Home

Monday 1 January 2024

தனிப்பிறவி

  

மாலை நடைப்பயிற்சியை முடித்துவிட்டு மேற்கு வானில் கொஞ்சம் கொஞ்சமாக மறையும் சூரியனையும் சிவந்து மங்கலாகும் அடிவானத்தையும் வேடிக்கை பார்த்தபடி மரத்தடியில் உட்கார்ந்திருந்தேன். ”நமஸ்காரா சார்” என்றபடி கையை உயர்த்திக்கொண்டு எதிர்த்திசையிலிருந்து வந்த குல்கர்னி எனக்குப் பக்கத்தில் இருந்த வேர்ப்புடைப்பின் மீது உட்கார்ந்தார்.

 “என்னங்க இது? ஒரு வாரமாகும்னு சொல்லிட்டு போனீங்க. திடீர்னு ரெண்டே நாள்ல வந்து நிக்கறீங்க?”

“ஆமாம் சார். மங்களூருல ஒரு ரெஜிஸ்டரேஷன் வேலைக்காகத்தான் போயிருந்தேன். பத்திரம் மாத்தணும். ஒரு வாரம் இழுக்கும்னு நெனச்சிட்டிருந்தேன். என்னமோ நல்ல நேரம். ஒரு நல்ல ப்ரோக்கர் கெடைச்சான். ஒரு வாரத்து வேலையை ஒரே நாள்ல முடிச்சிக் குடுத்துட்டான்.  கூடுதலா ஒரு நாள் தங்கி, சொந்தபந்தங்களயும் பாத்துப் பேசியாச்சி. அதுக்கப்புறம் அங்க இருந்து செய்ய எந்த வேலையும் இல்லை. அதான் கெளம்பி வந்துட்டேன்”

சொல்லிக்கொண்டே ஒரு பையை என்னிடம் கொடுத்தார்.

“இது என்ன?”

“மங்குஸ்தான் பழம். உங்களுக்குப் பிடிக்குமேன்னுதான் ஒரு கிலோ வாங்கினேன்”

மகிழ்ச்சியோடு அந்தப் பையை வாங்கிப் பிரித்து பழங்களைப் பார்த்தேன். அக்கணத்தில் மங்களூருக்கு அருகில் வேலை செய்தபோது அவற்றை வாங்கியுண்ட நாட்களின் நினைவுகள் பொங்கியெழுந்தன.

“ரொம்ப தேங்ஸ் குல்கர்னி”

“பழம் மாதிரியே உங்ககிட்ட சொல்றதுக்கு ஒரு தகவலும் கொண்டுவந்திருக்கேன் சார்” என்று சொன்னபடி என்னைப் பார்த்து புன்னகைத்தார் குல்கர்னி.

“அது என்ன குல்கர்னி? ஏன் புதிர் போடறீங்க? நேரிடையா விஷயத்தை சொல்லுங்க”

“பல பேருகிட்ட சொல்லிட்டேன் சார். சினிமாவுல நடக்கறமாதிரி இருக்குது, கதையில நடக்கறமாதிரி இருக்குதுன்னு எல்லாருமே ஆச்சரியமா கேட்டுக்கறாங்களே தவிர, நம்பறதுக்கு கஷ்டப்படறாங்க.”

“அப்படி என்ன விஷயம்? அதை சொல்லுங்க முதல்ல”

“ஊருல எங்க சொந்தக்காரங்க வீட்டுல அஞ்சாறு வருஷத்துக்கு முன்னால ஒரு வயசான அம்மா காணாம போயிட்டாங்க சார். எத்தனையோ இடத்துல தேடிப் பார்த்தாங்க. கண்டுபுடிக்க முடியலை”

“வயசான அம்மான்னு சொல்றீங்க? எப்படி காணாம போனாங்க?”

