Home

Sunday, 28 January 2024

வாசிப்பில் கண்டடைந்த வரிகள்

  

பொதுவாக, அம்பு பட்ட மான் என்ற சொல்லைக் கேட்டதும் உயிர்துறக்கும் நிலையில் வலியால் துடிக்கும் ஒரு மானின் சித்திரமே நம் மனத்தில் உடனடியாக எழுகிறது. அதுவே இயற்கை. தினசரி உரையாடல்களில் தம் துயரத்தை வெளிப்படுத்த நினைக்கும் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு கணத்தில் இச்சொல்லைப் பயன்படுத்துவதை நாம் பார்க்கமுடியும். அதற்கு மாறாக, ஏக்கத்தாலும் தன்னிரக்கத்தாலும் இயலாமையாலும் மனம்கலங்கி நிற்கும் தவிப்புக்கும் அச்சொல் பொருத்தமாக இருக்கிறது. அப்படி ஒரு காட்சியமைப்பு முத்தொள்ளாயிரப் பாடலொன்றில் உள்ளது. அந்தப் பாடலை முன்வைத்து ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார் வளவ. துரையன். 

ஒருநாள் அடர்ந்த காட்டில் புகுந்த வேடர்கள் விலங்கினங்களை வேட்டையாடுகிறார்கள். ஒரு புதருக்கருகே ஓர் ஆண்மானும் ஒரு பெண்மானும் சேர்ந்து புல் மேய்ந்தபடி இருக்கின்றன. ஒரு வேடன் அக்காட்சியைப் பார்த்துவிடுகிறான். உடனே அந்த மான்களை நோக்கி அம்பை எய்கிறான்.  ஆண்மான் தப்பிவிடுகிறது. பெண்மான் மீது அம்பு பாய்ந்துவிடுகிறது. இரு மான்களும் அங்கிருந்து தப்பித்து ஓடுகின்றன.

எப்படியோ ஆண்மான் தப்பித்து அங்கிருந்த ஓர் ஓடையைக் கடந்து மறுகரைக்குச் சென்றுவிட்டது. ஆனால் அம்பு பட்ட மானால் அந்த அளவுக்கு வேகமாக ஓடமுடியவில்லை. தன்னை நோக்கி சில வேடர்கள் வருவதை அது பார்த்துவிடுகிறது. அதனால் அவர்கள் கடந்துபோன பிறகு செல்லலாம் என ஒரு புதருக்குள் சென்று மறைந்துகொள்கிறது. ஒருவழியாக அந்த வேடர்கள் அந்த இடத்தைக் கடந்து சென்றுவிடுகிறார்கள். நல்ல வேளை, பிழைத்தோம் என பெருமூச்சு வாங்கியபடி பெண்மான் வெளியே வருகிறது. மீண்டும் ஒரு வேடர் கூட்டம் அந்த வழியே வருவதை அது பார்க்கிறது. வேறு வழியில்லாமல், திரும்பி வந்து மீண்டும் புதருக்குள்ளேயே ஒடுங்கி மறைகிறது. செல்லவும் வழியின்று ஒதுங்கவும் வழியின்றி தவியாய்த்தவிக்கிறது மான்.

