ஏரிக்கரையை ஒட்டி நடந்துகொண்டிருந்தேன். ஒரு திருப்பத்தில் நாற்பது ஐம்பது கொக்குகள் கூட்டமாக பறந்துவருவதைப் பார்த்ததும் நின்றுவிட்டேன். சீரான இடைவெளியுடன் அவை வானத்தில் மிதந்து வந்த காட்சியைக் கண்டதும் மனம் மயங்கியது. எதைநோக்கிச் செல்கின்றன என்பதை அறிந்துகொள்ளும் ஆவலில் அந்த இடத்திலேயே அசையாமல் நின்றேன்.
கொக்குக்கூட்டம் முதலில்
கிழக்கு நோக்கிப் பறந்துசென்றன. அவற்றின் உருவம் கொஞ்சம்கொஞ்சமாகச் சிறுத்து மறையவிருந்த
தருணத்தில் சட்டென அக்கூட்டம் வானத்திலேயே ஒரு வட்டமடித்து மீண்டும் ஏரியை நோக்கித்
திரும்பி வந்தது. என் தலைக்கு மேலே பறந்து வேறொரு மூலையை நோக்கிச் சென்றது. அந்த மூலையைத்
தொட்டதும் மீண்டும் வளைந்து வட்டமடித்து பறந்து வந்தது. நடு ஏரி வரைக்கும் பறந்துசென்று
திரும்பி வந்து கரையோரத்தில் நின்றிருந்த ஒரு சரக்கொன்றை மரத்தில் கிளைகளில் இறங்கி
அமர்ந்தன.
அதைப் பார்த்துவிட்டுத்
திரும்பி நடக்கத் தொடங்கியபோதுதான் பாதையோரமாக இருந்த ஒரு பாறையின் மீது அமர்ந்து எதையோ
எழுதியபடி இருக்கும் ஓர் இளைஞரைப் பார்த்தேன். அவரிடம் பேசும் ஆர்வத்துடன் அவரை நெருங்கிச்
சென்றேன். அப்போதுதான் அவர் எதையும் எழுதவில்லை என்பதையும் ஒரு சுவடியில் எதிரில் தோன்றிய
காட்சியை ஒவியமாக வரைந்துகொண்டிருக்கிறார் என்பதையும் புரிந்துகொண்டேன். முதலில் அவர்
என் வருகையையே கவனிக்கவில்லை. வெகுநேரத்துக்குப்
பிறகே அவர் என்னைப் பார்த்து புன்னகைத்தார்.
சிறிது நேரத்திலேயே அவர்
இயல்பாகப் பேசத் தொடங்கிவிட்டார். ஓவியக்கல்லூரியில் படிப்பதாகவும் கண்ணால் காணும்
காட்சிகளை வரையும் பயிற்சிக்காக ஒரு வாரமாக அந்த இடத்துக்கு வந்து உட்கார்ந்து வரைவதாகவும்
தெரிவித்தார்.
நான் அவருடைய சுவடிகளை
வாங்கிப் பார்த்தேன். செடிகள், கொடிகள், கோவில் கோபுரம், பூக்கள், மாடுகள், பறவைகள்,
சிறுவர்கள், பெண்கள் என ஏராளமான படங்கள். நான்கு சாலைகள் கூடும் சந்திப்பில் உள்ள சிக்னல்
கம்பத்துக்கு அருகில் நடமாடும் எண்ணற்ற மனிதர்களின் படங்களை மட்டுமே ஓவியமாக வரைந்த
ஒரு சுவடிகூட அவரிடம் இருந்தது. அவை எதுவுமே முழு அளவிலான ஓவியங்கள் அல்ல. வெறும் கோடுகள்.
வளைவுகள். அவ்வளவுதான். ஆனால் அவர் உத்தேசித்திருந்த உருவங்களின் சாயல்களை அவற்றில் பார்க்கமுடிந்தது.
அந்த வாரத்தில் நண்பர்
விட்டல்ராவைச் சந்திக்கச் சென்றிருந்த சமயத்தில் நான் பார்த்த ஓவிய மாணவரைப்பற்றியும்
அவர் வரைந்து வைத்திருந்த ஓவியங்களைப் பார்த்த அனுபவத்தைப்பற்றியும் சொன்னேன்.
“அது ஒரு பயிற்சி பாவண்ணன்.