“அது ஒரு தனி கதை சார். அவுங்க மகன் பெங்களூருல இருந்தான். அவன பாக்கறதுக்கு  தனியாவே அடிக்கடி அவுங்க ரயிலேறி போவாங்க. வருவாங்க. மங்களூருல யாராவது ஸ்டேஷன் வரைக்கும் அழைச்சிட்டு வந்து ஏத்தி  உட்டுட்டு போவாங்க. அந்த ரயில் பெங்களூருல வந்து நிக்கிற நேரத்துக்கு பையன் வந்து காத்திருந்து அழைச்சிட்டு போயிடுவான். அதே மாதிரி மங்களூருக்குத் திரும்பிப் போவணும்ன்னா, மகன் ஸ்டேஷனுக்கு அழைச்சிட்டு வந்து ஏத்தி விடுவான். அவுங்க மங்களூருல எறங்கி வீட்டுக்குப் போயிடுவாங்க. ரொம்ப வருஷமா இப்படி நடந்துகிட்டிருந்தது”

“சரி”

“ஒரு நாள் மங்களூரு ஸ்டேஷன்ல பெங்களூரு ரயில் நிக்க வேண்டிய ப்ளாட்பார்ம்ல வேற ஏதோ பாம்பே ரயில் நின்னுட்டிருந்தது. விஷயம் தெரியாம அந்த அம்மா அந்த ரயில்ல ஏறி உக்காந்துட்டாங்க. அங்கதான் பிரச்சினை ஆரம்பம்”

“ஐயோ, அப்புறம்?”

“அப்புறமென்ன? அடுத்த நாள் காலையில ரயில்வே ஸ்டேஷன்ல அம்மா வரலைன்னு தெரிஞ்சதும் பையன் பயந்துட்டான். ஊருக்கு போன் பண்ணி கேட்டான். அங்கேர்ந்து கெளம்பனது உறுதிதான்னு தெரிஞ்சது. ரயில்ல ஏறிய அம்மா ஏன் பெங்களூருக்கு வரலைன்னு புரியலை. எங்க போனாங்கன்னும் புரியலை. நினைச்சி நினைச்சி அவனுக்கு பைத்தியம் புடிச்ச மாதிரி ஆயிட்டுது.”

“போலீஸ்ல புகார் செய்யலையா?”

“போலீஸ் புகார் கொடுத்தான். நியூஸ்பேப்பர்ல விளம்பரம் கொடுத்தான். அவனுக்குத் தெரிஞ்ச எல்லா வழியிலயும் முயற்சி செஞ்சான். ஒரு துப்பும் கெடைக்கலை.  ரெண்டு வருஷமா, ஒரு தகவலுமே தெரியாம இருந்த அம்மா இப்ப நான் போயிருந்த நேரத்துல கெடைச்சிட்டாங்க. அவுங்கள பார்த்து பேசிட்டுதான் வந்தேன்”

”ரெண்டு வருஷமா எங்கதான் இருந்தாங்களாம்?”

“அதுதான் நீங்க தெரிஞ்சிக்கவேண்டிய கதை”

“அப்ப பம்பாய்ல எறங்கன இடத்துலேர்ந்தே சொல்லுங்க”

“ஒரு ஆளும் தெரியாம, மொழியும்புரியாம ரயில விட்டு எறங்கனதுமே ரொம்ப கஷ்டப்பட்டாங்களாம். கையில சில்லற ஓட்டம் இருந்த வரைக்கும் கண்ணுல பட்ட எதைஎதையோ வாங்கி சாப்ட்டிருக்காங்க. பணம் தீர்ந்து போனதும் பட்டினி கெடந்திருக்காங்க. ஸ்டேஷன விட்டு ஏதோ ஒரு பக்கத்துல நடந்து போனபோது, யாரோ ஒரு வீட்டு வாசல்ல மயக்கம் வந்து விழுந்துட்டாங்க. தெளிஞ்சி கண்ணு முழிச்சி பார்த்த சமயத்துல ஏதோ ஒரு தகரக்குடிசைக்குள்ள  இருக்கறோம்ன்னு புரிஞ்சிகிட்டாங்க”

“யாரு காப்பாத்தினாங்களாம்?”

“யாரோ ஒரு விலைமகள்.”

“சரி”

“அந்த அம்மாவுக்கு கன்னடத்தை தவிர வேற எந்த மொழியும் தெரியாது. காப்பாத்தன பொண்ணுக்கு இந்தியைத் தவிர வேற எந்த மொழியும் தெரியாது. எதுவும் புரியலை. ஆனாலும் பசிக்கு எதையோ சாப்புட கொடுத்து வீட்டுக்குள்ள படுக்க வச்சிகிட்டாங்க”

“அதுக்கெல்லாம் ஒரு பெரிய மனசு வேணும் குல்கர்னி”