பாண்டிய மன்னன் வீதியுலா வருகிறான். தலைவி அவனைப் பார்க்கிறாள். அவள் மனத்தில் மன்மதனின் அம்பு தைத்துவிடுகிறது. பாண்டியன் அந்த இடத்தைக் கடந்து அரண்மனைக்குள் சென்றுவிடுகிறான். மன்மதனின் அம்பு தன்னைக் கொன்றுவிடுமோ என அஞ்சி அரசனைப் பின்தொடர்ந்து ஓடுமாறு தன் மனத்திடம் சொல்கிறாள் தலைவி. மனமும் அவள் சொல்லுக்கு இணங்கி ஓடத் தொடங்குகிறது. ஆனால் அரண்மனை வாயிலில் ஒரே கூட்டம். பல்வேறு செயல்களுக்காக அரசனைத் தேடி வருவர்களும் அரசனைப் பார்த்துவிட்டுத் திரும்பிச் செல்கிறவர்களுமாக நெரிசலாக இருக்கிறது. உள்ளே செல்ல இயலாத மனம் அவர்களுக்கு இடம்விட்டு ஓரமாக நிற்கிறது. ஒதுங்கி நிற்கும் மனத்தைக் கண்டு அவர்களோ நகைத்தபடி செல்கிறார்கள். அதைப் பார்த்து நாணத்தால் தலைகுனிந்து நிற்கிறது மனம். உள்ளே செல்லவும் இயலவில்லை. நாணத்தால் நிலைகுலையும் உணர்வையும் உதறமுடியவில்லை. அம்பு பட்ட மானைப் போன்றது அந்த மனநிலை. ஏக்கம், தன்னிரக்கம், மனக்கலக்கம் எல்லாம் அடங்கிய தவிப்பு.

 

புகுவார்க்கு இடம்கொடா போதுவார்க்கு ஒல்கா

நகுவாரை நாணி மறையா – இகுகரையின்

ஏமான் பிணைபோல் நின்றதே கூடலார்

கோமான்பின் சென்றஎன் நெஞ்சு

 

நாம் தினசரி வாழ்க்கையில் பயன்படுத்தும் எளிமையான ஒரு சொல்லுக்கு இப்படி ஒரு புதுமையான பரிமாணத்தை முத்தொள்ளாயிரப் பாடலில் கண்டடைந்து சொல்கிறார் வளவ. துரையன். பன்னெடுங்காலமாக அவர் மேற்கொண்டிருக்கும் சங்க இலக்கியப் பயிற்சி இந்த வாசிப்புக்குத் துணையாக இருக்கிறது.

இதைப்போலவே ஆர்வமூட்டும் மற்றொரு காட்சி அறநெறியும் மறநெறியும் கட்டுரையில் இடம்பெற்றிருக்கிறது. பழங்காலத்தில் ஒரு நாட்டின் மீது படையெடுத்து வரும் எதிரி நாட்டுப்படை அந்த நாட்டின் அரசனுடைய கோட்டையைத்தான் முதலில் சுற்றி வளைத்து நிற்கும். அது ஒரு போர்முறை. அப்படி முற்றுகையிடப்பட்ட கோட்டைக்கு வெளியேயிருந்து எவ்வகையான உணவுப்பொருட்களும் உள்ளே கொண்டுசெல்ல முடியாதபடி தடுக்கப்பட்டுவிடும். அப்போது முற்றுகையிடப்பட்ட மன்னனுக்கு இரு வழிகள் உண்டு. மக்கள் உணவுப்பற்றாக்குறையால் பாதிக்காத வகையில் கதவைத் திறந்து எதிரிநாட்டு அரசனுடன் சமரசம் பேசி நாட்டைக் காப்பாற்றுவது முதல் வழி.   சமரசத்துக்கு விருப்பமில்லையெனில், எதிரி மன்னனுடன் போரிட்டு விரட்டியடித்தல் இரண்டாவது வழி.

ஒருமுறை நலங்கிள்ளி என்னும் அரசனின் கோட்டையை எதிரிநாட்டுப்படை சுற்றி வளைத்துவிடுகிறது. நலங்கிள்ளியோ சமரசத்துக்கும் செல்லவில்லை. துணிவோடு போரிடவும் முன்வரவில்லை. அடைபட்ட கோட்டைக்குள் அவனும் அரண்மனைக்குள் அடைபட்டு வாளாவிருக்கிறான். அவனுடைய அமைதியைக் கண்டு வெகுண்டெழுந்து அவனைச் சந்திக்கச் செல்கிறார் கோவூர் கிழார் என்னும் புலவர். அவனுடைய அமைதியைச் சுட்டிக்காட்டி இடித்துரைக்கிறார்.