கண்ணால் பார்க்கக்கூடிய உருவத்தை எந்த அளவுக்குத் துல்லியமாக ஓவியத்துக்குள்ள கொண்டு
வரோம்னு தெரிஞ்சிக்கறதுக்காக அலைஞ்சி திரிஞ்சி பார்க்கறதையெல்லாம் வரைஞ்சிட்டு வரச்
சொல்லுவாங்க. அதுக்குப் பிறகு மாஸ்டர்கள், ஒவ்வொரு படத்தையும் பார்த்து கரெக்ஷன்ஸ்
சொல்வாங்க. நான் கூட அப்படி பல இடங்களுக்குப் போய் படம் போட்டிருக்கேன். சில ஸ்கெட்ச்
புக்ஸ் தொலைஞ்சி போனாலும்ொரு ஞாபகத்துக்காக இன்னும் சில ஸ்கெட்ச் புக்ஸ பாதுகாப்பா
வச்சிருக்கேன்”
கல்கத்தா அருங்காட்சியகத்தில்
கண்ட டேனியல் சகோதரர்களின் இந்தியக்கோட்டைகள், இயற்கைக்காட்சிகள் தொடர்பான ஓவியங்களைப்பற்றி
விட்டல்ராவ் ஏற்கனவே ’தமிழகத்துக் கோட்டைகள்’ புத்தகத்தில் எழுதியிருந்த குறிப்புகள்
அக்கணத்தில் நினைவுக்கு வந்தன. நான் அதைக்
குறிப்பிட்டேன்.
”அவுங்க எல்லாருமே உலகம்
அறிஞ்ச பெரிய ஆர்ட்டிஸ்ட்கள் பாவண்ணன்” என்று என்னைத் திருத்தினார் விட்டல்ராவ். தொடர்ந்து
“அவுங்கள நாம இந்தப் பட்டியல்ல சேர்க்கக்கூடாது. இந்த ஸ்டூடண்ட்ஸ்ங்க எல்லாரும் பார்த்து
வரையும் பயிற்சிக்காக அலைஞ்சி திரிஞ்சி படம்
போடறவங்க. கிட்டத்தட்ட ஒரு அப்ரெண்டிஸ் லெவல்ல
இருக்கறவங்கன்னு வச்சிக்கலாம். அவுங்கதான் சிக்னல் கம்பம், கடற்கரை, பாலம், மரத்தடி,
ஆத்தங்கரைன்னு பல இடங்கள்ல நின்னு ஸ்கெட்ச் போடுவாங்க. உருவங்கள் எந்த அளவுக்கு துல்லியமா
வருதுன்னு பார்க்கறதுக்கு, அது ஒரு டெஸ்ட்…” என்றார்.
“இவுங்க இப்படி வரைஞ்சி
எடுத்துட்டுப் போகிற படங்கள பார்த்து மாஸ்டர்ஸ்
கரெக்ஷன்ஸ் சொல்வாங்களா?”
“ஆமாம். அதுக்காகத்தானே
பயிற்சி. இது முடிஞ்சதும் மாடலை பயன்படுத்தி வரையற பயிற்சி தொடங்கும். அது அடுத்த லெவல்.
வெவ்வேறு கோணங்கள்ல மனிதர்களின் தோற்றத்துல ஏற்படக்கூடிய மாற்றங்களை நாம அப்பதான் கத்துக்க
முடியும்”
“நீங்க அப்படி மாடல்களை
நிக்கவச்சி படம் போட்டதுண்டா?”
“போட்டிருக்கேன் பாவண்ணன்.
அதெல்லாம் இல்லாம ஒரு பயிற்சியை முடிக்கவே முடியாது”
“ஆணா, பெண்ணா, குழந்தையா,
யாரு மாடலா நிப்பாங்க?”
“யாரு வேணும்ன்னாலும் மாடலா
நிக்கலாம் பாவண்ணன். அதை தீர்மானிக்கிறது மாணவர்கள் கிடையாது. மாஸ்டர்ஸ்தான். அடிப்படையில
ஒரு ஆர்ட்டிஸ்ட்டுக்கு அனாட்டமி பத்திய முழுமையான தெளிவு இருக்கணும். அப்பதான் ஒரு
உருவத்தை அவனால வரைய முடியும். மாடல்களை பார்த்துப் பார்த்து வரையும்போதுதான் அப்படி
ஒரு பயிற்சி அமையும்”
“ஸ்கூல் ஸ்டாஃபே மாடலா
நிப்பாங்களா? இல்லை, வெளியேயிருந்து வருவாங்களா?”
