Home

Monday, 1 January 2024

கதைசொல்லத் தூண்டும் கதைகள்

  

சில ஆண்டுகளுக்கு முன்பு உறவினர் வீட்டுத் திருமணத்துக்குச் சென்றிருந்தேன். பலர் குடும்பத்துடன் வந்திருந்தனர். இரவு உணவு முடிந்த பிறகு எல்லோரும் மண்டபத்திலேயே தங்கிவிட்டோம்.

பெரியவர்கள் அனைவரும் ஒரு பக்கமாக அமர்ந்து பழைய கதைகளைப் பேசிக்கொண்டிருந்தனர். ஐந்து வயது முதல் பத்து வயது வரைக்குமான சிறுவர்களும் சிறுமிகளும் வேறொரு பக்கத்தில் கூடி விளையாடிக்கொண்டிருந்தனர். எல்லாமே அரங்குக்குள்ளே ஆட முடிந்த சின்னச்சின்ன விளையாட்டுகள். கண்ணாமூச்சி. கல்லா மண்ணா. சாபூத்ரி. உப்புமூட்டை.

 பெரியவர்களோடு அமர்ந்து பேசுவதற்கு எனக்குச் சலிப்பாக இருந்தது.  அதனால் சிறுவர்கள் பக்கமாகத் திரும்பி “ஆடனதெல்லாம் போதும். இங்க வாங்க. கதை சொல்றேன்” என்று அழைத்தேன். உடனே எல்லாச் சிறுவர் சிறுமியரும் “ஐ. கதை” என்று கைதட்டி ஆரவாரம் செய்தபடி ஓடி வந்து என்னைச் சுற்றி அமர்ந்துகொண்டனர்.

”ஆனா, ஒரு கன்டிஷன்” என்று அவர்களைப் பார்த்து ஆட்காட்டி விரலை உயர்த்தியபடி சொன்னேன். “என்ன கன்டிஷன்?” என்று ஒரு சிறுவன் கேட்டான்.  ”நான் கதையை சொல்லி முடிச்ச பிறகு, உங்ககிட்ட கதை புடிச்சிருக்குதா, இல்லையான்னு கேப்பேன். அப்ப நீங்க உண்மையான பதிலைச் சொல்லணும்” என்று விரலை உயர்த்திச் சொன்னேன். அனைவரும் ஒரே குரலில் “நாங்க உண்மையைத் தவிர வேறு எதையும் சொல்லமாட்டோம்” என்று நாடகத்தில் வசனம் பேசுவதுபோலச் சொன்னார்கள்.

“புடிக்கலைன்னு சொன்னா, நான் உங்களுக்கு மறுபடியும் ஒரு கதை சொல்வேன்”

“ஐ, கதையை அடுத்து கதையா? ஜாலி. ஜாலி” என்று குதித்தாள் ஒரு சிறுமி. மற்றவர்களும் உற்சாகமாக தலையை அசைத்துக்கொண்டனர்.

“ஒருவேளை புடிச்சிருக்குதுன்னு சொன்னா, நீங்க எனக்கு ஒரு கதையைச் சொல்லணும்”

“நாங்களா? கதையா?” என்று முணுமுணுத்தபடி தயக்கத்துடன் ஒருவர் முகத்தை இன்னொருவர் பார்த்துக்கொண்டனர். சில கணங்களின் அமைதிக்குப் பிறகு ஒவ்வொருவராக குரலை உயர்த்தி நிபந்தனையை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்துவிட்டு “முதல்ல நீங்க கதையைச் சொல்லுங்க” என்றனர்.

நான் அவர்களுக்கு ஒரு கதையைச் சொன்னேன். ஒரு சிறுவனும் ஒரு நாய்க்குட்டியும் ஒரு கிளியும் சேர்ந்து காட்டுக்குள் திசைமாறி காணாமல் போன ஒரு கன்றுக்குட்டியைத் தேடிக் கண்டுபிடிக்கும் கதை. அவர்கள் அக்கதையை ஆர்வத்துடன் கேட்டனர். இருபது நிமிடங்களில் கதை உச்சத்துக்குச் சென்று முடிவடைந்தது. எல்லோருடைய முகங்களிலும் பரவசத்தைப் பார்க்கமுடிந்தது.