 

அறவை ஆயின் நினது எனத் திறத்தல்

மறவை ஆயிப் போரொடு திறத்தல்

 

என்பதுதான் அவருடைய உரையாடலின் சாரம். ஒன்று அறநெறி. இன்னொன்று மறநெறி.

சீவசிந்தாமணியை முதன்முதலாகப் பதிப்பித்தவர் உ.வே.சா. பல சுவடிகளை ஒப்புநோக்கி திருத்தமான ஒரு பதிப்பை அவர் கொண்டுவந்தார். அச்சமயத்தில் பொருள்புரியாத சில வரிகளுக்கு பலரைச் சந்தித்து கலந்துரையாடி விளக்கம் பெற்றார். விளக்கம் சார்ந்து அவர் அடைந்த ஒவ்வொரு அனுபவமும் ஒரு புன்னைவுநூலுக்கு இணையான சுவாரசியம் நிறைந்தது. அத்தகு பல அனுபவங்களை அவர் பல கட்டுரைகளாக எழுதியிருக்கிறார். அந்த அனுபவத் தொகையிலிருந்து ஓரிரு பாடல்விளக்கங்களைக் கட்டுரையாக்கியிருக்கிறார் வளவ.துரையன்.

சீவகனுக்கும் அவனுடைய தாயாருக்கும் இடையில் நிகழும் உரையாடலில் ’இடையன் எறிந்த மரம்’ என்னும் சொல் கையாளப்பட்டிருக்கிறது. அச்சொல்லுக்கு நேரடிப்பொருள் புரிந்தபோதும், பாடலில் பொருந்திப் போகும் முறையை உ.வே.சா.வால் அறிந்துகொள்ள முடியவில்லை.  ஒருநாள் அவருடைய ஐயத்தை ஆடு மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்த முதியவர் ஒருவர் தீர்த்துவைத்தார். ஆடுகள் தின்ன மரக்கிளைகளை வெட்டும்போது, கிளைமுழுவதும் துண்டித்து விழாதபடியும் சற்றே முறிந்து தொங்கும்படியும் வெட்டுவதுதான் வழக்கமென்றும்  ஆடுகள் அதன்மீது முன்னங்காலை வைத்துக்கொண்டு தழைகளைத் தின்ன அதுவே வசதியாக இருக்கும் என்றும் சொன்னார். அந்தக் கிளை மீண்டும் துளிர்ப்பதற்கு அது ஒரு வழி. சீவக சிந்தாமணி மட்டுமன்றி பெரியதிருமொழி, பழமொழிநானூறு ஆகிய நூல்களிலும் இடம்பெற்றிருக்கும் அந்தத் தொடருக்கான முழுப் பொருளையும் அன்று புரிந்துகொண்டதாக உ.வே.சா. குறிப்பிடுகிறார்.

செண்டு எனப்படும் சொல்லும் அப்படி ஒரு புதிர்த்தன்மை கொண்டதாகும். ’செண்டால் அவள் பைங்குழல்பற்றி’ என்பது வில்லிப்புத்தூரார் பாரதத்தில் இடம்பெற்றிருக்கும் ஒரு வரி. செண்டு என்பது பொதுவழக்கில் பூச்செண்டு என்பதையே குறிக்கும் சொல்லாகும். ஆனால் அதைக்கொண்டு தலைமுடியை எப்படி பற்றி இழுக்கமுடியும் என்பது உ.வே.சா.வுக்கு புதிராகவே இருந்தது. நீண்ட காலத்துக்குப் பிறகு மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள ஆறுபாதி என்னும் சிற்றூருக்குச் சென்றார். அங்கிருந்த இராஜகோபால் என்னும் பெயரோடு விளங்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்றார். பெருமாளின் திருக்கரத்தில் இரு வளைவுகள் கொண்ட பிரம்பைப் பார்த்து புரிந்துகொள்ள முடியாமல் அறங்காவலரிடம் ”அது என்ன?” என்று கேட்டார். அதுதான் செண்டு என்று அவர் தெரிவித்தார். கற்பூர தீபத்தின் ஆராதனை வெளிச்சத்தில் மீண்டுமொருமுறை முழுவதுமாகப் பார்த்த உ.வே.சா.வுக்கு அதுவரைக்கும் புரியாமல் இருந்த சொல்லுக்கு முழுப்பொருளும் புரிந்துவிட்டது.