“ஒரு ஸ்கூல்ல அப்படியெல்லாம்
இஷ்டப்படி ஸ்டாஃப் வச்சிக்க முடியாது. எல்லாருமே வெளியே இருந்து வரக்கூடியவங்கதான்.
சில சமயங்கள்ல ஸ்கூல் வாட்ச்மேனே அழச்சிட்டு வருவாரு. சில சமயங்கள்ல சில ரிக்ஷாக்காரங்க அழச்சிட்டு வருவாங்க. ஸ்டுடியோவுல படங்களுக்கு
சட்டம் போடறதுக்கு ஒரு கார்ப்பெண்ட்டர் இருப்பாரு. சில நேரங்கள்ல அவரு கூட யாரையாச்சிம்
அழச்சிட்டு வருவாரு.”
“அவுங்களுக்கு சம்பளம்
உண்டா?”
“உண்டு. ஒரு மணி நேரத்துக்கு
அஞ்சி ரூபாய் கொடுப்பாங்க.”
“மாடலா வரக்கூடியவங்க ஓவியத்தைப்பத்தி
தெரிஞ்சவங்களா இருக்கணும்னு ஏதாவது விதி உண்டா?”
“அப்படியெல்லாம் எந்த விதியும்
இல்லை. சாதாரணமான பொதுமக்கள் கூட மாடலா வந்து போவாங்க. ஆரம்பத்துல ஒன்னு ரெண்டு முறை
சங்கடப்படுவாங்க. ஒரு பத்து பன்னெண்டு பேரு வட்டமா சுத்தி நின்னு தன்னையே உத்து உத்துப்
பார்க்கறாங்களேன்னு ஒரு சின்ன கூச்சம் இருக்கும். ரெண்டு மூனு முறை அப்படி தோணும்.
அதுக்கப்புறம் நாளாக நாளாக சரியாயிடும்.”
“அது எப்படி சரியாவும்?”
“ஒரு ஆள நேருக்கு நேரா
பார்த்து பேசும்போது, கொஞ்சம் கொஞ்சமா நமக்கு அந்த ஆளப் பத்தி ஒரு தெளிவு கிடைக்குது,
இல்லையா? எல்லாமே அது மாதிரிதான். பழகிப் பழகி மாடலுக்கும் ஆர்ட்டிஸ்ட்களுக்கும் இடையில
தானாவே ஒரு அண்டர்ஸ்டாண்டிங் வந்துடும். எந்தப் படமா இருந்தாலும், அதை வரையறதுக்கு
அப்படி ஒரு அண்டர்ஸ்டாண்டிங் வரணும்”
மாடலிங் பற்றி விட்டல்ராவ்
சொல்லச் சொல்ல எனக்குள் புதிதுபுதிதாக சந்தேகங்கள் தோன்றியபடி இருந்தன. பதில் தெரிந்துகொள்ளும்
ஆவலில் நான் ஒன்றுவிடாமல் கேட்டேன். அவரும் என் எல்லாக் கேள்விகளுக்கும் தெளிவான வகையில்
பதில் சொன்னார்.
“இப்ப மாடலா நிக்கறதுக்கு
ஒரு லேடி வந்து நிக்கறாங்கன்னு வச்சிக்குவோம். அவுங்கள பார்த்து ஆர்ட்டிஸ்ட்ங்க படம்
வரையறாங்க. படத்துல அவுங்க முகத்தையே ஒவ்வொருத்தவங்களும் வரைஞ்சா, அது எந்த விதத்துலயாவது
பிரச்சினையை உருவாக்குமா?”
“அவுங்க முகமே அந்த ஓவியத்துல
இருக்கும்ன்னு யாரு சொன்னாங்க பாவண்ணன்? மாடலுடைய முகத்தை பார்ப்பாங்களே தவிர, யாரும்
வரைய மாட்டாங்க. முழுக்க முழுக்க வேற முகத்தைத்தான் எல்லாரும் வரைவாங்க.”
விட்டல்ராவின் பதில் ஒருகணம்
என்னைத் திகைக்கவைத்தது. “அப்படியா?” என்று கேட்டபோது என் குரல் எனக்கே கேட்கவில்லை.