“ரெண்டுமூனு நாள் அந்த மாதிரி மெளன பாஷையிலயே ரெண்டு பேரும் பேசிகிட்டாங்களாம். அப்புறமா, அந்த விலைமகள் யாரோ இன்னொருத்தவருடைய செல்வாக்குல இன்னொரு வட்டாரத்துல கன்னடம் தெரிஞ்ச விலைமகள் ஒருத்தவங்கள தேடி புடிச்சி கூப்பிட்டு வந்தாங்க. அதுக்கப்புறம் அந்த அம்மாவுடைய விஷயத்தை அவுங்க புரிஞ்சிகிட்டாங்க. அந்த அம்மாவை தம்மோடு வச்சிருக்கறதவிட பாதுகாப்பான ஒரு இடத்துல சேக்கறதுதான் நல்லதுதான்னு நெனச்சு ஒரு ஆசிரமத்துக்கு அழச்சிம் போய் சேத்துட்டாங்க.”

“சரி”

“அதுவும் இந்திக்காரங்க இடம்தான். அந்த அம்மாவால எதையும் யாருகிட்டயும் சொல்லமுடியாத நிலை. எப்படியோ அந்த ஆசிரமத்துலயே ரெண்டு மூனு வருஷத்த ஓட்டிட்டாங்க. ஒரு நாள் பம்பாய்ல வசிக்கிற  ஒரு கர்நாடக ஐ.டி. யூத் க்ரூப் ஒன்னு சாப்பாடு டிஸ்ட்ரிபூஷனுக்கு வந்திருக்குது. அவுங்க கன்னடம் பேசறத பார்த்துட்டு, அதுல ஒரு பையன்கிட்ட அந்த அம்மா எல்லா விவரங்ளையும் சொல்லி அழுதாங்களாம். அவுங்க நல்ல நேரம், அந்தப்  பையனும் உடுப்பிக்கு பக்கத்துல இருக்கிற பையனாம். என்னால முடிஞ்ச உதவியை செய்யறேன் பாட்டின்னு சொல்லிட்டு போனானாம்.”

“திக்கற்றவருக்கு தெய்வமே துணைன்னு சொன்னது சரியாதான் இருக்குது”

“ஆமாம் நீங்க சொல்றது நூத்துக்கு நூறு உண்மை. அந்த பையனே மங்களூரு போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டரை போன்ல அழச்சி விவரத்தை சொல்லியிருக்கான். ஆரம்பத்துல அவுங்க சரியா பதில் சொல்லலை. ஆனா அந்தப் பையன் விடாம ஒரு மாசமா தொடர்ந்து ஸ்டேஷன் ஆளுங்ககிட்ட பேசிப்பேசி, அந்த அம்மாவுடைய வீட்டு விலாசத்தை கண்டுபுடிச்சிட்டான். அதுக்கப்புறம் காணாம போன அம்மா பம்பாய்ல இருக்கிற விஷயத்தைச் சொன்னானாம். அதக் கேட்டதும், அவுங்க மகனே பம்பாய்க்குப் போய் அம்மாவை அழைச்சிட்டு வந்துட்டான்”

“காணாமப் போனது விதியின் விளையாட்டுன்னு சொன்னா, கண்டுபுடிச்சி கொண்டுவந்து சேர்த்ததும் இன்னொரு விதியின் விளையாட்டுன்னுதான் குல்கர்னி”

“கதை அத்தோடு முடியலை சார். இன்னும் இருக்குது”

“அது என்ன?”

“தனக்கு ஆதரவளித்த விலைமகளைப் பார்த்து நன்றி சொல்லிட்டுத்தான் போகணும்னு அந்த அம்மாவுக்கு ஒரு எண்ணம். அந்த பையனுக்கும் அப்படிச் செய்யறதுதான் சரியா இருக்கும்ங்கற எண்ணம். ஆசிரமத்துக்காரங்க சொன்ன விலாசத்துல, ஆள் மாறிட்டாங்க. வேற யாரோ இருக்காங்க. அந்தக் கன்னடப் பொண்ணு எங்க போனான்னு தெரியலை. ஆரம்பத்துல காப்பாத்தி ஆதரிச்ச இந்திக்காரப் பொண்ணயும் கண்டுபுடிக்க முடியலை.  மூனு நாள் முழுசா அங்கயே தங்கி, கடைசியா ஒரு வழியா அந்தப் பொண்ணுங்களுடைய  இடத்தை கண்டுபுடிச்சி சந்திச்சி நன்றி சொல்லிட்டுத்தான் கெளம்பனாங்களாம். அந்தப் பையன் அவுங்க கால்ல உழுந்து நன்றி சொல்லிட்டு கெளம்பினானாம். அவுங்க எல்லாரும் ஸ்டேஷன் வரைக்கும் வந்து பாட்டிய வழியனுப்பி வச்சாங்களாம்”