உ.வே.சா.வின் சேகரத்திலிருந்து எடுத்து வளவ.துரையன் முன்வைத்திருக்கும் இன்னொரு கதை, ’கள்ளா வா புலியைக் குத்து’ என்பதாகும். அதுவும் சீவகசிந்தாமணியில் இடம்பெறும் பாடலொன்றில் அமைந்திருக்கும் வரியாகும். குறிப்பிட்ட அந்த ஒரு வரியையோ, அதற்கு நச்சினார்க்கினியனார் எழுதிய உரையையோ புரிந்துகொள்வது எளிதாக இல்லை. நீண்ட காலமாக அதற்குப் பொருத்தமான பொருளைப் புரிந்துகொள்ள முடியாமல் தவித்திருக்கிறார் உ.வே.சா. கும்பகோணத்தில் அவருடைய வீட்டுக்கு அருகிலேயே வசித்துவந்த சாமப்பா என்னும் பெரியவர் வழியாக அதற்கு விடை கிடைக்கிறது.

ஒருமுறை அந்த முதியவருக்கு வேண்டாதவர் யாரோ மற்றொருவரிடம் இந்த முதியவரைப்பற்றி குறை கூறி இருவருக்கும் இடையில் சண்டை மூட்டிவிட்டார். ஆனால் முதியவர் அந்த வலையில் சிக்காமல் தப்பித்துவிட்டார். அதை உ.வே.சா.வைச் சந்திக்கச் செல்லும்போது விரிவாகச் சொல்லிப் பகிர்ந்துகொண்டார் அந்த முதியவர். அப்போது பேச்சுவாக்கில் “எப்படியாவது நாங்கள் முட்டி மோதிக்கொண்டு சாகட்டுமே என்பதுதான் அவன் எண்ணம். நாங்கள் இரண்டு பேரும் அவனுக்கு வேண்டாதவர்களே. அதற்குத்தான் கள்ளா வா, புலியைக் குத்து என்கிறான். நானா ஏமாந்து போவேன்? என்று சொன்னார்.  பொருள் தெரியாமல் தவித்திருந்த ஒரு வாக்கியத்தை அவர் தன்னிச்சையாக தன் உரையாடலில் பயன்படுத்தியதைக் கவனித்த உ.வே.சா. அது சார்ந்த விரிவான விளக்கத்தை மேலும் அவரிடமே கேட்டுத் தெரிந்துகொண்டார். இரண்டு எதிரிகளை மோதவிட்டு தான் தப்பித்துவிடும் தந்திரத்தை வெளிப்படுத்துவதற்காகவே அந்தத் தொடர் அமைந்திருப்பதைப் புரிந்துகொண்டு மகிழ்ந்தார். ஒரு புனைகதையைப்போல எழுதப்பட்டிருக்கும் இக்கட்டுரையைப் படிப்பது சுவையான அனுபவம்.

தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் மற்றொரு முக்கியமான கட்டுரை புராணப்பாத்திரமான அரவானைப்பற்றியது. அரவான் கதை அனைவரும் அறிந்ததுதான். மகாபாரதக்கதையில் பாண்டவ இளவரசன் அர்ச்சுனனுக்கும் நாக இளவரசி உலுப்பிக்கும் பிறந்த மகன் அவர். ஆற்றல் நிறைந்த வீரர். பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் இடையில் போர் நடைபெறும் செய்தியை அறிந்து தந்தையின் பக்கம் நின்று போரிடுவதற்காக தன் படையுடன் போர்க்களத்துக்கு வருகிறார்.  ஆனால் அவருடைய கதைக்கு மூன்று முடிவுகள் இருக்கின்றன. புராணமரபு, கூத்துமரபு, வாய்வழிக்கதை மரபு என மூன்று வழிகளிலும் தனித்தனியாக கதைகள் உள்ளன. வளவ.துரையன் மூன்று கதைகளையும் தொகுத்து ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.