விட்டல்ராவ் புன்னகைத்தபடியே
தொடர்ந்தார். “பொண்ணா இருந்தாலும் சரி, ஆணா இருந்தாலும் சரி, ஒவ்வொரு ஆர்ட்டிஸ்ட் மனசுக்குள்ளயும்
ஒரு பொண்ணுக்கான முகம், ஒரு ஆணுக்கான முகம்னு தனித்தனியா இருக்கும். அந்த உருவம்தான்
ஓவியத்துக்குள்ள வரும். அப்புறம் எதுக்கு மாடல்னு உங்களுக்கு தோணலாம். அது அந்த குறிப்பிட்ட
ஒரு கோணத்துக்காக. ஒரு சாயலுக்காக. உடல் வளைவுக்காக. அந்தத் துல்லியத்தைப் புரிஞ்சிக்கறதுக்காகத்தான்
மாடலை நிக்க வைக்கிறது. எந்த மாடலுடைய படத்தையும் எந்த ஸ்டுடியோவுலயும் எந்த ஆர்ட்டிஸ்ட்டும்
வரையமாட்டான். அது ஒரு அறம். கண்ணால பார்க்கிற உருவத்துக்கு அவன் தன்னுடைய நெஞ்சில
இருக்கிற உருவத்தைத்தான் கொடுப்பான்”
இனிமேல் கேட்பதற்கு எதுவுமில்லை
என்னும் அளவுக்கு விட்டல்ராவின் பதில் தெளிவாக அமைந்துவிட்டது. அதனால் உரையாடலை வேறு திசையில் திருப்பும் விதமாக “இந்த மாடலிங்ல வித்தியாசமான ஆளா யாரையாவது நீங்க
பார்த்திருக்கீங்களா?” என்று கேட்டேன்.
அவர் புருவத்தை உயர்த்திப்
புன்னகைத்தபடி “நிறைய பேரை பார்த்திருக்கேன் பாவண்ணன்” என்றார்.
எல்லோரைப்பற்றியும் அக்கணமே
தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஆர்வம் எழுந்தது.
ஆனாலும் அதைக் கட்டுப்படுத்திக்கொண்டு “யாராவது ஒருத்தரப் பத்தி சொல்லுங்களேன் சார்”
என்று கேட்டேன்.
விட்டல்ராவ் புன்னகைத்தபடியே
ஒரு கணம்தான் யோசனையில் ஆழ்ந்தார். உடனே யாரோ ஒருவரைப்பற்றிய சித்திரத்தை அவர் தன்
நினைவிலிருந்து தேடி எடுத்துவிட்டார். சற்றே தொண்டையைச் செருமிக்கொண்டு சொல்லத் தொடங்கினார்.
“டிப்ளமா முடிச்சதுமே எங்க
ப்ரின்ஸிபால் எங்களையெல்லாம் அழச்சி ஒரு வார்த்தை சொன்னாரு. உங்க கையில வாழ்க்கைக்கு
ஏதோ ஒரு வேலை இருக்குது. அது உங்க கால்ல நீங்க நிக்கறதுக்கு அது நல்லதுதான். பெயிண்டிங்க
கத்துகிட்டது போதும்னு அது என்னைக்காவது ஒரு நாள் நினைக்க வச்சிடும். ஆனா, நீங்க எல்லாரும்
திறமைசாலிங்க. உங்களுக்கு அப்படி ஒரு எண்ணம் ஒருநாளும் வந்துடக் கூடாது. ஒரு நாள் கூட
பெயிண்டிங்க நிறுத்தக் கூடாது. ஒவ்வொரு நாளும் போட்டுகிட்டே இருக்கணும். வெளியில ஆர்ட்
ஸ்கூல்ல சேருங்க. க்ளப்ல சேருங்க. பெயிண்டிங். பெயிண்டிங். பெயிண்டிங். அதுதான் உங்க
மூச்சா இருக்கணும். ப்ராக்டிஸ மட்டும் மறக்காதீங்கன்னு
சொல்லி அனுப்பினாரு”
“சரி”
“அப்ப தனுஷ்கோடி ஒரு ஆர்ட்
ஸ்கூல்ல செக்ரட்டரியா இருந்தாரு. நான் அங்க போய் சேர்ந்தேன். சுரேந்திரநாத்னு ஒரு பெரிய
பெயிண்டர். அவருதான் வாட்டர்கலர்க்கு மாஸ்டர். சந்தானராஜ்னு இன்னொருத்தர். அவர் ஆயில்
பெயிண்டிங்க்கு மாஸ்டர். அந்தோணிதாஸ் மாஸ்டர்தான் எங்க க்ளாஸ் டீச்சர். எல்லாருமே அந்தக்
காலத்து வைரங்கள்.”