“புதிய உறவு எப்படியெல்லாம் தேடி வருதுன்னு  பாருங்க. கேக்கறதுக்கு சந்தோஷமா இருக்குது”

பேசிக்கொண்டே இருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. இருள் கவியத் தொடங்கிவிட்டது. குல்கர்னியிடம் விடை பெற்றுக்கொண்டு வீட்டை நோக்கி நடந்தேன். பொதுவாக விலைமகளிரைப்பற்றிய நினைவுகள் நெஞ்சில் புரண்டுகொண்டே இருந்தன.

யாரும் அந்தத் தொழிலை விரும்பி ஏற்றுக்கொள்வதில்லை. ஏதோ ஒரு நெருக்கடியின் அழுத்தத்தில் சிலருக்கு அந்த மாதிரியான சூழல் அமைந்துவிடுகிறது. ஒருசிலர் வெகுவிரைவில் அந்தப் பள்ளத்திலிருந்து தப்பித்து வெளியேறிவிடுகிறார்கள். இன்னும் ஒருசிலர் அந்தப் பள்ளத்திலேயே அமிழ்ந்து கரைந்துபோய்விடுகிறார்கள். இந்த மாதிரியான விஷயங்களுக்கு ஒரு பொதுக்குணத்தை வகுத்துச் சொல்லிவிடமுடியாது.

செய்திப்பத்திரிகைகளில் விலைமகளிர் தொடர்பான வெளிவரும் செய்திகள் பெரும்பாலும் அவர்களைக் கைது செய்தது தொடர்பானதும் தண்டனை அளித்தது தொடர்பானதுமாகவே இருக்கின்றன. அவை அளிக்கும் சித்திரங்கள் வேறு. தன்னந்தனியாக வழிமாறி வந்து தவித்த  ஒரு மூதாட்டிக்கு தங்குமிடம் கொடுத்து காப்பாற்றி ஓர் இல்லத்தில் சேர்த்துவிடும் அளவுக்குக் கருணைகொண்ட விலைமகள் தொடர்பான செய்திகள் விலைமகளிருக்கே பெருமை சேர்ப்பவை. ஆனால் ஆனால் வாய்வழித்தகவல் என்னும் அளவிலேயே அவை பெரும்பாலும் நின்றுவிடுகின்றன. அப்படிப்பட்ட தகவல் பொதுவெளியில் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டு நிலைநிறுத்தப்படவேண்டும்.

சிறுகதைகளில் விலைமகளிர் தொடர்பான சித்திரங்களை எழுத்தாளர்கள் எப்படி முன்வைத்தார்கள் என்றொரு கேள்வியை முன்வைத்து யோசித்தபடி நடையைத் தொடர்ந்தேன். விலைமகளிரோடு நிகழ்த்தும் கிளர்ச்சியூட்டும் உரையாடல்களைக் கொண்ட கதைகள் எனக்குள் எவ்விதமான தாக்கத்தையும் ஏற்படுத்தியதில்லை.  அவற்றில் புதுமையும் இல்லை. மாறாக, விலைமகளிர் தொடர்பான குணச்சித்திரங்களை முன்வைக்கும் கதைகள் ஆர்வத்தைத் தூண்டியிருக்கின்றன.  புதுமைப்பித்தனின் புகழ்பெற்ற பொன்னகரம் சிறுகதை அப்படிப்பட்ட பட்டியலில் ஒன்று.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் சென்னை என்னும் மாநகரம் உருவாகிக்கொண்டு வந்த தருணத்தில், அங்கிருந்த வேலை வாய்ப்புகளால் ஈர்க்கப்பட்டு அந்நகரத்தை நோக்கிக் குடிபெயர்ந்த குடும்பங்கள் ஏராளம். அவர்களுடைய சொந்தக் கிராமங்கள் கொடுக்கமுடியாத வாய்ப்புகளை அந்த நகரம் அவர்களுக்குக் கொடுத்தது.  செல்வத்தைச் சம்பாதிக்க வழிகாட்டிய அதே நகரம் செல்வத்தைச் செலவழித்து இன்பம் துய்ப்பதற்கான வழிவகைகளையும் கேட்காமலேயே காட்டியது. வாய்ப்பைத் தேடிக் கண்டடைந்த எளிய மனிதர்கள் களிப்பைத் தேடிக் கொண்டாடும் வழிகளை நோக்கி நடந்து தேடிய செல்வத்தைத் தொலைத்தனர். ஒரு வாய்ப்பு கொடுத்தது. இன்னொரு வாய்ப்பு பறித்தது. இப்படிப்பட்ட நெருக்கடியில் சிக்கிக்கொண்ட ஒரு குடும்பத்தின் ஒரு சிறு பொழுதை பொன்னகரம் கதையில் காட்சிப்படுத்துகிறார் புதுமைப்பித்தன்.