”இப்ப ஒரொரு ஆளா கையைத் தூக்கி புடிச்சிருக்குதா புடிக்கலையான்னு சொல்லுங்க” என்றேன். முதலில் எல்லோரும் அமைதியில் மூழ்கியிருந்தனர். அந்த இறுக்கத்திலிருந்து விடுபட்டு ஒரு சிறுமி கையைத் தூக்கி “ரொம்ப ரொம்ப புடிச்சிருக்குது” என்றாள். அவளைத் தொடர்ந்து மெல்ல மெல்ல ஒவ்வொருவராக எழுந்து “புடிச்சிருக்குது” என்றனர்.

நிபந்தனையின்படி முதலில் பிடித்திருப்பதாகச் சொன்ன சிறுமி எழுந்து நின்று கதை சொல்லத் தொடங்கினாள். நான் சொன்ன கதையிலிருந்தே கிளியை மட்டும் எடுத்துக்கொண்டு ஏதேதோ புதுமைகளைக் கோர்த்துக்கோர்த்து கதையை வளர்த்துச் சென்று முடித்தாள்.  எல்லோரும் கைத்தட்டி அவளை உற்சாகப்படுத்தினோம்.

அடுத்து மற்றொரு சிறுவன் தொடங்கினான். அவன் கன்றுக்குட்டியை மையமாகக் கொண்டு ஒரு கதையைச் சொன்னான். இப்படியே ஆளாளுக்கு ஒரு கதையைச் சொல்லி அன்றைய பொழுதைப் போக்கினோம். நேரம் பின்னிரவை நெருங்கிவிட்டதால் அங்கேயே ஆளுக்கொரு போர்வையை விரித்து சுருண்டு படுத்தோம்.

இத்தனை ஆண்டு காலமாக சிறுவர்சிறுமியரோடு உரையாடியதன் வழியாக நான் புரிந்துகொண்ட ஒரு முக்கியமான செய்தி என்னவென்றால் அவர்களுக்கு கற்பனை சார்ந்த கதைகள் மிகவும் பிடிக்கின்றன என்பதுதான். புற உலகத்தில்தான் பாறைகள் வெறும் பாறைகளாகவே இருக்கின்றன. சிறுவர்கள் தம் கதைகளில் பாறைகளை பறவைகளாக மாற்றி பறந்துபோவதை விரும்புகிறார்கள். இளவரசியாக மாற்றுகிறார்கள். எலிகளாக மாற்றி வளை தோண்டவைக்கிறார்கள். மாற்றமும் வேகமும் அவர்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அவர்களுடைய கதையுலகத்துக்கு தர்க்கம் தேவையில்லை. இனிய கற்பனைகள் அவர்களை எளிதாகக் கவர்கின்றன.

ஒரு சிறுமி சொன்ன கதை இன்னமும் என் நினைவில் உள்ளது. ஒரு புல்வெளியில் ஒரு ஆட்டுக்குட்டி தன்னந்தனியே திரிகிறது. அதைப் பார்த்துவிட்டு காட்டுக்குள்ளிருந்து ஒரு ஓநாய் அந்தக் குட்டியை அடித்துக் கொல்ல வருகிறது. ஓநாயின் பிடியிலிருந்து தப்பிக்க முடியாது என்பதை உணர்ந்துகொண்ட ஆட்டுக்குட்டி தந்திரத்தால் தப்பிக்க நினைக்கிறது. ஓநாய் பின்னால் தொடர்ந்து வருகிறது என்பதை அறிந்த பிறகும்கூட பதற்றமே இல்லாமல் தன் போக்கில் புல் மேய்ந்தபடி இருக்கிறது.

