வைக்கப்பட்டிருந்த வெவ்வேறு தாள்களின் அடுக்கை எடுத்துப் பார்த்தேன். கன்னடம், தெலுங்கு,
மலையாளம் என வெவ்வேறு மொழிகளில் எழுதப்பட்ட தாள்களாக அவை இருந்தன. அவருடைய அர்ப்பணிப்புணர்வின்
ஆழத்துக்கு அளவே இல்லை என்று நினைத்துக்கொண்டேன்
(காலச்சுவடு – ஜனவரி 2024)