குறுக்கிட்டுப் பேசி அவருடைய
மனநிலையைக் கலைத்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் அவர் முகத்தையே அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்தேன்.
“மாடலிங் க்ளாஸ்ங்கறது
ஒரு மணி நேரம் நடக்கும். ஒரு தரம் க்ளாஸ் ஆரம்பிக்கற
நேரம் நெருங்கிட்டுது. ஆனா மாடல் வந்து சேரலை. எங்க வாட்ச் மேன்தான் மாடலுக்கு ஏற்பாடு
செய்யறதா சொல்லியிருந்தாரு. சொல்லிட்டு வந்திருக்கேன் சார், வந்துருவாங்கன்னு அவர்
சொன்னதை நம்பி மாஸ்டர் ரூம் லைட்டிங்க்ஸ், ஸ்க்ரீன் ஷேட் எல்லாம் ஏற்பாடு பண்னிட்டாரு.
ஆனா, வரேன்னு சொன்ன பொண்ணு வந்து சேரலை.”
“அப்புறம்?”
“மாஸ்டர் எதுவுமே பேசலை.
அமைதியா தன்னுடைய ரூமுக்கு போய் உக்காந்துகிட்டாரு. வாட்ச்மேன்தான் வாசலுக்கும் ரூமுக்குமா
நடையா நடந்துட்டே இருந்தாரு. ஏழைப் பொண்ணு சார், அஞ்சி ரூபா கெடைச்சா உதவியா இருக்குமேன்னு
நினைச்சி அதுங்கிட்ட சொல்லிட்டு வந்தேன். இப்படி பழி வாங்கிடுச்சே சார்னு பொலம்பிட்டே
இருந்தாரு. கடைசியா ஒரு வழியா வந்து சேர்ந்துட்டுது அந்தப் பொண்ணு. ஏம்மா இப்படி லேட்டா
வந்தன்னு கேட்டதுக்கு நான் என்ன செய்யறது, பஸ் ஏறி வரதுக்கு என்கிட்ட காசா இருக்குது.
வீட்டிலேருந்து நடந்தே வந்தேன் தெரியுமான்னு அந்தப் பொண்ணு மூஞ்சிய தூக்கி வச்சிகிச்சி.
அதெல்லாம் கூட பரவாயில்லை. இடுப்புல ஒரு கொழந்தையோடு வந்திருந்தது அந்தப் பொண்ணு. அதுதான்
பெரிய பிரச்சினை”
“ஐயையோ, எப்படி சமாளிச்சீங்க?”
“வரச் சொன்ன பிறகு திருப்பி
அனுப்பவும் மனசு வரலை. குழந்தையோடு எப்படிம்மா இந்த வேலையை செய்வன்னு மாஸ்டர் சங்கடப்பட்டாரு.
அதெல்லாம் ஒரு பிரச்சினையும் இல்ல சார். உக்கார வச்ச இடத்துல புடிச்சி வச்ச புள்ளையாரு
மாதிரி உக்காந்திருக்கும் நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்கன்னு அந்தப் பொண்ணு சிரிச்சிது.
சரி ரூமுக்குள்ள அங்கி இருக்கு. இதை கழட்டிட்டு அதை போட்டுகிட்டு வாம்மான்னு சொன்னாரு
மாஸ்டர். கொழந்தையோடு உள்ள போய் துணிய மாத்திகிட்டு வந்து நின்னுது அந்தப் பொண்ணு”
“குழந்தையை வச்சிகிட்டு
எப்படி மாடல் பண்ணினாங்க?”
“சொல்றேன் கேளுங்க. பக்கத்துல
ஒரு பெரிய ஸ்டூல் இருந்தது. அதுக்குக் கீழ அந்தக் குழந்தையை எறக்கி உக்கார வச்சிகிட்டு
அந்தப் பொண்ணு ஹாலுக்கு நடுவுல போட்டிருந்த டேபிள் கிட்ட போயிடுச்சி. எந்தெந்த மாதிரியான
பொசிஷன்ல நிக்கணும் எப்படியெல்லாம் வளையணும், எந்தெந்த கோணத்துல பார்க்கணும்னு மட்டும்
மாஸ்டர் அந்தப் பொண்ணுக்கு சொல்லிக் கொடுத்துட்டு எல்லா லைட்ஸ்களையும் ஆன் பண்ணிட்டாரு.”