போர் தொடங்கும் முன்பாக காளியின் அருள் வேண்டி பாண்டவர்களுக்காக தன்னைத்தானே தற்பலியாகக் கொடுத்து உயிர்துறக்கிறார் அரவான். அதற்குமுன் கண்ணனிடம் வேண்டி ஒரு வரம் பெறுகிறார் அரவான். தான் பலியானாலும் போர்க்களத்தில் பகைவர் அழிவதைப் பார்க்கும் வகையில் உயிருடன் இருக்கவேண்டும் என்பதுதான் அவருடைய கோரிக்கை. கண்ணன் அவ்வரத்தை அவருக்கு அளிக்கிறார். உடலிலிருந்து துண்டான அவருடைய தலை ஒரு கம்பத்தில் செருகி வைக்கப்பட்டு திறந்த அவருடைய விழிகள் வழியாக போர்நிகழ்ச்சிகளைக் காணும் வகையில் வழி செய்கிறார். இது ஒரு கதை.

எட்டாம் நாள் போரில் அரவான் பல ஆயிரம் வடிவங்கள் கொண்டு எதிரிப்படைகளைச் சிதறடிக்கிறார். அப்போது கெளரவர் சார்பில் அலம்புசன் என்னும் அரக்க குலத்தைச் சேர்ந்த வீரர் போரிடுகிறார். அவருடைய தமையனான பகாசுரன் ஏற்கனவே பீமனால் கொல்லப்பட்டவர். அந்தக் கொலைக்குப் பழிக்குப்பழி வாங்கும் எண்ணத்தோடு அலம்புசன் போர்க்களத்துக்கு வந்திருக்கிறார். ஆனால் அரவானுடன் அவரால் நேருக்கு நேர் நின்று போரிட முடியவில்லை. புறமுதுகிட்டு ஓடிவிடுகிறார். பிறகு தன் மாயச்சக்தியால் கருடனின் வடிவம் தாங்கி மீண்டும் போரிட வருகிறார். அப்போதுன் நாகர் குலத்தைச் சேர்ந்த அரவான் அதைக் கண்டு ஒடுங்கி நிற்கிறார். அத்தருணத்தில் அலம்புசன் அரவானைக் கொல்கிறார். இப்படி ஒரு கதை.

தன் சிரமறுத்து பலியாகும் முன்பாக தனக்குத் திருமணம் செய்துகொள்ள விருப்பமிருப்பதாக கண்ணனிடம் தெரிவிக்கிறார் அரவான். ஒருநாள் மட்டுமே வாழ இருக்கும் அரவானுக்கு பெண் அளிக்க ஒருவரும் முன்வரவில்லை. அப்போது கண்ணனே மோகினியென பெண் வடிவம் தாங்கி அரவானை மணந்துகொள்கிறார். அடுத்தநாள் அரவான் மறைவை ஒட்டி விதவைக்கோலம் பூண்டு புலம்புகிறார். இப்படியும் ஒரு கதை.

மூன்று கதைகளையும் தனித்தனியாக விவரிக்கும் வளவ.துரையன் இறுதியில் அவற்றைத் தொகுத்து மதிப்பிடும்போது, அரவானின் கதை வடிவங்களில் பல மாற்றங்கள் இருந்தபோதும் அவர் தனக்கென வாழாமல் ஒரு குலம் தழைக்க தியாக வாழ்க்கையை வாழ்ந்தார் என்னும் மைய கதையோட்டத்தில் எவ்விதமான மாற்றமும் இல்லை என்று குறிப்பிட்டு முடிக்கிறார்.