மில் தொழிலாளியான அம்மாளு, குதிரைவண்டி ஓட்டும் முருகேசன், அவனுடைய அம்மா, தம்பி ஆகிய நான்கு பேர் மட்டுமே கொண்ட சிறிய குடும்பம். மில் ஒரு வாய்ப்பு. குதிரைவண்டியும் ஒரு வாய்ப்பு. ஆனால் முருகேசன் வருமானமாகக் கிடைத்த பணத்தில் பாதியை மதுவிலும் மீதியை குதிரைப்பந்தயத்திலும் தொலைத்து வறுமையைத் தேடிக்கொள்கிறான். கெடுவாய்ப்பாக, அந்த நேரத்தில் வண்டி விபத்துக்குள்ளாகிறது. அவன் அடிப்பட்டு படுக்கையில் கிடக்கிறான்.

அச்சூழலில் குடும்பத்தில் வறுமை நிரந்தரமாகத் தங்கிவிடுகிறது. மில்லில் சம்பளம் போடவில்லை.  கையிருப்பாக எதுவும் இல்லை. குடும்பம் பசியில் தவிக்கிறது. உடல்நலம் குன்றிய முருகேசன் கஞ்சி வேண்டுமென்று கேட்கிறான். பணமீட்டும் வாய்ப்பைப்பற்றிய யோசனையில் நடந்து போய்க்கொண்டே இருக்கிறாள் அம்மாளு. எங்கோ ஒரு இருளில் ஒருசில நிமிடங்கள் ஒருவனோடு ஒதுங்கியிருந்து சில்லறைகளைச் சம்பாதிக்கிறாள். அதுவும் நகரம் அளித்திருக்கும் இன்னொரு வாய்ப்பு.

‘பழைய கற்கால மனிதன் புலி சிங்கங்களுடன் குகையில் வாழ்ந்து வந்தான். அவையும் அவனைக் கொன்றன. அவனும் அவற்றைக் கொன்றான். வாழ்க்கையே ஒரு பெரிய வேட்டை’ என்றொரு குறிப்பை போகிறபோக்கில் எழுதிவிட்டுச் செல்கிறார் புதுமைப்பித்தன். சரியானது, பிழையானது என்கிற மதிப்பீட்டு முறைகளுக்கு அப்பால், தவிர்க்கமுடியாத நிலையில் நிற்கும் நிராதரவான மக்கள் கூட்டத்தின் குரலை புதுமைப்பித்தன் கதையில் கேட்கமுடிகிறது. அம்மாளுவை தொழிலாளி என்று வகைப்படுத்துவதா, விலைமகள் என்று வகைப்படுத்துவதா என்றொரு கேள்விக்கு யாராலும் திட்டவட்டமாக வரையறுத்து பதிலைச் சொல்லிவிடமுடியாது. தேவை கருதி, விலைமகளாகவும் மாறத் தயாராக இருக்கிற தொழிலாளி என்று வேண்டுமானால் சொல்லலாம்.

விலைமகள் தொடர்பான இன்னொரு வித்தியாசமான குணச்சித்திரம் ஜெயகாந்தன் எழுதிய இருளைத் தேடி என்னும் சிறுகதையில் இடம்பெற்றிருக்கிறது. இளம்வயதுத் தோழியர் இருவர் பத்து ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு நகரத்தில் தற்செயலாக சந்தித்துக்கொள்ளும் தருணத்தில் தொடங்கி ஒருவரையொருவர் அறிந்துகொள்ளும் தருணம் வரைக்குமான உரையாடல்களையும் மன ஓட்டங்களையும் தொகுத்து சிறுகதையாக்கி இருக்கிறார் ஜெயகாந்தன்.