ஒநாய் கனைத்துப் பார்க்கிறது. முறைத்துப் பார்க்கிறது. ஆனால் ஆட்டுக்குட்டி திரும்பிக்கூட பார்க்கவில்லை. சீற்றம் கொண்ட ஓநாய் ஆட்டுக்குட்டியை நெருங்கிவந்து நின்று “நான் யார் என்று உனக்குத் தெரியவில்லையா?” என்று ஆணவத்தோடு கேட்கிறது. ஆட்டுக்குட்டி திரும்பிப் பார்த்துவிட்டு உதட்டைப் பிதுக்குகிறது. ”உன்னைத் தெரியவே இல்லையே. யார் நீ? இங்கே புல் மேய்வதற்காக வந்திருக்கிறாயா? சரி, நீ இந்தப் பக்கமாக மேய்ந்துகொள். நான் அந்தப் பக்கம் போகிறேன்” என்று சொல்லிவிட்டு வேறொரு திசையில் திரும்பி விடுகிறது. இப்படி ஒரு முட்டாள் குட்டியைக் கொல்ல விரும்பாத ஓநாய் காட்டுக்குத் திரும்பிச் சென்றுவிடுகிறது.

எங்கேயும் எழுதப்படாத கதை. யாரும் சொல்லாத கதை. ஆனால், எங்கோ ஓர் ஊரில் யாரோ ஒரு சிறுமி இப்படிப்பட்ட கதையைச் சொல்லிக்கொண்டே இருக்கிறாள்.

பஞ்சுமிட்டாய் என்றொரு சிறுவர் இதழில் இளஞ்சிறார்களை இப்படி சுதந்திரமாக கதை சொல்ல வைத்து, அதற்கு எழுத்துருவம் கொடுத்து தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறார்கள். அந்தப் புத்தகத்தில் அற்புதமான பகுதி அது. என் கைக்கு அப்புத்தகம் கிடைக்கும் ஒவ்வொரு முறையும் நான் அதைத்தான் முதலில் விருப்பமுடன் படிப்பேன்.

எழுத்தாளர் இரா.நடராசனின் கதைகள் சுதந்திரமாக கதை சொல்லும் வகைமை சார்ந்தவை. குழந்தைமைக்கே உரிய கற்பனை அவருடைய கதைகளில் நிறைந்திருக்கிறது. அதுதான் அவருடைய வலிமை. அவருடைய கதைகளைக் கேட்கும் குழந்தைகளுக்கு அவரைப்போலவே கதைகளைச் சொல்லும் ஆர்வம் எழும். ஆர்வமும் கற்பனையும் அவருடைய கதையின் இரு முகங்கள்.

கழுதை வண்டி ஏராளமான பகுதிகளையுடைய ஒரு நெடுங்கதை. ஒவ்வொரு பகுதியும் தனித்தனி கதையாக அமைந்திருப்பதால் படிப்பதற்கு சுவாரசியமாக இருக்கிறது. கழுதை வண்டிக்குள் ஏராளமான உள்ளடுக்குகள் இருக்கின்றன. அவற்றுள் பல அதிசயமான பொருட்கள் நிறைந்துள்ளன.

அவன் பொருட்களை பணத்துக்காக விற்பதில்லை. மாறாக ஒவ்வொரு பொருளையும் இன்னொரு பொருளுக்கு பண்டமாற்றாகக் கொடுக்கிறான்.  ஒவ்வொரு ஊரிலும் வண்டியை நிறுத்தி பழைய பொருட்களைக் கொடுத்துவிட்டு  அவர்களிடமிருக்கும் சிறப்பானதொரு பொருளை வாங்கிக்கொண்டு அடுத்த ஊருக்குச் செல்கிறான்.