“சரி”
”நாங்க எல்லாரும் அந்தப்
பொண்ண சுத்தி நின்னு ஸ்கெட்ச் போட ஆரம்பிச்சோம். மாஸ்டர் அன்னைக்கு மொத்தமே ஒரு மூனு
பொசிஷன்ஸ்தான் திட்டம் போட்டிருந்தாரு. ஆனா முதல் பொசிஷன முடிக்கறதுக்கே பெரும்பாடாயிடுச்சி.”
“ஏன் சார்?”
“ஆரம்பத்துல அந்தப் பொண்ணு
சொன்னதுமாதிரியே அந்தக் குழந்தை ஸ்டூல் கீழயே அமைதியா உக்காந்துகிட்டுதான் இருந்தது.
ஆனா தன்னுடைய அம்மா தன் பக்கமும் பார்க்காம, குரலும் கொடுக்காம எங்கயோ பார்த்த மாதிரி
உக்காந்துகிட்டிருக்காங்களேன்னு நெனச்சதோ என்னமோ, ஓன்னு அழ ஆரம்பிச்சிட்டுது. மூஞ்சிய
திருப்பாமயே அந்தப் பொண்ணும் கொழந்தையுடைய பெயரைச் சொல்லி சும்மா இருப்பா சும்மா இருப்பான்னு
சொல்லிட்டே இருந்திச்சி. அதெல்லாம் எதுவும் உதவலை. அந்தக் குழந்தை மெதுவா முட்டிக்கால்
போட்டு நவுந்து நவுந்து அந்தப் பொண்ணுகிட்ட வந்து அங்கிய புடிச்சி இழுக்க ஆரம்பிச்சிது.
எப்படியோ ஒரு வழியா ஒரு பொசிஷன் முடிஞ்சது”
“அதுக்கப்புறம் அந்தப்
பொண்ணு என்ன செஞ்சிது?”
“கீழ எறங்கி வந்து குழந்தையை
தூக்கி கொஞ்ச நேரம் கொஞ்சிச்சி. அதுக்கப்புறம்தான் அந்தக் கொழந்தையுடைய அழுகை அடங்கிச்சி.
பையில ஏதோ பிஸ்கட் வச்சிருந்தது அந்தப் பொண்ணு. அதுல ரெண்டு எடுத்து கையில கொடுத்திச்சி.
அப்புறம் என்ன நெனச்ச்சதோ தெரியலை. பக்கத்துல கெடந்த ஒரு கயித்த எடுத்து ஒரு முனைய
ஜன்னல் கம்பியில கட்டிட்டு இன்னொரு முனைய குழந்தை இடுப்புல இருக்கிற அண்ணாக்கயித்துல
கட்டிட்டு ரெண்டாவது பொசிஷனுக்கு வந்துடுச்சி”
“அந்த செஷன் சரியா வந்ததா?”
“எங்க சரியா வந்தது? பிஸ்கட்
காலியாவுற வரைக்கும் அந்தக் குழந்தை அமைதியா இருந்திச்சி. அது தீந்ததும் தன் கைவரிசையை
காட்ட ஆரம்பிச்சிட்டுது. அழுதுகிட்டே மறுபடியும் அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் முட்டிக்கால்
போட்டு நகர முயற்சி செஞ்சிது. இடுப்புல கயிறு கட்டியிருக்கறதால அதனால முன்னோக்கி நகர
முடியலை. தன்னை சுத்தி என்னமோ நடக்குதுன்னு நெனச்சி அந்தக் குழந்தை பயந்துடுச்சி. ஓன்னு
ரொம்ப சத்தமா அழ ஆரம்பிச்சிட்டுது. குழந்தை அழற சத்தம் கேட்டு அந்தோணிதாஸ் மாஸ்டர்
ரூம விட்டு வெளியே வந்துட்டாரு”
“ஐயையோ, அப்புறம்?”
“அவருக்கு ரொம்ப சங்கடம்.