ஒரு தோழியின் பெயர் பட்டு. இன்னொரு தோழியின் பெயர் ருக்கு. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் இருவரும் சந்தித்துக்கொள்கிறார்கள். பிரிந்திருந்த காலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளையும் திருப்பங்களையும் தெரிந்துகொள்ளும் ஆவல் இருவருக்கும் எழுகிறது.  இருவரும் அருகிலேயே இருந்த ஓர் ஓட்டலுக்குச் சென்று தனியறையில் அமர்ந்து உரையாடத் தொடங்குகிறார்கள்.

ருக்கு தன் உடல்நலம் குன்றிய அப்பாவுக்கு மருத்துவம் பார்ப்பதற்காக அவரை அழைத்துக்கொண்டு சென்னைக்கு வந்தாள். உறவினர் வீட்டில் தங்கி அடிக்கடி மருத்துவமனைக்கும் சென்று வந்தாள். எதிர்பாராத விதமாக மருத்துவம் பலிக்கவில்லை. ஒரு சில ஆண்டுகளில் அப்பா இறந்துவிடுகிறார். சொந்தக் காலில் நிற்கும் முயற்சியாக ஒரு கடையில் விற்பனைப்பிரதிநிதியாக பணிபுரியச் செல்கிறாள். அந்தக் கடையின் மேலாளர் அவளைத் தவறான வழியில் திசைதிருப்ப முயற்சி செய்வதை உணர்ந்து அங்கிருந்து வெளியேறுகிறாள்.

அவள் தங்கியிருக்கும் வீட்டின் மாடியில் தங்கியிருக்கும் ஓவியக்கலைஞரின் வழிகாட்டுதலால் ஓவியம் பயில வரும் பயிற்சி ஓவியர்கள் முன்னிலையில் வெவ்வேறு நிலைகளில் உடல்வளைவைக் காட்டி நிற்கும் மாடலாக நிற்கும் வாய்ப்பு அவளுக்குக் கிடைக்கிறது. ஆடையற்ற அவளுடைய கோலத்தை யாரும் அருவருப்பாகவும் எண்ணவில்லை. யாராலும் அவளுக்குத் துன்பமும் இல்லை. தன் தோற்றத்தால் மன எழுச்சியுற்ற ஓவியர்களின் கைவண்ணத்தால் வேறொரு உருவம் உருவாவதை அவள் காண்கிறாள். ஆடை நெகிழ்ந்த கோலம் அவளுக்கும் சங்கடமளிக்கவில்லை. அவர்களும் சங்கடமாக எடுத்துக்கொள்ளவில்லை. நிராதரவான இருளில் நின்றிருந்த வாழ்க்கைக்கு அந்த மாடல் வாழ்க்கை வெளிச்சத்தைப் பாய்ச்சியிருப்பதாக அவள் உணர்கிறாள்.

பட்டு வாழ்ந்த வாழ்க்கையும் வாழும் வாழ்க்கையும் இதற்கு நேர்மாறானது. வயதான பாட்டியொருத்தியோடு அவள் இளமைக்கால வாழ்க்கை பிணைந்திருந்தது. அவள் பிரிவுக்குப் பிறகு திரைப்பட நட்சத்திரமாக எண்ணும் கனவில் வாய்ப்பைத் தேடி சென்னைக்கு வந்தாள். அது நிகழவில்லை. அதற்கிடையில் அவளுக்கு ஆதரவளிப்பதாகச் சொன்ன இளைஞன் அவளை இருட்டில் உடலை விற்கும் விலைமகளாக மாற்றிவிட்டு எங்கோ சென்றுவிடுகிறான். ஒளிமயமான திரைப்பட வாழ்க்கையைக் கனவு கண்டுவந்த அவள் தன் வாழ்க்கை இருளை நோக்கிச் சரிந்துவிட்டதை உணர்கிறாள்.

அந்த ஓட்டல் மேசையில் நிகழும் உரையாடலில் அவர்கள் முதலில் உண்மையை மறைத்துப் பேசிக்கொள்கிறார்கள். அவர்களை மீறி உண்மை வெளிப்பட்டதும் உண்மையைப் பேசுகிறார்கள். பட்டுவின் வாழ்க்கை கேவலமானது என ருக்கு நினைக்கிறாள். ருக்குவின் வாழ்க்கை அசிங்கமானது என பட்டு நினைக்கிறாள். கடந்தகால கசப்பான அனுபவங்களை ஓட்டலில் இனிப்பு சாப்பிட்டபடி உரையாடுவதாக அமைத்திருக்கிறார் ஜெயகாந்தன்.