அவனிடம் முத்துமாலை, வாள், விதைகள், காலணிகள், தட்டு, சவரக்கத்தி, மோதிரம் என ஏராளாமனவை இருக்கின்றன. திப்புசுல்தானின் பெல்ட், விக்டோரியா மகாராணியின் பித்தளைப்பேனா, கரிகாலனின் தேநீர்க்கோப்பை என அவனிடம் இல்லாத பொருளே இல்லை. ஒவ்வொரு ஊரிலும் மக்கள் கூடுமிடங்களில் வண்டியை நிறுத்திவிட்டு, ஒவ்வொரு பொருளையும் உயர்த்திக் காட்டி, அதை விற்கப் போவதாக அறிவிக்கிறான். உடனே அவனைச் சுற்றி சிறுவர்களும் பெரியவர்களும் கூடிவிடுகிறார்கள். அப்போது, இந்தப் பொருள் எனக்கு எப்படி கிடைத்தது தெரியுமா என்று பெருமையோடு கேட்கிறான். சுற்றி நிற்பவர்களுக்கு அப்பொருளின் பெருமையைப் புலப்படுத்தும் வகையில் அந்தப் பொருள் தன் கைக்கு வந்து சேர்ந்த கதையைச் சொல்கிறான். அவன் மொழியில் மயங்கிய  கூட்டம் அவனுடைய கதையை வாய்பிளந்து கேட்டபடி நின்றிருக்கிறார்கள். அவர்களிடமிருக்கும் ஏதேனும் ஓர் அபூர்வமான பொருளை வாங்கிக்கொண்டு, தன்னிடம் இருக்கும் பொருளைக் கொடுத்துவிட்டு அடுத்த ஊரை நோக்கிச் செல்கிறான் அவன். ஒவ்வொரு ஊரிலும் அவன் சொல்லும் கதைகளின் தொகுப்பே நெடுங்கதையாக விரிந்து செல்கிறது.

விதவிதமான தராசுகளைச் சேகரித்து வைத்திருக்கும் ஓர் அருங்காட்சியகம் இருக்கிறது. தானிய தராசு, நெம்புகோல் தராசு, பலி தராசு, தொங்கு தராசு, சுருள்வில் தராசு, வேதித்தராசு, ஒற்றைத்தட்டு தராசு, பல்சக்கரத் தராசு என ஏராளமான தராசுகள். ஒவ்வொன்றும் ஒரு வேலைக்குரியது. அந்தக் காட்சியகத்தை நிர்வகிக்க திறமையும் அறிவுக்கூர்மையும் உள்ள ஒருவர் வேண்டும். தலைமைப்பண்புள்ள தகுதியான ஒருவர் வேண்டுமென அவர்கள் தம் தெய்வமான கழுதையிடம் முறையிடுகிறார்கள் அந்த ஊரினர்.

கழுதை நல்ல நிர்வாகியைக் கண்டுபிடிக்கும் பொறுப்போடு ஊரை விட்டுச் செல்கிறது.  ஒவ்வொரு ஊராக அலைகிறது. இறுதியாக ஒருவனைக் கண்டடைகிறது. அவன் ஒரு சிறுவணிகன். ஊரூராக வண்டியை இழுத்துச் என்று தன்னிடம் உள்ள பொருட்களை விற்பனை செய்பவன். ஒரு சிறப்பான கணமொன்றில் அவன் பார்வையில் கழுதையும் கழுதையின் பார்வையில் அவனும் பார்த்துக்கொள்கிறார்கள். அவன் அக்கழுதையை வண்டியில் பூட்டி வணிக்கப்பயணத்தைத் தொடங்குகிறான். அவன் செல்லும் வணிகப்பாதை வழியாகவே கழுதை தன் நிலத்தை நோக்கி அவனை அழைத்துச் செல்கிறது. இறுதியில் இருவருடைய எண்ணங்களும் ஈடேறுகின்றன.

அவன் சொல்லும் ஒவ்வொரு கதையும் சில சமயங்களில் நாடோடிக்கதைபோல உள்ளது. சில சமயங்களில் ஈசாப்கதை போலவும் தேவதைக்கதைகள் போலவும் உள்ளது. எந்த வடிவத்தில் அமைந்திருந்தாலும் அவற்றைச் சுவையோடு சொல்லும் மொழியாற்றல் நடராசனிடம் நிறைந்துள்ளது.