’குருகும் குரங்கும் உண்மை அறியும்’ என்ற தலைப்பில் வளவ.துரையன் இத்தொகுதியில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். குறுந்தொகையில் இடம்பெற்றிருக்கும் இரு பாடல்களை முன்வைத்து  இக்கட்டுரை உருவாக்கப்பட்டிருக்கிறது. இரண்டுமே ஒரு பெண்ணின் கலக்கத்தை முன்வைக்கிறது. காதலிக்கும் காலத்தில் தன்னுடன் இணைந்து இன்பம் துய்த்த தலைவன் திருமணம் செய்வதற்கு காலம் தாழ்த்திக்கொண்டே இருப்பதைக் கண்டு கலங்கி தன் தோழியிடம் தன் ஆற்றாமையைப் பகிர்ந்துகொள்வதுதான் பாடலின் மையம்.

முதல் பாடல் கபிலரின் பாடல். அவனும் நானும் தனிமையில் கூடியிருந்த நேரத்தில் ஒருவரும் இல்லை. ஒரே ஒரு குருகு எங்களுக்கு அருகில் நின்றிருந்தது. அதுவும் எங்களைப் பார்க்கவில்லை. ஒழுகிச் செல்லும் நீரோட்டத்தில் ஆரல்மீனை எதிர்பார்த்து தன் கவனத்தைக் குவித்திருந்தது என்று ஒருவித குமுறலோடும் தன்னிரக்கத்தோடும் சொல்கிறாள் தலைவி.

இரு பாடல்களிலும் வெளிப்படும் வேதனை மனத்தை உருக்குகிறது. பாடல்களின் பின்னணி விவரங்கள் மானுட நடமாட்டம் இல்லாத தனிமையை அழகாகக் கட்டமைக்க உதவியாக உள்ளன. ஒரு பாட்டில் ஆரல்மீனின் வரவுக்காக உற்று நோக்கியபடி இருக்கிறது குருகு. இன்னொரு பாட்டில் மாங்கனியின் சுவையில் திளைத்திருக்கிறது குரங்கு. இரண்டுமே இரை சார்ந்த குறிப்புகளாகவும் சுவை சார்ந்த குறிப்புகளாகவும் உள்ளன. ஒருவரிடமிருந்து ஒருவர் சுவையை அறிந்து திளைத்த தருணத்துக்குப் பின்னணியாக சுவை சார்ந்த நடவடிக்கைகளே அமைந்திருப்பதை ஒருவித தற்செயல் என்றுதான் சொல்லவேண்டும்.

இரண்டாவது பாடல் கொல்லன் அழிசி என்பவரின் பாடல். இது தலைவியின் தாயிடம் தோழி தன் ஆற்றாமையை வெளிப்படுத்தும் வகையில் எழுதப்பட்ட பாடல். இப்பாட்டிலும் தலைவனிடம் தன்னை இழந்த தலைவி, திருமணம் செய்துகொள்ள காலம் தாழ்த்திக்கொண்டே இருப்பதை நினைத்து வேதனையில் மூழ்கியிருக்கிறாள். அவள் உடல் இளைத்துக்கொண்டே செல்வதைக் கண்ட அவளுடைய தாய் கட்டுவிச்சியை அழைத்து காரணம் கேட்கிறாள். அவளோ தெய்வக்குற்றம் என்று சொல்கிறாள். இப்படி நடந்த உண்மை திசைமாறிச் செல்வதைக் கண்டு மனம் பொறுக்கமுடியாத தோழி தானே முன்சென்று தாயிடம் நடந்த செய்தியைக் கூறுகிறாள். தலைவனும் தலைவியும் தனிமையில் கூடியிருந்தனர். அங்கே ஒரு குரங்கு மட்டுமே இருந்தது. இனிய  மாங்கனிகளைத் தேடிப் பறித்து தின்றபடி தன் குட்டிகளோடு விளையாடிக்கொண்டிருந்தது. அந்தக் குரங்குக்கு மட்டுமே உண்மை தெரியும் என்கிறாள்.