பட்டுவை இருள் வாழ்க்கையிலிருந்து மீட்க ருக்கு ஒரு வழியைக் காட்டுகிறாள். அதை ஒரு மீட்சிக்கான கணம் என நினைத்த பட்டு அவளைப்போலவே ஓவியர்களுக்கு முன்னால் மாடலாக நிற்க ஒப்புக்கொள்கிறாள். ஆனால் அதற்கான ஆயத்தங்களோடு அவள் அந்த அறையை நெருங்கும்போது அங்கிருந்த அதீத வெளிச்சம் அவளை மனம் கூச வைக்கிறது. அக்கணமே அவள் பின்வாங்கி, தன்னால் முடியாது என தெரிவித்துவிட்டு, தன்னுடைய இருளைத் தேடி ஓடுகிறாள்.

இவ்விரு நிலைகளிலிருந்தும் முற்றிலும் வேறுபட்ட கோணத்தில் ஒரு விலைமகளின் குணச்சித்திரத்தை பறிமுதல் என்னும் சிறுகதையில் தீட்டிக் காட்டியிருக்கிறார் ஆ.மாதவன். கதையில் விலைமகளை அறிமுகப்படுத்துவதற்கு முன்பாக அப்புக்குட்டன் என்னும் போக்கிரியை அறிமுகப்படுத்துகிறார் மாதவன். வாய்ப்பேச்சிலேயே மற்றவர்களை மயக்கி பணம் பறித்துவிடுவதில் பெரிய சூரன் அவன். வாய்ப்புகள் கிடைத்தால், சிறுசிறு திருட்டுகள் வழியாகவும் சம்பாதிக்கத் துணிந்தவன். திருவனந்தபுரம் கடைத்தெருவில் எல்லோரும் ஏதேதோ வேலைகள் செய்து பிழைக்கும் சூழலில் ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டு பிழைப்பதையே தொழிலாகக் கொண்டவன் அப்புக்குட்டன். அதே கடைத்தெருவில் பார்வையால் வலைவீசி இளைஞர்களைக் கவர்ந்துவந்து ஆள்சந்தடியில்லாத இடத்தில் சிறிது நேரம் ஒதுங்கி அவர்களை மகிழ்வித்து அனுப்பி பணம் சம்பாதிப்பைத் தொழிலாகக் கொண்ட ஒருத்தியும் இருக்கிறாள்.

ஒரு நாள் அப்புக்குட்டனுக்கு எந்த வருமானமும் இல்லை. பசியுடன் படுத்துக்கொள்கிறான். அடுத்தநாள் விடிந்து கடைத்தெருவில் சந்தடி பெருகிவந்த நேரத்தில் தன் கைவரிசையைக் காட்டி சம்பாதிக்கும் திட்டத்தில் திளைத்திருக்கிறான் அவன். எதிர்பாராத விதமாக, அந்த நேரத்தில் ஏதோ ஓர் அமைப்பு கடையடைப்பை அறிவிக்கிறது. உடனே திறந்த கடைகள் அனைத்தும் மூடப்பட்டுவிடுகின்றன. கடைத்தெரு நடமாட்டமே இல்லாமல் காட்சியளிக்கிறது. அப்புக்குட்டன் ஏமாற்றத்தில் மூழ்குகிறான்.

யாராவது தெரிந்தவர்கள் தென்படமாட்டார்களா, அவர்களிடம் பேசி பணத்தைக் கறந்துவிடலாம் என திட்டமிட்டு நகரெங்கும் அலையத் தொடங்குகிறான் அப்புக்குட்டன். ஒருவரும் கிடைக்கவில்லை. அன்றும் பசி. இரவு வரைக்கும் நடந்தும் பயனில்லை. களைப்பின் காரணமாக அரவமே இல்லாமல் இருந்த பள்ளிக்கூடத்தின் மதிலைத் தாண்டிக் குதித்து உள்ளே சென்று ஏதோ ஒரு திண்ணையில் படுத்து களைப்பில் உறங்கிவிடுகிறான்.