கழுதைவண்டிக்காரன் சொல்லும் ஒரு கதையில் வாள் தொடர்பான  ஒரு கதை இடம் பெற்றிருக்கிறது. கூடியிருப்பவர்களைக் கவர்ந்திழுப்பதற்காக அந்த வாள் அலெக்சாண்டர் கையில் இருந்த வாள் என்று கதை சொல்கிறான் வண்டிக்காரன். மன்னன் போரஸுடன் நடைபெற்ற போரில் வெற்றி பெற்ற பிறகு அலெக்சாண்டர் புத்தத்துறவிகள் நிறைந்திருக்கும் ஒரு மடாலயத்துக்குள் செல்கிறான். துறவிகளை அவன் மிரட்டுகிறான். ஆனால் துறவிகள் அவனைக் கண்டு அஞ்சாமல் பதில் சொல்கிறார்கள். அலெக்சாண்டர் வாளை அவர்களுடைய கழுத்துக்கு எதிரே நீட்டிய போதும் தாம் சொல்ல நினைத்த பதில்களை மன உறுதியுடன் அவர்கள் எடுத்துரைக்கிறார்கள்.

அலெக்சாண்டர் துறவியை நோக்கி வாளை நீட்டியபடி “நரகம் என்றால் என்ன, தெரியுமா?” என்று கேட்கிறான். ”படையெடுத்துச் சென்று வெற்றி கொள்ள அது ஒன்றும் ராஜ்ஜியமல்ல” என்று சொல்கிறார் துறவி. அலெக்சாண்டர் தன் வாளை அத்துறவியை நோக்கி எடுத்துச் செல்கிறார். துறவி அப்போதும் புன்னகை மாறாதபடி வாளை உருவி தன் கழுத்துக்கருகில் வைத்ததுதான் நரகம் என்று சொல்கிறார். துறவியின் அஞ்சாமையைக் கண்டு வியந்த அலெக்சாண்டர் அக்கணமே வாளை விலக்கிவிடுகிறார். அத்துறவி மீண்டும் நிதானமான குரலில் ”இதோ, வாளை எடுக்கிறாயே, இதுதான் சொர்க்கம்” என்று தெரிவிக்கிறார். அப்படி ஒரு மனநிலையை அதுவரை அறியாத அலெக்சாண்டர் வாளை கீழே வைத்துவிட்டு வணங்குகிறான். தன்னிடம் இருக்கும் வாள் அன்று அலெக்சாண்டர் மடாலயத்தில் விட்டுச் சென்ற வாள் என்று அப்பகுதியை தன் கதைக்குள் இணைத்துக்கொள்கிறான் கழுதைவண்டிக்காரன்.

இப்படி பத்துக்கும் மேற்பட்ட சின்னச்சின்ன கற்பனைக்கதைகளை இணைத்து, இரா.நடராசன் இந்த ’கழுதைவண்டி’ நெடுங்கதையை உருவாக்கியிருக்கிறார். நடராசனின் கதைகளில் வரலாறு, கற்பனை, அறிவியல், நாடோடி அம்சங்கள் எல்லாம் மாறி மாறி இடம்பெற்றுள்ளன. நடராசனின் கதைமொழி, கதையைப் படிக்கும் சிறுவர்களும் சிறுமிகளும் ஆர்வம் குன்றாதபடி தொடர்ந்து வாசிப்பதற்கு ஏதுவான எளிய மொழி. கழுதைவண்டி செல்லும் இடங்களிலெல்லாம் கூட்டம் கூட்டமாக சிறுவர்களும் பெரியவர்களும் சேர்ந்துவந்து வண்டிக்காரன் சொல்லும் கதைகளைக் கேட்பார்கள் என்றொரு குறிப்பு நடராசனின் கதையில் இடம்பெற்றிருக்கிறது. அதைப்போலவே நடராசனின் கழுதைவண்டி கதையைப் படிப்பதற்கும் சிறுவர்களும் பெரியவர்களும் இணைந்த பெரிய கூட்டமே தமிழ்ச்சூழலில் உருவாக வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

இரா.நடராசனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

 (இரா.நடராசனின் கழுதைவண்டி சிறார் நாவலுக்கு எழுதிய முன்னுரை)