ஆறுமுக நாவலரைப்பற்றிய கட்டுரை, அவருடைய வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாக பதிவு செய்திருக்கிறது. அவர் உரை எழுதிய நூல்களின் பட்டியலையும் வளவ.துரையன் கொடுத்திருக்கிறார். நீதி வெண்பாவின் பாடலொன்றுக்கு அவர் எழுதிய உரையின் சுருக்கம் ஒரு நாட்டுப்புறக்கதையின் சுவாரசியத்தோடு உள்ளது.

எவராலும் ஏற முடியாத ஒரு பெரிய மலையில் ஒரு குகையைப் பற்றியது அந்தக் கதை. அக்குகையில் அரச அன்னம் தன் குஞ்சுகளோடு வசித்துவருகிறது. ஒருநாள் பெருமழை பொழிகிறது. அப்போது ஒண்டுவதற்கு இடம் கிடைக்காத காக்கையொன்று அந்த அன்னத்தை நெருங்கி அன்றிரவு மட்டும் தங்கிச் செல்ல தமக்கு ஓர் இடம் கொடுக்கும்படி கேட்டது.  அப்போது அமைச்சராக இருந்த வயதில் மூத்த அன்னம் காக்கைக்குக் கருணை காட்டவேண்டாம் என அறிவுரை சொல்கிறது. ஆனால் கருணை கொண்ட அரச அன்னம் காக்கைக்கு இடம் கொடுத்துவிட்டது. காக்கை அன்று இரவு அங்கே தங்கிய பிறகு மறுநாள் காலையில் வெளியேறிவிட்டது. காக்கை அன்றிரவு தங்கிய இடத்தில் எச்சமிட்டது. அந்த எச்சத்திலிருந்து ஆலம் வித்து முளைத்தெழுந்து பெரிய மரமானது. பிறகு நான்கு புறங்களிலும் விழுது விட்டு வளர்ந்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒருநாள் யாரோ ஒரு வேடன் அவ்விழுதுகளை பற்றியேறி மலையுச்சியை அடைந்தான். அங்கே கண்ணி வைத்து எல்லா அன்னப்பறவைகளையும் பிடித்துக்கொண்டு சென்றுவிட்டான். தகுதியறியாமல் இடம்கொடுத்து, பிறகு அவர்களாலேயே அழிந்துபோகும் நல்லவர்களை முன்வைத்து இந்தக் கதை சொல்லப்பட்டிருக்கிறது

 

நன்றறியாத் தீயோர்க்கு இடம்கொடுத்த நல்லோர்க்குத்

துன்று கிளைக்கும் துயர்சேரும்- குன்றிடத்தில்

பின்னரவில் வந்தமரும் பிள்ளைக்கு இடம்கொடுத்த

அன்னமுதற் பட்டதுபோல் ஆம்

 

என்பதுதான் அந்த நீதிவெண்பா.

சங்க இலக்கியங்களிலும் பிற்கால இலக்கியங்களிலும் நல்ல பயிற்சி கொண்ட வளவ.துரையன் தன் வாசிப்பின் வழியே கண்டடைந்த அற்புதமான வரிகளை முன்வைத்து ஏராளமான கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி வருகிறார். அந்த வரிசையில் எழுதப்பட்ட 24 கட்டுரைகள் இத்தொகுதியில் அடங்கியுள்ளன. சங்க இலக்கியம் சார்ந்த கட்டுரைகள் மட்டுமன்றி ந.பிச்சமூர்த்தி, கண்ணதாசன், திருவள்ளுவர், நாவலாசிரியர் விந்தன், ஜெயமோகன் போன்றோரின் படைப்புகளில் அவர் கண்டடைந்த வரிகளின் நயத்தையும் சிறப்பையும் விளக்கும் கட்டுரைகளும் இத்தொகுதியில் சம அளவில் அமைந்துள்ளன.

 

 

(அம்பு பட்ட மான். வளவ. துரையன். குவிகம் பதிப்பகம், சென்னை -78. விலை. ரூ.120 )

(புக் டே – இணையதளம் 22.01.2024)