அந்த இருட்டைப் பயன்படுத்திக்கொள்ள நினைத்து  வாடிக்கையாளர்களுடன் அங்கே வரும் விலைமகள் அங்கே உறங்கும் அப்புக்குட்டனை அந்தப் பள்ளிக்கூடத்துக் காவல்காரன் என நினைத்து வாடிக்கையாளர்களிடமிருந்து வாங்கிய இருபத்திரண்டு ரூபாயை அவனிடம் கொடுத்து பாதுகாப்பாக வைத்திருக்கச் சொல்லிவிட்டு மறைவாகச் செல்லும்படி கேட்டுக்கொள்கிறாள். பணத்தை வாங்கிக்கொண்டு மெளனமாக ஒதுங்கிச் செல்லும் அப்புக்குட்டன் வேறொரு மதில் வழியாக அங்கிருந்து தப்பித்துவிடுகிறான்.

திருடனாக இருந்தாலும் சரி, விலைமகளாக இருந்தாலும் சரி, ஒருவருக்கும் தம் தொழில் சார்ந்த வருத்த உணர்வோ கூச்ச உணர்வோ எதுவும் இல்லை. அவர்களைப் பொறுத்தவரையில் அது நகரம் கொடுத்திருக்கும் வாய்ப்பு. அவ்வளவுதான். வேறு வாய்ப்பைத் தேடிச் செல்லும் ஏக்கம் அவர்களிடம் இல்லை.

அப்புக்குட்டன் தன் ஆணிக்காலில் வளர்ந்த சதையை பிளேடால் கத்தரித்து வீசும் ஒரு காட்சியை கதையின் தொடக்கத்தில் சித்தரித்திருக்கிறார் மாதவன். வெட்ட வெட்ட அந்தச் சதை வளர்ந்துகொண்டே இருக்கும். ஒரு பெருநகரத்தின் ஆணிக்கால் சதையாக மாறிவிட்டவர்கள் அவர்கள். ஒருவரிடமிருந்து இன்னொருவர் பறிப்பது தொடர்பான கூச்சமோ, ஏமாற்றுவது தொடர்பான கூச்சமோ எதுவும் அவர்களுடைய எண்ணங்களில் இல்லை. ஒவ்வொரு பொழுதையும் தள்ளிவிட்டால் போதும். அதுதான் அக்கணத்தில் முக்கியம். அதற்கு மேல் எதுவும் இல்லை.

யோசனையில் மூழ்கியபடி நடக்கத் தொடங்கியதில் என்னை அறியாமலேயே சுற்றுப்பாதையொன்றில் இறங்கிவிட்டேன். வீட்டுக்குத் திரும்புவதற்குள் இருட்டிவிட்டது.

வாசலிலேயே என் மனைவி் எங்கோ புறப்படுவதற்குத் தயாராக இருப்பதுபோலக் காத்திருந்தார். ”ஏன் இவ்வளவு நேரம்? கடைக்குப் போகணும் தயாரா இருன்னு சொல்லிட்டு போனீங்களே, மறந்துட்டீங்களா?” என்றார். புறப்படும் முன்பாக சொல்லிவிட்டுச் சென்ற சொற்கள் அப்போதுதான் என் நினைவில் உறைத்தன. “ஐயோ” என்று நாக்கைக் கடித்தபடி அசடு வழிந்தேன். ”ஏதோ ஞாபகத்துல திசைமாறி போயிட்டேன்” என்று வாய்க்கு வந்த சொல்லைச் சொன்னேன்.  “வா வா, இப்படியே போகலாம்” என்று அவசரமாக படியிறங்கினேன். கதவைப் பூட்டிக்கொண்டு அவரும் கீழே இறங்கி வந்தார்.

நடக்கும்போது குல்கர்னி சொன்ன நிகழ்ச்சியை விவரித்தேன். விலைமகளின் ஆதரவுக்கரம் தொடர்பாக எழுந்த சிந்தனைகளையும் சொன்னேன். அவர் எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்டார்.

“சேத்தில பூத்த செந்தாமரைன்னு ஊருல வசனம் சொல்வாங்களே. ஞாபகமிருக்குதில்ல. எல்லா மட்டத்துலயும் எல்லா மாதிரியுமான ஆளுங்களும் உண்டு. ஒருத்தவங்களுடைய உருவத்தைப் பார்த்தோ தொழிலைப் பார்த்தோ நாம எதையும் எடைபோட்டுடக் கூடாது”

மிக இயல்பாக, சட்டென வெளிப்பட்ட அந்தப் பதில் என்னை ஒருகணம் திகைக்கவைத்தது. அவருடைய யோசிக்கும் வேகத்தை நினைத்து வியந்தபடி அவர் சொன்ன சொற்களை மனத்துக்குள் அசைபோட்டபடி நடந்தேன்.

 

(சங்கு – டிசம்பர் 2023)