அவர் ரொம்ப கண்டிப்பானவர். சூழலைப் பார்த்ததுமே
அவரு புரிஞ்சிகிட்டாரு. எதுக்குப்பா இந்த மாதிரியானவங்கள அழச்சிகிட்டு வந்து கஷ்டப்படுத்தறீங்கன்னு
வாட்ச்மேன்கிட்ட சொல்லிட்டு வேகமா போயிட்டாரு.”
“செஷன் தொடர்ந்ததா, இல்லையா?”
“எப்படியோ ஆரம்பிச்ச வேலையை
முடிச்சிட்டோம். அந்தப் பொண்ணு ஓடிப் போய் கட்டியிருந்த கயித்தை அவுத்து குழந்தையை
தூக்கி கொஞ்சி அமைதிப்படுத்தறதுலயே நேரம் போயிடுச்சி. மூனாவது பொசிஷன்ல அந்தக் குழந்தையை
தனியா பிரிச்சி வைக்கமுடியலை. காலுக்குப் பக்கத்துலயே உக்கார வச்சிகிட்டு பொசிஷன்ல
நின்னாங்க. எப்படியோ அரைகுறையா முடிச்சோம். மாஸ்டர் சாருக்கு மனசே சரியில்லை. போதும்னு
முடிச்சிகிட்டாரு. இந்த மாதிரியான இடத்துக்கு வரும்போது குழந்தையை தூக்கிட்டு வரலாமா,
யார்கிட்டயாவது விட்டுட்டு வரக்கூடாதான்னு அந்தப் பொண்ணுகிட்ட கேட்டாரு மாஸ்டர். சொந்தம்னு
சொல்லிக்க இந்த ஊருல யாரும் இல்லை சார். ஊட்டுக்காரன் மட்டும்தான். அவன் காலையிலயே
ரிக்ஷா இழுக்க போயிட்டான். அஞ்சி ரூபா கெடைக்குதேன்னு நெனச்சித்தான் சார் வந்தேன்.
குழந்தை இப்படி தொந்தரவு கொடுக்கும்ன்னு நான் எதிர்பார்க்கலை சார். தப்பா எடுத்துக்காதீங்க,
மன்னிச்சிக்குங்க சார்னு அந்தப் பொண்ணு கையெடுத்து கும்பிட்டுது.”
“த்ச்.த்ச். பாவம்தான்
சார்”
“வெறும் அஞ்சி ரூபாயோடு
அனுப்ப மாஸ்டருக்கு மனசு கேக்கலை. எல்லாரும் கையில இருக்கறத போட்டு மொத்தமா கொடுத்தனுப்புங்கப்பான்னு
சொல்லிட்டு போயிட்டாரு. அவரும் கொஞ்சம் பணம் கொடுத்தாரு. எல்லா ஸ்டூடண்ட்ஸ்ங்களும்
ரெண்டு மூனுன்னு போட்டு கலெக்ஷன் செஞ்சோம். எல்லாத்தயும் கூட்டி பார்த்தா நாற்பது
ரூபா இருந்தது. இந்தாம்மா, எங்க உதவியா இத வச்சிக்கோம்மான்னு அந்தப் பணத்தை அந்தப்
பொண்ணுகிட்ட கொடுத்தோம். அதைப் பார்த்து அந்தப் பொண்ணு கண்ணுலாம் கலங்கிட்டுது. கையெடுத்து
கும்புட்டுட்டு பணத்தை வாங்கிட்டு போயிட்டுது.”
ஒரு கணம் அவருடைய குரல்
நின்றது. அந்த அமைதியில் ஒரு பெண் கைக்குழந்தையுடன் நடந்துபோகும் காட்சியை அவர் தனக்குள்
மீட்டுருவாக்கம் செய்துகொள்வதாக நினைத்துக்கொண்டேன். அக்கணத்தில் என் மனத்திலும் அக்காட்சி
உருப்பெற்று நிற்பதை உணர்ந்தேன்.
புன்னகையும் பெருமூச்சுமாக
ஒரு கணம் என்னை நிமிர்ந்து பார்த்தார் விட்டல்ராவ். ”வாழ்க்கையில எல்லாருமே ஏதோ ஒரு
விதத்துல பரிதாபத்துக்குரியவங்கதான் பாவண்ணன். மாடலுக்கு வரக்கூடியவங்க மட்டுமில்ல.
இன்னும் பல பேர நாம அந்தப் பட்டியல்ல சேர்க்கலாம்” என்றார்.
(காவ்யா - இலக்கியக்காலாண்டிதழ் - ஜனவரி 2024)